மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வெள்ளி, 4 நவம்பர், 2016

நந்திபுரத்து நாயகி

ல்கியின் பொன்னியின் செல்வனில் வாழ்ந்த சோழ நாட்டு நட்சத்திரங்களை...  அதில் அவர் விட்ட இடத்தில் இருந்து ஆதித்த கரிகாலனைக் கொன்றவர்களுக்கு தண்டனை கிடைத்ததா..? வந்தியத்தேவன் - குந்தவை காதல் திருமணத்தில் முடிந்ததா..? அருண்மொழிவர்மன் ஆட்சிப் பீடத்தில் அமர்ந்தாரா..? என்பதை தன் பாணியில்  நந்திபுரத்து நாயகியில்  கதை சொல்லியிருக்கிறார் கலைமாமணி விக்கிரமன்.

Image result for நந்திபுரத்து நாயகி

கல்கியின் பொன்னியில் செல்வனில் பலரைக் கவர்ந்த வல்லவரையன் வந்தியத்தேவன்... துறுதுறுப்புக்கு பெயர் போன இளைஞன்... வேகமும் விவேகமும் கொண்டவன்... அதிபுத்திசாலி...  துடிப்பான இளைஞனாகப் பார்த்த வந்தியத்தேவனை உடையாரில் வயதானவனவராக, குந்தவையின் அன்புக் கணவராக,   இராஜராஜனுக்கு உறுதுணையாக இருப்பவராக பார்க்க முடியும்.  ஆனால் பொன்னியின் செல்வனில் வந்தியத்தேவன் குந்தவை திருமணம் குறித்து எதுவும் சொல்லியிருக்கமாட்டார் என்பதால் அப்போது வாசித்தவர்கள் இருவரும் இணைந்தார்களா... இல்லையா என்பதை அறிய ஆவலாய் இருந்திருப்பார்கள்.  அதை இளைய பிராட்டி குந்தவையை மையமாக வைத்து இந்த நாவலில் பூர்த்தி செய்திருக்கிறார் விக்கிரமன்.

சுந்தரச்சோழர் உடல் நலமில்லாத நிலையில்... ஆதித்த கரிகாலன் பாண்டிய ஆபத்துதவிகளால் கொல்லப்பட்ட பின் மதுராந்தகச் சோழருக்குத்தான் அரசுரிமை என்ற குரல்கள் ஓங்கிய நிலையில் அருண்மொழிவர்மன் தான் பட்டம் சூட்டிக் கொள்ளாமல் மதுராந்தகருக்கு (சேந்தன் அமுதன்) பட்டம் சூட்டி வைப்பதாக கல்கி சொல்லியிருப்பார். ஆதித்த கரிகாலன் கொலைச் சதியில் இந்த மதுராந்தகருக்கும் பழுவேட்டயர்களுக்கும் தொடர்பு உண்டு என்பதாகவும் பொன்னியின் செல்வன் சொல்லிச் செல்லும். ஆனால் சுந்தரச் சோழருக்குப் பிறகு அருண்மொழிவர்மன் ஆட்சிக்கு வர 12 ஆண்டுகள் ஆகும். அதுவரை ஆட்சிப் பீடத்தில் இருந்த மதுராந்தகர் பற்றி வரலாற்றுக் குறிப்பில் சரிவர இல்லை என்பதாலும் அந்தக் காலத்தில் சோழ சாம்ராஜ்யத்தில் எந்த குறையும் இல்லை என்பதாலும் மதுராந்தகர் நல்லவராகவே இருந்திருக்க வேண்டும் என்பதால் அவரை நல்ல மனிதராகவே காட்டியிருப்பதாக தனது முன்னுரையில் சொல்லியிருக்கிறார் விக்கிரமன்.

மதுராந்தகர் அரியணையில் அமர, செம்பியன் மாதேவியிடம் பேசி அவரைச் சம்மதிக்க வைக்கும் குந்தவை தனது தம்பி அருண்மொழிவர்மனை கடல்க டந்த நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளச் சொல்கிறாள். அப்போது அவருக்கும் வானதிக்கும் திருமணமாகி இருக்கிறது. வானதியை தன் கண்ணின் இமைபோல் பார்த்துக் கொள்கிறாள்  இளம் மனைவியைப் பிரிந்து... ஏறத்தாழ பத்தாண்டுகளுக்கு மேல் கடல் பயணமாக எங்கெங்கோ வணிகர் போல் சென்று அருண்மொழிவர்மர் திரும்பும் நேரம் சோழப் பேரரசு கடல் கொள்ளையர்கள், பாண்டிய ஆபத்துதவிகள், பார்த்திபேந்திரன் என நிறைய பிரச்சினைகளைச் சந்திக்கிறது.

இந்தப் பத்தாண்டு காலத்தில் வந்தியத்தேவன் எங்கிருந்தார். என்றால் பாதாளச் சிறையில்... ஆம்... ஆதித்த கரிகாலனைக் கொலை செய்தது தொடர்பாக பார்த்திபேந்திரப் பல்லவனின் சதிக்கு சின்னப்பழுவேட்டயரையும் உடந்தையாகி சிறையில் தள்ளிவிடுகிறார்கள். குந்தவை வெளியில் வாட, வந்தியத்தேவனை பாதிக்கதை வரை சிறையில் வாட வைத்து விடுகிறார். சிறையிலிருந்து வெளியில் வந்து குந்தவையோடு முறைத்துக் கொண்டு திரிகிறார். இருவரையும் இணைக்கவே அருண்மொழி நந்திபுரத்துக்கு தனித்தனியாக அனுப்புகிறான். அங்குதான் கோபதாபங்கள் தீர்ந்து மீண்டும் காதலில் விழுகிறார்கள்.

சுந்தரச் சோழரின் இறப்பு, வந்தியத்தேவன் சிறையிலடைப்பு என எதுவும் தெரியாமல் கடல்கடந்து முல்லைத் தீவுக்குப் போகும் அருண்மொழிவர்மனுக்கு அங்கிருக்கும் இன்பவல்லி மீது காதல் ஏற்படுகிறது. இன்பவல்லியோ நாட்டியத் தாரகை... பாடல் அரசி... அங்கிருக்கும் சில நாட்கள் இன்பவல்லியோடு இன்பமாய் கழிய, திரும்பி வந்து உன்னை அழைத்துச் செல்வேன் எனச் சொல்லிச் சென்றவர் வருடங்கள் கடந்து முல்லைத்தீவு வந்தபோது அது கொள்ளையர்களின் வெறிக்கு வீழ்ந்து கிடக்கிறது... இன்பவல்லி மட்டுமல்ல... அங்கிருந்த மக்கள் யாருமே இல்லை.

சின்னப்பழுவேட்டயரின் மகளை மதுராந்தகர் மனமுடித்திருந்தாலும் அவளுக்கு பட்டத்து ராணியாகும் வாய்ப்பு இல்லை.... சரி அவளது குழந்தை நாளை அரசாளுவான் என்றால் அதற்கும் வழியில்லை... குழந்தையே இல்லை.... இதனால் பழுவேட்டயர்கள் வம்சம் சோழ ராஜ்ஜியத்தில் கோலோச்ச வேண்டும் என்று நினைக்கும் சின்னப்பழுவேட்டையர் தன் அரவணைப்பில் வளரும் பெரியபழுவேட்டையரின் மகளான பட்டவன்மாதேவியை அடுத்து அரசணையில் ஏறப்போறவருக்கு மணமுடிக்க நினைக்கிறார். அடுத்தது யார் மதுராந்தகனின் மகன் மதுரனா...? அருண்மொழிவர்மனா...? எனத் திண்டாடி... மதுரன்தான் அடுத்து அரசாளவேண்டும் என்று தூபமிட, பட்டவன்மாதேவியோ மதுரனை விரும்பி பின்னர் சிற்றப்பனின் ஆசைக்கு இணங்க, ராஜராஜனை விரும்புவதா..?வானதிக்கு துரோகம் செய்யலாமா...?  என்றெல்லாம் யோசிக்கிறாள்.

தனிநாடு வேண்டும் என்ற ஆசையில் மீண்டும் பல்லவ வம்சத்தை நிலைநாட்ட, பல்லவக் கொடி பறக்கவிட ஆசைப்பட்டு பார்த்திபேந்திரன் படைகளைத் திரட்ட, வல்லவரையன் தவறிழைக்காதவன்... நாம்தான் பார்த்திபேந்திரன் சொல்லைக் கேட்டு தவறிழைத்து விட்டோம் என்பதை அறிந்து சிறையிலிருந்து வந்தியத்தேவனை வெளியில் கொண்டு வரும் சின்னப்பழுவேட்டையர் தானே முன்னின்று பார்த்திபேந்திரனுடன் மோதுகிறார். பார்த்திபேந்திரன் இறக்க, பழுவேட்டையர் காயமடைந்து மரணத் தருவாயில் தன் மகளைக் கட்டிக் கொண்டு பட்டத்து அரசியாக்க வேண்டும் எனச் சத்தியம் வாங்கி இறக்க, பட்டவன் மாதேவியை கரம் பிடிக்க வேண்டிய சூழல்... வானதியின் நிலை என்ன...? இன்பவல்லி என்ன ஆனாள்...? பட்டவன் மாதேவி பட்டத்து அரசியானாளா...? எனப் பயணப்படும் கதையில் நந்திபுரத்துக்கும் தஞ்சைக்கும் குந்தவை மாறிமாறி பயணித்துக் கொண்டிருக்கிறாள்.

இதற்கிடையே ஆதித்த கரிகாலனைக் கொன்ற பாண்டிய ஆபத்துதவிகள் ரவிதாசன் தலைமையில் சோழப் பேரரசின் முக்கியத் தலைகளை வீழ்த்த கங்கணம் கட்டித் திரிகின்றனர். வீரபாண்டியனின் மனைவியா... மகளா என்பதை சரியாக விளங்கிக்கொள்ள முடியாமல் பொன்னியின் செல்வனில் வரும் நந்தினி (இங்கு இவரை வெளியில் காட்டாமல் திரைக்குள் வைத்துவிடுகிறார் அதனால் பெயர் எதுவுமில்லை... தலைவி என்பதாய்ச் சொல்கிறார்... இறுதியில் அருண்மொழிவர்மனை சகோதரா என அழைத்து ஓலை அனுப்புகிறாள்... அப்படி எனில் சுந்தரச்சோழர் காதல் கொண்ட ஊமைராணியின் மகளாகவும் இருக்கலாம் என்றும் தோன்றுகிறது) வளர்க்கும் பாண்டியனின் மகன் அமரபுஜங்கன் தலைமையின் கீழ் காட்டுக்குள் அதற்கான நேரத்தை எதிர்பார்த்து தங்களைச் தாயார் செய்கிறார்கள். இதற்காக சேரனின் உதவி நாடிப் போகும் அமரபுஜங்கனுக்கு சேரனின் மகள் மீது காதல்... ஆனால் அதை அப்படியே விட்டுவிட்டார்.

பாண்டிய ஆபத்துதவிகளுக்கு உதவுவதாய் ஒரு காளமுகர் வருகிறார். அவரை ராஜராஜன் பார்த்துப் பேசும் போதே நமக்கு யாரென்று தெரிந்து விடுவதால் அந்த சஸ்பென்ஸ் உடையும் போது இதுதான் தெரியுமே என்றுதான் தோன்றுகிறது. அதேபோல் இன்பவல்லிக்கு சோழப் பேரசுக்கும் தொடர்பு இருப்பதாய் சொல்லி, அவளது அப்பா குறித்துப் பேசி... அவர்தான் இன்பவல்லியை குழந்தாய் என அரவணைத்து சோழ தேசத்தில் பாதுகாக்கிறார்... ஆனால் இறுதிவரை அவர்தான் அவளின் அப்பா எனச் சொல்லாமல் விட்டது ஏனோ தெரியவில்லை... நந்திபுரத்து நாயகி யார்...? குந்தவைதானே... எனவே கதை அவரைச் சுற்றியே நகர்கிறது என்றாலும் பொன்னியின் செல்வன் போல் முடிச்சுக்களும் அதை அவிழ்த்துப் பயணிக்கும் அழகும் இதில் இல்லை.

உடையாரின் பாலகுமாரன் கிளைக்கதைகளால் படிப்பவர்களுக்கு அயற்சியைக் கொடுத்தார் என்றால் இதில் விக்கிரமன் இரண்டு கதாபாத்திரங்கள் சந்திக்கும் போது அவர்களுக்கு அதற்கு முன்னர் என்ன நடந்தது என்பதைச் சொல்லிச் செல்வது விறுவிறுப்புக்குத் தடை ஏற்படுத்துகிறது. இது இதில் மட்டுமில்லை... அவரின் கதைகளில் எல்லாம் இப்படித்தான் கதை சொல்வார் என்பதை மற்றொரு கதையான தெற்குவாசல் மோகினி வாசிக்கும் போது அறிய முடிந்தது. 

உடையாரில் வரும் பஞ்சவன் மாதேவி, சிதம்பரத்தில் நடனமாடும் தேவரடியாள் வகுப்பைச் சார்ந்த பெண் என்றும் அவரை இராஜராஜன் பார்த்து, சிநேகித்து திருமணம் செய்து கொள்ள, பட்டத்து இளவரசி பட்டவன் மாதேவி, உள்ளம் கவர்ந்த வானதி (வானவன் மாதேவி) இருந்தாலும் அரசியலில் இராஜராஜனுக்கு பக்க பலமாக இருந்தவர் பஞ்சவன்மாதேவிதான்... தஞ்சைக் கோவிலில் இருக்கும் 107 சிவ நடன சிற்பங்களுக்கு மாதிரியாக நின்றவர் பஞ்சவன்மாதேவிதான்... அவருக்கு இராஜேந்திர சோழன் ஒரு கோவில் கட்டினான் அதற்கு கல்வெட்டுச் சாட்சியமும் கோவிலும் இருக்கு என்று சொல்லியிருப்பார். அவரைத்தான் விக்கிரமன் இன்பவல்லி எனச் சொல்கிறார் என்பதை கதையின் போக்கில் அறியலாம்.

ஆரம்பம் முதல் வந்தியத்தேவனை சிறையில் வைத்து... பின்னரும் குந்தவையுடன் சேராமல் நம்மைத் தவிக்க வைத்து... இருவரும் நந்திபுரத்தில் தங்கியிருக்க, சரி இனி திருமணம்தான் என்று நினைக்கும் போது ரவிதாசனிடம் மாட்ட வைத்து... எப்படியோ இறுதியில் இருவரையும் உல்லாசப் படகில் ஏற்றி அனுப்பி வைத்துவிட நந்திபுரத்து நாயகி வானதியை இழந்து சுபமாய் முடிகிறது.

அருண்மொழிவர்மனை குந்தவை உள்ளிட்ட அனைவரும் அவர்... இவர்... என மரியாதையுடன் அழைப்பதாய் எழுதிய ஆசிரியர் கூட மரியாதையாய்த்தான் எழுதியிருக்கிறார். வந்தியத்தேவனை மட்டும் அவன் இவன் என்றே எழுதியிருக்கிறார். மன்னர்களுக்கு இருக்கும் மரியாதை சிற்றரசர்களாக இருந்து... அதை இழந்த பரம்பரைக்கு இல்லை போலும்.

அது என்னவோ தெரியலை எல்லா வரலாற்றுப் புதினங்களிலும் கண்டவுடன் காதல் வந்துவிடுகிறது. உதவி கேட்டு சேரநாடு போகும் பாண்டியனுக்கு சேரன் மகள் மீது பார்த்த மாத்திரத்தில் காதல்... படை வீரன் சங்கரத்தேவனுக்கு தன் அன்னையின் தோழி மகளும் குந்தவையின் வேலைக்காரப் பெண்ணுமான சுமதி மீது பார்த்ததும் காதல்... மதுரனைப் பார்த்ததும் மயங்கும் பட்டவன்மாதேவி...  அருண்மொழிவர்மனைப் பார்த்த மாத்திரத்தில் இன்பவல்லிக்கு காதல்.... இவை எல்லாமே கதையின் சுவை கூட்ட மட்டுமே என்பதுதான் உண்மை... வரலாற்றில் மட்டுமல்ல.... இன்றைய வாழ்விலும் கூட தமிழ்பெண்கள் பார்த்த மாத்திரத்தில் வீழ்ந்து விடுவதில்லை... தமிழ் சினிமா இதில் விதிவிலக்கு.

சோழர்களின் வரலாற்றை மையமாகக் கொண்ட புதினங்களை வாசித்ததில் கல்கிதான் முதலிடத்தில் நிற்கிறார். அதற்கான காரணம் கல்கி கதையை அதன் போக்கில் அழகிய முடிச்சிட்டு அந்த முடிச்சை நாசூக்காக அவிழ்த்து... முன்னே பின்னே என்று அலையாமல் நேர்த்தியாய் நகர்த்தியமையால்தான் பொன்னியின் செல்வன் காலம் கடந்தும் கவர்ந்து இழுக்கிறது. பாலகுமாரனோ உடையாரில் தஞ்சைக் கோவில் கட்டுமானப் பணிகளை மிகச் சிறப்பாகச் சொல்லியிருந்தாலும்... ஒற்றன் என்றால் ஒரு கதை... வேளாளன் என்றால் ஒரு கதை என ஒவ்வொன்றிற்கும் ஒரு கிளைக்கதை வைத்து பக்கங்களை நிரப்பி வாசிப்பில் அயற்சியை ஏற்படுத்திவிட்டார். அதானாலேயே உடையார் என்றால் பலர் காத தூரம் ஓடுவதைப் பார்க்க முடிகிறது.  விக்கிரமனோ எழுத்தில் கவர்ச்சி காட்டினார் என்றால் ஒருவரை ஒருவர் சந்திக்கும் போதோ... இல்லை ஒருவரைப் பற்றிய கதை பயணிக்கும் போதே அங்கு வருவதற்கு முன்னர் நிகழ்ந்ததைச் சொல்ல ஆரம்பித்து மீண்டும் நிகழ்காலப் புள்ளிக்கு வருகிறார். இது அழகாய் நகரும் தேருக்கு கட்டை கொடுத்து நிறுத்துவது போல ஆகிவிடுவதால் முன்னோக்கி பின்னோக்கி நகர்வதில் கதை ஓட்டத்தில் தொய்வு ஏற்பட்டுவிடுகிறது. நரசிம்மாவோ மிகச் சிறப்பாய் கற்பனை செய்து தமிழ் சினிமாவை மிஞ்சும் விதமாக கதை அமைத்து... பொன்னியின் செல்வனுக்கு எதிர்மறையாய் களம் அமைத்து வாசித்தவரை இனி வாசிப்பே எனக் கேட்கவைத்து விட்டார்.

நந்திபுரத்து நாயகியில் வந்தியத்தேவன், குந்தவை, வானதி, மதுராந்தகர், பழுவேட்டையர், சம்புவரையர், மலையமான், இராஜராஜன், செம்பியன்மாதேவி, ரவிதாசன், பிரம்மராயர் என எல்லாரும் இருந்தும்... இராஜராஜன் கடல் கடந்து செல்வது முதல் இராஜேந்திரன் பிறப்பு வரை சென்றாலும் ஏனோ வாசிக்கும் ஆவலை அதிகம் தூண்டாமல் மெல்லத்தான் பயணிக்கிறது.
-'பரிவை' சே.குமார்.

5 எண்ணங்கள்:

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

நானும் வாசித்திருக்கிறேன் நண்பரே
ஆனால் பல ஆண்டுகளுக்கு முன்
அருமையான விமர்சனம்
நன்றி நண்பரே
தம +1

KILLERGEE Devakottai சொன்னது…

விமர்சனம் நன்று தொடரட்டும் வாசிப்பு.

”தளிர் சுரேஷ்” சொன்னது…

இரண்டு வருடங்கள் முன் இந்த நாவலை சென்னை புத்தக கண்காட்சியில் வாங்கி வாசித்து ஏமாந்து போனேன்.படிக்க அயர்ச்சியூட்டும்.நல்லதொரு விமர்சனம். உடையார் இன்னும் வாசிக்கவில்லை! நரசிம்மாவின் சங்கதாரா வாசித்தேன். அதீத கற்பனை என்றாலும் அதில் ஓர் விறுவிறுப்பு இருக்கும். நந்திபுரத்து நாயகியில் அது சுத்தமாய் மிஸ்ஸிங்! நன்றி!

ஸ்ரீராம். சொன்னது…

ந.நா இன்னும் படிக்கவில்லை. சங்கதாரா என்னால் ரசிக்க முடிந்தது.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

தொடரும் உங்கள் வாசிப்பு நல்ல விஷயம். புத்தகங்களை இப்போதெல்லாம் படிக்க முடிவதில்லை. வலைப்பூக்களில் வரும் நண்பர்களின் பதிவுகளையும் தொடர்ந்து படித்து பதினைந்து நாட்களுக்கு மேல் ஆகிறது.... பணிச்சுமை, பயணம் என சூழல் இருக்க, இதிலிருந்து விடுபட இன்னும் ஒரு வார காலத்திற்கும் மேல் ஆகும் எனத் தோன்றுகிறது.

ஒரு விஷயம் - இந்தப் புதினங்களை தரவிறக்கம் செய்து படிக்கிறீர்களா இல்லை அச்சுப் புத்தகங்களா?

தொடரட்டும் வாசிப்பனுபவங்கள்....