மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

ஞாயிறு, 9 ஏப்ரல், 2017

கடல் ராணி

ரபிக் கடலில் கொள்ளையரின் அட்டூழியத்தை ஒழித்த வரலாற்று நிகழ்வை சாண்டில்யன் அவர்கள் 'கடல் ராணி' ஆக்கித் தந்திருக்கிறார். பெரும்பாலும் அவரின் புனைவுகள் எல்லாமே ஒரு வரலாற்றுச் சம்பவத்தை மையமாக வைத்து நகர்த்தப்பட்டிருக்கும் என்பதை நாம் அறிவோம். வரலாற்று உண்மையைக் கையில் எடுப்பவர்கள் முழுக்க முழுக்க வரலாற்றைச் சொன்னாலும் அதிக வாசகர்களை இழுப்பது சிரமம்... அதுவும் ஜனரஞ்சக பத்திரிக்கைகளில் எழுதும் போது அவர்களின் விற்பனையைப் பெருக்கும் விதமாக, வாசகர்களை ஈர்க்கும் உக்தி தொடர் எழுத்தாளனிடம் இருக்க வேண்டும் என்பதைத்தான் பத்திரிக்கை ஆசிரியர் விரும்புவார் என்பதால் இவரின் கதைகளில் வரலாறு ஊறுகாயாக வைக்கப்பட்டு அதிலிருந்து கற்பனை, நாயகிகளின் வர்ணனைகளுடன் பக்கம் பக்கமாய் விரியும். 

புதினங்கள் அதிகம் கற்பனை பேசுவது வரலாற்றின் உண்மையை உடைத்து ஒரு பொய்ப்பிம்பத்தை நம் கண் முன்னே காட்டிவிடுகிறது என்பது மறுக்கமுடியாத உண்மை. இது வரலாற்றை முடமாக்கும் செயல் என்றாலும் இப்படியான ஒரு வரலாற்று நிகழ்வு நடந்திருக்கிறதே என்று அறிவது வருத்தத்திலும் கொஞ்சம் சந்தோஷமே..   வீரபாண்டிய கட்டப்பொம்மன் என்றதும் சிவாஜி ஞாபகத்தில் வந்தாலும் வெள்ளையரை எதிர்த்த கட்டப்பொம்மனையும் அறிய முடிந்தது அல்லவா..?.  எழுத்தாளர்கள் வரலாற்றுப் புதினங்களை எழுதியதால்தான் கொஞ்சம் வரலாற்றையும் நம்மால் அறிய முடிந்தது...  என்ற உண்மையும் புலப்படுகிறது. இல்லையேல் நம்மில் பலர் பல வரலாறுகளை அறியாமலே இருந்திருப்போம் அல்லவா...?

கடல் ராணிக்கான முன்னுரையிலேயே இந்தக் கதையில் வரும் சம்பவங்கள் நூற்றுக்கு நூறு சரித்திரத்தில் நடந்தவை என்றும் கதாபாத்திரங்கள் கூட தான் சிருஷ்டித்த கடல்ராணி, சாரு, ஆனந்த் தவிர்த்து இந்த சரித்திரம் நிகழ்ந்த காலத்தில் வாழ்ந்தவர்களே என்றும் சொல்லியிருக்கிறார். மேலும் இதைக் குறித்த தீவிர தேடுதலில் எப்பேர்ப்பட்ட பரம்பரையில் பாரதம் வந்திருக்கிறது. எத்தகைய அமானுஷ்ய நிகழ்ச்சிகள் அரபிக்கடலில் நிகழ்ந்திருக்கின்றன என்பதை அறிந்து பிரமித்துப் போனேன் என்றும் சிவாஜி மகாராஜாவால் உருவாக்கப்பட்ட அற்புதமான கடல் சூழ் கோட்டை சிந்து துர்க்கம், இதை நிர்மாணிக்கும் போது சத்ரபதி சிவாஜி அவர்கள் மற்ற கூலியாட்களுடன் இணைந்து தானும் மண்ணும் கல்லும் சுமந்ததை அறிந்து வியந்ததையும் நம் வரலாற்றில் எத்தனை எத்தனையோ பொக்கிஷங்கள் புதைந்து கிடக்கின்றன என்று சிந்திக்கும் போது இத்தனையும் சாதித்த சமுதாயம் இன்றைக்கு இருக்கும் நிலை குறித்து 'நெஞ்சு பொறுக்குதில்லையே' என்ற பாரதியின் தீர்க்க தரிசன வாக்கியம் எத்தனை உண்மையானது என்பது புலனாகிறது என்றும் சொல்லியிருக்கிறார்.

Image result for கடல் ராணி

சிந்து துர்க்கம் மற்றும் பாண்டவர் கோட்டின் ராணியாக இருக்கிறாள் கடல் கொள்ளைக்காரியான கடல் ராணி (ரத்னா). அவளைக் கொல்லத் துடிக்கும் பலரில் ஆங்கில கொள்ளைக்கார குழுவும் ஒன்று. கடல் ராணி கடலில் நீந்துவதில் அலாதி பிரியம் கொண்டவள். மலைப்பாறையின் மறைவுக்குப் பின்னே ஒரு சரிவில் இருக்கும் பாழடைந்த கட்டிடத்தில் தன் உடைகளை வைத்து விட்டு நீந்தி மகிழ்வாள். அப்படி ஒருநாள் நீந்தி மகிழ்ந்து உடை மாற்றச் செல்லும்  போது ஒரு தூங்கமூஞ்சியைச் சந்திக்கிறாள். அவனுடன் கோபமாக பேசிக் கொண்டிருக்கும் போது ராணியைக் கடத்த வரும் பிரிட்டிஷ் கேப்டன் ஸ்டாண்டனும் லெப்டினென்ட் சுமித்தும் அந்த தூங்குமூஞ்சி வாலிபனின் புயல்வேக துப்பாக்கிக் குண்டுகளின் தாக்குதலால் தங்கள் துப்பாக்கிகள் பறக்க சரணடைகிறார்கள். அப்போது ஸ்டாண்டனின் கையில் காயம் ஏற்படுகிறது. ராணியைக் காப்பாற்ற துப்பாக்கியால் சுட்ட தூங்க மூஞ்சி மிகச் சிறந்த வீரன் என்பதை ராணி உணர்கிறாள்... அவன் வேறு யாருமல்ல... ஒரு காலத்தில் கடல் கொள்ளையில் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்து, பின்னர் பேஷ்வா பாலாஜிக்கு உதவ அரபிக்கடலில் பல போர்களை நிகழ்த்திய கனோஜி ஆங்க்ரேயின் பிரதான தளபதி ருத்ராஜி ஆனந்தின் தம்பியும்... அவரின் மகன் துலாஜி ஆங்க்ரேயின் நெருங்கிய நண்பனுமான இந்திரஜித் ஆனந்த். 

ஆங்கிலேயர்களுடன் ஆனந்தும் ராணியுமாக பாண்டவர் கோட் நோக்கி பயணிக்க, அவர்களை கடலில் மறிக்கிறான் மிகச் சிறந்த கடல் வீரன் என்று அறியப்பட்ட எட்வர்ட் இங்க்லேண்ட், அவனையும் தன் சாதூரியத்தால் மயக்கிவிடுகிறான் ஆனந்த், கரைக்குச் சென்றதும் இங்க்லேண்டை தான் தங்கியிருந்த விடுதி அறைக்கு அழைத்துச் செல்ல, அங்கு கூர்மையான அறிவுடையவனும் கடல் கொள்ளையில் பிரசித்தி பெற்றவனுமான, அங்கு மரக்கால் பொறுத்தப்பட்ட ஸில்வர்  இருக்கிறான். ஆனந்த் ஸில்வரை காப்பாற்றியவன் என்பதால் ஸில்வருக்கு அவன் மீது பாசம். ஸில்வரிடம் ஒரு கிளி இருக்கிறது. அது தூதும் செல்லும் சில நேரங்களில் அபாயத்தையும் கொடுக்கும். ஸில்வரோ ஆனந்த் தங்களுக்கு உதவுவான் என்று இங்க்லேண்டிடம் சொல்ல அவன் அதில் ஏதோ சதியிருப்பதாக சந்தேகிக்கிறான்.

இங்க்லேண்ட் 380 பீரங்கிகளைத் தாங்கிய மிகப் பிரபலமான ஆங்கிலேயக் கப்பலான காஸண்ட்ராவில் வந்திருப்பதாக ஸில்வரிடம் சொல்கிறான். சிந்து துவர்கத்துக்குள் எந்தக் கப்பலுக்கும் அனுமதியில்லை என்பதால் சிந்து துவர்க்கத்துக்கு வெளியே நிறுத்தியிருப்பதாகச் சொல்கிறான். அதன் பின்னான நிகழ்வுகள், ஆனந்தின் நண்பன் துலாஜி ஆங்க்ரேயின் வருகை, கடற் கொள்ளையர்கள் ஆனந்த் மீது கொள்ளும் நம்பிக்கை ஆரம்பத்தில் தன் மகளைக் காதலிப்பதுடன் விதவிதமாக திட்டம் தீட்டும் ஆனந்தைப் பிடிக்காத ராணியின் தந்தை சங்கர் பந்த் மனம் மாறி உதவி செய்ய, ஆங்கில கடற்கொள்ளையரை அடியோடு ஒழிக்க திட்டம் வகுத்து அதைச் செயல்படுத்துகிறான் ஆனந்த்.

கடற்கொள்ளையரை ஒழிக்கிறேன் என ஒருமுறை தோல்வியடைந்தாலும் மீண்டும் கங்கணம் கட்டி வரும் ஆங்கிலேயன் மாக்ரே,  நாணயங்கள் மற்றும் நகைகளுடன் வருவதாய் ஆசைகாட்டி கொள்ளையடிப்பதில் மூன்றில் ஒரு பங்கு எங்களுக்கு மற்றது உங்களுக்கு என்று ஸில்வர், இங்க்லேண்ட் மற்றும் டெய்லரிடம் சொல்கிறான் ஆனந்த். இது கொள்ளையரை மொத்தமாக அழிக்க உருவாக்கும் திட்டம் என்பதையும் இதில் தாங்களும் அழிக்கப்படுவோம் என்பதையும் ஸில்வர் உணர்ந்தாலும் மற்றவர்கள் உணரவில்லை. அவன் பேச்சையும் யாரும் கேட்பதாய் இல்லை. 

மாக்ரேயை ஒழிக்க அவர்கள் எடுக்கும் முயற்சியில் வேறு கப்பல்கள் நுழையாத சிந்து துர்க்கத்துக்குள் காஸண்ட்ராவை நிறுத்த ராணி சம்மதிக்கிறாள். அதன் பின்னான சிந்து துர்க்கம், பாண்டவர் கோட்டில் நடக்கும் நிகழ்வுகள், சிவாஜி சிலைக்கு பூஜை, ஆனந்தின் திட்டங்கள், கடல்ராணியுடனான ஆனந்த்தின் காதல், துலாஜி ஆனந்தின் பலே திட்டங்கள் என கதை பரபரவென நகர்கிறது.

சிந்து துர்க்கத்தில் ஒரு நாடகத்தை நிகழ்த்தி, யாரும் அறியாமல் அங்கிருந்து மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் இருந்த கனோஜி ஆங்க்ரேயின் பிரசித்தி பெற்ற கடல் கோட்டையான விஜய துர்க்கத்துக்கு வந்த ஆனந்த், மலை அடிவாரம் செல்லாமல் மலையுச்சியில் இருக்கும் குடிசைக்குச் செல்கிறான். அங்கு இருக்கிறாள் வேவுக்காரியும் பேஷ்வாவின் மருமகளுமான சாரு. சாருக்கு ஆனந்த் மீது காதல்... ஆனால் ஆனந்தின் அணைப்பில் ஆனந்தமில்லாததை அறிந்து அவன் வேறு யாரிடமோ மனதை பறிகொடுத்துவிட்டான் என்பதை உணர்ந்து சண்டையிடுகிறாள். அப்போது அங்கு வரும் பேஷ்வா, இருவரையும் சமாதானம் செய்ய முயன்று தோற்கிறார். குடிபோதையில் கனோஜியும் வருகிறார்... பேஷ்வா வரும் நாளில் அதிகாலை குடிசை வாசலில் மதுக்குப்பியை வைப்பது நானே என்று சொல்லும் கனோஜி,  மூவரையும் விருந்துக்கு அழைக்கிறார்.

விருந்துக்குச் செல்லுமிடத்தில் மாக்ரேயின் சந்திப்பு, கனோஜியின் திட்டத்தால் சாரு கடல்ராணியாக மாற, கடற்கொள்ளையரை ஒழிக்கும் பேச்சு நடக்கிறது. கடல் ராணியின் திடீர் வருகையால் மாக்ரே தவிர மற்றவர்கள் திகைக்க, கனோஜியின் சமயோகிதத்தாலும்  நிலமையைப் புரிந்து கொண்ட ரத்னாவின் மதியாலும் அவள் சாருவாக மாறுகிறாள். கடல் கொள்ளையரை ஒழிக்க மாக்ரேயுடன் ஒப்பந்தம் செய்து கொள்கிறார்கள். மறுநாள் அதில் ராணி கையொப்பம் இடுகிறாள். 

ஒருவனுக்கு ஒருத்தியே மிகப்பெரிய பிரச்சினை... அப்படியிருக்க இருவர் என்றால்..? சாருவும் ராணியும் அடிக்கடி அடிதடியில் இறங்க, ஆனந்த் சிக்கித் தவிக்கிறான். பின்னர் இருவரையும் அழைத்துக் கொண்டு சிந்து துர்க்கம் வருகிறான். மீண்டும் ஆலோசனை.... எப்படி மாக்ரேயை எதிர்ப்பதென திட்டங்கள்.. ஆனந்த் தூங்குமூஞ்சியாய் அமர்ந்து திட்டம் தீட்டி மெல்ல மெல்ல காய் நகர்த்துகிறான் நண்பன் துலாஜியின் துணையுடன்... 

மால்வானீஸ் வீரர்கள் மற்றும் கொங்காணி மாலுமிகள் உதவியுடன் ஸித்திக் கப்பலைக் கொள்ளை இட்டதுடன் தான் நடத்தி வந்த கப்பலை கடல் ராணிக்கு பரிசளிப்பதற்காக அதன் பக்கப் பலகையிலும் பாய்மரச் சீலையிலும் 'கடல் ராணி' என எழுதச் செய்து ராணிக்கு கொடுக்க வரும் கடல் போரில் வீரனும் பிரஞ்சுக்காரனுமான ஆலிவர் லா பூஷே எனப்படும் லிவாஸியரும் ஆனந்துடன் இணைகிறான். 

ஐந்து கப்பலுடன் காஸண்ட்ராவை மீட்க வருகிறேன் என ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட மாக்ரே, கவர்னர் பூனைச் சந்தித்து தன் திட்டத்தை விளக்கி பத்துக் கப்பலுடன் செல்வதாகச் சொல்லி, முதல் நாள் ஐந்து கப்பலுடன் தான் கிளம்புவதாகவும் மற்ற ஐந்து கப்பல்கள் அடுத்த நாள் கிளம்பி வரட்டும் என்றும் சொல்கிறான். காஸண்ட்ரா, கடல்ராணி மற்றும் கடல் ராணியின் ஐந்து சிறிய கப்பல்களும் போருக்கு தயாராய் நிற்கின்றன.

தேவ்காட் (சில இடங்களில் தேவகோட்டை என்று எழுதியிருக்கிறார்... அட நம்மூரு) கோட்டையில் ஒரு இரவு தங்கி, அங்கு வேடன் விடுதியில் தங்கியிருக்கும் துலாஜியைச் சந்தித்து தமது அடுத்த திட்டத்தை விளக்குகிறான் ஆனந்த். அங்கு துப்பறிய வந்த ஸ்டாண்டனும் சுமித்தும் இவர்களின் திட்டத்தை அறிய விடாமல் திசை மாற்றப்படுகிறார்கள். மாக்ரேயை சந்திக்கும் இடமாக பூர்ணகட் முடிவாக, அதன் துறைமுகத்துக்குள் காஸண்ட்ராவை நிற்க வைத்து, அதற்கு சற்றே தள்ளி கடல் ராணி  மற்றும் மற்ற ஐந்து கப்பல்களும் நிறுத்தப்பட, காஸண்ட்ரா சிறைப்பறவையாய் மாறியது.  அதை ஸில்வர் எடுத்துச் சொல்லியும் மற்றவர்கள் கேட்கவில்லை.

அடுத்த நாள் போர்... கடல் போர்.... வரலாற்றையே மாற்றிய கடல் போர்... கடல் ராணியை ரத்னா வழி நடத்த, சாரு சுக்கான் பிடிக்க. மாக்ரேயை மட்டுமின்றி காஸண்ட்ராவையும் தாக்க ஆரம்பித்தான் ஆனந்த். 380 பீரங்கிகளைக் கொண்ட காஸண்ட்ரா, தனது அடிப்பகுதியில் பிடித்திருந்த பாசத்தின் காரணமாக வேகத்தை இழந்திருந்ததே அதற்கு எமனானது. 

காஸண்ட்ராவை ஆனந்த தாக்க ஆரம்பித்ததால் போர் திசை மாறியதா..? ஸில்வர், இங்க்லேண்ட், ஸ்டாண்ட் மற்றும் சுமித் நிலை என்ன..? மாக்ரே திட்டம் வென்றதா..? லா பூஷே ஆனந்துக்கு எந்தளவுக்கு உதவினார்..? கடல் கொள்ளையர்கள் மொத்தமாக அழிந்தார்களா..? ரத்னா, சாரு இருவரின் சண்டைக்கு முடிவு வந்ததா..? ஆனந்த் காதல் ராணிகளை மணந்தானா..? என்பதை எல்லாம் இங்கு சொன்னால் கதையை வாசிக்கும் போது சுவராஸ்யம் இருக்காது... எனவே மேலே இருக்கும் கேள்விகளுக்கான பதில்களை 'கடல் ராணி'யை வாசித்து தெரிந்து கொள்ளுங்கள்.

பின்னுரையில் அரபிக்கடல் போருக்குப் பின்னான வரலாற்று நிகழ்வுகளைச் சொல்லியிருக்கிறார். கடல் ராணி கண்டிப்பாக படிக்க வேண்டிய புதினம்.
-'பரிவை' சே.குமார்.

வியாழன், 6 ஏப்ரல், 2017

முனைவரும் பத்திரிக்கையாளரும்

னசுக்குத் தெரிந்த வலைத்தள நண்பர்களின் பிறந்தநாள் அன்று அவர்கள் குறித்துத் தெரிந்ததைச் சொல்லி, வாழ்த்துக் கட்டுரை வெளியிடுவதை சமீப நாட்களாக செய்து வருகிறேன். ஒரு சில நாட்கள் பதிவெழுத முடியாத நிலை வரும்போது முகநூலிலேனும் வாழ்த்தைச் சொல்லி விடுவதுண்டு. இந்த வாரத்தில் இது மூன்றாவது பிறந்தநாள் வாழ்த்துப் பகிர்வு. இன்றைய பகிர்வில் ஒரு முனைவரும்... ஒரு பத்திரிக்கையாளனும்...

Image result for பிறந்தநாள் வாழ்த்து

ஆசிரியர் பணி என்பது மிகவும் சிறப்பான ஒன்று... அதிலும் ஆத்மார்த்தமாக அந்தப் பணியைச் செய்யும் போது மனசுக்குக் கிடைக்கும் திருப்திக்கு ஈடு இணை எதுவும் இல்லை... அப்படிப்பட்ட ஆசிரியர் பணியில் நம் தாய் மொழி பயிற்றுவிக்கும் ஆசிரியராய் இருப்பது இன்னும் சிறப்பு. அப்படியானதொரு வாழ்க்கை அமைந்தால் அந்த வாழ்க்கைக்குச் சொந்தக்காரர் மிகவும் கொடுத்து வைத்தவர் என்றே சொல்வேன்.

ஒரு ஆசிரியர் மாணவர்களுக்குப் பிடித்த ஆசிரியராய் ஆகிவிட்டால்... ஆஹா... அதற்குப் பிறகு வேறென்ன வேண்டும். பெரும்பாலும் மற்ற ஆசிரியர்களைவிட தமிழாசிரியர்களுக்கு மாணவர்கள் மீது மிகப்பெரிய பற்றுதல்... கூடுதல் பாசம் இருக்கும். இந்த பாசத்தை என் ஆசிரியர்களிடம் நானும் அனுபவித்தவன் (என் பாக்கியம் கல்லூரியில் எங்கள் துறை ஆசிரியர்கள், தமிழ்த்துறை ஆசிரியர்கள் மற்றும் அனைத்துத் துறை ஆசியர்களும் பாசத்துடன் இருந்தார்கள்... இன்றும் இருக்கிறார்கள்) என்பதால் சொல்கிறேன். ஆம் தே பிரித்தோ மேல் நிலைப் பள்ளியில் படிக்கும் போது தாசரதி ஐயா, சவரிமுத்து ஐயா, அருள்சாமி ஐயா போன்றோருடன் கொஞ்சமே கொஞ்சம் உறவுதான் இருந்தது. கல்லூரிக்குச் சென்றதும் அங்கிருந்த தமிழ் ஐயாக்களுடன் எல்லாம் நெருக்கமாக, பழனி ஐயாவுடன் ரொம்ப நெருக்கமாகி, அவர் வீட்டில் கூடும் மாணவர் கூட்டத்தில் கலந்து இலக்கியம் பேசி அவரின் மனசுக்குப் பிடித்த மகன்கள், மகள்கள் ஆனவர்களில் நானும் ஒருவன். அவருடன் பழக ஆரம்பித்து தமிழ்நாடு கலையிலக்கியப் பெருமன்றத்தில் உறுப்பினரான போது மீண்டும் தாசரதி ஐயா, அருள்சாமி ஐயா, சவரிமுத்து ஐயாவுடன் குடும்ப உறவானது. இன்றும் தொடரும் நட்பில் என் மனைவியைக் காணும் இடத்தில் எல்லாம் 'ஆத்தா மருமகளே... எம்மகன் நல்லாயிருக்கா..? எப்ப வரும்?' என சவரிமுத்தையா கேட்கத் தவறுவதில்லை. தமிழாசிரியர்களுக்கு எப்பவும் பாசம் அதிகம்தான் இல்லையா..? 

அப்படிப்பட்ட ஒரு ஆசிரியர்... மாணாக்கர்களால் விரும்பப்படுகிற தமிழாசிரியர்.... மாணவியரின் நன் மதிப்பைப் பெற்ற இந்த காரைக்குடிக்காரர்... தமிழ் மீது மிகுந்த பற்றுக் கொண்டவர்... கணினித் தமிழின் மீது காதல் கொண்டவர்... வேர்களைத் தேடி என்னும் வலைத்தளத்தில் தமிழ் சம்பந்தமான நிறைய விபரங்களைப் பகிர்ந்து வருபவர்... இவர் யாரென்று தெரிகிறதா..? ஆம் அவரேதான்... தன் மாணவிகளின் தனித்திறமையை வெளிக்கொண்டு வருவதுடன் அவர்களுக்கென தன வலைப்பதிவைத் தொடங்கி செல்வி. வைசாலி அவர்கள் வழி நடத்த ஒரு குழுவாய் மாணவிகளை சிறப்பாய் எழுத வைக்கும் நாமக்கல் கே.எஸ்.ஆர். கலை அறிவியல் கல்லூரி தமிழ் பேராசிரியர் முனைவர். இரா.குணசீலன் அவர்கள்தான்....

மற்றொருவர்... 'வர்' என்பது நட்பை சற்றே தள்ளி நிறுத்திவிடும் என்பதால் 'வன்' சேர்த்துக் கொள்கிறேன், அதில்தானே நட்பின் பிடிப்பும் ப்ரியமும் அதிகம் இருக்கும். இவன் என் நண்பன்.. சென்னையில் எனக்குக் கிடைத்த நண்பர்களில் ஒருவன் என்று மட்டும் சொல்லிச் செல்ல முடியாது. நாங்கள் இருவரும் ஓரிடத்தில் பணி செய்தோம்... வேலையில் குறை சொல்ல முடியாத நண்பன். என்னைப் போல இவனும் வெங்கியும் வளைந்து கொடுத்துப் போகத் தெரியாதவர்கள். அங்கிருந்த உள்நாட்டு அரசியலால் ஒதுக்கி வைக்கப்பட்டு வேலையை விட்டே சென்றவன்.. இன்று மற்றொரு இடத்தில் தன் திறமையைக் காட்டி உயர்ந்து நிற்கிறான். இன்னும் சாதிப்பான்.

காதல் திருமணம் புரிந்தவன்... எல்லாருக்கும் முடிந்தளவு உதவி செய்பவன்... மொத்தத்தில் நல்ல மனதுக்காரன்... வலையுலகில் நான் அடி எடுத்து வைக்க காரணமாக இருந்தவன்... 2009 எனக்கு கிறுக்கல்கள் என்ற வலைப்பூவை ஆரம்பித்துக் கொடுத்தவன். பத்திரிக்கை துறையில் கிட்டத்தட்ட நாலாண்டுகள் இணைந்து பணியாற்றி, இன்று அவன் மற்றொரு பத்திரிக்கையில் முக்கியமான பொறுப்பில் பத்திரிக்கையாளனாய் தொடர்கிறான்... நான் வெயில் தேசத்தில் வேறொரு பணியில் இருக்கிறேன்.. இருப்பினும் எங்கள் நட்பு எப்பவும் போல் நடை போடுகிறது.

தமிழ்க்கவிதைகள் என்ற வலைத்தளத்தில் எழுதி வரும் பத்திரிக்கையாளன் என் அன்பு நண்பன் மோ.கணேசனை உங்களுக்குத் தெரிந்திருக்கலாம்... தெரிந்திருக்கும்... தற்போது நம் கில்லர்ஜி அண்ணனைப் போல் மீசை வைத்துக் கொண்டு ... புதிய தலைமுறை கல்வியில் வலம் வருகிறான்.

இன்று பிறந்தநாள் கொண்டாடும் முனைவருக்கும் பத்திரிக்கையாளனுக்கும் என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

நீங்களும் வாழ்த்துங்கள்.

இன்று காலை முதல் எழுத நினைத்து வேலையின் காரணமாக இப்போதுதான் முடிந்தது.
-'பரிவை' சே.குமார்.

புதன், 5 ஏப்ரல், 2017

12. என்னைப் பற்றி நான் - தேனம்மை லெக்ஷ்மணன்

ந்த வாரம் 'என்னைப் பற்றி நான்' பகுதியில் தன்னைப் பற்றிச் சொல்கிறார்... தேனம்மை லெக்ஷ்மணன்... வலையுலகில் பலருக்கு தேனு... என்னைப் போன்றவர்களுக்கு தேனக்கா.

பிரபல பத்திரிக்கை எழுத்தாளர்... பல புத்தகங்கள் எழுதியவர்... என்பதை எல்லாரும் அறிவோம் என்பதால் இவரைப் பற்றி அதிகம் சொல்லத் தேவையில்லை. வலையுலகில் பிரபலம் இவர்.

இவர் தனது 'சும்மா' வலைப்பக்கத்தில் சாட்டர்டே ஜாலி கார்னர் என்று ஒரு பதிவு வெளியிட்டு வருகிறார். வலையுலக நட்புக்களிடம் ஏதாவது ஒன்று குறித்துக் கேட்டு அதை சனிக்கிழமை தோறும் வெளியிட்டு வருகிறார். அந்த ஜாலி கார்னரில் அடியேனும் 2014-ல் எழுதியிருக்கிறேன். அப்போது அக்கா கேட்டு நீண்ட நாட்களுக்குப் பிறகே எழுதிக் கொடுத்தேன். ஊருக்கு பயணப்பட இருந்த நேரத்தில் கேட்டார்... எப்படி எழுதுவது... இரண்டு முறை ஞாபகப்படுத்த மின்னஞ்சல் விட்டதும் ஊரில் இருந்து எழுதி அனுப்பிக் கொடுத்தேன். நான் கேட்டதும் அதை எல்லாம் மனதில் வைக்காது நேரமில்லை தம்பி முடியும் போது எழுதித் தர்றேன் என்றார்... எழுதிக் கொடுத்துவிட்டார்.

பல சிறுகதைகள், கவிதைகளுக்கு பரிசுகளை வென்றவர்... நிறைய எழுதக் கூடியவர். தேனக்காவிடம் பிடித்த ஒன்று வலையுலக நட்புக்களுக்கு கவிதை, கட்டுரை, சிறுகதை போட்டிகள் குறித்த விபரங்களை பதிவாக எழுதி தெரிவிப்பதுதான்... நான் வலையில் அடி எடுத்து வைத்தது முதல் என் பதிவின் வாசகி... என்ன கருத்துத்தான் எழுதமாட்டார்...

மற்றபடி இவரைப் பற்றி எல்லாரும் அறிந்திருப்பீர்கள்... அக்காவுக்கு நம்ம மீது ஊர்ப்பாசம் கொஞ்சம் அதிகம்... எங்க ஊர் ஆச்சியில்ல... பாசம் கூடுதலாக இருக்கத்தானே செய்யும்.

நான் காரைக்குடிக்காரியாக்கும் என்று அடிக்கடி கம்பன் விழா, கண்ணதாசன் விழா என பதிவுகள் எழுதி நிரூபித்துவிடுவார்.

அப்படியே ஒரு விளம்பரம் அக்காவின் தளத்தில் எனது 'சாட்டர்டே ஜாலி கார்னர்' வாசிக்க இங்கு சொடுக்குங்க...

இனி அவரைப் பற்றி என்ன சொல்றாருன்னு பார்க்கலாம் வாருங்கள்....


முதலில் என்னைப் பற்றி நான் எழுத அழைத்த சகோ குமாருக்கு நன்றி. ஏன்னா சமீபகாலமாகத்தான் என்னைப் பற்றி நான் அதிகமா சிந்திச்சிக்கிட்டு இருக்கேன். என்ன செய்திருக்கேன். செய்ததெல்லாம் உருப்படியா செய்திருக்கேனா, இன்னும் என்ன என்ன செய்யணும்னு எல்லாம். தொடர்ந்து வலை உலகில் செயல்பட்டுவரும் ( கிட்டத்தட்ட 100 பேர் இருப்போம் ) வலைப்பதிவர்களை ஊக்குவிக்கும் விதமா இந்தப் பதிவு அமைந்திருப்பதுக்கு முதலில் பாராட்டுகள் குமார் சகோ. குமார் சகோவின் சிறுகதைகள் மிக அருமையா இருக்கும் அதுக்கும் பாராட்டுகள் சகோ.

நான் இல்லத்தரசி. 2009 ஜூலை 13 ஆம் தேதியில் இருந்து சும்மா என்ற வலைப்பூவில் எழுதிட்டு வரேன். இதுக்குப் பேர் வைக்கும்போது என் மூத்த பிள்ளை சொன்னது மறக்க முடியாது. சும்மா வெட்டியாத்தானே வீட்டுல இருக்கீங்க அதுனால சும்மான்னு வைப்போம்னு. நானும் பூம் பூம் மாடு மாதிரி தலையாட்டினேன். ப்லாகில் எழுதினால் போதும்னு J

அப்புறம் கோலங்கள், சமையல் குறிப்புகள், டைரிக் கிறுக்கல்கள்னு இன்னும் 4 ப்லாகுல எழுதிட்டு இருக்கேன். CHUMMA அப்பிடின்னு ஆரம்பிச்சது இப்போ ஆங்கில சமையல் ப்லாகா பாதில நிக்குது. சும்மாவைத் தொடர ஊக்கம் கொடுத்த வலைத்தள நட்புகள் லிஸ்ட் பெரிசு. இராகவன் நைஜீரியா, விஜய், நேசன், பாரா, சங்கர்ஜி, ஐ எஸ் ஆர் செல்வகுமார், சுரேஷ் சூர்யா, டிடி, முனியப்பன் சார், சீனா சார், விஜிகே சார், தமிழ் உதயம், ஆர் ஆர் ஆர், ராமலெக்ஷ்மி, சாந்தி, துளசி, வல்லிம்மா, ரமணி சார், வெற்றிவேல் சார், மேனகா, ஆனந்தி, ஹேமா, கலையரசி, சரஸ்மா, யாழ்பாவண்ணன் சகோ , பகவான் ஜி, கில்லர் ஜி, குமார் சகோ, வெங்கட் சகோ, ஜெயக்குமார் சகோ, பாலா சார், ஸ்ரீராம், கீதா மேம், விஸ்வநாத், ஜம்பு சார், துளசி சகோ, கீதா, கீத்ஸ், செந்தில் சகோ, நவாஸ் சகோ, அக்பர் சகோ, ஜமால் சகோ, ப்ரகாஷ் சகோ, இளங்கோ சார், நாகேந்திர பாரதி சகோ, சுரேஷ் சகோ, இன்னும் பலருக்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கேன்

அப்புறம் நண்பர் ஐ எஸ் ஆர் செல்வகுமார் கொடுத்த ஊக்கத்தால் பத்ரிக்கைகளுக்கு எழுத ஆரம்பிச்சேன். பத்ரிக்கைகளுக்குக் கவிதை கதை கட்டுரை மட்டுமில்ல சமையல் குறிப்புகளும் கோலங்களும் எழுதி இருக்கேன். நிறையப் பிரபலங்களை நேர்காணல் & பேட்டி எடுத்திருக்கேன். மருத்துவ விழிப்புணர்வு பற்றிய பேட்டிகளும் எடுத்திருக்கேன். ப்லாகர் என்று போட்டே பல நிகழ்ச்சிகளுக்கு சிறப்புப் பேச்சாளரா அழைக்கப்பட்டிருக்கேன் என்பதே சந்தோஷம். தேனு, தேனம்மைலெக்ஷ்மணன், ஆண்டாள், தேனாஞ்சி, சபா வெங்கட், கோதை என்ற பெயர்களில் எல்லாம் எனது படைப்புகள் வெளியாகி இருக்கின்றன.

ஒரு மூணு ஆசையை வீட்டுல சொல்லி இருக்கேன். அது குறித்து இங்கேயும் பிரஸ்தாபிக்கிறேன். ஜெயாம்மா கையால விருது வாங்கணும்னு நினைச்சேன். அப்புறம் சங்கர் டைரக்‌ஷனில் ஏ ஆர் ரஹ்மான் இசையமைப்பில் ஒரு சினிமா பாடல் எழுதி அது உலகப் புகழ் பெறணும்னு. மூணாவதா சாகித்ய அகாடமி விருது வாங்கணும்னு. ஹாஹா முதல் ஆசை கோவிந்தா கோவிந்தா. அம்மா இலக்கிய விருதைக் கூட வாங்க முடியுமா தெரில. அடுத்து சங்கர் இப்ப படம் எடுக்கிறாரா என்னன்னே தெரில. மூணாவதா இப்பிடி என்னோட சொந்த ப்லாக் மொக்கைகளிலேயே தினம் தினம் குளிச்சு எந்திரிச்சுப் பொழுதைக் கழிக்கும்போது ஆழ்ந்த ஒரு பொருளைப் பற்றி நாவல் எழுதி அது சாகித்ய அகாடமி விருது வாங்கிஹ்ம்ம். இருந்தாலும் நான் நம்பிக்கையைக் கைவிடலை. எப்பவாவது இது மூணும் நிகழக் கூடிய சாத்யக்கூறு இருக்கு. அதுக்குத் தகுந்த சூழலை நான் உருவாக்கிக்கலை, என்னை மேம்படுத்திக்கலைன்னே சொல்வேன். சரி முயற்சிதானே வாழ்க்கை. மெல்ல முயல்வோம்.

எதிர்காலத் திட்டம்னா தொடர்ந்து ப்லாக் எழுதணும். இன்னும் மேம்படுத்தப்பட்ட படைப்புகளோட எல்லாரையும் சந்திக்கணும். இன்னும் பல நாடுகள் பல உணவுகள் பற்றி எழுதணும். ப்லாக் எழுத்தின் மூலமே பெருந்தலைகளை அசைக்கும் வல்லமை பெறணும். அவ்ளோதான். 

என்னைப் பற்றி நான் எழுதி என் மனோ வியாகுலங்களையும் மனோ ராஜ்ஜியங்களையும் வெளிப்படுத்த இடம் கொடுத்த சகோ பரிவை சே குமார் அவர்களுக்கு நன்றியும் அன்பும்.

நன்றி...

நட்புடன்,
தேனம்மை லெக்ஷ்மணன்.

ன்னைப் பற்றி நான் தொடர் வாராவாரம் மெருகேறிக் கொண்டே செல்வதற்கு நீங்கள்தான் காரணம் என்பதை வாராவாரம் சொல்ல வேண்டும் என்பதில்லை என்ற போதிலும் இத்தொடர் தொடர்ந்து பனிரெண்டு வாரங்கள் போகும் என்றெல்லாம் நினைக்கவில்லை. ஆரம்பத்தில் மின்னஞ்சல் அனுப்பிக் கேட்ட பத்துப்பேரில் பலர் தராத நிலையில் அடுத்தடுத்து கேட்கக் கேட்க மற்றவர்கள் கொடுத்து உதவ, இதுவரை பதிவு நிறுத்தப்படாமல் சென்று கொண்டிருக்கிறது. மகிழ்ச்சி.

இந்த மகிழ்ச்சி அனைத்தும் இதுவரை எழுதிக் கொடுத்த, இனி எழுதிக் கொடுக்க இருக்கிற, வாசித்து கருத்துக்களை வாரிக் கொடுத்த அனைத்து உறவுகளையுமே சாரும்... அனைவருக்கும் நன்றி.

இன்னும் மூன்று வாரத்துக்கான பதிவு கைவசம் இருக்கிறது. பதிவு என் கைக்கு வந்ததும் எத்தனாவது பதிவு என எண் மற்றும் பெயரோடு சேமித்து வைப்பதால் யார் அனுப்பினாலும் இத்தனாம் தேதி தங்கள் பதிவு வரும் என்று மின்னஞ்சல் அனுப்பிவிடுவேன். அதன்படி செல்வா அண்ணன் பதிவு தவிர மற்ற பதிவுகள் பதியப்பட்டு வந்திருக்கின்றன. இனியும் இந்த நடைமுறை தொடரும்.

ஊருக்குப் போனாலும் 'என்னைப் பற்றி நான்' பதிவுகள் மட்டும் தொடர்ந்து வரும்.

நன்றி.

-அடுத்த வாரம் மற்றொரு வலைப்பதிவர் தொடர்வார். 
-'பரிவை' சே.குமார்.

செவ்வாய், 4 ஏப்ரல், 2017

சினிமா : கடுகு

டுகு சிறுத்தாலும் காரம் போகது என்பது எல்லாரும் அறிந்ததே... அதேபோல் இந்தக் கடுகும் ஒரு முக்கியமான பிரச்சினையை மையப்படுத்தி அதிக காரம் கலக்காமல் மிகச் சரியாக கொடுக்கப்பட்டிருக்கிறது.

Image result for கடுகு விமர்சனம்

தமிழ் சினிமாவில் மட்டும் எப்போதும் ஒரு டிரண்ட் இருக்கும்... ஒரு படம் வெற்றி பெற்றால் அந்தப் பார்மூலாவை மாற்றி மாற்றி கறி சமைத்து வரிசையாக ஒரே மாதிரி படங்களைத் தயாரிக்க ஆரம்பித்து விடுவார்கள். பேய்க் கதைகள்... க்ரைம் கதைகள்... என ஒரு வெற்றி பல படங்களை வர வைக்கும்.

இந்த அகத்தியன் 'காதல் கோட்டை'யின்னு ஒரு படம் எடுத்தார்... அது பார்க்காமலே காதல்... மிகப்பெரிய வெற்றி... உடனே பார்த்து... பார்க்காமல்... சொல்லி... சொல்லாமல்... டெலிபோன்... என எத்தனை விதமான காதல் படங்கள் அடுத்தது வந்தது என்பதை அனைவரும் அறிவோம்...  அந்த வகைப் படங்கள் மீது பார்வையாளனுக்கு ஒருவித சலிப்பு ஏற்படும் சமயத்தில் ஏதோ ஒரு வித்தியாசமான கதையம்சம் கொண்ட படம் வெற்றி பெற, அங்கிருந்து நகர்ந்து இந்த வளையத்துக்குள் நுழைந்து கொள்வார்கள்... இதுதான் என்றைக்கும் தமிழ் சினிமாவின் நிலை... மாற்றமில்லை. அப்படியிருந்தும் சில சமயங்களில் நல்ல படங்கள் வருவதுண்டு. சமீபத்தில் புதிய இயக்குநர்களின் பல நல்ல படங்கள் சரியான விளம்பரம் இன்றி தோல்வியும் அடைந்திருக்கின்றன. 'இளமி' என்ற படம் கூட சல்லிக்கட்டு, அந்தக் கால கட்ட மனிதர்களின் வாழ்க்கை எனப் பேசிய ஒரு உண்மைக்கதைதான்... நல்ல படம்... ஆனால் எதிர்பார்த்த வெற்றியைத் தொடவில்லை. அப்படி ஒரு படம் வந்ததே பலருக்குத் தெரியலை.

சமீபத்தில் 'துருவங்கள் 16' கொடுத்த வெற்றிக்குப் பின்னர் அதே மாதிரியான க்ரைம் கதைகள் வலம் வர ஆரம்பித்துவிட்டன. என்னடா தமிழ்ப்பட உலகுக்கு வந்த சோதனை அப்படின்னு யோசிக்க வைத்த நேரத்தில் அதிக எதிர்பார்ப்பின்றி வந்த படம்தான் கடுகு. குற்றங்களையே பார்த்த பார்வையாளர்களுக்கு சற்றே ஆறுதலான விஷயம்தான் என்றாலும் இதிலும் குற்றம் இருக்கு... அளவோடு.

அரசியல் என்ற ஒன்றில் நுழைய நினைக்கும் போது நல்லவனும் கெட்டவனாக மாறுவது என்பது அரசியலின் சாபக்கேடா... அல்லது மக்களின் தலையெழுத்தா என்று தெரியவில்லை. பதவி ஆசையும் சொத்தின் மீதான மோகமும் மன்னார்குடிக்கு மட்டுமல்ல நமக்கும் உண்டுதானே... சின்னத்தா ஜெயிலுக்குப் போக சித்தப்பாவை ஓரங்கட்டிட்டு உறவுக்குள்ளே அடிச்சிக்கிட்டு கிடக்கானுங்க பாருங்க... அதுதான் அரசியல்... அப்படியான அரசியல் சாக்கடையில் சாதாரண தொண்டனாய் இருக்கும் ஒருவன், ஊருக்கு நல்லது மட்டுமே செய்யும் ஒருவன் எப்படி... எதனால் கெட்டவனாக மாறுகிறான் என்பது மட்டுமல்ல கதை, அதனால் பாதிக்கப்படுபவர்களின் மனநிலை என்ன என்பதைக் காட்டுவதே கதை.

தேவயானியின் கணவரும் சில நல்ல படங்களை இயக்கிய இயக்குநருமான இராஜகுமாரன்தான் கதையின் நாயகர்களில் ஒருவர். நானும் நாயகன் ஆகி 'டேன்ஸ்' ஆடுவேன் என ஒற்றைக்காலில் நின்று டூயட் பாடி... ஆடி... அவர் அசத்திய 'தமிழ்' என்ற காவியத்தை ஒரு நிமிடம் கூட பார்த்ததில்லை... ஏனோ பிடிக்கவில்லை... நம்ம இராஜகுமாரன் பவர் ஸ்டார், சாம் ஆண்டர்சன், மலையாளத்தின் சந்தோஷ் பண்டிட்... தெலுங்கின் சம்பூர்ணேஷ்பாபு ஆகியோருடன் கூட போட்டி போட முடியாது, ஏன்னா இவர்கள் எல்லாம் அவரைவிட 'நல்ல' நடிகர்கள் என்றார்கள் பல நண்பர்கள். அந்தளவுக்கு இராஜகுமாரனால் பாதிக்கப்பட்டது 'தமிழ்' சினிமா மட்டுமல்ல... தமிழக சினிமா ரசிகனும்தான்.

அப்படிப்பட்ட இராஜகுமாரன் இதில் புலிப்பாண்டி... அதுவும் மேக்கப் இல்லாமல்... உண்மையைச் சொல்லணும்ன்னா அந்த கதாபாத்திரத்தில் இவ்வளவு சிறப்பாக நடிக்க இயக்குநருக்கு வேறு நடிகர் கிடைத்திருக்க மாட்டார். ஒரு அநாதையாய்... சமூக அவலங்களைக் கண்டு பொறுமும் மனிதனாய்.. இறுதியில் சீறி எழுந்து.. பின்னர் நாயகன்தான் இவ்வளவுக்கும் காரணம் என்பதைச் சொல்லாமல் நீ எல்லாருக்கும் நல்லவன் இனி நல்லவனாகவே இரு என்று சொல்லிச் செல்வது வரை மனுசன் ஒவ்வொரு காட்சியிலும் போட்ட பந்தில் எல்லாம் நிதானமாக சிக்ஸர் அடித்திருக்கிறார்... ஆமா அப்ப தமிழ்ல ஏன் அப்படி அப்படினெல்லாம் யோசிக்காதீங்க... புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக்கிறதில்லையா... சரி விடுங்க... இதில் புலி வேஷம் போடுபவராக....

Image result for கடுகு விமர்சனம்

நாயகனாய் பரத்... அப்பா, அம்மா இல்லாத பெரிய வீட்டுப் பிள்ளை.... ஊருக்குச் செல்லப்பிள்ளை... எல்லாருக்கும் நல்லது செய்யும் ரொம்ப நல்ல பிள்ளை... மந்திரியின் வருகையும் அதன் பின்னான மந்திரியின் செயலுக்குத் துணை நிற்கப் போய்.... அதுவும் எம்.எல்.ஏ. ஆகப்போறோம்ங்கிற அல்ப ஆசைதான் காரணமே தவிர மனதால் நல்லவரே.... இருப்பினும் தவறுக்கு உடன்பட்டு அதன் பின் அந்தத் தவறை மறைக்கும் பொருட்டு எடுக்கும் முயற்சிகளால் வில்லனாக இறுதியில் இராஜகுமாரனுடன் மோதி... அப்புறம் என்ன தவறை உணர்ந்து மந்திரியைத் தேடிப் போறார். ஆஹா... உடம்பை என்னமா ஏத்தி வச்சிருக்கான் மனுஷன்.. சும்மா நச்சின்னு.. செம உடம்புய்யா... சும்மா சொல்லக்கூடாது நல்லாவும் நடிச்சிருக்காப்ல... எல்லாரும் அவரை வெகுவாக நம்புவதால் இயக்குநர் அவருக்கு 'நம்பி' என்ற நாமகரணம் சூட்டியிருக்கிறார். 'தண்ணீர்' நாவலில் மையப்பிரச்சினை தண்ணீர்தான் என்றாலும் அதில் நாயகிக்கும் மற்ற சில பெண்களுக்கும் இருக்கும் வாழ்க்கைப் பிரச்சினையை மெல்ல விரிக்கும் அசோகமித்திரன் நாயகிக்கு 'யமுனா' எனப் பெயரிட்டிருப்பது போல.

அப்புறம் அந்தப் பெண் குழந்தை (கீர்த்தி)... வயசுக்கு வந்த பள்ளிச் சிறுமியை குழந்தை என்றே சொல்லலாம் தப்பில்லை... ஏழ்மை நிலை, ஷூ போடாததால் ஆசிரியரின் தண்டனைக்கு ஆளாகுதல், புலிப்பாண்டி மீதும் டீச்சர் மீதும் அளவு கடந்த பாசம்... படத்தின் கதையில் அவளால் மாற்றம் வந்த பின்னர் அடங்கி ஒடுங்கிப் போகிறாள்... ஆண்களைக் கண்டாலே அலறும் அவளின் உலகம் ஒரு கட்டிலுக்குள் சுருங்கி விடுவதை காட்சியாய் பார்க்கும் போது கண்ணுக்குள் செய்திகளாய் படித்த பல குழந்தைகளின் நிலை வந்து செல்கிறது. அதன் பின் புலிப்பாண்டியிடம் மட்டுமே அண்டுகிறாள்... ஆனாலும் அந்தப் பேதை அதிலிருந்து மீளாமல் அவள் நலம் விரும்பிகள் கண் எதிரே தண்ணீருக்குத் தன்னை தாரை வார்த்துக் கொடுத்து நம்மை கண்ணீரில் நனைய வைத்து விடுகிறாள்...மிகையில்லா நல்ல நடிப்பு...

அந்த டீச்சர் (ராதிகா ப்ரசித்தா)... இன்னார் எனத் தெரிந்து தன்னைக் காட்டிக் கொள்ளாமல் முகநூல் அரட்டையில் தொடங்கி, இரயில்வே ஸ்டேசனுக்கு சந்திக்க வரச்சொல்லி, தனது வாழ்க்கைத் துன்பக்கதையை போனில் சொல்லியபடி இரயில் பெட்டிக்குள் முகம் காட்டாது,  சன்னல் வழியே கைப்பிடிக்கும் போது முளைவிடும் காதல் இறுதிக் காட்சியில் போலீஸ் பிடிக்குள் இருந்து தப்ப, புலிப்பாண்டின் கரம் பிடிக்கும் போது மெல்ல இதழ் விரிக்கிறது. இதழ் விரிக்கும் முன்பே டீச்சர்தான் அந்த முகம் தெரியாத முகநூல் தோழி எனத் தெரியவந்து அது சின்னப்பெண் என புலிப்பாண்டி ஒதுங்க,   மந்திரியின் வருகை கொடுத்த பேரதிர்ச்சியின் பின் தன் முகம் காட்டாமலே டீச்சரும் விலகி நிற்க, இறுதிக்காட்சியில் பிடிபட்ட கைக்குள் சிக்கி நிற்கும் போது காதல் நான்கு கண்களில் பசுமை காட்டுகிறது... டீச்சர் சிறப்பான நடிப்பு. இவர் குற்றம் கடிதலில் டீச்சராய் வந்து கலக்கியவர்.

நல்லவரான போலீஸ்காரர் இயக்குநர் வெங்கடேஷ் மாற்றலாகிப் போகும் போது அவருக்கு உதவ துணைக்குப் போகும் புலிப்பாண்டிக்கு நண்பனாகிறான் காவல் நிலையத்தில் சின்னச் சின்ன வேலைகள் பார்த்துக் கொடுத்துக் கொண்டிருக்கும் பெட்டிகேஸ் அனிருத் (பாரத் சீனி)... ஒருவேளை அனிருத் வீடியோ வர்றதுக்கு முன்னால பேர் வச்சிட்டானுங்க போல... இல்லேன்னா மாத்தியிருப்பாங்கன்னு தோணுது... அப்படியே மாற்றினாலும் இளையராஜான்னு வைக்க முடியாது... அவரு பாட்டுக்கு ராயல்டி கேட்டுட்டா... ஹிப்ஹாப் நல்லா இருந்திருக்கும்.... ஆனா அவன் துரோகியாயிட்டானே சல்லிக்கட்டுல... சரி இப்ப எதுக்கு இந்த ஆராய்ச்சி... அதான் அனிருத்துன்னு வச்சி படமும் வந்து போயிருச்சே... பேரில் என்ன இருக்கு... விட்டுட்டு நகர்வோம். காதலியை விரட்டித் திரிவது... புலிப்பாண்டி காதலுக்கு ஐடியா கொடுப்பது... போலீசில் இருந்து தப்பும் போது காதலியை பார்த்து காதலை வெளிப்படுத்துவது என அனிருத் நடிப்பும் சோடை போகவில்லை... 

அனிருத் லவ்வும் பெண்ணாக சுபிக் ஷா, இவர்தான் லவ்வுறாருன்னு தெரியாமல் சந்தர்ப்பம் சரியாய் அமைய பரத்தை லவ்வுறார்... அனிருத் லவ்வி செவ்விதழ் கடித்த ஆண்ட்ரியா, செல்வராகவன் படத்துக்கு தன் மேனி காட்டுச்சாம்... அதை வெளியிட வேண்டாமென மின்னஞ்சல் விட்டுச்சாம்... இதை ஏதோ ஒரு வகையில் தனுஷால் பாதிக்கப்பட்ட சுசித்ரா போட்டு உடைக்க... அப்போதைக்கு டூவிட்டரில் இதுதான் போதைக்கு ஊறுகாய் என்பது எல்லாருக்கும் தெரியுமே... அப்ப சுசித்ரா மெண்டல்ன்னு சொன்னானுங்க... இப்ப சுசியைக் காணோம்... பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் நாமும் அடுத்தடுத்து தாவிக்கிட்டே இருக்கோம். கவுதமி கமலைப் பிரிய மகளைக் காரணமாக்கியதை ஏத்துக்க முடியலைதான் என்றாலும் ஆண்ட்ரியாவும் பூஜாகுமாருமே முக்கிய காரணம் என்ற பேச்சு அடிபடுறதை நம்பத்தான் வேண்டியிருக்கு. கமல்தான் செவ்விதழ் கடித்து... அட சுபிக் ஷா லவ்வைப் பற்றிப் பேச ஆரம்பிச்சிட்டு இதெல்லாம் எதுக்கு... தனுஷையும் அனிருத்தையும் நம்பக்கூடாதுங்க... ஆனா கடுகு அனிருத்தை நம்பலாம்... பரத்தினால் மிரட்டப்பட்டாலும் ஒரு அசாதாரண சூழ்நிலையில் தன் காதலை அனிருத் வெளிப்படுத்தும் போது அவளின் பார்வையில் தெரியும் மிரட்சியில் மெல்ல விரியும் காதலையும் பார்க்கலாம். ஆனாலும் சுபிக்கு அதிக வாய்ப்பில்லை.

'யோவ் புலி வேஷம் போட்டு ஆட தெம்பு இருக்க மாதிரி தெரியலை.... இந்தா இதை அடிச்சி தெம்பு ஏத்திக்கன்னு' அசிஸ்டெண்ட் டைரக்டர் சொல்ல, 'குடிக்கு எதிரா படம் எடுக்குறீங்க.. அதுல குடிச்சிட்டு நடிக்கச் சொல்றீங்களே' என்ற ஆரம்ப வசனமே ஏதோ சொல்ல வர்றாங்கன்னு தோண, 'தப்பே நடக்கலைன்னு சொல்லி அதை மறைக்கச் சொல்றீங்களே அது தப்புத்தானே' என்று பேசும் இடத்தில் சொல்ல வந்ததை சரியாத்தான் கொண்டு போறாங்கன்னு தோண, 'கண்ணாடியில உன்னோட முகத்தைப் பார்க்கும் போது என்ன தெரியுதோ அதுதான் நீ'ன்னு சபாஷ் போட வச்சிட்டாங்க.

போலீஸ், பரத்தின் பாட்டி, கீர்த்தியின் அம்மா என எல்லாரும் அந்தந்த கதாபாத்திரங்களாக...

Related image

அரசியல் என்ன செய்ய வைக்கும் என்பதை சில மனிதர்களின் வாழ்க்கையோடு சொல்லும் படம் கடுகு. தமிழகத்தின் பழங்கலைகள் எல்லாம் அழிந்து வருவதையும் சொல்லிச் செல்கிறது புலிவேஷம் கட்டுபவரின் வாழ்க்கையை சித்தரிக்கும் விதத்தில். ஆமாம் கரகாட்டம் காம ஆட்டமாகி நாளாச்சு... நாடகத்தில் நாரதர் டான்ஸைக் கட்டிப்பிடித்து ஆடுறார்... எல்லாக் கலைகளும் கொஞ்சம் கொஞ்சமாக சுயமிழந்து... சில அழிந்து...

ஆஹா.. ஓஹோ... மட்டும்தானா 'அய்யே...' எதுவும் இல்லையான்னு யோசிக்காதீங்க... கொஞ்சம் 'அய்யே'வும் இருக்கு. பாண்டி புலி வேஷம் போடும் போது காட்டும் ஆக்ரோஷத்தில் துளி கூட சாதாரண மனிதனாய் இருக்கும் போது காட்டாதது... வேகமெடுக்காத இரண்டாம் பாதி . எதார்த்த நடிப்பில் சில இடங்களில் எரிச்சலை வரவைக்கும் இராஜகுமாரன்... என கொஞ்சமே கொஞ்சம் 'அய்யே'வும் இருக்கு. இருந்தாலும் கடுகு காரம் போகலை.

கடுகு கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்.
-'பரிவை' சே.குமார்.

திங்கள், 3 ஏப்ரல், 2017

நாம் ஒன்று சொல்வோம்

நேற்றைய பதிவு முக்கனிச் சுவையாய் மூவரின் பிறந்தநாள் குறித்தான பகிர்வு... இன்றைய பகிர்வு மலைத்தேனாய் ஒரு கவிஞரின் பிறந்தநாள் பகிர்வு...

வாழ்க்கையின் எதார்த்தங்களை வரிகளாக்குவதில் வல்லவர் இவர்... இவரின் கவிதைகள் வாழ்வியலின் மெல்லிய துக்கமும் துயரமும் பேசும்... எழுத்தில் அடித்து ஆடும் இவர் மேடைப் பேச்சில் சிறு குழந்தைதான் என்பதை தனது தளத்தில்... தான் ஒரு முறை கவிதை வாசிக்க ஏறிய கதையைச் சொன்ன போது சொல்லியிருந்தார். கவிதை வரிகளின் வீச்சை வார்த்தை வீச்சாய் அள்ளித் தெளிக்கவில்லை என்றாலும் சோடை போகாத வாசிப்புத்தானே அது... அதென்ன வாசிக்கப் பயமென்ற ஒரு சொல் என பலர் கேட்க, இப்போது வரிகளை சில மேடைகளில் வார்த்தையாய் வீசுவதாய் கேள்வி.

அப்பத்தாவும் தெருவோர கடைகளும் இவரின் கவிதைகளில் வரியாய் வாழ்வார்கள். இவரின் கவிதைகள் கிராமத்து வாழ்க்கை மட்டுமே பேசும் என்று நினைத்தால் அது அபத்தம்... பல கவிதைகள் அரசியல் பேசும்... மக்கள் பிரச்சினைகளில் கேள்விகள் கேட்கும்... கவிதையின் பாடு பொருள் எதுவாக இருந்தாலும் அதன் கரு உருப்பெற்று கவனம் ஈர்க்கும்.

முண்டாசு கட்டாத கவிஞனாய்... மீசை முறுக்கிய பாரதியாய்... பாரதிதாசனாய்... பட்டுக்கோட்டையாய் வாழும் கவி... நம் புதுக்கோட்டை கண்டெடுத்த கவிஞர் அவர்... இப்போது பலருக்கு இந்தக் கவிஞர் யாரென்று தெரிந்திருக்கும் இல்லையா...?

இவர் பட்ட கஷ்டங்கள்... தன் காதலி மனைவியானதும் ஏற்பட்ட வாழ்க்கை மாற்றம் என எல்லாமே நம் 'என்னைப் பற்றி நான்' பகுதியில் சொல்லிவிட்டார். தனது அன்பு மகள் சக்திக்கு இவர் எழுதும் கடிதங்கள் வலையுலகில் பிரபலம். எதை எடுத்து எழத வேண்டுமோ அதை கருப்பொருளாக்கி கேள்விக் கணைகள் தொடுத்து மிகச் சிறப்பாக எழுதுவார்.

ஊருக்கு வரும்போது நாம் சந்திக்க வேண்டும் என இவரும், தனபாலன் அண்ணாவும் சொல்லிக் கொண்டே இருக்க, ஒரு மாத விடுமுறையில் ஊருக்குப் போறவன் பக்கத்தில் இருக்கும் புதுக்கோட்டை செல்ல முடியாமல் திரும்பி விடுவதில் முடிந்து விடுகிறது. இடையில் ஒரு முறை போனில் பேசினேன்... குடும்ப பாரத்தை சுமந்த, எங்க மூத்த அண்ணனைப் போல பேச்சில் ஒரு வாஞ்சை... பாசம்... இந்த முறை நீங்க இங்க வாறீங்க... நாம சந்திக்கிறோம் என்ற அன்புக்கட்டளை இட்டிருக்கிறார். தனபாலன் அண்ணனும் கூட சமீபத்தில் பேசும் போது இந்த முறை சந்தித்தே ஆகவேண்டும் என்றார். கண்டிப்பாக இந்த முறை புதுக்கோட்டை பயணம் உண்டு.

வலைப்பதிவர் அதிகமிருக்கும் இடம் புதுக்கோட்டை என்பதை நாம் அறிவோம். அவர்களுக்குள் ஒரு வட்டம் அமைத்து மிகச் சிறப்பாக செயல்படுகிறார்கள். அந்த வட்டத்தில் இருந்து இன்று வரை தொடர்ந்து அன்போடு உறவுகொள்ளும் கவிஞர் இவர். இதுவரை எனது எல்லாப் பதிவுகளுக்கும் கருத்து இட்டு வருகிறார். நான் அவர் தளம் வருகிறேனா இல்லையா என்றெல்லாம் பார்ப்பதில்லை... இப்போ சில நாட்களாக நான் அதிகம் அவரின் தளம் பக்கம்... அவரின் தளம் என்றில்லை.... பல தளங்களுக்குச் செல்லவில்லை என்பதே உண்மை. இருப்பினும் வலையிலும் முகநூலிலும் கருத்துக் கொடுக்க அவர் மறப்பதில்லை.

சொல்ல மறந்துட்டேன் பாருங்க... சமீபத்தில் மின்னூலாக வெளிவந்த அவரின் சின்னவள் கவிதைத் தொகுப்பு மிகச் சிறப்பாக இருப்பதாக பலர் எழுதியிருக்கிறார். நான் இன்னும் வாசிக்கவில்லை... புதுக்கோட்டை வீதி இலக்கிய வட்டத்தில் இந்த முறை அவரின் சின்னவள் குறித்தான பார்வையும், அதற்காக அவர் வழங்கிய ஏற்புரையும் சிறப்பாக அமைந்ததாக தென்றல் கீதா அக்கா எழுதியிருந்தாங்க.

அவரின் மகள்கள் இருவரும் வலைப்பதிவர்கள்தான்... இருவரும் மிகச் சிறப்பாக எழுதுகிறார்கள். 

கஷ்டப்பட்ட வாழ்க்கையை இஷ்டப்பட்டு வாழ்ந்து இன்று மிகச் சிறப்பான இடத்திற்கு உயர்ந்திருக்கும்... கவிஞராய்,.. கட்டுரையாளனாய்... மிகச் சிறந்த எழுத்தாளனாய் பரிணமிக்கும் அன்பின் அண்ணன்... வாழும் வரிகளை கவியாக்கும் மிகச் சிறந்த எழுத்தாளன்... எழுத்தின் ஆளுமைகளில் தன்னையும் இணைத்துக் கொண்டிருக்கும் 'நான் ஒன்று சொல்வேன்' மீரா செல்வக்குமார் அண்ணன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.




கவிஞரை நீங்களும் வாழ்த்துங்க....

அவரின் கவிதை வரியில் கொஞ்சம் கீழே...

"சின்னவள்தேர்வெழுதப்போகிறாள்...
சட்டெனவிரையும் காலம்
சின்னவளைதேர்வெழுதச் சொல்கிறது..
அவள்தேவதை குணம்நிறைந்தவள்..
தேவபாஷைஅவள் மொழி..
கள்ளமில்லாஅவள்
சின்னப்புன்னகையால்
யாவும் வெல்லும்சாகசக்காரி..."

கவிதை முழுவதையும் வாசிக்க இங்கே சொடுக்குங்க...

நன்றி.

புதன் கிழமை தவிர்த்து நேரம் இருப்பின்... உறவுகளின் பிறந்தநாள் தெரிய வந்தால் கண்டிப்பாக எனக்கு அறிந்த வரையில் இங்கு எழுதி வாழ்த்து தெரிவிக்கப்படும்.

-'பரிவை' சே.குமார்.

ஞாயிறு, 2 ஏப்ரல், 2017

மூன்று முத்துக்களை வாழ்த்துவோமே...

லையுலக சொந்தங்களின் பிறந்த நாள் தெரிய வரும் பட்சத்தில் மனசு தளத்தில் அதற்கான சிறப்பு பகிர்வு ஒன்றை வெளியிட்டு வருகின்றேன் என்பதை தாங்கள் அறிவீர்கள். எனக்கு தெரிந்தால்... 'என்னைப் பற்றி நான்' பகிர்வுக்கான நாள் தவிர்த்து கண்டிப்பாக பதிவு எழுதி வாழ்த்துவது என்பதில் இதுவரை தவறவில்லை என்று நினைக்கிறேன். இதுவரைக்கும் ஒருவரின் பிறந்தநாள் மட்டுமே வந்ததால் அவரைக் குறித்து எனக்குத் தெரிந்த வரை எழுதி வாழ்த்தியிருக்கிறோம். ஆனா இன்றைக்கு மூன்று பேருக்கு பிறந்தநாள் ஒருவர் மிகச் சிறந்த ஆராய்ச்சியாளர்... முனைவர் பட்டம் பெற்றவர். அடுத்தவரோ சமையல் குறிப்புக்களில் கலக்கும் தங்கை... மூன்றாமவர் சமூக சேவகி...  பள்ளிக் கூடத்தில் சிறு குறிப்பு வரைகன்னு எதாவது ஒன்றைப் பற்றி எழுதச் சொல்வார்களே அது மாதிரி இங்கு மூவரையும் பற்றியும் நானும் சிறு குறிப்பு வரையலாம் என்று நினைக்கிறேன்.

முதலாமவர்... தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் ஏறத்தாழ 35 ஆண்டுகளாக பணி புரிந்து வருகிறவர், மிகுந்த தேடுதல் வேட்டை மிக்கவர்...  விரைவில் பணி நிறைவு பெற இருக்கிறார் என்றாலும் சுறுசுறுப்பான இளைஞர்... தனது தேடுதல் வேட்டையில்  கிலோமீட்டர் கணக்கில் நடந்தும் சைக்கிளில் பயணித்தும் வெற்றி கண்டவர். சமீபத்தில் அவருடன் உரையாடும் வாய்ப்பைப் பெற்றேன். போனை எடுத்ததும் ஒரு இளைஞராய்... அவ்வளவு அன்பாய்... நம்மோடு பேசும் போது நேசத்துடன் ஒரு துள்ளலாய் பேசினார். எனக்கு மிகுந்த சந்தோஷம்... இந்த எழுத்து மிகப் பெரியவர்களை நம் பக்கத்தில் இருத்திக் கொடுத்திருக்கிறதே... உங்க குணத்துக்கு எல்லார்கிட்டயும் சுலபமாப் பழகிடுவீங்க அப்படின்னு அடிக்கடி எங்கள் பேராசன் சொல்வார்... அவர் எழுதுங்கன்னு சொல்லி எழுத ஆரம்பித்த எழுத்து இப்போது ஒரளவு முன்னேற்றம் கண்டிருக்கிறது என்றாலும் இப்போதைய எழுத்தை என் பேராசான் இன்னும் வாசித்ததில்லை என்பதுதான் உண்மை என்றாலும் இந்த எழுத்து என் பேராசானைப் போல் எத்தனை பேராசான்களையும், ஐயா, அம்மா, அப்பா, அண்ணன், தங்கை, அக்கா, தம்பி, தோழன், தோழி என எத்தனை சொந்தங்களைப் பெற்றுக் கொடுத்திருக்கிறது. எத்தனையோ பேர் நம் எழுத்தைப் பாராட்டுகிறார்கள். சரி விஷயத்துக்கு வருவோம் ஐயாவுடன் பேசும் போது சொன்ன வார்த்தை, 'நீங்க நல்லா எழுதுறீங்க... விமர்சனக் கட்டுரைகள் உங்களுக்கு நல்லா வருது... விடாமல் எழுதுங்க' என்றார். இதுதானே நமக்கான உந்துதல்... இது பாராட்டு என்பதைவிட நம்மை இன்னும் செழுமைப் படுத்திக் கொள்ள உத்வேகம் கொடுக்கும் விதை... இப்படி எத்தனை பெரிய மனிதர்களின் ஆசியும் உறவையும் இந்த எழுத்து வாங்கிக் கொடுத்திருக்கிறது... 

இந்த இளைஞரைப் பற்றி செய்திகள் வராத பத்திரிக்கை இல்லை... சோழ இராஜ்ஜியத்தினை அலசி ஆராயும் குடவாயில் பாலசுப்பிரமணியன் ஐயா அவர்களின் அன்பைப் பெற்றவரும், சோழர் கால புத்த சிலைகளை தனது தேடலின் மூலம் கண்டெடுத்து வருபவரும் களப்பணி மூலம் வரலாற்றில் தன் பெயரை பொன்னெழுத்துக்களில் எழுதி வைத்திருப்பவருமான அன்பின் ஐயா முனைவர். பா.ஜம்புலிங்கம் அவர்கள்தான் பிறந்தநாள் கொண்டாடும் அந்த இளைஞர்.

'முனைவர் ஜம்புலிங்கம்' என்னும் தனது தளத்தில் பணி நிறைவு பெற இருப்பது குறித்த பகிர்வில் தாத்தா-பாட்டி முதல் இன்றைய வலை நட்புக்கள் வரை எல்லாருக்கும் நன்றி சொல்லி இருக்கிறார் பாருங்கள்... அவரின் இந்த மனமே இன்றைக்கு மிகப்பெரிய உயரத்தில் அவரைச் சிம்மாசனம் இட்டு அமர வைத்திருக்கிறது. பௌத்தம் குறித்த ஆராய்ச்சிச் செய்திகள் மற்றும் பத்திரிக்கை, தொலைக்காட்சி செய்திகள் குறித்துப் பகிர 'சோழ நாட்டில் பௌத்தம்' என்ற வலைப்பூவும் வைத்திருக்கிறார். விக்கிப்பீடியாவிலும் நிறைய கட்டுரைகள் எழுதி வருகிறார்.

அவரின் '30 ஏப்ரல் 2017 பணி நிறைவு' என்ற கட்டுரையை வாசித்துப் பாருங்கள்... பிரமித்துப் போவீர்கள்.

Image result for பிறந்தநாள் வாழ்த்து

ரண்டாமவர் சமையல் குறிப்புக்களின் ராணி... விதவிதமாய் சமையல் செய்து அதை அழகாக படம் எடுத்து முகநூலிலும் தனது வலைப்பூக்களிலும் பகிர்ந்து வருபவர். இவரின் சமையல் குறிப்புக்கள் எல்லாமே அருமையாக இருக்கும். வலையில் எழுத வந்தது முதல் தொடர்ந்து எனது தளத்தை வாசிப்பவர். நானும் அவர் தளத்தை வாசித்து விடுவேன்... சமீப நாட்களாக பலரின் தளங்களை வாசித்தாலும் வாசிப்பில் ஏதோ ஒரு சுணக்கம்... பெரும்பாலும் கருத்து இடுவதில்லை. நீண்ட நாட்களுக்குப் பிறகு நேற்றுத்தான் அதிகம் வாசித்து கருத்து இட்டேன்.

என்னை தொடர்கதை எழுதச் சொல்லி, எழுதவும் வைத்தவர் இவர்... அப்படித்தான் முதல் தொடர் ஆரம்பமானது. சரி சொன்னாரேன்னு கிராமத்து வாழ்க்கையை வைத்து ஒரு கதை எழுதி முடித்தால் எனக்கு க்ரைம் கதைகளில்தான் அதிக விருப்பம்.. க்ரைம் தொடர் எழுதுங்கன்னு அடுத்து வரும் பின்னூட்டங்களில் எல்லாம் தொடர்ந்து கேட்க ஆரம்பித்தார். அட இது என்னடா வம்பாப் போச்சுன்னு... ஆத்தாடி... நான் அம்புட்டுக்கு ஒர்த் இல்லை... ஏதோ கதையின்னு கிறுக்குவேன் அவ்வளவே... கொலை, கொள்ளைன்னு எழுதி அதை துப்பறிஞ்சி இதெல்லாம் நடக்காது விடுங்கன்னு சொன்னா... ம்ஹூம் விடலையே... சரியின்னு இவருக்காகவே ஒரு தொடர்க்தை... அதுவும் க்ரைம் கதை... அதுவும் கொலையை துப்பறியும் ஒரு குறுந்தொடர் கதை எழுதியாச்சு... அதுல என்ன கூத்துன்னா எப்படியோ எழுதி முடிக்க எல்லாரும் நல்லாயிருக்குன்னு சொல்லிட்டாங்க... பலர் இது மாதிரி இன்னும் எழுதுங்கன்னு வேற உசுப்பேத்தி விட்டாங்க... நானா மயங்குவேன்... ஆளை விடுங்க சாமிகளான்னு அதுக்கு  அப்புறம் துப்பறியவே போகலை... 

'SASHIGA KITCHEN' என்ற வலைத்தளத்தில் சமையல் குறிப்புக்கள் எழுதும் மேனகா ஸத்யா இப்போதெல்லாம் முகநூலில் ரொம்ப பிஸி. சமையல் பிரியர்களுக்கு இவரின் தளம் வரப்பிரசாதம்.

Image result for பிறந்தநாள் வாழ்த்து

மூன்றாமவர் மனதோடு மட்டும் என்று சொல்லி மனசுக்கு நெருக்கமான சமூக விழிப்புணர்வு பதிவுகளை தனது தளத்தில் பதிபவர். பசுமை விடியல் என்ற அமைப்பினை நடத்துபவர். இவரின் சமூக சேவைகளும் விழிப்புணர்வு பகிர்வுகளும் முகநூலின் வழி நடந்து கொண்டிருக்கின்றன. வலைப்பூவில் எழுதி ஏறத்தாழ ஒரு வருடம் ஆகிறது என்றாலும் அவர் எழுதிய பதிவுகள் எல்லாமே பெண் குழந்தைகள் வளர்ப்பு, தாம்பத்யம் பற்றிய பார்வைகள், வீட்டுத் தோட்டம், சுற்றுச் சூழல் என விழிப்புணர்வு பதிவுகள்தான். பெண் குழந்தைகள் பற்றிய பதிவுகள் எல்லாமே எல்லாரும் வாசிக்க வேண்டிய பகிர்வுகள். நிறைய செய்கைகளை நிறைவாய்ச் செய்து கொண்டிருக்கிறார் அக்கா திருமதி. கொசல்யா ராஜ்.

இவரின் வலைத்தளத்தில் நிறைய விஷயங்களை அறியலாம்... 'மனதோடு மட்டும்' வாசிச்சி விஷயங்களை மனசுக்குள் நிறுத்திக்கங்க....

முத்துக்கள் மூன்று என்று சொல்வோமே அப்படியான முத்துக்கள்... சோழ நாட்டில் பௌத்தத்தைத் தேடி புத்தர் சிலைகளைக் கண்டெடுக்கும் முயற்சியில் வரலாற்றுப் பெருமை சேர்த்துக் கொண்டிருக்கும்  முனைவர் ஐயா,  விதவிதமான சமையல்களைச் செய்து அவற்றை பொறுமையாய் போட்டோ எடுத்து பதிவிடும் தங்கை மேனகா, சமூக சேவையும் பெண்கள் விழிப்புணர்வும் தன் இரண்டு கண்ணெனச் செயலாற்றும் அக்கா கௌசல்யா ராஜ் ஆகிய மூவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

நீங்களும் வாழ்த்துங்கள்.

நன்றி.
-'பரிவை' சே.குமார்.