மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

திங்கள், 2 ஜனவரி, 2017

மனசு பேசுகிறது : வசீகரிக்கும் பழைய குப்பைகள்

'இந்த  எழுத்தால் என்ன சாதித்தாய்..?' என்ற கேள்வியை எனக்குள் எப்போது எழுப்பினாலும் கிடைக்கும் விடையானது ஒன்றுதான்... அது நல்ல நட்புக்களை முகம் தெரிந்தோ... தெரியாமலோ... குடும்ப உறவாகவோ... இணைய உறவாகவோ... பெற்றிருக்கிறேன் என்பது மட்டும்தான். என் எழுத்து சமூகத்தை சீர்திருத்த வந்த எழுத்தோ அல்லது ஒரு சமுதாயத்தை தூக்கி நிறுத்த வந்த எழுத்தோ அல்ல... சாதாரண கிராமத்தானின் எழுத்து இது அவ்வளவே. கல்லூரிக் காலத்தில் 'நீங்களும் எழுதலாமே' என்ற இரண்டு வார்த்தை என் பேராசானிடமிருந்து வந்தபோது அடுத்த நாளே விளையாட்டாய் எழுதிக் கொண்டு போய்க் கொடுத்த காதல் கதைதான் எழுத்துக்கான முதல் சுழி. 'என்னய்யா காதல் கதை... வயசு அப்படி'ன்னு சொல்லாம அதையும் திருத்தி... 'நல்லாயிருக்கு' என்ற ஒற்றை வார்த்தை அவரின் வாயில் இருந்து உதிர்ந்ததில் கனிந்ததுதான் இந்த எழுத்து... அந்த வார்த்தை கொடுத்த தெம்புதான் 'பெரிய எழுத்தாளன்' என்ற கனவில் எழுத வைத்தது. கல்லூரியில் படிக்கும் போது முதல் கவிதை 'தாமரை'யில் வெளிவர. பொன்னீலன் அண்ணாச்சியின் வாழ்த்து ஒன்று ஐயா முகவரிக்கு தாமரை இதழுடன் வந்தது. அப்படி ஆரம்பித்த எழுத்தில் எங்கள் மண்ணின் மக்களையும் வாழ்க்கையையும் வைத்து எழுத ஆரம்பித்தது என்னோட மூணாவது இன்னிங்க்ஸில்தான்... ஆம் முதல் இன்னிங்க்ஸ் கல்லூரிக் காலத்தில் கவிதை, ஹைக்கூ என அதில்தான் அதிகம் பயணித்தது. கதைகளும் அவ்வப்போது பத்திரிக்கைகளில் எல்லாமே ஆஹா... ஒஹோவெல்லாம் இல்லை. இரண்டாவது இன்னிங்க்ஸ் திருமணத்திற்குப் பின்னர், ஸ்ருதி பிறந்த பின்தான்... சென்னையில் பத்திரிக்கையில் இருந்தபோது கவிதைகளும் ஹைக்கூவும் எழுதினாலும் கதைகளின் பின்னே அதிகமாய் நகர்ந்தது... மூன்றாவது இன்னிங்க்ஸில்தான் சொல்லிக் கொள்ளும்படியான வட்டார வழக்கிலான கதைகள் அதிகம் எழுத ஆரம்பித்தது... எழுதவும் நேரம் கிடைத்தது... மனசு என்ற வலைப்பூவும் வசமானது. தற்போது பத்திரிக்கைகளில் வெளி வருவதற்கான வாய்ப்பை அமைத்துக் கொள்ள முடியாத சூழல் என்றாலும் இணைய இதழ்களில் அதிகம் எழுத  முடிகிறது.

இப்ப எதுக்கு பழைய புராணம் அப்படின்னுதானே கேக்குறீங்க...? என்னைக்குமே பழைய குப்பைகளைக் கிளறினால் நிறைய விஷயங்களை அறிய முடியும்... அதைப் பற்றித்தான் பேசப்போறோம்... அதுக்கு முன்னால நான் முதல் பாராவில் சொன்னது போல்  ஒவ்வொருத்தருக்குமான எழுத்து ஏதோ ஒரு வகையில் ஆரம்பித்திருக்கும். சிலர் தொடர்ந்து எழுதலாம் பலர் என்னைப் போல் மூணு நாலு இன்னிங்க்ஸாக எழுதி வரலாம். சில நல்ல எழுத்தாளர்கள் காலத்தின் பிடியில் காணாமலும் போயிருக்கலாம்... எப்படியிருந்தாலும் ஒவ்வொருவருக்குமான எழுத்து வித்தியாசனமானது. அந்த வகையில் திண்டுக்கல் தனபாலன் அண்ணா அவர்கள் பாடல்கள், விளக்கங்கள், திருக்குறள், தொழில் நுட்பம் எனக் கலக்கினால் ஜெயக்குமார் ஐயா அவர்கள் சொல்ல வந்ததை மிக அழகாக வார்த்தைக் கோர்வையில் வித்தியாசமாய் நகர்த்துவார். கில்லர்ஜி அண்ணன் அவர்கள் சிவசம்போவை வைத்து சிரிப்பாகவும் சீரியஸாகவும் எழுதினால் தமிழும் அழகுமாய் முத்து நிலவன் ஐயா எழுதுவார். வாழ்க்கைக் கதைகளில் நம்மை வசப்படுத்துவது நிஷா அக்கா என்றால் முத்துக்களில் சிரிப்பார் மனோ அம்மா, எழுத்தையும் காதலிக்க வைப்பது தேவா அண்ணன் என்றால் நிறைவாய் எழுவார்கள் தில்லையகத்து துளசி சாரும் கீதா மேடமும்... எல்லாரையும் கவரும் பதிவுகளால் நம்மை எங்கள் பிளாக் ஈர்க்கும் என்றால் திரைக்கதையாய் விரிப்பார் குடந்தை சரவணன் அண்ணன். நண்பன் தமிழ்க்காதலன் கவிதைகளில் கலக்கினால் தம்பி தினேஷ் அதே கவிதைகளால் வார்த்தையில் விளையாடுவான். இப்படி ஒவ்வொருத்தரையும் சொல்லிக் கொண்டே போகலாம்... அப்படிச் சொல்ல ஆரம்பித்தால் பல பதிவுகள் எழுத வேண்டும். எனவே இங்கு சொன்னவர்கள் என்பதை மட்டும் எடுத்துக் கொள்ளாமல்  நான் விரும்பி வாசிக்கும் என்னை வாசிக்கும் அனைவரின் எழுத்துக்களுமே மிகச் சிறப்பானவைதான்...

எழுத்து வரமாய் அமைந்த பலரில்  எந்தப் பதிவு என்றாலும் விரிவாய்... புள்ளி விபரங்களை வைத்து அது ஆன்மீகமாய் இருந்தாலும் அரசியலாய் இருந்தாலும் வாழ்வியலாய் இருந்தாலும் அசத்தலான மிக நீண்ட பகிர்வைக் கொடுக்கக் கூடியவர் ஜோதிஜி அண்ணன் அவர்கள்... இவரின் எழுத்துக்கள் எல்லாரையும் வசீகரிக்கும். நீண்ட பதிவாய் நிறைவாய் எழுதுவார்... எதையும் ஊறுகாயாக தொடமாட்டார்... ஆதி முதல் அந்தம் வரை அலசி விடுவார். இவர் எங்க பக்கத்து ஊர்க்காரர் என்பதில் எனக்குச் சந்தோஷம்... வட்டார வழக்கில் எழுதுகிறானே இவன் என என்னை நேசிப்பதில் அவருக்குச் சந்தோசம். இப்ப என்ன ஜோதிஜி அண்ணனுக்கு ஐஸ் அப்படின்னு நினைக்காதீங்க... பழைய குப்பைகளை கிளற வைத்தவர் அவர்தான்... அதைக் கிளறக் கிளற ஆஹா... என்ன சுவை... என்ன ரசனையான எழுத்து.

Image result for ஜோதிஜி திருப்பூர்

எப்பவுமே குப்பைகளைக் கிளறினால் கோமேதகம் கிடைக்கும் என்பார்கள்... கிராமங்களில் குப்பை குழி, குப்பை மேடு என ஒவ்வொருவரும் ஒரு இடத்தில் வீட்டுக் குப்பைகள். மாட்டு ஆட்டு சாணிகள் என கொட்டி வைத்து விவசாய நேரத்தில் வயலில் அள்ளிக் கொண்டு போய் தூவிவிட்டு உரமாக்குவார்கள். சிலர் வயலில் ஒரு ஒரத்தில் கொட்டி வைத்திருப்பார்கள். அந்தக் குப்பைகளைக் கிளறித்தான் கோழிகள் தங்களுக்கான இரைகளைப் பொறுக்கும். ஏன் நானெல்லாம் கோழி குஞ்சி பொறித்ததும் கரையான் அள்ளப் போகும்பொது குப்பைக் குழிகளைத்தான் தேடிச் செல்வேன். அங்குதான் அதிகம் கரையான் இருக்கும்.. அதுவும் மாட்டெருவுக்குள்ளும், கதிர் அறுத்து நெல் தூற்றியது போக கருக்காய் என்று சொல்லப்படுகிற குப்பைக்குள்ளும் குவிந்து கிடக்கும். அதை வாளி நிறைய அள்ளி வந்து கோழிக் குஞ்சிக்கு போடுவதுண்டு. பள்ளியின் அருகில் இருக்கும் வாரச் சந்தையில் திங்கள்கிழமை மதியம் சுற்றிச் சுற்றி தேடி சில்லறைக்காசு பொறுக்கிய அனுபவம் நிறைய உண்டு. எனவே பழைய குப்பை என்று ஒதுக்கித் தள்ளாமல் அதையும் ஆராய்ந்தால் நிறையப் பெற முடியும்... நிறைவாகவும் பெற முடியும். அப்படியான ஒரு தொகுப்புத்தான் ஜோதிஜி அண்ணனின் 'பழைய குப்பைகள்'.

சின்ன வயதில் நிறைய பேப்பர்களையும் நடிகர், நடிகையர் படங்களையும் வெட்டி எடுத்து சேர்த்து வைக்கும் பழக்கம் எனக்கு உண்டு. பிடித்த கதைகள் என்றால் கூட வெட்டி சேர்த்து வைப்பேன்... ஆனால் அரசியல் விவகாரங்களை எல்லாம் சேர்த்து வைப்பதில்லை... அரசியலுக்கும் நமக்கும் வெகுதூரமாய் இருந்த காலம் அது. கல்லூரியில் படிக்கும் போது கூட என் பங்காளி திருநாவுக்கரசையும் முத்தரசு பாண்டியனையும் கோர்த்து விட்டு விட்டு அவர்களின் விவாதத்தை ரசித்தபடி நானும் ராம்கியும் சைக்கிளிலும் நவநீ, அண்ணாத்துரை, ஆதி என மற்ற பங்காளிகளும் மாப்பிள்ளைகளும் எங்கள் தோளில் கைபோட்டபடி நடந்தும் பயணிப்பதுண்டு.... மூன்றாண்டுகள் தினமும் காலை மாலை என காரசார விவாதம் நிகழ்ந்தும் முடிவில்லாமலேயே முடிந்து போனது கல்லூரி வாழ்க்கை... ஜோதி அண்ணா அரசியலையும் கரைத்துக் குடித்தவர் என்பதை அவரின் அரசியல் பதிவுகளைப் படிக்கும் போது அறியலாம். அவரும் நம்மைப் போல குப்பை சேர்ப்பவர்தான்... அதுவும் அரசியல் குப்பைகள்... அந்தத் தலைவர் அன்று பேசியதில் ஆச்சர்யப்பட்டும் வெட்டி வைத்ததை, இன்று எடுத்துப் பார்க்கும் போது இவரா இப்படிப் பேசியிருக்கிறார் என்று ஆச்சர்யப்பட்டிருக்கிறேன்... அதிர்ச்சி அடைந்திருக்கிறேன் என்று ஒரு கட்டுரையில் சொல்லியிருக்கிறார். ஆக மொத்தம் நாம் சேர்த்த குப்பைகளை மீண்டும் கிளறும் சந்தர்ப்பம் வாய்த்தால் ஆச்சர்யப்பட... ஆனந்தப்பட... அதிசயப்பட வைக்கின்றன அல்லவா?

என்னோட வட்டார வழக்கில் இருந்து எழுத்து வழக்குக்கு மாறி... இருங்க இங்க என்னைப் பற்றி கொஞ்சம் சொல்லிக்கிறேனே... நானெல்லாம் வட்டாரத்தில் இருந்து மாறவே இல்லை இன்னும் காட்டானாய்த்தான் என்பது வேறு விஷயம்... எனக்கெல்லாம் ரத்தம், நாடி, நரம்பு எல்லாத்துலயும் பரியன் வயல் கிராமத்து மண்ணு மொத்தமாப் பாஞ்சிருச்சு... இன்னும் கிராமத்தானாய்த்தான்... அதுதான் சுகமாவும் சந்தோஷமாவும் இருக்கு... ஜோதி அண்ணனிடம் முதல்முறை பேசும்போதே அந்த சுகத்தை அடைந்தேன்... சரி விஷயத்து வருவோம்... அதாவது எழுத்து வழக்குக்கு மாறி, இணைய எழுத்தாளனாய் பரிணமிக்க அவருக்கு 40 பதிவு தேவைப்பட்டது என்று சொல்லும் முதல் கட்டுரையான 'நான்'னில் ஆரம்பிக்கும் எழுத்து கல்லூரிக்காலம், இரயில்வே நிலையத்தில் படித்தது, பால்ய நண்பன் இன்று எப்படி நடக்கிறான், சாதீயத்தின் விளைவு, ஆன்மீகம், அரசியல் என இருபது கிளைகளில் அற்புதமாய் பயணிக்கிறது. அதுவும் தன் காதலியின் பெயரோடு தன் பெயரையும் எழுதிய ரயில்வே நிலையத்து மரம் இன்னும் நிற்கிறது என்றாலும் அவள் பெயர் மறைந்து தன் பெயர் மட்டும் இருக்க, அதற்குக் கீழே குழந்தைகள் தங்களது பெயரைப் பதித்தார்கள் என்று சொல்லும் போது எத்தனை அன்போடு பிரிந்து போன காதலியைச் சுமந்தாலும் நமக்கென குட்டித் தேவதைகள்... அவர் பாணியில் தேவியர் வந்துவிட்டால் காதலி மறைந்து தேவியரைச் சுமக்க ஆரம்பித்து விடுவோம் என்பதை சொல்லாமல் சொல்லிச் செல்கிறது. அதே போல் ஐடிஐ படித்த நண்பனை இந்த வேலைக்கு நீங்களெல்லாம் சரி வரமாட்டீங்க என அவரின் பூணூலைப் பார்த்து ஒதுக்கும் சமூகத்தால் அவன் இறந்தவர்களுக்கு காரியம் பார்க்கிறான் என்று சொல்லும் போது இன்று அவனின் அடுத்த வேலை சாப்பாட்டுக்கு யார் சாவார் என்று காத்திருக்கிறான் என்பதாய் முடிப்பதில் சாதிப் பொங்கலில் சமத்துவ சக்கரை எப்படி தூக்கலாய் இருக்கிறது என்பதை உணர முடிகிறது.

பழைய குப்பைகளை இரண்டு முறை வாசிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அப்படி வாசித்தபோது நிறைய அறிய முடிந்தது... எல்லாமே வாழ்வியலைப் பேசும் கட்டுரைகள்... அவை அவர் கடந்து சென்ற போது நிகழ்ந்தவை என்பதைவிட, நாம் ஒவ்வொருவரும் கடந்து செல்பவைதான்.. இந்தப் புத்தாண்டின் முதல் நாளில் 'பழைய குப்பைகள்' மின்னூலாய் வந்திருக்கிறது.  புத்தகம் போடணும்.. அதுவும் கவிதைக்கு ஒன்று... கதைக்கு ஒன்று... நாவலுக்கு ஒன்று.. கட்டுரைக்கு ஒன்று... என நாமெல்லாம் யோசித்துக் கொண்டிருக்கும் போது 2013 ஆம் ஆண்டில் 'ஈழம் - வந்தார்கள் வென்றார்கள்' என்ற முதல் மின்னூலை வெளியிட்டவர் இந்த மூன்றாண்டுகளில் இன்று வெளியான 'பழைய குப்பைகள்' வரை எட்டு மின்னூல்களை வெளியிட்டிருக்கிறார். இந்த மின்னூலுக்கு முந்தைய மின்னூல் வரை 1,64,000 பேருக்கு மேல் வாசித்திருக்கிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இதை ஆச்சர்யம் என்பதைவிட அவரின் எழுத்துக்கான் அத்தாட்சி என்றே சொல்லலாம்.  அவரின் அனைத்து மின்னூல்களுக்கான இணைப்பு அவரின் தளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. வாசித்தால் அந்த எழுத்து உங்களை அடித்துச் சென்று ஆச்சர்யப்பட வைக்கும்.


ஜோதி அண்ணாவின் வலைப்பூ : தேவியர் இல்லம்

பழைய குப்பைகள் மின்னூல் வாசிக்க :  பழைய குப்பைகள்

பழைய குப்பைகள் வசீகரிக்குமா என்றால் ஆம் வசீகரிக்கும் என்பதுடன் வாசிப்பவரை வசமிழக்க வைக்கும் என்றும் சொல்லலாம்.

கடைசியாக ஒன்று அவரின் டாலர் நகரம் புத்தகத்தை நான் இன்னும் வாசிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை... ஊருக்குப் போகும் போது திருப்பூர் செல்வது என்பது கடினமே... இந்த முறை எப்படியும் வாங்கி வாசிக்கணும். ஆனாலும் அது குறித்து திண்டுக்கல் தனபாலன் அண்ணா பேசும்போது சொன்னது 'என் மாமனார் டாலர் நகரம் புத்தகத்தில் இருந்து குறிப்புக்கள் எடுத்து மேடைகளில் பேசியதாய் ஜோதிஜி அவர்களிடம் சொன்னார் என்றார். அப்ப அது எப்படியான பொக்கிஷமாய் இருக்கணும்.. அதேபோல்தான் எல்லா மின்னூல்களும்... அவசியம் வாசிங்க...

என்னங்க... பதிவு ரொம்பப் பெரிசா இருக்கா? மூணு நாலு பதிவு ஒண்ணு சேர்ந்தாத்தான் அவரோட ஒரு பதிவு... அதனால அவரைப் பற்றி அவருக்கான பகிர்வு என்பதால் நீளமாத்தான் எழுதணும் இல்லையா...

இன்னும் உயரம் தொட வாழ்த்துக்கள் அண்ணா...
-'பரிவை' சே.குமார்.

16 எண்ணங்கள்:

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

மிக அழகாக ஆரம்பித்து மிக அழகாக ஜோதிஜி அவர்களின் புத்தகமான பழைய குப்பைகளைப் பற்றிப் பேசி இடையிடையே தங்களைப் பற்றியதும் சொல்லி அழகாக முடித்திருக்கிறீர்கள். மிக அருமையான விமர்சனம். தரவிறக்கம் செய்துவிட்டோம் குமார்.

வாழ்த்துகள் ஜோதிஜி அவர்கள் மேலும் பல சிகரங்களை எட்ட வாழ்த்துகள்!

அருமையாக எழுதியமைக்குத் தங்களுக்கும் வாழ்த்துகள் குமார்!!

Unknown சொன்னது…

தங்களின் இந்த எழுத்துப்பணி சிறக்க என் வாழ்த்துக்கள் அண்ணா.

அபயாஅருணா சொன்னது…

பழைய சோறும் பழைய குப்பையும் என்றுமே இனிப்பவை சந்தேகமில்லை .என்னிடமும் நிறைய .......இதை புத்தக விமரிசனத்தோடு இணைத்து சொன்னது நன்றாக உள்ளது .

ஸ்ரீராம். சொன்னது…

நீளமாக இருந்தாலும் நிதானமாக எழுதியிருக்கிறீர்கள். தமிழ் இளங்கோ ஸார் கூட இந்தப் புத்தகம் பற்றிப் பகிர்ந்திருந்தார்.

எங்களைக் குறிப்பிட்டுள்ளமைக்கு நன்றி.

Yarlpavanan சொன்னது…

"நான் எழுதுவதால்
பாரதியைப் போல
புரட்சியாளன் ஆகப்போவதில்லை
நல்ல அறிவுள்ள உறவுகளைப் பேணுகிறேன்!" என்ற
என் எண்ணங்களைப் போல வெளியிட்ட
தங்கள் கருத்தை வரவேற்கிறேன்.
எழுதுவதால் நல்ல உறவுகளைச் சம்பாதிப்போம்!

அருமையான அலசல்
தொடருங்கள்

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

அருமை நண்பரே
மூளையில் நினைவு அடுக்குகளின் இடையே மறைந்திருக்கும்
நம் இளமைக்கால நினைவலைகளை எண்ணி எண்ணி இன்புறுவதும்,
எழுத்தாய் இறக்கி வைப்பதும் ஒரு மகிழ்ச்சியை ஒரு நிறைவினை
அள்ளி அள்ளி வழங்கத்தான் செய்கிறது
ஜோதிஜி அவர்களின் மின்னூலை தரவிறக்கம் செய்து கொண்டேன்.
அண்மையில் இவரைச் சந்திக்கும் வாய்ப்பும் கிடைத்ததை எண்ணி
மகிழ்கின்றேன்
எளியேனையும் தங்களின் பதிவில் குறிப்பிட்டமைக்கு நன்றி நண்பரே
தொடர்ந்து எழுதுங்கள்

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

மனதார வாழ்த்துவதென்பது இது தான்... அழகாக எழுதி உள்ளீர்கள்...

நன்றி...

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நானும் தரவிறக்கம் செய்து வைத்துள்ளேன். படிக்க வேண்டும்.....

சிறப்பான பகிர்வு குமார். பாராட்டுகள்.

நிஷா சொன்னது…

ம்ம்ம்ம்ம்ம் அப்படின்னால் ஐயாவோடு சேர்ந்த ராம்கி, நவனீ, அண்ணாத்துரையெல்லாம் உங்க காலேஜ் மேட்ஸ் தான்ல. நாவலில் படிக்கும் போது இயல்பாய் கதையோடு களமாடிய பெயர்களை எப்படி இலகுவாக தெரிந்து கொண்டீர்கள் என யோசித்திருக்கின்றேன். நிஜங்களை நிழல்களாக்கியதனால் தான் கதையும் களமும் உயிர்ப்பாய் இருந்தது குமார்.

சேனைத்தமிழ் உலாவில் அறிமுகமாகும் முன்னே உங்கள் தளம் வந்து தினமும் பதிவு தேடுவேன். நான் தொலைபேசியில் தேடிப்படிக்கும் ஓரிரு தளங்களில் உங்களுடையது முக்கியமானதுப்பா.

எழுத்தால் என்னத்தை சாதித்தாய்? காசு தருமா? சோறு போடுமா என கேட்பவர்கள் என் பக்கமும் உண்டு. அவர்களுக்கு எங்கே புரியப்போகின்றது. நமது எழுத்து எத்துணை ஆத்மார்ந்தமான நட்புக்களை, உறவுகளை தேடித்தந்திருக்கின்றதெனும் உண்மை. கூடப்பிறந்தவர்கள் தூரமாக, தூரமாக இருக்கும் உறவுகளை நெருங்க வைக்கும் எழுத்துக்கள் அல்லவா நம்முடையது.

உண்மையில் நானும் ஒரு பதிவு எழுத வேண்டும் என நினைத்திருந்தேன். உங்களின் இந்தப்பதிவு எழுதித்தான் ஆக வேண்டும் எனும் தூண்டுதலை தந்துள்ளதுப்பா.

என்னை வலைப்பூவில் இழுத்து விட்டு எழுத்துலகில் இன்னொரு பரிமாணத்தினையும் பெரும் ஜம்பவாங்களின் நட்பினையும் அடைய வழி காட்டியவர் நீங்கள் தானே?

ஜோதிஜி அவர்களின் நாவலை படிக்க முன் கீதாமதிவாணன் அக்காவின் என்றாவது ஒரு நாள் மொழிபெயர்ப்பு நாவல் என் வாசிப்புக்காக காத்திருக்கின்றது. அதை முடித்ததும் இதை தொடங்கிர வேண்டியது தான்.

வருட கடைசியும், ஆரம்பமுமாய் கணக்கு வழக்குகள் பார்க்க வேண்டியது, கட்டவேண்டிய பில்களும் குவிந்திருப்பதனால் வாசிப்பில் கொஞ்சம் தாமதம் குமார்.

நம்மை பொறுத்த வரை நாலு வரியில் அருமை, எருமை என சொல்லாமல் நாற்பது வரியில் ஊறி உணர்ந்து கருத்தெழுதுவதனால் உங்கள் பதிவும் பெரிதாகவில்லை. என் பின்னூட்டமும் பெரிதாக இல்லையாக்கும்.

நாம் இது வரை எப்படியோ இனியும் அப்படியோ தான் இருப்போம். இருக்கணும்.

இப்ப மதுரைத்தமிழன் வந்து ஒரு பதிவையே பின்னூட்டமா கொடுத்திட்டாங்கப்போய் என கிண்டல் செய்ய முன் நான் எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பூ.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

ஜோதிஜி திருப்பூர் பதிவுகளை படித்துவருகிறேன். நீங்கள் அவரைப் பற்றிப் பகிர்ந்தவிதம் அவருடைய எழுத்தின்மீதான அனைவரின் ஈர்ப்பையும் வெளிப்படுத்தியது.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் அக்கா...
தங்களின் நீண்ட கருத்துக்கு நன்றி.
முதலில் தொழில்... அப்புறம்தான் எழுத்து... நமக்கு எழுத்து தொழில் இல்லை... ஆத்ம திருப்திக்கானது.... அதை ஜோதிஜி அண்ணா மிக அழகாக தன்னுள் வைத்திருக்கிறார்... இந்தக் கட்டுரை படிக்கும் போது உணர்வீர்கள்.

என்னோட முதல் நாவலில் நாயகியும் சில கதாபாத்திரங்களும் தவிர எல்லாமே என்னோட பிரண்ட்ஸ்... ஏன் வைரவன் கூட எனக்கு முன்னே படித்த ஒரு பையனின் அசல் காப்பிதான் என்று தங்களிடமும் பல பகிர்விலும் முன்னரே சொல்லியிருக்கிறேன் அக்கா... மறந்துட்டிங்களா?

நீங்க அப்ப புவனான்னு வேற கேட்டீங்க... ஹா..ஹா... அப்பவும் அது கற்பனையின்னு சொன்னேன்... இப்பவும் சொல்றேன் புவனா கற்பனைதான்...

நல்ல கருத்துக்கு நன்றி அக்கா...

தொடர்ந்து எழுதுங்க...

அப்ப அப்ப சாட்டிங்கில் வாங்க...

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஐயா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க துளசி சார்...
வாசிங்க... ரொம்பப் பிடிக்கும்.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

நன்றி தம்பி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சகோ...
வாசிங்க... ரொம்பப் பிடிக்கும்.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அண்ணா..
வாசிங்க... ரொம்பப் பிடிக்கும்.
தமிழ் இளங்கோ சாரின் பதிவை படிக்கிறேன்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.