மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

ஞாயிறு, 14 ஜூன், 2020

ஆன்மீகம் : தினம் ஒரு கோயில் - 9

வ்வளவு கோவில்கள்... எத்தனை சிறப்புக்கள்... வாசிக்கும் போதுதான் தெரிகிறது சிவகங்கைச் சீமையில் இத்தனை சிறப்புடைய கோயில்கள் இருப்பது... எல்லாமே வரலாற்றுடன் தொடர்புடைய கோவில்கள்... சர்வசாதாரணமாகக் கடந்து செல்லும் கோவில்களுக்குள் இத்தனை சிறப்பா என்று யோசித்துக் கொண்டும் வியந்து கொண்டுமிருக்கிறேன்.

கோவிலூரை எத்தனை முறை கடந்திருக்கிறேன்... ஒரு முறை கோவிலுக்குப் போய் சாமி கும்பிட்டிருக்கிறேன்... அவ்வளவே. இத்தனை சிறப்பு இருக்கும் என்பதெல்லாம் தெரியாது. எல்லாக் கோவிலையும் போல சாமியைக் கும்பிட்டுவிட்டுத் திரும்பியிருக்கிறேன்.

பிள்ளையார்பட்டி கூட குடவறைக் கோவில், கற்றளி என இரண்டு கோவில்களாய் இருக்கும் இந்த வாசிப்பில்தான் தெரிந்தது. நமக்கு ஒரே கோவில்தான்... அதுபோல அது சிவன் கோவில் என்பதும் வாசிப்பில் அறிந்ததே... நமக்கு அது கற்பக விநாயகர் கோவில்தான்.

முருகன் எனக்குப் பிடித்த தெய்வம்... எல்லாத்துக்கும் முருகாதான்... குன்றக்குடி விரும்பிச் செல்லும் இடம். கல்லூரியில் படிக்கும் போது, வேலை செய்யும் போதெல்லாம் அடிகளாரைப் பார்க்கவும் செல்வோம். மலை ஏறி முருகனைக் கும்பிட்டு வருவோமே தவிர மலைக்குக் கீழே குடைவரைக் கோயிலாய் சிவன் கோவிலும் அதில் ஐந்து சிவலிங்கமும் இருப்பதை இப்போதுதான் அறிய முடிந்தது. அடுத்த முறை முருகன் தரிசனத்துடன் சிவ தரிசனமும் செய்ய வேண்டும்.

இந்தக் கோவிலூர் கோவில் ஊரணியில் ராமராஜன் படப்பாடல் ஒன்று எடுக்கப்பட்டிருக்கும். அது என்ன படம்ன்னு ஞாபகமில்லை.

கோவிலூர் கொற்றவாளீஸ்வரர் திருக்கோயில்
படம் இதைக் கொண்டிருக்கலாம்: வானம், மேகம், வெளிப்புறம் மற்றும் தண்ணீர்
காரைக்குடி பழைய பேருந்து நிலையத்தில் இருந்து மதுரை செல்லும் ரோட்டில் சென்றால் 2 கி.மீ தூரத்தில் இருக்கிறது இக்கோயில்.
1000 ஆண்டுகள் பழமையானது இக்கோவில் என்று வரலாறு சொல்கிறது. கோவில் கட்டி ஏறக்குறைய 1300 ஆண்டுகள் இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.
ஏழு நிலை இராஜகோபுரம் அழகிய சிற்பங்களுடன் வானளாவி உயர்ந்து நிற்கிறது. மற்ற கோவில் கோபுரங்களைவிட இதில் சிற்ப வேலைப்பாடுகள் அதிகம் காணப்படும்.
திருக்கானப்பேர் என்னும் காளையார்கோவிலை பாண்டிய மன்னனான வீரசேகர பாண்டியன் ஆண்டு வந்த போது சிவனருளால் கொற்றவாள் ஒன்றைப் பெற்றிருந்ததாகவும், அதன் மூலம் பகை மன்னர்களை வென்று வெற்றி வாகை சூடிக் கொண்டிருந்த தன் பக்தனான பாண்டியனிடம் சிறு திருவிளையாடல் நடத்த விரும்பிய சிவன், வீரசேகர பாண்டியன் வேட்டைக்குச் சென்ற போது ஒரு மாயமானை அவன் முன் வரவைக்க, அதை விரட்டிச் சென்றவனின் கையில் இருந்த கொற்றவாள் மாயமாக மறைந்து போனதாம்.

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.
அந்த வாளைத் தேடி அவன் காட்டுக்குள் அலைந்த போது ஒரு அந்தணனையும் புலியையும் வீரசேகர பாண்டியன் முன்னே வரவைத்தார் சிவன் என்றும், தன்னைக் காக்கும்படி வேண்டிக் கொண்ட அந்தணனைக் காக்கும் பொருட்டு புலியுடன் சண்டையிடுவது என முடிவு செய்து அவன் களமிறங்கியபோது சிவனின் திருவிளையாடலால் தோன்றிய அந்தணனும் புலியும் மாயமாய் மறைந்து போக, அருகிலிருந்த வன்னி மரத்தடியில் சுயம்பு மூர்த்தியாக சிவலிங்கமும் அதன் அருகிலேயே மாயமான அவனது கொற்றவாளும் இருந்ததாகவும் இந்தத் திருவிளையாடலால் மனம் மகிழ்ந்தவன் அந்த லிங்கத்தையே மூலவராக்கி அங்கு ஒரு கோவிலைக் கட்டினான் என்றும் கொற்றவாளை மன்னனுக்கு வழங்கியதால் 'ராஜகட்கபரமேஸ்வரர்' என்ற பெயரில் மூலவர் அழைக்கப்பட்டதாகவும் பின்னர் 'கொற்றவாளீஸ்வரர்' என்ற பெயர் நிலைத்ததாகவும் வரலாறு சொல்கிறது.
மேலும் மதுப்பிரியன் என்னும் முனிவரின் தவத்திற்கு அருள் புரிந்ததால் 'திரிபுவனேஸ்வரர்' என்ற பெயரும் மூலவருக்கு உண்டு என்பதும் வரலாற்றுச் செய்தி.

படம் இதைக் கொண்டிருக்கலாம்: வானம் மற்றும் வெளிப்புறம்
வீரசேகர பாண்டியனின் கொற்றவாள் மாயமான கதையை சிலர் மன்னனுக்குத் தோன்றிய கனவு என்றும் அந்தக் கனவுக்குப் பின்னரே இக்கோயில் கட்டப்பட்டதாகவும் இணையத்தில் எழுதியிருந்தாலும் பெரும்பாலான தளங்கள் காட்டுக்குள் நடந்த கண்ணாமூச்சி ஆட்டத்தைத்தான் தல வரலாறாகச் சொல்கின்றன.
இங்கு குடிகொண்டிருக்கும் அம்மனுக்கும் ஒரு திருவிளையாடல் கதை இருக்கிறது. இது அம்மன் உருவான கதை அல்ல... கொற்றாளீஸ்வரருடன் பார்வதி அம்மனும் இத்தலத்தில் வீற்றிருக்க ஆரம்பித்த பின்னர் ஒரு காலத்தில் நடந்த திருவிளையாடல் இது.
சிவபக்தரான சிவகுப்தன், சுதன்மை தம்பதியர் விவசாயம் செய்து வந்தனர். அவர்களின் வயலில் நெற்கதிர் விளைத்து அறுவடைக்குத் தயாராக இருந்தது. மயில் போன்ற பறவைகள் நெல்லை உறுவித் தின்று செல்லும் என்பதால் யாராவது ஒருவர் பகலெல்லாம் வயலில் காவல் இருப்பது வழக்கம். அதேபோல் அன்று தனது மகளான சிறுமி அரதனவல்லியை காவலுக்குச் செல்லுமாறு பணிந்திருக்கிறாள் சுதன்மை. வயலில் காவல் இருக்கும் மகளுக்கு தயிர் சாதத்தை எடுத்துக் கொண்டு போய் தன் கையால் ஊட்டியபோது மகளும் விரும்பி வாங்கிச் சாப்பிட்டிருக்கிறாள்.

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

திரும்பி வீட்டுக்கு வந்ததும் சிறிது நேரத்தில் அங்கு வந்த அரதனவல்லி பசிக்குதும்மா சோறு போடுங்கள் என்று கேட்டிருக்கிறாள். என்னடி இப்பத்தானே சாப்பாட்டை நான் உனக்கு ஊட்டி விட்டேன்... மறுபடியும் பசிக்குதுன்னு வந்து நிக்கிறே என்று கேட்டதும் நான் எங்கே வயலுக்குப் போனேன்... நான் தோழியருடன் அருகில் இருக்கும் மலர்சோலையில் அல்லவா விளையாண்டு விட்டு வருகிறேன் என்று சொல்ல, அப்போதுதான் தன் மகளுக்காக அந்தப் பார்வதி தேவியே வயலுக்கு வந்து காவல் இருந்திருக்கிறாள்... தன் கையால் சாப்பாடும் சாப்பிட்டிருக்கிறாள் என்பதும் சுதன்மைக்குத் தெரிய வருகிறது. நெல் வயலைக் காத்ததால் நெல்லையம்மன் என்று அழைக்கப்பட்டார் என்பது இந்த கோவிலில் இருக்கும் அம்மனின் பெருமையாகச் சொல்லப்படுகிறது.
நெல்லையம்மனைக் கும்பிட்டால் பொன், பொருள், பெண் குழந்தைகள் அனைத்துக்கும் பாதுகாவலாக இருப்பாள் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கை. தனிச் சன்னதியில் இருந்து அருள்பாலிக்கிறாள் நெல்லையம்மன்.

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

கோவிலுக்கு முன்புறம் சதுர வடிவிலான (சுற்றளவில் 1 கி.மீ) மிகப்பெரிய ஊரணி இருக்கிறது. அதன் நடுவே பதினாறு தூண்களுடன் கூடிய நீராழி மண்டபம் உள்ளது. இந்த ஊரணி 'மது புஷ்கரணி' என்று அழைக்கப்படுகிறது. இந்த ஊரணி கோடைகாலத்திலும் வற்றுவது இல்லை என்று சொல்லப்படுகிறது.
கோவிலைச் சுற்றி நான்கு மாடவீதி அமைந்துள்ளது.
வீரசேகர பாண்டியன் கட்டிய கோவிலை பிற்காலத்தில்... அதாவது பதினெட்டாம் நூற்றாண்டில் புதுப்பித்து திருப்பணிகளைச் செய்தவர் கோவிலூரில் வேதாந்த மடத்தை நிறுவிய மடாதிபதி முத்துராமலிங்க ஞானதேசிக சுவாமிகள். இவருக்குப் பின்னர் வந்த சிதம்பர தேசிகரின் காலத்தில்தான் கோவிலூர் புராணம் மீனாட்சி சுந்தரனாரால் எழுதப்பட்டது.
ரிஷப வாகனத்தில் பார்வதியுடன் சிவபெருமான், மயில் மீது சண்முகர், வீணையுடன் சரஸ்வதி, சாரதாம்பிகை, நடராஜர், வீரசேகர பாண்டியன் சிலைகள் இங்கு இருக்கின்றன.
மகா மண்டபத்தில் ஆடல்வல்லான் சிலை அமைந்திருப்பது இக்கோவிலின் சிறப்பாகும்.

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

பிரதோஷம், பௌர்ணமி மற்றும் சிவராத்திரி போன்றவை விஷேச தினங்களாகும்.
முற்காலத்தில் கோவிலூர் சாலிவாடி (அரிசி நிலம்) என்றும் கழனி வாசல் (விவசாய நிலம்) என்றும் அழைக்கப்படிருக்கிறது. இப்போது இந்த ஊர் கோவிலூர் என்றான போதிலும் காரைக்குடியில் கழனி வாசல் என்றொரு இடம் இப்போதும் இருக்கிறது.
காரைக்குடி மதுரை ரோட்டில் கோவிலுக்கும் மடத்துக்கும் பிரியும் சாலையின் நுழைவு வாயிலில் இரண்டு பக்கமும் தேர்வடிவிலான அழகிய கான்கிரீட் மண்டபம் இருக்கிறது.
வேலை கிடைக்கவும் படிக்கச் செல்லும் பெண்கள் பாதுகாப்பாய் வீடு திரும்பவும் இங்கு பிராத்திக்கப்படுகிறது. தங்களின் பிரார்த்தனை நிறைவேறியவுடன் சுவாமிக்கும் அம்மனுக்கும் அபிஷேகம் செய்து புதிய வஸ்திரம் சாத்தி தங்கள் நேர்த்திக்கடனைச் செலுத்துகிறார்கள்.

படம் இதைக் கொண்டிருக்கலாம்: வெளிப்புறம்

கோவில் நடை காலை 7 -11 மாலை 4-8 வரை திறந்திருக்கும்.

நாளை : பிரான்மலை
நன்றி : படங்கள் இணையத்திலிருந்து.
-'பரிவை' சே.குமார்.

7 எண்ணங்கள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அழகான கோவிலின் அருமையான தகவல்கள்...

ஸ்ரீராம். சொன்னது…

மிகவும் அழகிய, மிகவும் பழமையான கோவில் என்று தெரிகிறது.  சென்று பார்க்கும் ஆசை வருகிறது.

துரை செல்வராஜூ சொன்னது…

கோயிலூர் கொற்றவாளீஸ்வர் கோயில் பற்றி இன்று தான் தெரிந்து கொண்டேன்...

திருக்கோயிலின் அழகைக் காட்டும் படங்கள்..
அருமையான பதிவு...

கவிஞர்.த.ரூபன் சொன்னது…

வணக்கம்
அண்ணா

கருத்தோடு படங்களும் பிரமிக்க வைக்கிறது வாழ்த்துக்கள் தொடருங்கள்

நன்றி
அன்புடன்
ரூபன்

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

இதுவும் நான் பார்க்காத கோயில். பட்டியலில் இணைத்துவிட்டேன். அவசியம் செல்வேன்.

மாதேவி சொன்னது…

வரலாறுகளும் கோவிலும் கண்டு கொண்டோம்.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

சிறப்பான தலமாகத் தெரிகிறது. சிற்பங்கள் கொள்ளை அழகு. நேரில் பார்க்கக் கிடைக்கும் நாள் என்னாளோ?

தொடரட்டும் கோவில் உலா.