மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

சனி, 16 டிசம்பர், 2017

மனசின் பக்கம் : மகிழ்வும் வருத்தமும் மனசுக்குள்...

பிரதிலிபி 'ஓடி விளையாடு பாப்பா' போட்டியில் கலந்து கொண்ட கட்டுரைக்கு வாசகர் பார்வை அவ்வளவாக கிடைக்கவில்லை என்ற போதிலும் 'தலைவாழை' என்ற சிறுகதை வாசகர் பார்வையில் இரண்டாம் இடத்தில். தேர்வு செய்யப்பட்ட கதை தவிர்த்து வாசகர் பார்வையில் முதலில் வரும் சிறுகதைக்கும் பரிசு உண்டென்றாலும் அதை மதியழகன் என்ற நண்பர் தட்டிச் சென்றிருக்கிறார். அவருக்கு வாழ்த்துக்கள். அதே நேரம் கதைகளை ஒரு பிரபலம் வாசித்து அதில் ஒரு சிறந்த கதையாக எட்வின் லாரன்ஸ்-ன் கதையைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். அவருக்கும் வாழ்த்துக்கள். தேர்ந்தெடுத்திருக்கிறார். குறிப்பிடத்தக்க கதையாக கீதா மதிவாணன் அக்காவின் கதையைச் சொல்லியிருக்கிறார். அக்காவுக்கும் வாழ்த்துக்கள். 


கதைகளை வாசித்த பிரபலம் எல்லாக் கதைகளுமே தட்டையாக எழுதப்பட்டிருக்கின்றன என்று சொல்லியிருக்கிறார். அது என்ன தட்டை என்பது புரியவில்லை. எழுதியவர்களில் வலையுலகப் பிரபல, பல புத்தகங்கள் போட்ட எழுத்தாளர்களும் உண்டு. அவர்களும் நம்மைப் போல தட்டையாகத்தான் எழுதியிருப்பார்கள் போலும். எது எப்படியோ வாசகர் பார்வையில் எனது கதைகளுக்கு ஒரு மதிப்பு மிகு வாக்கு இருப்பது மகிழ்ச்சியே... தற்போது ஊர் சுற்றிப் புராணம் என்றொரு கட்டுரைப் போட்டி அறிவித்திருக்கிறார்கள். முடிந்தவர்கள் டிசம்பர்-26க்குள் எழுதி அனுப்புங்கள். தொடர்ந்து போட்டிகள் அறிவிக்கும் பிரதிலிபிக்கு வாழ்த்துக்கள்.

'டேக் ஆப்' என்ற மலையாளப் படம் ஒன்றை ரொம்ப நாளாக பார்க்க வேண்டும் என்று நினைத்து ஒரு வழியாக கடந்த வாரத்தில் பார்த்தும் விட்டேன். அருமையானதொரு படம்... ஈரக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பிடம் மாட்டிக் கொண்டு இருபது நாட்களுக்குப் பிறகு பத்திரமாக மீட்கப்பட்ட கேரள நர்சுகளின் உண்மைக் கதையை திரைக்கதை ஆக்கியிருக்கிறார்கள். நாயகனாக குஞ்சாக்கோ போபன், நாயகியாக பார்வதி... இந்திய தூதரக அதிகாரியாக பஹத் பாசில். சம்பளம் அதிகம் கிடைக்கும் என்பதால் ஈராக் சென்று தீவிரவாதிகளிடம் மாட்டிக் கொள்ளும் பார்வதி உள்ளிட்ட நர்சுகள் படும் அவஸ்தை... விவாகரத்துக்குப் பின்னர் தன்னைக் காதலித்து கல்யாணம் செய்து கொண்ட குஞ்சாக்கோவை தீவிரவாதிகளிடமிருந்து மீட்டுத்தரச் சொல்லி கர்ப்பிணியான பார்வதி அலையும் போது படும் அவஸ்தை... எங்கே கர்ப்பிணியான தன்னை தனது மகன் வெறுத்து விடுவானோ என்று வயிற்றை மறைத்துப் படும் பாடு என படம் முழுவதும் பார்வதி சிக்ஸர் அடித்திருக்கிறார். பாதிக்கு மேல் வந்தாலும் பஹத் மனதில் நிற்கிறார். தீவிரவாதியிடம் மனிதாபிமானத்துடன் பேசும் குஞ்சாக்கோவும் நிறைவாய்... முடிந்தால் டேக் ஆப் பாருங்கள்.

Related image

ண்பரின் வற்புறுத்தலில் இருபத்து எட்டு வருசத்துக்கு முன்னர், அதாவது ஸ்கூல் படிக்கும் போது வந்த மலையாளப் படம் ஒன்றை யூடிப் வழியாகப் பார்த்தேன். திலகனின் கலக்கலான நடிப்பில் 'பெரும்தச்சன்'. என்ன நடிப்புய்யா அந்தாளிடம்... சத்ரியனில் பன்னீர்ச் செல்வம் நீ பழைய பன்னீர் செல்வமா வரணும்.... வருவேன்னு சொல்லும் அந்த வாசகம் ஞாபகத்துக்கு வர, இதிலோ ஆசாரியாய்... பெருந்தச்சனாய்... கலக்கியிருக்கிறார். அவரின் மகனாக பிரசாந்த்... அவர் மலையாளத்தில் நடித்த ஒரே படம் என்றார் நண்பர். வைகாசி பொறந்தாச்சு வந்த சமயத்தில் வந்த படம் என்பதால் குமரேசனாக தெரிந்தாலும் அவரின் நடிப்புத்தான் நமக்குத் தெரியுமே... பெரிதாய் சொல்ல ஒன்றுமில்லை. கேரள நாட்டார் கதைகளில் புகழ் பெற்ற பெயரான ராமன் பெரும்தச்சன் கதாபாத்திரத்தை ஏற்று நடித்த திலகன் படத்தை தூக்கி நிறுத்த, அவருக்குப் பக்க துணையாக தம்புரானாக நெடுமுடி வேணு. மிக நல்ல படம் விருப்பமிருந்தால் யூடிப்பில் இருக்கிறது... பாருங்கள்.

Image result for பெரும்தச்சன் மலையாளம்

ற்போது முள் மீது நடப்பது போன்ற நிலையில்தான் மனசு இருக்கிறது. பல பிரச்சினைகள் ஒன்றை சூழ்ந்து கொண்டு ஆட்டிப் படைக்கின்றன. எப்போது மீள்வது..? எப்படி மீள்வது..? என்ற யோசனையிலேயே கழிகிறது நாட்கள். எதிலும் ஒட்டுதல் இல்லை... பலரின் பதிவுகளைப் படித்தாலும் கூகிள் குரோம் வழி கருத்து இடமுடியாது. விண்டோஸ் எட்ஸ் வழியாக கருத்து இடலாம் என்றாலும் நோட்பேடிலோ வேர்டிலோ டைப் செய்து காப்பி பண்ணித்தான் இட முடிகிறது. அதானால் வாசிப்பதுடன் சரி... எப்போதேனும்தான் கருத்து இடத் தோன்றுகிறது. அலுவலகத்தில் தற்போது பார்க்கும் புராஜெக்ட்டில் பயங்கர பிரச்சினை சுழன்று கொண்டிருக்கிறது. புராஜெக்ட் மேனேஜரை டம்மி ஆக்கி இன்னொரு தில்லிக்காரனை மேனேஜராக்கியிருக்கிறார்கள். அவனோ நல்ல பேர் வாங்க வேண்டும் என்பதால் நம்மை பாடாய் படுத்துகிறான். எனவே அங்கும் இணையத்தை திறப்பதென்பது முடியாததாகிவிட்டது. பார்ப்போம் பிரச்சினை மேகம் எப்போது சூழ்ந்திருக்காது அல்லவா..? ஒன்று அடித்துப் பெய்ய வேண்டும்... இல்லையேல் கலைந்து செல்ல வேண்டும். எது எப்படியோ என்றாவது ஒருநாள் நிர்மூலமான வெண்மேகம் தெரியத்தானே வேண்டும்.

நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு சிறுகதை எழுதும் எண்ணம் தோன்றியது. கதையில் பல நாள் பார்க்காத நண்பனின் நினைவுடன் எழுபவன், அவனைத் தேடிச் செல்ல நினைக்கிறான். கல்லூரியில் நண்பர்கள் ஆட்டோகிராப் போட்டுக் கொடுத்த டைரியை எடுத்து பக்கங்களை நகர்த்தும் போது அவனின் நினைவில் நண்பர்கள் குறித்து எழுபவைகளைக் கதையாக்கி, முடிவில் நண்பனைச் சந்தித்தானா என்பதைச் சொல்லி முடித்திருக்கிறேன். நீண்ட நாட்களுக்குப் பிறகு நிறைவாய் எழுதியது போல் ஒரு திருப்தி... கதையில் சில வரிகள் இங்கே...

'என்னோட அலமாரியைத் திறந்து கல்லூரியில் நண்பர்கள் எழுதிக் கொடுத்த ஆட்டோகிராப் டைரியை எடுத்து மெல்லப் பக்கங்களை நகர்த்தினேன். விதவிதமான கையெழுத்தில்... கட்டுரையாகவும் கவிதையாகவும் காவியமாகவும் எழுதியிருந்தார்கள்.

பெண்களின் ஆட்டோகிராப் பார்க்கும் போது இவர்கள் எல்லாம் இப்ப எங்கே... எப்படி இருப்பார்கள்..? என்று மனசுக்குள் தோன்ற இருபது வருசத்துக்கு முன்னாடி தாவணியில் அழகுச் சிட்டுக்களாய் பார்த்த பெண்கள் எல்லாம் இந்த இருபது ஆண்டுகளில் குடும்பம் குழந்தைகள் என எத்தனை மாற்றங்களைப் பெற்றிருப்பார்கள் என்று நினைத்துச் சிரித்துக் கொண்டேன்.

மெல்ல பக்கங்களைப் புரட்டி வர, செமஸ்டரில் பேப்பர் காட்டவில்லை என்ற கோபத்தில் ராஜூ எழுதியிருந்த 'நல்லவனாய் இருந்தால் நடுத்தெருவில்தான் நிற்பாய்' என்ற வரிகளைப் படித்துச் சிரித்துக் கொண்டேன். நல்லவனாய் இருப்பதால் எத்தனை சிக்கல்களை வாழ்வில் எதிர்க்கொள்ள வேண்டியிருந்தது... வேண்டியிருக்கிறது. ராஜூ தீர்க்கதரிசிதான்... சரியாகத்தான் சொல்லியிருக்கிறான். ஆமா ராஜூ இப்ப எங்க இருப்பான்...? எப்படியிருப்பான்...?'

பெரியம்மாவின் மகனான அண்ணன் ஒருவர் இன்று மரணித்து இருக்கிறார். மரணிக்கும் வயதில்லை என்றாலும் நல்ல மனிதரான அவரை குடி கொண்டு போய் விட்டது. மனசுக்கு வருத்தமான செய்தி... உடல் நலம் கருதியேனும் குடியை விட்டுத் தொலைத்திருக்கலாம்... என்ன செய்வது... தலையில் எழுதியதை மாற்றவா முடியும்..?

அவரின் ஆன்மா சாந்தியடையப் பிரார்த்திக்கிறேன். 

மனசின் பக்கம் தொடர்ந்து பேசும்.
-'பரிவை' சே.குமார். 

9 எண்ணங்கள்:

ஸ்ரீராம். சொன்னது…

ப்ரதிலிபிக்கு வாழ்த்துகள்.

சிறுகதை படிக்கும் ஆவலைத் தூண்டுகிறது.

மலையாள படங்கள் பார்ப்பதில்லை. முன்னர் தூர்தர்ஷன் மட்டும் இருந்த காலங்களில் மாநில மொழித் திரைப்படங்கள் மட்டுமே கதி என்று இருந்த நாட்களில் சில படங்கள் பார்த்ததுண்டு.

அண்ணன் மறைவுக்கு எங்கள் அனுதாபங்கள்.

Yarlpavanan சொன்னது…

"நல்ல மனிதரான அவரைக் குடி கொண்டு போய் விட்டது." என்பதில் தங்கள் இலக்கிய முதிர்ச்சி தெரிகிறது. "உடல் நலம் கருதியேனும் குடியை விட்டுத் தொலைத்திருக்கலாம்." என்பதில் தங்கள் உள்ளத் துயர் தெரிகிறது. சிறந்த இலக்கியப் படைப்பாளியின் கைவண்ணமாக இவற்றைக் காண்கிறேன். தங்கள் அண்ணாவின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றேன்.

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

வாழ்த்துக்கள் நண்பரே
தம+1

தி.தமிழ் இளங்கோ சொன்னது…

ஒரே பதிவினுள் ஆதங்கம், விமர்சனம், மகிழ்ச்சி, துக்கம் என்று அனைத்தையும் பதிந்து இருக்கிறீர்கள். நீங்கள் குறிப்பிட்ட மலையாள படத்தைப் பார்த்ததும், எனக்கும் அந்தக்கால பழைய கறுப்பு வெள்ளை மலையாள படங்களை யூடியூப்பில் பார்க்கும் ஆர்வம் வந்து விட்டது.

தங்களது பெரியம்மா மகன் இறப்புக்கு எனது ஆழ்ந்த இரங்கல். அன்னாரது ஆன்மா அமைதி பெறட்டும்.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

பிரதிலிபி - வாழ்த்துகள் குமார்.

பெரும்தச்சன் பார்க்கத் தோன்றுகிறது.

அண்ணன் மறைவு - குடி இன்னுமொருவரை குடித்திருக்கிறது. ஆழ்ந்த இரங்கல்கள்....

G.M Balasubramaniam சொன்னது…

பிரதிலிபியில் படிப்பவர் மதிப்பிட முடியாமல் போவது பொல் இருக்கிறதே என்பதிவுகளைப்படிக்க வாசகர்களுக்கு இயல வில்லை போல் இருக்கிறது

vimalanperali சொன்னது…

பெருந்தச்சன் நல்ல படம்,திலகன் அவர்களின் நடிப்புக்கும் நெடு முடி வேணு அவர்களின் நடிப்புக்கு அருகில் இருப்பதால் பிரசாந்த் அவர்களின் நடிப்பும் சிறப்பு பெறுகிறது.
குடிக்கிறவர்களைப் பற்றி என நண்பர் ஒருவர் சொல்லுவார்,
குடியை விருந்துக்கும் மருந்துக்கும் மட்டும் வைத்துக்கொள்ள வேண்டும்,எந்நேரமும் அதே வேளையாக இருந்தால் மிகவும் சிரமமே
என,,/இன்றைய தேதியில் குடிக்காதவர்கள் ரொம்பவுமே கம்மி.ஆனால் அவர்கள் எப்படி திருப்பி விடப்படுகிறார்கள் என்பதுதான் இங்க்கு மிக முக்கியமான விஷயமாகவும் விவாதிக்கப்பட வேண்டிய விஷயமாக....../

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

பிரதிலிபி வாழ்த்துகள் குமார்.

துளசி: டேக் ஆஃப் நல்ல படம். பெருந்தச்சன் பார்த்திருக்கேன்.

கீதா: நான் பார்க்கவில்லை அந்தப் படம். பெருந்தச்சன் பார்த்திருக்கேன். நல்ல படம்...

அண்ணனின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல்கள்...

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

இப்பதிவில் பல எண்ணங்களின் பிரதிபலிப்பைக் காண முடிந்தது. பிரதிலிபிக்கு வாழ்த்துகள். மலையாளப்படம் ரசித்தேன். அண்ணனின் மறைவிற்கு இரங்கல்கள்.