மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

திங்கள், 17 ஆகஸ்ட், 2020

மனசின் பக்கம் : கதைகள்

பிரபலங்கள் மட்டுமே எழுதிக் கொண்டிருக்கும் யாவரும்.காமில் 'பனைமரம்' என்னும் சிறுகதை வெளியானதைத் தொடர்ந்து கலக்கல் ட்ரீம்ஸ் தளத்தில் 'நாகர்' வெளியானது. அதைத் தொடர்ந்து வாசகசாலைக்கென கதை எழுத நம்மால் முடியுமா என்ற யோசிப்பில் இருக்கும் போதே 'வசந்தி' அதில் வெளியானது.

நிறைய மினிதழ்களில் வெளியாகியிருந்தாலும் பிரபலமான மூன்று தளங்களில் அடுத்தடுத்த வாய்ப்பு என்பது எதிர்பார்க்காத ஒன்று. வாசகசாலையில் கதை வெளியானதும் அங்கிருந்து தனிச் செய்தியில் 'எங்களையும் வசந்தியின் இறுதி யாத்திரைக்கு அழைத்துச் சென்றீர்கள்... கிராமத்து நடையில் ஒரு நல்ல கதை' என்று அனுப்பியிருந்தார் அதன் நிர்வாகிகளில் ஒருவரான அருண்.. உண்மையில் இதுதான் எழுத்துக்குக் கிடைத்த அங்கீகாரம்... பனைமரத்துக்கும் இப்படியான பாராட்டு யாவரும் ஜீவகரிகாலனிடமிருந்து வந்தது.

கலக்கல் ட்ரீம்ஸ் தசரதன் தன்னுடைய முகநூல் பக்கத்தில் தன் நினைவுகளை மீட்டெடுத்துப் பதிவெழுதி நாகர் கதையின் இணைப்பைக் கொடுத்திருந்தார். நாகர் கதை இதுவரை 1600+ வாசகர்களால் வாசிக்கப்படிருக்கிறது. வாசகசாலையில் வசந்தி வந்த இரு தினத்தில் கலக்கல் ட்ரீம்ஸில் மீண்டும் ஒரு சிறுகதை... கிராமத்து சிறு வயது நினைவுகளை அசைபோடும் நடு வயது மனிதர்களின் கதைதான் 'நினைவுத் திரட்டி', இதற்கும் தசரதன் தனிப் பதிவெழுதினார். அவரின் பதிவு உங்களுக்காக...

ஊரில் எங்களுக்கு முந்தைய தலைமுறை ஒன்று இருந்தது. வகைதொகை இல்லாமல் அளந்து வைத்தாற்போல் சம வயதுடைய ஆட்களை மட்டும் சேர்த்து வைத்திருந்த கூட்டம். இதில் சாதிபேதமெல்லாம் கிடையாது. கூட்டத்தில் தலையை நுழைத்தால் மாமன், மச்சான், பங்காளி வகையறா வழக்காடு சொல்லாக இருக்கும். மிக மிக கவனமாக இருக்கும் கூட்டமது. திடீரென்று நற்பணி மன்றம் ஆரம்பிப்பார்கள், கோவில் குளங்களை சுத்தம் செய்வார்கள், பள்ளிக்கூடத்திற்கு வெள்ளை அடிப்பார்கள், விளையாட்டு மைதானங்களில் பயிற்சி கொடுப்பார்கள். மாலை 6மணிக்கு மேல் கட்டணமில்லாமல் ட்யூசன் எடுப்பார்கள்.

திடீரென்று அந்த கூட்டம் காணாமல் போகும். ராமராஜன், ரஜினி, கமல் ரசிகர் மன்றங்கள் முளைக்கும். கண்ணுக்கு தெரியாமல் அடித்துக் கொள்வார்கள். யாராவது மருத்துவமனையில் அட்மிட் ஆன பின்பு தான் அப்படி ஒரு சண்டை நிகழ்ந்ததே தெரியும். மறுபடியும் ஊர்த்திருவிழா என்றால் ஒன்றாய் சேர்ந்து திரியும் மானங்கெட்ட கூட்டம் அது.

அவர்கள் கவனமாக இன்னொன்றும் செய்து கொண்டிருந்தார்கள். அடுத்த தலைமுறை இளவட்டங்களை அப்படி ஒரு கூட்டமாய் சேர்வதை தவிர்த்து வந்தார்கள். மறந்தும் நாங்கள் ஜமா கூடுவதை கவனமாக தவிர்த்தார்கள். என்ன காரணமோ....

இப்போது எங்களுக்கு அடுத்த தலைமுறை இளவட்டங்கள் மீண்டும் நற்பணி மன்றங்கள் ஆரம்பித்து இருக்கிறது.

இதெல்லாம் ஏன் சொல்றேன்னா.... நித்யா குமார் எழுதிய சிறுகதை தான் ஞாபகப்படுத்துச்சு.

நன்றி தசரதன்.

இன்னொன்னு சொல்லணும்... யாவரும்.காமின் க.நா.சு. சிறுகதைப் போட்டிக்கு கதை அனுப்பிய போதும் அவர்களின் புதுமைப்பித்தன் குறுநாவல் போட்டிக்கு அனுப்புவோமா வேண்டாமா என்ற மனநிலை... ஆகஸ்ட்-15 கடைசி தேதி, 12-ம் தேதி இரவு குறுநாவலென சேமித்து வைத்த இரண்டை எடுத்துப் பார்த்தால் 3500 வார்த்தைகளைத் தாண்டலை, அவங்க கேட்டது 10000-க்கு மேல் 12000-க்குள். இது கதைக்காகாது என்று நினைத்திருந்த போது மறுநாள் போனில் பேசிய இராஜாராம் வெள்ளி, சனி லீவுதானே... பின்னே என்ன... முழுசா ரெண்டு நாள் இருக்கு எழுதலாம் என்றார்.

சரி முயற்சிப்போமே என வியாழன் இரவு 2400 வார்த்தைகள் இருந்த, நாவலாக்கலாம் என வைத்திருந்த... நாவலாக்கும் முயற்சியில் காணாமல் போன கதை தேடலில் கிடைத்தது... அதன் ஆதிதான் இருந்தது... நாவலாக்கும் முயற்சியில் செய்த மாற்றங்கள் இல்லை.... அதை எடுத்து மாற்ற ஆரம்பித்து வெள்ளியன்று எழுத்துக்கென ஒதுக்கி அன்றிரவு கதையை முடித்து நிமிர்ந்த போது அது 10,500 வார்த்தைகளில் நின்றது,

மறுநாள் காலை மீண்டும் எழுத்துப்பிழை பார்த்த போது... அப்படிப் பார்க்கும் போது சேர்த்தல் அழித்தல் எல்லாம் எப்பவும் நடக்கும்... அப்படி நடந்து கதையின் மொத்த வார்த்தைகள் 11,200+ ஆகிப் போனது... அன்றே இறுதி நாளென்பதால் அனுப்பியும் வைத்தாச்சு.. ஒரே நாளில் கிட்டத்தட்ட 10000 வார்த்தைகள் எழுதியது என்பது இதுவே முதல்முறை... இப்படி மல்லுக்கட்டியெல்லாம் எழுதக் கூடாதுப்பா எனச் சொல்லியது முதுகுவலி. கதை அனுப்பியாச்சு... அது ஜெயிக்குதோ இல்லையோ... நமக்கு ஒரு நல்ல நாவல் எழுதும் வாய்ப்பும்... வைத்திருக்கும் கதைகளில் கூடுதலாய் ஒன்றும் கிடைத்தது.

-'பரிவை' சே.குமார்.

5 எண்ணங்கள்:

KILLERGEE Devakottai சொன்னது…

நாவல்கள் வெற்றி பெற வாழ்த்துகிறேன் நண்பரே...

தொடரட்டும் கதைக்களங்கள்.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

கண்டிப்பாக வெற்றி பெறுவீர்கள்...

ஒருவரின் சிந்தனைக்கு உங்களின் சிறுகதை ஞாபகம் வருகிறது என்றால், அதை விட ஒரு மகிழ்ச்சி கிடையாது குமார்... வாழ்த்துகள்...

ஸ்ரீராம். சொன்னது…

வாழ்த்துகள்.   நாவல் போட்டியிலும் வெற்றிபெற வாழ்த்துகள் குமார்.   ஒரே நாளில் அவ்வளவு எழுதுவது என்பது சாதனைதான்.

G.M Balasubramaniam சொன்னது…

என் தளத்தில் அறி விக்கப்பட்டு ருக்கும் நாடகம் முடிக்கும் போட்டியில் பங்கு பெற அழைக்கிறேன்

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

குமார் மனமார்ந்த வாழ்த்துகள். நாவல் போட்டியில் வெற்றி பெறவும் மனமார்ந்த் வாழ்த்துகள்.

துளசிதரன்

குமார் கண்டிப்பா வெற்றி பெருவீங்க. எல்லாவற்றிற்கும் வாழ்த்துகள்.

குமார் ஹேட்ஸ் ஆஃப் ஹப்பா ஒரே நாள் ல இப்படி எழுதியிருக்கீங்களே சூப்பர். எனக்கு கதைல ஒரு நாள் ஒரு சில வரிகளே எழுதறதுக்குள்ள மைன்ட் சிதறு தேங்காய் போல சிதறுது ஹா ஹா ஹா. பெரிய விஷயம் குமார். இதற்கும் வாழ்த்துகள்

கீதா