மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2015

பழிக்குப் பழி..?


ழிக்குப் பழி வாங்குவது என்பது சின்ன வயதுப்  பிள்ளைகளிடம் இருக்கும் செயல்... 'நீ என்னை அடிச்சிட்டியா... நானும் உன்னை அடிக்கிறேனா இல்லையா பாரு' என்று சவால் விட்டு அவனையோ அல்லது அவளையோ திருப்பி அடித்தால்தான் ஓய்வார்கள். இது சின்ன வயதில் மனதிற்குள் தோன்றும் வன்மம். இந்தப் பழிக்குப் பழி ரொம்ப நேரம் நீடிக்காது. அடித்துக் கொண்டு புரண்டாலும் உடம்பில் ஒட்டிய மண்ணைத் துடைக்கும் நேரத்திற்குள் மீண்டும் நட்பாகி சந்தோஷமாக விளையாட ஆரம்பித்து விடுவார்கள். ஆனால் இதே பழி வாங்கும் எண்ணம் பெரியவர்களிடம் வரும் போது அது கொலையில் முடிந்து தீராப் பகையில் கொண்டு போய் விட்டு விடுவதுடன் தொடர் கொலைகளுக்கு ஆரம்பப்புள்ளி ஆகிறது.

'என்னோட எதிரி அவன்... ரொம்ப சந்தோஷமா... நல்லாயிருக்கானே... நல்லா இருக்கலாமா... கூடவே கூடாது' என்று நினைத்து அவனைப் பற்றி அவனுக்கு நெருக்கமானவர்களிடம் போட்டு விட்டு அவர்கள் அடித்துக் கொள்வதைப் பார்த்து சந்தோஷம் அடையும் குரூரப் புத்தி கொண்டவன் தனது எதிரியை மறைமுகமாக பழி வாங்கி விட்டோம் என்று மனசுக்குள் சந்தோஷப்பட்டுக் கொள்வான்.  ஆனால் அவனது சந்தோஷம் நீடிக்குமா என்றால் அதுதான் இல்லை... இவனால் பாதிக்கப்பட்டவனுக்கு எப்படியும் இதற்கெல்லாம் காரணம் யார் என்று தெரியவரும் போது  அவன் இவனைப் பழி வாங்கக் காத்திருந்து அதற்கான நேரம் சரியாக அமையும் பட்சத்தில் அதை கச்சிதமாகச் செய்து முடிப்பான்.  இந்தப் பழிவாங்கும் நடவடிக்கை இருவரின் குடும்பத்துக்குள்ளும் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும்.

இப்ப எதுக்கு இதைச் சொல்ல வாறேன்னா ரெண்டு நாளைக்கு முன்னால மனசின் பக்கத்துல ரெண்டு வக்கீலு கொம்பன் படத்தின் நாயகன் எஞ்சாதி... ஓஞ்சாதியின்னு பொஞ்சாதிக்கு அடிச்சிக்கிட்ட மாதிரி அடிச்சிக்கிட்டு படிச்ச நாதாரிங்க போட்ட சண்டையில ஒருத்தன் செத்துட்டான்னு சொல்லியிருந்தேன் இல்லையா... கொன்னவன் ஜெயிலுக்குப் பொயிட்டான்... கொஞ்ச நாள்ல ஜாமீன்ல வருவான்... அவனை நாங்க போடுவோம்ன்னு செத்தவனோட குடும்பம் இப்பவே சொல்லிக்கிட்டு இருக்கு...  அவன் எப்ப வந்தாலும் சொன்னபடி அவனைப் போடுவானுங்க... அப்புறம் அவனோட ஆளு இவங்கள்ல ஒருத்தரைப் போடுவாங்க... அப்புறம் இவங்க அங்க ஒருத்தரை... இப்படி பழிக்குப் பழி தலைமுறை தலைமுறையாத் தொடரத்தான் செய்யும்... பகை வளர்க்கும் பகை இது. இது பத்தையில நெருப்பை வச்ச மாதிரி... எல்லாப் பக்கமும் பிடித்து எரியாமல் விடாது.

எனக்குத் தெரிந்த ஒரு அம்மா, ரொம்ப பணக்காரக் குடும்பமெல்லாம் கிடையாது... கஷ்டப்பட்டவங்கதான்... அவங்களோட மகன் தன்னோட மனைவியுடன் சண்டை போடுவதையே வாடிக்கையாக வைத்திருப்பான் போல...  இந்த அம்மாவும் வாயை வச்சிக்கிட்டு சும்மா இருக்காது போல... புருஷன் பொண்டாட்டி சண்டையின்னா அவங்க கத்திட்டு சமாதானம் ஆயிருவாங்கன்னு போக வண்டியதுதானே... அதை விட்டுட்டு அப்பத்தான் மாமியாருங்கிற பவுசைக் காட்டும் போல... அவன் அடிக்கும் போதெல்லாம் நல்லா போடுடான்னு சொல்லி அவனை ஏத்திவிடும் போல... ஒரு சில நாட்களில் அவளை வெட்டுடான்னு ஏத்திவிடுவாக போல... ஒரு நாலைஞ்சு மாசத்துக்கு முன்னால பொண்டாட்டி கூட சண்டை போட்டிருக்கான்... சண்டை  ரொம்ப வலுத்துப் போக, சண்டாளன் கோவத்துல பொண்டாட்டியை வெட்டிக் கூறு போட்டுட்டான். அவனையும் கொலை செய்யத் தூண்டிய அம்மாவையும் அதற்கு உடந்தையாக இருந்த அண்ணன் பொண்டாட்டியையும் தூக்கி உள்ள போட்டுட்டாங்க.

அந்தப் பொண்ணோட பொறந்தவனுங்க உன்னை பழிக்குப் பழி வாங்காம விடமாட்டோம்டான்னு ஒரு வெறியோட திரிஞ்சிருக்கானுக. ஜெயில்ல இருந்து மூணு பேரும் ஜாமீன்ல வந்துட்டாங்கன்னு தெரிஞ்சதும் காரியத்தை முடிக்க காலநேரம் பாத்துக்கிட்டு இருந்திருக்கானுக... சில நாளுக்கு முன்னால கோர்ட்டுக்கு கையெழுத்துப் போடப் போயிருக்காங்க இவங்க நேரம் கலாம் ஐயா செத்ததால அரசாங்கம் விடுமுறை விட்டிருச்சு. உடனே அண்ணன் பொண்டாட்டி அப்பன் வீட்டுக்குப் போக, ஆத்தாளும் மகனும் பஸ் ஏறி மக வீட்டுக்குப் போயிருக்காங்க... தங்களோட உடன்பிறப்பை சாகக் கொடுத்தவனுங்க ஏற்பாடு பண்ணுன ஆளுங்க வழியில பஸ்ஸை மறித்து எல்லோரையும் இறங்கச் சொல்லிவிட்டு பஸ்ஸூக்குள்ள வச்சே ஆத்தாளையும் மகனையும் அரிவாளால் ஆய்ந்து போட்டுட்டு பொயிட்டானுங்க. பழிக்குப் பழி வாங்கிட்டோம்ன்னு சந்தோஷப்பட்டுகிட்டாலும் ஒரு வயதான பொம்பளையை வெட்டிச் சாய்க்க எப்படி மனது வந்தது? பாவம் கையெடுத்துக் கும்பிட்டிருக்கும் போல கையில வெட்டியிருகானுக... ஒரு பத்துப் பதினைந்து போட்டோவை மச்சான் வாட்ஸ் அப்பில் அனுப்பியிருந்தான்... கொடூரம்ன்னா கொடூரம் அம்புட்டுக் கொடூரம்... பாக்க முடியாம அப்பவே அழிச்சிட்டேன். இந்த பழிக்குப் பழி வாங்கும் நடவடிக்கையால் யாருக்கு லாபம்? இவங்களை வெட்டியவனின் சாவு எந்த விதத்தில் அமையும்..? எவனோ ஒருத்தன் அவனை வெட்டுவான்? இப்படித்தானே மாறி மாறி போய்க் கொண்டிருக்கும். பழி வாங்குவதால் ஒரு பிரயோசனும் இல்லை என்பதை ஏன் நாம் உணருவதில்லை..?

'உன்னை நான் பழிக்குப் பழி வாங்குறேனா இல்லையா பார்' என்று சண்டையில் பேசிக் கொண்டாலும் அதை எல்லாம் மறந்து வாழும் சிறுவர்கள் உலகமே சிறப்பானது. அது கள்ளங் கபடமில்லாதது. அடித்து உருண்டு ஒருவர் முகத்தில் ஒருவர் நகத்தால் கீறிக் கொண்டாலும் 'பார்றா நீ கீறுனதை... ' என்று ஒருவருக்கு ஒருவர் காட்டிக் கொள்வதில் ஆகட்டும்... 'சரிடா... இனி அப்படிச் செய்ய மாட்டேன்' என்று சொல்லி அணைத்துக் கொள்வதில் ஆகட்டும்.... அவர்களின் முன்னே பத்து நிமிடம் கூட வாழாத பழிக்குப் பழி என்னும் சொல் பழி வாங்கப்படுகிறது. பெரியவர்கள் மத்தியில் அந்தச் சொல்லுக்கு பலம் சேர்க்கப்படுகிறதே தவிர அதை தூக்கி எறிய நினைப்பதில்லை. அந்தச் சொல்லை அங்காளி பங்காளி எல்லாம் எண்ணெய் ஊற்றி வளர்க்கத்தான் செய்வார்களே தவிர யாரும் அதை விட்டுத் தள்ளுன்னு சொல்றது இல்லை.

பழி வாங்கும் எண்ணம் மனசுக்குள் வந்தாலே அந்த வன்மம் வளர்ந்து வளர்ந்து... மிகப் பெரிய விருட்சமாகிறது. அந்த விருட்சம் விழுதுகளைப் பற்றி கவலைப்படுவதில்லை... எனக்கு இப்ப வேண்டியது அவனை எப்படியாவது பழி வாங்க வேண்டும் என்பது மட்டுமே என்ற எண்ணத்தின் உந்துதலே மிகப்பெரிய தவறுகளைச் செய்ய வைக்கிறது. அதனால் ஒருவன் பாதிக்கப்படுகிறான்... மற்றொருவன் வாழ்க்கை இழக்கிறான் என்பதுடன் முடிவதில்லை... அதன் பிறகான நாட்களில் அவர்களின் வாரிசுகளும் தங்களின் வாழ்வின் வசந்தத்தை இழக்கிறார்கள் என்பதை யாரும் நினைப்பதில்லை. அந்த நேரத்தில்  என்ன நினைக்கிறார்களோ அது நடக்க வேண்டும் அவ்வளவே. ஆனால் வாழ்க்கை...?

இந்தப் பழிவாங்கல் மனிதர்களிடம் மட்டுமல்ல... ஐந்தறிவு ஜீவன்களிடமும் இருக்கத்தான் செய்கிறது. நாங்கள் பள்ளியில் படிக்கும் போது எங்க மாமாவின் தோட்டத்தை லீசுக்கு எடுத்து அப்பா பார்த்துக் கொண்டிருந்தார். எங்கள் தோட்டத்தைத் தாண்டி உறவினர் ஒருவரின் தோட்டம்... அவரும் தினமும் அந்த வழியாகத்தான் போவார். ஒருநாள் போகும் போது நல்லபாம்பு ஒன்று குறுக்கே நிற்க, இவரும் அதை அடித்து விட்டார். அடிபட்ட பாம்பு குடல் வெளியில் தெரிய அருகில் இருந்த புதருக்குள் புகுந்து விட்டது. தேடிப்பார்த்தார்... மற்றவர்களும் தேடினார்கள்... கண்டு பிடிக்க முடியவில்லை. சரி இந்தளவுக்கு அடிபட்டது எங்கிட்டு பொழைக்கப் போகுதுன்னு பொயிட்டாங்க... ஆனா பாருங்க... மறுநாள் அதே இடத்துல செடிகளுக்கு மத்தியில் வயித்தை இழுத்துக்கிட்டு அவருக்காக வந்து கிடக்குது அந்தப் பாம்பு.. ஆனா அதால ஓடிவந்தெல்லாம் அவரையோ அல்லது மற்றவர்களையோ கொத்த முடியாத நிலை. 'ஷ்ஷ்.. ஷ்ஷ்...'ன்னு தலையைத் தூக்கிக்கிட்டு காத்திருக்கு... அவரு அந்த வழியா போனப்போ அதைப் பார்த்துட்டாரு... சரிதான் நமக்காகத்தான் காத்திருக்குன்னு எங்க வீட்ல கம்பு வாங்கி அதை அடித்து பால், காசு, அரிசி எல்லாம் போட்டு புதைச்சாங்க.

சரி விஷயத்துக்கு வருவோம்... எந்த விஷயத்துக்காகவும் யாரையும் பழி வாங்க நினைக்க வேண்டாம். கெடுவான் கேடு நினைப்பான் என்பது போல நமக்கு ஒருத்தன் கெடுதல் நினைத்தாலும்... அதைச் செய்தாலும் நாம் நம் பாதையில் பயணித்தால் எவன் நமக்கு கேடு நினைத்தானோ அவன் அதை அனுபவித்துக் கொண்டிருப்பான்... கொலை செய்தவனைப் பழி வாங்குவதால் என்ன லாபம்... அவன் இருந்து அணு அணுவாக சித்ரவதை அனுபவித்து தான் செய்த பாவமே இப்ப அனுபவிக்கிறேன் என்று புலம்பிச் சாக வேண்டும். அதை விட்டு ஒத்தைப் போடு போட்டு நல்ல சாவை எதற்காக அவனுக்கு கொடுக்க வேண்டும். பழி வாங்கும் எண்ணம் எந்த விஷயத்திலும் மனசுக்குள் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மற்ற கெட்ட எண்ணங்களுக்கு மூட்டை கட்டி வைத்துவிட்டு நன்மையே செய்வோம்... நல்லதையே அடைவோம்.
-'பரிவை' சே.குமார்.

20 எண்ணங்கள்:

இளமதி சொன்னது…

பழிவாங்கல் உணர்ச்சி எத்தனை கொடூரமானது!
உங்கள் பதிவில் நீங்கள் எழுதியதை படிக்கும்போது
நடந்த விடயத்தை நேரில் பார்த்தது போல்
உடல் நடுங்க உணர்ந்தேன்...!

அறிவிற்கு எட்டாத, செய்யாத செயல்களுக்கே இப்படிக் கிடந்து
அழுந்தி அனுபவிக்கின்றோமே.. தெரிஞ்சு பழிக்குப் பழின்னு
செய்து இன்னும் உளலனுமா?..
மனம் தொட்ட பதிவு சகோ!

த ம 2

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

அருமை நண்பரே
தீய எண்ணங்களுக்கு மனதில் இடம் தராமல்இருப்போம்
நன்றி
தம +1

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

பழிக்குப் பழி - தேவையில்லாத பலி...

சாரதா சமையல் சொன்னது…

பழி வாங்கும் எண்ணம் இல்லாமல் வாழ பழகி கொள்வோம்.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

பதிவின் இறுதியில் வந்த சொற்கள் பதிவிற்கு முத்தாய்ப்பு

ஸ்ரீராம். சொன்னது…

பழி வாங்கும் குணம் மனிதனுக்கே உரியது. மிருக உணர்ச்சி அதிகம் இருப்பவர்களாக இருப்பார்கள். பாம்பெல்லாம் பழி வாங்காது குமார். பாவம் அது. அடிபட்ட இடத்திலேயே உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் கொண்டிருந்திருக்கும். பாம்பு பழி வாங்குவதெல்லாம் (இராமநாராயணன்) படத்தில்தான் சாத்தியம்!

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

அருமையான கட்டுரை....இப்படி போய்க் கொண்டே இருந்தால் முடிவே இல்லை என்றாகிவிடும்....சிறு வ்யதிலேயே கூட இந்தப் பழி வாங்கும் உணர்வை விளையாட்டாக இருப்பதையுமே கிள்ளி எறிந்து விட்டால் நல்லதே நடக்கும்...

”தளிர் சுரேஷ்” சொன்னது…

பழிக்குப்பழி என்பது கொடுமையான விஷயம்! நல்லபாம்பு பழிவாங்குவது கட்டுக்கதை என்று சொல்லுவார்கள்! நீங்கள் சொல்வதைப்பார்த்தால் உண்மைதான் போலிருக்கிறதே!

வெங்கட் நாகராஜ் சொன்னது…

பழிக்குப் பழி.... இந்த எண்ணம் மிகவும் கொடுமையானது. இங்கே தில்லியிலும் அவ்வப்போது இப்படி பழி வாங்கும் செய்திகளைக் கேட்கும் போது மனது பதறும். இன்றைக்குக் கூட அப்படி ஒரு செய்தி கேட்டு மனது பதைபதைத்தது!......

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அக்கா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஐயா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அம்மா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஐயா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
ஐந்தறிவு ஜீவன்களும் பழிக்குப் பழி வாங்கியதாக சில கதைகள் கிராமப்புறங்களில் உண்டு அண்ணா....
அந்தப் பாம்பு உயிருக்கே போராடியிருந்தாலும் நாங்கள் அந்தப்பக்கமாக அடிக்கடி ஓடுவதும் வருவதுமாக இருந்தோம். பக்கத்து தோட்டத்துக்காரர் அதில்தான் போய் வந்தார். அப்பொழுதெல்லாம் வராதது... அதே உச்சிவேளையில் மட்டும் வந்தது ஏன்...?

எனக்கும் பழி வாங்கும் என்ற நம்பிக்கையெல்லாம் இல்லைதான்.... இருந்தாலும் எனக்குத் தெரிய நடந்த நிகழ்வு இது.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க துளசி சார் / கீதா மேடம்..
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க நண்பரே...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

KILLERGEE Devakottai சொன்னது…

வணக்கம் நண்பரே அருமையான பதிவு மனிதன் இன்னும் மனிதம் படிக்கவில்லை 80தையே காட்டுகிறது இதன் தொடக்கத்திற்க்கு இன்றைய திரைப்படங்களும் ஒரு காரணமே வாழும் காலம் கொஞ்சமே போகும் தூரம் அறியாத மனிதன் இப்படி வாழ்வைப் பாழாக்குகின்றான்
தாமத வருகைக்கு வருந்துகிறேன்.
தமிழ் மணம் 7

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அண்ணா...
எப்பவந்தால் என்ன எப்போதும் தட்டிக் கொடுப்பவர்தானே தாங்கள்...
கருத்துக்கு நன்றி... வருத்தமெல்லாம் வேண்டாம்.