மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

திங்கள், 25 ஜூன், 2012

மனசின் பக்கம்: எழுத நினைப்பவையும் சில வலிகளும்

அது என்னமோ தெரியலைங்க நிறைய சேமித்து நாளை... நாளை... என்று நாளைக் கடத்தி சட்டி காலியானதும் அகப்பையை விட்டு தேடுவதே பொழப்பாகிப் போச்சி... இப்படி யோசிச்ச கதைகளெல்லாம் காணாமலே போச்சுன்னா... நிறைய டைப் பண்ணி, பென் டிரைவ்ல போட்டு வச்சி ஒரு பென் டிரைவ்வை தெரியாம குப்பையில போட்டாச்சு... அடுத்ததை ஆபீஸ்ல பைல் காப்பி பண்றதுக்கு ஒருத்தனுக்கு கொடுத்து வாங்கி நம்ம சிஸ்டத்துல போட்டா பிளாங்கா இருக்கு... என்னென்னமோ பணணியாச்சு... எதுவும் வரலை... அம்புட்டுத்தான்னு நினைக்கிறேன். நிறைய இப்படியே தவற விட்டாச்சு.

நம்ம ஊர்ல சின்னச் செடிய ஒரு இடத்துல இருந்து பிடுங்கி இன்னொரு இடத்துல நட்டால வளருமான்னு சந்தேகம். ஆனா இங்க (அரபு நாட்டில்) பெரிய பெரிய பேரீச்சம்பழ மரங்களை பிடுங்கி நட்டு வளர்த்துப்புடுறாங்க... அதுவாவது பரவாயில்லை அலைனில் நாங்க இருக்கும் ஏரியாவில் ஒரு வேப்ப மரம் சாய்ஞ்சு வளந்து இருந்துச்சு... நான் தினமும் அந்த மரத்தைக் கடந்துதான் அலுவலகம் செல்வேன். ஒரு நாள் நான் போகும்போது ஒரு பாகிஸ்தானி அந்த மரத்தின் கிளைகளை வெட்டி தூரின் ஓரத்தில் குழி பறித்துக் கொண்டிருந்தான். சரி மரத்தை வெட்டப் போறாங்கன்னு பாத்துக்கிட்டே போனேன். நான் பெரும்பாலும் சுட்டெரிக்கும் வெயிலின் காரணமாக மதியம் அந்த வழி வருவதில்லை. அதனால் அடுத்த நாள் அந்த மரம் இன்று இருக்காது என்று நினைத்தபடி போனால் அதே இடத்தில் வளைந்து நின்ற மரத்தை நேராக நிறுத்தி சுற்றி மண் அணைத்து தண்ணீர் விட்டிருந்தார்கள். இதுவாவது வளர்றதாவது அப்படிங்கிற நினைப்பில் தினமும் அந்த வழியே கடந்து கொண்டிருந்தேன். சில நாட்களாக அழகாக கிளைகளை விட்டு வளர்கிறது. இதை நண்பர் ஒருவரிடம் சொன்னபோது அவர் வா நான் ஒரு இடத்துக்கு கூட்டி போறேன் என்று கீரீன் முபாஸரா என்ற இடத்திற்கு செல்லும் வழியில் கூட்டிச் சென்றார். ஓரிடத்தில் ரோட்டோரமாக சுமார் 20 மரங்களை வேறிடத்தில் இருந்து கொண்டு வந்து நட்டிருக்கிறார்கள். சில மரங்கைள் தழைத்து வளர்ந்து இருக்கின்றன. என்னால் நம்பவே முடியவில்லை.

இங்க நல்ல வெயிலுங்க... கொல்லோ கொல்லுன்னு கொல்லுது.. நான் வரும் பாதையில் பேருந்து வசதி அவ்வளவாக இல்லாததால் நடந்தே அறைக்கு வந்துவிடுவேன். அப்படி வரும் போது ரோட்டின் ஓரத்தில் இருக்கும் புல்தரையில் மெஷின் மூலமாக புல் வெட்டிக் கொண்டிருந்தார் ஒரு நண்பர். பார்க்க இந்தியர் போலத்தான் இருந்தார். இது போல் புல் வெட்டுபவர்களைப் பார்த்திருக்கிறேன். நாலு சக்கர வண்டியில் அமர்ந்து அதை புல் இருக்கும் ஏரியாவில் ஓட்டி வெட்டுவார்கள். ஆனால் இவர் இந்த வெயிலில் காலை முதல் மாலை வரை நம்ம ஊரில் மொசைக் போடுவதற்கென்று ஒரு மிஷின் வைத்திருப்பார்களே... அதுபோல மோட்டாரை ஆன் செய்து ஓட்டி ஓட்டி புல் வெட்டிக்கொண்டிருக்கிறார். ஆனால் அந்த மிஷினை மேலாக ஓட்டினால் வெட்டாது போல முழுப் பலமும் கொடுத்து அதை தள்ளுகிறார். சுட்டெரிக்கும் வெயிலில் வேர்வைக் குளியலில் அவர் கஷ்டப்பட்டு வேலை செய்வதை பார்க்கும் போது மூன்று மணி வரை ஏசி அறையில் இருந்து விட்டு ஒரு இருபது இருபத்தைந்து நிமிடம் நம்மால் வெயிலில் நடக்க முடியவில்லையே என்று நினைத்து அவரைப் பார்த்தால் அவர் என்னைப் பார்த்துச் சிரித்தார். அந்தச் சிரிப்பில் எதோ மர்மம் இருந்தது... என்னவாக இருக்கும். நாம தான் இப்படி கஷ்டப்படுறோமுன்னா வெள்ளையுஞ் சொள்ளையுமா காச மிச்சப்படுத்திக்கிட்டு இந்த வேகாத வெயில்ல போறாம் பாருன்னு நினைச்சிருப்பாரு போல... சரி விடுங்க.

நாட்டுப்புறப் பாடல்கள் இப்போது ஒரு சிலரால் மட்டுமே வாழ்கின்றன என்பதே உண்மை என்றாலும் இன்னும் கிராமங்களில் இந்தப் பாடல்கள் அழியாமல் இருப்பதில் சின்ன சந்தோஷம். சினிமாவில் வரும் நாட்டுப்புறப்பாடல்களும் படத்தின் வெற்றியை மையமாக வைத்தே எழுதப்படுகின்றன. நாட்டுப்புறப் பாடல்களில் தாலாட்டுப்பாடல், குலவைப்பாடல், ஒப்பாரிப்பாடல், நலுங்குப்பாடல், திருவிழாப்பாடல், குலவைப்பாடல், நடவுப்பாடல் என்று அடுக்கிக் கொண்டே போகலாம். இவைகளைப் பற்றி நாட்டுப்புறப்பாடல்கள் என்ற தலைப்பில் ஒரு சில பதிவுகள் எழுத எண்ணம். ஆனால் இது குறித்து எழுத நிறைய தகவல்கள் திரட்ட வேண்டும். மதியம் வரும்போது இன்று எழுதலாம்... இன்று எழுதலாம் என்று நினைத்து வந்து யோசனைக்கு தலையணை கொடுத்து விடுகிறேன். பார்க்கலாம் விரைவில் எழுத எண்ணம்... எப்படியும் சில பகிர்வுகளாவது பகிருவேன் என்று நம்புகிறேன்.

இதே போல் ஒரு கல்லூரிக் கதையும் உறங்கிக் கொண்டிருக்கிறது. கொஞ்சம் உண்மை நிறைய கற்பனை கலந்து ஒரு தொடராக குறிப்பிட்ட நாளில் கொண்டு வர எண்ணம். ஆனால் செங்கோவி போல் தொடர் எழுத இன்னும் உத்வேகம் வரவில்லை. நீண்ட நாளாக கிடப்பில் இருக்கும் இந்த (தொடர்) கதை, நேற்று தேவா அண்ணனின் என் பிரண்டைப் போல யாரு மச்சான் படிச்சதும் மனசுக்குள் ஏறி உக்காந்து எழுத சொல்லி அடம்பிடிக்குது... இதுக்கு தலையணை கொடுத்தாலும் படுக்க மாட்டேங்குது... இதையும் எழுத எண்ணம்... பார்க்கலாம்...

விஷால் இப்போ பள்ளிக்கூடம் போறாருங்க... அவரைப் பற்றி எழுத நிறைய இருக்கு... பள்ளிக்கூடம் கிளம்புற வரை நல்லபிள்ளைதான் அப்புறம் அழுத ரணகளப்படுத்துறதுல நாறப்புள்ளையாயிடுவாராம். பள்ளிக்கூடத்துக்குப் போகமா இருக்க அவரு கேக்குற கேள்விகள் இருக்கே... அடேங்கப்பா... அவங்க அம்மா ரொம்ப கஷ்டப்படுறாங்க... போன வாரம் அக்கா கிளம்பும் போதே கிளம்பி தயாராயிட்டு தூங்கிட்டாராம். எழுப்பினதும் எல்லாருக்கும் அப்பா ஸ்கூலுக்கு வருவாங்க... எனக்குத்தான் அப்பா இல்லையே... நான் மிஸ் கேட்டா என்ன சொல்றதுன்னு மழலையா கேட்க, அம்மணி ஆடிப்போயிட்டாங்களாம். அப்பா துபாயில இருக்காங்கன்னு எல்லார்கிட்டயும் சொல்லுவியல்ல அது மாதிரி மிஸ்கிட்டயும் சொல்லு அப்படின்னு சொல்ல... இங்க வரமாட்டாங்கள்ல... என்ன சொல்றதுன்னு ரொம்ப கவலைப்பட்டாராம்... இப்படி நிறைய இருக்கு... கொஞ்சம் கொஞ்சமா பாத்தாத்தான் சுவராஸ்யம்.

இப்படி எழுதலாம்... எழுதணும்... எழுத வேண்டும் என்று மனசுக்குள் நிறைய தேங்கிக் கிடக்க... எழுத முடியாமல் இழுத்துக் கொண்டே போகக் காரணம் பின்னால் சொல்பவைதான் என்பதே உண்மை... கூடுதல் வேலைப்பளூ மனச்சோர்வை கொடுப்பதாலும்... நாம் எல்லாரும் வேண்டும் என்று மரியாதை வைத்திருக்கும் நபர்கள் எல்லாம் உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசுகிறார்களே என்ற நினைப்பின் நீங்கா வலியும்... நம்ம வளர்ச்சி கண்டு சந்தோஷப்பட வேண்டிய இடத்தில் இருக்க வேண்டிய நெருங்கிய சொந்தங்கள் எப்படி வளர்கிறீர்கள் பார்ப்போம் என்று சவால் விடுவதை நினைத்து வெம்பும் மனதின் வேதனையும்... இன்னும் சில் வலிகளும் சேர்ந்து எழுத நினைப்பவைகளை அழித்து மறைக்கின்றன. நான் மேலே சொன்ன வலிகள் எல்லாம் நாங்கள் வீடு கட்ட அஸ்திவாரம் போட நினைக்கும் போது கட்டிடமாக வளர்ந்த வலிகள்... எவ்வளவு பேச்சுக்கள்... எத்தனை சவால்கள்... சாபங்கள்... இத்தனைக்கும் நானும் என் மனைவியும் எல்லாரும் வேண்டும் என்று நினைப்போமே தவிர யாரையும் தாழ்த்தியோ தூற்றியோ வாழப் பிடிக்காதவர்கள்... வாழ நினைக்காதவர்கள்.  சொந்தங்களின் சாபம் எங்களை ஒன்றும் செய்யப் போவதில்லை... அட ஏழு வயசு முதியவளிடம் சவால் விடுகிறார்கள் 50 வயதைக் கடந்த இந்தக் குழந்தைகள்.  இதை எங்க போய் சொல்றது?.

மனசின் பக்கம் இன்னும் சில பகிர்வுகளுடன் என்றாவது ஒரு நாள் தொடரும்...

-'பரிவை' சே.குமார்.
கூகிள் : படத்துக்கு நன்றி

24 எண்ணங்கள்:

செய்தாலி சொன்னது…

யதாரத்தமான வரிகள்
ரெம்ப வெளிப்படையா சொல்லிடீங்க சகோ

நம்ம ஊரில் செடியை நடுவதொடு சரி - அதன் பிறகு தண்ணீர் ஊற்றுவதே அரிது

வேலை பளு
இங்கு அது சகஜமானது -ஆனால் மீண்டுவிடலாம்
மனச்சோர்வு உண்டாக்கும் நீங்க சொன்ன வலி-உண்மை சகோ


மனசின் பக்கம் -என்னமோ செய்யுது சகோ
எல்லாம் சரியாகும்

எல் கே சொன்னது…

வீட்டுக்கு வீடு வாசப்படி (பசங்க ஸ்கூல் போறதில் ). நம்ம நாட்டில் பட்டாலும் புத்தி வராது

Yoga.S. சொன்னது…

எல்லா வெளி நாடுகளிலும் இதே கதை தான் போலிருக்கிறது.மரத்தை வெட்டினால் அதே இடத்தில் வேறு ஒரு மரத்தை வேரோடு கொண்டு வந்து நட்டு வளர்த்து விடுகிறார்கள்.நம்மூரில்.................

செங்கோவி சொன்னது…

ஒரு குடும்பம் தலையெடுக்கிறதென்றால், அதை ஏற்றுக்கொள்ள முடியாத மனிதர்களாகவே சொந்தங்கள் இருக்கின்றன..இந்தப் பிரச்சினை பலருக்கும் இருக்கிறது. நாம் நம் குழந்தைகளின் எதிர்காலம் ஒன்றையே கருத்தில் கொண்டு, முன்னேறுவோம். இதைப் பற்றி நானும் எழுத நினைத்து விட்டுவிட்டேன்.

Asiya Omar சொன்னது…

வலிகளை பகிரத்தான் மனசு இருக்கே.விரைவில் வலிகள் நீங்கி நினைததை அடைய வாழ்த்துக்கள்.தொடர்கதை விரைவில் ஆரம்பமாகட்டும்.

சாந்தி மாரியப்பன் சொன்னது…

இந்த மனச்சோர்வென்பது மெல்லக்கொல்லும் விஷம் மாதிரி. ஆளையே சாய்ச்சுரும். அதுக்கு இடம் கொடுக்காமல் இருந்தால்தான் நம்மைப் பார்த்து வெம்பும் உள்ளங்களுக்கு நம் வெற்றிகளால் பதிலடி கொடுக்க முடியும்.

இன்னொரு இடத்துல பிடுங்கி நடப்பட்ட மரமே அத்தனைச் சவால்களையும் எதிர்கொண்டு பிழைக்கும்போது நம்மால் முடியாதா என்ன!!

vanathy சொன்னது…

நல்ல பதிவு. தொலைந்த பதிவுகள் மீண்டும் கிடைக்கட்டும். மரங்கள் எப்போதும் ஆச்சரியம் தான்.
சின்னவர்கள் ஸ்கூல் போறதே ஒரு கவிதை தான். என் மகள் இப்ப பழகிவிட்டா.
என்ன இது புலம்பல் கடைசியில். இப்படி எல்லாம் மனசு உடைஞ்சு போக கூடாது. எல்லாத்தையும் தூக்கி போட்டுட்டு திரும்ப எழுதுங்க. சரியா?

மனோ சாமிநாதன் சொன்னது…

இன்றைய பதிவில் நிறைய விஷயங்கள்.

மரம் வளர்ப்பது பற்றிய விபரங்கள் மிகுந்த சுவாரஸ்யம். நடந்து போவதால் எத்தனை நன்மைகள். உடலுக்கு ஆரோக்கியம் கிடைப்பதோடு, 'மனசு'க்கு எழுத நிறைய சுவாரஸ்யமான விஷயங்கள் கிடைக்கிறது.

நீங்க‌ள் சொல்வ‌து ச‌ரி தான். ம‌ன‌சிலுள்‌தையெல்லாம் உற்சாக‌த்துட‌ன் எழுத‌ விடாம‌ல் த‌டுப்பது , மனம், உடல் சார்ந்த பிரச்சினைகளும் அவற்றைத் தொடர்ந்து வரும் மனச்சோர்வும் தான். நம்பிக்கைத் துரோகங்களும் முதுகில் குத்தலும் அனலான பேச்சினால் அடுத்தவர் மனதைக் காயப்படுத்துவதும் எங்கு தானில்லை? உங்கள் குடும்பம் உங்களுக்கு பக்க பலமாய் இருக்கிறதல்லவா? அந்த பலமே வாழ்நாள் முழுவதும் ஜெயிப்பதற்கு போதுமானது என்ற தெம்புடன் மனச் சோர்வு தனை விரட்டி அடியுங்கள்!!

ராமலக்ஷ்மி சொன்னது…

வலிகளுக்கு வடிகாலாக, மருந்தாக எழுத்து எனும் வரம் இருக்கிறது உங்களுக்கு. இந்தப் பகிர்வால் வலிகள் நீங்கட்டும். நிறைய எதிர்பார்க்கிறோம் உங்களிடமிருந்து.

சசிகலா சொன்னது…

கூடுதல் வேலைப்பளூ மனச்சோர்வை கொடுப்பதாலும்... நாம் எல்லாரும் வேண்டும் என்று மரியாதை வைத்திருக்கும் நபர்கள் எல்லாம் உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசுகிறார்களே என்ற நினைப்பின் நீங்கா வலியும்... நம்ம வளர்ச்சி கண்டு சந்தோஷப்பட வேண்டிய இடத்தில் இருக்க வேண்டிய நெருங்கிய சொந்தங்கள் எப்படி வளர்கிறீர்கள் பார்ப்போம் என்று சவால் விடுவதை நினைத்து வெம்பும் மனதின் வேதனையும்... இன்னும் சில் வலிகளும் சேர்ந்து எழுத நினைப்பவைகளை அழித்து மறைக்கின்றன.// இதை விட தெளிவா ஒரு எழுத்தாளனின் மன நிலையை யாராலும் சொல்ல முடியாதுங்க .

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

இந்த மாதிரி வெளிப்படையாக உண்மை சொல்வதற்கே தைரியம் வேண்டும்.... தொடருங்கள் சார் ! நன்றி !

r.v.saravanan சொன்னது…

என்னமோ நீங்க என் பக்கத்திலே உட்கார்ந்து சொன்ன மாதிரி இருக்குங்க குமார்

இதே போல் ஒரு கல்லூரிக் கதையும் உறங்கிக் கொண்டிருக்கிறது. கொஞ்சம் உண்மை நிறைய கற்பனை கலந்து ஒரு தொடராக குறிப்பிட்ட நாளில் கொண்டு வர எண்ணம்.

கண்டிப்பா எழுதுங்க குமார் படிக்க காத்திருக்கிறோம்


சொந்தங்கள் பற்றி சொல்வதென்றால் நாம நல்லா இருந்தாலும் குறை சொல்வாங்க நாம நல்லா இல்லைனாலும் குறை சொல்வாங்க என் வாழ்க்கையில் இது போல் நிறைய வலிகள் பட்டிருக்கேன் அதனாலே சொல்றேன் அதையெல்லாம் விட்டு தள்ளுங்க

வெற்றிக்கு வாழ்த்துக்கள்

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சகோ. செய்தாலி...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வலியை உண்டாக்கும் உறவுகள் மீண்டும் மீண்டும் பேசிக்கொண்டே போவதுதான் வலிக்கிறது.
அவர்களுக்கு காலம் பதில் சொல்லும் நண்பரே...
உங்கள் ஆறுதலான வார்த்தைகளுக்கு மீண்டும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க எல்.கே.
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
உண்மைதான்... பட்டாலும் புத்தி வருவதில்லை.


வாங்க யோகா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
பெரிய மரங்களைக்கூட அழகாக வளர்த்து விடுகிறார்கள்.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க செங்கோவி...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
ஆம் சொந்தங்களுக்குத்தான் பொறாமை உணர்வு அதிகம் இருக்கிறது.
ஆமாம் நமக்காகத்தான் நாம்... மற்றவர்களுக்காக வாழ வேண்டியதில்லை. நம் பிள்ளைகள் சந்தோஷமாக இருந்தால் போதும்.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அக்கா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
கண்டிப்பாக உங்களை மாதிரி உறவுகளிடம் மனசைப் பகிர்ந்தால் வலி குறைகிறது என்கிறபோது மிகவும் மகிழ்ச்சி. வெள்ளி,சனி விடுமுறை என்பதால் அந்த நாட்களில் கொண்டு வரலாம் என்ற எண்ணம். முயற்சிக்கிறேன் அக்கா.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சாந்தி (சாரல்) அக்கா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
//இன்னொரு இடத்துல பிடுங்கி நடப்பட்ட மரமே அத்தனைச் சவால்களையும் எதிர்கொண்டு பிழைக்கும்போது நம்மால் முடியாதா என்ன!!//
உண்மை சகோதரி... போராட்டமே வாழ்க்கை... வெற்றி என்பது கண்டிப்பாக தேடி வரும். போராட்டமே வாழ்க்கை... தூற்றுவார் தூற்றட்டும்... உங்கள் கருத்துக்கள் என்க்குள் மகிழ்ச்சியைப் பூக்க செய்கின்றன. நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சகோதரி...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
//என்ன இது புலம்பல் கடைசியில். இப்படி எல்லாம் மனசு உடைஞ்சு போக கூடாது. எல்லாத்தையும் தூக்கி போட்டுட்டு திரும்ப எழுதுங்க. சரியா?//

கண்டிப்பாக... என் மன ஆறுதலுக்காகத்தான் உங்களுடன் பகிர்கிறேன். கண்டிப்பா எழுதுகிறேன் சகோதரி. பள்ளிக்கூடம் போறது பெரிசில்ல... என்ன பேச்சு... அப்பப்பா... அனுபவிக்க முடியவில்லை என்பதே வருத்தம்.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அம்மா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

//மரம் வளர்ப்பது பற்றிய விபரங்கள் மிகுந்த சுவாரஸ்யம். நடந்து போவதால் எத்தனை நன்மைகள். உடலுக்கு ஆரோக்கியம் கிடைப்பதோடு, 'மனசு'க்கு எழுத நிறைய சுவாரஸ்யமான விஷயங்கள் கிடைக்கிறது.//
ஆமா... மனசு எதைப் பார்த்தாலும் பதிவாக்க சொல்லுதும்மா...

//உங்கள் குடும்பம் உங்களுக்கு பக்க பலமாய் இருக்கிறதல்லவா? அந்த பலமே வாழ்நாள் முழுவதும் ஜெயிப்பதற்கு போதுமானது என்ற தெம்புடன் மனச் சோர்வு தனை விரட்டி அடியுங்கள்!!//

ம்ம்ம்... என் பக்கம் செய்கிறார்களோ இல்லையோ... அடுத்தவரை தூற்றுதல் என்பது இருக்காது. நாம் வளர்ந்தால் சந்தோஷப்படும் பெற்றோர்களே... என் பலம் எல்லாம் என் மனைவிதான்... நான் அருகில் இல்லை என்றாலும் எல்லா சவால்களையும் பேச்சுக்களையும் வாங்கி மனசுக்குள் வைத்துக் கொண்டு தனி ஒருவராய் வீட்டு வேலைகளை பார்த்து வருகிறார். வங்கி லோனுக்காக அவர் அலைகிறார்... உதவி செய்ய ஆளில்லை... கேள்விகள் கேட்க மட்டும் எல்லாரும் வரிசையில் நிற்கிறார்கள்... மாற்றாந்தாய் மனப்பான்மையுடன்... இதற்கு மேல் வேண்டாம்... அம்மாவுக்கு புரிந்திருக்கும்...

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அக்கா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
//வலிகளுக்கு வடிகாலாக, மருந்தாக எழுத்து எனும் வரம் இருக்கிறது உங்களுக்கு. இந்தப் பகிர்வால் வலிகள் நீங்கட்டும். நிறைய எதிர்பார்க்கிறோம் உங்களிடமிருந்து.//

நன்றி அக்கா... அது மட்டுமே சொத்தாக இருக்கிறது... உங்களைப் போன்றோரின் தட்டிக் கொடுத்தலும் ஆசியும் எங்கள் இல்லம் உருவாக தூண்டுகோலாக இருக்கும் என்பது மனதறிந்த உண்மை.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சகோதரி...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
//இதை விட தெளிவா ஒரு எழுத்தாளனின் மன நிலையை யாராலும் சொல்ல முடியாதுங்க .//

வலிகள் வழங்கிய வார்த்தைகள் இவை.

வாங்க நண்பர் தனபாலன் சார்...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க நண்பரே...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

//என்னமோ நீங்க என் பக்கத்திலே உட்கார்ந்து சொன்ன மாதிரி இருக்குங்க குமார்//

நீங்களெல்லாம் எனக்கு ஆறுதலாய் இருப்பீர்கள் என்ற நம்பிக்கைதான் இதை எல்லாம் உங்களுடன் பகிரச் சொல்கிறது. கஷ்டப்பட்டாலும் உங்கள் அன்பு கொடுக்கும் உற்சாகம் எல்லாம் மறக்கச் செய்கிறது.

சென்னை பித்தன் சொன்னது…

மனசின் பக்கம் அடிக்கடி திறக்க வேண்டும்.அருமை

துளசி கோபால் சொன்னது…

சொந்தங்களின் சாபம் நிறையக் கேட்டாச்சு. அதுக்கு உண்மையில் பொருள் ஒன்னும் இல்லை. அந்த நேரத்துலே வெடிச்சுவரும் சொற்கள் என்றாலும் கூட கேட்ட கணம் மனசில் உக்காந்துக்கிட்டு வலி தருவது என்னமோ உண்மை:(

மனக்கதவு திறந்தது நல்லா இருக்கு!

நாங்களும் வீடு கட்டும்போது இங்கிருந்த ஒரு அபூர்வ மரத்தை எடுத்து வச்சு மீண்டும் நட்டோம். நல்லாவே இருக்கு இப்பவும்.