மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வெள்ளி, 15 ஜனவரி, 2021

மனசு பேசுகிறது : மாட்டுப் பொங்கலும் மனசும்

ன்று மாட்டுப் பொங்கல்... மனம் முழுவதும் ஊரில்தான் இருந்தது... சென்ற ஆண்டு சிரமங்களுடன் பயணித்தபோதும் பொங்கலுக்கு ஊரில் இருந்தேன்... மாட்டுப் பொங்கல் என்பது ஊரே கூடிக் கொண்டாடும் ஒரு நிகழ்வு என்பதால் மகிழ்வுக்குக் குறைவிருக்காது. அதை அனுபவித்து வாழ்ந்திருந்தால் மட்டுமே அதன் மகிழ்வுக்கு எல்லையே இல்லை என்பது புரியும்.

இப்போது ஊரில் நடக்கும் எல்லாவற்றிலும் விஷால் ஈடுபாட்டோடு கலந்து கொள்வது பெரும் மகிழ்ச்சி... எதிலும் ஒதுங்கி நிற்பதில்லை... இன்றும் அவனின் ஆட்டங்கள்தான்... போட்டோக்களாய் வந்து குவிந்ததைப் பார்க்கும் போது இருந்த மகிழ்ச்சி இரவு விளையாட்டுப் போட்டிகளில் அக்காவும் தம்பியும் பரிசு வாங்கிய போட்டோவை அனுப்பிய போது இன்னும் இரட்டிப்பானது.

தூண்டி போட்டு மீன் பிடிப்பது என்பது கிராமத்திலேயே வளர்ந்த நமக்கே ஒரு பெரிய விஷயம்தான்... தட்டை தண்ணிக்குள் அழுங்கி எழுவதைப் பார்த்து, அது மெல்ல நகர்வதைப் பார்த்து... லாவகமாக இழுத்தால்தான் மீன் முள்ளில் மாட்டிக் கொள்ளும்... அப்படியிருக்க நேற்று மழை பெய்து கண்மாய் நிரம்பி இருக்கும் நிலையில் எங்கள் உறவினர் ஒருவர் தூண்டில் போட்டுக் கொண்டிருந்திருக்கிறார். விஷால் வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றிருக்கிறான். நான் வீட்டுக்குப்  பொயிட்டு வாரேன்... அதுவரை நீ பிடிடா.. மீன் மாட்டுனா உனக்கு எனச் சொல்லிச் சென்ற பத்துப் பதினைந்து நிமிடத்தில் நாலு மீன் பிடித்திருக்கிறான்.

மீனை உயிருடன் கொண்டு வந்து வாளியில் விட்டு எனக்கு வீடியோ எடுத்து அனுப்பி, அவன் மீன் பிடித்த கதையைச் சொன்னான். அவனுக்கு வளர்க்கும் ஆசை... கண்மாய் மீனை வீட்டில் வளர்க்கும் அழகு மீன் போல் வளர்க்க முடியாது... மேலும் தூண்டிலில் மாட்டிய மீன் செத்துப் போகும் என்று சொன்னதும் அப்பச் சரி சாப்பிட்டுடுவோம் என்றான். எங்கம்மா அவனுக்கு அதைக் குழம்பு வைத்துக் கொடுக்கச் சொல்ல, பொங்கல் அன்று மீன் குழம்பெல்லாம் வைக்க முடியாது என அவனின் அம்மா பொரித்துக் கொடுக்க, அக்காவும் தம்பியும் சாப்பிட்டிருக்கிறார்கள். கண்மாய் மீனின் சுவையில் நனைந்த அக்கா நாளைக்கும் பிடிச்சிக்கிட்டு வாடான்னு சொன்னதுக்கு நாளைக்கு மாட்டுப் பொங்கல் இருக்கு... மீன் பிடிக்கப் போகணுமாக்கும் என்றிருக்கிறான்.

காலையில் பொங்கல் வைக்கும் இடம் சுத்தம் பண்ணப் போய்விட்டு வந்து... பின் பொங்கல் வைக்கப் போய்... ஆட்டம் போட்டு... மாலை விளையாட்டுப் போட்டிகள்... இரவு அம்மன் கோவிலில் பொங்கல் என நிறைவாய் முடித்திருக்கிறார்கள். எங்கள் ஊரில் ஆறு பொங்கல்... மகிழ்வான தருணத்தைக் கொடுக்கும் பொங்கல்.

இன்று விடுமுறை தினம்... மனமெல்லாம் ஊரில் என்பதால் எதுவும் ஓடவில்லை... மொத்தத்தில் மனசே சரியில்லை. எங்கும் செல்லவில்லை... மதியம் தெலுங்கு நண்பர் ஒருவர் சங்கராந்திக்காக ஹோட்டலில் இருந்து சாப்பாடு வாங்கிக் கொடுத்து விட்டார்... அதைச் சாப்பிட்டுவிட்டு மீண்டும் எதுவும் ஓடாத நிலையில் சிம்பு நடித்த ஈஸ்வரனைப் பார்த்தேன்... குடும்ப உணர்வுக் காட்சிகள்  நிறைந்த படம்... பாரதிராஜாவின் நடிப்பு செம... சிம்பு இன்னும் கொஞ்சம் தன்னை மாற்றிக் கொள்ளலாம்... இது அவருக்கு மாறுதலுக்கான படம்... வாயால் வடை சுடுவதை நிறுத்தினால் போதும்.... மீண்டும் களத்தில் சிங்கமென நிற்கலாம். விஜய், சிம்புக்கெல்லாம் அப்பனாலதான் கண்டம்.

நேற்றிரவு வி.சேக்காக மாஸ்டர் பார்த்தேன்... மூனு மணி நேரம்... நீண்ட இழுவை... நாயகி எதற்கு என்று தெரியவில்லை... விஜய் படங்களில் பாடல்கள் சிறப்பாக இருக்கும்... இங்கே நாயகி எதற்குன்னே தெரியலை, இதுல பாட்டு எதுக்குன்னு முடிவு பண்ணிடாங்க போல... மாஸ்டர் பார்க்கலாம்தான்... விஜய் சேதுபதி உடம்பை ஏற்றிக் கொண்டே போவதைப் பார்த்தால் அப்பாவாகவோ வில்லனாகவோ மட்டும்தான் இனி நடிப்பார் போல... இதிலும் இந்துக்களுக்கு எதிராய்தான் தன் கடையை விரிக்கிறார்.. விஜயும் கூட... அத்தோடு அரசியலும் பேசுகிறார். அவரும் சொல்லும் கதைகள் நல்லாயிருக்கு... மனுசன் உடம்பை இன்னும் அழகாக வைத்திருக்கிறார். மாஸ்டர் எப்படின்னா... விஜய் மாற மாட்டார்... இயக்குநர்களாவது அரைத்த மாவை அரைக்காமல் மாறலாம்... அவருக்காக சிறப்பான படங்களைக் கொடுத்த லோகேஷ் மாறிவிட்டார் அவ்வளவே. காணாமல் போகவும் வாய்ப்பிருக்கிறது.

எங்கள் பிளாக்கின் மின்நிலா பொங்கல் மலரில் எனது சிறுகதை வெளியாகி இருக்கிறது. முன்பு எழுதி வைத்ததுதான்... ஸ்ரீராம் அண்ணன் கேட்டதும் அனுப்பிக் கொடுக்க முடிந்தது... எங்கள் பிளாக்கிற்கென கதைகளில் ஒரு வரைமுறை இருக்கும்... அதை ஒத்திருந்த கதை என்பதால் உடனே அனுப்ப முடிந்தது. அக்கா மகளைக் கட்டிக்க மாட்டேன் எனச் சொன்னவனை வீடு எப்படிப் பார்க்கிறது... சம்பந்தப்பட்ட பெண் எப்படிப் பார்க்கிறாள் என்பதே கதை. மின்நிலாவில் கதையை வாசித்து உங்களின் குட்டுக்களையும் பாராட்டுக்களையும் என்னிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.

மகாகவி தை மாத இதழ் இயக்குநர் அகத்தியன் சிறப்பிதழாக வந்திருக்கிறது. அகத்தியன் கொடுத்த காதல்கோட்டை தமிழ் சினிமாவில் பெரும் மாற்றத்தைக் கொடுத்தபடம். எனக்கு ரொம்பப் பிடித்த இயக்குநர்களில் அவரும் ஒருவர்... காலம் நல்ல இயக்குநர்களைக் காணாமல் அடித்து விடுகிறது... அது ஏனென்றுதான் தெரியவில்லை... 'பா' வரிசை இயக்குநர்களால் இறுதிவரை நிற்க முடிந்த சினிமாவில்... அவர்களும் இறுதியில் சரிந்தார்கள் என்ற போதும் நீடித்து நின்றே காலமாற்றத்தில் புதியவர்களின் புதிய முயற்சிகளின் முன்னால்தான் சரிந்தார்கள் என்பதே உண்மை... நல்ல படங்களைக் கொடுத்த அகத்தியன் எல்லாம் காணாமல் போனது வருத்தமே.

அவரைப் பற்றிய ஒரு சிறப்பிதழில் 'அகத்தியன் கட்டிய கோட்டை' என்ற தலைப்பில் எனக்கும் ஒரு கட்டுரை எழுத வாய்ப்பளித்தார் மகாகவியின் ஆசிரியர் வதிலை பிரபா அவர்கள். மகாகவியில் பிரபலங்களுக்கே முக்கியத்துவம் என்ற நிலையில் அடியேனுக்கும் ஒரு வாய்ப்பு... இன்றைய தினத்தை மகிழ்வாக்கிய இரண்டு நிகழ்வுகள் மின்நிலாவும் மகாகவியும்.

பொங்கல் போய் விட்டது... இங்கு என்ன பொங்கல்... விடியும் முன்னே மணி அஞ்சறை ஆச்சோ என எழுந்து குளித்து அவசரமாய் ஏதாவது செய்து சாப்பிட்டு பஸ் வந்திருமே என ஓடி, பேருந்தைப் பிடித்து அலுவலகம் சென்று ஓய்வில்லாமல் வேலை செய்து ஆறு மணிக்கு இறங்க முடியாமல் ஏழு, எட்டென வேலை பார்த்து வீடு வந்து சேர்ந்து சமைத்துச் சாப்பிட்டுப் படுக்கும் அன்றாட நிகழ்வில் பொங்கலாவது தீபாவளியாவது... இங்கு எல்லா நாளும் ஒன்றே...

இந்த ஆண்டு நேற்று முதலே நீங்கள் எங்களுடன் போன வருடம் இருந்தீர்கள்... இந்த வருடம் மனசே நல்லாயில்லை என்ற மனைவியின் புலம்பலில் வேதனையும் வலியும் ஒரு சேர இருந்தது.  இன்று இரவு கூட அதையே சொல்லித்தான் புலம்பினார்... காலம் விரைவில் நல்லதை நடத்தியே தீரும் என்ற நம்பிக்கையுடன் பயணிப்போம் என்பதுதான் என்பதிலாய் எப்போதும் வரும்... அதுவே இப்போதும்... அது அவருக்கு மகிழ்வைக் கொடுத்திருக்காது என்றாலும் வேறென்ன சொல்ல முடியும்..?

கால ஓட்டத்தில் பிள்ளைகள் வளர்ந்து நிற்கிறார்கள்... வாழ்க்கை இன்னமும் வரவுக்கும் செலவுக்குமான தராசில் செலவின் பக்கமே இறங்கிக் கிடக்கிறது... இந்தத் தை முதலாவது வரவின் பக்கம் இறங்கட்டும்... வாழ்க்கை வளமானதாகட்டும்... எனக்கு மட்டுமல்ல... நம் எல்லாருக்குமே...

-'பரிவை' சே.குமார்.

8 எண்ணங்கள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

விஷால் கில்லாடி...

சென்ற வருடம் இங்கு வந்த போது நாம் உரையாடின ஞாபகமும் வந்தது...

வேதனையும் ஆதங்கமும் புரிகிறது, எல்லாம் சரியாகும் குமார்...

துரை செல்வராஜூ சொன்னது…

எல்லாருடைய பிரச்னைகளும் சரியாகி
மகிழ்ச்சியும் நிம்மதியும் சேரட்டும்..

எல்லாருடைய வாழ்விலும் சந்தோஷத் தென்றல் வீசட்டும்..

பொங்கலோ பொங்கல்..
பொங்கலோ பொங்கல்..

ஸ்ரீராம். சொன்னது…

எனக்கு அக்கா மகளை பேசவில்லை.  என் அப்பாவின் மாமன் (முறை) மகளை பேசினார்கள்.  மறுத்து விட்டேன்.  காரணம் இரண்டு.  முன்னது என் மனதில் முன்னரே பாஸ் இருந்தது.  இன்னொன்று அந்தப் பெண்ணை நான் பார்த்ததே இல்லை!  நான் மறுத்ததால் வந்த வருத்தம் அவர்களுக்கு நீண்ட காலம் இருந்தது.  அவர்களை நாங்கள் நேரில் பார்க்கும் சந்தர்ப்பம் அரிது என்பதால் உங்கள் கதையில் வருவது போல விளக்கம் கொடுக்கும் சந்தர்ப்பமும் இல்லை.  இயல்பு திரும்ப வருடங்களாகின....

ஸ்ரீராம். சொன்னது…

பாவம் லோகேஷ்..  சமரசம் செய்துகொள்ள வேண்டிய நிர்ப்பந்தம்.  எனக்கும் சில சிம்பு படங்கள் பிடிக்கும்.  அடாவடி இல்லாமல் ஒழுங்காய் நடித்தால் அவருக்கு நல்ல எதிர்காலம் இருந்திருக்கும்.

ஸ்ரீராம். சொன்னது…

உங்கள் மகன் இளமையைக் கொண்டாடுவது மகிழ்ச்சி தருகிறது.  ஊருடன் ஒத்துவாழ் என்று சரியாகவே வளர்க்கப்படுகிறார்.  வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

மனக் கஷ்டங்கள் விரைவில் தீர ஆண்டவன் அருள் புரியட்டும்.

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

தமிழர் திருநாள் வாழ்த்துகள்

தேன்மதுரத்தமிழ் கிரேஸ் சொன்னது…

உங்கள் மகனும் மகளும் குடும்பத்தோடு ஊரோடு பொங்கல் கொண்டாடியது அருமை. விஷால் திறமைசாலி! வாழ்த்துகள்.


பிள்ளைகள் வளர்ந்து நிற்கிறார்கள், செலவின் பக்கம் இறங்கி! உண்மை தான்!! வளமும் மகிழ்வும் நிறையட்டும்.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

ஊரை விட்டு விலகி, நம் சொந்தங்களை விட்டு விலகி எங்கோ கண் காணாத ஊரில்/தேசத்தில் இருப்பது வலி நிறைந்த வாழ்க்கை தான் குமார். நம்மவர்களுக்காக நாம் செய்யும் தியாகம். விரைவில் எல்லாமே நல்லபடியாக அமையும். வரும் காலம் உங்களுடையதாகட்டும். கவலை கொள்ளாமல் இருங்கள்.

பொங்கல் நினைவுகள் நன்று. மகனும் மகளும் பொங்கல் நிகழ்வுகளில் முழுமையாகக் கலந்து கொண்டு இருப்பது நன்று.