மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

புதன், 5 அக்டோபர், 2016

வரலாற்றுப் புதினங்களால் குழப்பமே மிச்சமா?

Image result for குந்தவை நாச்சியார்

'என்னப்பா திடீர்ன்னு வரலாற்று நாவல்கள் படிக்கிறேன்னு இறங்கிட்டே... என்னாச்சு உனக்கு...?' என்ற நண்பரின் கேள்விக்கு 'அட வரலாறை அறிந்து கொள்வோமேன்னுதான்...' மெல்ல இழுத்தேன்.

'பொன்னியின் செல்வன்... உடையார்.... சங்கதாரா... என வரிசையாக சோழ வரலாற்றுக்குள் மூழ்கி எழுத்தியே முத்தெடுத்தியா..? அடுத்தது என்ன நந்திபுரத்து நாயகியா...?'

'இல்ல கடல் புறா பக்கமாகப் போகலாம்ன்னு நினைக்கிறேன்...'

'ஏன் என்னாச்சு... சோழம்... சோழம்ன்னு ஓடினே.... நந்திபுரமும் வாசிச்சிட வேண்டியதுதானே...?'

'அய்யய்யோ இப்ப அதையும் வாசிச்சா நான் யாருன்னே மறந்து போகுமப்பா... முடியல... ஆளாளுக்கு ஒரு கதை சொல்லி இனி வரலாற்று புதினம் வாசிப்பே... வாசிப்பேன்னு சுளீர் சுளீர்ன்னு அடிக்கிறாங்கப்பா... கடல் புறா சோழனோடு பயணித்தாலும் இளைய பல்லவனைச் சுற்றி பிண்ணப்பட்ட கதையாம்...'

'ஹா.. ஹா.... அப்பவே சொன்னேன்... புதினங்கள் எல்லாம் கற்பனையே... அதில் வரலாறுங்கிற ஊறுகாயை வைத்து பெரிய விருந்தே சமைப்பாங்கன்னு கேட்டாத்தானே....'

'சொன்னே.... இருந்தாலும் ஏதோ ஒரு ஆசையில வாசிச்சேன்... முடியல...'

"என்னாச்சு...?'

'கல்கி... பாலகுமாரன்... டி.ஏ.நரசிம்மன்... மூன்று பேரும் எடுத்திருந்த களம் சோழர்கள்தான்... ஆனால் நம்மளை சுழற்றிச் சுழற்றி அடிச்சிட்டாங்க...'

'ம்... அவங்க அவங்க எண்ணத்தில் என்னமாய் நினைத்தார்களோ அதை எழுதியிருப்பாங்க'

'கல்கியும் பாலகுமாரனும் கொஞ்சம் ஒத்துப் போனால் நரசிம்மன் தள்ளி நிற்கிறார்.'

"ஹா...ஹா... மூவருக்கும் இடையில் வித்தியாசம் என்ன...? சொல்லு...'

'ஆதித்த கரிகாலன் சம்புவரையர் மாளிகையில் இறந்தார் என்று கல்கியும்... ஆற்றில் பிணமாக மிதந்தார் என்று பாலகுமாரனும் சொல்ல, தஞ்சை மாளிகையில் கொலை செய்யப்பட்டு சம்புவரையர் மாளிகைக்கு கொண்டு செல்லப்பட்டதாக நரசிம்மன் சொல்றார்...  '

'ம்... '

'கல்கி எடுத்தது பொன்னியின் செல்வனான அருண்மொழியோட கதை... அதனால அவர் ஆதித்த கரிகாலன் பின்னே அதிகம் பயணிக்கலை... பாலகுமாரன் எடுத்தது தஞ்சைக் கோவில் கட்டும் கதை... இதுவும் இராஜராஜனான அருண்மொழியோட கதை என்பதால் ஆதித்த கரிகாலனோட இறப்பை மட்டுமே சில இடங்களில் சொல்றார்... ஆனா நரசிம்மர் ஆதித்த கரிகாலம் இறப்பின் மர்மத்தை உடைக்கிறேன்னு தமிழ் சினிமாவைவிட ரொம்ப மோசமா எழுதியிருக்கிறார்.... இது வரலாற்று உண்மைங்கிறதை ஏற்றுக்க முடியலை... என்னைப் பொறுத்தவரை வரலாறு இங்கே கொல்லப்பட்டுவிட்டது.'

'ம்... அப்புறம்...?'

'ஆதித்த கரிகாலனின் உற்ற தோழன் வந்தியத்தேவன் என கல்கியும்... சோழநாடு போனால் பிழைத்துக் கொள்ளலாம் என வந்தவன் என பாலகுமாரனும்... வீரபாண்டியனைக் கொல்ல உதவி செய்து ஆதித்தனுக்கு நண்பனாகி... சோழ தேசத்தை அழிக்க வந்தவன் என்று நரசிம்மனும் சொல்றாங்கப்பா... வந்தியத்தேவன் மிக நல்லவர் என்று படித்ததை எல்லாம் மாற்றி... வில்லனாக்கி... முடியலை... அதுவாவது பரவாயில்லை.. குந்தவையோடு காதல் கணவனாய் வாழ்ந்தவர்ன்னுதான் வரலாற்றுக் குறிப்பு.. ஆனா அவரு வல்லத்துல இன்னொரு திருமணம் பண்ணி அங்கு அதிகம் தங்கியதாகவும்... குந்தவையோடு திருமணத்துக்குப் பின் கூடல் இல்லை என்றும் சொல்லி.... ஸ்ஸ்ஸ்ஸ்... அப்பா முடியல சாமி... இங்கும் வரலாறு படுத்துருச்சு...'

'வல்லவராயன் வந்தியத்தேவன் வில்லனாவும் குந்தவையை விடுத்து வேறு  ஒருத்தியை கட்டியவராகவும் நினைக்கத் தோணலை... மேல சொல்லு...'

'குந்தவை மிகச் சிறந்தவள்... அவள் என்ன சொல்கிறாளோ அதன்படியே இராஜராஜன் ஆட்சி செய்தான் என்றும் சொன்னதில் கல்கியும் பாலகுமாரனும் ஒத்துப் போனாங்க... ஆனா தமிழ் சினிமா மாதிரி குந்தவையை நல்லவள் போல் காட்டி மிகப்பெரிய வில்லி ஆக்கி.... அய்யோ என்ன கொடுமை இது ஆட்டை தூக்கி குட்டியில போட்டு குட்டியை தூக்கி ஆட்டுல போட்டு மிக மோசமாக சோழ வரலாற்றைக் கதையாக்கி குழப்பிட்டாரு மூன்றாமவர்...'

'அடேங்கப்பா... குந்தவை கொலைகாரியா...?'

'சொன்னா நம்பமாட்டே.... ஆதித்த கரிகாலனைக் கொன்னது குந்தவைதான்னு சொல்லியிருக்கிறார்.... அதுவும் தஞ்சையில கொன்னு சம்புவரையர் மாளிக்கைக்கு எடுத்துப் போனதை படிச்சேன்னு வச்சிக்க வடிவேலு மாதிரி உனக்குத் தேவையா... உனக்குத் தேவையான்னு நீயே கேட்டுப்பே...'

'ஹா..ஹா... ஒரு வழி ஆயிட்டேன்னு சொல்லு....'

'ஆமா...'

"அடுத்து உத்தம சோழன்ங்கிற மதுராந்தகன்... இளவரசர் ஆதித்த கரிகாலன் மறைவுக்குப் பின்... சக்கரவர்த்தி சுந்தரசோழர் நிலமை ரொம்ப மோசமாக, அவரின் அண்ணன் மகனான மதுராந்தகர் 15 வருடம் ஆண்ட பிறகே இராஜராஜர் ஆட்சி பீடத்தில் ஏறினார் என்பது வரலாறுன்னு நினைக்கிறேன் . கல்கி உண்மையான மதுராந்தகர் பூங்குழலியின் அத்தை மகனான சேந்தன் அமுதன் எனச் சொல்லி அவனை அருண்மொழியே பதவி ஏற்க வைத்தான் என்று சொல்வார்... பாலகுமாரன் மதுராந்தகனான உத்தம சோழன் அரசனாக வேண்டும் என அவன் அம்மா தில்லு முல்லு வேலைகள் செய்வதாகவும் இராஜராஜன் விட்டுக் கொடுத்து விலகிச் செல்வதாகவும் சொல்லியிருப்பார்... நரசிம்மரோ காணாமல் போன கண்டராதித்தன்... காணாமல் போன அவரின் மகன் மதுராந்தகன்...  என்றெல்லாம் சொல்லி... மதுராந்தகனை அரியணை ஏற்றுகிறார்... இதில் என்ன கூத்துன்னா மதுராந்தகரான  உத்தம சோழனை, சுந்தர சோழரின் மகன் என்றும் குந்தவையின் தம்பி என்றும் சொல்கிறார்... எது உண்மைன்னு நாம குழம்பி நிக்கிற மாதிரி ஆயிருச்சு...'

'ரொம்ப யோசிக்காதே... படிச்சதோட நிறுத்து...'

'ஹா.... ஹா... இன்னும் இருக்கு... அருண்மொழியோட இலங்கைப் படையெடுப்பை கல்கி அருமையாய் விவரித்திருப்பார்.... அருண்மொழி இலங்கையில் இருந்து திரும்பிய பின்னரே மதுராந்தகருக்கு பட்டாபிஷேகம்... பாலகுமாரனோ மதுராந்தகரை அரசராக்கிய பின்னர்  அருண்மொழியை இலங்கைக்கு போர் தொடுக்கச் செல்ல வேண்டும் என்று சொல்வதாக பட்டும்படாமலும் சொல்லியிருப்பார். நரசிம்மரோ இலங்கை கதையை தொட்டிருக்கமாட்டார்... காரணம் அவர் களம் ஆதித்த கரிகாலனின் கதை என்கிறார். ஆனால் இராஜராஜனுக்கு பட்டம் கட்டாமல் மதுராந்தகர்தான் பட்டத்துக்கு வரவேண்டும்... என்று சொல்லி அவரை அரசனாக்கி மற்றவரையெல்லாம் துரோகியாக்கியிருப்பார்.'

'ம்... அப்புறம்...?'

'அருண்மொழி.... மிகச் சிறந்த வீரன்... என்பதை மூவருமே ஒத்துக் கொண்டிருப்பார்கள்... அவன் சுந்தர சோழரின் மகன், ஆதித்த கரிகாலன் மற்றும் குந்தவையின் தம்பி என்பதை கல்கியும் பாலகுமாரனும் சொல்லியிருப்பார்கள்... தஞ்சை கல்வெட்டுக்களில் கூட 'யான் கொடுத்ததும் அக்கன் கொடுத்ததும்' என்று இராஜராஜன் பொரித்து வைத்திருப்பதாக பாலகுமாரன் சொல்லியிருப்பார். நரசிம்மன் அவர்களோ அருண்மொழி குந்தவையின் தம்பி என்று சொல்லி கதை நகர்த்தி இறுதியில் குந்தவையின் மகன் என்று சொல்வார்... ஏற்க முடியாத ஒன்று... அதற்கு அவர் சொல்லும் காரணங்கள்... சினிமாவை மிஞ்சும் கேலிக்கூத்து...'

'ஆட்டைக் கடிச்சி... மாட்டைக் கடிச்சி... கடைசியில் இராஜராஜனையே கடிச்சிட்டாரா...?'

'ஆமாம்... ஒரு தேசத்தை கட்டி ஆண்ட... நம் நாகரீகத்தை உலகம் அறியச் செய்த... மிகப்பெரிய கற்கோவிலைக் கட்டிய... மாவீரன் இராஜராஜன் சுந்தர சோழனின் மகன் என்பது வரலாறு.... நாம் வரலாற்றை வரலாறாய்ப் பார்ப்போம்... புதினங்கள் எல்லாமே ஆசியர்களின் கற்பனையே என்பதாய்ப் பார்ப்போம் என்ற முடிவுக்கு வந்துட்டேன்..'

'அதுதானே உண்மை... புதினங்கள் எல்லாம் கற்பனையே... அது சரி... அப்ப இனி சோழ சக்கரவர்த்தி இராஜராஜன் பற்றி வாசிக்க மாட்டியோ...?'

'வாசிப்பேன்... உண்மையான வரலாறு கிடைத்தால் வாசிப்பேன்... அது வரைக்கும் பொய்க்கதைகளுக்குள் புதைய மாட்டேன்...'

'ஓகே...'

'சரி... இந்த வாரம் தஞ்சை கோவிலுக்குப் போறேன் வாறியா...?'

'வரலாமே...'

'பாலகுமாரன் நாவலின் பிரமாண்டத்துக்காக கோவில் வேலைகளை ரொம்பவே கற்பனை கலந்து எழுதியிருந்தாலும் அந்த கற்கோவிலின் பிரமாண்டத்தை நம் கண் முன்னே நிறுத்தியிருக்கிறார்... எத்தனையோ முறை பேருந்தில் தஞ்சை பெரிய கோவிலைக் கடந்திருக்கிறேன்... பார்க்கணும்ன்னு தோணலை... உடையார் முடித்ததும்  பார்த்தே ஆகணும்ன்னு ஆசை வந்திருச்சு... இந்த வாரம் இராஜராஜன் பாத்துப் பாத்து கட்டிய கோவிலைப் பார்த்துட்டு வரலாம் சரியா..'

'ஓகே... இப்ப என்ன பண்றே...?'

'அதான் சொன்னேனே... கருணாகரப் பல்லவனோடு கடல் புறாவில் பயணிக்கிறேன்....'
-'பரிவை' சே.குமார்.

23 எண்ணங்கள்:

KILLERGEE Devakottai சொன்னது…

கடல்புறா பறந்து செல்லட்டும் கடலைக் கடந்து....
த.ம.1

”தளிர் சுரேஷ்” சொன்னது…

வரலாற்று புதினங்கள் வரலாறுகளை கொண்டு புனையப்படும் கற்பனைகள்! எழுத்தாளர்களுக்கு எழுத்தாளர் வேறுபடும். உடையார் படிக்கவில்லை! பொன்னியின் செல்வனுக்கும் சங்கதாராவிற்கு நிறைய வேற்றுமைகள் உண்டு. சங்கதாராவில் ஆசிரியரின் கற்பனை கொஞ்சம் எல்லை தாண்டியிருப்பது உண்மைதான்.

ஊமைக்கனவுகள் சொன்னது…

வணக்கம் பரிவையாரே!

பொன்னியின் செல்வனும் சிவகாமியின் சபதமும், கடற்புறாவும் யவனராணியும், ஜலதீபமும் எல்லாம் தலையணை வைத்துப் படுத்துப் படித்துக் கடந்த பள்ளிப்பருவம் நினைவிற்கு வருகிறது. உரையாடல் வழி உங்கள் திறனாய்வை ரசித்தேன்.

தலைப்போடொட்டிய சிறு தகவல்,

வானம் வசப்படும் முன்னுரையில் என்று நினைக்கிறேன், பிரபஞ்சன் சொல்வார்,

இன்றைய வரலாற்றுப் கதைகள் என்றழைத்துக் கொள்ளும் புதினங்களில் வரலாறும் இல்லை கதையும் இல்லை என்று.

கதை இருக்கிறதோ இல்லையோ வரலாறு இல்லை என்பது உண்மை.

சிறு கடுகைப் பெருங்கடலாய்க் காட்டும் எழுத்துச் சாமர்த்தியம் என்று உணர்வு வந்தது அப்போது.

கல்கியும் சாண்டில்யனும் நல்ல கதாசிரியர்கள் அல்லது நாம் மிக ரசிக்க எழுதக் கூடியவர்கள் என்பதில் துளியும் ஐயமில்லை. ஒரு மூன்று மாதம் இருக்கும் பொன்னியின் செல்வனை மீண்டும் பழைய நினைவுடன் படித்தேன். இது ஆறாம் முறை.

ஆனால், அதில் வரலாற்றைத் தேடுவது என்பது அபத்தம் என்று புரிந்து வாசித்தது என்றாலும் அந்த எழுத்தின் மாயச்சுழல் அந்தக் காலகட்டத்தையும் கதாபாத்திரங்களையும் நகமும் சதையுமாய் உருவாக்கி நம் முன் உண்மை போல் உலவ விட வல்லவை என்பதை மறுக்க இயலவில்லை.

இதில் கல்கி ஒரு படி மேல். நூற்றுக்கு இரண்டு சதவீதத் தரவுகளாவது அவர் புனைவில் இருக்கும். சாண்டில்யன்.....!

இந்தப் புனைவுகளில் சிக்குண்டு கிடந்த இன்னும் கிடக்கும் பல இலட்சம் பேர்களில் நானும் ஒருவன். பல முறை இதை வாசித்தவன். இன்னும் வாசிக்கப் போகிறவன்.

என்றாலும், இதை வரலாற்றிலிருந்து விலக்கிப் பார்க்க வேண்டும் என்கிற மனம் இப்போது வந்திருக்கிறது என்று சொல்வேன். உங்களுக்கும் இது வரவேண்டும் என்பதில்லை

வரலாற்று நாவல் என்கிற வடிவம் தமிழில் அரிதானதே!

என்னைக் கேட்டால்,

பிரபஞ்சனின் வானம் வசப்படும், மற்றும் சு வெங்கடேசனின் காவல்கோட்டம் ஆகிய இரு நாவல்களைப் பரிந்துரை செய்வேன்.

த ம

நன்றி.

Kasthuri Rengan சொன்னது…

தம கூடுதல் ஒன்று

இந்த நாவல் பலரைப் படுத்தியிருப்பது புரிகிறது...

நிறயப்பேர் புலம்பி இருக்கிறார்கள்

தொடர்ந்து வாசிப்பதற்கு வாழ்த்துகள்


முகநூலில் பகிர்ந்திருக்கிறேன்

'பரிவை' சே.குமார் சொன்னது…

அன்பின் ஐயா,

நான் இதை வரலாற்றுப் புதினங்களை கற்பனைக் காவியமாய்த்தான் பார்க்கிறேன்...

இருப்பினும் வாசிப்பின் ஆர்வத்தை ஈர்க்கும் தன்மை அதில் இருப்பதால் அதில் பயணிக்கும் ஆசை அதிகரிக்கிறது.

கல்கி புனைவென்றாலும் நம்மை ஈர்க்கும் எழுத்தால் வசப்படுத்தி விடுகிறார்.

பாலகுமாரன் தஞ்சைக் கோவில் கட்டுமானம் குறித்த தேடல் அதிகம் இருந்தாலும் கிளைக்கதைகளால் நம்மை அயற்சி அடைய வைத்து விட்டார்... இருப்பினும் சில விஷங்களை ஆழமாய் எழுதியிருக்கிறார்....

நரசிம்மர் இதற்கு எதிர் பாதையில் பயணித்தால் தனது நாவலுக்கு மிகப்பெரிய பெயர் கிடைக்கலாம் என்ற கற்பனையில் சினிமாவை மோசமாக கதை சொல்லியிருக்கிறார்...

நான் இவற்றை வரலாறு கொஞ்சமேனும் கலந்த புதினங்களாகத்தான் வாசிக்கிறேன்...

சாண்டில்யன் வரலாறு போல் எழுதியிருந்தாலும் அவரின் வர்ணனைகள்... அசரடிக்கும் எழுத்து மிக அற்புதம்... வாசிப்பவனை நிறுத்தாமல் வாசிக்க வைக்கும் எழுத்து அவருக்கு என்பது மட்டும் திண்ணம்....

தாங்கள் கூறிய புத்தகங்களை வாசிக்கப் பார்க்கிறேன் ஐயா...

தங்களின் நீண்ட கருத்துக்கு நன்றி ஐயா...

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

மனோ சாமிநாதன் சொன்னது…

தன்னிலை உரையாடல் மிகவும் அருமை! ஒரு நல்ல எழுத்தாளராய் பரிணமித்திருக்கிறீர்கள் குமார்!

பொன்னியின் செல்வன் தமிழில் எழுதப்பட்ட‌ சரித்திர நாவல்களில் மிகவும் புகழ்பெற்றது! எத்தனை தடவைகள் அதனை மீண்டும் மீண்டும் படித்தேன் என்பது நினைவில்லை. வரலாற்று உண்மைகளுடன் ஒட்டி அவர் கற்பனை செய்து எழுதிய காவியம் அது. ஆனாலும் அது மன நிறைவை எனக்குத்தந்ததில்லை. காரணம் ஆதித்த கரிகாலனை கொன்றது யார் என்பது சரித்திரத்திலேயே தெரியாத விஷயம் என்பதால் கல்கியும் இறுதியில் ஆதித்தனை கொன்றது பழுவேட்டையரா, அல்லது நந்தினியா என்ற குழப்பத்தில் நம்மை ஆழ்த்தியிருப்பார்.

உடையாரை படிக்க இரு தடவைகள் மிகவும் முயன்றேன். என்னால் முடியவில்லை. செய்தி தொகுப்புகள் தாண்டி கதைக்குள் போவது மிகவும் சிரமமாயிருந்தது. சங்கதாரா! கேட்கவே வேண்டாம்!

ஒரு நல்ல நாவல் என்பது கையில் எடுத்தால் அதை கீழே வைக்க முடியாத அளவு எங்கேயும் ஒரு சிறு தொய்வு கூட இல்லாமல் நம்மை ஜெட் வேகத்தில் கொண்டு செல்ல வேண்டும். முடித்த பின் அதன் பாதிப்பலைகளிலிருந்து மீள்வதற்கு சிறுது நேரமாக வேண்டும்.அது கல்கியால் மட்டுமே முடிந்திருக்கிறது! அதன் பின் எழுத்தாளர் வித்யா சுப்ரமணியம் மட்டும் தான் என்று சொல்வேன்.

எனக்கு மிகவும் பிடித்த சரித்திர நாவல் சிவகாமியின் சபதம் தான்!
ஒரு சின்ன வருத்தம்! நீ8ங்கள் இதுவரை தஞ்சை பெரிய கோவிலைப் பார்த்ததேயில்லை என்பது!

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சகோதரா...
உண்மைதான்... வரலாற்றுப் புதினங்கள் கொஞ்சமேனும் வரலாறு தாங்கி மீதி கற்பனையில் நகரும்...

உடையாரில் பாலகுமாரன் நினைத்த இராஜராஜனை சமைத்திருப்பார்....

சங்கதாரா புதிய வரலாறு எழுதும் முயற்சி...

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க மது சார்...

ஹா...ஹா... ரொம்ப பேரைப் படுத்தியது உண்மையே...
முகநூலில் மிகப்பெரிய விவாதமே ஓடுச்சு... சங்கதாரா குறித்து....

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்...

'பரிவை' சே.குமார் சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அம்மா...

பொன்னியின் செல்வனில் ஒரு ஈர்ப்பு இருந்தது.. வந்தியத்தேவன், குந்தவை, அருண்மொழி, பூங்குழலி என நம்மையும் அவர்கள் பின்னே பயணிக்க வைத்து அதில் வெற்றியும் பெற்றிருந்தார். இலங்கை நிகழ்வுகளை மிக அழகாக நகர்த்தியிருப்பார்....

உடையாரை வாசிப்பவர்களுக்கு எல்லாருக்குமே மேலே தொடரணுமா என்ற எண்ணம் ஏற்படுவது நிச்சயம்... நிறைய அலைந்தேன் என்பதெல்லாம் சரி... நானே எழுத்தாளன் எப்படி எழுதினாலும் வாசிக்க வேண்டும் என்ற மமதையே சுற்றி வளைத்து அவர் நினைத்ததை எல்லாம் எழுதி... கிளைகதைகளில் வேர் விட்டு... அது ஒரு அயற்சியைத் தந்தது.

சங்கதாரா சொல்ல வேண்டாம்... அது தமிழ் சினிமாக் கதைகளை விட கேவலமானது....

சிவகாமியின் சபதம் வாசிக்கிறேன்.... இப்போ கடல் புறாவில் இருக்கிறேன்.

தஞ்சை வரும் வாய்ப்பு கம்மி அம்மா... கோவிலுக்குள் போக வேண்டும் என்று நினைத்த சமயத்தில் எல்லாம் ஏதோ ஒன்றால் தட்டிப் போய் விடும்...

இந்த முறை ஊருக்குப் போகும் போது கண்டிப்பாக போய் வருவேன்.

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அம்மா...

நிஷா சொன்னது…

அப்பாடா!வங்கதாரா குறித்து எழுதியாச்சா?

என்னாலும் பின்னூட்டம் போட முடிகின்றதே குமார். எத்தனை தடவை இந்தப்பக்கம் திறக்க முயற்சிப்பது? திறந்தால் என் சிஸ்டம் எப்படியே ஷட்டவுண் ஆகி நின்றும் விடும். இப்போது அப்படி ஆகவில்லையப்பா!

உடையாரில் உடைந்த மனசை சங்கதாரா சுக்குசூறாக்கி விட்டது என்பது தெளிவாகப்புரிந்து விட்டதே! ஆனாலும் குமார் நம்ம குருப்பில் இந்த சங்கதாரா படித்து குழம்பியதில் நான் தான் முன்னால் இருக்கின்றேனாக்கும்.

எனக்கும் தான் நிரம்ப குழப்பம் வந்தது!இன்னும் நான் தெளியவில்லை, நந்திபுரத்து நாயகியை தொடரலாம் என இருக்கின்றேன். நிஜத்தில் சொல்லப்போனால் நீங்க சங்கதாரா லிங்க் தந்த அன்று எனக்கு படிக்கும் சூழலே இல்லை. ஒரு நாள் விடுமுறை.வீட்டு வேலைகளையெல்லாம் அப்படியே போட்டது போட்டபடி ஒரு ஆர்வத்துடன் படிக்க ஆரம்பித்து .... அப்புறம் ஐய்ய்ய்ய்ய்ய்ய்யாய்யோ என குழம்பத்தில் அடுத்தும் என்ன தான் சொல்லி இருக்கும் என அறியும் ஆர்வத்தில் நான்கு மணி நேரத்தில் இடையிடையே ஹாலுக்கும் கிச்சனுக்கும் பத்து தடவை நடந்து நடந்து படித்து முடித்தேன்.

நமக்கு இந்த சங்கதாராவை பரிந்துரைத்தது யாருப்பா? தேடீஈஈஈஈஈஈட்டே இருக்கேன்ல! ஹாஹா! நான் என்னத்தை சொல்வதாம்? எல்லாம் நீங்களே சொல்லி ஆகி விட்டதே! நாம் பேஸ்புக்கில் இதைக்குறித்து எல்லாம் எழுதியும் விட்டோம்ல! இனி அடுத்து தொடரலாம்.

துரை செல்வராஜூ சொன்னது…

நான் பிறந்த ஊர் என்பதால் - எப்பவுமே அதிகமான ஈர்ப்பு!..

ஏழு வயதில் ஏற்பட்டது.. ஆர்ப்பரித்துக் கொண்டேயிருக்கின்றது..

தஞ்சை என்று நினைத்துவிட்டாலே - குந்தவையும் வந்தியத் தேவனும் நந்தினியும் வானதியும் தான் முதல் தரிசனம்!..

என்றென்றும் அதில் மாறுபாடு கிடையாது!..

S.P.SENTHIL KUMAR சொன்னது…

உரையாடல் பாணியில் அருமையான விமர்சனம். சரித்திர நாவல்கள் பெரும்பாலும் ஏதாவது ஒரு முடிச்சை கையில் எடுத்துக்கொண்டு அதை கதையாக நகர்த்துவதுதான். அதில் வரலாறை விட எழுத்தாளரின் கற்பனையே ஆக்ரமித்து இருக்கும். அவற்றை ஒரு இலக்கியம் போல் படித்துவிட வேண்டும் அவ்வளவுதான்.

முற்றிலும் உண்மை சம்பவங்களை வரலாறுகளை பேசும் நாவல்களை படைப்பாளர்கள் அவற்றை ஆவணமாகவே பார்க்கிறார்கள். இதற்கு உதாரணமாக 'காவல் கோட்டத்தை சொல்லலாம். நான் அதை வரலாற்று ஆவணமாகத்தான் பார்க்கிறேன். எழுத்தாளர்கள் பலரும் அதையே சொல்லியிருக்கிறார்கள். ஆனாலும் வரலாற்று நாவல்களைவிட 'காவல் கோட்டம்' உண்மையை மட்டுமே சொல்வதால் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

த ம 5

தமிழ்வாசி பிரகாஷ் சொன்னது…

ஆதித்த கரிகாலனை கொலை செஞ்சது யாருனு தெரிஞ்சுக்காத வரை நமக்கு நல்லது தான்....
ஆனா யாரு கொலை செஞ்சதுங்கற ஆராய்ச்சில சங்க தாரா நாவல்ல வர்ற சம்பவங்கள் உண்மையோ, பொய்யோ என்னைப் பொறுத்த வரை அபத்தமான காட்சியமைப்பைக் கொண்ட நாவல்.
ஆதித்த கரிகாலன் கொலையானது எப்படினு யாரும் ஆராய்ச்சியில் இறங்க வேண்டாம்.
அப்படியும் இறங்கினால் பொன்னியின் செல்வனை வாசிக்காதீர்கள், அதன் களங்களையும் உதாரணம் கொள்ள வேண்டாம்...
என்னால் சங்கதாராவை யாருக்கும் பரிந்துரை செய்யப்பட மாட்டாது. ஏனெனில் பொன்னியின் செல்வன் ரசிக்கப்பட வேண்டும். கற்பனையென்றாலும்....////
முகநூலில் சொன்னது தான் இங்கேயும்..

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

உரையாடல் வழி மூன்று வரலாற்றுப் புதினங்களைக் குறித்து விவரித்திருப்பது அருமை. கல்கியின் எழுத்து அசர வைக்கும் எழுத்து அது போல சாண்டில்யன். எல்லாம் எப்போதோ வாசித்தது. காலச்சக்கரா நரசிம்மாவின் புதினத்தை இன்னும் வாசிக்கவில்லை. சகோ கீதாசாம்பசிவம் அந்தப் புதினத்தைக் குறித்து எழுதியதை வாசித்த போதே சகோ அருமையாகச் சொல்லியிருந்தார்...ஆனால் எங்களுக்கு ஆர்வம் சற்றுக் குறைந்துவிட்டது. பாலகுமாரனின் இந்தப் புதினத்தை வாசித்ததில்லை.

வரலாற்றுப் புதினத்தில் பல கற்பனைகளே அல்லாமல் உண்மையான நிகழ்வுச் சான்றுகளைத் தேடினால் கிடைக்காது. ஆனால் கல்கியின் வர்ணனை விவரணம் உண்மையோ என்று எண்ண வைத்துவிடும். பொதுவாக வரலாற்றுப் புதினங்களில் வரலாறு இருக்காது. ஆசிரியரின் கற்பனைகளே.

கீதா: கூடுதல் தகவல். குமார் நீங்கள் அறிந்திருப்பீர்கள்.. நம் பதிவர் இளைஞர் வயதில் மிகவும் சிறியவர் வெற்றிவேல் அவர்கள் வானவல்லி எனும் சோழர் காலத்தைப் பேசும் புதினம் எழுதியிருக்கிறார். வெளியும் வந்தாயிற்று. 4 பாகங்கள்... புத்தகங்கள். விலை 2000 ரூபாய். அவர் இராரஜராஜ சோழனுக்கும் முந்தையக் காலகட்டம் பற்றி கல்வெட்டு ஆராய்ச்சிகள் எல்லாம் செய்து எழுதியிருக்கிறார். இணையத்திலும் கிடைக்கிறது என்றார். நான் வாங்கி வாசிக்க வேண்டும் என்றிருந்தேன். ஆனால் சூழல் சரியில்லை. அவரது தளத்தில் இரவின்புன்னகை யில் வானவல்லியின் ஆரம்பப் பகுதிகள் இருக்கின்றன.

நல்ல பகிர்வு ரசித்தோம்..உங்கள் பதிவை..

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் அக்கா...
ரொம்ப நாளைக்குப் பிறகு தங்கள் கருத்துக்கு நன்றி.

என்ன பிரச்சினைன்னு தெரியலை... மற்றவர்கள் பின்னூட்டம் இடுவதில் சிரமம் ஏற்படவில்லை என்று சொன்னார்கள்...


சங்கதாரா போன்ற நாவல்கள் வரலாற்றை திருப்பிப் பார்க்க வைக்கும் ஒரு முயற்சி போல்தான் டோன்றுகிறது.

யாரோ சொன்னாங்க... யான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்ன்னு நம்மளை மாட்டி விட்டுட்டாங்க....

தொடர்ந்து அலசுவோம்.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் ஐயா....

உண்மைதான்... பொன்னியின் செல்வன் மீதான காதல் மாறவே மாறாது....

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா...

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க செந்தில் சார்...

காவல் கோட்டம் வாசிக்கணும்...

உண்மைதான்... அவர் அவர் மனதின் எண்ணமே கொஞ்சம் வரலாறை வைத்து பெரிய கதையை எழுத வைக்கிறது.

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் பிரகாஷ்...
தங்கள் கருத்தை முகநூலிலேயே பார்த்தேன்...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் துளசி சார் / கீதா மேடம்...

கல்கியின் அசர வைக்கும் எழுத்தே எல்லாரையும் கவர்ந்து விட்டது...

சாண்டில்யன் அவர்களின் வர்ணனைகள் என்ன அருமை.... வாசிக்க வாசிக்க ஈர்க்கிறது... ஆனால் அவரின் வரலாற்றுத் தளங்கள் அதிகம் பேசப்படவில்லை...

வெற்றிவேல் அவர்களின் வரலாற்றுப் புதினம் குறித்து கொஞ்சம் அறிந்திருந்தேன் கீதா மேடம்... அறிமுகத்துக்கு நன்றி. முடிந்தால் வாசிக்கிறேன்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

வரலாற்றுப் புதினங்கள் - படித்து ரசிப்பதோடு சரி - அதில் வருபவை அனைத்தும் உண்மை என்று சொல்வதிற்கில்லை. உடையார் இன்னும் படிக்கவில்லை.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் அண்ணா...
கொஞ்சம் உண்மை... நிறைய கற்பனை என்றாலும் அளவிற்கு மீறிய கற்பனை நம்மை வரலாற்றுப் புதினங்கள் வாசிப்பதில் யோசிக்க வைக்கிறது.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.