மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

புதன், 26 அக்டோபர், 2016

தீபாவளி மாறிப்போச்சு (அகல் கட்டுரை)

கல் மின்னிதழ் தீபாவளி மலரில் எனது "தீபாவளி மாறிப்போச்சு" என்ற கட்டுரை வெளியாகியிருக்கிறது. தொடர்ந்து எனக்கு எழுத வாய்ப்புக் கொடுக்கும் அகல் மின்னிதழ் ஆசிரியர் சத்யா (கணேஷ்) அவர்களுக்கும் மற்றும் ஆசிரியர் குழுவுக்கும் நன்றி.

நான் எழுதிய கட்டுரையை அப்படியே இங்கு பகிர்ந்திருக்கிறேன்... ஒரு சில காரணங்களால்  சில வரிகளை அகலுக்காக எடுக்கும்படி ஆனது. அகலில் கட்டுரை வாசித்து அங்கும் இங்கும் உங்களுக்குத் தோன்றும் குறைகளை நிறையவும் நிறைகளை குறைவாகவும் சொல்லுங்கள். என்னைப் பட்டை தீட்டிக் கொள்ள உதவும்... நன்றி,

அகலில் வாசிக்க இங்கு சொடுக்கவும்...

Image result for தீபாவளி

தீபாவளி என்றதும் ஏக சந்தோஷம் வந்தது பள்ளிக்கூடத்தில் படிக்கும் நேரத்தில்... இப்போ தீபாவளி என்றதும் 'ஏன்டா நரகாசுரனைக் கொன்னீங்க...?' அப்படின்னு முகநூலிலும் வாட்ஸப்பிலும் கேட்பவர்களில் ஒருவராய்த்தான் மனசு இருக்கிறது. காரணம் இன்றைய பண்டிகைகளின் நிலமை மட்டுமின்றி எவரெஸ்ட்டாய் எகிறி நிற்கும் விலைவாசியும்... கலைஞர் தொலைக்காட்சியில் சொல்வது போல் விஷேச தினங்கள் எல்லாம் விடுமுறை தினங்களாய் மட்டுமே ஆகிவிட்டது வேதனை... விடுமுறை தினம் என கலைஞர் டிவி சொல்றது யாருக்கான பண்டிகைகளுக்கு என்பதை முன்னெடுத்தோம் என்றால் இங்கு ஒரு விவாத மேடை நடத்தலாம்... பட்டாசு வைக்கிறதைப் பற்றி பேசும் போது அது எதுக்கு நமக்கு. வாங்க மத்தாப்புக்களும் சங்கு சக்கரங்களும் மகிழ்வுக்கும் தீபாவளிக்குள் பயணிப்போம்.

இன்றைய பண்டிகைகள் எல்லாமே உறவுகளைத் தொலைத்த பண்டிகைகள்தான்... ஆம் கூட்டுக் குடித்தன கொண்டாட்டங்கள் குறைந்து வருடங்கள் பல ஆகிவிட்டன. கிராமங்களில் நம் தமிழர் திருநாளாம் பொங்கல் விவசாயம் வேரறுக்கப்பட்ட பின்னரும் கூட சிறப்பாக கொண்டாடப்படுவதால் தமிழனின் திருநாள் இன்னும் அறுவடையாகாமல் இருப்பது மகிழ்ச்சியே.... ஆனால் நகரங்களில் பொங்கல் என்பது சிலிண்டர் அடுப்பில் குக்கரில் வைத்துச் சாப்பிடுவதில் முடிந்து விடுகிறது என்பதை நாம் அறிவோம். அதேபோல்தான் தீபாவளியும் வெடிகளுக்காக மட்டுமே கொண்டாடப்படும் பண்டிகை என்ற நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டது. இன்றைய நிலையில் தீபாவளி என்பது ஒரு பண்டிகை தினம்... கடையில் வாங்கிய பதார்த்தங்களை சாப்பிட்டு... ரெடிமேட் உடைகள் அணிந்து... காசை கரியாக்கி... தொலைக்காட்சிகளில் புதைந்து கழித்து விடுகிறோம். மேலே சொன்ன  பள்ளி நாட்களுக்கு... அதாவது ஒரு இருபது... இருபத்தைந்து வருடங்கள் பின்னோக்கி ஒரு எட்டு போனோம் என்றால் எத்தனை மகிழ்ச்சியாய் பண்டிகை தினங்களை கடந்திருக்கிறோம் என்பதை அறியலாம். அவை கொடுத்த சந்தோஷத்தைப் பற்றி வீடியோ கேமில் வியாபித்திருக்கும் இன்றைய குழந்தைகள் அறிவார்களா..?

இன்றைக்கு பிரமாண்டங்களில் நுழைந்து பர்ஸைக் காலி பண்ணி துணிகளை அள்ளி வந்து விடுகிறார்கள் ஆனால் அன்று ஒரு மாதம் முன்பே துணி எடுத்து தையற்கடையில் தைக்கக் கொடுத்து விட்டு தையல்காரர் கொடுக்கும் அட்டையை சட்டையில் வைத்துக் கொண்டு பசங்களிடம் காட்டி மகிழும் சுகத்தில் ஆரம்பிக்கும் இன்பத் தீபாவளி. புதுத்துணிகளை வாங்கி... வெடி வாங்கி... அதையும் நாளைதான் போடணும் என்ற அப்பாவின் கட்டளைக்குப் பயந்து மஞ்சள் பைக்குள் இருந்து எடுத்து எடுத்துப் பார்த்து வைக்கும் சந்தோஷத்தில் தொடரும் மத்தாப்பூத் தீபாவளி. அதிகாலை எழுந்து பலகாரம் சுடும் அம்மாவுக்கு உதவி செய்கிறேன் என விறகடுப்பில் கொதிக்கும் எண்ணெச்சட்டிக்கு முன்னே அமர்ந்து இருப்பதில் விடியும் இனிப்புக் கலந்த தித்திப்புத் தீபாவளி. எந்தப் பக்கம் சூலம் எனப் பார்க்க 'திருவிழா சமயத்தில்... ' என வாய்க்குள் முணங்கியபடி விரலில் எண்ணிஅப்படியில்லை என்றால் ராணி முத்து முருகன் படம் போட்ட காலண்டரில் பார்த்து ஒவ்வொருவராய் நிற்க வைத்து தலையில் எண்ணெய் வைத்து உடம்பெல்லாம் வடிய வடிய தேய்த்து விட்டு, சீயக்காயுடன் கண்மாய்க்கு குளிக்க அனுப்புவதில் நீச்சலடிக்கிறது குதூகலத்  தீபாவளி... அப்புறம் புதுத்துணியில் மஞ்சள் வைத்து... சாமி கும்பிட்டு... பலகாரம் சாப்பிட்டு வெடியோடு மாரியம்மன் கோவிலில் பசங்களோடு சங்கமித்தால் பயிரைத் தழுவும் தென்றல் போல மழைக்கு முன்னே வரும் சாரம் போல சந்தோஷச் சிறகடிக்கும் இன்பத் தீபாவளி.

எண்ணெய் தேய்க்கிறதுன்னு சொல்லும் போது ஆரம்பத்தில் வடிய வடிய தேய்த்தாலும் கொஞ்சம் வளர வளர எண்ணெய் தேய்ப்பதிலும் சிக்கனம் கொண்டு வந்து தலைக்கு மட்டும் என்றாகிவிட்டது. இப்போது அதுவும் இல்லை... ‘எண்ணெய் தேய்த்து குளிச்சாத்தானா..?’ என்றபடி நரகாசுரனைக் கொன்றது எப்படி... எதனால் தீபாவளின்னு பேர் வந்தது... என நடிகர்களும் நடிகைகளும் விளக்கமாய்ச் சொல்லும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் இருந்து கண்ணை எடுக்காமல் அமர்ந்து இருப்பதில்தான் இன்றைய தீபாவளி விடிகிறது. ‘அவனுக்கு எண்ணெய் ஒத்துக்காது..? நீங்க வேணுன்னா எண்ணெயில குளிங்க..’ என்ற குரல்களை இன்றைக்கு வீடுகள் தோறும் கேட்கலாம். அது எப்படி ஒத்துக்கும்... பிறந்த குழந்தைக்கு கண்ணில் நல்லெண்ணெய் ஊற்றி... உடம்பெல்லாம் எண்ணெய் தேய்த்து காலை வெயிலில் வைத்திருந்த காலம் அல்லவே இந்தக் காலம்..? எந்தப் பிள்ளைக்கு நல்லெண்ணெய் ஊற்றுகிறோம்... எந்தப் பிள்ளையை வெயிலில் காட்டுகிறோம்...டாக்டர்கள் இந்தச் சோப்பை போடுங்கள்... இந்த எண்ணெய் தேயுங்கள் என்று சொல்வதை மட்டுமே நாம் கேட்கிறோம். ஜான்ட்சன் பேபி சோப்பு போட்டா தோல் பிரச்சினை வரும்... அதனால் பியர்ஸ் போடுங்க... அதுவும் அதுல இந்தக் கலர் போடுங்கன்னு டாக்டர் சொல்றதை நம்பி பத்து வயசானாலும் பியர்ஸ்க்குள்ள இருந்து வராம இருக்கும் தாய்மார்களே அதிகம். இயற்கை வைத்திய முறைகளை மறந்து பணம் பார்க்கும் செயற்கையில் மாட்டிக் கொண்டு விட்டோம்... அப்புறம் எப்படி நமக்கு எண்ணெய் ஒத்துக் கொள்ளும்...?

நகரத்து தீபாவளிகள் எல்லாமே பலகாரம் சாப்பிட்டு... வெடி போட்டு... இந்தியத் தொலைக்காட்சிகளில் முதல்முறையாக போடும் படங்களைப் பார்த்து... கடையில் வாங்கிய பிராய்லரையோ அல்லது ஆட்டுக்கறியையோ சாப்பிட்டு... தூக்கம் போட்டு... இரவு நேரத்து வெடிகளை வைத்து... மீண்டும் தூக்கத்தில் கழிப்பதாய்த்தான் எப்பவும் கடந்து கொண்டிருக்கின்றன. இதே நிலமைதான் இன்று நகரத்தை ஒட்டியிருக்கும் கிராமங்களிலும் இருக்கின்றது. கேபிள் நுழையாத ஊர்களில் எல்லாம் டிஷ் ஆண்டனாக்கள் வந்ததன் விளைவு பண்டிகைகள் எல்லாம் சிறப்பு நிகழ்ச்சிகளுக்குள் அடங்கிப் போய்விட்டன. இதுதான் இன்றைய தீபாவளி என்றாலும் இன்னும் பல கிராமங்களில் பண்டிகை தினங்கள் எல்லாம் வீரியமாய் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன என்பதில் மகிழ்ச்சியே.

அன்றைக்கு புத்தாடையுடன் வெடிகளை தூக்கிக் கொண்டு கோவில்... குளக்கரை... என எல்லாரும் கூடி வெடித்து மகிழ்ந்த தினங்களே இன்னும் பசுமையாய்... மாட்டுச் சாணியில் அணுகுண்டு வைக்காமலோ... ஓணானைப் பிடித்து அதன் வாயில் சீனி வெடி வைக்காமலோ.... கொட்டாச்சிக்குள் அணுகுண்டு வைக்காமலோ... உக்கார்ந்திருப்பவனுக்கு அருகில் வெங்காய வெடி வெடிக்காமலோ... எரியும் விறகுக் கட்டையை எடுத்து வெடிப் போட்டபடி பொட்டுவெடியை அதில் வைத்து வெடிக்காமலோ...தீபாவளியைக் கடந்து வந்தேன் என்று சொன்னால் அவன் கிராமத்து வாழ்க்கையை அனுபவிக்காதவன் என்றே அர்த்தம். பாட்டிலில் வைத்து விட்ட ராக்கெட்டையும்... கையில் பிடித்து வீசிய அணுகுண்டையும் மறக்க முடியுமா..? தீபாவளி முடிஞ்சிருச்சு... இனி கார்த்திகைக்கு வெடி வெடிக்கணும் என வெடியை பத்திரப்படுத்தி வைத்துவிட்டு கோவிலைச் சுற்றிக் கிடக்கும் வெடித்த காகிதங்களை எல்லாம் அள்ளி ஓரிடத்தில் குவித்து வெடிக்காத வெடிகளை எல்லாம் அதில் போட்டு பற்ற வைத்து விட்டு வெடிக்க வைப்பதில் முடியும் ஒரு மாத காலமாக ஏங்கித் தவித்த இன்பத் தீபாவளி.

அன்றைக்கு எவ்வளவுக்கு எவ்வளவு சந்தோஷமாக கொண்டாடினோமோ அந்த தீபாவளி இன்று ஒரு பண்டிகை தினமாக மட்டுமே ஆகிவிட்டது. நர்காசுரனைக் கொன்ற தினம்தான் தீபாவளி என்பதை இன்றைய குழந்தைகள் அறிவார்களா..? கண்டிப்பாக அவர்களுக்கு வெடிப் போடும் நாள்... புதுத்துணி உடுத்தும் நாள்... இந்தியத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக ரஜினையோ... விஜயையோ... சிவகார்த்திகேயனையோ பார்க்கும் நாள் அவ்வளவே.

எனக்கு தீபாவளி என்றதும் அம்மா எடுத்து தைக்கக் கொடுக்கும் துணிகள் போக, பெரியண்ணன் தைத்துக் கொண்டு வரும் துணிகளும்... நாம வாங்கும் வெடிகளை விட, பெரியத்தான் கொண்டு வரும் வெடிகளும்... பத்தாவதுக்கு மேல்... திருமணம் வரை தீபாவளிக்கு இரண்டு தினங்கள் இரவு பகல்  தேவகோட்டையில் மாமா தையற்கடையில் துணி எடுத்துக் கொடுக்க நின்றுவிட்டு  நள்ளிரவில் மாமா தைத்துக் கொடுத்த சட்டையுடன்...  பூத்தூறலாய் தூவும் மழையில் நனைந்தபடி மூன்று கிலோ மீட்டர் நம்ம அட்லஸாரை ஓட்டிக் கொண்டு சென்ற தினங்களும்தான் ஞாபகத்தில் இருக்கின்றன.

அதெல்லாம் எப்பவும் சுமக்கும் இன்ப நினைவுகள்... இனி அது திரும்பக் கிடைக்கப் போவதில்லை... எல்லாப் பண்டிகைகளுமே இன்று நிறமும்  சுவையும் மாறிவிட்டன. அன்றைய தித்திப்புக்கள் எல்லாம் இன்றைக்கு இல்லை... விஷேச தினங்கள் எல்லாம் விடுமுறை தினங்களாய் கழிவது வேதனையே.... காலமாற்றத்தில் வறண்ட காவிரியைப் போல் விஷேச தினங்கள் எல்லாம் வறட்சியைத்தான் தன்னுள்ளே சுமந்து கடந்து கொண்டிருக்கின்றன... கடக்கின்றன. இனி வரும் காலம் பண்டிகைகள் தேவையா என யோசிக்க வைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

உறவுகள் தொடர்கதை என்பார்கள்... இன்றைக்கு எந்த விஷேசத்திலும் உறவுகளுக்கு வேலை இல்லை... கூட்டுக் குடும்பமாய் கொண்டாடிய தினங்கள் எல்லாம் தனிக் குடித்தனத்தில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. தாத்தா, பாட்டி, மாமா, மச்சான், சித்தி, சித்தப்பா, அத்தை, அக்கா, தங்கை, அண்ணன், தம்பி என எல்லாருமாய் கொண்டாடிய தினங்களில் இருந்த சந்தோஷம் பணத்தின் பின்னே நகர்ந்து பாசங்களைத் துறந்து உறவுமுறை தெரியாத, நாம் சொல்லிக் கொடுக்காத குழந்தைகளுடன் கொண்டாடுவதில் தொலைந்து விட்டது. உறவுகளின் வேர் அறுந்து வெகு காலம் ஆகிவிட்டது. இணையங்கள் இல்லங்களை இணைத்து வைத்திருக்க உள்ளங்கள் விலகி நிற்கின்றன என்பதை நாம் அறிவோம் என்றாலும் காலத்தின் போக்கில் பயணிக்கும் நம்மால் எதையும் சிந்திக்கவும் செயல்படுத்தவும் முடியவில்லை என்பதே உண்மை.

இன்னைக்கு எத்தனையோ வகையான வெடிகளை வெடித்தாலும் அன்னைக்கு வாசலுக்கு வாசல் புஷ்வானம் சிதறும் போது பாவாடை தாவணிகள் மத்தாப்பாய் சிரித்த தினங்களை மறக்க முடியுமா..? கிராமத்துப் பண்டிகை தினங்களும் திருவிழாக்களும் பட்டாம்பூச்சிகளின் காலம் என்பதை மறுக்கத்தான் முடியுமா…?  ம்... அதெல்லாம் அப்போன்னு  பெருமூச்சு விடாதீங்க... வாழ்க்கை நகரும் பாதையில் சந்தோஷச் சாரலுடன் பட்டாம்பூச்சிகளுடன் வசந்தம் வீசியது படிக்கும் காலத்தோடு மறைந்து பெரும் மழையும் கடும் புயலுமாய் பயணிக்க ஆரம்பிக்கும் போது நினைவுகள் மட்டும்தானே தாலாட்டும்...

சீனப் பட்டாசுகளை வாங்காதீர்கள் என்று சொல்லிக் கொண்டுதான் இருக்கிறோம்... ஆனாலும் அதுவும் நன்றாகத்தான் விற்றுக் கொண்டிருக்கிறது. முடிந்தளவு நம்மூரு பட்டாசுகளையே வாங்கிப் பற்ற வையுங்கள்… பாதுகாப்பாய் வெடி வெடியுங்கள்.  வருடா வருடம் தீபாவளிக்கு முன்னரே சிவகாசியில் பட்டாசு ஆலை வெடிப்பது வேதனைக்குறியது. அதில் எத்தனை பேரின் தீபாவளி காணமால் போகிறதோ… தெரியவில்லை. பாதுகாப்பாய் தீபாவளி கொண்டாடுவோம்… வெடிகள் மட்டுமல்ல தீபாவளி…. சந்தோஷங்களும் நிறைந்த்துதான்.

தீபாவளியை கலைஞர் சொல்வது போல் விடுமுறை தினமாக எடுத்துக் கொள்ளாமல் ஒரு சந்தோஷ தினமாக...  உறவுகளின் அன்பில் திளைக்கும் தினமாக கொண்டாடுங்கள்... இவ்வளவு பேசுறியே... நீ எப்படி கொண்டாடப் போறேன்னுதானே கேக்குறீங்க... ஹி..ஹி... இங்க என்னங்க தீபாவளி... எப்பவும் போல அலுவலகத்தில்... பள்ளிக்காலத்தில் கொண்டாடிய தீபாவளி நினைவோட  அன்றைய தினத்தை கடந்து பயணிக்க வேண்டியதுதான்...


-'பரிவை' சே.குமார்.

11 கருத்துகள்:

 1. தீபாவளி எல்லாம் கொண்டாடிப் பல வருடங்களாகிவிட்டன. தமிழ்நாட்டில் இருந்தவரை நண்பர்களுடன். வீட்டில் கொண்டாடுவதில்லை.

  கீதா: நாங்கள் தீபாவளி சிறுவயதில் கொண்டாடியதோடு சரி. அப்புறம் விலங்குகள் எல்லாம் பயப்படுவது பார்த்து, புகையினால் வரும் விளைவுகளின் விழிப்புணர்வு வந்ததும் பட்டாசு போடுவது நின்று பல வருடங்கள் ஆகிவிட்டன. 3 அதுவும் மகன் பிறந்து அவன் நாலுகால் பிரியனாகிப் போனதால் கொண்டாடுவது விட்டுப் போயிற்று. உறவினரோடு நேரம் செல்வழிப்பது இருந்து வந்தது. அதுவும் சமீபகாலமாக நாம் டிவிக்களின் முன் உட்காருவது இல்லை என்றாலும் பெரும்பான்மையானோர் டிவியின் முன் உட்கார்ந்துவிடுவதால் அதுவும் விட்டுப் போயிற்று. இப்போது ஆர்வம் எதுவும் இல்லை..எங்கள் வீட்டுச் செல்லங்கள் பாவம் நடுங்கிக் கொண்டிருக்கின்றன. (நாலுகால்)

  பதிலளிநீக்கு
 2. எங்களுக்கு எப்போதும் கிறிஸ்மஸ், ஜனவரி முதல் திகதி அன்றைய புது வருடம், அப்புறம் ஈஸ்டர் தான் கொண்டாட்டம். எங்கூரில் இருக்கும் போது சொந்தககரர்கள், நண்பர்கள் பொங்கலும் சித்திரைவருடப்பிறப்பும் தான் புதிய துணிகள் பொங்கல் பலகாரம் என கொண்டாடிய நினைவு, பொங்கலுக்கு பொங்கலும் சித்திரை வருடப்பிறப்பு பலகாரமும் வீட்டுக்கு வரும், தீபாவளி என பலகாரங்கள் சாப்பிட்டு நினைவில் இல்லை. கார்த்திகை விளக்கீடு என வீட்டு சுவர்களில் குட்டிக்குட்டி மண் சட்டிகளில் எண்ணெய் ஊற்றி எரிய விடும் நாள் நினைவில் உள்ளது. அடுத்து கந்தசஷ்டிக்கு பின் வரும் சூரன் போரும் நினைவில் இருக்கின்றது. இங்கே எல்லா நாளும் ஒரே நாள் போல் தான் இருக்கின்றதுப்பா! முன்னரெல்லாம் கிறுஸ்மஸ் எனில் நான் கேக் முதல் பலகாரங்கள் செய்து நண்பர்கள் வீடுகளுக்கு கொடுத்து சாப்பிடுவோம், கிறிஸ்மஸ் பார்ட்டி என விருந்தும் வைப்போம். இப்போதெல்லாம் இந்த மாதிரி பண்டிகை கொண்டாட்டம் என யாரும் எதுவும் தருவதும் இல்லை, கொடுப்பதும் இல்லை. எல்லாமே இயந்திரமயமாகிப்போனது. அன்பும் வற்றிப்போனது.

  பதிலளிநீக்கு
 3. நாங்கள் ஐந்து பெண்கள், ஒரு தம்பி! கஷ்ட ஜீவனம் தான்.ஆனாலும் அம்மா எப்படியோ கஷ்டப்பட்டு நம்மூர் மண்ணெண்ணை வாடையோடு வரும் சீத்தை துணி மொத்தமாக வாங்கி விடுவார். இரண்டு விதமான துணியில் கிறிஸ்மஸுக்கு ஒரு சட்டை புதுவருடத்துக்கு ஒரு சட்டை. ஐந்து பெண்களுக்கும் ஒரே துணி, டிசைன் மாறி இருக்கும், தம்பிக்கு மட்டும் ரெடிமேட் ரௌசரும், சேட்டும் அது அனேகமாய் பள்ளிக்கூட உடுப்பாயும் இருக்கும். அச்சு முறுக்கு சோகி என அந்த சூழலுக்கு ஏற்ப பலகாரமும் கட்லட், அல்லது கூனி வடையோ செய்து அதை கொண்டு சொந்தக்காரர்கள் வீட்டுக்கு போனால் காணிக்கை தருவார்கள். ஒருரூபாய், மூன்று ரூபாய் என,, அதனால் இந்த பலகாரம் காவி வேலைக்கு எங்களுக்குள் போட்டியோ இருக்கும், வீட்டில் விருந்துச்சாப்பாடும் அதான் இறைச்சிக்கறியும் சமைத்து மாமா வீட்டுக்கு கொண்டு போனால் மாமி ஐந்து ரூபா தருவா! அன்று பின்னேரம் கல்முனையிலிருந்து பாபூஜி ஐஸ்கிரிம் வண்டி ஸ்பீக்கர் சத்தத்தோட வரும். பாட்டும் லைட்டுமாய் வரும் வண்டிக்கு பின்னால் ஓடுவோம். கும்மாளம் தான்.ம்ம் அதெல்லாம் கனாக்காலம்,

  பதிலளிநீக்கு
 4. நான் அறிந்து வெடி கொழுத்தி கேட்டதில்லைப்பா. ஆர்மி பிரச்சனையால் அதற்கு தடையும் கூட! அதனால் சின்ன வயதில் வெடி கொழுத்தி கொண்டாடிய கொண்டாட்டங்கள் தான் நினைவில் உண்டு

  பதிலளிநீக்கு
 5. தீபாவளி சமயத்தில் இதுமாதிரி கட்டுரைகள் நிறைய பார்க்க முடிகிறது. சுவாரஸ்யம். வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 6. மகிழ்ச்சிக்கு உரிய நாளாக கொண்டோடுவோம்
  வாழ்த்துக்கள் நண்பரே
  தம +1

  பதிலளிநீக்கு
 7. நல்லதொரு மலரும் நினைவுகள்..

  அன்பின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்..

  பதிலளிநீக்கு
 8. தீபாவளி நினைவுகள் அருமை.
  //நாமெல்லாம் சிலகாலமாக பழைய தீபாவளி பற்றியே பேசுகிறோம்! வயதாவதால் சிறுவயதுக் கொண்டாட்டங்கள் இல்லாதது காரணமா? அல்லது டெக்னாலஜிகளால் கவனம் சிதைக்கப்படாத, பாதிப்பில்லாத அந்தக் கால தீபாவளியின் சுவாரஸ்யம் இனி என்றும் இந்தக் காலத்தில் வராது! //

  என் தீபாவளி வாழ்த்துக்கள் பகிர்வில் ஸ்ரீராம் கொடுத்த பின்னூட்டம்.


  வயதானவர்கள் மட்டும் அல்ல நமக்கு பின்னால் இருப்பவர்களும் அவர்கள் நினைவலைகளை பகிர்வார்கள்.
  அலைகள் ஓய்வது இல்லை போல் நினைவலைகளும் ஓயாது என்றேன்.
  நீங்கள் பகிர்ந்து விட்டீர்கள் நாளை உங்கள் மகனும் பகிர்வான்.

  நினைவுகள் நித்தியமானது.
  உங்கள் மலரும் நினைவுகள் அருமை.

  பதிலளிநீக்கு
 9. அழகான மலரும் நினைவுகள். தங்களின் பதிவை படித்ததும் எனக்கும் சின்ன வயதில் கொண்டாடிய தீபாவளி நினைவுக்கு வந்து போனது.

  தங்களுக்கு தீபாவளி வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 10. மலரும் நினைவுகள்.....

  சிறப்பாக எழுதி இருக்கீங்க குமார். பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு

நட்பின் வருகைக்கு நன்றி..!

உங்கள் கருத்தே எழுத்தை மேம்படுத்தும்... மனதில் தோன்றுவதை மறக்காமல் சொல்லுங்கள்...