மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

புதன், 26 ஆகஸ்ட், 2020

மௌன ஒத்திகைகள் - சிவமணி

விதை என எழுத ஆரம்பித்தால் நீளமாய்த்தான் வளர்ந்து நிற்கும் நமக்கெல்லாம்... ஹைக்கூ என ஆயிரக்கணக்கில் கிறுக்கி வைத்திருந்தாலும் நீள் கவிதைகளே அதிகம் எழுத வருமென்பதால் அந்தப் பாதையில் இருந்து யூடர்ன் எடுத்து சிறுகதைப் பாதையில் மட்டுமே பயணித்துக் கொண்டிருந்தாலும் கவிதைகள் மீது எப்போதும் காதல் உண்டு... அவ்வப்போது அது வெளியிலும் வரும்... அதுவும் காதல் கவிதைகள் என்றால் அலாதிப் பிரியம்தான்...

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், நிற்கிறார் மற்றும் உரை

முகநூலில் கவிஞர் பழனிபாரதி எழுதும் காதல் கவிதைகள் எல்லாமே அருமையாக இருக்கும் அதற்கென அவர் இடும் படங்களும் சிறப்பானதாய் அமைந்திருக்கும்... அதேபோல் நண்பர்களின் முகநூல்,  வாட்ஸப் கவிதைகள் என எப்படியும் தினமும் கவிதைகள் வாசிக்க கிடைத்து விடுகின்றன.

காதல் கவிதைகள் ஒவ்வொருவரின் மனதின் தோன்றலிலும் வரிகள் மாறினாலும் அது சொல்வதெல்லாம் ஒன்றுதான்... அது நீ அழகி, நீ நிலா, நீ வானம், நீ அருவி, நீ சிலை, நீ கலை என பெண்ணை வர்ணித்து வர்ணித்து வாசிப்பவரை வசீகரிப்பவையாகத்தான் இருக்கும்.

கவிஞர்கள் இப்போதெல்லாம் பள்ளியிலேயே உருவாகி விடுகிறார்கள்... ஆறு வயதில் எழுத ஆரம்பித்தேன் என்று சொல்லும் காதல் கவிஞர்களும் இப்போது நிறைய வந்து விட்டார்கள். பிறக்கும் போதே டாக்டருக்கிட்ட ரெண்டு காதல் கவிதை சொல்லிட்டுத்தான் வந்தேன் எனச் சொன்னாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

என்னதான் இருந்தாலும் காதல் கவிதைகள் எழுதும் கவிஞர்களை உருவாக்கிய, உருவாக்கும் பெருமை எப்போதும் கல்லூரிகளுக்கே அதிகம் உண்டு... அதிலும் இரு பாலரும் படிக்கும் கல்லூரி என்றால் சொல்லவே வேண்டியதில்லை... வகுப்புக்குப் பத்து 'வாலி'கள் இருக்கத்தான் செய்வார்கள். உருகி உருகி எழுதுவார்கள்... கரும்பலகை, சுவர், இருக்கைகள், கழிவறைச் சுவர், கதவுகள் என எங்கும் வியாபித்திருக்கும் கவிதைகள்... சில வீச்சமாய்... பல வீரியமாய்... 

தான் கல்லூரிக் காதல் கவிஞன் இல்லை என்றாலும் மௌன ஒத்திகைகள் நடத்தியிருக்கும் இவரும் கல்லூரிக் கவிஞராய்த்தான் இருந்திருக்கிறார். பின்னர் கவிதைக்கு விடுப்பு விட்டு வாழ்க்கைப் பாதையில் பயணிக்க ஆரம்பித்து, தனிமையைக் கொல்லும் மருந்தாய் மீண்டும் கவிஞராகத் தொடர்கிறார். 

முதல் புத்தகம்... முழுக்க முழுக்க காதல் கவிதைகள்... சற்றே வித்தியாசமாய்... மலை... வானம்... நிலா... அருவிகளில் இருந்து விலகி வித்தியாசம் காட்டியிருக்கிறார்.  நான் அவளைப் பார்த்துட்டுப் போயிடலாம்ன்னுதான் நினைச்சேன்... ஆனா அவ பார்வையால என்னைய அள்ளிக்கிட்டுப் பொயிட்டாய்யா என்பதை,

கொக்கு போலக்
காத்திருந்தேன்
பார்த்துவிட்டுப்
பறந்து செல்ல,
வந்த மீன்
என்னைக் 
கவர்ந்து செல்லும் 
விசித்திரம் நடந்தது.

எனக் கவிதையாக்கியிருக்கும் இவர், ஒருத்தியைப் பார்த்ததும் பெண்ணுக்கே உரிய பண்புகள் என்னிடம் வந்துவிட்டன என்பதை இப்படிக் கவிதை ஆக்குகிறார்.

அச்சம்
மடம்
நாணம்
எல்லாம் இருந்தது
உன்னைப் பார்த்துவிட்டு
நகர்கையில்

அடுத்ததாய் ஒருத்தியிடம் காதலைச் சொல்லாமல் அவள் வரும் பாதையில் காத்திருந்து, அவள் கண்டு கொள்ளாமல் போவதால் கிடைக்கும் தொடர் தோல்விக்காகவே தினமும் உன்னைப் பார்க்க வருகிறேன் என்கிறார் இந்தக் கவிதையில்...

உன்னிடம்
தோற்பதற்காகவே
தினமும்
படையெடுக்கும்
போர்வீரன்
நான்.

எப்படியும் அவளைக் கரைத்து தன் காதலில் விழ வைத்து விடலாம் என்ற எண்ணத்தில் அவன் மட்டுமே கரைந்து கரைந்து அவள் நினைவுகளைச் சுமந்து உறக்கமில்லா இரவுகளில் உழன்று கொண்டிருப்பதை,

எதிலும் 
கரைய முடியாமல் நீ
எப்போதும் 
கரைந்தபடியே நான்
நித்திரையற்ற
சாபத்தால் 
நிரம்பி வழிகிறது
நினைவுகள்

என்பதுடன் திமிறிக் கொண்டு வாடிவாசல் விட்டு வெளியே வரும் காளையாய்த் திரிந்தவனை காதலி ஒருத்தி அடக்கி ஆள்கிறாள் என்பதைச் சொல்லும் போதே உன் அடக்கலில் எனக்கு அடி சறுக்குதடி என்றும் சொல்லி விடுகிறார் இந்தக் கவிதையில்... 

வாடிவாசல் காளையாய்
திமிறி வரும் என்னை
அடக்கி 
இழுத்துச் செல்கிறாய்
பிடியை  
சிறிது விட்டுப் பிடி
மூச்சு முட்டுகிறது
காளைக்கு அடிசறுக்கும்.

இப்படிப் புத்தகம் முழுவதும் சின்னச் சின்னதாய் காதல் மொழிகளை அள்ளி தெளித்திருக்கிறார் அதீதக் காதலுடன்... வாசித்து முடிக்கும் போது மனதின் மூலையில் மூழ்கிக் கிடக்கும் ஏதோ ஒரு பால்யக் காதல் மெல்லத் தலைதூக்கி நினைவுகளை மீட்டிப் பார்க்கும்... மீட்டும் நினைவுகள் சுகமானவையாகத்தானே இருக்கும்... இது காதல் அல்லவா...? 

புத்தகம் கையில் கிடைத்த போது உடனே வாசித்த நண்பர் தன் காதலுக்குள் பயணித்து ஒவ்வொரு கவிதையையும் சிலாகித்துப் பேச ஆரம்பிக்க, இதை எழுதிய எழுத்தாளர் மகிழ்வுடன் அவரின் பேச்சுக்கு விரிவான பதிலுரை கொடுத்துக் கொண்டிருந்தார் காதலுடன்.

வதிலை பிரபா அவர்களின் ஓவியா பதிப்பகத்தின் வெளியீடாக, மிக அழகாக வந்திருக்கிறது கவிஞர் சிவமணியின் 'மௌன ஒத்திகைகள்'. திரைப்பட இயக்குநர் அகத்தியன் மற்றும் பாடலாசிரியர் விவேகாவின் அணிந்துரை புத்தகத்துக்கு மகுடம். பக்கங்களின் அழகும், படங்களும் மேலும் மெருகூட்டல்... ஓவியா ஓவியமாய் படைத்திருக்கிறது.

கவிஞர் சிவமணி... இங்குதான் ருவைஸில் இருக்கிறார்... ஒரு முறை எங்கள் அமீரக எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்கள் குழுமக் கூட்டத்தில் பார்த்திருந்தாலும் பேசவில்லை...நமக்குத் தெரியாத ஒருவரெனக் கடந்து வந்து விட்டேன்... போன வாரம் நெருடா / பால்கரசு அறைக்குச் சென்ற போது அங்கு வந்திருந்த அவருடன் பேச முடிந்தது. அவசரமாக கிளம்பியவர் கார் பிரச்சினையால் கிட்டத்தட்ட நாலு மணி நேரத்துக்கும் மேல் இருந்து பேசிக் கொண்டிருந்தார்.

அவரின் பேச்சில் எழுத்துத்தான் என் மூச்சு என்பதே எனக்குத் தெரிந்தது. இங்கிருக்கும் மனிதர்களை தனிமை வாட்டாமல் எழுத்தைக் கொடுத்து விடுகிறது என்பதே மிகுந்த ஆறுதல்... அவர் பணி புரியும் இடத்தில் தன் தனிமையைக் கொல்ல விட்டிருந்த எழுத்தை எடுத்திருக்கிறார்... அது வீறு கொண்டு எழுந்து இருக்கிறது. மனிதர் தன் படைப்புக்கள்... எழுத்து... இன்னும் எப்படி வித்தியாசமாய் நகர்வது... வாசிப்பு தன்னை எப்படி மெருகேற்றும்.... என ஒரு வட்டத்தை எழுத்தைக் கொண்டே வடிவமைத்து அதற்குள் தன்னை நிறுத்தி அழகாய்ச் சுற்றுகிறார்... சுற்றும் போதெல்லாம் எழுத்தை மட்டுமே சுவாசிக்கிறார்.

அன்று பேசியதில் எல்லாமே எழுத்து சம்பந்தமாய்த்தான் இருந்தது... அதில் தன் குழந்தை எப்படியிருக்கு என மற்றவர்கள் சொல்லக் கேட்பதில் அவருக்கு அலாதிப் பிரியம் இருப்பதை உணர முடிந்தது... நல்லதோ கெட்டதோ முகத்துக்கு நேரே சொல்லிருங்க... என்னைச் செதுக்கிக் கொள்வேன்... சத்தியமாய் எழுத்தால் உங்களைக் கொல்ல மாட்டேன் என்பதாய்த்தான் இருந்தது அவரின் ஆர்வம்.

நானெல்லாம் பேசவே யோசிப்பேன்... மடை திறந்த வெள்ளமென மனிதர் பேசிக் கொண்டேயிருக்கிறார்... நிறைய எழுதுவார் போல...  அவரின் வாசிப்பும், தொடர்ந்த எழுத்தும் இன்னும் நிறைவான படைப்புக்களைக் கொடுக்கும் என்பது உறுதி. சிறுகதைகள், கட்டுரைகள் என தனது களத்தை விஸ்தாரமாக ஆக்கிக் கொண்டிருக்கும் எழுத்தாளர் சிவமணிக்கு சிகரம் தொட வாழ்த்துகள்.

முதல் நூல்... கவிதைகளை இன்னும் செதுக்கியிருந்தால் காதலைக் கூடுதலாக அள்ளியிருக்கலாம்... இதிலும் சோடை போகவில்லை... கவிதைகள் அழகு... புத்தகமும் அழகு... அடுத்து மலர்வது இன்னும் சிறப்பாக இருக்குமென நம்பிக்கை கொடுக்கும் எழுத்து. 

வாழ்த்துகள் சிவமணி.

மௌன ஒத்திகைகள்
கவிஞர். சிவமணி
ஓவியா பதிப்பகம்
விலை. ரூ.100.

-'பரிவை' சே.குமார்.

2 எண்ணங்கள்:

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நல்லதொரு அறிமுகம் குமார். கவிஞர் அவர்களுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

நூலை வாசிக்கத் தூண்டுகின்ற மதிப்புரை. ஆசிரியருக்கு பாராட்டுகள்.