மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

ஞாயிறு, 9 செப்டம்பர், 2012

மனசின் பக்கம்: 201வது பதிவை நோக்கி...



எல்லாருக்கும் வணக்கம்.
நான் வலைப்பூ ஆரம்பித்த போது ஆர்வக்கோளாறில் ஹைக்கூ, கவிதை, சிறுகதை, எல்லாம் எழுத என நான்கு வலைப்பூ அரம்பித்து எழுதி வந்தேன். ஒரு கட்டத்தில் எல்லா வலைப்பூவையும் நடத்துவது எளிதல்ல என்பதால் எல்லாத்தையும் மனசு வலைப்பூவில் மட்டும் எழுத ஆரம்பித்தேன். மனசில் இதுவரை 199 பதிவுகள் போட்டாச்சு இது 200-வது பதிவு. மொத்தத்தில் இது (நான்கிலும் சேர்த்து) 395வது பதிவு. எனது வலைப்பூவில் நான் கிறுக்குவதை படித்து கருத்துச் சொல்லும் நண்பர்களுக்கும்,  ஐயா, அம்மா, அண்ணன், அக்கா, தம்பி, தங்கை, தோழன், தோழி என என் மனசை பின்தொடரும் 209 பேருக்கும் தனித்தனியாக நன்றி சொல்லும் மனநிலையில் நான் இப்போது இல்லாத காரணத்தால் அனைவருக்கும் ஒட்டு மொத்த நன்றியை உரித்தாக்குகிறேன். உங்களின் ஆக்கப்பூர்வமான கருத்துக்கள் எனது எழுத்தை வளப்படுத்தி வருகின்றன என்பது 100% உண்மை. இந்த வலைப்பூவின் மூலமாகவும் முகப்புத்தகத்தின் மூலமாகவும் எனக்கு கிடைத்திருக்கும் உறவுகளான உங்கள் முகம் தெரியாவிட்டாலும் அந்த பாசமிக்க மனம் எனக்கு நன்றாக தெரிகிறது. உங்கள் நட்பு என்றும் தொடர வேண்டும் என்று இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.


**********

டந்த பதினைந்து நாட்களாக பொக்காலி அம்மா வந்து தனிமையில் கஷ்டப்பட்ட போது மனைவி குழந்தைகளின் அருகாமை எவ்வளவு முக்கியம் என்பதை உணர முடிந்தது. அடுப்புக்கிட்ட போகக்கூடாது என்று அம்மாவும் மனைவியும் ஊரில் இருந்து சொல்லிக் கொண்டே இருந்தாலும் அறை நண்பர்கள் சிறு உதவிகள் செய்தாலும் அம்மை வந்த உடம்போடு நானே கஞ்சி வைத்து குடித்த நாட்கள் மறக்கமுடியாதவை. இந்தக் கஷ்டம் என் எதிரிக்கு கூட வரக்கூடாது என்றுதான் வேண்டினேன்.  அதிகமாக அம்மை வராமல் போனதால் கொஞ்சம் கஷ்டம் குறைந்தது. இப்போ நான் எழுந்து வியாழன் அன்றுதான் வேலைக்குப் போனேன். நேற்று மனைவிக்கு டெங்கு காய்ச்சல் வந்து மதுரையில் மருத்துவமனையில் வைத்து பார்த்து வருகிறார்கள். மாமா வீடு மதுரை என்பதாலும் தற்போது வைத்திருக்கும் மருத்துவமனை மாமா கடைக்குப் பக்கத்தில் இருப்பதாலும் யார் பார்ப்பது என்ற கவலையில்லை. மாமாவின் நண்பரான மருத்துவரும் பரிசோதனைகள் செய்து இது ஆரம்பநிலைதான் பயப்பட வேண்டியதில்லை என்று சொல்லியிருக்கிறார். நேற்றுக் காலையில் அழுதபடி பேசிய மனைவியிடம் மாலையில் பேசும் போது சற்று நல்ல மனநிலையில் பேசினார். மனசுக்கு இதமாக இருந்தது.

**********

ம்மை வந்திருந்த போது எனக்காக வருந்தி அழுதது மனைவி, குழந்தைகள் மற்றும் எங்கள் ஊரில் இருக்கும் மாரி அம்மன் கோவிலில் தினமும் தண்ணீர் ஊற்றி தீபம் ஏற்றி கும்பிட்ட என் அம்மா ஆகியோர்தான். ஒரு சிலரைத் தவிர மற்ற உறவுகள் எல்லாம் இங்கிருப்பவர்களையும் சேர்த்து போன் பண்ணினால் வந்து விடும் என்று நினைத்தார்கள் போல முதல் இரண்டு மூன்று நாட்கள் போனே பண்ணவில்லை. அப்புறம்தான் போன் பண்ணினார்கள். ஆனால் முகம் தெரியாமல் பாசம் கொண்ட உறவுகள் எல்லாம் எப்படியிருக்கு என்று தினமும் மின்னஞ்சல் மற்றும் முகநூல் வழியாக கேட்டுக் கொண்டே இருந்தார்கள். உண்மையில் இந்த அன்புக்கு நிகர் ஏதும் இல்லை. உங்களது இந்த அன்புதான் எனக்கு ஆறுதலாக இருந்தது என்றால் மிகையில்லை.

**********

டந்த சில மாதங்களுக்கு முன்னர் இங்கு காருக்குள் பார்க்காமல் விட்டுச் சென்ற குழந்தைகள் இறந்த செய்தியை பத்திரிக்கையில் பார்த்தபோது  அவர்களது பெற்றோர்களின் அலட்சியம் மிகவும் வருத்தப்பட வைத்தது. ஆம் வெளியில் சென்றுவிட்டு வீட்டுக்கு வந்தவர்கள் காரை பார்க் செய்துவிட்டு வீட்டுக்கு சென்று குழந்தையை காணோம் என்று தேடி கடைசியில் காரில் வந்து திறந்து பார்த்தபோது தூங்கிய குழந்தையை தூக்காமல் காருக்குள் விட்டு விட்டு கார் கண்ணாடிகளை ஏற்றிவிட்டு கதவை சாற்றியதால் மூச்சடைத்து இறந்த நிலையில் கண்டு அழுதிருக்கிறார்கள். அழுது என்ன பயன்... இளமொட்டு கருகிவிட்டதே. இதே போல் மூன்று நிகழ்வுகள் அடுத்தடுத்து நடந்தது... என்ன கொடுமை பாருங்கள்.

**********



சிவகாசி வெடி விபத்தில் பாதிக்கப்பட்டோருக்கான மருத்துவ உதவிக்கு பணம் இருந்தும் மனம் இல்லாதவர்கள் யாரும் செய்ய முன்வராததை மலையாள நடிகர் மம்முட்டி செய்திருக்கிறார். அவரின் இந்தச் செயலுக்காக அவர் நல்லாயிருக்கணும் என்று சொல்வதில் தப்பேயில்லை. இங்க கோடிகளை சம்பளமாக வாங்கும் நம்ம நடிகர்கள் முடியாமல் கிடந்தால் மொட்டை அடிக்கிறோம், வேல் போடுறோம், அவர்களின் படங்களுக்கு பால் அபிஷேகம் பண்றோம். அவர்களும் உங்களுக்கு நான் என்ன கைமாறு செய்யப் போறேன் என்று அறிக்கை விடுகிறார்கள். அம்புட்டுத்தான் அதன் பிறகு அடுத்த படத்துக்கான வேலைக்குப் போய் விடுகிறார்கள். தமிழர்களே இனிமேலாவது நடிக, நடிகைகள் மேல் இருக்கும் அதீத பாசத்தைக் குறைத்துக் கொண்டு குடும்பத்தைப் பாருங்கள். உங்களுக்காக வருந்த உங்கள் குடும்பமும் நட்பும் மட்டுமே... நீங்கள் தலைவா என்று சாஷ்டாங்கமாக தொழும் நடிகர்கள் அல்ல என்பதை உணருங்கள்.

**********

மிழகத்தில் பேருந்து விபத்து என்பது வெகு சாதாரணமாகிவிட்டது. சமீபத்தில் காஞ்சிபுரத்துக்கு அருகில் நடந்த விபத்தில் 9 பேருக்கு மேல் இறந்தார்கள். அதில் எனது நண்பரின் தம்பியும் ஒருவர். திருமணமாகி 9 மாதங்கள் ஆன நிலையில் மனைவியை ஆடிக்கு அம்மா வீட்டில் விட்டிருந்தவர் கூட்டிக் கொண்டு திரும்பி வர, பேருந்தில் இடமில்லாததால் மனைவியை பின்புறம் அமர வைத்துவிட்டு அவர் முன்புறம் அமர்ந்திருக்கிறார். விபத்தில் சம்பவ இடத்திலேயே அவரது உயிர் பிரிந்து விட்டது. காயங்களுடன் தப்பிய அவரின் மனைவி, கணவன் இறந்தது அறியாமல் தீவிர சிகைச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். வேதனையான விஷயம்தானே... இதை எனக்கு மிக நெருக்கமான ஒருவர் சொன்னபோது துடித்துப் போனேன். விபத்துக்கள் தவிர்க்கப்பட வேண்டும்.

**********

என்னையும் வலையில் எழுத வைத்து என் எழுத்துக்களை உங்கள் பின்னூட்டம் என்னும் உந்து சக்தியால் மெருகேற்றி வரும் என் சொந்தங்களுக்கு இந்த 200வது பதிவின் மூலம் மீண்டும் ஒருமுறை நன்றி சொல்லிக் கொள்கிறேன். 

நன்றி பதிவுலக சொந்தங்களே...


-'பரிவை' சே.குமார்.

17 எண்ணங்கள்:

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று சொன்னது…

200 வது பதிவுக்கு வாழ்த்துக்கள் முதல் முறையாக உங்கள் வலை பக்கத்திற்கு வருகிறேன். நோயிலிருந்து விரைவாக முழுமையாக குணமடைய வாழ்த்துக்கள்.
தொடர்வேன்.நன்றி.

முத்தரசு சொன்னது…

200 - வாழ்த்துக்கள்

குணமாகிவிட்டீர்கள - நன்று

//நடிக, நடிகைகள் மேல் இருக்கும் அதீத பாசத்தைக் குறைத்துக் கொண்டு குடும்பத்தைப் பாருங்கள். உங்களுக்காக வருந்த உங்கள் குடும்பமும் நட்பும் மட்டுமே//

சரியா சொன்னீங்க

பகிர்வுக்கு நன்றி தெரிந்து கொண்டேன்

r.v.saravanan சொன்னது…

இருநூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள் குமார்
இணையத்தில் எனக்கு கிடைத்த அற்புத நண்பர்களில் நீங்களும் ஒருவர்

r.v.saravanan சொன்னது…

நீங்கள் மென் மேலும் உயர்ந்து குடும்பத்துடன் மன மகிழ்வுடன் வள எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்

r.v.saravanan சொன்னது…

நோயினில் இருந்து விரைந்து குணமடைய வாழ்த்துக்கள்

காயத்ரி வைத்தியநாதன் சொன்னது…

மனத்தில்
மண்ணின் மனம் வீசச்செய்து...
வாசகர்களின் மனதில் ”மனது” க்கென ஒரு இடம் பிடித்திருக்கும் தம்பியின் 200 வது பதிவிற்கு மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு...பதிவுகள் நினைவில் வைத்துக்கொள்ளமுடியாதவாறு எண்ணிலங்கா பதிவுகள் பதிந்து மனத்தை மணம் வீசச்செய்து மனதை குளிர்விக்க இறைவேண்டி வாழ்த்துகிறேன்..வாழ்க வளமுடன்..

காயத்ரி வைத்தியநாதன் சொன்னது…

////இனிமேலாவது நடிக, நடிகைகள் மேல் இருக்கும் அதீத பாசத்தைக் குறைத்துக் கொண்டு குடும்பத்தைப் பாருங்கள். உங்களுக்காக வருந்த உங்கள் குடும்பமும் நட்பும் மட்டுமே... நீங்கள் தலைவா என்று சாஷ்டாங்கமாக தொழும் நடிகர்கள் அல்ல என்பதை உணருங்கள். // மிக அழகாகச் சொன்னாய் தம்பி. எனது கருத்தும் இதுதான்..இன்று பகிர்ந்த உன் எண்ணங்கள் அனைத்தும் உண்மையே..இனியாவது உணர்ந்தால் நலமே..தம்பியின் உடல்நலம் விரைவில் பூரணகுணமடைய வாழ்த்துகிறேன்..

செய்தாலி சொன்னது…

நல்ல பதிவு வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் சகோ

ராமலக்ஷ்மி சொன்னது…

இரட்டை சதத்துக்கு வாழ்த்துகள் குமார்! உடல்நலம் தேறியது அறிந்த நிம்மதி. மனைவிக்கும் விரைவில் குணமாகப் பிரார்த்திக்கிறோம்.

Yoga.S. சொன்னது…

வாழ்த்துக்கள்,சகோ இருநூறாவது பதிவுக்கு!!!!!!!!நம்மவர்கள் திருந்துவதாவது?????????

மனோ சாமிநாதன் சொன்னது…

200 பதிவுகள் பூர்த்தி செய்ததற்கு மனங்கனிந்த இனிய வாழ்த்துக்கள்!!பூர்த்தி செய்யப்படாத பதிவுகள் இன்னும் எத்தனையோ இருக்கின்றன! விரைவில் முன்னூறுக்குச் செல்லுங்கள்.

இங்கு பாலைவனத்தில் உங்களின் நிலைமைதான் உங்களைப்போல் ஊரை, குடும்பத்தைப் பிரிந்து வந்திருக்கும் அத்தனை பேருக்கும். கடந்த 35 வருடங்களாக இந்த வேதனையை தொடர்ந்து பார்த்து வருகிறேன். சீக்கிரம் இந்த மன வேதனை உங்களுக்கு மறையவும் உங்கள் உடல் நலம் பூரண குணமடையவும் மறுபடியும் என் வாழ்த்துக்கள்!!

செங்கோவி சொன்னது…

200வது பதிவுக்கு வாழ்த்துகள் குமார்..!

அம்மா விலகியதில் மகிழ்ச்சி.

எல் கே சொன்னது…

இரட்டை சதம் அடித்தமைக்கு வாழ்த்துகள். கொஞ்சம் உடலை கவனித்துக் கொள்ளுங்கள்

Asiya Omar சொன்னது…

இரட்டை சதத்திற்கு வாழ்த்துக்கள்.பகிர்வுகள் மனசை தொட்டது.பிரார்த்தனைகள்.

SNR.தேவதாஸ் சொன்னது…

தங்களது 200 ஆவது பதிவுக்கு எனது இதயம் கனிந்த வாழ்த்துக்கள்.முகம் தெரியாத எங்களுக்கு வாழ்த்துச் சொன்ன தங்களது பண்பாடு பாராட்டுக்குரியது.
200 பதிவில் உள்ள அனைத்து தகவல்களும் கனமாகவே உள்ளது நெகிழ வைத்தது.“வாழ்க வளமுடன்.
கொச்சின் தேவதாஸ்

Ananthi (அன்புடன் ஆனந்தி) சொன்னது…

200-ஆவது பதிவிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்கள் எழுத்துப் பயணம்.

ஹேமா சொன்னது…

இன்னும் இன்னும் நிறைவாக எழுத என் மனம் நிறைந்த வாழ்த்துகள் குமார்.

உடலும் மனமும் தேற என் பிரார்த்தனைகள்.கடைசிச் செய்தி மனதை நெகிழ வைத்துவிட்டது.அனைத்துத் தொகுப்புகளுமே அருமை !