மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

திங்கள், 16 பிப்ரவரி, 2015

அபுதாபியில் அபூர்வராகம் - 2

பாரதி நட்புக்காக அமைப்பின் அபூர்வராகம் நிகழ்வு குறித்த முதல் பகிர்வை வாசிக்காதவர்கள் இங்கு சொடுக்கி வாசியுங்கள். திரு. ராஜேஷ் வைத்யா இசை, குழந்தைகள் நடனம், திரு. மோகன், திரு.யூகி சேது ஆகியோரின் பேச்சுக்கள் என எல்லாம் முடிந்தது. இது குறித்து முதல் பகிர்வில் பார்த்தோம். இன்றைய பகிர்வாய்...

நவீன நாகேஷின் சுவையான பேச்சு:

திரு. டெல்லி கணேஷ் அவர்கள். மைக்கிற்கு முன் வந்ததும் மடை திறந்த வெள்ளமானார். எந்தக் குறிப்பும் இல்லாமல், தங்கு தடையின்றி பேசுவது என்பது எல்லாருக்கும் வருவதில்லை. அது ஒரு சிலருக்கே வாய்த்த கலை. அந்தக் கலை கைவரப்பெற்ற.. நகைச்சுவையாய் பேசி அரங்கை கட்டிப்போட வைத்த டெல்லியாரின் பேச்சில் இருந்து சில...

(நவீன நாகேஷ் திரு. டெல்லி கணேஷ் அவர்கள் உரை நிகழ்த்திய போது.)

"வெளிநாடு வாழ் தமிழர்களில் மிகச் சிறப்பாக தமிழை வளர்க்கும் நிகழ்ச்சியை நடத்தும் பாரதி நட்புக்காக அமைப்பினரை பாராட்டியதுடன், ஒரு நிகழ்ச்சியை அழகாய் தொகுப்பதையும் பாராட்டி, ஒரு சில இடங்களில் அறிவிப்பவர் திரு. டெல்லி கணேஷ்... அவரு வரலையா.. யூகி... அவரும் வரலையா... மோகன் பேசுவார். என்று குழப்புவார்கள் ஆனால் இங்கு எல்லாமே திட்டமிட்டபடி அழகாய்...' எனப் புகழ்ந்தார். 'ஜெட் ஏர்வேய்ஸ் 15% கட்டணச் சலுகை தர்றேன்னு சொன்னாங்க... நான் பாரதி நட்புக்காக அமைப்புக்கு 100% தர்றேன்ய்யா... இனி எந்த விழாவாக இருந்தாலும் காசு வாங்காமல் கலந்துக்கிறேன்... விமான டிக்கெட் கூட நானே போட்டு வருகிறேன்...' என்று சொல்லி கைதட்டலை அள்ளினார். 

தன்னை முதன்முதலில் அறிமுகம் செய்தவர் கே.பி.சார்தான் என்றும் 'பட்டிணப் பிரவேசம்' படம்தான் முதல்படம் என்றும் சொன்னவர் தனது பெயர்க்காரணத்தை சுவராஸ்யமாகக் கூறினார். 'படப்பிடிப்புக்குப் போனபோது உனக்கு என்ன பேர் வைக்கலாம் என்று கே.பி. சார் கேட்க, என் பேரு  எம்.கணேசன் ஐயா அப்படியே இருக்கட்டும் என்றதும் ஏய் இது நல்லாயில்ல... சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் மாதிரி கொஞ்சம் நல்லாயிருக்கணும் என்று சொன்னார். பின்ன நான் என்னோட சொந்த ஊர் வல்லநாடு அதனால வல்லை கணேசன்னு வச்சிரலாம் என்றதும் நடிக்க ஆரம்பிச்சிட்டா பேமண்ட் வல்லை, செக் வல்லைன்னு சொல்லப்போறே... எதுக்கு பேரோட வல்லைன்னு சேக்குறே என்று சொல்லியவர், நிறைய அலசலுக்குப் பின் நீ பொறந்தது இங்கே என்றாலும் டில்லியில்தானே முதல் நாடகம் போட்டே அதனால டில்லி கணேஷ்ன்னு வச்சா என்ன என்றவர் அப்படி வைத்ததுதான் இந்தப் பெயராம்.. 

பாரதிராஜா சார் கூட பக்கத்துல அமர்ற பாக்கியத்தை வேற எந்த மேடையும் கொடுக்கலை... முதல்ல கொடுத்தது இந்த அபுதாபி மேடைதான்... ரொம்ப சந்தோஷமா இருக்கு என்றவர். முதல் படத்தில் நடித்து வெளிவந்ததும் அடுத்தவன் அறிமுகப்படுத்துனவந்தானே என்றில்லாமல் என்னை அழைத்து நல்லா நடிச்சிருக்கேய்யா... உன்னோட கண் பேசிச்சுய்யா என்று மனதாரப் பாராட்டியவர் பாரதிராஜா. அவரோட படத்துல நடிக்க எனக்கு உடனே வாய்ப்பும் கொடுத்தார். ஆனால் சில காரணங்களாலே நடிக்க முடியலை. அதுக்கு அப்புறம் அவரோட படத்துல நடிக்கவேயில்லை. அதுக்காக நான் வருத்தப்படலை... அவருக்கு வலப்பக்கம் அமர்ற பாக்கியத்தை கேபிசாருக்கான இந்த மேடை எனக்கு கொடுத்திருக்கிறதே... இது யாருக்குக் கிடைக்கும்... இதுவே போதும்.. என்றார். 

இதே கேபி சார் கூட என்னைய எட்டு வருசம் கூப்பிடவேயில்லை. அதுக்கு அப்புறம்தான் கூப்பிட்டார். தண்ணீர் தண்ணீர் படத்துல ராஜேஷ்க்கு அப்பாவா ஒரு கறுப்பான ஆளைத் தேர்வு செய்திருந்தார். ராஜேஷோட நிறத்துக்கு ஒத்துப்போனதால அப்பாவா செலக்ட் செய்தார் போல நடிக்க வரலை... இவன் சரிவரமாட்டான்னு வேண்டான்னு சொல்லிட்டார். அப்புறம் யாரைப் போடலாம்ன்னு தன் சகாக்களோட ஆலோசனை பண்ணியபோது என்னைச் சொல்லியிருக்காங்க... அவனா அவன் அப்பா கதாபாத்திரத்துக்கா... சரியா வருமான்னு கேட்டிருக்கார். அதுக்கு அவரு சிவாஜிக்கே அப்பாவா நடிக்கிறாரு என்றதும்... அப்படியா சரி கூப்பிடு என்று சொல்லியிருக்கார். 

நான் அங்கு போனதும் தாயில்லாமல் தந்தை வளர்த்த பிள்ளையான ராஜேஷூக்கு அப்பா,  என்று சொல்லி காய்கறி நறுக்கிக்கிட்டே வசனம் பேசணும் என்றார். எப்படி வசனம் பேசினேன் என்று சொல்லியபடி, ஒவ்வொரு வசனத்துக்கும் இடையே வெட்டிய காயை வாய்க்குள் வீசியதையும் செய்து காட்டினார். அதை ரசித்த கேபி அவர்கள் பாருங்க எப்படிப் பண்ணுறானு என அசிஸ்டெண்ட்களிடம் கண்காட்டினார். காட்சி முடிந்ததும் 'நல்லா நடிச்சேடா' என்றவரிடம் 'என்னை எட்டு வருசமா கூப்பிடலையில்ல... உங்க மேல எனக்குக் கோபம்?' என்று சொல்லி அழுதாராம். உடனே கேபியும் கண் கலங்கி தன்னோட அழுகையை அடக்க இவரோட முதுகில் அடித்து 'அதான் கூப்பிட்டேன்ல...' என்றவர். அதன் பின் எல்லாப் படத்திலும் நடிக்க வைத்தாராம் . 

ஒரு படத்தில் காதில் கடுக்கண், நெற்றியில் விபூதி பட்டையெல்லாம் அடித்து ரெடியாகி வர, கேபி தன்னோட ஸ்கிரிப்டில் குளித்து தலையைத் துவட்டிக் கொண்டு வருவது போல் சீன் எழுதியிருந்தாராம். டேய் நீ குளிச்சிட்டு வர்ற மாதிரி சீன் அதுக்கு ரெடியாகு என்றதும் என்ன சீன் சார் என்று கேட்க, எல்லாப் படத்துலயும் அப்பா கேரக்டர் பேப்பர் படிக்கிற மாதிரித்தான் வரும்... அதனால இதுல குளிச்சிட்டு தலையைத் துவட்டிக்கிட்டு வர்றே... அப்போ காலிங்க் பெல் அடிக்குது... இதோ வாறேன்னு சொல்லி கதவைத் திறக்கிறே... என்றாராம். குளிச்சிட்டு வந்தாத்தானா... பூஜை பண்ணிக்கிட்டு இருக்கும் போது காலிங்பெல் அடிக்கிறமாதிரி வச்சா என்றதும் எங்கே பண்ணு பார்ப்போம் என்றாராம். நான் அப்படியே விநாயகர் துதி பாடிக்கிட்டே, காலிங்பெல் அடிக்கவும் 'இதோ வாறேன்' என்று சொல்லிவிட்டு மீண்டும் பாடலைப் பாடியபடி கதவைத் திறப்பது போல் நடித்துக் காண்பித்தேன் என்று  சொல்லி அப்படியே நடித்தும் காண்பித்தார். அரங்கம் கைதட்டலால் அதிர்ந்தது. உடனே கேபிசார் இது நல்லாயிருக்குடா இதுவே இருக்கட்டும் என்று சொல்லிவிட்டாராம்.

சிந்து பைரவியில் நான் தண்ணியடித்துவிட்டு வந்தேன் என்பதற்காக இன்னைக்கு கடம் வாசிக்க மாட்டார் என்று என்னை வெளியில் போகச் சொல்லுவார் சிவக்குமார், ஒரு கலைஞனை மேடையில் இருந்து இறக்கிவிட்டால் எவ்வளவு கேவலம் என்பதை அனுபவித்தால்தான் தெரியும். அதன் பிறகு தண்ணி போட்டுட்டு அவர் வீட்டில் போய் கடம் அடித்துக் கொண்டே பேசவேண்டிய சீன், அதற்கு முதலில் மாதவய்யா என்ற கேரள கடம் கலைஞரைப் போட்டிருந்தார். அவர் வந்து சீனைக் கேட்டவர், வெள்ளம் அடிச்சது போல் நடிக்கணுமா... சரியல்ல... எனக்கு ஆத்துல பிரச்சினை உண்டாகும் அப்படின்னு சொல்லிட்டுப் பொயிட்டார். இவரோட படத்துல நடிக்க வாய்ப்பு கிடைக்குமான்னு ஏங்குற காலத்துல கெடைச்சதை விட்டுட்டு ஓடிட்டார். 

(திரு. டெல்லி கணேஷ் அவர்களுடன் மனசுக்கு படங்களை கொடுக்கும் சுபஹான் அண்ணன் ( நான் எடுத்த போட்டோ.)).
அதன் பிறகே என்னைக் கூப்பிட்டார்... இதுதான்டா கதை நீ கடம் அடிக்கணும்... உனக்குத் தெரியுமா? என்றார். தெரியாது என்றேன்... கண்டிப்பாத் தெரியணுமே... தெரியலைன்னா எப்படி என்றவர், அவரின் டிரைவர் அப்போத்தான் ஒருவாரமாக கடம் வாசிக்க கற்றுக் கொண்டிருந்தான். அவனைக் கூப்பிட்டு.'டேய் இவனுக்கு கத்துக்கொடுடா' என்றார். அவன் 'ஒன்..டூ..திரி...போர்..' அப்படின்னு மட்டும் சொல்லிக் கொடுக்க, இவனுக்கிட்ட எப்ப கத்துக்கிறதுன்னு நானே வாங்கி அடிக்க ஆரம்பிச்சேன் என்று பேசுவதற்காக போட்டிருந்த மர ஸ்டாண்டில் அழகாக கடம் வாசித்துக் காட்டினார். உள்ளேயிருந்து அதைக்கேட்ட பாலசந்தர் அவர்கள், 'இது யாருடா வாசிக்கிறா?' என்று கேட்டு நான் என்றதும் வெளியே வந்து 'நல்லாத்தானேடா வாசிக்கிறே? இது போதும் மத்ததை இளையராஜா பாத்துப்பான்' என்று சொல்லிவிட்டார் எனக்கு அந்தப்படத்தில் பேர் வந்ததுக்கு காரணமே நான் தட்டுனது போக இளையராஜா தட்டுனதாலதான் என்று சொல்லிச் சிரிக்க வைத்தார்.

நான் சிவக்குமார் வீட்டுல போயி தண்ணி அடிச்சிட்டு கடம் வாசிச்சிக்கிட்டே வசனம் பேசணும் என அவரின் அசிஸ்டெண்ட்ஸ் வசந்த், பாலகுமாரன், (இன்னொருவர் பெயர் ஞாபகமில்லை) மூவரும் சொல்ல, வாசிச்சிக்கிட்டே வசனம் பேசினால் சரியா வருமா கடம் அடிச்சிட்டு அப்புறம் பேசிட்டு... அப்புறம் கடம் இப்படி பேசினால் நல்லாயிருக்கும் என்றதும் அவர் சொன்னார்... இனி நீங்க அவர்கிட்ட பேசிக்கங்க என்று அவர்கள் ஒதுங்கிக் கொண்டார்கள். நானும் சரி அவருக்கிட்ட பேசிக்கிறேன்னு சொல்லி சீன் ஆரம்பிக்கும் போது கடம் அடித்து பின் நிறுத்தி வசனம்பேசி.. பின் கடம் அடித்து... வசனம் பேசி...பார்த்தவர் ரொம்ப நல்லா இருக்கேடா... இப்படியே இருக்கட்டும் என்று சொல்லிவிட,. நான் அவர்கள் மூவரையும் பார்க்க, அவர்கள் ஒன்றும் சொல்லாமல் தலையாட்டினார்கள் என்றார். 

அவர் சக கலைஞர்களை மதிக்கத் தெரிந்தவர், மிகப்பிரபலமான இயக்குநர் ஒருவர் (பெயர் சொன்னார்... மறந்துவிட்டது)  ஒரு நாளாவது நான் பாலசந்தரின் அசிஸ்டெண்டாக இருக்க வேண்டும் என்று சொல்லி, ஒருமுறை அவருக்கு போன் பண்ணி எங்கே சூட்டிங்... நான் வாறேன் என்று சொல்ல... நீங்கள் என் பிதாமகன்... நீங்க இங்க வந்தீங்கன்னா... என்னால காட்சி அமைக்கவே முடியாது... தயவுசெய்து வரவேண்டாம் என்று சொன்னவர் ஒரு மேடையில் பாரதிராஜாவைப் பார்த்து உங்கிட்ட ஒரு நாள் அசிஸ்டெண்டா வேலை பார்க்கணும் என்று சொன்னார். உண்மைதானே என்று பாரதிராஜாவைப் பார்த்துக் கேட்க, அவரும் ஆமோதித்தார். 

வீடு கட்டி கிரகப்பிரவேசம் செய்தபோது சிலருக்கு பத்திரிக்கை கொடுத்தேன் யாரும் வரலை... ஆனா கேபிசார் வந்தார்... மோகன் போன் பண்ணி அட்ரஸ் கேட்டான். வந்தவர் வீடு நல்லாக் கட்டியிருக்கேடா... சினிமாவுக்கு வாடகைக்கு கொடுக்கப் போறியா? டிராலியெல்லாம் போற மாதிரி பெரிசா கட்டியிருக்கே... ஆமா பின்னால கிடக்க இடத்தையும் வாங்கிப் போட வேண்டியதுதானே என்றார். நீங்க தொடர்ந்து வாய்ப்புக் கொடுத்தீங்கன்னா வாங்கிரலாம் என்றதும் சிரித்தார். 

கேபி கோபக்காரர்தான் ஆனா ரொம்ப பாசமானவர் என்றவர், பைபாஸ் சர்ஜரி பண்ணி மருத்துவமனையில் இருக்கேன்... எம்பொண்டாட்டிக்கிட்ட போன் பண்ணி பேசியிருக்கார். அவ நீங்க வரவேண்டாம்... வந்தா அழுதுடுவாருன்னு சொல்ல, மருத்துவமனையில் இருந்து வீட்டுக்குப் போன பின் மோகன் போன் பண்ணி வீட்டுக்கு ஐயா வர்றாருன்னு சொன்னான். எதுக்கு நான் நல்லாயிருக்கேன் வரவேண்டாம் என்றேன். ஆனால் வந்தார்... சிகரெட் இன்னும் குடிக்கிறியா என்றார்... நிறுத்திட்டேன் என்றேன்... எப்போ என்றார்... நேற்று என்றேன். கவலைப்படாதேடா... நீ அவ்வளவு சீக்கிரம் சாகமாட்டே... இன்னும் நிறையப்படங்கள்ல நடிச்சி எல்லோரையும் சிரிக்க வைப்பேடா... எனத் தட்டிக்கொடுத்துச் சென்றார் என்று உணர்ச்சிப்பூர்வமாய்ச் சொன்னார்.  

கேபி சார் மத்தவங்களை மதிக்கத் தெரிந்தவர், தன்னிடம் வேலை செய்பவர்கள், தெரிந்தவர்கள் வீட்டுத் திருமணங்களுக்கு கண்டிப்பாக நேரில் சென்று வாழ்த்தி அங்கு எதாவது சாப்பிட்டுத்தான் வருவார். அந்தப் பண்பாடு வேறு யாரிடமும் இல்லை. அவர் ஒண்ணும் அல்பாயிசுல போயிடலை. 84 வயசுலதான் போயிருக்கார். எல்லாம் ஆண்டு அனுபவிச்சிட்டுத்தான் போயிருக்கார். எம்.ஜி.ஆருக்கு அப்புறம் இவ்வளவு கூட்டம் கூடியது கேபி சாருக்குத்தான்... எனக் குரல் தழுதழுக்கச் சொன்னார். 

பாரதிராஜா பற்றிச் சொல்லும் போது முதல் படத்தில் நடித்ததும் தன்னை அழைத்ததை நினைவு கூர்ந்தவர், அவர் அழைப்பை ஏற்று அம்மன் பிலிம்ஸ்க்குப் போனேன் ரொம்ப வயசானவரா இருப்பார்ன்னு நினைச்சிப் போனேன். இப்ப மாதிரிதான் ஜீன்ஸ் பேண்ட், டீ சர்ட்டுல சின்னப்பையனா இருந்தார். வாய்யா என்றார். இப்போ மாதிரி கரகரப்பான குரல் அப்போ இல்லை... இப்போத்தான் வா (அப்படியே பாரதிராஜா போல் கரகரப்பாக பேசி) அப்படின்னு பேசுறார். இது வேற எதாலயும் ஆனதில்லை... நடிக்கிறவங்ககிட்ட கத்திக்கத்தியே இப்படி ஆயிடுச்சு என்றார்.

தனது தெள்ளத் தெளிவான பேச்சில் நகைச்சுவையோடு கேபியின் நினைவுகளையும் அழகாய்... ஆழமாய்த் தந்து அமர்ந்தார் திரு. டெல்லி கணேஷ் அவர்கள். அவரின் பேச்சுக்கு அரங்கு நிறைந்த கைதட்டல் எழுந்து அடங்க நேரமானது. யூகி சேதுவின் எக்ஸ்பிரஸ் வேகத்தில் மிரண்ட கூட்டத்தை பேசஞ்சர்ஸ் ரயில் போல மிக மெதுவாக ஆரம்பித்து சிரிக்க வைத்த டெல்லி கணேஷ் அவர்களின் பேச்சில் சிரித்துத் சிரித்து மிரட்சியில் இருந்து மீண்டது. மிகச் சிறப்பான பேச்சு...  வாழ்த்துக்கள் டெல்லி சார்.

(திரு.பாரதிராஜா அவர்கள் பேசும் போது மேடையில் திரு. டெல்லி கணேஷ், திரு. யூகி சேது, திரு. இராமகிருஷ்ணன் மற்றும் திரு. கலீல்)

மேடையில் பாரதி நட்புக்காக அமைப்பு இவரை நவீன நாகேஷ் என்று அழைத்தது. அது உண்மைதான் என்பது அவரின் பேச்சின் மூலம் உறுதியானது. இப்படி ஒரு பட்டத்தை கலைமாமணிக்கு கொடுத்த பாரதிக்கு வாழ்த்துகள்.

-திரு. பாரதிராஜா அவர்களின் உரை நாளை மாலை பகிரப்படும்.

------------------------------

மனசின் துளிகள் சில :

மூன்றாண்டுகளுக்கு முன்னர் அபுதாபியில் திரு.டெல்லி கணேஷ் அவர்கள் பேசியதை பகிர்வாக வெளியிட்டிருந்தேன். அதைப் பார்த்து அவரும் எனது தனி மின்னஞ்சலை சுபஹான் அவர்களிடம் வாங்கி மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். இந்தமுறை வந்தவர் பேச்சினூடே என்னைக் கேட்டு பார்க்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். அவருடன் ஒரிரு வார்த்தைகள் பேசி போட்டோ எடுத்துக் கொண்டது சிறப்பு.

முன்பெல்லாம் மொபைலில் போட்டோ எடுத்தார்கள்... ஆண்ட்ராய்டு போன் வந்ததும் வீடியோ எடுத்தார்கள்.  இப்போ பெரும்பாலானோர் கையில் டேபை வைத்துக் கொண்டு மேலே தூக்கிப்பிடித்து விழா நிகழ்வுகளை வீடியோ எடுக்கிறேன் என்று பின்னால் இருப்பவர்களை பார்க்க விடமாட்டேன் என்கிறார்கள். சரி தொலைக்காட்சியில் பார்ப்பது போல் பார்க்க வேண்டியதுதான் என பலரின் நிலை படம் பிடிப்பவர்களின் டேப்பில் பார்க்கும்படி ஆகிவிட்டது. 

குழந்தைகளைக் கொண்டு வரும் பெற்றோர் அவர்களை கத்தி ஆட விட்டு விடுவதால் பேசுபவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை சில நேரம் உன்னிப்பாகக் கேட்டாலும் கவனிக்க முடியவில்லை. மேடைக்கு முன்னே விஐபி சேரில் அமர்ந்து விழாவை ரசிக்கும் பாரதி அங்கத்தினரில் சிலராவது ஓரங்களில் விளையாடும் குழந்தைகளை சத்தமின்றி விளையாடுங்கள் எனச் சொல்லியிருக்கலாம். இல்லை குழந்தைகளை அருகே அமர்த்திக் கொள்ளுங்கள் அல்லது அரங்கிற்கு வெளியே இருக்கும் இடத்தில் விளையாட விடுங்கள் என்று அறிவித்திருக்கலாம். சென்றமுறை ஒரு சிலர் குழந்தைகளை அதட்டி சப்தத்தைக் கட்டுப்படுத்தினார்கள். இந்த முறை ஏனோ யாருமே எழுந்து வரவில்லை.

விழா ஆரம்பிக்கும் போது ஜெட் ஏர்வேய்ஸ் நிர்வாகியை கௌரவித்த தலைவர் அவர்கள், 'பாரதி உறுப்பினர்களுக்கு ஜெட் ஏர்வேய்ஸ் 15% கட்டணச் சலுகை அளிக்க முடிவு செய்துள்ளதாகவும் அதுகுறித்து விழா முடிவதற்குள் அறிவிக்கப்படும்' என்றும் சொன்னார். ஆனால் கடைசிவரை அறிவிப்பு வரவேயில்லையே என்று நினைத்திருந்தேன். அவர்களின் இணையப் பக்கத்தில் பிப்ரவரி முதல் டிசம்பர் -2015 வரை இச்சலுகை என அறிவித்திருக்கிறார்களாம். அங்கு விவரம் அறிந்து கொள்ளலாம். 
(துளிகள் தொடரும்)
படங்கள் உதவி : திரு. சுபஹான் அண்ணன்  அவர்க்களுக்கு நன்றி.
-'பரிவை' சே.குமார்.

ஞாயிறு, 15 பிப்ரவரி, 2015

அபுதாபியில் அபூர்வராகம் - 1

சென்ற வெள்ளிக்கிழமை மாலை அபுதாபி இந்தியன் சமூக மற்றும் கலாச்சார அரங்கில் பாரதி நட்புக்காக அமைப்பு பொங்கல் மற்றும் ஆண்டுவிழா நிகழ்வாக இயக்குநர் சிகரம் திரு.கே.பாலசந்தரின் நினைவைப் போற்றும் விதமாக அபூர்வராகம் என்ற நிகழ்ச்சியை நடத்தியது. இந்த நிகழ்வில் இயக்குநர் இமயம் திரு. பாரதிராஜா, கலைமாமணி திரு. டெல்லிகணேஷ், திரு. யூகிசேது, கேபியின் நிழல் என்றழைக்கப்படும் திரு, மோகன், வீணையில் ஜாலம் புரியும் ராஜேஷ் வைத்யா ஆகியோர் கலந்து கொண்டனர்.

Displaying 9770.jpg
(தலைவர் திரு.ராமகிருஷ்ணன் உரை, செயலர் திரு.கலீல் ரஹ்மான் அமர்ந்திருக்க பாரதியின் தூண்கள் நிற்கிறார்கள்)
விழா 6.45 மணிக்கு ஆரம்பமாகும் என்று அழைப்பிதழில் போட்டிருந்திருக்கிறார்கள். நாங்கள் சரியாக கவனிக்காமல் ஆறு மணிக்கு என நினைத்து அவசர அவசரமாகக் கிளம்பிச் சென்றோம். நாங்கள் ஐ.எஸ்.சியை அடையும் போது பாரதி நட்புக்காக தலைவர் திரு.ராமகிருஷ்ணன் மற்றும் சில அங்கத்தினர் வெளியில் நின்று பேசிக் கொண்டிருந்தனர். 'என்னடா இது அழைப்பிதழில் குறித்த நேரத்தில் ஆரம்பிக்கும் என்று போட்டிருந்தார்கள் இன்னும் ஆரம்பிக்கவில்லையோ?' என்ற நினைப்புடன் உள்ளே சென்றால் அரங்கம் பாதி நிரம்பியிருந்தது. புரஜெக்டர் திரையில் விழா அழைப்பிதழ் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. அதில் ஆறே முக்காலுக்கு என்று போட்டிருந்ததைப் பார்த்து அட மெதுவாக வந்திருக்கலாமோ என்ற நினைப்புடன் இருக்கையில் அமர, ஆறே முக்கால் ஆவதற்குள் அரங்கம் நிரம்பி இடமில்லாமல் ஆங்காங்கே நிற்க ஆரம்பித்துவிட்டனர்.

6.45க்கு மேல் திரையில் 60...59...58 என நொடிகள் ஓடி... சிங்கம் ஒன்று பாரதி ஆனது. பின்னர் மேடைத் திரை விலக,  அங்கே ராஜேஷ் வைத்யா அவர்களின் வாத்தியங்கள் தயாராக இருக்க, என்ன இந்த முறை குழந்தைகள் நடனமில்லையா என்று நினைத்தபோது பின்னால் இருந்தவர் 'பிள்ளைங்க டான்சை தூக்கிட்டாங்க போல' என்று நண்பரிடம் சொல்லிக் கொண்டிருந்தார். அறிவிப்பாளர் அவர்கள் மேடையேறி தமிழ்த்தாய் வாழ்த்து என்றதும் அரங்கம் முழுவதும் எழும்பி நின்று மேடையில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடியவருடன் சேர்ந்து பாடியது. பின்னர் செயலாளர் திரு. கலீல் ரஹ்மான் அவர்களின் வரவேற்பு உரைக்குப் பிறகு, விழா மேடைக்கு தலைவர் திரு. ராமகிருஷ்ணன் அழைக்கப்பட, அவரும் செயலாளாரும் ஜெட் ஏர்வேஸ் நிர்வாகி உள்ளிட்ட ஒரு சிலருக்கு மரியாதை செலுத்தினர். தலைவர் அவர்கள் சில வார்த்தை பேசினார். மரியாதை செலுத்தப்பட்டவர்களில் ஒருவர் மட்டும் சில வார்த்தைகள் பேசினார். மேடை ராஜேஷ் வைத்யாவிடம் கொடுக்கப்பட்டது.

ஆர்ப்பரித்த ராஜேஷ்:

பாரதி நட்புக்காக அமைப்பின் விழா என்பதால் 'பாரதிக்கு கண்ணம்மா...' என வீணையில் ராகமிசைக்க ஆரம்பித்து ஜாதி மல்லி பூச்சரத்தைத் தொடுத்து சிப்பி இருக்குது முத்தும் இருக்குதுவில் அரங்கத்தை ஆட வைத்து இன்றைக்கு இரவு அங்கே இரவா என அமைதியாய் ஆர்ப்பரித்து பாரதிராஜாவுக்காக செந்தூரப்பூவேயில் ராகமிசைத்து என் காதலே என் காதலேயில் மயக்கி பாடறியேன் படிப்பறியேன்னு அரங்கத்தை அசர வைத்து என்ன சத்தம் இந்த நேரத்தில் சத்தமின்றி ரசிக்க வைத்து... இன்னும்... இன்னும்... என பாலச்சந்தரின் படங்களின் ராகங்களை அரங்கத்துக்குள் அசரடிக்கும் வீணை இசையால் ஆர்ப்பரிக்க வைத்து 'வரவு எட்டணா.. செலவு பத்தணா' பாடல் எனக்கு முழுமையாகத் தெரியாது இருந்தாலும் தெரிந்தவரை வாசிக்கிறேன் என்று சொல்லி முடிந்தவரை அழகாய் வாசித்து சிவசம்போவில் அரங்கத்தை ஆர்ப்பரிக்க வைத்து முடித்தார். 

Displaying 9531.jpg
(இசை வெள்ளத்தில் நீந்த வைத்த திரு.ராஜேஷ் வைத்யா)
நிகழ்ச்சியின் இடையில் 'என்னை சினிமாவில் அறிமுகம் செய்து நடிக்கவும் வைத்து அழகு பார்த்தவர்' எனது குருநாதர் கே.பி அவர்கள் என்றும் 'என்னை வீணை வாசிக்கச் சொன்னால் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் வாசிப்பேன். நடிக்க வராது சார்' என்று சொல்லியும் 'அதைச் செய்யி போதும்' என்று நாடகத்தில் நடிக்க வைத்தார் என்றும் சொன்னார். ராஜேஷின் ஒவ்வொரு வாசிப்புக்கும் அவருக்கும் பக்க இசைகளாக வந்த நால்வரும் கலக்கிட்டாங்க... ஒண்ணேகால் மணி நேரம் அனைவரும் ரசித்து கேட்க வைத்தது அவரின் வீணை இசை.... ஒவ்வொரு பாடலுக்கும் அவரின் கைகள் புரிந்த ஜாலங்கள் அப்பப்பா... என்ன ஒரு கலைஞன். பாரதிராஜா சொன்னது போல் அவரோட முகத்தில் எத்தனை எக்ஸ்பிரசன்ஸ்... அவரது முகத்தில் இருந்து எனது விழிகளை அவர் ஆர்ப்பரித்து முடிக்கும்வரை எடுக்கவே முடியவில்லை. அப்படி ஒரு ஆனந்தராகம்... அவரின் வீணை இசை அபூர்வராகம்.

ராஜேஷின் இசை ஓய்ந்ததும் மீண்டும் சட்டையிட்டுக் கொண்டது மேடை, இப்போது புரஜெக்டரில் ஜெட் ஏர்வேய்ஸ்  விளம்பரம் பத்து பதினைந்து நிமிடம் ஓடியது. பொறுமையாகப் பார்த்த நண்பர் ஒருவர், 'பாருங்க.. விளம்பரத்தில் ஒரு இந்தியனையும் காண்பிக்கலை... எல்லாமே பாரினர்ஸ்' என்று ஆதங்கப்பட, அதற்கு இன்னொருவர் சொன்னதுதான் கிளாஸ்... 'நாமெல்லாம் எக்கனாமி கிளாஸ்லதானே போவோம்... இங்க காட்டுனதெல்லாம் பிஸினஸ் கிளாஸ் மாப்ள' என்றாரே பார்க்கலாம் அப்போது சிரித்தாலும் அதுதானே உண்மை. அதன்பின் கே.பி. அவர்களைப் பற்றியதொரு நீண்ட தொகுப்பு... மிக அருமையாக தொகுக்கப்பட்டிருந்தது. அருமை... அதற்காக பாரதி நட்புக்காக குழுவை பாராட்டலாம். மீண்டும் திரை விலக, குழந்தைகளின் நடனம் இல்லையா என்ற ஏக்கம் போக்க குழந்தைகளின் நடனம் ஆரம்பமானது.

'கவிதை கேளுங்கள்' என்ற புன்னகை மன்னன் பாடலுக்கு வெஸ்டர்னும் கிளாஸிக்கும் கலந்து அருமையானதொரு நடனம். பிள்ளைகளுக்கான டிரஸ் செலக்சன் கலக்கல். அதேபோல் மேக்கப்பும் சூப்பர். நடனமாடி 14 (சரியானதுதானா தெரியவில்லை) குழந்தைகளும் கலக்கல் நடனத்தால் பார்வையாளர்களைக் ஈர்த்துவிட்டார்கள். குட்டீஸூக்கு வாழ்த்துக்கள். அடுத்து 'தாம்... தரிகிட... தாம்... தரிகிட...' என நம் பாரதி மழையின் வரவைப் பற்றி பாடிய பாடல் வரிகளுக்கு மூன்று பேர் முத்தாய்ப்பாய் நடனமிட, கடைசியில் மயிலாக வந்து மனம் கவர்ந்தான் ஒரு சிறுவன். ஒரு பாடலுக்கும் அடுத்த பாடலுக்கும் இடையில் நேரம் எடுக்காமல் பாடலின் முடிவில் அடுத்த பாடலை ஆரம்பித்து நேரச் சிக்கனம் செய்தார்கள் என்பதை விட இந்த முறை சிறப்பாக இருந்தது என்றே சொல்லலாம். மயில் நடனத்துக்கு இசை மட்டுமில்லாது எதாவது பாடலுடன் இருந்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். முத்தான மூன்று நடனத்தில் எல்லோரையும் கொள்ளை கொண்டது முதல் நடனமே. நடனமாடியவர்களுக்கும் அருமையாக நடனம் அமைத்துக்கொடுத்த திருமதி. ஆஷா நாயருக்கும் வாழ்த்துக்கள்.

Displaying 9603.jpg
(கவிதை கேளுங்கள் என்று மனதைக் கொள்ளை கொண்ட குழந்தைகள்)
நடனம் முடிந்த உடன் மேடைக்கு முக்கிய விருந்தினர்கள் அழைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்கள். பின்னர் தலைவர் அவர்கள் சிறப்பு விருந்தினரைப் பற்றி பேசி, முதல்முறையாக இந்த விழா நிகழ்வுக்காக பாடுபட்ட நண்பர்களை மேடைக்கு அழைத்தார். திரு.கலீல், திரு.முரளி, திரு. முனீஸ்வரன் உள்ளிட்ட ஐவர் (மற்றவர்கள் பெயர் ஞாபகம் இல்லை) மேடை ஏறினர். எங்கும் ஜெகன்... எதிலும் ஜெகன் என அதிகம் கேள்விப்பட்ட திரு. ஜெகன் அவர்கள் அழைக்கப்படவில்லை.. டெல்லிகணேஷ் அவர்கள் இதை சுட்டிக்காட்டினார் என்று நினைக்கிறேன். பின்னர் முக்கிய விருந்தினர்கள் வசம் மேடை கொடுக்கப்பட்டது.

வெள்ளந்தியாய் பேசிய நிழல்:

மேடைக்கு அழைக்கப்பட்ட கே.பியின் நிழல் திரு. மோகன் அவர்கள் பேசும்போது வார்த்தைகள் வாயளவில் வராமல் மனசில் இருந்து வந்தன. மதுரைப் பேச்சு வழக்கில் கேபியை அழகாய்... தொண்டையை அடைக்கும் துக்கத்துடன் பகிர்ந்து கொண்டார். 26 வருடங்கள் அவருடன் நிழலாக இருந்திருக்கிறார். 'எங்க சார் இல்லாம நான் வந்திருக்கும் முதல் நிகழ்ச்சி... அதுவும் பெரிய ஆட்களுடன் என்னையும் அழைத்திருக்கிறார்கள்' என்றார். 

'கல்யாணமே பண்ணிக்க மாட்டேன் என்று சொன்னவனை, புஷ்பா அம்மா, ஐயாவின் மருமகள்கள் என எல்லோருடனும் பேசி எனக்குப் பெண் பார்த்து என் மாமனாரிடம் என்னோட ஒரு மணி நேரம் வேலை பாக்க முடியாது... இவன் எங்கூட இத்தனை வருசமா இருக்கான். அதனால உங்க பொண்ணை நல்லாப் பாத்துப்பான்னு சொல்லி கல்யாணம் பண்ணி வைத்தார்' என்றார். 

(கே.பியின் நிழல் திரு. மோகன் அவர்கள்)
'அவரு கூட காலையில ஏழு மணியில இருந்து இரவு அவர் உறங்கும் வரை அருகில் இருப்பேன். அதுவும் அவுட்டோர் சூட்டிங் என்றால் இருபத்தி நான்கு மணி நேரமும் அவரோடு இருப்பேன்.' என்றவர் 'பாரதிராஜா சார் கூட உன்னைய மாதிரி ஒரு ஆள் எனக்கு இல்லையேய்யான்னு சொல்லுவாங்க.' என்று சொல்லி பாரதிராஜாவை நோக்கினார் அவரும் ஆமோதிப்பது போல் தலையாட்டினார். 

ஐயா முடியாம இருக்கும்போது 'இதுவரை நீங்க பாத்தது எல்லாம் முக்கியமில்லை. இப்ப அவரு மருத்துவமனையில இருக்கார்... அவர் எழுந்து வரும்வரை நீங்க அங்கயே இருக்கணும்... இதுதான் முக்கியம் என்று என் மனைவி சொன்னாள் என்றார். 'ஐயாவை நான் கைபிடித்து அழைத்துச் சென்றேன். இனி நான் தனியா... என்னைய ஐயா கைபிடிச்சி எல்லா இடங்களுக்கும் அழைத்துச் செல்வார்ன்னு நம்புறேன் என்றவர் பேசும்போதே உடைந்தார். இன்னும் சில நினைவுகளைச் சொல்லிவிட்டு விறுவிறுவென்று மேடையில் இருந்து கீழிறங்கினார்.

எக்ஸ்பிரஸ் யூகிசேது :

கல்லூரி தமிழ் புரபஸர் போல கையில் ஒரு பேக்குடன் பேச வந்து பேப்பர்களைத் தேடி எடுத்ததும் 'இவரு என்ன கிளாஸ் எடுக்கப் போறாரா?'ன்னு எங்களுக்குப் பின்னால் இருந்து கமெண்ட் வந்தது. முதலில் பாரதி நட்புக்காக அமைப்பு நண்பர்களுக்காக அழகாக எழுதி சிலவரிகள் சொன்னவர், நான் ஏன் ரொம்ப மெதுவாகப் பேசுறேன்னா வேகமாப் பேசுறீங்க... மெதுவாப் பேசுங்கன்னு கலீல் சொல்லியிருக்காரு அதான் ரொம்ப மெதுவாப் பேசுறேன்னு ஆரம்பித்தார். உள்ளூர் விஷயங்கள் முதல் உலக விஷயங்கள் வரை விரல் நுனியில் வைத்திருக்கும் அறிவாளி யூகி சேது. இவரின் பேச்சு எக்ஸ்பிரஸ் வேகத்தில் இருக்கும். ரொம்ப நுணுக்கமாகக் கேட்டால்தான் விஷயம் புரியும். இங்கும் மெதுவாகப் பேசுகிறேன் என்று ஆரம்பித்தவர் கொஞ்சம் கொஞ்சமாக வேகமெடுத்தார். 

Displaying 9757.jpg
(திரு. யூகி சேது அவர்கள் கௌரவிக்கப்பட்ட போது)
பாலச்சந்தருக்கு நான் தூரத்து உறவினன் என்பதை பேச்சின் ஊடே ஓரிரு முறைகள் சொன்னார். சினிமா சம்பந்தமான பழமையான பொருட்களை சேகரித்து வைப்பதாகவும்  1944ல் வந்த ஒரு தமிழ்ப் படத்தின் பிலிம் சுருளை பாதுகாப்பாக வைத்திருப்பதாகச் சொன்னார். ரத்தக்கண்ணீர் பிலிம் சுருளை பாதுகாத்து அது பாழாய்ப்போனதால் தூக்கி எறிந்துவிட்டதாகவும் கமல் கூட நம்மவர் பிலிம் ரோல் இருக்கான்னு கேட்டதாகவும் சொன்னார்.

 பஞ்சதந்திரத்தில் நடித்தவர்களில் நான்கு பேர் கும்பகோணம் பக்கம் என்றும் சொன்னார். மேலும் பஞ்சதந்திரம் படம் கே.பி. அவர்கள் பார்த்துவிட்டு தனக்குப் போன் பண்ணி அப்பா பேசுறேன்டா என்றதும் எதற்கோ திட்டத்தான் கூப்பிடுறார் என்று நினைக்க, நீ நல்லா நடிச்சிருக்கேடா... காலையில வீட்டுக்கு வாறேன் என்றார். அதேபோல் காலையில் வந்து வசனமெல்லாம் நல்லா பேசியிருக்கேடா என்று சந்தோஷப்பட்டார். நான் எழுதுன வசனத்தை நான் நல்லா பேசமா வேற யார் பேசுவா என்றதும் கட்டிப்பிடித்து வாழ்த்தினார் என்றும் சொன்னார்.  

100 கலைஞர்களை அறிமுகம் செய்தவர் அவர், அவரின் அறிமுகங்கள் எல்லாம் நூறு படங்களுக்கு மேல் நடித்து ஸ்டார் ஆனவர்கள். என்னையும் நடிக்க வைத்தவர் அவர்தான். 1981-ல் 9 படங்கள் எடுத்தவர் பாலச்சந்தர் என்ற விபரத்தையும் சொன்னார். மூன்றுமுடிச்சு படத்துல மேலிருந்து இறங்கி வரும் ரஜினியை கீழிருந்து மேலே போவது போல் காட்டுவார். கமலுக்கு 35 படங்கள்... கமலைப் பட்டை தீட்டி பட்டை தீட்டி... செதுக்கியவர். ரஜினியை எம்.ஜி.ஆராகவும் கமலை சிவாஜியாகவும் மாற்றிக் காட்டுறேன் என்று சொல்லிச் செய்தவர் அவர். ஒரு படியில் முன்னுக்கு வந்தவர் ரஜினி.... படிப்படியாக முன்னுக்கு வந்தவர் கமல் என்றும் முத்தாய்ப்பாய்ச் சொல்லி வைத்தார். 

நையாண்டி தர்ப்பார் என்னைப் பண்ணச் சொன்னவரே அவர்தான் என்றவர் சினிமாவில் கேமராவைத் தூக்கிக் கொண்டு நகரத்தில் இருந்து கிராமத்துக்குப் போனவர் பாரதிராஜா, எங்களைவிட அவருக்கு கேபி பற்றி இன்னும் நெருக்கமாய்த் தெரியும் என்றார். திரைப்படம் சம்பந்தமான நிறைய உலக விஷயங்கள் பற்றிப் பேசினார்.. எங்களுக்கு அருகே குழந்தைகள் விளையாண்டு கொண்டிருந்த சப்தத்தில் அவரின் வேகமான பேச்சை கேட்கமுடியவில்லை. கேட்டவரை ஓரளவுக்கு இங்கு கொடுத்திருக்கிறேன். என்னை பேச விட்டால் பேசிக் கொண்டேயிருப்பேன் ஆனால் நேரமின்மையால் இத்துடன் முடித்துக் கொள்கிறேன் என்று தனது அறிவுப்பூர்வமான பேச்சை முடித்து அமர்ந்தார்.

பதிவின் நீளம் கருதி, திரு. டெல்லிகணேஷ் மற்றும் பாரதிராஜாவின் பேச்சுக்களின் தொகுப்பு அடுத்த பகிர்வுகளாக...

(அரங்கத்தில் மக்கள் வெள்ளம்)
மனசின் துளிகள் சில :

* மிகச் சிறப்பாக விழாவினை ஏற்பாடு செய்யும் பாரதி நட்புக்காக அமைப்புக்கு முதலில் பாராட்டுக்கள்.

*  ரங்கம் நிரம்பி வழிந்த கூட்டம்... விழாக்குழுவினரை அபுதாபி இந்தியன் பள்ளியில் நடத்தியிருக்கலாமோ என்று சிந்திக்க வைத்திருக்கும்.

* ண்ணன் கில்லர்ஜி விழாவுக்கு வந்திருந்தார்... நண்பரின் குழந்தைகளுக்காக விழா முடியுமுன்னரே கிளம்பிவிட்டார். சந்தித்தோம் என்றாலும் இருவரும் அதிகம் பேசிக் கொள்ள முடியவில்லை. இங்கதானே இருக்கார்... அப்புறம் பார்க்கலாம் என நானும்... அவசரமாகப் போகிறேன் என அவரும்... இருந்த சூழலால் இருவரும் இணைந்து நிகழ்ச்சியைப் பார்க்க முடியவில்லை.

*  ராஜேஷ் வைத்யாவின் இசைக்கு ஆண், பெண் என்றில்லாமல் அனைவரும் தலையாட்டி சில சமயங்களில் எழுந்து கைதட்டி ரசித்தனர். பெரும்பாலும் கர்நாடக சங்கீதம் வீணை இசையெல்லாம் குறிப்பிட்டவர்களே ரசிப்பார்கள் என்ற நிலை இன்னும் இருக்கிறது. ஆனால் இங்கு வீணையில் ராஜா, ரஹ்மானின் ராகங்கள் வந்தபோது அனைவரும் மெய்மறந்து ரசித்தனர். 
(துளிகள் தொடரும்)

-திரு. டெல்லி கணேஷின் உரை நாளை மாலை பகிரப்படும்.

அழகிய படங்கள் உதவி : திரு. சுபஹான் அண்ணன்.
-'பரிவை' சே.குமார்.

சனி, 14 பிப்ரவரி, 2015

அனுராக் (காதலர் தின சிறப்புச் சிறுகதை - நிறைவுப் பகுதி)

அனுராக் - முதல் பகுதி



"ராகவ்... நாளைக்கு எங்கூட ஒரு இடத்துக்கு வரமுடியுமா?" கேட்டது அனு.

"எ... எங்கே?"

"எதுக்கு பயப்படுறீங்க.... எங்க கிராமத்துக் கோவில்ல அக்கா வீடு சாமி கும்பிடப் போறாங்க... நீங்களும் வரணும்... அக்கா கூட்டிக்கிட்டு வரச்சொன்னா.... குறிப்பா குட்டிப்பொண்ணு உங்களைப் பாக்கணுமின்னா..."

".........." பேசாமல் நின்றேன்.

"ஏன்.... என்னாச்சு... சரி... வரப்பிடிக்கலைன்னா வேணாம்.." சொன்னவளின் முகம் சந்தோஷம் இழந்திருந்தது. அதைப் பார்க்க கஷ்டமா இருந்தது.

"இல்ல அனு.... இன்னொரு பிரண்ட்கூட வெளியே வர்றேன்னு சொல்லியிருந்தேன். இப்ப நீங்க வேற..." இழுத்தேன். ஆனா 'ங்க' போடுறவன் முதல்முறை அனுன்னு பேரைச் சொல்லியிருக்கேன்.

"சரி... உங்களுக்கு அந்த பிரண்ட் முக்கியம்ன்னா அவங்க கூடப் போங்க... நான் கிளாஸ்மெட்டுத்தானே... டியரஸ்ட் பிரண்ட் இல்லையில்ல... என்ன நான் ரொம்ப எதிர்பார்த்தேன்... அங்க போனா லோன்லியா பீல் பண்ணுவேன்..." என்றபடி நகர்ந்தவளை "அனு" என நிறுத்தினேன். திரும்பி என்னைப் பார்த்தாள்.

"எத்தனை மணிக்குப் போகணும்... நானும் வாறேன்..." என்றேன்.

பிப்ரவரி -14.

"என்னடா எங்க வேணுமின்னாலும் போகலாம்ன்னு சொல்லிட்டு அர்ஜெண்டா ஒரு பிரண்ட் கூட போறேன்... ஈவினிங் போகலாங்கிறே... என்னைவிட அவன் முக்கியமா?" போனில் கத்தினாள் ஹேமா.

"என்னடி பண்ணச் சொல்றே... திடீர்ன்னு கூப்பிடுறான்... முக்கியமான விஷயமா? நாம ஈவினிங் போவோம்...ப்ளீஸ்... புரிஞ்சிக்கடா ஏமா..." மெதுவாக அஸ்திரத்தை வீசினேன். ஆனால் முதல்முறை அது வேலை செய்யலை.

"என்னை ஏமாத்துறே?" என்றபடி போனை வைத்தாள். அவளை ஏமாத்துறது வருத்தமாகத்தான் இருந்தது. இருந்தாலும் நான் வருவேன்னு ரொம்ப நம்பிக்கையோட வந்தவளை ஏமாத்த வேண்டான்னு இவளை ஒரு நாள் ஏமாத்துறது தப்பில்லைன்னு தோணுச்சி.

"இது எங்க குலதெய்வம்..." எனக்கருகில் அமர்ந்தவள் காஞ்சிப்பட்டில் அம்மனாய்த் தெரிந்தாள்.

"ம்..."

"வருஷா வருஷம் இங்க திருவிழா சிறப்பா நடக்கும். அக்கா வீடு பூஜை போடணுமின்னு சொன்னதால இப்ப வந்தோம்... இல்லேன்னா மே மாசம் திருவிழாவுகுத்தான் வருவோம்... இப்படி உக்காந்து கோவிலோட அழகை ரசிக்கெல்லாம் முடியாம எல்லாப் பக்கமும் ஒரே கூட்டமா இருக்கும்..." சொல்லிக் கொண்டிருந்தாள். காற்றில் பறந்த அவளின் முடி என் முகத்தில் தாலாட்ட என்னை இழந்து கொண்டிருந்தேன்.

"புடிச்சிருக்கா?" என்றாள்.

"எது...?" இடமா இல்லை முடியின் தாலாட்டா எதைக் கேட்கிறாள் என்பது தெரியாமல் பொதுவாய்க் கேட்டு வைத்தேன்.

"எதுவா... இந்த ஊர்... இந்தக் கோவில்..."

"ம்... ரொம்ப..." என்று சிரித்தேன்.

"ஹேமாவுக்கும் உங்களுக்கும்தான் கல்யாணமாமே?" 

இப்ப எதுக்கு தேவையில்லாமல் இந்தக் கேள்வி என்று குழம்பியபடி, "வீட்ல முடிவு... அத்தை பொண்ணு அவ..." என்றேன்.

"உங்க முடிவு?"


"என்னோட முடிவுன்னு இதுல என்ன இருக்கு... ரெண்டு பேரோட பேரண்ட்ஸூம் முடிவு பண்ணியாச்சு..."

"உங்களுக்குன்னு ஒரு முடிவு இல்லையா?"

"இல்லை..."

"..........." அவள் பேசாமல் நிலத்தில் கிறுக்கிக் கொண்டிருந்தாள். அவள் கூந்தலைச் சரி செய்தாள். எங்களுக்குள் மௌனம் விளையாண்டது.

"என்னாச்சு?" நான்தான் நேரத்தைத் தின்ற மௌனத்தைக் கொன்றேன்.

"ஒண்ணுமில்ல... " என்று எழுந்தவள் பின்புறம் ஒட்டியிருந்த மணலைத் தட்டினாள். என்னைத் தட்டுவதாய் உணர்ந்தேன்.  நீருக்குள் நீந்தும் அவளின் கண்களின் தவிப்பைப் பார்த்தேன். ஏனோ வலித்தது.

"ஏய்... என்னன்னு சொல்லு... என்ன ஒரு மாதிரி ஆயிட்டே?" ஒருமைக்கு மாறினேன்.

"ஏய்... அதெல்லாம் இல்ல... எப்பவும் போலத்தான் இருக்கேன்..." சிரிக்க முற்பட்டாள்.

"அனு ப்ளீஸ்...எனக்குத் தெரியும்... என்னாச்சு?" கேட்டபடி முதல் முறையாக அவள் கையைப் பற்றி இழுக்க மறுபடியும் அமர்ந்தாள். இப்போது சற்றே இடைவெளி விட்டு அமர்ந்தாள். ஹேமாவின் கரம் பற்றியிருந்தாலும் அதில் இல்லாத ஏதோ ஒன்று இந்த முதல் ஸ்பரிசத்தில்.

"என்ன சொல்லு?" 

"அதான் ஒண்ணுமில்லேன்னு சொன்னேனே?"

"சரி... அப்ப நான் கிளம்புறேன்..." என எழுந்தேன்.

"ஏய்ய்ய்ய்..." என்றபடி என்னை அருகே அமர்த்தினாள்.

"சொன்னா தப்பா நினைக்கமாட்டியே... இவதான்னு முடிவு ஆகியிருந்தாலும் எனக்காக முடிவை மாத்திக்குவியா?" அவளின் கேள்வியின் பின்னே இருப்பது புரிந்தது. ஹேமா.... இதை ஏற்பாளா? இதை நான் ஏற்றால் ஹேமா மரணத்து வரைக்கும் கூட போவாள். ஆனாலும் மனசு அனு எனக்கு வேண்டுமென்று சொன்னதால் "உனக்காக... என்ன செய்யணுமின்னாலும் செய்கிறேன்" என்றேன்.

"ஐ லவ் யூ ராக்" என்றவள் எதிர்பாராத தருணத்தில் என் கன்னத்தில் முத்தமிட்டாள். ஹேமாவுக்கு நானோ எனக்கு அவளோ முத்தமெல்லாம் கொடுத்ததில்லை. முதல் முத்தம்... அதுவும் தேவதையின் முத்தம்... எச்சில்படாத ஆனால் மனசுக்குள் பூப்பூக்க வைத்த முத்தம்... காதலை அழகாய்ச் சொன்ன முத்தம்.. என்னை வானில் பறக்க வைத்த முத்தம், முத்தச் சூடு ஆறும் முன் அவள் என் தோள் சாய்ந்தாள். யாரேனும் வரக்கூடும் என்ற அச்சம் வர, அவசரமாய் அவளை விலக்கினேன்... உதடுகள் அவள் நெற்றியில் பதிந்தன சம்மதமாய்...

"என்னங்க... இன்னைக்கி பிப்ரவரி-14, அனு போன் பண்ணினா... உங்களைக் கேட்டா... இன்னும் தூங்குறீங்கன்னு சொன்னேன்... லவ்வர்ஸ்டே ஸ்பெஷல் எதுவும் இல்லையான்னு கேட்டா..." என்னை எழுப்பி காபி கொடுத்தபடியே சொன்னாள் ஹேமா, என் மனைவி.

என்னடா அனுவைக் காதலிச்சிட்டு ஹேமாவை கட்டியிருக்கானேன்னு பாக்குறீங்களா? எங்க காதல் வீட்டுக்குத் தெரிந்து... ஹேமா விஷம் குடிச்சி... இத்யாயி... இத்யாயி... எல்லாம் முடிஞ்சி போச்சு... காதல் காத்திருப்புக்கள் எல்லாமே சாதியிலும் பெரியவர்களின் பிடிப்பிலும் அழிந்து போச்சு....

சரி... அப்ப அனு எங்கேன்னு கேக்குறீங்களா? என்னைய ரொம்ப நம்பினா... ஓடிப்போயிடலாம்ன்னு அவகிட்ட சொன்னப்போ மறுத்துட்டா... வேண்டாம்... அவ உயிரை எடுத்துட்டு நாம வாழ்ந்தா அது வாழ்க்கையில்லன்னு சொல்லிட்டா... ஹேமாவுக்காக என்னை விட்டுப் பொயிட்டா... ம்... காதல் அவளைக் கோழை ஆக்கிருச்சு... சொல்லாமக் கொன்னுட்டுப் பொயிட்டா.... 

அப்ப போன்ல பேசின அனு யாருன்னுதானே யோசிக்கிறீங்க... இவ என்னோட மகள்... எனக்கு அம்மு... ஹேமாவுக்கும் மற்றவர்களுக்கும் அனு... அனுபமா.. அனுபமா ராகவன்... அனுராக்... ம்... இந்தப் பேரை வச்சவளே ஹேமாதான்.... நினைவுகளோடு கிளம்பி வெளியே வந்தேன்... ஹாலில் மாலை சூடிய போட்டோவுக்குள் சிரித்துக் கொண்டிருந்தாள் என்னோட அனு... 

-:முற்றும்:-
-'பரிவை' சே.குமார்.

அனுராக் (காதலர் தின சிறப்புச் சிறுகதை)

(காதலர் தின வாழ்த்துக்கள்)


வள்... அனுராகா. நான்... ராகவன்

எங்கள் காதல் பிறந்தது ஒரு காதலர் தினத்தில்தான் என்றால் நம்புவீர்களா... ஆம் இருபது வருடங்களுக்கு முன்னர் பிப்ரவரி 14 அன்றுதான் எங்கள் காதல் பிறந்தது. ஆனால் இப்போதுபோல் அப்போது காதலர் தினக் கொண்டாட்டங்களும் இல்லை... போராட்டங்களும் இல்லை. இன்று காதலர் தினம் என்று கடந்து செல்லும் சாதாரண நாளாகத்தான் இருந்தது.

நாங்கள் இருவரும் கல்லூரியில் ஒரே வகுப்பு. நண்பர்கள் மத்தியில் அவள் அனுவாகிப் போனாள், நானோ ராகவ் ஆனேன். எங்களுக்கும் காதல் மலர்ந்ததும் அனு எனக்கு அம்முவானாள்... நான் அவளுக்கு ராக் ஆனேன். இருபது வருடங்களுக்கு முன் காதலில் விழுந்த அனுராக்கின் வாழ்க்கை இப்போ எப்படி இருக்குன்னுதானே கேக்குறீங்க... இருங்க அதை அப்புறம் சொல்றேன். இப்ப எங்க காதல் கதைக்குள்ள போயிட்டு வருவோம்.

அனு... பேரழகியும் இல்லை பேருக்கு அழகியும் இல்லை ஆனால் அழகி. கல்லூரி மாணவர்கள் பலரின் தூக்கத்தைக் கெடுத்து கனவில் காதலித்த அழகி. கருப்பும் இல்லாமல் சிவப்பும் இல்லாமல் புது நிறம்ன்னு சொல்லுவாங்களே அப்படி ஒரு நிறம்... நீளமான கூந்தல்... அவள் தாவணியில் வரும்போது சொக்கிப் போகும் அழகு. ம்... அது ஒரு கனாக்காலம் அல்லவா... தேர்ப்பாக்க வரும் எல்லாரும் தேவதைகளாகத்தானே தெரிவார்கள் என்றாலும் அவள் தேவதைகளின் தேவதை. தோழியருடன் பவனி வரும் போது அவள் உற்சவமூர்த்தி. அவளிடம் பேச எல்லோரும் அலைந்த பருவம் அது.

எனக்கு அவளுடன் அதிகம் பேசப்பிடிப்பதில்லை... என்னடா அழகி, பேரழகி, தேவதை, உற்சவமூர்த்தியின்னு வர்ணிச்சிட்டு பேசப்பிடிக்காதுன்னு கதை விடுறானேன்னுதானே பாக்குறீங்க... உண்மை... நம்புங்க... அவளோட அழகை ரசிச்சிருக்கேன்... ஆனா அவகிட்ட பேசணுமின்னு நினைச்சதில்லை. ஏதாவது கேட்டா பதில்... அவ்வளவுதான்... அடிக்கடி அவளுடன் பேச வேண்டும் என்று ஏதாவது காரணங்களை எனக்குள் ஏற்படுத்திக் கொண்டு காத்திருக்க நினைப்பதுமில்லை... பிடிப்பதும் இல்லை... அதுக்கு இன்னொரு காரணமும் இருந்தது... அது ஹேமா.

என்னடா அனுன்னு ஆரம்பிச்சி ஹேமாவுக்குப் பொயிட்டானே இந்த ராகவன்... என்று நினைத்து என்னைத் திட்டினாலும் பரவாயில்லை... நான் மற்ற பெண்களுடன் அதிகம் பேசாததற்கு காரணம் ஹேமாதான்... அவளும் அதே கல்லூரியில்தான் படிச்சா. என்னோட அத்தை பொண்ணு... என்னை அவளுக்கு ரொம்பப் பிடிக்கும்... அவளை எனக்கு ரொம்ப ரொம்பப் பிடிக்கும். வீட்டிலும் இருவருக்கும் கல்யாணம் பண்ணி வைக்க வேண்டும் என எப்போதோ பேசி வைத்திருக்கிறார்கள். சரி வாங்க அனு, ஹேமா, ராகவனோட கல்லூரி வாழ்க்கைக்குள்ள பொயிட்டு வருவோம்.

"ஏய் ராகவ்... என்ன என்னையப் பாத்துட்டு பாக்காமப் போறே...?" பின்னாலிருந்து கூப்பிட்டாள் ஹேமா.

"ஹே... உண்மையிலேயே பாக்கலைடி... பாத்தா பேசாமப் போவேனா?"

"இப்பல்லாம் உண்மையிலேயே பாக்காமத்தானே போறே...?"

"அடி நீ வேற... பாத்தா உங்கிட்ட பேசாம எவகிட்ட பேசப்போறேன்..."

"அதான் உங்க கிளாஸ்ல ஒரு அலப்பி இருக்காளே... எல்லாரும் போட்டிபோட்டு பேசுறானுங்களாமே... ஓருவேளை நீயும்..."

"யாரு... அந்த அனுவைச் சொல்றியா?"

"அட அனுவாமே... செல்லமாக் கூப்பிடுறியோ?"

"லூசு... காலேசே அவளை அனுன்னுதானே சொல்லுது... தெரியாத மாதிரி நடிப்பு வேற... விட்டேன்னா" கையை ஓங்கினேன்.

"ஏய்... மேத்ஸ் புரபஸர் வர்றாரு.. இங்க பாருங்க சார்... இவன் அடிக்க வர்றான்னு சொன்னேனா... அப்புறம் நீ பிரின்சிபால் ரூம்ல..." மெதுவாகச் சொல்லிச் சிரித்தாள்.

"செஞ்சாலும் செய்வேடி.. நான் கிளம்புறேன்..."

"இரு எங்க ஓடுறே... நீ அனுவை லவ் பண்ணுறியா?" நிறுத்தி நிதானமாகக் கேட்டாள்.

"ஏய் கிறுக்கு... அதான் வீட்டுல உனக்கும் எனக்கும் மேரேஜ்ன்னு முடிவு பண்ணி வச்சிருக்கானுங்க... நீயே வந்து அவளை விரும்புறியா இவளை விரும்புறியான்னு கேட்டுக்கிட்டு... சும்மா போடி..."

"டேய் அவ காலேசு பிகருடா...உன்னோட கிளாஸ்மெட் வேற... படிப்புல உங்க ரெண்டு பேருக்குந்தான் போட்டியாமே... வாழ்க்கையில நாங்க ரெண்டு பேரும் போட்டி போடுற மாதிரி வச்சிடாதே..." சொல்லிச் சிரித்தாள்.

"எதுக்கோ என்னை ஏத்திவிடுறே..? ஆத்தா... தாயி ஆளைவிடு.... காதல், கத்திரிக்காயெல்லாம் நமக்கு வேணாம்..."

"அப்ப என்னைய காதலிக்கலையா?"

"அது..."

"அப்ப வீட்டுக்காகத்தான் என்னைய கட்டிக்கப்போறே.. அப்படித்தானே..."

"ஆத்தா உன்னைய ரொம்பக் காதலிக்கிறேன்... நீதான் எம்பொண்டாட்டி... போதுமா?"

"அப்ப அவ..?"

"அய்யோ இப்படிக் கொல்றாளே... இவளைக் கட்டிக்கிட்டு நான் என்ன பண்ணப் போறேனோ தெரியலையே..."

"அப்புறம் பேசிக் கொல்லமாட்டேன்... வேற மாதிரிக் கொல்லுவேன்...." என்று சிரித்தவள் "சும்மா வம்பு இழுத்துப் பார்த்தேன்... ஐ லவ் யூ டா ராகவா..." என்று ராகவாவை அழுத்திச் சொன்னவள் "வாறேன்டா என் வருங்காலப் புருஷா..." அப்படின்னு சொல்லிட்டு அங்கிருந்து அகல, 'லூசு..' என்று சொல்லிச் சிரித்துக் கொண்டே எனது வகுப்பறை நோக்கிச் சென்றேன்.

அன்று என்னவோ ஹேமா சொன்னதற்குப் பிறகு எனது கண் அடிக்கடி அனுவை நோட்டமிட்டது. 'டேய் என்னடா... அத்தமக இருக்கும் போது இங்கிட்டு பிராக்கெட் போடப்பாக்குறே... வேணாம் மாப்ள இவளுக்கு நிக்கிறா க்யூவுல எங்களுக்குப் பின்னால ஏறாத... விட்டுடு" என்றான் மணி. 'அடப்போடா' எனச்சொல்லிச் சிரித்தாலும் முதல்முறையாக அனு இம்சித்தாள்.

"ராகவ்.. ராகவ்... அலோ ராகவ்..." பின்னால் பெயரைச் சொல்லி அழைக்கும் குரல் கேட்டு திரும்பினேன்,

அங்கே.... சிவப்புத் தாவணியில் தேவதையாய் அனு, "என்னங்க.. சொல்லுங்க..." என்றேன்.

"எம்புட்டு நேரமாக் கூப்பிடுறேன்.. திரும்பாமப் போறீங்க... உங்களைக் கூப்பிட்டதைக் கேட்டு எல்லாரும் திரும்பிட்டாங்க..." இடுப்பில் கை வைத்தபடி சொல்லிச் சிரித்தாள்.

"சாரிங்க... ஏதோ ஞாபகம்..."

"ம்.... எனக்கு ஒரு உதவி செய்ய முடியுமா?"

"உங்களுக்கா... என்னன்னு சொல்லுங்க முடிஞ்சாச் செய்யிறேன்..."

"முடியும்... எங்க அக்கா பொண்ணு ஸ்கூல்ல ஒரு காம்படிசன்... அதுல அவ கலந்துக்கிறா... ஒரு கட்டுரை ஒண்ணு வேணும்.."

நான் சிரிக்கவும் 'என்ன சிரிப்பு' என்றாள்.

"இல்லை... படிப்பாளி நீங்க... நீங்களே எழுதலாமுல்ல..." என்றேன்.

"நான் படைப்பாளி இல்லையே... நீங்க படைப்பாளியில்ல... அதான் உங்ககிட்ட கேட்டேன்."

"சரி விடுங்க...தலைப்பைச் சொல்லுங்க.... எழுதித்தாறேன்..."

அதன் பிறகு நாங்க அடிக்கடி பேச ஆரம்பிச்சோம். என்னுடன் பேசுவதற்கான காரணத்தை அவள் தேடிப்பிடிப்பது போல் தெரிந்தாலும் எனக்கு அது பிடிக்க ஆரம்பித்தது என்பதே உண்மை. 

"இந்தாங்க சாக்லெட்..." என் முன்னே பைவ் ஸ்டார் சாக்லெட்டை நீட்டினாள் அனு.

"என்ன விஷேசம்?" வாங்கியபடி கேட்டேன்.

"அக்கா பொண்ணுக்கு முதல் பரிசு... தாங்கஸ்" என்றாள்.

"வாவ்... குட்டீசுக்கு வாழ்த்துச் சொல்லிருங்க..."

"அந்த அங்கிளுக்கு வாழ்த்தைச் சொல்லிரு சித்தின்னு அவங்க சொன்னாங்க... நீங்க அவங்களுக்கு வாழ்த்துச் சொல்லுறீங்க." என்று சிரித்து விட்டு நகர்ந்தாள்.. தேவதைகள் தேவை இல்லாமல் சிரிப்பதில்லை... தேவையாய் சிரிக்கும் போது தேவதைகள் இன்னும் அழகாகிறார்கள் என மனசுக்குள் எழுதி ரசித்தேன். 'மாப்ள வேண்டாம்... ரெட்டை மாட்டு வண்டி சரிவராது' என்றான் மணி. 'டேய் போடா..' என்றேன். ஏனோ இன்னும் ஏதாவது அவளைப் பற்றி பேசுடா' என்று நினைத்தது மனசு.

"என்ன அவகிட்ட ரொம்ப வழியிறியாமே?" கோபமாய் கேட்டாள் ஹேமா.

"ஏய் ஜஸ்ட் பிரண்ட்... அவ்வளவுதான்..."

"சாக்லெட் கொடுக்குறாளாம்... எங்க வீட்ல செஞ்ச சுவீட்டுன்னு கொண்டாந்து கொடுக்குறாளாம்... அப்படி என்ன உனக்கு மட்டும் ஸ்பெஷல்..."

வயித்தெரிச்சக்காரனுக வாந்தி எடுத்துட்டானுங்களா, அப்பா போட்டுக் கொடுத்து வாழ்றதுல கிடைக்கிற சந்தோஷம் இவனுகளுக்கு வேற எதுலயும் கிடைக்காது போல. "ம்... ஏய்... எல்லாருக்குந்தான் கொடுத்தா.. இப்ப உன்னோட கிளாஸ் பசங்க கொடுத்தா சாப்பிடமாட்டியா... நான் என்ன அவன் அது கொடுத்தானாமே... இவன் இது கொடுத்தானாமேன்னா கேட்டுக்கிட்டு இருக்கேன். நீதான் என்னோட அம்மு போதுமா.... லவ் யூ டி ஏமா..." என்றேன் அன்பாக. 'ஏமா' என்று சொன்னால் எல்லாக் கோபத்தையும் விட்டுச் சிரிப்பாள் என்ற சூட்சமம் அறிந்தவன் என்பதால் 'ஏமா'வை இறக்கி அழுத்தினேன்.

"ஏமா.. ஏமான்னு ஏமாத்திட்டுப் போனே மவனே... கொன்னேபுடுவேன்..." சொல்லிச் சிரித்தவள், "டேய் நாளைக்கி எங்கயாச்சும் போலாமா?" என்றாள்.

"ம்... போலாம்... எங்கயின்னு டிசைட் பண்ணிட்டு காலையில கூப்பிடு... வாறேன்... ஓகேயா...?"

"ராகவ்... நாளைக்கு எங்கூட ஒரு இடத்துக்கு வரமுடியுமா?" கேட்டது அனு.

(கதையின் நீளம் கருதி மீதிக்கதை இன்று மாலை பகிரப்படும்)

(நன்றி : படம் - இணையத்திலிருந்து)
-'பரிவை' சே.குமார்.

வியாழன், 12 பிப்ரவரி, 2015

மனசின் பக்கம் : அரசி ஐயா முதல் மருத்துவர் ஐயா வரை...

நாங்கள் கல்லூரியில் படிக்கும் போது எங்கள் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவராக இருந்தவர் கவிஞர். பேராசிரியர். அர.சிங்காரவடிவேலன் அவர்கள் நேற்று இயற்கை எய்திவிட்டார்கள். மாணவர்களிடம் மிக அன்பாகப் பழகக்கூடியவர். அதுவும் நாங்கள் படிக்கும் காலத்தில் அடிதடிக்குப் பிரபலமான கல்லூரியில் ஒரு ஆசிரியர், அதுவும் தமிழாசிரியர் எல்லா மாணவர்களுக்கும் பிடித்தவராய் இருத்தல் என்பது அரிது. தமிழ், ஆங்கில ஆசிரியர்கள் மூன்று துறை மாணவர்களை ஒரே வகுப்பில் வைத்து பாடம் நடத்துவது என்பது எவ்வளவு சிரமமான விஷயம் என்பதை கண்கூடாகக் கண்டிருக்கிறேன். 


தம்பி கவனி... தம்பி கவனி... என்பதிலே பெரும்பாலான நேரம் கடக்கும். அப்படியிருந்தும் சிரிக்கச் சிரிக்கப் பேசும் குணத்தால் மாணவர்கள் விரும்பும் ஆசிரியராக இருந்தவர். கவிதைகள், கதைகள் என அழகாக வகுப்பைக் கொண்டு செல்பவர். எங்கள் கல்லூரியில் பாடப்படும்'அண்ணாமலையார் அறிவுக் கோவிலை விண்ணாய் உயர்த்துவோம், வெற்றிகள் குவிப்போம்...' என்ற பாடலின் ஆசிரியர்... மிகச் சிறந்த பேச்சாளர்... அருமையான எழுத்தாளர்.. கவிஞர்... என பன்முகம் கொண்டவர்... மாணவர்களாலும் ஆசிரியர்களாலும் 'அரசி' என அன்போடு அழைக்கப்பட்டவர். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதுடன் அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.

***************
புதாபியில் வரும் வெள்ளிக்கிழமை மாலை (13/02/2015) பாரதி நட்புக்காக அமைப்பினர் நடத்தும் ஆபூர்வராகம் நிகழ்ச்சி இந்தியன் கலாச்சார மையத்தில்  (ISC) நடைபெறுகிறது. இயக்குநர் இமயம் திரு. பாரதிராஜா, நடிகர்கள் திரு. டெல்லி கணேஷ், திரு.யூகி சேது, மற்றும் பாலச்சந்தரின் உதவியாளர் திரு. மோகன் ஆகியோர் கலந்து கொள்ளும் இந்த நிகழ்வில் திரு. ராஜேஷ் வைத்யா அவர்களின் இசை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. அபுதாபியில் இருக்கும் நம் நட்புக்கள் அனைவரும் கலந்து கொண்டு விழாவினைக் கண்டு ரசிக்கவும்.


***************

சென்ற வார பாக்யாவில் மக்கள் மனசு பகுதியில் எனது கருத்தும் வெளியாகியிருந்தது. கல்லூரியில் படிக்கும் காலத்தில் பாக்யாவில் கவிதை வந்திருக்கிறது. அதன் பின் இப்போதுதான் எனது கருத்து வெளியாகியிருக்கிறது. அபுதாபி வந்த பின்னர் தினத்தந்தியில் மட்டுமே சில கதைகள் வந்திருக்கின்றன. மற்ற பத்திரிக்கைகளுக்கு அனுப்புவதில்லை. பாக்யா எடிட்டர்களில் ஒருவரான திரு.எஸ்.எஸ்.பூங்கதிர் அவர்கள் மக்கள் மனசுக்கான கேள்வியை முகநூலில் பதிந்து வருகிறார். அதில் பலரும் எழுதும் கருத்துக்களில் தேர்வு செய்து அச்சில் ஏற்றுகிறார். அதன் மூலம் எனது கருத்துக்கும் பாக்யாவில் இடம் கிடைத்திருக்கிறது. வெகுஜன பத்திரிக்கையில் என் கருத்து. அதுவும் அரசியல் சார்பான கருத்து/.. ரொம்ப சந்தோஷமாக இருந்தது. நன்றி S.S.பூங்கதிர் சார்.


***************

சென்ற வாரம் வலைச்சர ஆசிரியராய் பதிவர்களை அறிமுகம் செய்த சகோதரி. திருமதி. உமையாள் காயத்ரி அவர்கள், மழை என்ற தலைப்பில் செய்த அறிமுகங்களில் எனக்கும் இடமளித்திருந்தார். மூன்று முறை வலைச்சர ஆசிரியனாய் இருந்ததைவிட, மற்றவர்களால் அறிமுகம் செய்யப்படும்போதுதான் மிகவும் சந்தோஷமாக இருக்கும். காரணம் என்னவெனிம் நமது எழுத்துக்கான அங்கீகாரம் அப்போதுதானே கிடைக்கிறது. மேலும் நாம் கிறுக்கும் ஏதோ ஒரு பகிர்வு அவர்களுக்குப் பிடித்திருக்கிறது என்பதால் இன்னும் நன்றாக எழுத வேண்டும் என்ற எண்ணமும் தோன்றும். வலைச்சரத்தில் நண்பர்களால் பலமுறை அறிமுகம் ஆகியிருக்கிறேன். இந்த முறை அறிமுகம் செய்த சகோதரிக்கு நன்றி.
***************

னுஷ் + அமிதாப் நடிப்பில் வெளியான இந்திப்படம் ஷமிதாப் பார்த்தேன்.. அமிதாப்பின் கம்பீரமான குரலில் தனுஷ் நடிக்கும் போது ஆரம்பத்தில் வித்தியாசமாகத் தெரிந்தாலும் பின்னர் கதையின் ஊடே பயணிக்கும் போது மிகவும் பிடித்துவிட்டது. நடிப்பில் தனுஷூக்கும் அமிதாப்புக்கும் போட்டி என்றே சொல்லலாம். அக்ஷரா ஹாசன்... ஸ்ருதி போலில்லை... இரு மலைகளுக்கு இடையே காணாமல் போகாமல் தான் நவரச நாயகனின் மகள் என்பதை நிரூபித்திருக்கிறார். இந்தப்படம் குறித்து மற்றுமொரு பகிர்வில் பேசலாம். நமக்கும் பதிவு தேத்தணுமில்ல... தலைப்புக்கு அலையாம ஒரு பதிவு எழுதலாம்தானே.
***************

டெல்லி தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு மக்களிடம் இருந்த செல்வாக்கு பிரதமரின் செயல்பாடுகளால் குறைந்துவிட்டது என்பதையே காட்டுகிறது. மணலைக் கயிறாக்குவேன் என்றெல்லாம் சொன்னவருக்கு லட்சங்களில் ஆடை உடுத்தி போட்டோவுக்கு போஸ் கொடுப்பதற்கே நேரம் சரியாக இருக்கிறது. மற்ற மாநிலத்து மக்களுக்கு அவர்களின் செயல்பாடுகள் அதிகம் தெரிய வாய்ப்பில்லை... விடிந்து எழுந்தால் அவர்களின் செயல்பாடுகளைப் பார்த்து நொந்த மக்கள் ஆம் ஆத்மிக்கு அள்ளிக் கொடுத்துவிட்டார்கள்.


இதில் அந்த அம்மா கிரண்பேடி முதல்வராகும் கனவு தகர்ந்து போனதும் இது எனது தோல்வி இல்லை பாஜகவின் தோல்வி எனச்சொல்லி தன்னை தேற்றி மக்களை முட்டாளாக்கப் பார்க்கிறார். தனக்கு இருந்த பெயரால் அந்த மூவர் வெற்றி பெற்றதுபோல் இந்த அம்மாவால் ஏன் வெற்றி பெற முடியவில்லை. அப்படியென்றால் இவருக்கு இருக்கும் நல்லபெயருக்குப் பின்னே மிகப்பெரிய கெட்டபெயரும் இருந்திருக்கிறது என்றுதானே அர்த்தம். எது எப்படியோ மேக் இந்தியான்னு சொல்லிக்கிட்டு மக்களை ஏமாற்றியதற்கு தலைநகரம் முதல் அடியைக் கொடுத்திருக்கிறது. இதில் இருந்து மோடிஜி பாடம் கற்றுக்கொண்டால் சரி.
***************

மிழ்நாட்டுல நாங்க காங்கிரஸ்க்கு முட்டை கொடுத்தோம்ன்னா அதுக்கு ஒரு காரணம் இருக்கு.  எங்க தமிழர்களைக் கொன்று குவித்த சிங்களநாய்க்கு சிவப்புக் கம்பளம் விரித்ததாலும் அவர்களுக்கு ஆதரவாய் செயல்பட்டதாலும் நாங்க ஆப்பு அடிச்சோம். ஆனா டெல்லியிலயும் முட்டை வாங்கியிருக்காங்களே... கேவலமில்லையா... ஒரு சீட்டுக்கூட வாங்க முடியாத தேசியக்கட்சி... மிகப்பெரிய பாரம்பரியமான கட்சி... ஊழல் ஆட்சிக்கு வித்திட்டதால்தானே இன்று வித்து முளைக்கவேயில்லை. இதில் பாஜக மூணு சீட்டுத்தானே வாங்கியிருக்கு... மிகப்பெரிய தோல்வியின்னு நம்மாளுக அறிக்கை விடுறானுங்க... முட்டை வாங்கினா அது தோல்வி இல்லைபோல...செத்தபாம்புக்கு எதுக்கு வெற்றி தோல்வி எல்லாம்... இப்படியாய்யா எல்லாப் பக்கமும் சோனியா காங்கிரஸூக்கு பாடை கட்டுவானுங்க.
***************

அன்புமணி ராமதாஸ் | கோப்புப் படம்டெல்லி தேர்தல் முடிவுக்குப் பிறகு ஆம் ஆத்மி பெற்ற வெற்றியைப் போல் 2016-ல் தமிழகத்தில் தாங்கள் வெற்றிபெறுவோம் என மருத்துவர் ஐயாவின் வாரிசு சொல்லியிருக்காகளாமே... இதுதான் இந்த வருடத்தின் சிறந்த நகைச்சுவையா இருக்கும் என்று நினைக்கிறேன். திமுக அதிமுகவோட பாதுகாப்போட வண்டி ஓட்டாம முதல்ல தனியா வண்டி ஓட்டப்பழகுங்க ஐயா... அப்புறம் நீங்க ஆம் ஆத்மி ஆகலாம்... அதுவரைக்கும் இப்படியெல்லாம் ஜோக்கடிச்சி ஜோக்கராகாதீங்க ஐயா...  கேப்பையில நெய் வடியிதுன்னு சொன்னதைக் கேட்ட ஜனமெல்லாம் இப்ப இல்ல... அதைப் புரிஞ்சிக்கங்க... இன்னொன்னு நாங்கள்லாம் காசுக்காக மானத்தை வித்து வருசமாகிப்போச்சு... 2016 தேர்தல்ல எங்களோட ஆரம்ப விலையே 10000 ரூபாயாக இருந்தாலும் ஆச்சர்யமில்லை...  மொத்தப் பணத்தையும் இறக்குவீங்களா?

-மனசின் பக்கம் தொடரும்.
-'பரிவை' சே.குமார்.

செவ்வாய், 10 பிப்ரவரி, 2015

மனசு பேசுகிறது : தெய்வமான குடி

ன்றைய நிலையில் நூத்துக்கு தொன்னூறு பேரு குடிக்கிறாங்க... ஆண்கள் மட்டுமின்றி பெண்களும் குடிக்கிறாங்கன்னு செய்திகள்லயும் இணைய வீடியோக்களிலும் பார்க்கிறோம். சமீபத்தில் கூட நயன்தாரா பாட்டில் வாங்கினார் என அவருக்கு எதிராக பொங்கி எழுந்தது ஒரு கூட்டம். அது சினிமா சூட்டிங் என்ற செய்தி வந்தபோதும் தேவையில்லாத ஒரு பிரச்சினையை தேவையான பிரச்சினையாகப் பார்த்தது அந்தக் கூட்டம். கடந்த வாரம் பள்ளி மாணவர்கள் குடித்து விட்டு ரோட்டில் விழுந்து கிடந்த காட்சிகளை முகநூலில் பார்க்க முடிந்தது. சமுதாய சீரழிவுக்கு முக்கிய காரணம் சினிமாதான். அதில்தான் சின்னப்பையன் சரக்கு வாங்கிக் கொடுப்பது போலவும், அடியாளுக்கு கத்தி எடுத்துக் கொடுப்பது போலவும் காட்டுகிறார்கள். சினிமா பற்றி இங்கு பேசப்போவதில்லை... குடி பற்றி மட்டுமே பேசுவோம்.


குடி குறித்து முன்னரே ஒரு பதிவு போட்டிருக்கிறேன். அதே போன்றதொரு பகிர்வை மீண்டும் பகிரக் காரணம், சென்ற மனசின் பக்கத்தில் மலையாளி நண்பர் தண்ணி அடிக்கிறார் என்று எழுதியிருந்ததற்கு அண்ணன் கில்லர்ஜியும் காயத்ரி அக்காவும் அவர்களுக்கு மலையாளம் தெரியாததால் எல்லாவற்றையும் எழுதுகிறீர்கள் இப்படியெல்லாம் எழுதணுமா யோசிங்க என்று சொல்லியிருந்தார்கள். அடுத்தவரைப் பற்றி அவர் அறியாமல் பேசுவது தவறுதான். ஆனால் இங்கே அந்த மனிதரைப் பற்றிப் பேசவில்லை... இப்படிக் குடிக்கிறாரே என்ற ஆதங்கத்தில் எழுதியதுதான் அது. 

கடந்த சனி அன்று நானும் கில்லர்ஜி அண்ணாவும் நம்ம முத்து நிலவன் ஐயாவின் மகனைச் சந்திக்கச் சென்றுவிட்டு வரும்போது இது குறித்துப் பேசினோம். அப்போ அண்ணனும் இந்தக் குடி குறித்து வருந்தினார். இன்னைக்கு பெரும்பாலான வீடுகளில் மனைவி ஆம்லெட் போட்டுக் கொடுக்க, கணவன் நண்பர்களுடன் அரட்டை அடித்தபடி வீட்டிலேயே சரக்கு அடிக்கிறார். எனக்குத் தெரிந்த ஒரு தண்ணி வண்டியைத் திருத்துகிறேன் என்று சபதமிட்ட மனைவி இன்று சிக்கன் வறுத்துக் கொடுப்பதுடன் வீட்டில் மட்டும் அடியுங்கள்... வெளியில் எல்லாம் வேண்டாம் எனச் சொல்லி வீட்டில் கடை திறக்க வைத்திருக்கிறார். திருத்துகிறேன் என்று வந்தவர் ரொம்பத் திருந்திவிட்டார்.

ஊரில் எந்த விசேசம் என்றாலும் இப்போ தண்ணிப் பார்ட்டி இல்லாமல் நடப்பதில்லை... எங்கள் மாவட்டத்தில் சில பணக்கார்களின் இல்ல திருமணங்களில் தண்ணி அடிப்பதற்கென்றே தனியாக பந்தல் அமைத்து அங்கு என்ன வேண்டுமோ அதை ஹோட்டல் பார்கள் போல் ஆட்களை வைத்துக் கொடுத்து சாப்பிட வைக்கிறார்கள். இது எங்கள் மாவட்டத்தில் மட்டுமல்ல தமிழகம் எங்கும் நடைமுறைக்கு வந்துள்ளது என்பதே உண்மை. ஒரு முறை கோவில் திருவிழாவுக்காக உறவினர் வீடு சென்றபோது, மொட்டைமாடியில் டேபிள் சேர் போட்டு சிக்கன், மட்டன், மீன் என எல்லாம் வைத்து ஊத்திக் கொடுக்க ஆள்களும் நிறுத்தி, வருவோரிடமெல்லாம் தண்ணி சாப்பிடுவீங்களா... அப்படியே மாடிக்கு பொயிட்டு வாங்கன்னு சொல்லி அனுப்பிக் குடிக்க வைத்தார்கள். அங்கு குடித்து சாப்பிட்டவர்கள் எல்லாம் 'ப்பா... என்ன கவனிப்பு... மனுசன் திருவிழாவுக்கு வந்தவங்களை எல்லாம் குளிப்பாட்டிட்டான்.. இவன மாதிரி எவனும் விருந்து போட முடியாது' என்று நாகுழற புகழ்ந்து பேசினர்.


இங்கு எப்படா வியாழக்கிழமை வரும் என்று பெருங்கூட்டமே காத்திருக்கும். வியாழன் மாலை அலுவலகம் முடிந்து வரும்போதே கையில் கருப்பு பிளாஸ்டிக் பைக்குள் பாட்டில்கள் சிரிக்கும். என்ன பாட்டிலோ வந்தாச்சா என்றால் வீக் எண்டுல்ல... பின்னே குடிக்காம என ஆரம்பித்தால் வெள்ளியும் தொடரும்... சிலருக்கு சனிக்கிழமை வேறு விடுமுறை கேட்கவா வேண்டும்... சனி இரவு வரை குடிக்க... சாப்பிட... தூங்க... என ரொம்ப சந்தோஷமாகவும் சின்சியராகவும் ஏதோ கண்டிப்பாகச் செய்ய வேண்டிய வேலை என்பது போலவும் செய்வார்கள். இதில் கூட்டணிகள் வேறு... பெரும்பாலான கூட்டணிகள் ஆரம்பிக்கும் போது சந்தோஷமாகவும் முடியும் போது அவர்களுக்கு என்னென்ன வெளியே தெரியாத பிரச்சினைகள் இருக்கோ எல்லாத்தையும் கடை விரித்து அடிதடியுடனும் முடியும். ஆனால் மறுநாள் காலையில் மாப்ள, மச்சான்னு மறுபடியும் குலதெய்வத்தைக் கும்பிட ஆரம்பிச்சிருவானுங்க.

மலையாளிகள் எல்லாருமே மொடாக் குடிகாரர்கள்தான். ஆனால் எத்தனை பாட்டில்களை முழுங்கினாலும் ஆட்டம் போட மாட்டார்கள். நம்மவர்களுக்கு ஒரு பெக் பொயிட்டாலே இல்லாத இங்கிலீசும் அடுத்தவனோட அந்தரங்கமும் பொதுக்குன்னு குதிச்சிரும். அந்த இடத்துல நாந்தான்டா ஹீரோன்னு வளவளன்னு பேசிக்கிட்டு, ஆட்டம் போட்டுக்கிட்டு சண்டைக்கு குதிச்சிக்கிட்டு... ஸ்... அப்பா... இடத்தையே ரணகளமாக்கிடுவானுங்க... இப்படி ஆளுகளை நான் இருந்த அறைகளில் சந்திச்சிருக்கேன். ஆங்கிலமே பேச வராத ஒருவர் தண்ணி அடித்தால் ஆங்கிலத்தில் மட்டுமே பேசுவார். இன்னொருத்தரோ நான் ஸ்டெடியா இருக்கேன்னு எந்திரிச்சி நடக்கும் போது ரொம்ப ஸ்டெடியாவே புதுசா கார் பழகுறவன் வண்டி ஓட்டுறமாதிரி நடப்பார். ஒருத்தருக்கு குடிச்சிக்கிட்டே இருக்கணும். இப்படி நிறைய கதாபாத்திரங்களைச் சந்தித்து இருக்கிறேன்.

இங்கே நான் சொல்லியிருந்த மலையாளியைப் பற்றிச் சொல்ல வேண்டும்.... காலையில் வேலைக்குச் செல்பவர் மதியம் மூணு மணிக்கு அறைக்குத் திரும்புகிறார். ஏதோ அவசரமான வேலை என்பது போல அறக்கப்பறக்க வருபவர், வந்ததும் வராததுமாக பாட்டிலை எடுத்து இரண்டு மூன்று பெக் அடித்து டிவி பார்த்து முடிக்கும்போது நாலரைக்கு மேலாகும். அதன் பின் மதியச் சாப்பாடு  சாப்பிடப் போகிறார். வந்து ஒரு உறக்கம்... ஏழு மணிக்கு எழுந்து முகம் கழுவி தலை சீவி மீண்டும் பாட்டிலுடன் பந்தம் பத்தாததுக்கு வெளியில் இருந்து ஒருத்தர் வேறு வந்துவிடுகிறார். அப்புறம் என்ன குடிமகனே... மொடாக் குடிமகனேதான்.. இரவு பத்துமணிக்குச் சாப்பிடச் செல்கிறார். வந்ததும் டிவியில் படம்... இரவு பனிரெண்டு மணி வரைக்கும் யாரையும் தூங்க விடுவதில்லை. 


இதில் என்ன உனக்குப் பிரச்சினை என்று நீங்க கேட்கலாம்... பிரச்சினை எனக்கில்லை... மற்றொரு அண்ணனுக்கு... அவருக்கு பகலெல்லாம் அலையும் பணி, மாலை 7 மணிக்குத்தான் வருவார். வந்ததும் குளித்து சாப்பிட்டு கொஞ்ச நேரம் டிவி பார்த்துவிட்டு 10 மணிக்குள்ளாக படுத்துவிடுவார். தண்ணிப் பார்ட்டி ஊருக்குப் போயிருந்த போது 10 மணிக்கு முன்ன லைட்டெல்லாம் அணைத்துவிட்டு உறங்கியவர், நேற்றிரவெல்லாம் எதுவும் சொல்ல முடியாமல் கிச்சனில் போட்டிருக்கும் சேரில் போய் படுத்துவிட்டார். 

இன்று காலை என்னிடம் நீ எப்ப அபுதாபி போவேன்னு கேட்டார். ஏண்ணா... என்னாச்சு... இந்த மாசம் இங்க வேலை முடியும் என்றதும் நானும் அடுத்த மாசத்துல இருந்து வேற ரூம் போறேன். இந்தாளு கூட இருக்கமுடியாது. உறங்க விடாம வெள்ளம் (தண்ணி) அடிச்சிட்டு குறைய (அதிக) நேரம் டிவியும் பின்ன லைட்டும் இட்டுட்டு நமக்கு நிம்மதி வேணாமா..? அதை யோசிக்கிது இல்லை... அவரு உச்சிக்கு (மதியம்) வந்துட்டு கிடக்கும் (உறங்கும்) நாம பகலெல்லாம் அலைஞ்சிட்டு கொஞ்ச நேரமாச்சும் கிடக்க வேண்டாமா என்று புலம்பினார்.  உண்மைதானே... இவர் தண்ணி அடித்து ஆட்டம் போடுவதால் பகலெல்லாம் வெளியில் வெயிலில் அலைந்து வரும் மனிதனுக்கு கோபம் வரத்தானே செய்யும். எத்தனை முறைதான் சொல்லுவார்.

வீட்டுக்கு ஒரே பையன் கல்யாணமாகி ஆறே மாதத்தில் குடியால் இறந்தான். அதுவும் நாங்கள் தங்கியிருந்த பிளாட்டில் பக்கத்து அறையில் இருந்த சென்னைப் பையன் அவன், இது குறித்து ஒரு பதிவில் சொல்லியிருந்தேன். நைட் கிளப்புகளில் போய் குடித்து அங்கு டான்ஸ் ஆடும் பெண்களுக்கு காசு மாலை அணிவித்து ஆட்டம் போட கிரிடிட் கார்டுகளில் அளவுக்கு அதிகமாக பணம் வாங்கி கட்ட முடியாமல் சிறைக்குப் போய், பார்த்த நல்ல வேலையும் போயி.. இப்போ ஊரில் கிடைத்த வேலை பார்த்துக் கொண்டிருக்கிறான் செத்தவனின் நண்பனான மற்றொரு தமிழன். தண்ணியே தெய்வம் என்றிருந்த திருமணம் ஆகாத ஒருவன், சொந்தக்காரி என ஒருத்தியை குழந்தையுடன் கூட்டி வந்து வேலை வாங்கிக் கொடுத்து இப்போ அவளுடன் குடியும் குடித்தனமுமாக இருக்கிறான். குடித்துவிட்டு நடந்த தகராறில் மேலே இருந்து தள்ளிவிடப்பட்டு கொல்லப்பட்ட எங்க மாவட்டக்காரரின் உடலை ஊருக்கு அனுப்ப எத்தனைநாள் சிரமப்பட்டிருக்கிறார்கள் எனது உறவுகள் என்பதை நேரில் பார்த்திருக்கிறேன்... அப்பா சம்பாதிக்கிறார் நாம் படித்து பெரியாளாவோம் என கல்லூரியில் படிக்கும் மகன் இப்போ குடும்பப்பாரம் சுமக்கிறான். இப்படி நிறையப் பேரைச் சந்திச்சாச்சு.


எதுக்கு இப்படி விழுந்து விழுந்து குடிக்கிறீங்க எனச் சத்தம் போட்டால் வாரமெல்லாமா குடிக்கிறேன் விடுமுறை நாளில்தானே என்று சப்பைக் கட்டுகிறார்கள். வாரமெல்லாம் குடிப்பவன் ஒன்றிரண்டு பெக்கோடு நிறுத்திக் கொள்கிறான். ஆனால் வார இறுதியில் குடிப்பவர்கள் விடுமுறை என்பது குடிக்க மட்டுமே என்பது போல் லிட்டர் கணக்கில் அல்லவா ஊற்றுகிறார்கள். இது வாரத்துக் குடியை விட அதிகமில்லையா? வெளிநாட்டு வாழ்க்கையில் பெரும்பாலும் குடியே பிரதானமாகிவிட்டது. இங்கே பிரிவுத் துயரில் வாழ்பவர்கள்... வாடுபவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். குடும்பம் அருகில் இல்லாதது குடிக்கக் கிடைத்த சந்தோஷமான வாழ்க்கை என்றே வாழ்பவர்கள் அதிகம். குடி குடியைக் கெடுக்கும் என்பதை அறியாதவர்கள் இல்லை இவர்கள் இருந்தும் சந்தோஷமாக அனுபவிக்கிறார்களாம். இது போன்ற குடிமகன்கள் நிலை அறிந்து அவர்களாகத் திருந்தினால்தான் உண்டு. அதுவரை இப்படிப் புலம்பிக் கட்டுரை போட வேண்டியதுதான் வேறென்ன செய்ய முடியும் பாட்டில்களுக்கு மத்தியில் படுத்திருக்கும் இவர்களை...

-'பரிவை' சே.குமார்.