மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

செவ்வாய், 22 டிசம்பர், 2020

மனசு பேசுகிறது : போட்டிகளும் நாவலும்

Bharatwriters.com இணையதளத்தில் எனது மூன்றாவது கதை 'வாழ்க்கைச் சக்கரம்' இந்த வாரம் வெளியாகியிருக்கிறது. ஒரு வாரம் இந்த இதழ் பார்வைக்கு இருக்கும்... அதாவது ஞாயிறு முதல் வரும் சனி வரை... இந்த ஒரு வாரத்தில் கிடைக்கும் விருப்பக்குறியின் அடிப்படையில் மதிப்பெண்ணும் அதற்கான வெகுமதியும் உண்டு என்பது அவர்களின் விதிமுறை.


அங்கு எழுதும் கதைகள் பெரும்பாலும் சாதரணமாகத்தான் இருக்கும்... காரணம் அவர்களின் விருப்பம் அதுவே... இருப்பினும் நான் எழுதிய மூன்று கதையும் ஓரளவு நல்ல கதைகள்தான் என்று நினைக்கிறேன். இவையெல்லாம் முன்னர் எழுதி வைத்திருந்தவைதான்... மாதம் ஒன்று கொடுக்கலாம் என்ற எண்ணத்தில் அனுப்பியது. Mini Story  பகுதியில் இருக்கும் ஐந்து கதைகளில் இது  5-வது கதையாக இருக்கிறது. முடிந்தவர்கள் வாசித்துக் கருத்துச் சொன்னால் மகிழ்வேன். நன்றி.

வாழ்க்கைச் சக்கரம்

முகநூலில் கணேஷ்பாலா அண்ணன் அவர்கள் 5-வது முறையாக படத்துக்குக் கதை எழுதும் போட்டி வைத்திருக்கிறார். இம்முறை இரண்டு படங்களைக் கொடுத்து எழுதச் சொல்லியிருக்கிறார்... பேய், திகில் கதைகளாய்த்தான் எழுத முடியும் என்று இதுவரை எழுதியவர்கள் எழுதித் தள்ளியிருக்கிறார்கள். நானும் முயற்சித்திருக்கிறேன்... சற்றே சிரமம்தான். என்றாலும் முயற்சிக்கலாம்... முடிந்தவர்கள் எழுத முயற்சியுங்கள். எனது கதையை வாசித்து அங்கு உங்கள் கருத்தைச் சொன்னால் மகிழ்வேன். நன்றி.

இதுவரை அவர் நடத்திய நான்கு போட்டிகளில் மூன்றில் கலந்து கொண்டு இரண்டில் முதல் மூன்று இடங்களுக்குள் வந்திருக்கிறேன் என்பதையும் இங்கு சொல்லிக் கொள்கிறேன். இம்முறை கொஞ்சம் நமக்குப் பழக்கமில்லாத களம் என்பதால் வெற்றிக்காக எழுதவில்லை... மோதிப்பார்ப்போமே என்றே எழுதியிருக்கிறேன். நேரமிருப்பின் இன்னொன்றும் முயல்வேன்.

விடமாட்டேன்

பிரதிலிபி தொடர்ந்து போட்டிகள் வைக்கும் ஒரு களமாய் மாறி வளர்ந்து நிற்கிறது. அங்கு அதிகம் எழுதுவதில்லை என்றாலும் இந்த முறை போட்டிகளில் கலந்து கொள்ளலாம் என்ற எண்ணத்துடன் பிரதிலிபியில் பகிர்ந்ததைத் தவிர வேறு தளங்களில் / வலைப்பூவில் பகிர்ந்தவைகளை  பகிரலாம் என்பதால் 'கதை'ப்போமா போட்டிக்கு கலக்கல் ட்ரீம்ஸில் ஆசிரியர் தினத்துக்கு எழுதிய சிறப்புக் கதையான பார்வதி டீச்சரையும், ஆதலால் காதல் செய்வீர் போட்டிக்கு முத்துக்கமலத்தில் வெளியான 'என் உயிர் நீதானேயையும், திருநாள் போட்டிக்கு இந்த வலைப்பூவில் எழுதிய தீபாவளி மாறிப்போச்சையையும் பகிர்ந்திருக்கிறேன். பிரதிலிபியில் வாசிக்க முடிந்தவர்கள் வாசித்துக் கருத்துச் சொன்னால் மகிழ்வேன். நன்றி.

பார்வதி டீச்சர்

என் உயிர் நீதானே

தீபாவளி மாறிப்போச்சு

மார்கழி மாதம் சிறுகதைச் சிறப்பிதழாக வெளிவந்த காற்றுவெளி இதழில் இரண்டாவது கதையாக எனது 'பூனை' என்னும் சிறுகதை வெளியாகியிருந்தது. நீண்ட நாட்களுக்குப் பின் காற்றுவெளியில் சிறுகதை.. கதையை மற்றொரு பதிவில் பகிர்ந்து கொள்கிறேன்.


ஹானா இணைய இதழ் போட்டியில் வென்ற விபரம் முன்னரே இங்கு சொல்லியிருந்தேன். அவர்கள் கொடுத்த ஷீல்டு வீடு வந்து சேர்ந்தது. அழகாக இருந்தது. சஹானா இணைய இதழ் சகோதரி திருமதி. கோவிந்த் அவர்களுக்கு நன்றி.

மற்றுமொரு மகிழ்வான செய்தி...

2021 பிப்ரவரி சென்னை புத்தகக் கண்காட்சிக்கு கலக்கல் ட்ரீம்ஸ் மூலமாக வேரும் விழுதுகளும் நாவல் வெளிவர இருக்கிறது. அதற்கான வேலைகள் ஆரம்பமாகிவிட்டது. கொரோனாவின் இரண்டாவது அலையின் காரணமாக மீண்டும் பல நாடுகள் லாக்டவுனுக்குள் முடங்க ஆரம்பித்திருக்கும் வேளையில் அதன் பாதிப்பு சென்னை புத்தகக் கண்காட்சிக்கு இல்லை என்றால் நாவல் வெளியாவது சிக்கல் இருக்காது. முதல் கட்டப் பணிகளான பிடிஎப் தயாரித்து எழுத்துப்பிழைகளும் பார்த்து முடித்து விட்டோம். நாவல் வரும் பட்சத்தில் உங்களின் அன்பான ஆதரவும் வேண்டும். நன்றி.

-'பரிவை' சே.குமார்

4 எண்ணங்கள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

வாழ்த்துகள் குமார்...

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

வாழ்த்துகள்

துரை செல்வராஜூ சொன்னது…

அன்பின் நல்வாழ்த்துகள்...

வெங்கட் நாகராஜ் சொன்னது…

மனம் நிறைந்த வாழ்த்துகள் குமார்.