மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

திங்கள், 10 அக்டோபர், 2011

கிராமத்து நினைவுகள்: கண்மாய் மீன்




(தூண்டில் போடும் பெரியவர்)

கிராமத்து நினைவுகள் எழுதி நீண்ட நாட்களாகிவிட்டதுங்க. எனக்கு இப்போ நகரத்து வாழ்க்கைதான் வாய்த்திருக்கிறது என்றாலும் கிராமத்து வாழ்க்கைதான் பிடித்திருக்கிறது. அந்த பசுமையான வயல்கள், கண்மாய்கள், ஊரணிகள், எங்கும் நிறைந்த தண்ணீர், கோவில் திருவிழாக்கள், அடர்ந்த மரங்கள், ஆடு, மாடு, கோழி என பார்த்துப் பழகிய கண்களுக்கு குழாய்த் தண்ணீரும், குடியிருக்கும் வீட்டுக்கு அருகில் என்ன நடந்தாலும் கண்டு கொள்ளாத மக்களுமான வாழ்க்கை ஏனோ மனசோடு ஒட்டாமலே தொடர்கிறது. இருப்பினும் ஒரு சந்தோஷம்.

நாங்கள் இருக்கும் காரைக்குடியில் எங்கள் தெருவில் அந்நியோன்யமான நட்பு எங்களுக்கு வாய்த்திருக்கிறது. அது எங்கள் குழந்தைகளுக்கு கிடைத்த வரப்பிரசாதம். தெருவில் எல்லாருடைய வீட்டுக்கும் செல்லப்பிள்ளையாக நம்ம மைந்தர் வலம் வருகிறார். அவர் இல்லை என்றால் தெருவே வெறிச்சோடிப் போச்சு என்று எல்லாரும் புலம்பும் அளவுக்கு வைத்திருக்கிறாராம். (அப்ப எம்புட்டு சேட்டை பண்ணுவான்னு பாத்துக்கங்க.. )

அவருக்கு ரெண்டு வயசுதாங்க ஆகுது. ரெண்டு நாளைக்கு முன்னால ஊர்ல 11 மணிக்கு மேல இருக்கும். அவங்க அம்மாகிட்டா அப்பாட்ட பேசுறேன்னு சொல்லி அழுது போன் பண்ண சொல்லி எங்கிட்ட என்ன கேட்டார் தெரியுமா? அப்பா.... அம்மா தூங்கு... நீ தூங்கலன்னு கேட்டாரு பாருங்க...

சரி கிராமத்து நினைவுகளை எழுதாம மகனப் பத்தி எழுதுறானேன்னு திட்டாதீங்க... என்ன செய்வது வெளி நாட்டு வாழ்க்கை.

எங்க ஊரு கண்மாயில் தண்ணீர் நிறைந்து கிடக்கும் காலங்களில் பள்ளி விடுமுறை நாட்களில் பெரும்பாலான நேரங்களில் அங்கு தான் கிடப்போம். ஒன்று குளிப்போம் இல்லை என்றால் தூண்டிலில் மீன் பிடிப்போம். மழைக்காலத்துக்குப் பிறகு கடைகளில் தூண்டி முள் விற்பனை இருக்கும். முள்ளும் நரம்பும் வாங்கி மயிலிறகு தட்டை அல்லது நெட்டித் தட்டையை சிறிதாக வெட்டி அதில் கட்டி அதை ஒரு நீண்ட கம்பில் கட்டி தூண்டில் தயார் செய்வோம்.



(அழிந்த கண்மாயில் மீன் பிடிக்கும் காட்சி)


மீன் பிடிக்க தனியாக செல்வதில்லை... நாலைந்து பேராகத்தான் கிளம்புறது வழக்கம். போகும் போது எங்க ஊரு ஊரணியில் மண்ணை வெட்டினால் நிறைய மண்புழு கிடைக்கும் அவற்றை எடுத்து ஒரு டப்பாவில் போட்டுக் கொண்டு பிடித்த மீனை போட்டு வைக்க ஒரு பாத்திரத்துடன் அவிழும் டவுசரை பட்டுக் கயிற்றில் (அதாங்க அராணாக்கொடி) சிறையிட்டு வழியும் மூக்கை புறங்கையால் துடைத்தபடி (இது எல்லாருக்குமானது கிடையாது... ஊழை மூக்கன்களுக்கு மட்டும்) செல்வோம்.

தூண்டில் முள்ளில் புழுவை லாவகமாக செலுத்தி தண்ணீருக்குள் வீசி கம்பை கையில் பிடித்தபடி நிற்க, தட்டை தண்ணீரில் மிதக்கும். இரையை தேடி வரும் மீன் புழுவை சாப்பிடும் போது தட்டை லேசாக ஆட ஆரம்பிக்கும்... இரையை விழுங்கும் போது முள் வாயில் பட்டதும் வேகமாக ஓட நினைத்து மீன் இழுக்க... தட்டை தண்ணீருக்குள் அழுங்க... லாவகமாக இழுத்தால் மீன் முள்ளில் மாட்டிக் கொள்ளும். முதல் மீன் பிடித்ததும் நமக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கும்.

அதிலும் தட்டை ஆடுவதைப் பார்த்தே இது கெண்டை... இது கெழுத்தி... இது உழுவை... இது விறாக்கன்னு என சொல்லி பிடிக்கும் அந்த சந்தோஷம் இனி வருமா என்ன... நாம தொடர்ந்து ரெண்டு மீன் பிடிச்சிட்டா போதும் அங்க மட்டும்தான் மீன் இருக்க மாதிரி எல்லாப் பயலுகளும் நம்ம கிட்ட வந்து தூண்டி போட ஆரம்பிச்சிருவாங்க... அதுக்கு ஒரு சண்டையே நடக்கும்.

விறால் மீன் பிடிக்க என்று தனி தூண்டில்... பெரிய முள்... நீண்ட கணமான நூல் அதில் புழுவுக்குப் பதிலாக குட்டி மீன்... தூண்டிலை தண்ணிக்குள் போட்டு ஒரு குச்சியிலோ அல்லது அருகிலிருக்கும் மரத்திலோ கட்டி வைத்துப் பிடிப்போம்.

காலையில் மீன் பிடிக்க வந்தால் மதியம் வரை வீட்டுப் பக்கமே போகமாட்டோம். வீட்டிலிருந்து கூப்பிடும் குரல் கேட்கும் அதுக்குப் போகவில்லை என்றால் அம்மா கம்போடு வந்து விரட்டிக் கொண்டு போவார்.

தண்ணீர் வற்றி கொஞ்சமாக கிடக்கும் போது இரவில் போய் பாச்சை வலை என்ற வலையை குறுக்காக கட்டி வைத்துவிட்டு வந்து விடுவோம். இது சின்ன மீன்களைப் பிடிக்க உதவும் வலை. காலையில் போய் வலையை எடுத்தால் கெழுத்தி கெண்டை மீன்களை அள்ளி வரலாம்.

அழிந்த கண்மாயில் மீன் பிடிக்க கச்சா என்ற ஒன்றை பயன்படுத்தி மீன் பிடிப்போம். மழைக்காலங்களில் ஏத்து மீன் பிடிக்க பத்தக்கட்டை போடுவோம். கச்சா, பத்தக்கட்டை எல்லாம் கால மாற்றத்தில் காணாமல் போய்விட்டன.

இப்போ எங்க கண்மாயில் மீன் பிடிக்க தூண்டிலிடுபவர்கள் யாரும் இல்லை. வருடம் ஒரு முறை மீன் குத்தகைக்கு விடப்பட்டு அந்தப் பணம் கோயில் நிதியில் சேர்க்கப்படுகிறது. குத்தகைக்கு விடுவதில் என்ன சிரமம் என்றால் பக்கத்து ஊர்க்காரர்களிடம் இருந்து இரவு நேரங்களில் கண்மாய் மீனை பாதுகாத்து வைப்பதுதான். எங்கள் கண்மாயில் எப்பவும் விரால் மீன்கள் அதிகம் இருக்கும்... அதனால் இரவில் வந்து வலைபோட்டு பிடித்துச் செல்வார்கள். காவல் காப்பதுதான் பிரச்சினை... பாதுகாத்தால் நல்ல விலைக்கு விடலாம்... இப்போதும் பாதுகாத்து விட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

(ஒரு வகை கெண்டை மீன்)
இந்த வருடம் மீன் அதிகம் இல்லை... சரியான பாதுகாப்பும் இல்லை... எனவே கண்டவனும் பிடித்து சாப்பிட்டு மிஞ்சியதை பிடிக்கலாம் என்று திருவிழா முடிந்து பேசப் போக சில வன்மங்கள் அங்கே தலை தூக்கி அடிதடியில் ஆரம்பித்து மண்டை உடைப்பு வரை போய்விட்டது. அதனால் யாரும் பிடிக்க வேண்டாம் என்று முடிவு செய்து சில ஆயிரங்களுக்கு குத்தகைக்கு விட்டுவிட்டார்கள்.

என்ன இருந்தாலும் கண்மாய் மீன் ருசி தனிதானுங்களே... இதை எழுதும்போதே நாக்குல எச்சில் ஊறுதுங்க... அதுவும் இந்த அயிரை மீனை அப்படியே.... சரி விடுங்க... நெனச்சு என்னாகப்போகுது.

சரி எனக்கு ஒரு சந்தேகங்க.... கனவுல மீன் பிடிக்கிற மாதிரி வந்த பேய் பிடிச்சிருக்குன்னு எங்கம்மா சொல்லுவாங்க... உண்மையாங்க...

-'பரிவை' சே.குமார்.

படங்கள் வழங்கிய இணையத்துக்கு நன்றி.

24 எண்ணங்கள்:

செய்தாலி சொன்னது…

உங்கள் கிராமத்து நினைவுகளை
எங்களுடன் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி தோழரே

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

நினைவலைகள் சுகமானவை...

பகிர்வுக்கு நன்றி...

r.v.saravanan சொன்னது…

சொந்த ஊரின் நினைவுகள் நாம் எங்கு சென்றாலும் நம்மை தொடர்ந்து கொண்டே இருக்கும் அதுவும் கிராமத்து நினைவுகள் என்றால் கேட்கவா வேண்டும்

மனோ சாமிநாதன் சொன்னது…

மீன் பிடிக்கும் பசுமை நினைவுகளை எத்தனை அழகாக எழுதியிருக்கிறீர்கள் குமார்! அதுவும் தூண்டில் அசைவுக்கேற்ப தூண்டிலில் மாட்டியிருக்கும் மீனின் வகைகளைக் கண்டு பிடிக்கும் விதம் அருமை!
'இந்த நாள் அன்று போல் இல்லையே' என்ற பாட்டு தான் நினைவில் எழுகிற‌து!

இங்கு கூட‌ விரால் மீன் கிடைக்கிற‌து. நீங்க‌ள் சாப்பிட்ட‌தில்லையா?

C.P. செந்தில்குமார் சொன்னது…

கிராமத்து நினைவுகள்.. பதிவுலகின் பாரதிராஜா!!!

சக்தி கல்வி மையம் சொன்னது…

என்ன இருந்தாலும் கண்மாய் மீன் ருசி தனிதானுங்களே..// ஆமா இதேலென்ன சந்தேகம்.,

Menaga Sathia சொன்னது…

பசுமையான நினைவலைகள்...பகிர்வுக்கு நன்றிங்க!!

சுசி சொன்னது…

கிரமாத்து நினைவுகள் நல்லாருக்கு.

மகனை பற்றியும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

ராமலக்ஷ்மி சொன்னது…

அசை போட்டிருக்கும் கிராமத்து நினைவுகள் அருமை குமார்.

//எல்லாருடைய வீட்டுக்கும் செல்லப்பிள்ளையாக நம்ம மைந்தர் வலம் வருகிறார்.//

மகிழ்ச்சி:)! சுசி சொல்லியிருப்பது போல மேலும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

ஆமினா சொன்னது…

அழகிய நினைவலைகள்

செங்கோவி சொன்னது…

//அப்பா.... அம்மா தூங்கு... நீ தூங்கலன்னு கேட்டாரு பாருங்க...//

சூப்பர்யா.......அயிரை ருசியே தனி தான்.

Unknown சொன்னது…

நன்றி நண்பரே பகிந்தமைக்கு

சாந்தி மாரியப்பன் சொன்னது…

எப்பவாவது எட்டிப் பார்த்துட்டு வர்ற கிராமத்து வாழ்க்கையையே மறக்க முடியலை. எப்பவும் அங்கயே இருக்கறவங்க கொடுத்து வெச்சவங்க..

பையனைப் பத்தியும் பகிர்ந்துக்கோங்க..

Thenammai Lakshmanan சொன்னது…

ஹா ஹா கனவுல மீன் கொழம்பு சாப்பிடலாம் . மீன் பிடிக்கிற மாதிரி பேயா..:)

RAMA RAVI (RAMVI) சொன்னது…

அருமையான கிரமத்து நினைவுகள்.பகிர்வுக்கு நன்றி

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! சொன்னது…

கிராமத்து வாழ்க்கை என்றும் இனிமையானது... மீண்டும் கிடைக்குமா என ஏக்கத்தில் வாழும் மக்கள் எத்தனையோ அருமை

சாகம்பரி சொன்னது…

நாங்க காவிரிக்கரை. தூண்டிலாம் கிடையாது. துண்டு போட்டுதான் அள்ளுவோம். நினைவுகளுக்கு நன்றி

ஆயிஷா சொன்னது…

கிரமாத்து நினைவுகள்...

பகிர்வுக்கு நன்றி

பெயரில்லா சொன்னது…

நினைவுகள் என்றும் சுகமானவை..எங்களையும் உங்களுடன் அழைத்து சென்றது நினைவுகள்..

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

ஆஹா எனது சின்ன வயசு நியாபகங்களை வரவச்சுருச்சே அருமையான பதிவு...!!!

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

கனவு என்பது நம் உள்மன ஆசைகளூம், எதிர்பார்ப்புகளுமே..

துபாய் ராஜா சொன்னது…

// சரி எனக்கு ஒரு சந்தேகங்க.... கனவுல மீன் பிடிக்கிற மாதிரி வந்த பேய் பிடிச்சிருக்குன்னு எங்கம்மா சொல்லுவாங்க... உண்மையாங்க...//

// என்ன இருந்தாலும் கண்மாய் மீன் ருசி தனிதானுங்களே... இதை எழுதும்போதே நாக்குல எச்சில் ஊறுதுங்க... அதுவும் இந்த அயிரை மீனை அப்படியே.... சரி விடுங்க... நெனச்சு என்னாகப்போகுது.//

கேள்வியும் கேட்டு பதிலும் சொல்லி விட்டீர்களே... :))

விச்சு சொன்னது…

வலைச்சரத்தில் இன்று இந்தப் பதிவினை அறிமுகம் செய்துள்ளேன். நேரமிருப்பின் வந்து பாருங்கள். தங்களின் கருத்துக்களையும் தமிழ்மணத்தில் வாக்கினையும் பதிவு செய்யுங்கள்.
http://blogintamil.blogspot.in/2012/02/blog-post_19.html

Unknown சொன்னது…

naa innum weekendla meen pidikka poven enka veetla veyilla suthi karuthudatha nu semaya thittuvaanka antha thukkam ellame meen pidikum pothu paranthu poidum .neenkalum poi oru thadava try pannunka frnds