மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

புதன், 18 ஜனவரி, 2017நாளைய விடியல் நமதாகட்டும்...

சிறு விதை மிகப்பெரிய அறப்போராட்டமாக முன்னெடுக்கப்பட்டிருப்பது தமிழனாய் நாமெல்லாம் பெருமைப்பட வேண்டிய விஷயம். கடலலை போல் மக்கள் வெள்ளம்... எங்கு நோக்கினாலும் 'சல்லிக்கட்டு வேண்டும்' என்ற குரல்கள்... குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தெருவில் இறங்கிப் போராடுவது சல்லிக்கட்டுக்காக மட்டும் என்று நினைத்தால் நினைப்பவருக்கு ஏமாற்றமே... இந்தப் போராட்டம் வைக்கும் தீ இனி தமிழினத்துக்கு எதிராக எது வந்தாலும் பற்றி எரியும் என்பதில் மாற்றமில்லை.

Image result for மெரினா போராட்டம்

தொடரும் அறப்போராட்டத்தில் சில இடங்களில் டவர்களிலும் கட்டிடங்களும் ஏறி 'சல்லிக்கட்டுக்கான தடையை உடை...' என்று தற்கொலை முயற்சியில் இறங்க முயல்கிறார்கள்... அப்படி நினைக்காதீர்கள். உயிரை விடுவதால் ஒன்றும் ஆகப்போவதில்லை... நம் உரிமை... நம் பண்பாடு... நம் கலாச்சாரம்... என்பதில் உறுதியாய் இருங்கள்... உங்கள் உயிரை இழந்துதான் உரிமையைப் பெற வேண்டும் என்பதில்லை.... உங்கள் உயிரைக் கொடுத்து உரிமையைப் பெற நினைத்து பெற்றவர்களை தவிக்க விட்டுச் செல்லாதீர்கள். போராட்டம் என்பது உயிரினை வைத்து அல்ல... நம் உணர்வை வைத்துத்தான் செய்ய வேண்டும். இதுபோன்ற நிகழ்வுகள் நம் அறப்போராட்டத்தின் வேகத்தைத் தடுத்து வேறு பாதையில் பயணிக்க வைத்துவிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்... நம் அறப்போராட்டம் இன்னும் தீவிரமாகட்டும். 

எம்.ஜி.ஆர். மீது நமக்கும் பற்றுண்டு... அவரின் நூற்றாண்டு விழா நிகழ்வுகள் நடக்க வேண்டும்தான்.... அதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லைதான்... இருந்தாலும் தமிழகமே இரண்டு நாட்களாக தெருவில் கிடக்க, ஒரு அரசுக்கு... மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசுக்கு... மக்களால் நான் மக்களுக்காக நான் என்று சொல்லி வோட்டு வாங்கி அரசமைத்த மறைந்த முதல்வரின் அன்புக்குப் பாத்தியமான நம் முதல்வர் மக்களுக்காக நான் என்பதை மறந்து தன் பதவியைக் காத்துக் கொள்ள, சின்னம்மா காலில் விழுந்து கிடப்பது மட்டுமல்ல, உரிமைக்காக மக்கள் போராடும் போது ஆயிரத்தில் ஒருவன் படம் பார்த்துக் கொண்டிருக்கிறார். இவர் எப்படி மக்களுக்கான முதல்வராக இருப்பார். போராட்டக் களத்துக்கு வரமுடியாத அளவுக்கு அவருக்கு அப்படி என்ன வேலை... இன்று தில்லி செல்கிறேன்... உரிமை மீட்டு வருவேன் என்று சொல்வதை எப்படி ஏற்பது...? அதைவிடக் கொடுமை தமிழர்களின் உணர்வுகளுக்கு எப்போதும் துணை நிற்போம் என்று பல நாள் போராட்டத்துக்குப் பின் இன்று சொல்வது நகைப்புக்குரியதுதானே... இதில் என்ன உணர்வு இருக்கிறது...?

நாங்களும் போராட்டத்தில் கலந்து கொள்வோம்... மக்களுக்கு ஆதரவா இருப்போம் என்று சொன்ன எம்.பிக்களும் எம்.எல்.ஏக்களும் எங்கள் பண்பாட்டுக்கு... எங்கள் உணர்வுக்கு... எங்கள் உரிமைக்கு மதிப்பில்லாத நாட்டில் எனக்கெதற்கு பதவியும் பவுசும் என்று சொல்லி ராஜினாமா செய்து விட்டு வந்து மக்களோடு மக்களாக உரிமை மீட்க உட்கார முடியலை... எனக்கு பதவி வேண்டும்... பணம் வேண்டும்... என்று சொல்லிக் கொண்டு இருப்பதில் இருந்து தெரியவில்லையா அவர்களுக்கு பண்பாடும் உரிமையும் தேவையில்லை... பணமும் பகட்டும்தான் தேவை என்பது. இதற்குத்தான் அலங்காநல்லூரில் இன்று மதியம் வைத்தான் ஆப்பு... இன்று அவசர சட்டம் போடு... இல்லையேல் எல்லாரும் ராஜினாமா பண்ணுன்னு வாடிவாசல்ல வச்சி வச்சான் ஆப்பு... நம்ம ஆட்கள் பண்ணுவானுங்க... ஒரு பய வாடி வாசல் பக்கம் போகமாட்டானுங்க... மக்கள் நல்ல யோசிக்கிறாங்க. இந்த வேகம்... இந்த விவேகம் இனி எல்லாத்திலும் தொடரணும்.

நடிகர்களில் சிலர் உண்மையிலேயே இன உணர்வோடு போராட்டக் களத்துக்கு வருகிறார்கள்.... ஆனால் இருபதாம் தேதி போராட்டம் பண்றோம்ன்னு அறிக்கை விடும் நடிகர்கள் இதுவரை வாய் திறக்காமல் இப்போதுதான் வாய் திறக்கிறார்கள்... காரணம் அவர்களின் படம் ஓடவேண்டுமே... பொழப்பு நடக்கணுமே... என்பதால்தான்... இன்று நியூஸ்-7 தொலைக்காட்சியில் பேசிய  இயக்குநர் பாண்டிராஜிடம் அரசியல்வாதிகளை ஏற்காத மக்கள் திரையுலகினரை ஏற்கின்றனரே என்ற கேள்வி கேட்கப்பட்டபோது அவர் சொன்னது, எங்காளுக பலரை விரட்டிட்டாங்க.. அவங்களுக்கு இவன் உண்மையோட வர்றான்... இவன் பேர் வாங்க வர்றான் தெரியுங்க... என்றார். என்னங்க நீங்களே இப்படிச் சொல்றீங்க என்றபோது அதுதாங்க உண்மை... நான் கூட இங்க இயக்குநர் பாண்டிராஜாவாக வரச் சொன்னால் வந்திருக்கமாட்டேன்.... விவசாயி பாண்டிராஜாத்தான் வந்திருக்கிறேன்... அதைத்தான் ஆரம்பத்தில் சொன்னேன் என்றார். அதுதான் உண்மை... அவரின் பேச்சில் கலப்படம் இல்லை. அதேபோல் ராகவா லாரன்ஸ், மன்சூர் அலிகான், இயக்குநர் அமீர், போன்றவர்களின் நெஞ்சத்தில் போராட்ட குணமிருக்கு...  தன்மான உணர்வோடு பேசுகிறார்கள்... ஆனால் விஜய், விஷால், தனுஷ் என சிலரோ இப்போது வேகவேகமாக ஆதரவுக்கரம் நீட்டுவது எதற்கு என்பதை பாண்டிராஜ் சொன்ன வார்த்தைகளின் மூலம் அறியலாம் அல்லவா..?

Image result for சல்லிக்கட்டு போராட்டம்

போராட்டக்களத்தில் இளைஞர்களும் மாணவர்களும் கேட்கும் கேள்விகள் சாட்டையடி... சல்லிக்கட்டுப் பிரச்சினை என்றில்லை... எந்த ஒரு பிரச்சினைக்கும் இப்படி ஒரு அறப்போராட்டத்தைக் கையில் எடுத்தால் உலகமே திரும்பிப்பார்க்கும் என்பதை உணர வைத்த போராட்டம் இது. எத்தனை தில்லாலங்கடி வேலைகள்... மூன்று நாட்களாக வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்துவிட்டு ஆங்காங்கே தடியடி நடத்தச் சொல்லி விட்டு இன்று உங்கள் போராட்டத்தில் நாங்களும் கை கொடுப்போம்... உங்களின் உணர்வுகளுக்கு அரசு எப்போது ஆதரவுக் கரம் நீட்டும் என்றெல்லாம் நீலிக்கண்ணீர் விட்டு நல்லவன் போல் நடிப்பதை என்ன சொல்வது..? பிரதமருக்குத்தான் தமிழகம் இருப்பது தெரியவில்லை... முதல்வருக்கு தமிழகத்தில் இருப்பதே தெரியவில்லை போலும்... எங்கள் களத்துக்கு வாருங்கள் என்று மெரினாவுக்குத்தானே கூப்பிட்டார்கள்... அலங்காநல்லூருக்கு இல்லையே... அப்படியிருந்தும் அவரால் போராட்டக்களம் செல்ல முடியவில்லை என்பது கேவலமானது. தன் இனம் போராடும் போது மற்ற நாட்டில் மக்கள், தலைவர்கள்... இங்கு வந்து கிரிக்கெட் மட்டும் விளையாடிச் செல்லும் வீரர்கள் உரிமையோடு குரல் கொடுக்கும் போது இவரால் செல்ல இயலவில்லை... உரிமைக்கு குரல் கொடுக்க வேண்டாம்... உணர்வுக்கு மதிப்பளிக்கலாமே... அப்படி மதிப்பளித்து இருந்தால் இன்று போராட்டத்தைக் கைவிடுங்கள் என்று சொன்னதும் அவனவன் கிளம்பியிருப்பானே... இப்ப என்ன சொல்றான் நீ செய்யி நான் கிளம்புறேன்னு இன்னும்  தீவிரமாக்கிவிட்டான் போராட்டத்தை.

அடிக்கடி சொல்வதுதான் நம் போராட்டம் அறப்போராட்டம்... தற்கொலை முயற்சிகளை...வீண் விவாதங்களை முன்னெடுக்காதீர்கள்... அரசியல்வாதிகளை அண்ட விடாதீர்கள்... சினிமாக்காரனை தரம் பிரியுங்கள்... தனக்கான பெயரை தக்க வைக்க வரும் எவனையும் உள்ளே விடாதீர்கள்... குளிரில் கொசுக்கடியில் கைக்குழந்தைகளுடன் கிடக்கும் தாய்மார்களைப் போல்... கல்லூரி மாணவ மாணவிகளைப் போல்... இளைஞர்களைப் போல்... இளைஞிகளைப் போல்... பெரியவர்களைப் போல்... எந்தப் பிரபலத்தாலும் அரசியல்வாதிகளாலும் கிடக்கமுடியாது என்பதை உணருங்கள். இது தானாக சேர்ந்த கூட்டம் முன்னெடுத்த... உலகையே வியக்க வைத்த மாபெரும் போராட்டம்... இதை அரசியல்வாதிகள் கூத்தாடிகள் கையில் கொடுத்துவிட்டு வேடிக்கை பார்க்காதீர்கள்.

போராட்டக்களத்தில் இன்னும் இன்னுமாய் நம் சொந்தங்கள் கூடிக்கொண்டுதான் இருப்பார்கள்... ஒரு நல்ல முடிவு கிடைக்கும் வரை... உலகம் சுற்றும் வாலிபனைப் பார்க்கப் போன ஆயிரத்தில் ஒருவன் நல்ல முடிவோடு வரும்வரை யாருக்கும் அடிபணியாதீர்கள்... அராஜகத்தை கையில் எடுக்காதீர்கள்... போராட்டக்களம் உலகை வியக்கச் செய்யட்டும்.. நம்மில் விலகி நின்று கைகொட்டிச் சிரிக்கும் நம் தமிழர்களின் நெஞ்சங்களில் தமிழுணர்வை விதைத்துச் செல்லட்டும்...

நாளைய விடியல் நம்பிக்கையான விடியலாய்... நமக்கான உரிமையை... உணர்வை மீட்ட விடியலாய் அமையட்டும்...
-'பரிவை' சே.குமார்.

5 கருத்துகள்:

 1. இந்த அறப் போராட்டம் கண்டிப்பாக வெற்றி பெறும்...

  பதிலளிநீக்கு
 2. இளைஞர்களின் எழுச்சி எதிர்ப்பாளர்களின் வீழ்ச்சிக்கு வழி வகுக்கட்டும்!

  பதிலளிநீக்கு
 3. ஏறு தழுவல் (ஜல்லிக்கட்டு) பற்றிய
  தீர்வு கிட்டும் வரை
  எழுச்சி ஓயப்போவதில்லையாம்...

  காலம் பதில் சொல்லுமே!

  பதிலளிநீக்கு
 4. வெற்றி பெறும்! இதே போன்று பல பிரச்சனைகளுக்கும் ஒன்று திரண்டால் நல்லாட்சி அமையவும் வாய்ப்புண்டு!மக்களுக்குப் பயந்தேனும் ஆட்சி புரிய மாட்டார்களா என்ன..

  பதிலளிநீக்கு
 5. நிரந்தர தீர்வு கிடைக்கட்டும்.....

  நல்ல பகிர்வு குமார்... பாராட்டுகள் - உங்களுக்கும் களத்தில் இருக்கும் அனைவருக்கும்.

  பதிலளிநீக்கு

நட்பின் வருகைக்கு நன்றி..!

பகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...