மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வெள்ளி, 27 நவம்பர், 2020

மனசு பேசுகிறது : வரவேற்பைப் பெற்ற மின்னிதழ்கள்

கொரோனா காலத்தில் உதயமான இரண்டு இணைய மின் இதழ்கள் மிகச் சிறப்பாக இருக்கின்றன. ஒன்று புதிய தலைமுறையில் ஆசிரியராய் இருந்த பெ.கருணாகரன் சாரின் கல்கோனா... மற்றொன்று பாக்யா வார இதழில் பணிபுரியும் எஸ்.எஸ்.பூங்கதிர் சாரின் கதிர்'ஸ்.


கல்கோனா மிகவும் வித்தியாசமாய்... நல்ல கட்டுரைகளை, கதைகளை, தொடர்களைத் தாங்கி வருகிறது. ஒரு அச்சடிக்கப்பட்ட புத்தகத்தை வாசிப்பதைப் போன்ற மன திருப்தியைக் கொடுக்கிறது. தான் சார்ந்த துறை என்பதாலும் லே-அவுட் விசயங்களை நன்கு அறிந்திருப்பவர் என்பதாலும் இணைய இதழ் வரலாற்றில் மிகச் சிறப்பான ஒரு இதழகாகக் கொண்டு வருகிறார் கருணாகரன் சார். ஒவ்வொரு இதழையும் எனக்கு மின்னஞ்சலில் அனுப்புவார்... வாசித்து அது குறித்துப் பகிர வேண்டும் என நினைப்பதுண்டு... தற்போதைய வேலைச் சூழலில் அது முடியாமல் போய் விட, இன்றுதான் வாய்த்தது. நகைச்சுவைப் போட்டி, கவிதைப் போட்டி என கலக்கிக் கொண்டிருக்கிறார்.

அதேபோல் பாக்யராஜ் சாரின் பட்டறையில் வளர்ந்தவர் என்பதால் பாக்யாவின் சாயல்... அதே நறுக் சுறுக் ஒரு 'பக்கா' கதைகள்... கவிதைகள்... அதிகமாய் நகைச்சுவைகள் என அடித்து ஆடிக் கொண்டிருக்கிறது கதிர்'ஸ். வெளிவர ஆரம்பித்து இரண்டு மாதங்களிலேயே பலரின் பாராட்டைப் பெற்று இருக்கிறது. கவர்ச்சிப் படங்கள்தான் பாக்யாவின் களம் என்பதால் இதிலும் படங்கள் கவர்ச்சியாய்... மற்றபடி பிரபல எழுத்தாளர்களின் கேள்வி பதில் பகுதிகள்... பாக்யாவில் வந்த பாக்யராஜ் அவர்களின் மிகச் சிறப்பான கேள்விகளில் இருந்து வாராவாரம் சில கேள்வி பதில்கள் என கடின உழைப்பை கதிர்'ஸ் காட்டிக் கொண்டிருக்கிறார் பூங்கதிர் சார்.

இது போக ஓவியா பதிப்பக உரிமையாளர் கவிஞர் வதிலை பிரபா அவர்களின் மகாகவி, பெரும்பாலும் பிரபலங்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கும் இணைய இதழ் என்றாலும் சிறப்பான படைப்புக்களை வாசிக்கக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. இவர்களின் இணையப் பக்கம்தான் தமிழ் டாக்ஸ்.... இதில் இணையாசிரியராய் இருக்கும் எழுத்தாளர் சிவமணி நண்பர் என்பதால் என் பிக்பாஸ் பதிவுகளுக்கு இங்கு களம் அமைத்துக் கொடுத்திருக்கிறார்.

மேலும் ஒரு வருடத்துக்கு மேலாக தொடர்ந்து சிறப்பாக வந்து கொண்டிருக்கும் சகோதரர் தளிர் சுரேஷ் அவர்களின் தேன்சிட்டு மின்னிதழும் சிறப்பாகப் பயணித்துக் கொண்டிருக்கிறது.

மின்னிதழ்கள் மூலமாக நல்ல எழுத்துக்களுக்கு வாய்ப்புக் கொடுக்கும் இவர்களைப் பாராட்டுவோம்.

***

ணேஷ் பாலா அண்ணன்.... மின்னல் வரிகள்ன்னு ஒரு வலைப்பூவில் எழுதிக் கொண்டிருந்தவர் என்று சொன்னால் நம் நண்பர்கள் பலருக்கு அவரைத் தெரிய வரும். நகைச்சுவைக் கதைகளின் நாயகர்... திடீரென முகநூலில் ஒரு படத்தைக் கொடுத்து க்ரைம் கதை எழுதச் சொல்வார்... மூன்று முறை நடத்தியதில் இரண்டு முறை நானும் பரிசுக்குரியவனாக ஆனேன் என்பது எனக்கு மகிழ்ச்சி. அவரின் பேட்டி ஒன்று மதிமுகம் தொலைக்காட்சியில்... மிகச் சிறப்பான பேட்டி... பேட்டி கண்டவர் 'ஏழு ராஜாக்களின் தேசம்' என்னும் புத்தகத்தை எழுதியவரும் மதிமுகம் தொலைக்காட்சியில் பணிபுரிபவருமான அபிநயா ஸ்ரீகாந்த் அவர்கள், சும்மா வளவளா கொழகொழா கேள்விகள் என்றில்லாமல் சிறப்பான கேள்விகளை முன்வைத்திருக்கிறார்... இவரும் விரிவாகப் பதிலளித்து இருக்கிறார். முடிந்தவர்கள் பாருங்கள்.

நகைச்சுவை எழுத்துக்களுக்கு அங்கீகாரம் இல்லையா..?

***

பிரதிலிபியில் மூன்று போட்டிகள் அறிவித்திருக்கிறார்கள்... வாசகர் பார்வையை வைத்துப் பரிசுக்குரிய படைப்புக்களை தேர்ந்தெடுப்போம் என்று சொல்லும் போட்டிகள்தான் அதிகம் வைப்பார்கள் என்பதால் அதில் கலந்து கொள்ள விரும்புவதில்லை... வெற்றி என்பது தேவையில்லை... ஆனால் போட்டி என்பது நடுவர்களால் வாசிக்கப்பட்டு எடுக்கப்படும் முடிவாக இருக்க வேண்டும் என்பதில் எப்பவும் தீவிரமாக இருப்பதால் போட்டிக்கான அழைப்பு மின்னஞ்சலாக வரும்போதே வேண்டாமென ஒதுக்கி விடுவேன்.  இம்முறை மூன்று போட்டியும் நடுவர்களால் தேர்ந்தெடுக்கப்படும் என்பதாய் இருக்க, நாம் வேறு தளங்களில் எழுதிய படைப்புக்களைப் பகிரலாம் என்று எப்பவும் சொல்வது போல் சொல்லியிருந்ததால் மூன்று போட்டியிலும் கலந்து கொண்டுள்ளேன். இரண்டு போட்டிக்கான கடைசி தேதி முடிந்ததால் அவர்களின் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்கள். ஒரு போட்டிக்கான கடைசி தேதி நவம்பர்-29 என்பதால் அது குறித்துப் பின்னர் சொல்கிறேன். கீழிருக்கும் இணைப்பு வழிச் சென்று முன்பே வாசித்திருந்தாலும் உங்கள் கருத்தை அங்கு பகிர்ந்தால் மகிழ்வேன். நன்றி.

திருநாள் போட்டியில் - தீபாவளி மாறிப்போச்சு

ஆதலால் காதல் செய்வீர் போட்டியில் - என் உயிர் நீதானே

***

பிக்பாஸ் பதிவுகளை வாசிக்க...  பிக்பாஸ்-தமிழ் டாக்ஸ்

-'பரிவை' சே.குமார்.

10 எண்ணங்கள்:

அ. முஹம்மது நிஜாமுத்தீன் சொன்னது…

பதிவுகள் சிறப்பாக, சுவையாக இருந்தன!

4 மின்னிதழ்களின் அட்டைப்பட மாதிரிகளையும் பதிவில் இணைத்திருக்கலாம்!

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

பலர் வெவ்வேறு தளத்தில் பயணித்தாலும்...

ஏனோ வடிவேல் குதிரை நகைச்சுவை :

"நான் சொன்னேனில்லே... திரும்பி வருவான்" = வலைப்பூ

'பரிவை' சே.குமார் சொன்னது…

@ நிஜாமுதீன் சார்... கருத்துக்கு நன்றி... படம் இணைத்து விட்டேன்.

@ தனபாலன் அண்ணா... கருத்துக்கு நன்றி... தாங்கள் சொல்வது உண்மைதான்... ஏதோ ஒரு வடிவம் என்றாலும் டிஜிட்டலுக்குள் வந்தாச்சு.

ஸ்ரீராம். சொன்னது…

சுவாரஸ்யமான தகவல்கள்.  கணேஷ் பாலா பேட்டி முன்னரே பார்த்தேன்.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் சொன்னது…

என் ஆலோசனையை ஏற்று, படம் இணைத்ததற்கு நன்றி சார்!

வெங்கட் நாகராஜ் சொன்னது…

மின்னிதழ்கள் - சம்பந்தப்பட்ட அனைவருக்கும் வாழ்த்துகள்.

உங்கள் எழுத்து/மின்னிதழ்களில் பங்களிப்பு தொடரட்டும்.

K. ASOKAN சொன்னது…

பாராட்டுக்குரியது வாழ்த்துகள்

Thulasidharan thilaiakathu சொன்னது…

நல்ல தகவல்கள் குமார்.

மின்னிதழ்கள் நல்ல விஷயமே இனி டிஜிட்டல் உலகம்தான் என்றே பலரும் சொல்லி வருகிறார்கள். என்னைப் போன்று இதழ்களை வாங்கிப் படிக்க முடியாதவர்களுக்கு இந்த மின்னிதழ்கள் மிகவும் பயனுள்ளவை. கல்கோனா பற்றி வெங்கட்ஜி அவர்களும் சொல்லியிருந்தார்.

மின்னிதழ் நடத்துபவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

உங்கள் எழுத்துகள் எல்லா மின்னிதழ்களிலும் வந்து மின்ன வேண்டும். வாழ்த்துகள் குமார்.

கணேஷ் பாலா அவர்களின் பேட்டி பார்க்கிறேன்.

கீதா

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

மின்னிதழ்களின் மதிப்புரை சிறப்பாக இருந்தது.

Bhanumathy Venkateswaran சொன்னது…

நல்ல தகவல்கள்.நன்றி.