மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

ஞாயிறு, 22 அக்டோபர், 2017

மெர்சல் ஒரு பார்வை

Image result for மெர்சல்
மெர்சலில் வரும் சில வசனங்கள் குறிப்பாக டிஜிட்டல் இந்தியாவும் , ஜிஎஸ்டியும் தமிழக அரசியல்வாதிகளுக்கு வயித்துல புளியைக் கரைச்சிருக்க, அதனை நீக்கச் சொல்லி, அதன் காரணமாக இந்திய அளவில் மிகப்பெரிய பிரச்சினையை கிளப்பி வைத்திருக்கிறார்கள். இதன் மூலம் படத்துக்கும் பெரிய அளவில் விளம்பரம் கிடைத்துள்ளது.   இதை தங்கள் அரசாங்கத்தைப் பற்றிய ஒரு வசனத்துக்கான கருத்துச் சுதந்திரத்தின் கழுத்தை நெறித்தல் என்பதாய் மட்டும் பார்க்கத் தோன்றவில்லை. நம் அனைவரின் கருத்தையும் அரசியல்வாதிகள் கழுத்தை அறுத்து அவர்கள் வாழ நம் சுயத்தை அழிக்கும் நிலையின் ஆரம்பம்தான் இது. சென்ஸார் போர்டு என்ற ஒன்று ஒரு படத்தின் வசனங்களைப் பார்த்துத்தானே அனுமதி அளித்திருக்கும். அப்படிப்பட்ட சூழலில் எங்கள் ஆளும் அரசாங்கத்தை ஆட்டிப் பார்க்கும் வசனங்களை எப்படி வைக்கலாம் என ஆளாளுக்கு ஆட்டம் ஆடி, அதை நீக்க வைப்பது என்பது எவ்வளவு மோசமான செயல்... இவர்கள் இதைச் சேர்த்துக் கொள்... இதை நீக்கிவிடு என்று அதிகாரம் இடும் நிலை வந்த பின் எதற்காக சென்சார் போர்டு என்று ஒன்று இருக்க வேண்டும். இவர்களே அந்த வேலையைச் செய்துவிடலாம்.

சினிமாவில் அரசியல் வசனங்கள் என்பது ஆரம்ப காலத்தில் இருந்தே இருக்கத்தானே செய்கிறது. ரஜினி பேசாத அரசியல் வசனங்களா...? சத்தியராஜ் பேசாததா...? இதையெல்லாம் விட இயக்குநர் மணிவண்ணனின் வசனங்களில் இல்லாத கூர்மையா விஜய பேசிய ஜிஎஸ்டியில் உள்ளது. இன்றைய நிலையில் ஒரு படம் நல்லா ஓடிட்டா அடுத்த படத்தில் நடிக்கும் போது அந்த நாயகனுக்கு முதல்வர் கனவு வந்து விடுகிறது. அதுவும் தமிழ் சினிமாவில் ரொம்ப அதிகம். ஜெயலலிதா மறைவுக்குப் பின் அரசியல் ஆசையே இல்லை என்ற கமலுக்கே அரசியல் ஆசை வரும்போது 'Time to Lead'ன்னு போட்டு அரசியல் பேசிவரும் விஜய்க்கு வருவதில் தவறென்ன... தவறெல்லாம் நம் மீதுதானே கூத்தாடிகள்தான் நம்மை ஆளச் சிறந்தவர்கள் என்று நினைப்பவர்கள் நாம்தானே. 

எந்த ஒரு பெரிய நடிகரின் படமும் சாதாரணமாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு படம் நல்லா இருந்தால் மட்டுமே மக்களால் விரும்பப்பட்டு சில நாள்கள் தியேட்டரில் நின்று செல்ல, அதை மறந்து விட்டு அடுத்த படத்துக்குப் பின்னே நாம் நகரப் போகிறார்கள். அதைச் சொன்னாய் இதைச் சொன்னாய் என பேசி, அரசியல் ஆக்கி, அதில் ஏதோ ஒன்று இருக்கும் போல அதுதான் இப்படி ஆளாளுக்கு அறிக்கை விடுகிறார்கள் என மக்களுக்குள் பரபரப்பைப் பற்ற வைத்து  சாதாரணமாக கடக்க வேண்டிய ஒரு படத்தை இந்திய அளவில் மட்டுமின்றி உலக அளவில் பரபரப்பான படமாக ஆக்கியிருக்கிறார்கள். இந்தப் பரபரப்பின் பின்னணி உண்மையிலேயே ஜிஎஸ்டிதானா... இல்லை படத்தை வெற்றிப்படமாக்கும் முயற்சியா... தம்பி விஜய் படங்களில் கவனம் செலுத்தட்டும் என்று சொல்லி தான் அரசியலுக்கு வர  இருக்கும் கமலைப் பயமுறுத்தவா என பலவாறு பட்டிமன்றங்கள் நடக்கின்றன. இப்படியும் கூட இருக்கலாம்... அரசியல்வாதி விதைக்க, மீடியாக்கள் தீவிர அறுவடை செய்வது யோசிக்கத்தான் வைக்கிறது. எது எப்படியோ இந்தப் பரபரப்பின் மூலமாக விஜயின் வெற்றிப் படங்களில் ஒன்றாய் கூட வேண்டிய மெர்சல், விஜய் படங்கள் பெறாத வரலாற்று வெற்றியை பெற்றிருக்கிறது.

இந்த அரசியல்வாதிகளுக்கு குறிப்பாக தமிழக அரசியல்வாதிகளுக்கு எதில் எல்லாம் அரசியல் செய்ய வேண்டும் என்பதில் சுத்தமாக ஞானம் கிடையாது. எப்பவுமே மக்கள் முட்டாள்கள் என்ற நினைப்பிலேயே எதை எடுத்தாலும் அரசியல் பண்ணுகிறார்களே... மக்கள் விழித்துக் கொண்டு விட்டார்கள் என்பது இந்தக் கூமுட்டைகளுக்குத் தெரிவதில்லை.... என்ன சொன்னாலும் கேட்டுக் கொண்டிருந்த கூட்டமெல்லாம் இப்ப இல்லை... நல்லவன்னா தூக்கி வைத்து ஆட்டம் போடவும்... அதுவே நாதாரின்னா தூக்கிப் போட்டு மிதிக்கவும் மக்கள் பழகியாச்சு. இந்த ஜி.எஸ்,டி விவகாரம் சீமான் ஒரு கூட்டத்தில் பேசியது என்று நினைக்கிறேன். அரசியல்வாதியாகிவிட்ட சீமான் பேசலாம்... ஆனால் நடிகன் தன்னோட படத்தில் பேசக்கூடாது... இதெல்லாம் என்ன லாஜிக் என்றே தெரியவில்லை.

நமக்குப் பக்கத்தில் இருக்கும் கேரளாவில் அரசியல் படங்கள் என்றால் கம்யூனிச கட்சிக் கொடிகளையே பயன்படுத்துகிறார்கள். அந்தக் கட்சிகளின் பெயர்களையே பயன்படுத்துகிறார்கள். நம்மைப் போல் கற்பனையில் ஒரு பெயர் வைத்து, அதற்கு கலர்கலராய் கொடி வைத்தெல்லாம் படமெடுக்கவில்லை. சமீபத்தில் பார்த்த படத்தில் கூட மத்திய அரசுக்கு எதிரான  அரசியல் வசனங்கள் அதிகமிருந்தன. அங்கெல்லாம் யாரும் இப்படி இசைக்கக் கிளம்பவில்லை... தமிழகத்தில் மட்டுமே இது போன்ற கேவலங்கள் எல்லாம் நடக்கும். இந்தப் பிரச்சினையை மிகப்பெரிய பிரச்சினை போல மீடியாக்கள் செய்யும் அலம்பல்கள் தாங்கவில்லை. எந்தப் பக்கம் போனாலும் நேர் படப் பேசுகிறேன் என ஆளாளுக்கு கூவிக் கொண்டிருக்கிறார்கள். நெடுவாசல் போராட்டத்தின் போதோ... அனிதா மரணத்தின் போதோ... கூவத்தூர் குதூகலத்தின் போதோ... டெங்கு குறித்தோ... எந்த மீடியாவும் இந்தளவுக்கு தீயாய் வேலை செய்ய வில்லை... இதை வைத்து தங்கள் டிஆர்பியை கூட்டிக்கச் செய்ய தீவிர வேலை செய்கிறார்கள் என்பதும் இது விஜய்க்கு  ஆதரவாக களம் காணும் கருத்துப் போர் அல்ல என்பதும் நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்..?

நடப்பை வசனமாக வைத்திருப்பதால்தான் இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் தியேட்டரில் கை தட்டுகிறான்... ஆஹா.. நமக்கெதிராக கை தட்டுறானே... கை கட்டி அல்லவா இருக்க வேண்டும்... எப்படிக் கை தட்டலாம் என எகிறிக் குதித்து நடிகர்கள் அரசியல் பேசக்கூடாது என வந்து நிற்க ஆரம்பித்திருக்கிறார்கள். இதை சென்ற ஆண்டு அம்மையார் உயிருடன் இருக்கும் போது இவர்களால் இவ்வளவு தில்லாக பேசியிருக்க முடியுமா..? ரஜினியை வா... வாவென அழைக்கும் இவர்கள்தான் கமலையும் விஜயையும் கழுவி ஊத்துகிறார்கள். இவர்கள் எண்ணம் எல்லாம் ரஜினி நமக்கு ஆதரவாய் இருப்பார் என்பதே... இவர்களுக்கு ஆதரவாய் நின்றால் நம் நிலை என்னவாகும் என்பது கூடவா அவருக்குத் தெரியாது..?

இங்கு ஒரு நண்பர் விடாது நேர் பட, ரொம்ப நேர்மையாகப் பேசுவதைப் பார்த்து குதித்துக் கொண்டிருக்கிறார். ஒரு படத்துக்கு இம்புட்டு பிரச்சினை பண்ணுகிறார்களே... திட்டம் சரியில்லை... சிங்கப்பூர் இலவசமாகக் கொடுக்கலையா... இங்க அதைச் செய்யலையா என்றெல்லாம் கேட்கிறார். சிங்கப்பூர்... துபாய் எல்லாம் சிறிய நாடுகள்... அவர்கள் ஒன்றைச் செய்வதென்றால் உடனே செய்ய முடியும். நம் நாட்டில் எதையும் உடனடியாக செய்ய முடியாது. மருத்துவத்துறையில் மட்டுமல்ல எல்லாத்துறையிலுமே காசு பாக்கத்தான் செய்கிறார்கள். மருத்துவம், கல்வி என எல்லாமே பெரும்பாலும் அரசியல்வாதிகளின் கைகளில்தான் இருக்கின்றன. அப்புறம் எப்படி இதையெல்லாம் செய்ய முடியும்...? சினிமா என்பது கற்பனை என்பதை விடுத்து அதுதான் வாழ்க்கை என்பதை நாமும் அரசியல்வாதிகளும் எப்போதும் கைவிடப் போவதில்லை. இன்று மெர்சலுக்கு குரல் கொடுக்கும் பல நண்பர்கள் அன்று விஸ்வரூபத்தை எதிர்த்தவர்களே...

மெர்சல் கதைக்கு வருவோம் வாங்க.... அப்பனைக் கொன்றவனைப் பலி வாங்கும் அரதப் பழசான கதைதான்... சுயமாய் சிந்திப்பதைவிட ஆங்காங்கே இருந்து உருவி ஒரு கூட்டாக்கி அதை தனது மேக்கிங் என்னும் சுவையால் மெருகூட்டச் செய்வதில் அட்லீ கில்லாடிதான்... இல்லைன்னா அவரோட மூணு படமுமே தோல்விப் படங்களாய்தான் அமைந்திருக்கும். இதில் மருத்துவத்துறையை கையில் எடுத்திருக்கிறார்கள். மருத்துவத்துறையின் பாதிப்பு சாமானியனுக்கு மட்டுமே புரியும்... அதனால்தான் அவன் இந்தப் படத்தைக் கொண்டாடுகிறான். இன்று எந்த மருத்துவமனை லேபரேட்டரி வசதியின்றி, மருந்தகம் இன்றி இருக்கின்றது. எல்லாவற்றிலும் காசு பார்க்க ஆரம்பித்து விட்டார்கள். மருந்துகள் அவர்களிடம் மட்டுமே வாங்க வேண்டும்... வாங்க முடியும்.

மனிதாபிமான முறையிலான மருத்துவம் பார்க்கும் மருத்துவர்களை நாம் அத்தி பூத்தாற்போல்தான் பார்க்க முடியும். சில வசனங்கள்தான் விஜய்யை ஜோசப் விஜய்யாகவும் அட்லீயை கிறிஸ்தவனாகவும் முன்னிறுத்த வைத்திருக்கிறது. தற்போதைய சினிமாவில் பல இளம் இயக்குநர்கள் தங்கள் மதம் தவிர்த்து மற்ற மதத்தின் மீது சேற்றை வாரி இறைக்க ஆரம்பித்திருக்கிறார்கள். தங்கள் சாதியைக் கொண்டாடவும் மதத்தின் சாராம்சத்தைப் புகுத்தவும் செய்கிறார்கள். இது சரியான செயல் அல்ல... அதிலிருந்து இளம் இயக்குநர்கள் மாற வேண்டும். ஒருவரின் மீது நாம் வெறுப்புக் கொள்ளும் போது அவரின் சாதியையும் மதத்தையும் முன்னிறுத்த ஆரம்பித்திருப்பது அருவெறுக்கத்தக்கது.. கேவலமானது. தங்கள் திட்டங்களில் வெற்றி பெற ஒருவனின் சாதியையும் மதத்தையும் சொல்லி எதிர்ப்பைக் காட்டுவதில் தமிழக பாஜகவினர் ரொம்பக் கேவலமாக நடந்து கொள்கிறார்கள். இதுவரை விஜய்யை எவனும் கிறிஸ்தவராகப் பார்த்தது கிடையாது. அப்படி தமிழர்கள் சாதியும் மதமும் பார்க்க ஆரம்பித்திருந்தால் பலர் உச்சத்தைத் தொட்டிருக்க முடியாது. தயவு செய்து சாதி, மத அரசியலுக்கு முடிவு கட்டுங்கள். சாதியாலும் மதத்தாலும் எங்களைப் பிரிக்க நினைத்தால் அழிவு உங்களுக்குத்தான் என்பதை எப்போது உணர்வீர்களோ..?

மூன்று விஜய்... மூன்று நாயகிகள்... இதில் சமந்தாவும் காஜலும் ஒரு பாடலுக்காக பயன்படுத்தப்பட, நித்யாமேனன் மட்டுமே கதையில் வாழ்ந்திருக்கிறார்... ஆனால் பெயர் போடும் போது பின்னுக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்.  வெற்றியும் மாறனும் எப்பவும் போல் விஜய்யின் சிறு மாற்றங்கள் கூட இல்லாத இரட்டையர்களாய்... அப்பனாய் வரும் விஜய்யின் கெட்டப் நல்லாயிருக்கு... ஆனா அந்தப் பேச்சு வழக்கு கொஞ்சம் கூட ஒட்டலை... பார்க்கும் நம்மிடம் தள்ளியே நிற்கிறது. எது எப்படி என்றாலும் படம் பார்க்கலாம்... நல்லாத்தான் இருக்கு... வசனங்கள் பெரும்பாலும் சுட்டவையே என்றாலும் சூடாய்த்தான் இருக்கின்றன. வடிவேலு வருகிறார்... கோவைசரளா இருக்கிறார். சத்தியராஜூம் இருக்கார்... சூர்யாவின் வில்லத்தனம் ஸ்பைடரோடு ஒப்பிட்டால் வேகம் குறைவு... ஏ.ஆர். ரஹ்மான் இசையில் பாடல்களில் ஆளப்போறான் தமிழன் ஆட்டம் போட வைக்கும் என்றால் நீதானே மெலோடியில் தாலாட்டும். மேஜிக் காட்சிகள் சூப்பர்.

விஜய் உடல் மொழி மாற்றத்தை எந்தப் படத்தில் கொண்டு வருவார் என்பது தெரியவில்லை... இதிலும் அந்த நெளிவு குனிவுன்னு... மாத்துங்க பாஸ்... கோவை சரளா நீ எங்களின் ஒரே பிள்ளை... அக்மார்க் புத்திரன் என்கிறார்... பின்னர் விஜய்யின் ரெண்டாவது பிள்ளையாய் பிறந்து இறந்து மிராக்கிளாய் உயிர் பெற்று அம்மா, அப்பா வில்லனால் சாக, அண்ணன்காரன் எடுத்துக் கொன்டு ஓடி, கண் தெரியாத மேஜிக் செய்யும் ஒருவரால் வளர்க்கப்பட்டு டாக்டராகிறார். இங்க கோவைசரளாவோட அக்மார்க் லாஜிக் இடிக்குதா இல்லையா.? வடிவேலு நீங்க எங்க அண்ணன் மகனுங்கடா... அதனாலதான் உங்க பின்னாலயே திரியிறேன்னு சொல்லுறார்... விஜயை அடித்துக் கொல்லும் போது யாரும் வரலை... அப்புறம் பசங்க எங்க ஓடினாங்கன்னு விவரமும் தெரியாது... எப்படி இவர்கள் பின்னே வந்தார்...? அப்படியே  இவருக்குத் தெரியும் நிலையில் இந்தப் பசங்களை வில்லனுக்கு எப்படி தெரியாமல் போச்சு. பிரான்சில்தானே மேஜிக் ஷோவில் வில்லனில் ஒருவனைக் கொல்றாங்க... அங்கயும் தமிழக போலீஸ் மற்றொரு வில்லனோட வந்து பிடிச்சிடலாம் என்கிறார்... அது எப்படி...? சூர்யாவால் விஜயை அடையாளம் காண முடியும் போது டாக்டரால் கண்டு கொள்ள முடியவில்லையே அது எப்படி...? பெரிய போஸ்டரில் விஜய் படம் வைத்து டாக்டர் என்று பறை சாற்றியிருக்க, டாகடருக்கு உதவியாக வரும் டாக்டர் காஜலுக்கு எப்படி தெரியாமல் போனது..?

மொத்தத்தில் நம்மை ஒவ்வொரு பிரச்சினையின் பின்னும் பயணிக்க விடாமல் அவ்வப்போது மாற்றுப் பாதைகளை  அமைத்து அதில் அலைய விடுவதில் தமிழக அரசியல்வாதிகள் கில்லாடிகள்... சேகர்பாபு என்ன ஆனார்..? வருமானத்துக்கு அதிகமாக சொத்துச் சேர்த்த தலைமைச் செயலாளர்..?  விஜயபாஸ்கர் வீட்டில் நடந்த ரெய்டு..? விவசாயிகள் பிரச்சினை..? நெடுவாசல் போராட்டம்...? நீட் பிரச்சினை..? அனிதா மரணம்..? டெங்கு விவகாரம்...? இப்படி பதில் தெரியாமல் மாற்றுப் பாதையில் பயணிக்கும் நாம் இப்போது பயணிக்கும் பாதை மெர்சல்... இந்தப் பிரச்சினையை மீடியாக்கள் கொண்டாடிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் டெங்கு கொசு சுத்தமாச் செத்துப் போச்சு பாருங்க... எல்லாத்தையும் மறந்துட்டு நாமளும் அவங்க பின்னால பயணிக்க ஆரம்பிச்சிடுறோம் இல்லையா..? நம்மள பரபரப்புக்கு பழக்கிப்புட்டானுங்க...

படத்தில் லாஜிக் ஓட்டைகள் நிறைய இருந்தாலும் வசனங்களின் வேகத்தால் படம் நல்லவே ஓடும்... இப்ப நம்ம அரசியல்வாதிகள் போட்ட ஆட்டத்தில் இன்னும் பிச்சிக்கிட்டு ஓடும். விஜய்க்கு மிகப்பெரிய மைல்கல் இந்தப்படம்... எல்லாத்திலும் அரசியல் பொழப்பு நடத்தும் கேடு கெட்ட அரசியல்வாதிகளுக்கு மிகப்பெரிய மைனஸ் இந்தப் பிரச்சினையை கையிலெடுத்தது என்பதை  அவர்கள் உணரும் போது மெர்சல் மிகப் பிரமாண்ட வெற்றியைப் பெற்றிருக்கும்.

விஜய் அடுத்த ஆட்டத்துக்கு ரெடியாகலாம்... 

******

குறிப்பு : என் எழுத்து எனக்கானது... நான் என் மகிழ்ச்சிகாகவே எழுதுகிறேன். எல்லாருக்கும் பிடிக்க வேண்டும் என்று நினைப்பவனில்லை... தமிழ்மண வாக்கை ஒரு பொருட்டாகவே கருதுவதும் இல்லை. மைனஸ், பிளஸ் உங்கள் விருப்பத்தின் குறியீடு...  மைனஸ் ஓட்டுப் போடுவதால் என் எழுத்தில் எந்த மாற்றமும் வரப்போவதில்லை. நான் எப்பவும் நான்தான்... என் எழுத்து எனக்கானதுதான்.. மைனஸ் ஓட்டுப் போடும் நண்பர்கள் FAKE ID-ல் வரவேண்டியதில்லை... உங்கள் சுயத்தை மறைத்து எதற்காக வாக்களிக்கிறீர்கள்... தைரியமாக முகமூடியை கழட்டிவிட்டு வாருங்கள்...  உங்களை வரவேற்கிறேன்.

-'பரிவை' சே.குமார்.

8 எண்ணங்கள்:

KILLERGEE Devakottai சொன்னது…

கேரளாவில் அரசியலை தமது வாழ்வின் அங்கமாக நினைத்து பங்கு கொள்கின்றார்கள்.

தமிழ்நாட்டில் தழிழர்களுக்கு பங்கம் விளைவிக்கவே ஈடுபடுகின்றார்கள்.

இதற்காக அரசியல்வாதிகளையும், நடிகர்களையும் குறை சொல்லி பயனில்லை.

குஜராத் பார்ட்டிதான் தமிழ்நாட்டுக்கு உகாண்டாவில் போய் செய்வினை செய்து வைத்ததாக கேள்விப்பட்டேன்.

குறிப்பூ... ஸூப்பரப்பூ...

துரை செல்வராஜூ சொன்னது…

இதோ இந்த குவைத் எண்ணெய் வளம் பொங்கித் ததும்பிக் கொண்டிருக்கும் நாடு..

அரசுப் பேருந்துகளில் பள்ளி மாணவர்கள் மட்டும் பயணச்சீட்டு இல்லாமல் பயணிக்கலாம்..

மற்றபடி எதுவும் இலவசமில்லை.. தனியார் மருத்துவமனைகளில் Health file - திறப்பதற்கே 20 Kd கொடுத்தாகவேண்டும்..

அரசு மருத்துவமனைகளிலும் கட்டணம் உண்டு.. எவ்வளவு என்று தெரியவில்லை..

வெளிநாட்டிற்கு வந்து நோயில்லாமல் வாழ்வது மிகப்பெரிய வரம்..

ஸ்ரீராம். சொன்னது…

நல்ல பிரிண்ட் கிடைத்து, ஒய்வு கிடைத்து மூட் வந்த பின்தான் படம் பார்க்கவேண்டும்! இந்தப் படத்தில் வரும் சீர்திருத்தவசனங்கள் பல சீமானால் முன்னாலேயே பேசப்பட்டவை என்று வாட்ஸாப்பில் வரும் காணொளிகள் நிரூபிக்கின்றன. பொழுது போக ஒரு படம்.அவ்வளவே.

தமிழ்மணத்தில் எங்கள் தளம் தவிர நிறைய தளங்களில் மைனஸ் வோட் போடப்பட்டு வருகின்றன. அப்படிப் போட்டு அல்பதிருப்தி அடைபவர்களும் இருக்கிறார்கள் என்று தெரிகிறது.

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

மெர்ஸல் பார்த்தாச்சு. ஓகே....உங்கள் விமர்சனம் நன்று.

கீதா: மெர்ஸல் ம்ம்ம்ம் இப்போதைக்கு இல்லை. பொதுவாகவே படங்கள் பார்ப்பது அரிது...வீட்டில் கம்ப்யூட்டரில் எப்போதேனும்...நன்றாக இருக்கு என்றால்..தியேட்டரும் வெகு அபூர்வம். நல்ல கம்பெனி இருந்தால். இப்போது மகனும் இங்கு இல்லை எனவே போவதுஇல்லை.மகன் இருந்தால் அவனோடு பார்ப்பதுண்டு.

உங்கள் குறிப்பை அப்படியே டிட்டோ செய்கிறேன். அதனால் நம் எழுத்துகள் மாறப் போவதுமில்லை...அதற்கெல்லாம் முக்கியத்துவம் அவசியமும் இல்லை...அதைப்பற்றி யோசிப்பதை விட..நல்லதையே சிந்திப்போம்... பதிவுகள் தர சிந்திக்கலாம்...

vimalanperali சொன்னது…

கேரள அரசியல்.வேறு.நம்மூர் அரசியல் (???)வேறு....!

G.M Balasubramaniam சொன்னது…

எப்படியோ இப்பட விமரிசனம் உங்கள் கருத்துகளையும் தூவி விட்டுப் போகிறது

Unknown சொன்னது…

[செலவில்லாத விளம்பரம் படத்திற்கு கிடைத்தது!

Muththamizh சொன்னது…

அருமை