மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

திங்கள், 9 மார்ச், 2020

சிறுகதை : சாமியாடி (அகல் மின்னிதழ்-ஜனவரி:2020)

எப்பவும் போல் அகல் மின்னிதழுக்கு ஒரு கட்டுரை அனுப்பிய போது கதை கொடுங்களேன் எனக் கேட்டார் நண்பர் சத்யா. இரண்டு கதைகளை அனுப்பினேன். அதற்கு முன் கட்டுரை ஒன்றும் அனுப்பியிருந்தேன். ஒரு கதையையும் கட்டுரையையும் ஜனவரி-2020 அகல் மின்னிதழில் வெளியிட்டிருந்தார். ஊரில் இருந்ததால் அது குறித்துப் பகிர முடியவில்லை. இதோ 'சாமியாடி'யை இங்கே பகிர்ந்திருக்கிறேன். வாசித்து உங்கள் கருத்தைச் சொல்லுங்க. அப்படியே அகலிலும் உங்க கருத்தைச் சொன்னா நல்லாயிருக்கும். நன்றி.

அகலில் வாசிக்க, கருத்துச் சொல்ல : சாமியாடி

---------------------------------
ரோட்டோரத்தில் இருந்த சிறிய கீற்றுக் கொட்டகை டீக்கடை முன் வண்டியை நிறுத்தினான் ரவி, அதிலிருந்து இறங்காமலேயே 'இங்க சாமியாடி வீடு எங்கப்பு இருக்கு?' எனக் கேட்டபடி தோளில் கிடந்த துண்டால் முகத்தைத் துடைத்துக் கொண்டார் பின்னாலிருந்த சாமியய்யா.

"எந்தச் சாமியாடிப்பு? மேலக்காட்டாரா... இல்ல வடக்கிவூட்டானா?" கடைக்கு முன் கிடந்த கயிற்றுக்கட்டிலில் அமர்ந்து தினத்தந்தியில் படம் பார்த்துக் கொண்டிருந்த ஆறுமுகம்பிள்ளை சத்தமாகக் கேட்டார்.

“இங்க ரெண்டு சாமியாடியா இருக்காவ?" சாமியய்யா ஆச்சர்யமாகக் கேட்டார்.

"ஆமா... நிறையச் சாமியாடிக இருக்கானுக... நண்டு சிண்டெல்லாம் சாமி ஆடுதுவ... ஆனா சாமியாடின்னு பேரெடுத்தவுக அவக ரெண்டு பேருதான்"

"ம்.... இந்த பாதரக்குடியில பொண்ணக் கொடுத்துருக்காருல்ல... பெரியகருப்பத்தேவர்..."

"ஓ.... செரி... செரி... அட நம்ம மேலக்காட்டார்... அதானே... இப்ப ஆரு வடக்கிவூட்டானப் பாக்க வர்றா..."

"வீடு...?"

"நேர போங்கப்பு... கம்மாய்க்கர தாண்டி மேக்கால ஒரு பாத திரும்பும்... அதுல போனீங்கன்னா சோத்தாங்கைப் பக்கமா பச்சக் கேட்டுப் போட்ட தோட்டமிருக்கும்... கேட்டுல கூட குஞ்சரம்மாள் தோட்டம்ன்னு எழுதியிருக்கும் அதுக்குள்ளதான் வீடு... தேவரு இப்பத் தோட்டத்துலயே இருக்காவ"

"சரிங்கய்யா"

"அப்பு காபி சாப்புட்டுப் போறது... நம்ம கடயில சுத்தமான பசும்பாலுங்க." டீ ஆத்தியபடி கேட்டான் கடைக்கார சுப்பு.

"இப்ப காபி வேணாந்தம்பி வரும் போது குடிக்கிறோம்"

"செரிங்கய்யா.... நீங்க வரும்போது ஐசு வந்துரும்... வெயிலுக்குச் சும்மா சில்லுன்னு நன்னாரி வேர் போட்ட தண்ணியில சர்பத்துப் போட்டுத்தாரேன்... அப்புடி ஒரு சர்பத்த வேற எங்கயும் குடிச்சிருக்க மாட்டீங்க" சுப்பு பேசிக் கொண்டிருக்கும் போதே வண்டியைக் கிளப்பினான் ரவி.

வண்டி கம்மாக்கரையைத் தாண்டி மேற்குப் பக்கமாக போன சரளை ரோட்டில் திரும்பி குஞ்சரம்மாள் தோட்டம் என எழுதியிருந்த பச்சைக் கேட்டின் முன் நின்றது. இருவரும் வண்டியில் இருந்து இறங்கி வேட்டியை அவிழ்த்து நல்லாக் கட்டிக் கொண்டார்கள். ரவி சற்று தள்ளிப் போயி ஒரு காரஞ்செடிக்குப் பின்னே அமர்ந்து ஒண்ணுக்கு இருந்தான்.

"அங்கயிருந்து அடக்கிக்கிட்டு வந்தியாக்கும்... கடக்கிட்ட நிக்கிம் போது போயிருக்கலாமுல்ல, வீடு வாச இருக்க இடத்துல பொண்ணு புள்ளங்க வரும் போகும்..." கடுகடுத்தார் சாமியய்யா.

அவரை முறைத்துவிட்டு "இப்ப இங்கிட்டு யாரு வந்தா... சும்மா எப்பப் பாத்தாலும் நய்யி நய்யின்னு" முணங்கிய ரவி கேட்டை நோக்கிப் போனான்.

"தோட்டந் தொரவா இருக்காவ... நாயி கெடக்கும்... பார்த்துத் தொற"

"ம்..." என்றபடி சின்னக் கேட்டைத் திறந்து காலை வைத்தான்.

"வவ்... வவ்...." என மூன்று நாய்கள் பாய்ந்தோடி வர, "ஏய் மணி...." எனக் கத்தியவாறு வாழைகளுக்கு இடையே வேப்பங்குச்சியால் பல் விளக்கியபடி வந்தார் உயரமான பெரியகருப்பத்தேவர்.

அவரின் குரலுக்கு மூன்றும் முறுவலித்தபடி நின்று, அருகே இருந்த தென்னையை ஒட்டி தண்ணி ஓடும் வாய்க்கால் கரையில் படுத்துக் கொண்டன. உள்ளே வந்த இருவரையும் பார்த்து வாயிலிருந்த எச்சிலைத் துப்பிவிட்டு "யாருப்பு நீங்க..? என்ன வெசயம்?" என்றார்.

"மேக்காட்டூர்ல இருந்து வாரோம்... உங்களக் கேள்விப்பட்டுத்தான் வந்திருக்கோம்... சிறுவாச்சூர் மணிதான் சொல்லிவிட்டாப்புல"

"அடடே மணி சொல்லி வாரீங்களா? நேத்து கூட பேசும்போது சொன்னான், வருவாங்க... பாத்துக் கொடுங்கன்னு... வாங்க... வாங்க" என உள்ளே அழைத்துச் சென்று வாசலில் போட்டிருந்த நீளக் கொட்டகையில் விரித்திருந்த சமுக்காளத்தில் அமரச் சொல்லி, "ஏய் தங்கம் தண்ணி கொண்டாந்து கொடாத்தா' ன்னு சொல்லிட்டு, "'சித்த இருங்க ரெண்டு தண்ணியள்ளி உடம்புல ஊத்திக்கிட்டு வந்துடுறேன்" என மோட்டார் அறைப்பக்கமாப் போனவர், "ஏத்தா வந்திருக்கவுகளுக்கு காபி கொடுங்க... ரொம்பத் தூரத்துலயிருந்து வந்திருக்காவ... கருக்கல்ல கெளம்பியிருப்பாவ... சாப்புட்டாகளா இல்லயான்னு கூடத் தெரியல... கேட்டுச் சாப்பிட எதாச்சும் கொடுங்க... வீட்டுக்குள்ளயே அட காக்காம" எனக் கத்தினார்.

அவர்கள் காபி மட்டும் குடித்திருந்தார்கள்... சாப்பிட மறுத்து விட்டார்கள்... ரவி பொறுமை இழந்து உக்காந்திருந்தான். பசி பொறுக்காதவன் அவன்... காபி குடித்தும் பசி வயிற்றைக் கிள்ள ஆரம்பித்திருந்தது அவனுக்கு.

நெற்றி நிறைய விபூதியைப் பட்டையாக அடித்து நடுவில் நிலாவைப் போல பொட்டு வைத்து, சட்டையில்லாத கரிய உடம்பின் மேல் ஒரு குத்தாலம் துண்டு போட்டுக் கொண்டு அவர்களுக்கு எதிரே வந்தமர்ந்தார்.

"சீக்கிரம் வந்தீக, இல்லேன்னா நாங்கிளம்பி வெளிய போயிருப்பேன், சீனமங்கலம் பெரியய்யா வீட்டுக்கு வாரேன்னு சொல்லியிருந்தேன். வண்டி அனுப்புறேன்னு சொன்னாக... இப்ப வந்துரும்.. ம்... சொல்லுங்க... என்ன பெரச்சன" என்றார்.

"பொட்டப்புள்ள... கல்யாணம் வச்சிருக்கேன்... இப்ப பேய்க் கோளாறாட்டம் ஒரு மாரிக்கி உடம்பத் திருகிக்கிட்டு முழிக்கிது... எம்புட்டோ வயித்தியம் பாத்தும் சரிவரல... குறி, கோடாங்கின்னு எல்லாம் பாத்துட்டோம்... எல்லாத்தயும் பொயிட்டு வான்னு சொல்லுது. தங்கச்சி மவனுக்குத்தான் கட்டுறோமுன்னாலும் அவங்க மனசுல தப்பாத் தோனிறக்கூடாதுல்ல... நாளக்கி வாழப்போற எடத்துலயும் இப்படி இருந்தா... அதோட வாழ்க்க போயிருமே... மணிக்கிட்ட விபரம் சொன்னப்போ அதுதான் உங்களச் சொன்னுச்சு... நீங்கதான் எப்படியாச்சும் புள்ளக்கி குணமாக்கி விடோணும்... உங்கள நம்பித்தான் இம்புட்டுத்தூரம் வந்திருக்கோம்... புள்ளய கூட்டியாரச் சொன்னா.... நாள போக நாளான்னக்கி செவ்வாக்கெழம அப்ப கூட்டியாரோம்.... இல்லே நீங்க வர்றதுன்னா... என்ன வாங்கணும்ன்னு சொல்லிட்டிங்கன்னா வாங்கி வச்சிருவேன்" ஒரே மூச்சில் சொல்லி முடித்தார் சாமியய்யா.

"ம்... எல்லாத்தையும் மொத்தமாக் கொட்டிட்டீக... ம்.... செரி... புள்ளக்கி என்ன வயசாவுது?"

"இந்த அப்பிய வந்தா இருவது முடியுது..."

"ம்... கலியாணத்துல புள்ளக்கி சம்மதம்தானே?"

"அதுக்குப் பிடிச்சதாலதானே தங்கச்சி மவனுக்கு கொடுக்கிறேன்..."

"ம்... எத்தன நாளாயிருக்கு?"

"நெருக்கி ஒரு மாசமா அப்புடித்தானிருக்கு"

"ம்... குறி, கோடாரியெல்லாம் கேக்கலயாக்கும்"

"ஆமா"

"தீட்டுப் போறதுல சமீபமா பெரச்சின எதுவுமிருக்கா?"

"ம்... தீட்டு நிக்காமப் போவுது"

"அதுலதானே அவுக வாசம் செய்வாக விடமாட்டாக... விட்டுப் போகணுமின்னா சொத்தெழுதிக் கொடுன்னு கேப்பாக"

"நீங்கதான் எப்படியாச்சும்..."

"ம்... கருப்பனுக்கிட்ட வந்துட்டியல்ல கவலய விடுங்க... இனி அவன் பாத்துப்பான்... உங்க புள்ளக்கி ஒண்ணும் ஆவாது"

"ம்... புள்ளய பாக்கச் சகிக்கல..." கண்கலங்கினார் சாமியய்யா.

"கலங்காதிய... கருப்பனுக்கு முன்னால கலங்கி நிக்கலாமா.... ம்ம்ம்.... ஆத்தா அந்த விபூதித் தட்ட இங்க கொடு" கத்தினார்.

விபூதித்தட்டு வந்ததும் அதிலிருந்த சூடத்தை தட்டின் நடுவே பத்த வைத்துத் தன் முன்னே வைத்து "படியிறங்கி வாடா பதினெட்டாம் படிக்கருப்பா... பாதை மறிச்சி வாடா பாண்டி முனியா... எங்குரல் கேக்கலையோ ஏழுருக் கருப்பா... மாத்தில் ஆடி வாடா மாரநாட்டுக் கருப்பா... பரியேறி வாடா பரியமயக் கருப்பா..." அப்படின்னு சத்தமாகச் சொல்லியபடி கண் மூடி ஊரில் இருக்கும் கருப்பர்களையெல்லாம் அழைக்க ஆரம்பித்தார்.

அவர் உடம்பெல்லாம் வேர்க்க ஆரம்பித்தது.... தலையைத் தலையை ஆட்டினார்....

திடீரெனச் சத்தமாக "அப்பா... தவிச்சி நிக்காதேப்பா... எங்கிட்ட வந்துட்டயில்ல... கவலயெதுக்கு... அல்பாயுசுல மாண்ட கன்னி ஒருத்தி புடிச்சிருக்கா... கல்யாணக் கனவோட போனவ கனவ நெற வேத்த உம்புள்ள உடம்புல ஏறியிருக்கா... எறங்க மறுப்பா... அவளுக்குத் துணையா நாலஞ்சி சேந்திருக்கு... முனியும் எடப்படுறான்... ஒண்ணுமில்ல உம்மவளுக்கு... நாம் பாத்துக்கிறேன்... போ" என்றவர் பேசாமல் தலைகுனிந்து அமர்ந்திருந்தார்.

விபூதித் தட்டில் அதுவரை எரிந்த சூடம் அணைந்தது. வீட்டுக்குள் இருந்து ஒரு பெண் சொம்புத் தண்ணீரோடு ஓடி வந்து அவர் முன் நீட்டினார். தண்ணியை வாங்கிக் கொஞ்சம் குடித்து விட்டு எழுந்து முகங்கழுவினார். துண்டால் துடைத்தபடி மீண்டும் அவர்களுக்கு முன்னே அமர்ந்தார்.

"நான் இங்க பெரும்பாலும் சாமி அழக்கிறதில்ல, அழச்சா அன்னக்கி முழுவதும் உடம்பு வலியிருக்கும். வேற வேல பாக்க முடியாது, செவ்வா வெள்ளி மட்டுந்தான் பாக்குறது, மணி சொல்லி வந்திருக்கீக, அதான் அழச்சேன், கல்யாணம் நிச்சயமாயி நின்னு போனதால மாண்ட ஒருத்தியும் மரணத்தைத் தானே தேடிக்கிட்ட சிலதுகளும் சேந்து புடிச்சிருக்குக, முனியும் எடப்பட்டிருக்கான், பயமில்ல, நாஞ் சொல்றத வாங்கிக்கிட்டு வெள்ளிக்கெழம புள்ளயக் கூட்டியாங்க, பார்த்து முடிச்சி விட்டுடலாம், கவலப்படாதீக, எல்லாஞ் செரியாகும், கருப்பன மீறுன காரியம் என்ன இருக்குங்கிறேன்" என்றார்.

"ம்... கருப்பன்தான் சரியாக்கணும்... எம்புட்டுச் செலவானாலும் பரவாயில்ல... புள்ளயச் சரியாக்கி விட்டுறணும்"

"கவலயே வேணாம்... வெள்ளிக்கெழம உங்க மகளா வருவா பாருங்க" என்றார்.

"ஆத்தா அந்த பேப்பர் பேனா எடுத்துக்கிட்டு வா" எனச் சத்தமாய் சொல்லி, கொண்டு வந்து கொடுத்த பேப்பரில் எழுதி நீட்டினார். எழுந்து வாங்கிய சாமியய்யா, "இப்ப எம்புட்டுன்னு சொன்னீங்கன்னா" என இழுத்தார்.

"அதான் வெள்ளிக்கிழம வருவீங்கள்ல அப்ப வாங்கிக்கிறேன் போயிட்டு வாங்க"

"மொத மொதல்ல பாத்துட்டு சும்மா போவக்கூடாது"

"அப்புடியா... செரி... உங்க மனசுக்குத் தோணுனத கருப்பனோட விபூதித் தட்டுல வச்சிச்ட்டுப் போங்க." என்றார்.

இருநூற்றி ஒரு ரூபாயை வைத்து விட்டுக் கிளம்பினார்கள். அவர்கள் கேட்டைத் திறந்து வெளியேறுவதைப் பார்த்துக் கொண்டே படுத்திருந்த மூன்று நாய்களும்... குரைக்கவில்லை. வாசலுக்கு வந்தவுடன் ரவி அந்தச் சிட்டையை வாங்கிப் பார்த்தான்.  

"என்ன இம்புட்டு எழுதியிருக்காரு... இதெல்லாமே வேணுமா? இதுவரக்கிம் செலவழிச்சதை மொத்தமா இவருக்கிட்ட கொடுக்கணும் போல" என்றான்.

"சரியாக்கணுமின்னா சும்மாயில்ல... பெரியகருப்பத்தேவர் பெரிய ஆளு... மணி அப்பவே சொன்னாப்புல... வெளியிலயிருந்து வந்து கூட்டிப் போயிருவாகளாம். அவுகல்லாம் கணக்குப் பாக்காமக் கொடுப்பாகளாம் அதான் தோட்டந்தொறவுன்னு வசதியாயிருக்காரு. செவ்வாவெள்ளி கூட இங்கேயிருக்கேன்னு சொன்னாத்தான் இருப்பாராம். வண்டியெடு... புள்ளக்கிச் சரியானப் போதும்... இதுவரக்கிம் எம்புட்டோ செலவழிச்சிட்டோம்... இதயுஞ்செய்வோம்... இவரு சரியாக்குவாருன்னு எனக்கு நம்பிக்கயிருக்கு" என்றார்.

ரவி வண்டியை எடுத்தான். தேவரைக் கூட்டிப்போக சீனமங்கலத்துக் கார் வந்து நின்றது.

"என்னப்பு ஆளிருந்தாரா?" பாலுக்கு எடைக்கட்டியபடி கேட்டான் சுப்பு.

"ம்... இருந்தாரு"

"உங்க நல்ல நேரம் இல்லேன்னா கருக்கல்லயே கெளப்பிக் கொண்டு போயிருப்பானுவ சாமியாடின்னா அப்படி ஒரு சாமியாடி, முடியும் முடியாதுன்னு மொகத்துக்கு நேர சொல்லிருவாரு முடியும்னு சொன்னா முடிச்சிக் கொடுத்துருவாரு, டீயா, காபியா?"

"டீக்காபி வேணாம்... சர்பத்துக் கொடுங்க... அவனுக்கு என்ன வேணுமோ அதக் கொடுங்க... பசியாருற மாரிக்கி எதுவுமிருந்தாக் கொடுங்க"

"என்ன சுப்பு பெரியகருப்பத்தேவர் பொயிட்டாரா?" என்றபடி வந்தான் அவன். முகத்தில் பெரிய விபூதிப்பட்டை, கழுத்தில் பாசி மாலைகள், காவி வேஷ்டி, சட்டையில்லாத கரிய உடம்பு.

"இப்பத்தான் வண்டி போயிருக்கு இன்னக்கி எங்கயோ சாமி அவருக்கு அள்ளிக் கொடுக்குது ம்ம்ம்... உனக்குந்தான் கொடுத்துச்சு... நீதானே கெடுத்து வச்சிருக்கே சுந்தரம் காலயிலயே சரக்கடிச்சிட்டு வர்றே, அப்புறம் கருப்பன் எப்படி வருவான்"

"எனக்குள்ள வரவேண்டான்னுதான் சரக்கடிக்கிறேன் சுருக்குன்னு ஒரு டீப்போடு" என்றபடி சொக்கலால் பீடிக் கட்டில் இருந்து ஒன்னை உறுவிப் பற்ற வைத்தான் சுந்தரம்.

"பெரியவரே நீங்க சாமியாடி வீட்டுக்கு வழி கேட்டப்போ நாங்க சொன்ன ரெண்டாவது சாமியாடிதான் இவரு. குடிச்சே சாமியை விரட்டுறாரு ஆனா அது போவாம இவரையே சுத்துது உங்க பெரச்சினயச் சொல்லுங்க... இவரு என்ன சொல்றாருன்னு பார்ப்போம்"

"அதெல்லாம் வேணாம்பா பெரியவரு எல்லாம் சொல்லிட்டாரு சாமி வேசத்துல காலயிலயே தண்ணி அடிச்சிட்டு நிக்கிறாரு அவருக்கிட்ட போயி மொறயிடச் சொல்லுறே, சர்பத்துப் போடுறியா இல்ல தின்ன ரொட்டிக்கி காசக் கொடுத்துட்டுப் போவா" கோபமானார் சாமியய்யா.

"என்னப்பு கோபப்படுறிய... இவரும் நல்லாச் சொல்லுவாருன்னு சொன்னே விடுங்க இந்தா சூப்பராச் சர்பத்துப் போட்டுத் தாரேன்"

ரவி டீ வாங்கிக் குடித்தான். சுந்தரமும் டீயுடன் எதிரே உக்கார்ந்து சாமியய்யாவையே பார்த்தான். ஜில்லுன்னு சர்பத்தை சாமியய்யா கையில் கொடுத்தான் சுப்பு.

"க்க்.... கெக்... ஹக்கக்... அய்யாவுக்கு எம்மேல ஏன்டா இம்புட்டுக் கோபம்... சாப்புடுற சோத்துல மண்ணா அள்ளிப்போட்டேன்.... க்கே...க்கேக்க்க்கே... ஹக்கஹ்க்கா" சிரித்தான்.

சாமியய்யா பேசாமல் அமர்ந்திருந்தார். டீயை வைத்துவிட்டு அவரையே உற்றுப் பார்த்தான். கண்கள் மேலும் சிவப்பேற, அப்படியே அமர்ந்திருந்தான்.

"மொறக்கிறாருடா., என்னயவே மொறக்கிறாரு எம்பார்வைக்கு ஊரே பயப்படும் இவரு என்னப் பயமுறுத்துறாராம் ஹா..ஹா... கெக்கெக்கே..."

சாமியய்யா தலையைக் குனிந்து கொண்டார்.

"பொட்டப்புள்ள உடம்ப முறுக்கிக்கிட்டுக் கெடக்காளா" அதட்டலாய்க் கேட்டான்.

சாமியய்யா அவனை ஏறிட்டுப் பார்த்தார்... ரவி காலியான டீக்கிளாஸை வைத்துவிட்டு கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தான்.

"மாண்ட கன்னியோட மத்ததுகளும் சேர, முனியும் முன்ன நிக்கிறானேய்யா" பல்லைக் கடித்தான்.

"புள்ளய கூட்டிப் போறேன்னு நிக்கிறாளேய்யா. விடுவேனா எம்புள்ளய விடுவேனா" பல்லை நறநறவெனக் கடித்தான்.

அவரு சொன்னதையே இந்தத் தண்ணி வண்டியும் சொல்லுது சொல்லிட்டு காசு கொடுன்னு மல்லுக்கு நிக்கும். கொடுத்தா தண்ணியடிச்சிட்டு எங்கயாச்சும் விழுந்து கெடக்கும் என்று நினைத்தவர் சுப்புவிடம் காசு கொடுத்துவிட்டு "ரவி வண்டிய எடு" என்றார்.

"ஏய் உம்புள்ளக்கி ஒண்ணுமில்லப்பா, உன்னோட ஊருக்குப் போற வழியில பொய்யக்கர முனியனுக்கு தேங்காய் ஒடச்சிட்டுப் போ. புள்ள சரியாவா புடிச்சது ஓடிரும் சரியானதும் முனியனுக்கு அந்த புள்ளய வச்சி பொங்க வைக்கச் சொல்லு... போ திரும்பிப் பாக்காதே"

"ரவி வண்டிய எடுன்னேன். குடிச்சிட்டு உளறுறான் அதப்பாத்துக்கிட்டு. நாம தேவரு சொன்னபடி சாமானோடு வெள்ளிக்கெழம வருவோம்"

"சொன்னது புரியல, என்னோட வாக்க நீ மதிக்கலயில்ல? கருப்பன் பொய் சொல்றான்னு நெனக்கிறேயில்ல? போ போற வழியில காட வலமிருந்து எடம் போவும். போ... அப்ப நம்புவே இந்தக் கருப்பன, அப்ப நம்புவேடா இந்தக் கருப்பன" சப்தமாகச் சிரித்தான் சிரித்தான்... சிரித்துக் கொண்டே இருந்தான்.

ரவி வண்டியை எடுத்தான், சாமியய்யா அவனை திட்டிக் கொண்டே வண்டியேறினார்.

"அந்தாளு சொல்ற மாதிரி ஒரு தேங்காய் வாங்கி ஒடச்சிப் பாக்கலாமே, அவராத்தானே சொல்றாரு சரியான நல்லதுதானே"

"போடா தண்ணியப் போட்டுட்டு உளறுறான் அதத் தெய்வ வாக்குன்னு சொல்லிக்கிட்டு"

"எதுக்கு இப்பக் கடுப்பாகுறிக"

"செரி அப்பா ஒண்ணுஞ் சொல்லல பேசாமப் போ"

"போய்க்கிட்டுத்தான் இருக்கோம்"

வண்டி வேகமாய்ப் போனது இருவரும் பேசவில்லை.

"இதுவரக்கிம் தங்கச்சிக்கிப் பாத்தவங்கட்டயெல்லாம் நாமளாத்தான் வெவரஞ் சொன்னோம். அப்புறந்தான் அவங்க இது இப்படி இது அப்புடின்னு சொல்ல ஆரம்பிச்சாக... பணந்தான் செலவாச்சு... பலனில்ல ஏ இப்பப் போயிப் பாத்த சாமியாடிக்கிட்ட கூட நாமதானே வெவரம் சொன்னோம். அவராவா இதுக்குத்தானே வந்திருக்கேன்னு கேட்டாரு? இல்லயில்ல?"

"அவரு கேக்கல ஆனா சரியாச் சொன்னாருல்ல? இந்தக் குடிகாரன் சொன்னததானே அவரும் சொன்னாரு"

"அதேதான்... இவங்க மட்டுமில்ல இதுவர பாத்த எல்லாருமே இதத்தானே சொன்னாக... சாமியாடி பெரியகருப்பத்தேவருக்கிட்ட நாம சொன்னோம். தீர்வு சொன்னாரு. இந்தாளு அவரே இதுதானே உன்னோட பெரச்சினயின்னு சொல்லி அதுக்குத் தீர்வும் சொன்னாரு. நாம எதாச்சும் கேட்டோமா? யோசிங்க. அந்தாளுக் குடிச்சிருக்கதால அவரு சொன்ன சொல்லு சரியில்லன்னு எப்புடி முடிவு பண்ணுவீங்க."

சாமியய்யா யோசிக்க ஆரம்பித்தார். பொட்டக்காட்டில் மொட்டை வெயிலில் வண்டி போய்க் கொண்டிருக்க...

காடை ஒன்று வலமிருந்து இடம் போனது.

-'பரிவை' சே.குமார்.

10 எண்ணங்கள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அருமை... மிகவும் பிடித்தது...

வெங்கட் நாகராஜ் சொன்னது…

அகல் பக்கத்திலேயே படித்தேன். நல்ல கதை. பாராட்டுகளும் வாழ்த்துகளும் குமார்.

வல்லிசிம்ஹன் சொன்னது…

மிக அருமையான கதை. முன்னமே படித்திருந்தாலும்
கண்ணில் நீர் வந்தது. உலகத்தில் எத்தனையோ கேள்விகளுக்கு விடை இல்லாமல் போகீறது.
இது போல நல்ல மனிதர்கள்
வழிகாட்டி எத்தனை குடும்பங்கள் வாழ்கின்றனவோ.
சுந்தரம் சாமியாடி மனதில் நிற்கிறார்.

நல்ல சொல்லாடல் கொண்ட அருமைக் கதை. மிக நன்றி குமார்

ஸ்ரீராம். சொன்னது…

நல்ல இடத்தில நிறுத்தி இருக்கிறீர்கள்.

துரை செல்வராஜூ சொன்னது…

அருமை... அருமை...

நடைமுறையை நேரில் பார்த்த மாதிரி இருக்கிறது...

'பரிவை' சே.குமார் சொன்னது…

ரொம்ப நன்றிண்ணா கருத்துக்கு.

'பரிவை' சே.குமார் சொன்னது…

அங்கு கருத்திட்டு இருந்தது நீங்கள்தானா..?
கருத்துக்கு நன்றி அண்ணா.

'பரிவை' சே.குமார் சொன்னது…

தங்களின் கருத்துக்கு நன்றி ஐயா.

'பரிவை' சே.குமார் சொன்னது…

எப்போதேனும் வித்தியாசமாய் எழுதிப் பார்க்கும் எண்ணம் தோன்றும். அப்படி ஒரு கதை இது.
தங்கள் கருத்துக்கு நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

ரொம்ப நன்றி ஐயா.