மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

புதன், 29 செப்டம்பர், 2010

மறக்க முடியா மனுசன்



புரை ஏறும் மனிதர்கள் என்று பா.ரா சித்தப்பும் காரெக்டர் என்று வானம்பாடிகள் ஐயாவும் அவர்கள் வாழ்வில் சந்தித்த மறக்கமுடியாத நபர்களைப் பற்றி எழுதி வருகிறார்கள். இங்கு நான் பகிரப் போகும் நபரும் அப்படி மறக்க முடியாத நபராகிப் போனவர்தான். ஆனால் இவர் புரை ஏறியவரோ காரெக்டரோ இல்லை எனக்குள் வித்தியாசமானவர்.

துபையில் இருக்கும் அண்ணன் வரச்சொல்லிக் கொண்டே இருந்ததால் இரண்டு வாரங்களுக்கு முன்னர் வார விடுமுறையில் கிளம்பினேன். அண்ணனின் அறைக்கு நான் சென்ற போது மாலை 5 மணியிருக்கும். எல்லாரும் நல்ல தூக்கததில் இருந்தனர்.  யாரும் விழித்துக்கூட பார்க்கவில்லை.

சிறிது நேரத்தில் ஒருவர் எழுந்தார். என்னைப் பார்த்தார் நான் சினேகமாக சிரித்தேன். அவர் கண்டு கொள்ளவேயில்லை. இரவு சமையலுக்கான வேலையில் வேகவேகமாக இறங்கினார். பருப்பு அவியப் போட்டு விட்டு காய்களை பெரிது பெரிதாக வெட்டினார். என்னிடம் எதுவும் பேசவில்லை... இவரல்ல நான் சொல்ல வந்த வித்தியாசமான மனிதர். இருந்தாலும் அறைக்கு வந்தவரை வாவென்று சொல்லக்கூட அறியாத தமிழர் என்பதற்காகவே இவரைப் பற்றி சில வரிகள்.
அண்ணன் எழுந்தார் வாடா எப்ப கிளம்பினே என்றபடி கைலியை கட்டு என்றார். இல்லண்ணே அக்கா மக வீட்டுக்குப் பொயிட்டு வந்துடுறேன் என்றதும் நான் வரவா என்றார் வேண்டாம் நான் பொயிட்டு வாரேன் என்று கிளம்பினேன். பின்னர் நான் திரும்பி வரும்போது இரவு 11.30 மணியாச்சு. எல்லாரும் படுத்துவிட்டார்கள்.

மறுநாள் காலை அண்ணன் சிறிது வேலை இருக்கிறது 10 மணிக்கு வந்துடுவேன் என்றபடி கிளம்ப அறையில் நானும் அண்ணனின் நண்பர் மட்டும் இருந்தோம். அப்போது இரவு வேலைக்கு சென்ற அறை நண்பர் ஒருவர் வந்தார். என்னிடம் "எப்ப வந்திங்க... நல்லாயிருக்கிங்களா..." என்றார். எனக்கு ஆச்சரியம் யாருமே பேசாத அறைக்குள் தானே வந்து பேசுகிறாரே என்று. அப்புறம் அருகில் அமர்ந்து பேச ஆரம்பித்தார்....

"இப்பல்லாம் சாப்பிடவே பிடிக்க மாட்டேங்குதுங்க... முன்னல்லாம் நாலு கறி வைப்பாங்க இப்ப ஒண்ணாகிட்டாங்க அதுவும் நல்லால்லை... கேட்டா சாப்பிட்டா சாப்பிடு இல்லண்ணா போன்றான்... என்ன செய்ய வயித்துப்பாடுல்ல... என்னங்க நானு சொல்றது"

நான் ஆமோதிப்பதாய் தலையாட்டினேன். அவரே மேலும் தொடர்ந்தார் "இந்த செல்போன் வந்து எல்லாம் கெட்டுப் போச்சுங்க... முன்னல்லாம் வராத்துக்கு ஒருவாட்டி போன் பண்ணி பேசுவோம். இப்ப செல்போன் வந்துட்டு ரொம்பத்தான் பேசுறோம்... அதுவும் இந்த இண்டெர்நெட் போனெல்லாம் வந்துட்டு தொட்டது தொண்ணூறுக்கும் போனுதான்... என்ன செய்ய காலம் எங்கயோ போகுது. சரிதானேங்க"

"ஆமாமா... நீங்க சொல்றது சரிதான்" இது நான். அப்ப இடையில் புகுந்த அண்ணனின் நண்பர், "நீ என்ன ரொம்ப சலிச்சுக்கிறே... விடுய்யா... நீ பேசலை"

"நீ சும்மா இருய்யா... உனக்கு ஒண்ணும் தெரியாது... நான் அவருகிட்ட சொல்றேன்... நீ சும்மா சும்மா பேசுவே... நான் எதுக்கு சொல்ல வாரேன் தெரியுமா... இப்படித்தான் ஹைவேஸ்ல உள்ள ஏடிஎம் அறைக்குள்ள காலேசு பசங்க கசமுசா பண்ணி அதை நெட்டுல போட்டுட்டான் தெரியுமில்ல... உலகம் அழிவை நோக்கி போகுது..."

"நீ இதெல்லாம் எங்கய்யா பாத்தே... சும்மா கதைவிடாதே..." என்றார் நண்பர்.

"உனக்கு எல்லாத்துக்கும் புரூப்பு வேணுமாக்கும்... புக்குல பார்த்தேன்..."

"ராத்திரி வம்சம் படம் பார்த்தோமய்யா... நல்லாயிருந்துச்சு..."

"கேசட் எங்கய்யா... இந்தா சிந்துசமவெளி... சூப்பர் படமய்யா... எல்லாரும் பாக்கவேண்டிய படம்..."

"என்னங்க சாமி வீட்டை தாக்குற அளவுக்கு மோசமான படமுன்னு ஊரே சொல்லுது நீங்க என்னடான்னா நல்ல படமுன்னு சர்டிபிகேட் கொடுக்கிறீங்க?" என்றேன் நான்.

"இல்லங்க நாட்டுல நடக்குறதைதானே எடுத்திருக்கான்... அதுல பாருங்க என்று படம் மற்றும் அவரின் பார்வையை விவரமாக விளக்கினார். கடைசியில இது கற்பனைக் கதைன்னு போட்டு கீழே அல்லன்னு போடுறான்யா" என்றார் அண்ணனின் நண்பனிடம் அவரும் அப்ப இன்னைக்கு பாத்திருவோமுய்யா என்று சிடியை வாங்கிக் கொண்டார்.

"இப்பதான் ஊருக்குப் பொயிட்டு வந்தேன்... என்னமா கெட்டுப்போச்சு... ஏமாற்றம்... வழிப்பறி... வறுமைன்னு மோசமா இருக்கு. இங்கயிருந்து நல்ல படமா கொண்டு போனேங்க... எம் பொண்டாட்டி பாக்க விடலை... அப்பதான் பாக்கலாமுன்னு ஆன் பண்ணுவேன்... நாதஸ்வரம் பாக்கணும்பா... அப்புறம் தென்றல்... இந்த சீரியல் பொம்பளைங்களை ரொம்ப கெடுத்து வச்சிருக்கு... ஒருநா இப்படித்தான் அடுப்புல பருப்பப் போட்டுட்டு அப்படியே நாடகத்துல உக்காந்துட்டா... அது வெந்து தண்ணியெல்லாம் போயி அடிப்புடிச்சோடனே ஐய்யய்யோன்னு ஓடுற என்னத்தை சொல்ல நாலு வாங்கு வாங்கினேன். எம் பொண்ணுக்கு ரெண்டு வயசுதான் ஆகுது... அது " என் ஊரு கன்னியாகுமாரி... என் பேரு மீனாகுமாரி..." அப்படின்னு எதோ பாடுதுங்க... எனக்கு வரமாட்டேங்குது பாருங்க... எல்லாம் இந்த டிவி பண்ற வேலைங்க... எல்லாத்துக்கும் மேல எங்க அப்பத்தா, அதுக்கு வயசு எம்பது இந்த வயசுல தம்பி அந்த டிவிய தட்டிவிடு நாடகம் பாக்கணும் பாத்துப் பழகிப் போச்சு... நேத்து வேற நல்ல இடத்துல முடிச்சிருக்கான்னு சொல்லுது பாருங்க எனக்கு என்ன செய்யிறதுன்னே தெரியலை."

"இதைவிட கொடுமை என்னன்னா பக்கத்து வீட்டுக்காரன் செவத்துல வெள்ளை பெயிண்டடிச்சு வச்சிக்கிட்டு புராஜெக்டர்ல படம் போட்டுப் பாக்குறான்... ஊப்பருல போட்டு சும்மா தொம் தொம்முனு ஊரையே கூட்டுறான்... ரொம்ப தேறிட்டாங்க தெரியுமா?"

"எல்லாம் வளர்ச்சிதானேங்க"

"ஆமா... வளர்ச்சி என்னங்க வளர்ச்சி... அழிவுதாங்க... எல்லாரும் அழிவை நோக்கிப் போறோம்...இந்தா பாருங்க பாகிஸ்தான்ல மழை வெள்ளத்துல எத்தனையோ கிராமம் அழிஞ்சிபோச்சு... இயற்கை சிரழிவுகள் அதிகமாயிடுச்சு... இதே நிலமை நாளைக்கு நமக்கு வராதுன்னு என்ன நிச்சயம்... ஆமா உங்க அண்ணனுக்கு ஊருல சொந்த வீடுதானே..."

"ஆமா..."

"எனக்கு வீடு கட்டல்லாம் நம்பிக்கையில்லங்க... எப்ப எதுல அழிவு வரும் சாவு வருமுன்னு யாருக்கு தெரியும்... இருக்கவரைக்கும் நல்லா சாப்பிட்டு அனுபவிச்சிட்டுப் போகவேண்டியதுதான்...."

"அப்ப உம்மகனுக்கு சேத்துவைக்க மாட்டியா?" இது அண்ணனின் நண்பர்.

"எதுக்கு சேர்த்து வைக்கணும்...அப்பன் சேத்துவச்சிட்டுப் பொயிட்டான்னு அது ஊதாரியாயிடும்... எனக்கெல்லாம் எங்கப்பா சொத்தா வச்சிருந்தாரு... பத்து வருசத்துக்கு முன்னால நா இங்க வரும்போது எங்கப்பா தம்பி புல்லு இருக்க இடத்தை தேடித்தான் மாடு போகணும்... அங்க கக்கூஸ் கழுவச் சொன்னாலும் செய்யி அப்பதான் முன்னுக்கு வரலாமுன்னாரு... வேற ஒண்ணும் சொல்லலை... அவரு வார்த்தை எவ்வளவு சரியா இருக்கு தெரியுமா?"

"அதுக்காக வீடு கட்டாம இருந்துடுவியா..."

"அதான் சொல்றேன்லய்யா... இந்தாளுக்கு எப்பவுமே புரியாதுங்க... நம்மளையும் குழப்புற குழப்பவாதி... லெட்ச லெட்சமா அதுல போயி கொட்டமுடியுமா... நீங்களே சொல்லுங்க"

"------" பதில் பேசாது சிரித்து வைத்தேன்.
"இப்ப காற்றிலயும் மாசு அதிகமாயிப்போச்சு... எங்க ஊருக்குப் பக்கத்துல செல்போன் டவர் வைக்கக் கூடாதுன்னு போராட்டம் பண்ணி நிறுத்திபுட்டாங்கன்னா பாருங்க"

"அது என்னய்யா பண்ணுது..."

"என்ன பண்ணுதா... அதில இருந்து அணுக்கள் வெளியாகுதாமய்யா... அது கர்ப்பிணிகளுக்கெல்லாம் ஆபத்தாம்.... சில நேரங்கள்ல குழந்தைகூட உண்டாகாதாம்... தெரியுமா?"

"என்னய்யா புதுசா கதைவிடுறே..."

"இதுக்குத்தாய்யா புத்தகம் வாங்கிப் படிக்கணுங்கிறது... ரூம்ல நீயி நீயூஸ்கூட பாக்கமாட்டே... எப்பவும் கேடிவியில படம், இல்லைன்னா புட்டி அது போதும் உனக்கு... உலக விஷயம் தெரியணுய்யா... எதோ வாழ்ந்தோம் செத்தோமுன்னா இருக்கது."

"ரொம்ப கதைவிடுறேய்யா.."

"கதையில்லய்யா... நெஜம்... அப்புட்டும் நிஜம்... நான் இங்க வந்தப்போ எவ்வளவு சிட்டுக்குருவி சாயந்தர நேரத்துல பால்கனியில வந்து உக்காரும் தெரியுமா... இப்ப அதெல்லாம் எங்க... காத்துல கலந்த கெட்ட அணுக்களால செத்துப் போச்சு... இப்ப ஒரு சிட்டுக்குருவி பாக்க முடியுதா? சும்மா கதைவிடுறதா சொல்றே..."

"நிஜமுய்யா... இப்ப அதிகமா சிசேரியன் செய்ய என்ன காரணம்... நாம சாப்பிடுற சாப்பாடுதான்... எல்லாம் ரசாயணம் கலந்து இருக்கு, அதனால சுகப்பிரசவம் இல்லை.... அந்தக் காலத்துல ஏழட்டுன்னு பெத்துக்கலை. அப்ப எங்கய்யா அபரேசன்... இப்ப பாஸ்டுபுட்டு, அது இதுன்னு எல்லாம் மாடர்னா மாறியாச்சி... அப்புறம் டாக்டரை குத்தம் சொல்லி என்ன பிரயோசனம்?"

"நீங்க சொல்றதும் சரிதான்" இது நான். அதிகம் அவரிடம் நான் பேசவில்லை என்றாலும் அவர் சொல்வதை கேட்டுக் கொண்டிருந்தேன். உடனே, "நீங்க எப்படி புரிஞ்சு பேசுறீங்க... இங்க உள்ளவங்க நான் எதாவது பேசினா இடையில எதையாவது சொல்லி மூடவுட் ஆக்கிடறாங்க... அதனால வந்தமா படுத்தமான்னு இருக்கது... இன்னைக்கு உங்க கூட பேசியது சந்தோஷமா இருக்கு... ஆமா நான் போரடிக்கலையில்ல...." என்றாரே பார்க்கலாம்.

பிறகு அவர் படுத்து உறங்கிவிட அண்ணன் வந்ததும் சாப்பிட்டுவிட்டு நானும் கிளம்பி வந்தேன்.

-'பரிவை' சே.குமார்.

20 எண்ணங்கள்:

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

குமார்,சரளமான எழுத்து நடை,சம்பவத்தை நேரில் பார்ப்பது போன்ற வர்ணனை, இவை இரண்டும் உங்கள் பிளச் பாயிண்ட்ஸ்

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

ஓட்டுக்களை அள்ளறீங்களே

சுசி சொன்னது…

எங்களையும் அவர் கூட பேச வச்சத்துக்கு நன்றிங்க.

அப்பாதுரை சொன்னது…

சுவையான உரையாடல். கொஞ்சம் சமூகப் பார்வையும் கலந்த உரையாடல்.

இதென்ன சிட்டுக்குருவியை எல்லாரும் பிடித்துக் கொண்டீர்களே? வளர்ச்சியின் மறுபக்கம் அழிவு தானே? அதுதானே சமநிலை? அழிவின் மறுபக்கம் வளர்ச்சி என்று பார்க்க ஒட்டாமல் தடுபப்து எது?
டார்வின் தத்துவம் தோண்டத்தோண்டப் புரியும்.

க ரா சொன்னது…

எழுத்து நடை அப்படியே சம்பவத்தை நேரிலே உக்காந்து பார்த்த மாதிரி இருந்தது.. பகிர்வுக்கு நன்றி :)

vasu balaji சொன்னது…

நல்லா வந்திருக்கு. ஊடால கமெண்ட் இல்லாம இருந்தா இன்னும் நல்லாருக்கும்.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க செந்தில்குமார்...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி... எதோ பேச்சு வழக்கில் எழுதுகிறேன் அவ்வளவுதான்...
உங்களைப் போன்ற நண்பர்கள் வாக்களித்து ஊக்கமூட்டுகிறார்கள்... நானும் எழுதுகிறேன்....

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சுசி மேடம்...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அப்பாதுரை...
அவரின் பேச்சை அப்படியே எழுத்தில் கொண்டு வந்தேன் அவ்வளவுதான். சிட்டுக்குருவி பற்றி ஒரு தனிப் பதிவே போடலாம். பின்னர் ஒருநாள் பார்க்கலாம்.
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க இராமசாமி கண்ணன்...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க வானம்பாடிகள் ஐயா...
எனக்கு ரொம்ப சந்தோஷம்... நல்லாயிருக்கு, Good one என்றுதான் எனக்கு இதுவரை உங்களிடம் இருந்து பின்னூட்டம் வரும் முதல் முறை சற்றே நீள வரி. கமெண்ட்டை நீக்கியாச்சு...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

கமலேஷ் சொன்னது…

நானும் அங்க பக்கத்துல உக்காந்து இதை கேட்ட மாதிரியே இருந்துச்சி நண்பரே..


நல்ல ஸ்க்ரீன் ப்ளே...

ஹேமா சொன்னது…

குமார்...பக்கம் இருந்து நடந்த கதை சொல்வதுபோல இயல்பான நடை.

நாடோடி இலக்கியன் சொன்னது…

இயல்பான நடை.

ம.தி.சுதா சொன்னது…

ஃஃஃஃ உள்ள ஏடிஎம் அறைக்குள்ள காலேசு பசங்க கசமுசா பண்ணி அதை நெட்டுல போட்டுட்டான் தெரியுமில்ல... உலகம் அழிவை நோக்கி போகுது..." ஃஃஃஃ நல்லாச் சொன்னிங்க போங்க..

vanathy சொன்னது…

சூப்பரா இருக்கு எழுத்து நடை.

இலா சொன்னது…

இப்படி எதார்த்தமா எழுத்து ரொம்ப பிடிச்சிருக்கு!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் சொன்னது…

இடுகை பெரியதாய் இருந்தாலும் நிறைய
நாட்டு நாட்டு நடப்புக்களை அலசியிருக்கிறீர்கள்.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க கமலேஷ்....
வாங்க ஹேமா...
வாங்க இலக்கியன்...
வாங்க ம.தி.சுதா...
வாங்க வானதி...
வாங்க இலா...
வாங்க நிஜாம்...

உங்கள் அனைவரின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Jaleela Kamal சொன்னது…

பேச்சுலர்கள் ருமில் அவர்கள் புலப்பஙகள் எல்ல்லாம் அப்படியே நேரில் கேட்பது போல் இருக்கு