மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

செவ்வாய், 20 டிசம்பர், 2016வெளிநாட்டு இந்தியர்களை ஆழம் பார்த்ததா ஐநூறு ஆயிரம்? (அகல் கட்டுரை)

ந்த மாத அகல் மின்னிதழில் வெளிவந்த எனது கட்டுரை... வாசித்து கருத்துச் சொல்லுங்கள்.


************

Image result for 500

வம்பர்-8 அப்படி ஒரு திடீர் திட்டம் அறிவிக்கப்படும் என்று தெரியாமலேயே எல்லாருக்கும் எப்பவும் போல் விடிந்தது, இதில் ஒரு சில அரசியல்வாதிகள் விதிவிலக்காக இருக்கலாம். அன்றைய தினம் ஐநூறுகளும் ஆயிரங்களும் கடந்து சென்ற தினங்களைப் போல் எல்லா இடத்திலும் வாழ்ந்து கொண்டிருந்தன. இரவு எட்டு மணிக்கு பிரதமரின் அறிவிப்பால் ஸ்தம்பித்தது இந்தியா, இது நல்ல திட்டமா... இல்லை மோசமான திட்டமா என்றோ கள்ளப் பணம், கருப்புப் பணம் ஒழிந்ததா... ஒழியுமா என்றோ தீவிர ஆராய்ச்சி செய்தால் ஆதரவாகவோ எதிர்ப்பாகவோ எழுதும் அரசியல் பதிவாகிவிடும். திட்டம் எப்படியோ அதை நடை முறைப்படுத்திய விவகாரத்தில் சாமானியன் இன்னும் பாதிக்கப்பட்டு வருவது வேதனையான விஷயம் என்பதை மட்டும் சொல்லிக் கொண்டு இதனால் வெளிநாட்டில் வேலை பார்க்கும் இந்தியர்களுக்கு எதுவும் பாதிப்பு வந்ததா என்பதை நண்பர் சத்யா சொல்லச் சொன்னதை மனதில் நிறுத்தி, ஊர் நிலவரம்தான் எல்லாருக்கும் தெரியுமே... இங்கு எப்படின்னு எழுதலாம்ன்னு உக்காந்தாச்சு.

ஐநூறு ஆயிரம் செல்லாதுன்னு சொன்ன அன்னைக்கு இரவு எங்கள் அறையில் எல்லாம் பயங்கர விவாதம்... நல்ல திட்டம்... இதென்ன நல்ல திட்டம் நடுத்தர வர்க்கத்துக்கு பாதிப்பு... கள்ள நோட்டு ஒழியும்... ஒழிச்சி... பெரும் பணக்காரன்கிட்ட இருக்க கருப்பு பணத்துக்கு ஆப்புல்ல... முதல்ல சுவிஸ் பேங்கில வச்சிருக்கிறதை எல்லாம் இந்தியாவுக்கு கொண்டாருவேன்னு சொன்னது என்னாச்சு... பெரும் முதலைகள் தப்பிச்சிரும்... சின்ன மீன்கள்தான் மாட்டிக்கும்... சந்திரபாபு நாயுடு அன்னைக்கே சொல்லிட்டாரு... குஜராத்துல நாலு மாசம் முன்னாடியே சொல்லிட்டானுங்க... அம்பானி அதானியெல்லாம் ரொம்ப ஷேப் ஆயிட்டாங்க... குப்பனும் சுப்பனும்தான் பாதிக்கப்படுவான் என சாப்பாடு இல்லாமல் நாலு முனைத் தாக்குதல் விவாதம் அனல் பறந்தது. முகநூலை நோக்கினால் வெளிநாட்டில் இருக்கும் அண்ணாச்சிகள் சிலர் மோடியை வறுத்தெடுத்துக் கொண்டிருந்தார்கள். ​
 Picture
மறுநாள் அலுவலகம் சென்றால் மலையாளியான ரபீக் 'இது நல்ல திட்டமானு... கள்ளப்பணத்தை அழிக்க சரியான திட்டம்' அப்படின்னு ஒரே சந்தோஷமா சொன்னான். ஆபீஸ் பாயான கர்நாடாகவைச் சேர்ந்த யாசர், 'சூப்பர் திட்டம்... சரியான நடவடிக்கை... இப்படித்தான் செய்யணும்' என்று சொன்னான். குஜராத்தியும் பாம்பேக்காரனும் இது மிகப்பெரிய பாதிப்பை உண்டாக்கும்... தேவையில்லாத வேலை' என்று புலம்பினார்கள். எகிப்துக்காரனான நண்பன் இதென்ன அறிவுகெட்டத்தனம் திடீர்னு இப்படி அறிவிக்கிறது சரியில்லை என்றான். அன்று, அறையில் ரெண்டு நாளைக்கு ஊரில் ஏடிஎம் இருக்காதாம்... நாலாயிரம் மட்டுமே எடுக்கலாமாம் என்ற விவாதங்களும் முகநூல் வாட்ஸ்-அப்பில் ஆளாளுக்கு திரித்து எழுதியதையெல்லாம் வைத்து விவாதம் சூடு பிடித்தது.

இரண்டு மூன்று நாட்களுக்குப் பிறகு, மலையாளி 'மக்கள் படாதபாடு படுறாங்க... இந்தாளு டிரைனுக்கு முன்னால நின்னு செல்பி போடுறான்... இது கேவலமான திட்டம்... மக்கள் பாதிப்பு பற்றி துளி கூட கவலை இல்லாத பிரதமர் நாட்டுக்கு எதற்கு?' என்றான். 'என்னடா நீதான் சூப்பர் திட்டம்ன்னு சொன்னே?' என்றதும் 'நாட்டுல பைசா மாத்த முடியலை... ஏடிஎமில் பணம் இல்லை... அரி (அரிசி) கிடைக்கலை... கடைகள் எல்லாம் மூடிட்டானுங்க... ரொம்ப சிரமமா இருக்காம்' என ஆரம்பத்தில் ஆதரவுக்குரல் கொடுத்தவன் சில நாளில் எதிர்க்க ஆரம்பித்தான். அரபு நாட்டைப் பொறுத்தவரை மலையாளிகளில் பெரும்பாலானவர்கள் இது முட்டாள்தனமான முடிவு என்றுதான் சொன்னார்கள். அவர்கள் எல்லாம் லட்சங்களையும் கோடிகளையும் வீட்டில் வைத்திருப்பவர்கள். ஹவாலா பணம் அதிகம் புழங்குவது சேர நன்நாட்டில்தான் என்பதை நம்மில் எத்தனை பேர் அறிவோம்? எனவே அவர்களுக்கு இந்தத் திட்டம் சுத்தமாக பிடிக்கவில்லை.

கிச்சனுக்கு டீ எடுக்கப் போகும் போது ஆபீஸ்பாய் வந்து இங்கிருந்து 4000 திர்ஹாம் போட்டு விட்டா ஊரில் உன் வங்கிக் கணக்கில் ஒரு லட்சம் போடப்படும். (அன்றைக்கு ஒரு லட்சத்துக்கு 5500 திர்ஹாம் கிட்ட வரும்) வேணுமின்னா சொல்லு இன்னைக்கு நீ பணம் போட்டா நாளை உன் கணக்கில் பணம் ஏறிவிடும் என்றான். அட ஏன்டா அம்புட்டுப் பணம் முதலில் இல்லை... நாளைக்கு செலவுக்கே வழியில்லை... அது போக ஆசைப்பட்டு யாருக்கிட்டயாச்சும் வாங்கிப் போட்டுட்டு, அவன் ஏமாத்திட்டான்னா எவன்கிட்ட போயி புகார் செய்ய முடியும் அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம் என்ற போது நான் ஒரு லட்சம் போட்டிருக்கு என் மச்சான் ரெண்டு லட்சம் போட்டிருக்கு... நிறையப் பேர் போட்டாச்சு' என்றான் சர்வ சாதாரணமாக. கருப்பை எவ்வளவு எளிமையாக வெள்ளை ஆக்குறானுங்க பாருங்க... இதெல்லாம் சுத்தப் பொய் அதல்லாம் முடியாது என மோடிஜிக்கு ஆதரவாய் நாம சொன்னாலும் நம்ம கவுன்சிலர் கூட வரிசையில் வந்து நிற்கலை ஆனாலும் நவம்பர் எட்டுக்கு மேல் செலவு செய்து கொண்டுதானே இருக்கிறார்கள் என்று நினைக்கும் போது இதெல்லாம் சாத்தியமே...

Image result for 1000 dhs

இப்ப ஊருக்கு பணம் அனுப்புறதில் பிரச்சினை... அவசரத் தேவைக்கு பணம் அனுப்பினாலும் அங்கு முதலில் 4000, அப்புறம் 2000 என்றாகிவிட, ஊரில் வீடு கட்டுபவர்கள்... திருமணச் செலவுக்காக மகனின் சம்பளத்தை எதிர்பார்ப்பவர்கள், வைத்தியச் செலவு... இப்படியான சூழலில் இருப்பவர்களுக்கு மிகப்பெரிய சிக்கல் ஏற்பட்டது. கேரளாவில் என் நண்பனின் சகோதரி திருமணம் இதனால் நிறுத்தப்பட, அவன் ரொம்ப புலம்பிக் கொண்டிருந்தான். நண்பர் ஒருவர் அவசரமாக பணம் அனுப்ப வேண்டிய சூழல், வங்கி மூலம் எடுப்பதில் சிரமம் என்பதால் வெஸ்டர்ன் யூனியன் மூலமாக அனுப்பினால் மொத்தமாகப் பெற முடியும் என நினைத்தோம், அப்போது அதன் மூலம் அனுப்பிய நண்பர் ஒருவர் அதிலும் சிக்கல் இருப்பதைச் சொன்னார்... ‘மொத்தமாகக் கொடுக்க முடியாது... அரசு நிர்ணயித்தபடி கொஞ்சம் கொஞ்சமாக ரெண்டு மூணு நாட்களில் வாங்கிக்கங்க என்று சொல்லி விட்டார்களாம்’ என்றார், சரி அருகில் இருந்த யுஏஇ எக்ஸ்சேஞ்சில் கேட்டு வருவோம் எனச் சென்றோம்... அவர்களும் அப்படித்தான் பணம் கொடுப்பதாகச் சொன்னார்கள். மொத்தமாக வேண்டும் என்றால் வங்கிக் காசோலையாக கொடுப்பார்கள்... மாற்றி எடுத்துக் கொள்ளலாம் என்றார்கள்.

மலையாளி ரொம்பப் புலம்பினாலும் அடுத்த நாள் சந்தோஷமாக இருந்தான்... என்னடா ஊரில் பணமெல்லாம் மாத்திட்டீங்களா? என்றதும் 'அவசரமா ஐம்பதாயிரம் பணம் அனுப்ப வேண்டிய நிலை... வங்கி மூலமோ, வெஸ்டர்ன் மூலமோ அனுப்பினாலோ அங்கு பணம் எடுப்பதில் சிக்கல்... அதான் உண்டி மூலமாக அனுப்பிட்டேன் என்றான். உண்டியிலா..? இப்போ அங்க மொத்தமா பணம் கொடுத்துருவானா என்றதற்கு 'நேற்று இரவு கொடுத்தேன். 560 திர்ஹாம் 10,000, (எக்ஸ்சேஞ்ச் மூலமா அனுப்புனா 540 இருந்தது), எக்ஸ்சேஞ்சைவிட அதிகம் என்றாலும் சர்வீஸ் சார்ஜ் 20 திர்ஹாம் கொடுக்கிறதை வைத்துப் பார்த்தால் இது மோசமில்லைதானே... நேற்று ராத்திரி கொடுத்தேன்... இன்னைக்கு காலையில 2000 ரூபாய் நோட்டா அம்பதாயிரம் வீட்டுல கொடுத்துட்டான்... வங்கியில போயி தொங்கிக்கிட்டு நிக்க வேண்டிய அவசியமில்லை என்றான்.

பெரும்பாலும் மலையாளிகள் உண்டியில் அனுப்பி விடுகிறார்கள். இங்கு லட்சங்களை வாங்கிக் கொண்டு அங்கு லட்சத்தைக் கொடுக்க ஆளிருக்கு. நம்ம ஊருக்கும் உண்டி இருக்கத்தான் செய்கிறது. அரசு வெளிநாட்டில் இருந்து வரும் பணத்திற்கு சேவை வரி விதிக்கப் போவதாய் பேச்சு அடிபடுகிறது அப்படிச் செய்யும் பட்சத்தில் 500 க்கும் 600 க்கும் கிளீனிங் கம்பெனிகளில் வேலை செய்பவர்கள் ரொம்ப பாதிக்கப்படுவார்கள் என்றாலும் பெரும்பாலான பண பரிவர்த்தனை உண்டி மூலமே நிகழும். அரசுக்கு எக்ஸ்சேஞ்ச் மூலமாக கிடைக்கும் சேவை வரியும் கிடைக்காமல் போகும்.

இன்றைய நிலையில் பண மாற்றம் கொடுத்த வீழ்ச்சியினால் திர்ஹாமுக்கு எதிரான பண மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்திருக்கிறது. (1 திர்ஹாம் = 18.68 ரூபாய் வரை சென்று இன்று 18.60 ஆயிருக்கிறது). தங்கத்தின் விலை கிராமுக்கு 150 திர்ஹாம் வரை இருந்தது 135 திர்ஹாமாக குறைந்திருக்கிறது. பெரிய பதவியில் இருப்பவர்கள் பண மதிப்பைக் கருத்தில் கொண்டு வங்கிகளில் லோன் எடுத்து ஊருக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள். ஐநூறு ஆயிரம் ஒழிப்புத் திட்டத்தால் இங்கு அதிகம் பிரச்சினை இல்லை என்றாலும் இங்கிருந்து அனுப்பும் பணத்தை உடனே பெற முடியாத நிலை ஊரில்... உண்டிகளும் கருப்புப் பணத்தை வெள்ளையாக்க முயல்பவர்களும் இதை சரியாக பயன்படுத்திக் கொண்டு விட்டார்கள் என்பதே உண்மை. ஐநூறு ஆயிரத்தை முடக்க இரண்டாயிரத்தை கையில் எடுத்த போது அதன் பின்னே வரும் பிரச்சினைகள் குறித்து சரியான திட்டமிடல் இல்லாதது பண முதலைகளை காப்பாற்றி சாமானியர்களை பாதித்திருக்கிறது என்பதே உண்மை.

இங்கும் பலபேர் கையில் நம்ம பணமான ஐநூறு ஆயிரத்தில் சில ஆயிரங்களை வைத்துக் கொண்டு எப்படி மாற்றுவது எங்கு தவிக்கிறார்கள். இங்கு பழைய நோட்டை மாற்றி புது நோட்டுக் கொடுக்க எந்த எக்ஸ்சேஞ்சும் முன்வரவில்லை. பணப் பிரச்சினை சில நாள் காரசாரமான விவாதத்தை முன்னெடுக்க வைத்தது என்றாலும் தற்போது அது குறித்தான பேச்சுக்கள் குறைந்து பெட்ரோல் விலை குறைவால் புராஜெக்ட்ஸ் எல்லாம் நிறுத்தப்பட்ட நிலையில் வேலை நீடிக்குமா என்ற கவலை மீண்டும் எல்லாருடைய மனதிலும் ஆட்கொள்ள யுஏஇ இன்று தனது 45 வது தேசிய நாளை கொண்டாடிக் கொண்டிருக்கிறது. சில வருடங்களுக்கு முன்னர் இருந்த ஆர்ப்பாட்டம் இல்லை என்றாலும் தேசிய தினம் வாண வேடிக்கையுடன் நகர்ந்து கொண்டிருக்கிறது.
-'பரிவை' சே.குமார்.

7 கருத்துகள்:

 1. நேற்றிலிருந்து புதிய சட்டம் போட்டிருக்கிறார்கள். ஐயாயிரம் ரூபாய்க்கு மேல் ஒரு கணக்கில் போடமுடியாது. மேலே போட்டால் வாங்கி அதிகாரி "பேட்டி" எடுப்பார்! சாதக, பாதகங்களையும் வெற்றி, தோல்விகளையும் அலச கொஞ்ச நாள் போகவேண்டும்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஸ்ரீராம்! போடப்படாத ரூபாயை நம்ம மக்களுக்கு மாற்றவா தெரியாது...இது இன்னும் பதுக்கலுக்கும், சில பாதகங்களுக்கும்தான் வழி வகுக்கிறது...

   கீதா

   நீக்கு
 2. ஒரு கவுன்சிலர் கூட வரிசையில் நிற்கவில்லை
  ஆனாலும் செலவு செய்துகொண்டிருக்கிறார்கள்
  கோடிக் கணக்கில் புதிய 2000 நோட்டுக்கள் பறிமுதல் என செய்திகள் வருகின்றன
  வங்கிப் பக்கமே போகாமல் கோடிக் கணக்கில் எப்படி புதிய நோட்டுகள்
  அடித்தட்டு மக்களை அல்லல் பட வைக்கும்இதுபோன்ற திட்டங்கள்
  தேவையே இல்லை என்பதே என் கருத்து நண்பரே

  பதிலளிநீக்கு
 3. உண்டி விசயம் இப்போது தான் தெரியும் தோழர்...

  பதிலளிநீக்கு
 4. வெளிநாட்டு இந்தியர்களின் மனநிலையையும், செயல்நிலையையும் அப்படியே சொன்னதற்கு நன்றி. ஒரு புதிய அரசு வரும்போது, மறுபடியும் பண பரிவர்த்தனை தொடங்கி விடும்.

  பதிலளிநீக்கு
 5. இந்தத் திட்டம் நல்ல திட்டம் என்றாலும், சரியான விதத்தில் ஆராய்ந்து எடுக்காமல் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று எடுத்திருப்பதால் தோல்வியடைந்த திட்டமே! பாதிப்பு சாமானியர்களுக்கே.

  கேரளத்தில் ஹவாலா பணம் விளையாடுவதால்தான் எதிர்ப்பு நீங்கள் சொல்லியிருப்பது போல். வெளிநாட்டுக்கார சாமானியர்களுக்கும் இதனால் பாதிப்புத்தான்..

  நல்ல பதிவு.

  கீதா

  பதிலளிநீக்கு

நட்பின் வருகைக்கு நன்றி..!

பகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...