மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வெள்ளி, 9 டிசம்பர், 2016மனசு பேசுகிறது : உண்மை தெரிஞ்சா...?

'உண்மை தெரிஞ்சாகணும்... உண்மை தெரிஞ்சாகணும்...' என்று ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் சமூக வலைத்தளங்களில் வரும் பகிர்வுகளைப் பார்க்கும் போது  இவர்கள் எல்லாம் அந்த 75 நாட்கள் எங்கிருந்தார்கள்..? ஏன் அப்பொழுதெல்லாம் அப்போலோவில் நடந்த நாடகம் குறித்துக் கேட்கவில்லை..? இப்போது உண்மை அறியத் துடிப்பவர்கள் அதைத் தெரிந்து என்ன செய்யப் போகிறார்கள்..? சம்பந்தப்பட்டவரை நாடு கடத்திவிடுவார்களா என்ன..? உண்மையைத் தெரிந்து கொண்டு மௌனமாகத்தான் இருக்கப் போகிறோம்... பிறகு எதற்கு விடியாத பொழுதில் கூவிக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் புரியவில்லை.

ஒரு வழக்கறிஞர் ஜெயலலிதா மரணம் குறித்து பேசியதற்கு அவரைச் சூழ்ந்து கொண்ட ரவுடிக் கூட்டம் அவரை மிரட்டி மன்னிப்புக் கேட்கச் சொல்லும் வீடியோவை நாம் எல்லோரும் பார்த்திருப்போம். இதுதான் உண்மை நிலை... ஒரு சாமானியன் மரணம் குறித்துக் கேட்டால் அவனின் மரண நாள் குறிக்கப்படும் என்பதை நம்மில் எத்தனை பேர் அறிவோம். அன்று அம்மா... அம்மான்னு கூழைக் கும்பிடு போட்டு, ஹெலிகாப்டரையும் காரையும் பார்த்து  மணிவண்ணன் சொல்வதைப் போல கிருஷ்ணா... கிருஷ்ணா என பருந்தைப் பார்த்து கும்பிடு போடுவது போல் கும்பிட்டு... ரோட்டில் விழுந்து கும்பிட்டு... மண் சோறு சாப்பிட்டு... தீச்சட்டி எடுத்து.. வேல் போட்டு... மொட்டை அடித்த பயகதான் இன்னைக்கு சும்மா நிக்கிறானுங்க. இவனுக இன்னும் அடிமை வாழ்க்கைக்குத்தான் ஆசைப்படுவார்களே ஒழிய நல்லதொரு அரசை நமக்குத் தரமாட்டார்கள் என்பதை அறிந்தும்தான் நாம் உண்மையைக் கேட்டுக் கொண்டிருக்கிறோம்.

நிரந்தர முதல்வரே... என்றவனெல்லாம் நிம்மதி என்று நினைத்து 'அவரால் ஒன்றும் அதிமுக ஆட்சிக்கு வரவில்லை' என்று அறிக்கை விடுகிறான். சரி அவரால் வரவில்லை... இப்ப இருக்கும் அடிமை அல்லக்கைகளால்தான் ஓட்டு விழுந்தது... ஆட்சிக்கு வந்தோமென்றால் மீண்டும் தேர்தலைச் சந்திப்பார்களா..?  அது எப்படிச் சந்திப்பார்கள்... இருக்கும் வரை சம்பாரித்துக் கொள்வோம் என இனி துரிதமாக இயக்குவார்கள். அதற்காகத்தானே அடிப்படை உறுப்பினரை பொதுச் செயலாளர் ஆக்கும் முயற்சியில் திளைத்திருக்கிறார்கள். ஜெயலலிதா என்னும் ஒரு மனுஷி, ஹிட்லராய் இருந்து இவர்களை அடிமைப்படுத்தி வைத்திருந்தது இன்றைக்கு இவர்களின் செயலைப் பார்க்கும் போது தவறில்லை என்றே தோன்றுகிறது.

போயஸ் தோட்ட மர்மம்... அப்போலோ மர்மம்... அப்படின்னும் இன்னைக்கு கட்டுரைகள் எழுதிக் குவிக்கும் பத்திரிக்கைகள் எல்லாம் செப்டெம்பர் 22 முதல் தமிழகத்தை விட்டு வெளியில் இருந்தா செய்திகளைக் கொடுத்தன. நித்யானந்தா படுக்கை அறை வரை செல்ல முடிந்த மீடியாக்களால் அப்போலோவுக்குள் செல்ல முடியவில்லையே ஏன்..? யாருக்காக அவர்கள் உண்மை அறியும் முயற்சியில் இறங்கவில்லை... இன்று சில தொலைக்காட்சிகளும் சில பத்திரிக்கைகளும் சின்னம்மாவுக்கு சாமரம் வீசுவதிலிருந்து பத்திரிக்கைகளும் தொலைக்காட்சிகளும் சாதித்த மௌனத்தின் காரணத்தை நாம் உணர்ந்து கொள்ள முடியும்.

கட்சியின் அடிப்படை உறுப்பினரை முதல்வர் நேரில் சென்று பார்த்து மாநில நிர்வாகம் குறித்து விவாதிப்பது எந்த மாநிலத்தில் நடக்கும்... அடிப்படை உறுப்பினரை தங்கள் சுய நலத்துக்காக பயன்படுத்தும் கட்சிகளைத்தான் நாம் அறிவோம். இங்கே அடிப்படை உறுப்பினரும் அடிப்படை உறுப்பினர் அல்லாதோரும் கட்சியைக் கைப்பிடிக்க நினைப்பதுடன் தமிழகத்தை ஆளவும் முயல்வதுதான் வேதனை... இப்படியான ஒரு நிகழ்வு நடக்குமானால்... நடக்குமானால் என்ன நடந்தே தீரும் என்பதுதான் நிதர்சனம். அப்படி நடக்கும் பட்சத்தில் அதற்கு காரணகர்த்தா யாராக இருக்க முடியும் நாம்தான்... பணத்துக்காக நம் ஓட்டை விற்று பணம் தின்னும் பிணங்களிடம் நாட்டை ஒப்படைத்து விட்டு திருவோடு சுமக்க காத்துக் கொண்டிருக்கிறோம்.

அன்று அப்போலோ வாசலில் தவம் கிடந்து பூஜைகள் செய்த தமிழினம் அப்போலோவுக்கு பூஜை செய்திருந்தால்... மிகப் பெரிய ஒரு போராட்டத்தை முன்னெடுத்து இருந்தால் நம் முதல்வரின் சாவு குறித்தான உண்மையை அறிந்திருக்க முடியும். நம்மை எவ்வளவு கேவலமாக நினைத்து மத்திய அரசும் இவர்களும் காய் நகர்த்திருக்கிறார்கள் என்பதை நினைத்தால்... தமிழினத்துக்கு வெட்கக்கேடு... சிரிக்கிறார்... பேசுகிறார்... சாப்பிடுகிறார்... என்று ஒரு பக்கம் கட்சிக்காரர்களும், நல்லாயிருக்கிறார்... விரைவில் வீடு திரும்புவார் என மாநில, மத்திய அரசியல் கட்சித் தலைவர்களும் நம்மை எப்படியெல்லாம் ஏமாத்தினார்கள்... நாம் அடிமையினமாக இருப்பதால்தான் அறிவில்லாத மனிதர்களாகவும் ஆக்கிவிட்டார்கள். ஒரு மருத்துவன் உண்மையைப் பேச வேண்டும் என்பதைக் கூட நினைவில் கொள்ளாத நிர்வாகம் கோடிகளில் சிக்கி விட்டதை நம்மில் அனைவரும் அறிவோம். இருந்தும் அப்போதெல்லாம் கேள்வி கேட்காமல் மண்ணுக்குள் புதைத்த பின்னர் கேள்வி கேட்கிறோம் அதனால் என்ன பிரயோசனம்...?

வெளிநாட்டுப் பத்திரிக்கைகள் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக எழுதும் போது தமிழக பத்திரிக்கைகள் 'எனக்காக எல்லாம் இழந்தார் சசி', 'என் உயிர் சசி', 'பொதுச் செயலாளர் சசி' என தனி மனித துதி பாடிக் கொண்டிருக்கின்றன. அவர்களைச் சொல்லி குற்றமில்லை. நக்கிப் பிழைப்பதே அவர்களின் வாடிக்கை. விஜயகாந்த் துப்பியதை தவறென்று சொன்னவர்கள் எல்லாம் இன்று அது சரிதான் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். உண்மை பேசும் பத்திரிக்கைகளும் தொலைக்காட்சிகளும் இப்போது இல்லை... இவர்கள் எல்லாம் பணத்துக்கு வாலாட்ட ஆரம்பித்து நாளாகிவிட்டது. உண்மை என்ன... உண்மை என்னன்னு ஆளாளுக்கு கேக்குறீங்களே... அப்படியே உண்மை தெரிந்தாலும் எந்தப் பத்திரிக்கை அதை தைரியமாக வெளியில் கொண்டு வரும் சொல்லுங்கள்.

அண்ணன் மகள் தீபா, இதுவரை எங்கிருந்தார்...? இப்போது எப்படி வந்தார்..? என்றெல்லாம் சிலர் எழுதுகிறார்கள். ரத்த சொந்தங்களை அண்ட விடாமல் ஒரு மனுஷியை வைத்திருந்தார்கள் என்றால் அவர்களின் பலமும் அந்த மனுஷியின் பலவீனமும் வெட்ட வெளிச்சமாகிறதல்லவா...? திரு. நெல்லைக் கண்ணன் அவர்கள் தனது முகநூல் பக்கத்தில் 'ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் போது கூட தீபா, ஜெயலலிதா கூடத்தான் இருந்தார். பின்னர் எப்படி அவர் அவரிடம் இருந்து விலக்கப்பட்டார்' என்று கேட்டிருந்தார். அப்படியானால் அவரை போயஸ் தோட்டத்துப் பக்கம் வரவிடாமல் செய்தது யார்..? அரசியல் சதுரங்கத்தில் அழகாக காய் நகர்த்தியிருக்கிறார்கள்... சகுனிகளை நல்லவர்களென நம்பி உறவுகளைத் துறந்து வாழும் ஒவ்வொருவருக்கும் இந்த மரணம் பல உண்மைகளை உணர்த்தி உணர்வுகளுக்கு உயிரூட்டியிருக்கும்.

சரிங்க, முதல் மரியாதை படத்துல செருப்புத் தைக்கும் தொழிலாளியான வெள்ளைச்சாமி, தன்னோட மகள் இறப்புக்கு காரணமானவன் யார்ன்னு கண்டு பிடிக்க 'எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும்' அப்படின்னு சொல்லிக்கிட்டு திரிவாரு, அது மாதிரி சமூக வலைத் தளங்களில் உண்மை தெரிஞ்சாகணும்ன்னு படிச்சவனும் படிக்காதவனும் எழுதிக் குவிக்கிறார்கள்... பலதைப் பலரும் பகிர்கிறார்கள். எந்த உண்மை தெரிந்தும் இனி ஒன்றும் நடக்கப் போவதில்லை. காவிரித்தாய், நிரந்தர முதல்வர், தங்கத் தாரகை எல்லாம் கூன் பாண்டியர்கள் மெரினாவில் புதைச்சிட்டு நிமிர்ந்து சிரித்ததை நாடே பார்த்தது. இன்னைக்கு உண்மை தெரியணும்ன்னு கேக்குற பயக, நாளைக்கு எங்கள் தமிழகமேன்னு சின்னம்மாவை பெரியம்மாவாக்கி போஸ்டர் ஒட்டப்போற பயகதான் என்பதைச் சொல்லிக் கொண்டு, மூன்று நாள் துக்கம் முடிஞ்சாச்சு... இனியும் அதைச் சுமக்காமல் எப்பவும் போல் களமாடுங்கள்... எல்லா உண்மைகளையும் தன்னுள் அடக்கிக் கொண்டு மெரினாவில் நிம்மதியாகத் தூங்கட்டும் முன்னாள் முதல்வர். 

உண்மைகள் வெளிவரும் காலம் வரும்... அடிமைப்பட்டது போதும்... அறுத்தெரிந்து விட்டு காசுக்கு காலைப் பிடிக்காமல் கௌரவமாக வாழ்வோம்... உண்மை தெரியணும்... உண்மை தெரியணும்ன்னு எழுதித் தள்ளுறோமே அப்படித் தெரிந்தால் என்ன செய்து விடுவோம்..?
-'பரிவை' சே.குமார்.

8 கருத்துகள்:

 1. நல்லதொரு ஆதங்க பதிவு! நீங்கள் சொல்வது சரிதான்! உண்மை தெரிந்தாலும் பச்சாதாபப்பட்டு இப்படி நடந்து விட்டதே என்று எழுதி குவித்துக் கொண்டுதான் இருப்பார்கள் பெரிதாக மாற்றம் ஒன்றும் நிகழ்ந்துவிடப்போவது இல்லைதான்!

  பதிலளிநீக்கு
 2. முடித்த விதம் மிக அருமை. நல்லதொரு கட்டுரை. பாராட்டுகள் குமார்.

  பதிலளிநீக்கு
 3. யாரைத்தான் நம்புவதோ! பேதை நெஞ்சம் என்ற பாடல்தான் நினைவுக்கு வருகிறது.

  பதிலளிநீக்கு
 4. நிதர்ஷனமான உண்மைகள் குமார்!!! அருமையான பதிவு..
  இதே மாதிரி தான் ரூபாய் நோட்டு விவகாரத்திலும் ஏகப்பட்ட சத்தங்கள்... ஏதோ இத்தனை நாள் தேனாறும் பாலாறும் ஓடியது போலவும் இப்போது மோடி எல்லாத்தையும் கெடுப்பது போல் பொங்கல்களும் புலம்பல்களும்... ஹிட்ஸ்,லைக்ஸ் வாங்குறதுக்கு மேல என்ன பெருசா பண்ணிர முடியும்... நல்லது நடக்கும்ன்னு நம்பிக்கையில் ஓட்ட வேண்டியது தான்...

  பதிலளிநீக்கு
 5. நல்ல அலசல், கேள்விகள்..அருமையான கட்டுரை..ஜெஜெயின் பல நடவடிக்கைகள் சரியோ என்றே இப்போது தோன்றுகிறது...இவர்களின் கையில் சிக்கினால்...ஐயகோ!!.தமிழ்நாட்டின் தலைவிதி இப்படி ஆகிப்போனதே ..ஆதங்கம் மேலோங்குகிறது

  பதிலளிநீக்கு
 6. நியாயம் தான்.. ஆனாலும் ஆகக்கூடியது ஒன்றும் இல்லை..
  தளத்தில் கருத்தை பதிவது சிரமம் ஆக இருக்கிறது.. திறப்பது கடினமான உள்ளது..

  பதிலளிநீக்கு

நட்பின் வருகைக்கு நன்றி..!

பகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...