மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வியாழன், 22 ஆகஸ்ட், 2013

நெல் குறித்த பகிர்வுக்கு ஜோதிஜி அண்ணனின் பின்னூட்டம்


நான் நேற்று எழுதிய கிராமத்து நினைவுகளில் நெல்லும் நினைவுகளும் என்ற பதிவுக்கு எங்கள் மண்ணில் இருந்து சென்று திருப்பூரில் தொழிற் செய்யும் அன்பு அண்ணன் ஜோதிஜி அவர்கள் மிகவும் அருமையான... நீண்டதொரு பதிவை பின்னூட்டமாக எழுதியிருந்தார். டாலர் நகரம் என்ற புத்தகத்தின் ஆசிரியரான அவரின் பதிவுகள் பெரும்பாலும் சமூகம் சார்ந்தவையாகவே இருக்கும்... அண்ணனின் பின்னூட்டம் பின்னூட்டத்தில் மட்டும் இருந்தால் எல்லாரும் பார்க்க வாய்ப்பில்லை என்பதால் இங்கு பகிர்கிறேன்.... படியுங்கள்...

படியளந்தார் பண்டைத் தமிழர்! நாம் எப்படி இருக்கிறோம்..?

நமது முதியவர்கள் வாழ்க்கைப் போராட்டத்தைப் பற்றி மிக இயல்பாக' ஆண்டவன் படியளக் கிறான் ' என்று குறிப்பிடுவதுண்டு. கிராமங்களில் வேலைக்குப் போய்ச் சம்பாதித்து சற்று வசதியாக வாழ்பவர்களை 'உனக்கென்னப்பா ..முதலாளி படியளக்கிறாரு ......' என்று நண்பர்கள் நையாண்டி செய்வதுண்டு. ஆணவத் தொனியில் பேசுபவர்களைப் பார்த்து 'என்னமோ நீ படியளக்கிற மாதிரியில்ல பேசுறே..' என்று வரிந்து கட்டுவதுண்டு.

படியளப்பது என்பது என்னவென்று நமது இந்த நவீன கால இளம் வயதுத் தோழர்களுக்குத் தெரியுமா என்று தெரியவில்லை. 'சமைக்கவே வேண்டாம். அப்படியே சாப்பிடுவேன் 'என்பது போன்ற 'பாஸ்ட் புட்' கலாசாரத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற அவர்களுக்கு இது தெரிந்திருக்க நியாயமில்லை. கிராம் மற்றும் கிலோ கணக்குகளில் உழன்று கொண்டிருக்கின்ற இந்தக் கால இல்லத்தரசிகளுக்குக் கூட இது மறந்துபோய்க் கொண்டிருக்கின்ற விஷயமாக இருக்கக் கூடும். அதனால் இந்த ' படியளப்பது' குறித்த சில விஷயங்களை இங்கே பதிவு செய்து வைப்பது அவசியமாகிறது.

நெல், பயறு போன்ற தானியங்களை அளப்பதற்கு பண்டைய தமிழ் மக்கள் ஏறத்தாழ 20 வகையான அளவீடுகளைப் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். அணு , சிட்டிகை, ஆழாக்கு, உழக்கு ,படி, மரக்கால், பதக்கு, களம், பொதி, கோட்டை என்பவை அவைகளில் முக்கியமானவைகளாக இருந்தன.

'படி' என்ற உருளை வடிவிலான அளவுக் கருவியில் நெல்லை நிரப்பினால் அதில் 14,400 நெல்மணிகள் இருந்தன. அரிசியானால் 38000 மணிகளும் பயறு ஆனால் 14,800 மும், மிளகு ஆனால் 12,800 மும் இருந்தன. இது ஒரு படி என்று அளக்கப்பட்டது.

இதற்கு அடுத்ததாக 'மரக்கால் ' என்ற அளவீட்டுக் கருவி இருந்தது. எட்டு படிகளைக் கொண்டது ஒரு மரக்கால். அதாவது ஒரு மரக்காலில் நெல்லை நிரப்பும்போது அதில் எட்டுப் படிகளில் அளக்கக் கூடிய நெல் நிரம்பும். இப்படித்தான் நமது முன்னோர்கள் தானியங்களை அளவீடு செய்து வந்தார்கள்.

இந்த பழங்கால அளவீட்டு முறை இப்போது அழிந்தொன்றும் போய் விடவில்லை. இன்றும் தென்னகக் கிராமங்களில் பழக்கத்தில் இருந்து வருகின்றது. பண்ணையார்களின் நிலங்களில் பயிர்த்தொழில் செய்து வருகின்ற விவசாயிகள் இந்த முறையில்தான் தங்களது குத்தகையைச் செலுத்தி வருகிறார்கள்.

இங்கே இந்த ' படியளப்பது ' பற்றிய விஷயத்தை பதிவு செய்வதின் நோக்கமே இனிமேல்தான் வருகிறது.

என்ன அது..?

சமீபத்தில் கிராமம் ஒன்றில் இப்படிப் படியளக்கும் ஒரு நிகழ்வைக் காண நேர்ந்தது. அது சுவாரஸ்யமாக இருந்தது என்று மட்டும் சொல்வதை விட வியப்பூட்டுவதாகவும் இருந்தது என்றும் சொல்லவேண்டும். அந்த நிகழ்வை விளக்குகிறேன். கேளுங்கள்.

அந்த விவசாயி மரக்கால் கொண்டு , தான் விளைவித்த நெல்லை அளந்து கொடுத்தார். இந்த 'அளப்பு' ஒரு இசைப்பாட்டு போல சந்தத்தோடு இருந்தது என்பதுவும், எண்ணிக்கையை எல்லோரும் தெரிந்துகொள்ளும் வகையில் உரத்த குரலில் இருந்தது என்பதுவும் வேறு விஷயங்கள். இங்கே நான் சொல்ல வருவது அதைப் பற்றியல்ல.

முதல் மரக்காலை 'ஒன்று' என்று எண்ணாமல் 'லாபம்' என்று அவர் சொன்னார். அடுத்து ரெண்டு,மூணு,நாலு,ஐந்து, ஆறு ,ஏழு..என்று எண்ணினார். எட்டாவது மரக்காலை எட்டு என்று அவர் எண்ணவில்லை. .'எட்டு மரக்கால்' என்று சொன்னார். அடுத்து 'ஒன்பது', 'பத்து' என்று தொடர்ந்து, பதினெட்டாவது மரக்கால் அளக்கும்போது 'பதினெட்டு மரக்கால்' என்று எண்ணினார்.

ஏன் ஒன்று என எண்ணாமல் லாபம் என்று சொன்னார்..?. ஏன் எட்டு என்று சொல்லாமல் எட்டு மரக்கால் என்று எண்ணினார்..?

இங்கேதான் நமது முன்னோர்கள் ஆதி காலம் முதலாகவே தம்மிடம் பன்முகச் சிந்தனையைக் கொண்டிருந்த சிறப்பை நாம் புரிந்துகொள்ள வாய்ப்புக் கிடைக்கிறது.

இந்த வருடத்து உழைப்பின் பயனாக வந்த முதல் மரக்கால் நெல்லை 'லாபம்' என்று சுபச் சொல்லால் குறிப்பிட்டு அந்த லாபம் அடுத்த ஆண்டும் தொடர வேண்டும் என்று அவர்கள் விரும்பினார்கள்.

'எட்டு' என்ற எண் ஏனோ ராசியில்லாத எண்ணாக உலகம் முழுவதுமே புறக்கணிக்கப்பட்டு வருகிறது.' எட்டு குட்டிச் சுவர்' என்ற சொலவடை ஒன்று இன்றும் தமிழ்நாட்டில் வழக்கில் இருந்து வருகிறது. இந்த விஷயத்தைக் கருத்தில் கொண்டுதான் தங்களின் வாழ்வாதாரமான வேளாண் வருமானத்துக்கு எந்தவிதத்திலும் பாதிப்பு ஏற்பட்டு விடாதவாறு 'எட்டு' என்று மட்டும் உச்சரிக்காமல் அதோடு நெல் நிறைந்த மரக்காலையும் சேர்த்துக்கொண்டு 'எட்டு மரக்கால்' என்று சொல்லியிருக்கிறார்கள்.

அடுத்ததாக அளந்த நெல்லை சாக்குப்பைகளில் நிரப்பிக் கட்டும் இடைவெளிகளில் நெல்லை அளப்பவர் தான் வைத்திருந்த மரக்காலை தவறிக்கூட குப்புற வைத்துவிடாமல் நிமிர்ந்த நிலையிலேயே வைத்திருப்பதில் கவனமாக இருந்ததைக் கவனிக்க நேர்ந்தது.

ஏன் அப்படி..?

ஏனெனில் கவிழ்த்து வைப்பது ' முடிந்து விட்டது' என்பதின் அடையாளமாகக் கருதப்பட்டது. படியளப்பது எப்போதுமே தொடர் நிகழ்வாக இருக்க வேண்டும் என்ற விருப்பத்தின் வினைச்செயல் அது.

இறுதியாக நெல் அளந்து முடிந்தது. இப்போதும் ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. அளந்த மரக்காலை உரியவரிடம் ஒப்படைக்க வேண்டும். அப்படி ஒப்படைத்தபோது நெல் அளந்தவர் வெறும் மரக்காலைக் கொடுக்காமல் மரக்காலில் சிறிது நெல்லை அள்ளிப்போட்டு மரக்காலைக் கொடுத்தார்.

இந்தச் செயலுக்குப் பொருளென்ன..?

நெல் அளக்கும் மரக்கால் வெறுமையாக இருக்கக் கூடாது. 'அட்சய பாத்திரத்தில் இடப்படுகின்ற ஒரு பிடிச் சோறு வளர்ந்து ஒரு ஊரின் பசியைத் தீர்ப்பது போல அந்த மரக்காலில் இடப்படுகின்ற நெல் எப்போதும் வளர்ந்து கொண்டேயிருக்க வேண்டும். அந்த மரக்கால் நெல்லை அளந்து கொண்டேயிருக்கவேண்டும் என்பது அந்த முன்னோர்களது விருப்பம். அந்த விருப்பத்தின் விளைவே இந்தச் செயலானது

இப்படியாக கொடுப்பவருக்கும், வாங்குபவருக்கும் அளந்த மரக்காலின் உரிமையாளருக்கும் கூட நன்மையே விளைய வேண்டும் என்ற நேர்மறை எண்ணங்களைத் [ Positive thinking] தம்மிடம் கொண்டு அதற்கேற்ற வகையில் தம் செயல்களை வகுத்துக்கொண்ட நம் முன்னோர்களின் அறிவுத் திறனை என்னவென்று வியப்பது..?

யாதும் ஊராக, யாவரும் கேளிராக, எல்லோரும் இன்புற்று வாழ்ந்திருக்கிறார்கள் நம் முன்னோர். நாம் எப்படி இருக்கிறோம்..?

அண்ணனின் பின்னூட்டம் இதுதான் எவ்வளவு அற்புதமான விஷயத்தைப் பகிர்ந்திருக்கிறார். கடைசியில் "fb" என்று போட்டிருந்தார். ஒருவேளை முகநூலில் பகிர்ந்திருக்கலாம். சமீபத்தில்தான் அண்ணனின் முகநூல் நட்பு வட்டத்தில் இணைந்தேன். அதனால் நான் அறியவில்லை.

அவர்  சொல்லியிருப்பது போல் நெல்லைப் படியால் அளக்கும் போது முதலில் லாபம் என்றுதான் சொல்லுவார்கள். பின்னர் ரெண்டு, மூணு என்று வரிசையாக எண்ணுவார்கள். எங்க பக்கத்தில் எட்டு என்று சொல்லும் போது எட்டுப்படி என்பார்கள். அதற்கு அண்ணன் சொல்லியிருப்பதே காரணமாக இருக்கலாம்.

வயலில் இருந்து கொண்டு வந்து களத்தில் வைத்த கதிர்கட்டுக்களை அடித்து நெல்லையும் வைக்கோலையும் பிரித்து, வைக்கோலை மாட்டை வைத்து பிணையல் அடித்து நல்ல நெல்லையும் பிணையலில் வந்த நெல்லையும் தனித்தனியாகத் தூற்றி காற்றுக்காக சொளகு (முறம்) வீசி சுத்தம் செய்து சுத்தமான நல்ல நெல்லை வீட்டிற்கு அள்ளி வரும் முன்னராக போராகக் கிடக்கும் நெல் குவியலில் இருந்து வேலை பார்த்தவர்களுக்கு கூலி கொடுக்க வேண்டும் என்பதில் அப்பா உறுதியாக இருப்பார். கூலியைவிட ஒருபடி ரெண்டுபடி கூடுதலாகப் போட்டுத்தான் கொடுப்பார். அதனால் அப்பாவுக்காக வேலைக்கு வருபவர்கள் வேறு யார் கூப்பிட்டாலும் செல்லமாட்டார்கள்.

அப்புறம் அளந்து முடிந்ததும் படியை குப்புற வைக்கமாட்டார்கள்.... அதில் கொஞ்சம் நெல்லைப் போட்டுத்தான் கொடுப்பார்கள். இங்கு அறையில் சோறு வடிக்கும் போது நான் அரிசி எடுத்தால் எத்தனை உலக்குப் போட்டாலும் கடைசியில் உலக்கில் நாலைந்து அரிசிகளை வைத்தே அரிசி வாளிக்குள் போடுவேன். இந்தப் பழக்கம் சிறுவயதில் நெல் அளக்கும்போது பார்த்து வந்ததுதான்.

எங்கள் பக்கம் இன்னும் இந்த அளவீட்டு முறைகள் இருக்கத்தான் செய்கின்றன... அண்ணன் ஜோதிஜி அவர்களின் பின்னூட்டத்தைப் பார்த்ததும் பதிய விரும்பினேன்.  அவர் தம்பிக்கு அனுமதிப்பார் என்ற நம்பிக்கையில் அவரிடம் அனுமதி பெறவில்லை...

திரு. ஜோதிஜி அண்ணனின் கருத்துக்கள் எப்படியிருக்கு என்று சொல்லுங்கள் உறவுகளே....

-'பரிவை' சே.குமார்.

21 எண்ணங்கள்:

துளசி கோபால் சொன்னது…

ஜோதிஜி, எதையும் கவனமாக ஆராய்ந்து பார்த்து எழுதும்வகையாளர் என்பதால் இம்முறையும் அவரது ஆழமான அவதானிப்பைப் பார்த்து வியந்தேன்.

அறியத் தந்தமைக்கு உங்களுக்கு(ம்) நன்றி குமார்.

எம்.ஞானசேகரன் சொன்னது…

மறந்து போன நினைவுகளை மறக்க முடியாத நினைவுகளாக்கி இருக்கிறார் ஜோதிஜி. அதை பதிவிட்ட உங்களுக்கு பாராட்டுக்கள்!
த.மா.2

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

விலாவாரியாக சொல்வதில் அண்ணன் எப்போதும் கில்லாடி... வாழ்த்துக்கள் உங்களுக்கும்...

பெயரில்லா சொன்னது…

மிக மிக அருமை. உண்டிக் கொடுத்தார் உயிர் கொடுத்தாரே என்பார்கள். பண்டை சமூகம் ஒவ்வொரு துளி உணவையும் போற்று வணங்கின. எமது மூதாதை வீட்டிலும் இந்த படி, மரக்கால் எனபை இருந்தன. நாங்கள் விவசாயத்தில் இருந்து நகர்ந்துவிட்ட போதும், கிராமங்களில் முதல் படியை, மரக்காலை லாபம் என்றே சொல்லக் கேட்டதுண்டு. மிக அருமையான பின்னூட்டமும், அதன் மூலப் பதிவும். :)

ஜோதிஜி சொன்னது…

பகிர்தலும் நன்றே. யாரோ எழுதி வைத்தது. என் கண்ணில் பட்டது. இன்று உங்கள் மூலம் பலருக்கும் செல்கின்றது.

யோகன் பாரிஸ்(Johan-Paris) சொன்னது…

ஈழத்திலும் இந்த அளவு முறை நடைமுறையில் இருந்தன. படி என்பதை சிலபகுதிகளில் "கொத்து" எனவும் கூறுவர்.
அத்துடன் கடைகளிலும்,சந்தையிலும் கூட அரிசி,தானியவகைகள் அளக்கும் போது முதலாவதை "லாபம்" எனக் கூறுவதை அவதானித்துள்ளேன்.
மிக அரிய விடயங்கள் அடங்கிய பின்னூட்டமும், பதிவும் பகிர்வுக்கு நன்றி

Unknown சொன்னது…

எங்கள் ஊரிலும்(ஈழம்)சில அளவை முறைகள் இருக்கின்றன.நாங்கள்,கால் சுண்டு,அரை சுண்டு,முக்கால் சுண்டு(சுமார்,ஒரு கிலோ),ஒரு கொத்து என்றும்,கால்/அரை/முக்கால் 'பறை' என்றும் சொல்லுவோம்.தமிழகத்தில் அளவிடும் முறையுடன் எப்படி ஒப்பீடு செய்வது என்று தெரியவில்லை.இன்னும்,அதிக எண்ணிக்கையான அளவீடுகள் நம்மிடையே உண்டு.மறந்து விட்டது,ஊரில் தான் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்.

Unknown சொன்னது…

யோகன் குறிப்பிட்டது போல்,'லாபம்'என்ற சொற்பதம் ஈழத்தில் வழக்கத்தில் உண்டு தான்!

கோமதி அரசு சொன்னது…

அப்புறம் அளந்து முடிந்ததும் படியை குப்புற வைக்கமாட்டார்கள்.... அதில் கொஞ்சம் நெல்லைப் போட்டுத்தான் கொடுப்பார்கள். இங்கு அறையில் சோறு வடிக்கும் போது நான் அரிசி எடுத்தால் எத்தனை உலக்குப் போட்டாலும் கடைசியில் உலக்கில் நாலைந்து அரிசிகளை வைத்தே அரிசி வாளிக்குள் போடுவேன். இந்தப் பழக்கம் சிறுவயதில் நெல் அளக்கும்போது பார்த்து வந்ததுதான்.//
நீங்கள் சொல்வது உண்மைதான். எங்கள் அம்மா வும் இப்படித்தான் சொல்வார்கள்.
எங்கள் அம்மா அரிசி பாத்திரலிருந்து ஆழாக்கால்,(உழக்கால்) அளந்து எடுக்கும் போது தலைதட்டி எடுக்க கூடாது என்பார்கள்., நிறைய குவித்து எடுக்க வேண்டும். எடுத்தபின் அதில் கொஞ்சம் அரிசியை போட்டு நிமிர்த்து வைக்க வேண்டும் கீழே வைத்து அதை கால், கை தட்டி உருள விடக் கூடாது என்பார்கள், கழுவி வைக்கும் போதும் குப்புற கவிழ்த்து வைக்க கூடாது என்பார்கள். ஆயுத பூஜை, பொங்கல் திருநாள், ஆவணி ஞாயிறு மற்றும் எல்லா விழாக்களிலும் நெற்நாழியில் நெல் அல்லது, அரிசி, நிறைய வைத்து அதற்கு பூ, பொட்டு வைத்து வழிபட சொல்வார்கள் நம் குடும்ப வழக்கம் என்பார்கள்.

சாப்பாடு சாப்பிட முடியாது என்று கோவித்துக் கொண்டால் உனக்கு இன்று இறைவன் படிஅளக்கவில்லை என்று சொல்லுவார்கள்.

ஜோதிஜி அவர்கள் சொன்னது போல் மரக்கால் என்பதை தஞ்சை வந்தபின் தான் தெரியும்.
இப்போது உள்ள குழந்தைகளுக்கு கப் அளவு தான் தெரியும். படி, எல்லாம் தெரியாது என்பது உண்மைதான்.
இறைவன் படி அளப்பான், மரம் வைத்தவன் தண்ணீர் விடுவான், எல்லாம் அவன் பார்த்துப்பான் எல்லாம் முன்னோர்களின் நம்பிக்கைகள். ஜோதிஜி சொல்வது போல்.
அவர் கருத்துக்கள் மிக நன்றாக இருக்கிறது.

நாடோடிப் பையன் சொன்னது…

An informative post. Thanks.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க துளசி கோபால்...
உண்மைதான். அண்ணன் எழுதும் எல்லாப் பகிர்விலும் ஆராய்ந்து தெளிவாக எழுதியிருப்பார்.
இந்தப் பதிவிலும் அருமையாகச் சொல்லியிருக்கிறார்.

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

'பரிவை' சே.குமார் சொன்னது…


வாங்க கவிப்பிரியன்...
மறந்து போன நினைவுகளை மீண்டும் மீட்டிப் பார்க்க வைத்தவர் அண்ணன். தமிழ் மணத்தில் வாக்களித்தமைக்கு நன்றி.

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

'பரிவை' சே.குமார் சொன்னது…


வாங்க தனபாலன் சார்...
ஆமாம்... அண்ணன் எந்த ஒரு தலைப்பாக இருந்தாலும் அக்கு வேர் ஆண் வேராக ஆராய்ந்துவிடுவார்.

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க இக்பால் செல்வன்...
எங்கள் வீட்டில் எல்லாம் இருக்கின்றன நண்பரே... பயன்பாடுதான் அதிகமில்லை.

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

'பரிவை' சே.குமார் சொன்னது…


வாங்க அண்ணா...
மிக அருமையான பகிர்வு அண்ணா. பின்னூட்டத்தோடு விட்டுச் செல்லும் எழுத்து அல்ல... அதனால்தான் பகிர்ந்தேன்.

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க யோகன்...
ஈழத்திலும் இந்த நடைமுறை இருப்பது அறிந்து மகிழ்ச்சி நண்பரே...

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க யோகராஜா...
எல்லாப் பகிர்வுக்கும் தவறாத பின்னூட்டம்... முதலில் அதற்கு நன்றி.

கால்/அரைக்கால் எல்லாம் இங்கும் இருந்திருக்கிறது. இப்போது அதெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக மாறிவிட்டது.

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

'பரிவை' சே.குமார் சொன்னது…


வாங்க கோமதி அக்கா...
நீங்கள் சொல்வது உண்மைதான் படியில் அளக்கும்போதும் உலக்கில் அளக்கும் போதும் தலைதட்டிப் போடக்கூடாது என்பார்கள். அதேபோல் அதை தரையில் உருள விடக்கூடாது. கவிழ்த்து வைக்கக்கூடாது.

அண்ணனின் பின்னூட்டம் அருமையான கருத்துச் செறிவு. இப்பல்லாம் டோராவும் வீடியோ விளையாட்டுக்களுமாக உலகம் மாறிவிட்டது.

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க நாடோடிப் பையன்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

சக்தி கல்வி மையம் சொன்னது…

நீங்கா நினைவுகள்..

Menaga Sathia சொன்னது…

இன்றும் என் அம்மா படி,மாகாணி தான் பயன்படுத்துறாங்க,நீங்க சொல்வது போல் அளந்து முடித்ததும் அதில் சில அரிசிகள் போட்டு வைப்பாங்க,

மறந்து போன விசயத்தினை பகிர்ந்தமைக்கு உங்களுக்கும் ஜோதிஜி அவர்களுக்கும் நன்றி!!