மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

ஞாயிறு, 15 நவம்பர், 2009

பள்ளிப்பருவம் -II

பள்ளிப் பருவம் -II... இதுவும் நடுநிலைப்பள்ளி சம்பவங்களின் தொகுப்புதான். நாலாப்பு படிக்கும் போது பாக்யராஜின் 'தூறல் நின்னு போச்சு' படம் வந்துச்சு. ஒருநாள் அம்மா, நான், அக்கா, தம்பி எல்லோரும் படம் பார்க்க போனோம். அடுத்த நாள் பள்ளிக்கூடம் போனப்ப மத்தியானம் சாப்பிட்டுட்டு மரத்தடியில நின்னு மரக்குரங்கு (அதாங்க ஒரு கம்பை வச்சு வட்டம் போட்டு விளையாடுவாங்களே... அதான்) விளையாடுனவங்களை பார்த்துக்கிட்டிருந்தேன்.

மரத்து மேல இருந்து குதிச்ச சவரிமுத்து அண்ணன், நேரே எம்மேல வந்து விழுந்தாரு. நான் கீழ விழுந்தப்ப கை ஒடிஞ்சிருச்சு, கை வலியோட வகுப்புல இருந்துட்டு வீட்டுக்கு வந்தா கையை தொங்க விட முடியலை. வலி உயிர் போகுது. அம்மா திட்டிட்டு, ஆவரை இலையை பறித்துக் கொண்டு வந்து வேகவைத்து ஒத்தடம் கொடுத்தாங்க. சரியா வரலை. அப்புறம் காலையில திட்டிக்கிட்டே நுடவைத்திய சாலைக்கு கூட்டிக்கிட்டு போனங்க.

ரெண்டு மாசத்துக்கு மேல கட்டுப்போட்டோம். பள்ளிக்கூடத்துக்கு சட்டை போடமத்தான் போவேன். (வகுப்புல எதுவும் சொல்லுறதில்லை. தனி மரியாதைதான் போங்க). நாங்க கட்டுப்போட போறதுக்கு பக்கத்து ஊர்ல போயி பஸ் புடிக்கனும். கிளம்புறப்ப டாண்ணு தூறல் நின்னு போச்சுல இருந்து 'ஏரிக்கரை பூங்காற்றே...' பாட்டை ரேடியோவில போடுவாங்க. (அப்ப அந்த பாட்டு மேல ஒரு மோகம்)

அம்மாகிட்ட இந்த பாட்டைக் கேட்டுட்டு வர்றேம்மான்னு சொன்னாப்போதும், ஆமா இவருக்காக பஸ்காரன் நிப்பான். வாடா. பாக்யராஜ் மாதிரி சண்டை போடுறேன்னுதான் கை ஒடிஞ்சு கிடக்கு வாறியா.. இல்லையா..? என்று கத்துவார். (நாம... பாக்யராஜ் மாதிரி சண்டை... என்ன சிறுபிள்ளைத்தனமான பேச்சு பாருங்க).

இப்பவும் தூறல் நின்னு போச்சு பாட்டைக் கேட்டா மரக்குரங்கும் கையும் மறக்காமல் ஞாபகத்தில் வரும்.

ஆறாவது படிக்கும் போது அல்வா விற்பனை அமோகமா நடந்ததுங்க.(அப்பவே தொழிலதிபருங்க) ஒரு ரூபாய்க்கு வாங்கினா ஒரு ரூபாய் 20 காசுக்கு விக்கலாம். சில சமயம் லாபமான 20 காசுக்கு நாமளே சாப்பிட்டுறது. ( லாபம் நினைக்காத முதலாளி)

அப்புறம் திங்கட்கிழமை மதியம் பக்கத்துல ஞாயிற்றுக்கிழமை வாரச்சந்தை நடக்கிற இடத்துல போயி நான், பழனி, சேகர், முத்துப்பாண்டி எல்லோரும் காசு பொறக்கி (இப்பவும் நாம பொறுக்கிதாங்க.) கடலை மிட்டாய் வாங்கி சாப்பிட்ட அந்த நாட்கள் இன்னும் இனிமையாய் நெஞ்சுக்குள்.

அந்த நடுநலைப்பள்ளிக்கு பின்பொரு நாள் நானும் எனது நண்பன் முருகனும் நாங்கள் நடத்திய கணிப்பொறி மையம் மூலமாக சில உதவிகளை செய்த போது தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களால் கௌரவிக்கப்பட்டோம்.
 
-சே.குமார்

2 எண்ணங்கள்:

cheena (சீனா) சொன்னது…

அன்பின் குமார்

படித்த பள்ளியில் பாராட்டுப்பெறுவது - வாழ்க்கையில் ஒரு சாதனை. உண்மை உண்மை.

நல்வாழ்த்துகள் குமார்
நட்புடன் சீனா

'பரிவை' சே.குமார் சொன்னது…

vazhththukku nanri sir