மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

செவ்வாய், 13 ஜனவரி, 2015

வாழ்த்து அட்டை இல்லாத பொங்கல் தித்திக்கிறதா?

கிராமத்து வாழ்க்கையில் முக்கியமான நிகழ்வு பொங்கல் ஆகும். வீட்டுப் பொங்கல் அன்று இருக்கும் மகிழ்ச்சியை விட மாட்டுப் பொங்கலன்று கிடைக்கும் மகிழ்ச்சியே அளவில்லாதது. காரணம் என்னவெனில் ஊரே கூடி ஓரிடத்தில் பொங்கல் வைத்து ஆடு, மாடுகளை பொங்கல்குழி (திட்டிக்குழி) தாண்ட வைத்து பாச்சோறு தீட்டி, கோவிலில் தீபம் பார்த்து மாடுகளை அவிழ்த்து விரட்டி சந்தோஷித்து திரும்புவதே.

பொங்கல் நிகழ்வில் சில வருடங்களுக்கு முன்னர் முக்கிய நிகழ்வாக இருந்தது வாழ்த்து அட்டைகள். பள்ளி, கல்லூரியில் படிக்கும் காலத்தில் புத்தகக்கடைகள் தவிர புதிதாக வீதியோரத்தில் முளைத்த கடைகளிலும் விதவிதமான வாழ்த்து அட்டைகள் விற்பார்கள். இயற்கை, சாமிகள், நடிகர்கள், நடிகைகள் என அழகழகாய் படங்கள் இருக்கும். விதவிதமான டிசைனில் பல்வேறு டிசைனில் விற்பார்கள்.

நிறைய அட்டைகளை வாங்கி அதில் வாழ்த்தாய் சிலவரிகள் கவிதை எழுதி, முகவரி சரி பார்த்து அஞ்சல் நிலையத்தில் போய் ஸ்டாம்ப் வாங்கி அங்கிருக்கும் பசையை எடுத்து நேர்த்தியாய் ஒட்டி அனுப்பி விட்டு வருவோம். அதில்தான் எத்தனை சந்தோஷம். மாமாவுக்கு... மச்சானுக்கு... அண்ணனுக்கு... தம்பிக்கு... தோழனுக்கு... தோழிக்கு... அக்காவின் குழந்தைகள்... அண்ணனின் குழந்தைகள் என தரம் பிரித்து வாழ்த்து அனுப்பி வைப்போம்.

பெரும்பாலும் எங்க ஊர் தபால்காரர் வாழ்த்து அட்டைகளை மாட்டுப் பொங்கல் வைக்கும் போது அங்கு வந்து ஒவ்வொருவராய் கூப்பிட்டுக் கொடுப்பார். வாங்கிய வாழ்த்து அட்டைகளைப் பிரித்து யார் அனுப்பியிருக்கா? என்ன படம் அனுப்பியிருக்காங்க எனப் பார்த்து சந்தோஷிப்போம். அந்த வாழ்த்துக்கள் கொடுத்த சந்தோஷத்தை  இன்றைய வாழ்த்து முறை கொடுக்கிறதா என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டும்.

கேலி முறைக்காரருக்கு வாழ்த்து அட்டையில் ஸ்டாம்ப் ஓட்டாமல் அனுப்பி அவரிடம் இருந்து தபால்காரர் அபராதமாக பணம் பெற்றுச் சென்றதைக் கேட்டு சந்தோஷிப்பதும் அவர் நமக்குத் திரும்பி அதேபோல் அனுப்பி நாம் அபராதம் செலுத்தியதைக் கேட்டு அவர் சந்தோஷிப்பதும் என குதூகலங்களுக்கு குறைவில்லாத பொங்கல்களைக் கொடுத்தது வாழ்த்து அட்டைகள் வாசம் செய்த அன்றைய பொங்கல் நாட்கள்.

இன்றைய பொங்கலுக்கு தொலைபேசியிலோ... மின்னஞ்சலிலோ... குறுஞ்செய்தியிலோ... முகநூலிலோ... அல்லது வாட்ஸ் அப்பிலோ அனுப்பும் வாழ்த்துக்கள் எல்லாம் கடமைக்காகவே பரிமாறப்படுகின்றன. இவை உண்மையான பாசத்தைச் சுமந்து செல்வதில்லை. எனக்கு யாரோ ஒருவர் அனுப்பிய ஒரு வாழ்த்தை அப்படியே நான் எனது உறவுகளுக்கு அனுப்பி வைக்கிறேன். இதில் அன்று வாழ்த்து அட்டை கொடுத்த சந்தோஷம் துளி கூட கிடைப்பதில்லை.
அன்று வாழ்த்து அட்டைகள் வாழ்த்தை மட்டும் சுமந்து வரவில்லை... உறவுகளின் பாசத்தையும் சுமந்து வந்தது. அதில் ஒரு சந்தோஷம் இருந்தது... பிடிப்பு இருந்தது. இன்று அனுப்பும் வாழ்த்திலோ சந்தோஷமோ பிடிப்போ இல்லை. அனுப்பியிருக்கேன் பாத்தியா என்றால் ஆமா ஒரே படத்தை எத்தனை பேர்தான் அனுப்புவாங்க... பாப்போம் என்பதே பெரும்பாலும் பதிலாய் வருகிறது. இதன் பின் சந்தோஷம் நிகழுமா என்ன?

பொங்கலுக்கு ஒரு வாரம் முன்னே அட்வான்ஸ் பொங்கல் வாழ்த்துக்கள் மாமா என அக்கா மகன் வாட்ஸ் அப்பில் செய்தி அனுப்பியிருக்கிறான். பொங்கல் அன்று சாப்பிட்டால்தானே அது தைப் பொங்கல். மற்ற நாளெல்லாம் சாப்பிட்டால் அது சாதாரண பொங்கல்தானே. மாட்டுப் பொங்கல் அன்று கையில் பத்துப் பதினைந்து வாழ்த்து அட்டைகளை தபால்காரரிடம் இருந்து பெற்று ஒவ்வொன்றாய் பார்த்து ரசித்து மகிழ்ந்த அந்த சந்தோஷம் ஒரு வாரம் முன்னர் வந்த குறுஞ்செய்தியில் கிடைக்கவில்லையே..?

நாமெல்லாம் வாழ்த்து அட்டைகள் அனுப்பியும் பெற்றும் அந்தச் சந்தோஷத்தில் திளைத்திருக்கிறோம். நம் வாரிசுகள் கை நோண்டும் செல்போன் வழி ஒரு வரி குறுஞ்செய்தியை அனுப்பி சந்தோஷப்படுகிறார்கள். இதில் உண்மையான சந்தோஷம் எங்கிருக்கிறது? தொலைக்காட்சி பட்டிமன்றமும், சினிமாக்களும், நடிகர் நடிகைகளின் பொங்கல் பேட்டியும் மட்டுமே இன்றைய பொங்கல் நாளை தின்று கொண்டிருக்கிறது. கூடிக் களித்த சந்தோஷங்கள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக மரித்துக் கொண்டிருக்கின்றன என்பதே உண்மை.


வாழ்த்து அட்டைகளில் நமக்கு மிகவும் வேண்டப்பட்டவர் வாழ்த்து அனுப்பினால் அதில் கிடைக்கும் சந்தோஷமே தனிதான். அப்படிப்பட்ட வாழ்த்து அட்டைகளை இன்னும் பத்திரமாய்... பொக்கிஷமாய் வைத்திருக்கிறோம்... ஆனால் இன்று மொத்தமாக குவியும் குறுஞ்செய்திகளில் வேண்டியவர் யார்... வேண்டாதவர் யார் என்றெல்லாம் தரம் பிரித்துப் பார்ப்பதில்லை... மொத்தமாய் ஒரு பார்வை... அப்புறம் மொத்தமாய் அழித்து விடுகிறோம். அன்பைத் தாங்கி வந்திருந்தாலும் அதுவும் அழிக்கத்தான்படுகிறது. 

வாழ்த்து அட்டைகள் இல்லாத பொங்கல் தித்திப்பில்லாமல்தான் இருக்கிறது என்பதே உண்மை. இன்றைய நிலையில் வாழ்த்து அட்டைகள் வாங்கி ஸ்டாம்ப் ஓட்டி அனுப்ப யாருக்கும் விருப்பமில்லை. வாழ்த்து அட்டைகள் விற்கும் கடைகளும் இப்போது இல்லை என்பதே உண்மை.
-'பரிவை' சே.குமார்.

29 எண்ணங்கள்:

அன்பே சிவம் சொன்னது…

25 முதல் 30 வருடங்கள் பின்னோக்கி யோ(சிக்க) வைத்ததுடன்
பழைய மகிழ்வான தருணங்களை நிணைவூட்டும் பதிவு.
வண்ணவண்ணமாய் வாழ்த்து அட்டைகள் வாங்கிவிட்டாலும்,
ஓட்டுவதற்க்கு ஸ்டாம்ப் வாங்க
துட்டு இல்லாததாலும் ,
வாழ்த்து அட்டையின் அழகு வேறு யாருக்கும் அனுப்ப மனமில்லாததாலும், வாங்கிய பல அட்டைகள் பத்திர(மட்டுமல்ல)(ரகசிய)மாய் பாதுகாக்கப்பட்டு வைக்கப்பட்டாலும் அடுத்த பொங்கலுக்குள் சத்தமில்லாமல் களவாடப்பட்டு அவற்றில் சில நமக்கே அனுப்பப்படும்.

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

பொங்கல் வாழ்த்துக்கள் நண்பரே
தம 1

கோமதி அரசு சொன்னது…

வாழ்த்து அட்டைகளை தேடி தேடி பகிர்ந்த காலங்கள் மனதை விட்டு நீங்காது.
அழகான மலரும் நினைவுகளை மீட்ட பதிவு, நன்றி.
வாழ்த்துக்கள்.
உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினர்களுக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன்.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

ம்... அது ஒரு அழகிய கானக்காலம்....

இனிய தமிழர் தின நல்வாழ்த்துக்கள்...

துரை செல்வராஜூ சொன்னது…

அன்பின் குமார்..
தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்..
பழைய நினைவுகளில் மூழ்குகின்றேன் - தங்களுடைய பதிவினைக் கண்டு!..

ராமலக்ஷ்மி சொன்னது…

வாழ்த்து அட்டைகளை அனுப்புவதிலும் பெறுவதிலும் ஆனந்தித்த அழகான நாட்களைக் கண் முன் கொண்டு வந்து விட்டீர்கள்.

தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் தைப்பொங்கல் நல்வாழ்த்துகள்!

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

காலம் மாறமாற நாம் இழந்துகொண்டிருப்பனவற்றுள் இதுவும் ஒன்று. உண்மைதான், ஆனால் தவிர்க்கமுடியாததாகிவிட்டதே இந்த அறிவியல் யுகம். பகிர்வுக்கு நன்றி.

UmayalGayathri சொன்னது…

பொங்கல்,தீபாவளியென அட்டைகள் தேடித்தேடி வாங்கிய நினைவுகள் மலர்கிறது.
பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

sury siva சொன்னது…

எனது உளங்கனிந்த
பொங்கல் நல்வாழ்த்துக்கள்!
subbu thatha

”தளிர் சுரேஷ்” சொன்னது…

பழைய நினைவுகளை கிளறிவிட்டீர்கள்! இனிய பொங்கல்நல்வாழ்த்துக்கள்!

KILLERGEE Devakottai சொன்னது…

படித்தவுடன் சந்தோஷப்படவில்லை நண்பரே... மனம் கணத்து விட்டது எவ்வளவு சந்தோஷங்களை இழந்து விட்டோம் பொங்கல் நல்வாழ்த்துக்கள்
த.ம.4

ஸ்ரீராம். சொன்னது…

அப்போதெல்லாம் யார் கையிலும் வாட்ச் இல்லை, எல்லோரிடமும் நேரம் இருந்தது. இப்போது எல்லோர் கையிலும் வாட்ச் இருக்கிறது, ஆனால் யாரிடமும் நேரமில்லை என்று சொல்வார்களே, அது நினைவுக்கு வருகிறது. டெக்னாலஜி வளர, வளர எல்லாம் போலித்தனமாகி விட்டது!

சென்னை பித்தன் சொன்னது…

வாழ்த்து அட்டைகள் அனுப்பும்போதும்,பெறும்போதும் கிடைத்த மகிழ்ச்சி இக்கால வாழ்த்துப் பரிமாற்றங்களில் இல்லையே!
இனிய பொங்கல் வாழ்த்துகள்

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க வணக்கம்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
தங்களுக்கும் தங்கள் இல்லத்தாருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஐயா..
வணக்கம்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
தங்களுக்கும் தங்கள் இல்லத்தாருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அம்மா...
வணக்கம்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
தங்களுக்கும் தங்கள் இல்லத்தாருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அண்ணா...
வணக்கம்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
தங்களுக்கும் தங்கள் இல்லத்தாருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஐயா..
வணக்கம்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
தங்களுக்கும் தங்கள் இல்லத்தாருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அக்கா...
வணக்கம்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
தங்களுக்கும் தங்கள் இல்லத்தாருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஐயா...
வணக்கம்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
தங்களுக்கும் தங்கள் இல்லத்தாருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சகோதரி...
வணக்கம்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
தங்களுக்கும் தங்கள் இல்லத்தாருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சுப்பு தாத்தா...
வணக்கம்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
தங்களுக்கும் தங்கள் இல்லத்தாருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க நண்பரே...
வணக்கம்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
தங்களுக்கும் தங்கள் இல்லத்தாருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அண்ணா...
வணக்கம்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
தங்களுக்கும் தங்கள் இல்லத்தாருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அண்ணா...
வணக்கம்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
தங்களுக்கும் தங்கள் இல்லத்தாருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

Unknown சொன்னது…

தானே படம் வரைந்து நண்பர் ஒருவர் எனக்கு அனுப்பிய ஓவியம் ,முப்பதாண்டுகளுக்கு பிறகும் அவர் நினைவை இன்றும் சுமந்து ம்கொண்டே இருக்கிறது
த ம 7

எம்.ஞானசேகரன் சொன்னது…

பழைய மறக்க முடியாத நினைவுகளை அசைபோட்டிருக்கிறீர்கள் வாழ்த்துக்கள். த.ம.8

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

மிகவும் அருமையான பதிவு. பழய நினைவுகளை கிளப்பிவிட்டுவிட்டது...ம்ம்ம் மனமும் கலங்கியது.....என்னே அருமையான நாட்கள் அவை.....மீட்டெடுக்க முடியாது...மனப்பேழையில் மட்டுமே.....ஆம்! நாங்களே வரைந்து அனுப்பியது உண்டு.....போஸ்ட் கார்டுகள்....இப்படிப் பல...அன்பும் நேசமும் சுமந்து....

yathavan64@gmail.com சொன்னது…

அன்பு தமிழ் உறவே!
வணக்கம்!

இன்றைய வலைச் சரத்தின்,
திருமதி R.உமையாள் காயத்ரி அவர்களின்
"மழை" யில்

சிறப்புமிகு பதிவாளராக தாங்கள் தேர்வாகி,
வலம் வந்தது கண்டு மிக்க மகிழ்ச்சி!
வாழ்த்துகள்!

வலைச் சரம் வானத்தில் வானவில்லாய்
உமது பதிவின் எழில் முகம் கண்டேன். களிப்புறேன்.
உவகை தரும் உமது பதிவுகள் உயிரோவியமாய் திகழட்டும்!
தேன் தமிழாய் சுவைக்கட்டும்! திகட்டாமல் திக்கெட்டும்.

நட்புடன்,
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.com

(குழலின்னிசையின் உறுப்பினராகி உவகை தர வேண்டுகிறேன் நன்றி)