மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

புதன், 7 ஆகஸ்ட், 2013

அம்மான் மகனே...


அம்மன் கோவிலுக்கு
வாறேன்னு சொன்ன
அம்மான் மகனுக்காக
அவன் விரும்பும்
பாவாடை தாவணியில்
கூந்தல் காயுமுன்னே
சூடிய மல்லிகை மணக்க
அர்ச்சனைக் கூடை
தூக்கி அரக்கப்பறக்க
ஓடி வந்தால் சிறுக்கி
மனசை சிறைபிடித்த
கிறுக்குப் பயலை
இன்னும் காணோம்....

அர்ச்சனையை அவன்
பேருக்குச் செய்து
பிரகாரம் சுற்றி
பிரசாதம் வாங்கி
வராதவனை அர்ச்சித்தபடி
குளக்கரை படித்துறையில்
அமர்ந்து நேற்றைய
சந்திப்பின் இனிமையை
நினைவில் நிறுத்தி
உதடு சிரிக்க...
அவனைக் காணாது
உள்ளம் கொதிக்க...

என் கண் முன்னே
காதல் புறாக்கள்
கொஞ்சி மகிழ...
என் மகிழ்ச்சி
மறையும் சூரியனாய்
கரைந்து போக
கோபச்சூடு மூச்சில்
முன்னே பொங்கி வர...

கோவிலுக்குப் போனா
வரமாட்டாளேன்னு
அம்மா தேடுவா...
இவ்வளவு நேரமான்னு
அப்பா வேற கேப்பாரு...
பரவாயில்லை மச்சான்
எப்பவும் சொல்ற
பொய் எங்கிட்ட இருக்கு...

சொன்ன நீ வராம
எங்க போன மச்சான்
எப்போ வருவே மச்சான்
தவிக்கும் சிறுக்கி மனசு
கல்லுப்பட்ட தண்ணியா
சிதறிக் கிடக்கு...
விருப்பமில்லாம
வீட்டுக்குப் போறேன்...

வெளக்கு வச்சதும்
வெளிய வருமென்னை
வீதியில நின்னு பாத்துக்க...
விதியேன்னு நானும்
உன்னை பார்த்துக்கிறேன்...

இன்னைக்கு நாம
பாக்கலைன்னாலும்
நேற்று தட்சிணாமூர்த்தி
தரிசனம் தந்த
நினைப்போட போறேன்...

நாளைக்கு சனிக்கிழமை
ஆஞ்சநேயர் கோவிலுக்கு
வடைமாலை சாத்த வாறேன்
இன்னைக்கு மாதிரி
இல்லாம சொன்னபடி
வந்திரு மச்சான்...

அஞ்சு மணிக்கு வந்து
வடமாலை சாத்திப்புட்டு
வாகைமரக் கரையோரம்
ஆறு மணி வரைக்கும்
ஆரும் காணாம
காத்திருப்பேன் மச்சான்...
காக்க வைக்காம
காத்தா வந்திரு மச்சான்...
-'பரிவை' சே.குமார்

8 எண்ணங்கள்:

ராஜி சொன்னது…

இதான் பசங்க கோவிலுக்கு போறதன் மர்மமா?!

கோமதி அரசு சொன்னது…

கவிதை நன்றாக இருக்கிறது.
தவிப்பு அருமையாக வெளிப்படுகிறது.

Menaga Sathia சொன்னது…

அழகான காதல் கவிதை..

sathishsangkavi.blogspot.com சொன்னது…

ரொம்ப நாள் ஆச்சு கோவிலுக்க போய்... மீண்டும் போகனும்ன்னு ஆசை... அப்படியே....

சென்னை பித்தன் சொன்னது…

காதலில் காத்திருந்து காணது போவது வேதனைதான்
அருமை

ஸ்ரீராம். சொன்னது…


எளிய வரிகளில் கவிதை அருமை. பழைய நாட்கள் நினைவில் ஆடுகின்றன!

வெங்கட் நாகராஜ் சொன்னது…

காத்திருப்பதிலும் ஒரு சந்தோஷம் - இடையே சோகம் இழையோடினாலும்.....

நல்ல கவிதை. பாராட்டுகள்.

சக்தி கல்வி மையம் சொன்னது…

கிராமத்து வாடை ... கோவிலுக்கு போகும் மர்மம்.. சிறப்பான படைப்பு. வாழ்த்துக்கள்.