மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

சனி, 24 ஏப்ரல், 2021

வாசிப்பை நேசிப்போம்

நேற்று உலக புத்தக தினம்... புத்தக வாசிப்பு என்பது ஒரு போதை... வாசிக்க ஆரம்பித்தவன் அவ்வளவு எளிதில் அதைக் கைவிட்டு விடமாட்டான். தினமும் ஏதோ ஒரு பக்கத்தையாவது வாசிக்கத்தான் செய்வான். இணையம் வீரியமான பின்னே நிறைய வாசிக்கக் கிடைப்பதும் பல விஷயங்களை அறிய உதவுவதும் சிறப்பு.

சமீபமாய் எதுவும் வாசிக்கவில்லை... இறுதியாக உப்புவேலி வாசித்தது... ஆங்கிலேய ஆட்சியில் உப்புவரி எந்தளவுக்கு மக்களைப் பாதித்திருக்கிறது என்பதையும், அவர்கள் உப்புக் கடத்தலைத் தவிர்க்க பல கிலோமீட்டர்களுக்கு அமைத்திருந்த உப்புவேலியைப் பற்றியும் விரிவாகப் பேசியிருக்கும் புத்தகம் அது.

பல வரலாறுகள் இங்கே திரித்து எழுதப்படுகின்றன... நிறைய விஷயங்களை நாம் மறந்து நகர்ந்து கொண்டிருக்கிறோம். காவல் கோட்டம் ஒரு நாவலுக்கான எந்தச் சுவையையும் கொடுக்காவிட்டாலும்... மன்னராட்சி, ஆங்கிலேயர்களின் பிடியில் தமிழகம், கிறிஸ்தவ மிஷனரிகளின் வளர்ச்சி, குற்றப்பரம்பரை என ஒரு இனத்தையே மாற்ற அவர்களும் அவர்களுடன் இணைந்து நம்மவர்களும் செய்த அரசியல் என விரிவாகப் பேசவேண்டியதை கொஞ்சம் கொஞ்சமாகப் பேசிச் சென்றாலும் கிருஷ்ண தேவராயர் காலத்து மதுரையை, மங்கம்மாள் காலத்து மதுரையை, பிறன்மலைக் கள்ளர்களின் காவலில் இருந்த மதுரையைக்  கண் முன் காட்டியது என்பதே உண்மை.

நமது வரலாறுகளை நாம் திருத்தி எழுதி வைத்திருப்பது காலமாற்றம் என்று கடந்து விடமுடியாது... திட்டமிட்டே நடந்த, நடக்கும் சதி என்பதுதான் உண்மை. நமது வரலாறுகளின் உண்மையான வாசம் தெரிய வேண்டும் என்றால் வெள்ளையர்கள் எழுதி வைத்திருக்கும் குறிப்புக்களைப் படிக்க வேண்டும் என ஒருவர் எழுதியிருந்தார். அது உண்மை... உப்புவேலி என்று ஒன்று இருந்ததை நம்மில் எத்தனை பேர் அறிவோம்... சில ஊர்களில் கூட்டமாய் புளியமரங்கள் நிற்கும்... எதற்காக இத்தனை ஏக்கரில் புளியமரங்களை வைத்திருக்கிறார் என்று நினைத்து மறந்துவிடுவோம். அதன் பின்னெல்லாம் ஒரு வரலாற்றுக்கதை இருக்கத்தான் செய்கிறது. 

அப்படித்தான் கிட்டத்தட்ட 2300 கிலோ மீட்டர் நீளத்துக்கு உருவாக்கப்பட்ட புதர்வேலி, உப்புக்கு அதிக வரி விதித்து, அதன் கடத்தலைத் தடுக்க உருவாக்கப்பட்ட உப்புவேலி குறித்து தான் வாசிக்கக் கிடைத்ததில் அறிந்து அது இப்போது இருக்கிறதா..? அதன் மிச்சமேனும் மிஞ்சியிருக்கிறதா என ஒருமுறை அல்ல மூன்று முறை இந்தியா வந்து இங்கிருக்கும் நண்பர்களின் உதவியுடன், கொள்ளையர்கள் நிறைந்த இடங்களுக்கெல்லாம் நடந்து பயணித்துக் பல்வேறு தரவுகளுடன் ஆதாரப்பூர்வமாய் அதன் மிச்சம் இருப்பதை, தான் கண்டு பிடித்ததை ஆங்கிலத்தில் புத்தமாக்கியிருக்கிறார் ராய் மாக்ஸம்... இதை அழகான தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார் சிறில் அலெக்ஸ்.

நாம் நம் வரலாறுகளை எல்லாம் என்ன செய்து வைத்திருக்கிறோம்... மக்களுக்காக மாண்டவர்களை நாம் இப்போது எங்கே நிறுத்தி வைத்திருக்கிறோம்... மருதுபாண்டியர் என்ன சாதி..? வேலு நாச்சியார் என்ன சாதி...? கட்டப்பொம்மன் எங்கிருந்து வந்தான்..? என்ன சாதியில் பிறந்தான்...? அழகுமுத்துக் கோன் உன் சாதியா... என் சாதியா...? வ.உ.சி செக்கிழுத்தது இருக்கட்டும் அவர் நம்ம சாதிப்பா... பாரி என்ன ஆளுக... இராஜராஜ சோழன் ஆண்ட பரம்பரையா... அடிமைப் பரம்பரையா...? பாரதியையும் சாதிக்குள் கொண்டு போ...? திருவள்ளுவர் இந்தச் சாதியா இருக்கலாம்...? தீரன் சின்னமலை, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் என சாதிக்குள் அவர்களை இழுத்து வைத்து வரலாறுகளை எல்லாம் சாதீயம் ஆக்கிவிட்டோம். படிக்காதே திமிறி அடி எனச் சொல்லிக் கொடுக்கிறோம்.

வாசிக்க வாசிக்கவே நம் உலகம் விரிவடையும்... நான் என் சக தோழர்களின் எழுத்துக்களை எப்போதும் வாசித்து விடுவேன்... பெரிய எழுத்தாளர்களில் சிலரின் ஒரு கதையைக்கூட வாசித்ததில்லை என்பதே உண்மை... சில புத்தகங்களை நண்பர்கள் கொடுக்க வாசித்திருக்கிறேன்... காடோடி, மரப்பாலம், கறுப்பர் நகரம், பொன்னியின் செல்வன், கடல்புறா என மனங்கவர்ந்த பல புத்தகங்கள் இருந்தாலும் வாசித்தது முதல் இன்னும் என்னால் மீளமுடியாத புத்தகம் என்றால் அது 'சோளகர் தொட்டி'. வீரப்பன் வேட்டையைக் காரணமாய் வைத்து மலைவாழ் மக்களின் வாழ்க்கையைப் புரட்டிப் போட்ட கதை... அது தொடர்பான தேடல் இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

வாசிக்க வாசிக்க அதன் சுகத்தை, சுவையை உணர முடியும்... பிடிஎப்பாகப் படிக்காதே எனச் சில நண்பர்கள் சொல்வார்கள்... இங்கு வாசிக்க பல பழைய புத்தகங்களின் பிடிஎப் கிடைப்பது எளிது என்பதால் அவ்வாறு கிடைத்தால் பேருந்தில் போகும் போதும் வரும் போதுமாய் வாசித்து விடுவேன். ஒரே நேரத்தில் இரண்டு மூன்று புத்தகங்கள் என் வாசிப்பில் இருக்கும். இதுவா அதுவா என்ற குழப்பமெல்லாம் இருக்காது... எடுக்கும் புத்தகத்தில் இதுவரை என்ன வாசித்திருக்கிறேனோ அதில் இருந்து தொடர்ந்து கொள்வேன்... சிலர் சொல்வது போல் ஒரு நேரத்தில்  ஒரு புத்தகம் என்ற நிலைப்பாடெல்லாம் இல்லை... முடியும் போது வாசிக்கணும் அவ்வளவுதான்.

முதல் சிறுகதைத் தொகுப்பான எதிர்சேவையில் இருக்கும் பனிரெண்டு கதைகள் தவிர்த்து 200 சிறுகதைகளுக்கு மேல் எழுதி வைத்திருக்கிறேன். பல சிறுகதைகள் போட்டிகளில் வென்றிருக்கின்றன... பல சிறுகதைகள் இணைய இதழ்களில் வந்திருக்கின்றன. வேரும் விழுதுகளும் நாவல் போக இன்னும் நான்கு நாவல்கள் கைவசம் இருக்கின்றன. அதில் ஒன்று கலையான கனவுகள்... கல்லூரிக் காதலை வைத்து முதன் முதலில் எழுதிய நாவல்... எல்லோராலும் பாராட்டப்பட்ட நாவல்... முடிந்தால் புத்தகமாக்கும் முயற்சியில் அடுத்த நாவலாய் அது இருக்கலாம். இதையெல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால் வாசிப்பும்.. அமீரகத்தின் தனிமை கொடுக்கும் நேரமும்தான் காரணம்... என் எழுத்து கொஞ்சம் கொஞ்சமாய் மாறி வர வாசிப்புத்தான் காரணம்.

எனவே, வாசிப்பை நேசிப்போம்.

-'பரிவை' சே.குமார்.

8 எண்ணங்கள்:

ஸ்ரீராம். சொன்னது…

வாசிப்பின் வகை, வாசிப்பின் தளங்களைப் பற்றி நன்றாக சொல்லி இருக்கிறீர்கள்.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

புத்தக தினம் அன்றைய சிறப்புப் பதிவு நன்றாக வந்திருக்கிறது குமார். பாராட்டுகள்.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை... சங்க காலத்திலிருந்து கிடைத்த சிலவற்றை வாசிக்கும் போது மனம் வெதும்பும்... பற்பல சுவடிகளை ஆற்றில் விட்டதும், தீக்கிரை ஆக்கியதும்... எண்ணற்ற உண்மைகள் இன்று மாற்றி அமைக்கப்படுகின்றன...

மு. கோபி சரபோஜி சொன்னது…

புத்தக தின வாழ்த்துகள் குமார். தனிமையின் கொடுமை தவிர்க்கும் குளுமையை புத்தகங்கள் மூலம் பெற்று வருகிறீர்கள் என்பது மகிழ்ச்சியான விசயம். உங்கள் வலைப்பக்கம் வழியும் சில நூல்களை கண்டடைந்திருக்கிறேன். புதிய முயற்சிகளுக்கு வாழ்த்துகள்....

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

குமார் உங்கள் வாசிப்பு பற்றி அறிந்ததே. அதை இங்கு அழகாகப் பகிர்ந்திருக்கிறீர்கள்.

உங்களின் அடுத்த புத்தக வெளியீட்டு முயற்சிக்கு வாழ்த்துகள் குமார்!

கீதா

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

நல்ல பதிவு நல்ல தகவல்களுடன்.

வரலாற்றில் நிறைய இடைச்செருகல்கள் உண்டுதான். மாற்றியும் எழுதப்பட்டவையும் உண்டு.

உங்கள் முயற்சிகள் அனைத்திற்கும் வாழ்த்துகள் குமார்!

துளசிதரன்

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

அருமை
வாசிப்பை நேசிப்போம்

niloshan சொன்னது…

நுபவத்தில் நீங்கள் பகிர்ந்த விடயங்கள் வழிகாட்டுதலாக அமைந்தன.. வாழ்த்துக்கள்..

எனது பதிவொன்று

ஒரு இனத்தின் சிந்தனை விருத்தியை எடுத்துக் கூறும் "வாழ வேண்டும்" கவிதையின் சிறப்பு ஆய்வு...!