மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வெள்ளி, 11 நவம்பர், 2016

கிராமத்து நினைவுகள் : நினைவில் மாடு

Image result for மாடுகள்

ண்ணீருக்குள் சிக்கிக் கொண்டு வெளியில் வர முடியாத மாடு ஒன்றை மீட்புக் குழுவினர் வெளியில் எடுக்கும் வீடியோ ஒன்று பார்த்தேன். அதைப் பார்த்ததும் நம்ம வீட்டில் மாடு வளர்த்தது... கோழி வளர்த்தது... நாய் வளர்த்தது... ஆடு வளர்த்தது... கிளி வளர்த்தது... மைனா வளர்த்தது... புறா வளர்த்தது... என வளர்த்தது எல்லாம் ஞாபகத்தில் வந்தது. அதெல்லாம் எப்படி மறக்க முடியும்...?

எங்க வீட்டில் ஆரம்ப காலத்தில் எருமை மாடுதான்... எங்க பிச்சைக்குட்டி வாத்தியார்.... ஏராம்மாடு... எராம்மாடுன்னுதான் திட்டுவாரு... எருமை மாடுன்னு  திட்டமாட்டாரு... எங்க ஊருல பெரும்பாலான வீட்டில் எருமை மாடுதான் வளர்த்தாங்க... வயல் வேலைகளுக்காக காளை மாடு வீட்டுக்கு ஒரு ஜோடி கிடக்கும்... கூட்டு வண்டி, மொட்டை வண்டி ஊரில் சிலரின் வீட்டில் இருந்தது. எருமை மாடெல்லாம் நாம பொறக்கும் போது வீட்டில் இருந்தன... அதுவும் எங்க வீட்டில் பிறந்து வளர்ந்த மாடு... நரை எருமை... இவுகதான் தலைவர்... அவருக்குப் பின்னே அவரின் மகள்கள்... பேத்திகள்... வாரிசாய்... மனிதர்கள் பெண் குழந்தை வேண்டாம் என்று சொல்லி ஆஸ்திக்கு மட்டும் போதும்ன்னு முடிவெடுத்து இப்போ பொண்ணு கிடைக்காம அலையிற நிலை ஆயிப்போச்சு,,, ஆனா மாடுகளில் பெண் மாட்டுக்கு மட்டுமே மவுசு... ஆண் என்றால் ஒரு குறிப்பிட்ட வயதில் விற்றுவிடுவதுண்டு... அப்படித்தான் ஆண்  வாரிசுகள் விற்கப்பட பெண் வாரிசுகள் கோலோச்சினார்கள்.

அப்புறம் விவசாய காலத்தில் எருமை மாடுகளை பார்ப்பதில் சிரமம் இருக்கு என்று... ஆமாம் காணாமல் போனால் வீடு திரும்ப நாலைந்து நாளாகும்... தேடித்தேடி அலைந்து முள்குத்தி... எப்படிக் கஷ்டப்பட்டுட்டு வந்தாலும் எங்கம்மா ஒரு மாடு பாத்துக்க முடியலைன்னு வெளுத்துக் கட்டிரும்... அதுக்காக வெளக்கெண்ணெய் விட்டுக்கிட்டு மாடு மேய்ச்சாலும் சில நேரங்கள் காணாமல் போவது சகஜம்தானே... அதுவும் ரெண்டு மூணு பேருவிட்டு மாடு காணாமல் பொயிட்டா சேர்ந்து தேடலாம்ல்ல... சரி எருமை மாடுகள் வேண்டான்னுட்டு எல்லாத்தையும் வித்துட்டு... எங்க வெள்ளச்சி மொதக்கொண்டு எல்லாம் விற்றப்போ எல்லோரும் அழுகை... அது ஒரு கதை... சரி விடுங்க... அப்புறம் பசு மாடு வாங்கி... கடைகளுக்கு பால் கொடுத்து வந்தோம். அப்புறம் அம்மா வீடுகளுக்கு பால் ஊத்த ஆரம்பித்தார்கள். அப்புறம் வீட்டில் பசுமாடுகள்தான்.... இப்ப எதுவும் இல்லை... மாட்டுக்கசாலை... மாட்டுத் தொட்டி (குலுதாலி)... வைக்கோல் படப்பு... எல்லாம் வெறுமையாய்...

அதுவும் மாடு கன்று போட்டதும்... அந்தக் கன்னுக்குட்டியை வீட்டுக்குள் சாக்குப் போட்டு கட்டி வைத்து அதை கட்டிப் பிடித்துக் கொண்டு விளையாண்ட நாட்களை மறக்க முடியுமா என்ன..? தினமும் காலையில் கன்றுக்குட்டியை குளியாட்டி மஞ்சள் வைத்து... பொட்டு வைத்து... வீட்டில் கட்டி வைப்பதற்குள் அது கயிற்றை நம்மிடம் இருந்து பறித்துக் கொண்டு துள்ளிக் குதித்து விளையாடும் அழகே அழகுதான்...

இப்ப இதை எதுக்கு எழுத ஆரம்பித்தேன்னா... சில நேரங்களில் பசு மாட்டுக்கு உடம்பு முடியாமல் வந்து எழ முடியாது தவிக்கும்... ஊசி போட்டு... வாழைப்பழத்தில் மாத்திரை வைத்துக் கொடுத்து...  நாக்கைப் பிடித்து வெளியில் இழுத்து மருந்து ஊற்றி... எல்லாம் செய்தும் எழ முடியாமல் தவிக்கும்... அப்போ நாலைந்து பேர் இருபுறமும் நின்று மாட்டின் வயிற்றுப் பகுதியில் உலக்கை போட்டு மெல்லத் தூக்கி நிறுத்தி கொஞ்ச நேரம் பிடித்து வைத்திருக்க மீண்டும் கீழே விழுந்து விடும்... பார்க்க பரிதாபமாக இருக்கும்... சில மாடுகள் அதிலிருந்து மீண்டு எழுந்து விட்டாலும் பல மாடுகள் மரணத்தைத்தான் தழுவும்... பின்னர் நாலு காலையும் கட்டி... இடையில் கம்பு சொருகி, தூக்கிக் கொண்டு போய் குழி தோண்டிப் புதைத்து விடுவார்கள்... அப்படி இல்லாமல் சாக்கடைத் தண்ணீருக்குள் மாட்டி வெளியில் வர முடியாமல் நின்ற மாட்டை கயிறு கட்டி அந்த தாழ்வான பகுதிக்குள் இறங்கி கிரேன் மூலமாக அந்த வீடியோ பார்க்கும் ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. 

மாடுகளும் ஆடுகளும் கோழிகளும் விளையாண்ட எங்க வீட்டில் இப்போ கால மாற்றத்தில் எதுவும் இல்லை... எல்லாம் போயாச்சு... நாங்கள் பிறந்து வளர்ந்த வீடும் இடிச்சாச்சு... இப்போ அந்த வீட்டின் பின்னே இருந்த கசாலை மட்டுமே உயிர்ப்போடு... எங்க விஷாலுக்கு ஆடு, மாடு, கோழி மீது அலாதிப் பிரியம்... அவனுக்காகவே எங்க வீட்டில் இப்போ கோழி வளர்க்கிறோம்... டவுனுக்குள்ள எதுக்கு கோழி வளக்குறீங்க...? போர்டிகோ, மாடிப்படி எல்லாம் நாசம் பண்ணி வைக்கிது பாருங்க... என உறவுகள் எல்லாம் சொன்னாலும்... பள்ளி விட்டு வந்ததும் செவலக்கோழி முட்டை இட்டுச்சா... எடுத்து வச்சீங்களா... எங்கே சேவலைக் காணோம் என அவன் கேட்டு இரவு கோழிகளை அடைத்துவிட்டு வருவதில் அவனுக்கு இருக்கும் சந்தோஷத்துக்காகவே எங்கள் வீட்டில் கோழிகள் வாசம் செய்கின்றன.

-'பரிவை' சே.குமார், 

திங்கள், 7 நவம்பர், 2016

கமல் என்னும் கலைஞன்

இன்று  ஒளிச் சிதறல் ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு பெற்ற நம் தமிழக் இயற்பியல் விஞ்ஞானி  சந்திர சேகர வெங்கட் ராமன்... அதாங்க நம்ம சர்.சி.வி ராமன் அவர்களின் பிறந்த நாள்... இந்நாளில் அவரை நாம் மனதில் நிறுத்துவோம்.

*****


Image result for கமல்

கமல்...

இன்று தமிழ்த் திரையுலகம் மட்டுமின்றி இந்தியத் திரையுலகமே உலகளவில் உயர்ந்து நிற்கக் காரணமானவர்களில் முக்கியமானவர். படத்துக்குப் படம் தன்னை வித்தியாசமான கதாபாத்திரத்தில் முன்னிறுத்தும் நடிப்பை நேசிக்கும் நடிகர்களில் முதன்மையானவர். களத்தூர் கண்ணம்மாவில் 'அம்மாவும் நீயே... அப்பாவும் நீயே...' என்று பாடி... சினிமாவை அம்மா... அப்பாவாகப் பாவித்து படத்துக்குப் படம் விஸ்வரூபம் எடுத்தவர். 

கமல்... என்னை மிகவும் கவர்ந்த சொல்... படிக்கும் காலத்தில் கமலின் மீது தீராக் காதல்.... கமலின் ரசிகனாய்... விசிலடிச்சான் குஞ்சாய்... பாலாபிஷேகம் பண்ணும் அளவுக்கு எல்லாம் இருக்கவில்லை என்றாலும் கமலின் படங்களை கட் பண்ணி வைத்து, கமல் படம் போட்ட பொங்கல் வாழ்த்துக்களை வாங்கி யாருக்கும் அனுப்பாமல் பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ளும் அளவுக்கு அவர் மீது... அவரின் நடிப்பு மீது காதல்... கமலை மட்டும் காதலிக்கவில்லை.... இளையராஜா... பாலசந்தர்... பாலு மகேந்திரா... பாரதிராஜா... என நிறையப் பேரைக் காதலித்திருக்கிறேன்.

கமலை விரும்பியது போல் அதீத விருப்பம் இயக்குநர் பாக்யராஜ் மீது... அவரின் கதைகளுக்காகவும் இறுதிக் காட்சியில் வைக்கும் டுவிஸ்ட்டுகளுக்காகவுமே எல்லாப் படங்களையும் விரும்பிப் பார்ப்பதுண்டு.... சுந்தர காண்டம் இன்று வரை அடிக்கடி பார்க்கும் படம்... தூறல் நின்னு போச்சு படம் பார்த்த அடுத்த நாள் பள்ளியில் கை ஓடிய, கட்டுக் கட்ட குன்றக்குடி செல்ல,  8.30 மணிக்கு கண்டதேவிக்கு வரும் கே.எஸ்.எஸ். பஸ்ஸிற்கு கிளம்பும் சமயத்தில் 'ஏரிக்கரை பூங்காற்றே...' என ரேடியோவில் பாட்டுப் போட. அம்மா நீ போ பின்னால வாறேன் என்று சொல்லி பாடல் கேட்டு திட்டு வாங்கியதெல்லாம் இன்னும் பசுமையாய்...

இவர்கள் மீது எவ்வளவு காதலோ அந்தளவு டவுசர் என்று செல்லமாக அழைக்கப்பட்ட ராமராஜன் மீதும்... எனக்கென்னவோ கிராமத்துக் கதைக்களத்தில் மாமன் மச்சான் உறவை மிக அழகாக கொடுத்தவர் இராமராஜன் என்ற எண்ணம் அப்போதும் இப்போதும் உண்டு. அவரின் படங்களில் சிகரெட், தண்ணி இருக்காது... அது போக அவர் படங்கள் கவர் முக்கிய காரணம் ராஜாவின் பாடல்கள்... ஆஹா... என்ன ஒரு பாடல்கள் அவை. இன்றும் என்னிடம் ராஜாக்களின் காம்பினேசன் பாடல்கள் ஒரு தொகுப்பே இருக்கு. இதே போல் கார்த்திக், மோகன் படங்கள் பாடல்களுக்காகவே பிடிக்கும் 'என்னைத் தொட்டு அள்ளிக் கொண்ட மன்னன் பேரும் என்னடி' பாடலை அல்பாயுசுல மறைந்து போன மோனிஷாவின் துள்ளல் நடனத்துடன் இன்றும் ரசித்துக் கொண்டிருக்கிறேன்... சின்ன வயசுல இருந்து இப்ப வரைக்கும் நானொரு சினிமாப் பைத்தியம்... 90-களின் பாடல்கள் மீது அலாதி பிரியம்... நிறையப் பாடல்கள் வைத்திருக்கிறேன்.

மூன்றாம் பிறை படத்தில் பிரதாப் போத்தனைத்தான் நடிக்க வைக்க மணிரத்தினம் முயற்சி செய்தார் என முகநூலில் வாசித்தேன். யோசித்துப் பாருங்கள் அப்படி பிரதாப் போத்தான் சுப்பிரமணி ஆகியிருந்தால் 'கண்ணே கலைமானே...' என்ற கண்ணதாசனின் கடைசிப் பாடல் இருந்திருக்குமா...? அது இருந்திருந்தாலும் சில்க் ஸ்மிதாவுடனா ' பொன்மேனி உருகுதே...' பாடல் கண்டிப்பாக இருந்திருக்காது... என்ன ஒரு நடனம் அது... கதைக்காகவோ... ஸ்ரீதேவிக்காகவோ படம் வெற்றி பெற்றிருக்கும் என்றெல்லாம் யாருக்காவது தோணுமா...? அதில் கமல் என்னும் பிம்பம் இணைந்ததே வெற்றிக்கான காரணி.... இறுதிக் காட்சியில் இரயில் நிலையத்தில் அவர் நடித்திருப்பதை நாம் அவ்வளவு சீக்கிரத்தில் மறந்துவிடுவோமா?

ஒன்றா இரண்டா... எல்லாப் படங்களும் ஏதோ ஒரு விதத்தில் வித்தியாசமான படங்கள்தான்... படத்துக்குப் படம் வித்தியாசம் காட்டி நடிக்க அடித்தளம் இட்டது பதினாறு வயதினிலே சப்பாணியின் கோவணம்தானே... அவருக்கு பாலசந்தர் வாய்ப்புக்களை அள்ளி வழங்கினார் என்றாலும் திறமை இருந்த ஒரு காரணத்தால்தானே, படத்துக்கு படம் நடிப்பில் வித்தியாசம் காட்டி... உருவத்தில் வித்தியாசம் காட்டி... நடிக்கத் தெரிந்த நடிகன் என்பதால்தானே வாய்ப்புக் கொடுத்தார். ரஜினியும் கமலும் என் குழந்தைகள் என்று அவர் சொல்லக் காரணம் அவர்கள் மீது கொண்ட அன்பினால் மட்டுமல்ல... அவர்கள் நடிக்கத் தெரிந்தவர்கள் என்று நம்பிக்கை கொண்டு படங்களை இயக்கி வெற்றி பெற்றதால்தானே. ரஜினி என்னும் நல்ல நடிகனை நாம் முள்ளும் மலரும், எங்கேயோ கேட்ட குரல், ஆறிலிருந்து அறுபது வரை, புவனா ஒரு கேள்விக்குறி என நிறையப் படங்களில் பார்த்திருப்போம். அவரை ஸ்டைல் என்ற வட்டத்துக்குள் கொண்டு வந்து கல்லாக் கட்டிய இயக்குநர்களால்தான் அவரின் நடிப்பு காணாமல் போனது என்பது உண்மைதானே... கபாலியில் பழைய ரஜினியைப் பார்த்தோம்... ஆனால் அதில் மற்ற விஷயங்களைச் சேர்த்து வேறு மாதிரி ஆக்கிவிட்டார்கள். ரஜினி கூட கமலின் இடத்தை என்னால் தொட முடியாது என்று சொல்லியிருக்கிறார். இது நட்பின் தன்னடக்கம்.

குருதிப் புனலில் கதை சொன்ன விதம்... ஹேராமில் கதை சொன்ன விதம்... மகாநதி... குணா... புன்னகை மன்னன்... சிற்பிக்குள் முத்து... சலங்கை ஒலி... வாழ்வேமாயம்... என வரிசையாகச் சொல்லிக் கொண்டே போகலாம் அவரின் நடிப்புக்கு தீனி போட்ட படங்களை... இதற்கெல்லாம் மகுடமாய் (சண்டியர் என்ற) விருமாண்டி... இரு விதமான பார்வையில் கதையை எவ்வளவு அழகாகச் சொல்லியிருப்பார். ஒரு கலைஞனாய்... நல்ல நடிகனாய் இன்று வரை நான் ரசிப்பது கமலை என்பதால்தானோ என்னவோ தனுஷ் மீதும் ஒரு பற்றுதல்... எல்லோரும் சிவகார்த்திகேயனைக் கொண்டாட எனக்குப் பிடித்தவராய் விஜய் சேதுபதி... நடிப்பால் கவர்பவர்கள் மட்டுமே என்னையும் கவர்கிறார்கள்... ஆனால் அஜீத் இதில் விதிவிலக்கு... நல்ல மனிதனாய் கவர்ந்துவிட்டார்.

வாணி..  சரிகா... கவுதமி... இன்னும் வெளியில் தெரியாமல் எத்தனையோ என்று சிலர் கருத்துக்களோடு வரலாம்... கமல் என்னும் நடிகனைத்தான் ரசித்தேனே ஒழிய கமல் என்னும் மனிதனின் வாழ்க்கை முறை எனக்குத் தேவையில்லை... அது குறித்து கருத்துக்கள் வேண்டாம்... வாழ்க்கையில் அவர் தவறு செய்திருக்கலாம்... இனியும் செய்யலாம்... என்னைப் போல் நீயும் வாழ் என்று யாருக்கும் சொல்லவில்லை... எனக்குத் தெரிஞ்ச ஒருத்தருக்கு மூணு குடும்பம் இருக்கு... இதெல்லாம் வெளியில் தெரிவதில்லைதானே... மீடியா வெளிச்சம் படுபவர்களின் வாழ்க்கை மட்டுமே வெளிச்சத்திற்கு வருகிறது. அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை நமக்குத் தேவையில்லை... நல்ல நடிகனாய் எனக்குப் பிடிக்கும்... ஆனாலும் இனிமேலாவது கமல் யோசிக்க வேண்டும் என்றே தோன்றுகிறது. மூன்று பேரும் பிரிந்து செல்லக் காரணம் கமலின் பக்கம்தான் இருக்கிறது என்பதும் தெரிகிறது. என்ன இருந்தாலும் தன் மகளுக்காக என கவுதமி சொல்லியிருக்கத் தேவையில்லை... பதிமூணு வருசத்துக்கு முன்னர் மகள் இருப்பது தெரியவில்லையா..? வேறு காரணம் சொல்லியிருக்கலாம்... ம்ம்ம்ம்.... சரி விடுங்க... நடிகனாய் எனக்கு கமல் பிடிக்கும் அவ்வளவே.

எந்த நடிகருடைய தனிப்பட்ட வாழ்க்கையையும் நாம் பார்ப்பது கிடையாது. நம்மை எல்லாம் சிரிக்க வைத்த ஆயிரம் படங்களில் நடித்த மனோரமா அவர்களை கடவுள் வாழ்க்கையில் சிரிக்கவே விடவில்லை... எத்தனை துன்பத்தைக் கொடுத்தான் தெரியுமா என சிவக்குமார் அவர்கள் அடுக்கிக் கொண்டே போகும் காணொளியைப் பார்க்க நேர்ந்தது. என்னை அறியாமல் கண்ணீர் வந்தது... அவரின் தனிப்பட்ட வாழ்க்கையை நாம் யாரேனும் அறிந்திருப்போமா...? நம்மைச் சிரிக்க வைக்கும் கோவை சரளா திருமணமே செய்து கொள்ளவில்லை என்பது தெரிந்து அதை நாம் ஆராய்ந்தோமா..? அதேபோல் கமலின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி நாம் ஆராய வேண்டாம்... நம் தமிழ் சினிமாவை உயரத்தில் ஏற்றி வைத்து 'செவாலியே'வாக உயர்ந்து நிற்கும் கமலை ஒரு கலைஞனாய் வாழ்த்துவோம்...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கமல் ஜி.

*****
வாரியார் சுவாமிகளையும் நினைவில் நிறுத்துவோம்...


-'பரிவை' சே.குமார்.

சனி, 5 நவம்பர், 2016

சொல்லச் சொல்ல இனிக்குதடா..!

Image result for முருகன்

முருகன்...

என்னமோ தெரியலைங்க... முருகன் மேல் அத்தனை பற்றுதல்...

சின்ன வயதில் இருந்தே அவன் மீது தீராத காதல்... அவன் அழகன் என்பதாலா...? அல்லது தமிழ்க்கடவுள் என்பதாலா..? அதுவும் இல்லை என்றால் அந்த சிரித்த முகத்திற்காகவா...? என்பதெல்லாம் தெரியவில்லை ஏனோ அவன் மீது தீராத காதல்... சஷ்டியை நோக்க சரவணபவனார் எங்க போட்டாலும் நம்ம வாயும் சேர்ந்து பாட ஆரம்பிச்சிரும்.

சாமி இல்லை என்று சொல்லும் நண்பர்களுடன் பழகியிருக்கிறேன்... அது அவர்கள் விருப்பம்... நம் விருப்பத்தை அவர்கள் மீது திணிக்கவோ அல்லது அவர்கள் விருப்பதை நம் மீது திணிக்கவோ நான் எப்போதும் விருப்பப்பட்டதுமில்லை... விரும்புவதுமில்லை... விருப்பமும் வெறுப்பும் அவரவர் எண்ணத்தைப் பொறுத்தது. சாமி கும்பிடுறவனைவிட சாமி கும்பிடாதவன் நல்லாத்தான் இருக்கிறான் என்று நண்பர்கள் சொல்வார்கள். இருக்கட்டும்... அது சந்தோஷம்தான்.... கல்லூரியில் படிக்கும் போது செல்லும் வழியில் இருக்கும் புவனேஸ்வரி அம்மன் கோவிலில் நாங்கள் சாமி கும்பிட எங்கள் நண்பன் சூசைமாணிக்கமும் திருநீறு இட்டுக் கொள்வான். நானும் முருகனும் வாரம் ஒருமுறை சர்ச்சில் மெழுகுவர்த்தி ஏற்றி வணங்கத் தவறுவதில்லை. மதம், ஜாதி எல்லாம் நம்மை சுற்றி இடப்பட்ட வட்டமே... நானெல்லாம் எப்போதும் அந்த வட்டத்துக்குள் நின்றதில்லை... மதத்தை மனசுக்குள் கொண்டு செல்லாததே நிறைய உறவுகளைப் பெறக் காரணமாக இருந்தது.

எனக்கு சின்ன வயதில் இருந்தே சாமி மீது அதிக பற்றுதல்... எங்க ஊர்த் தெய்வங்களான மாரியம்மன், கருப்பர், முனியய்யா, நாச்சியம்மன், ஐயனார், எங்கள் வீட்டுச் சாமியான உமையவள் போன்றவற்றின் மீது இருக்கும் பற்றுதலை விட முருகன் மீது கூடுதல் பற்றுதல்... இப்ப எங்க மாரியம்மன் கோவிலுக்குள் முருகனுக்கும் பிள்ளையாருக்கும் சந்நதி கொண்டு வந்தாச்சு. ஊருக்கு வருடாவருடம் கோவில் திருவிழாக்கு சென்று திருவிழா சமயத்தில் கோவில் வேலை செய்வதில் அவ்வளவு சந்தோஷம். எங்கள் ஊர் முனியய்யா எனது குடும்பத்தைக் காக்கும் தெய்வமாக நிற்பதாக கருப்பர் சாமி ஆடும் என் நண்பன் முதல் வீட்டிற்கு வரும் பெரியவர் வரை சொல்லியிருக்கிறார்கள். எனக்கும் முருகன் மீது இருக்கும் காதல் முனியய்யா மீதும் உண்டு.

முருகன் மீது கொண்ட காதலால் ஐயப்பன் மீது அவ்வளவு பற்றுதல் ஏற்படவில்லை... எல்லாரும் கார்த்திகை மாசத்தில் ஐயப்பன் பாடல் கேட்டால் நான் முருகன் பாடல் கேட்பேன். முருகன்... முருகன்..  என அவனை மனசுக்குள் நிறுத்தி வைத்ததல் ஐயப்பனை வெளியில் வைத்திருந்தேன் என்றாலும் முதல் முறை சபரிமலைக்குச் சென்று பதினெட்டுப்படி ஏறி ஐயனைத் தரிசித்து ஐந்து மலை அழகில் மயங்கி 'ஹரிவராசனம் விஸ்வமோகனம்' என்னும் யேசுதாஸின் குரலில் லயித்து மலை உச்சில் சாரல் பெய்து கொண்டிருக்க பஸ்மக் குளத்தில் நாலைந்து முறை நீராடி ஒரு நாள் தங்கி படிபூஜை பார்த்து... ஐயனை நினைத்த நேரத்தில் எல்லாம் சந்தித்து ஆனந்தமடைந்தது முதல் ஐயப்பன் பித்துப் பிடித்து நான்கு வருடங்கள் தொடர்ந்து மலைக்குச் சென்று வந்தது தனிக்கதை... இப்ப முருகனோடு பயணிப்போம்.

சின்ன வயதில் அப்பா உள்ளிட்ட உறவுகள் பழனிக்கு பாதயாத்திரை போவார்கள்... கிட்டத்தட்ட 20, 30 பேர் போவதால் மாரியம்மன் கோவில் அருகில் கொட்டகை போட்டு அதில் விரத காலத்தில் தங்குவார்கள். தினமும் பஜனை... சுண்டல், பொங்கல் விநியோகம் என அமர்க்களப்படும். தேவகோட்டையில் இருந்து பழனிக்கு ஏழு நாள் நடை... தைப்பூசத்துக்கு ஒரு வாரம் இருக்க நடக்க ஆரம்பிப்பார்கள்... அதிகாலையிலேயே 'அரோகரா...' போட்டுக் கிளம்பிடுவாங்க... அன்று பத்து மணிக்கு மேல் தேவகோட்டை நகரத்தார் காவடி பழனி நோக்கிப் புறப்படும்... பழனியில் நகரத்தார் காவடிக்கு மிகச் சிறப்பான மரியாதை கொடுக்கப்படும். முதல் நாள் நடை குன்றக்குடி வரை... ஊரில் இருந்து நிறையப் பேர் குன்றக்குடி வரை போய்த் திரும்புவார்கள். தேவகோட்டை முதல் குன்றக்குடி வரை ரொட்டி, மிட்டாய், புளியோதரை, பொங்கல், லட்டு என நிறைய விநியோகம் இருக்கும். மஞ்சள் பை கொண்டு போய் நிரப்பிக் கொண்டு வருவார்கள்.

கல்லூரியில் படிக்கும் போது எங்க சித்தப்பாவையும், இளையர் ஐயாவையும் நச்சரித்து நாங்க ஏழு பேர் பழனிக்கு நடைப்பயணம் கிளம்பியாச்சு... காலை 2 மணிக்கு மேல் எழுந்து நடக்க ஆரம்பித்தால் காலில் சூடு ஏறும் வரை... அதாவது 11 மணி வரை நடை பின்னர் சாப்பாடு... நிழலில் படுக்கை... பெரும்பாலும் எதாவது வீட்டு வேப்பமரம் இல்லையேல் கோவில்... மதியம் 3 மணிக்கு மேல் எழுந்து மெல்ல நடக்க ஆரம்பித்து 10 மணி வரை நடை... இப்படி நடந்து ஏழு நாள் நடையில் அடையும் பழனியை ஐந்தாம் நாள் காலை அடைந்து மடத்தில் இடம் பிடித்து சாமான்களை வைத்து விட்டு மீண்டும் சண்முகநதி நோக்கி நடை... அங்கு மொட்டை போடுபவர்கள் போட, சண்முகநதியில் ஆனந்தக் குளியல்... பின்னர் மலையேறி முருகன் தரிசனம்... இரவு தங்கத் தேர் பவனியை ரசித்து... கேரளக் காவடிகளின் ஆட்டத்தையும் ரசித்து இரவோடு இரவாக பேருந்தில் ஏறி குன்றக்குடியில் இறங்கி அதிகாலை குன்றக்குடி சண்முகநாதனைத் தரிசித்து வீடு வந்து சேர்வோம். இது ஆறு வருடம் தொடர்ந்தது. எங்க அண்ணனும் பெரியப்பா மகனும் மச்சானும் நடைப்பயணமாய் போய் மூன்றாம் நாள் இரவு பழனியை அடைந்து சாமி கும்பிட்டு நான்காம் நாள் ஊருக்குத் திரும்பிட்டாங்க... மனுசனுங்க எப்படித்தான் நடந்தாங்களோ... இது இப்பவும் எங்க ஊர்ல ரெக்கார்டாக்கும். ஆனா மச்சான் அடுத்த வருடம் இவனுக கூட நான் போகலப்பா... படுத்தவுடனே எழுப்பிடுறானுங்க... நடக்க விட்டே கொன்னுட்டானுங்க என்று சொல்லி விட மூவர் கூட்டணி கரைந்தது. மச்சானும் மறைந்து விட்டார்.

ஆறு வருடங்கள் முருகனை நடை பயணமாகத் தரிசிச்சிட்டு வந்தவன் செட்டியார் குழுவில் இணைந்து ஒரு முறை திருப்பரங்குன்றம் நடைப் பயணமும் சென்று வந்தேன். அப்போதே முருகன் போட்டோ என்றால் உடனே கிழித்து பத்திரப்படுத்தி வைப்பேன்... இப்போதும் அது தொடருது... என்னோட செல்போனில் முருகன்தான்  அதிகம் சிரிச்சிக்கிட்டு இருக்கான்.

'அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்' என்ற பாட்டைக் கேட்டிருப்பீங்கதானே... நமக்கு அவன் மீது கொள்ளைப் பிரியம்... காலை முதல் இரவு வரை எதற்கெடுத்தாலும் 'ஸ்... அப்பா... முருகா... பழனி ஆண்டவா...' என்றுதான் வாயில் வரும்.  இதுக்கு அடுத்து வரும் வார்த்தைக்குத்தான் எல்லாரிடமும் திட்டு வாங்குவேன்... அது என்னன்னா 'ஸ்... அப்ப்ப்ப்பா... முருகா... பழனி ஆண்டவா... என்னைய மட்டும் காப்பாத்து' அப்படின்னு சொன்னதும் சுயநலவாதிம்பாங்க... இதுல என்ன சுயநலம் இருக்கு... பொதுநலமே ஊறிக்கிடக்கு.. முருகன் எல்லாரையும் ஒரே நேரத்துல காப்பாத்த முடியுமா என்ன... என்னைக் காப்பாத்தினா நான் நாலு பேருக்கு உதவுவேன்... அந்த நாலு பேரு நாப்பது பேருக்கு உதவுவாங்க... அந்த நாப்பது நானூறாகும்... நானூறு நாலாயிரமாகும்... இப்படியே போனா எல்லாரும் சுபிட்ஷமா இருப்போமா இல்லையா..? அப்ப நான் கேக்குறதுல என்ன தப்புங்கிறேன்... இது பத்தாப்பு படிக்கும் போதுல இருந்தே வருது... இந்தா எழுதும் போதே ரெண்டு தடவை வந்திருச்சு.... தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்ன்னு சொல்லியிருக்காங்கதானே... ஸ்... அப்பா ,முருகா... என்னை மட்டும் காப்பாத்து.

இப்ப கந்தர் சஷ்டி நடக்குது... தேவகோட்டை சிவன் கோவிலில் நகரத்தார்களால் கந்தர் சஷ்டி மிகச் சிறப்பாக நடைபெறும்... பெரிய பெரிய ஆட்களை எல்லாம் அழைத்து வந்து தினமும் நிகழ்ச்சி நடத்துவார்கள். இப்ப தினமும் இரவு எங்க கல்லூரிப் பேராசிரியர் பகிரும் படங்களையும் வீடியோக்களையும் பார்த்து சந்தோஷப்பட்டுக் கொள்கிறேன்.  சென்ற வருடம் திருச்செந்தூர் முருகனையும் தரிசிச்சாச்சு... பழமுதிர்ச் சோலை முருகனை வருடாவருடம் சந்திச்சிருவேன்... காரணம்... குலதெய்வம் அழகுமலையானைக் காணப் போகும்போது சுப்ரமணியனையும் பார்க்காமல் வரமுடியுமா என்ன...

இன்றைக்கு சூரசம்ஹாரம்... காலண்டரில் பார்த்ததும் ஏனோ முருகன் ஞாபகம் வந்தாச்சு... எப்பவுமே என்னை ஆட்கொள்பவன் அழகன் முருகன்தான்... நட்பில் நிறைய முருகன் பேர் இருப்பவர்கள் இருப்பார்கள்.

என்னை எழுத்தாளனாக்கிப் பார்த்து மகனாகப் பாவிக்கும் என் பேராசானின் பெயர் பழனி.

கல்லூரி முதல் இன்று வரை குடும்ப உறவாய் கலந்திருக்கும் என் நண்பனின் பெயர் முருகன்.

சரிங்க... முருகனைப் பற்றிப் பேசினால் நிறைய பேசலாம்....

'ஸ்... அப்பா... முருகா... பழனி ஆண்டவா... என்னை... சரி இன்னைக்கு ஒரு நாளைக்காச்சும் எல்லோரையும் காப்பாற்று...'

'அரோகரா...'


-'பரிவை' சே.குமார்.

வெள்ளி, 4 நவம்பர், 2016

நந்திபுரத்து நாயகி

ல்கியின் பொன்னியின் செல்வனில் வாழ்ந்த சோழ நாட்டு நட்சத்திரங்களை...  அதில் அவர் விட்ட இடத்தில் இருந்து ஆதித்த கரிகாலனைக் கொன்றவர்களுக்கு தண்டனை கிடைத்ததா..? வந்தியத்தேவன் - குந்தவை காதல் திருமணத்தில் முடிந்ததா..? அருண்மொழிவர்மன் ஆட்சிப் பீடத்தில் அமர்ந்தாரா..? என்பதை தன் பாணியில்  நந்திபுரத்து நாயகியில்  கதை சொல்லியிருக்கிறார் கலைமாமணி விக்கிரமன்.

Image result for நந்திபுரத்து நாயகி

கல்கியின் பொன்னியில் செல்வனில் பலரைக் கவர்ந்த வல்லவரையன் வந்தியத்தேவன்... துறுதுறுப்புக்கு பெயர் போன இளைஞன்... வேகமும் விவேகமும் கொண்டவன்... அதிபுத்திசாலி...  துடிப்பான இளைஞனாகப் பார்த்த வந்தியத்தேவனை உடையாரில் வயதானவனவராக, குந்தவையின் அன்புக் கணவராக,   இராஜராஜனுக்கு உறுதுணையாக இருப்பவராக பார்க்க முடியும்.  ஆனால் பொன்னியின் செல்வனில் வந்தியத்தேவன் குந்தவை திருமணம் குறித்து எதுவும் சொல்லியிருக்கமாட்டார் என்பதால் அப்போது வாசித்தவர்கள் இருவரும் இணைந்தார்களா... இல்லையா என்பதை அறிய ஆவலாய் இருந்திருப்பார்கள்.  அதை இளைய பிராட்டி குந்தவையை மையமாக வைத்து இந்த நாவலில் பூர்த்தி செய்திருக்கிறார் விக்கிரமன்.

சுந்தரச்சோழர் உடல் நலமில்லாத நிலையில்... ஆதித்த கரிகாலன் பாண்டிய ஆபத்துதவிகளால் கொல்லப்பட்ட பின் மதுராந்தகச் சோழருக்குத்தான் அரசுரிமை என்ற குரல்கள் ஓங்கிய நிலையில் அருண்மொழிவர்மன் தான் பட்டம் சூட்டிக் கொள்ளாமல் மதுராந்தகருக்கு (சேந்தன் அமுதன்) பட்டம் சூட்டி வைப்பதாக கல்கி சொல்லியிருப்பார். ஆதித்த கரிகாலன் கொலைச் சதியில் இந்த மதுராந்தகருக்கும் பழுவேட்டயர்களுக்கும் தொடர்பு உண்டு என்பதாகவும் பொன்னியின் செல்வன் சொல்லிச் செல்லும். ஆனால் சுந்தரச் சோழருக்குப் பிறகு அருண்மொழிவர்மன் ஆட்சிக்கு வர 12 ஆண்டுகள் ஆகும். அதுவரை ஆட்சிப் பீடத்தில் இருந்த மதுராந்தகர் பற்றி வரலாற்றுக் குறிப்பில் சரிவர இல்லை என்பதாலும் அந்தக் காலத்தில் சோழ சாம்ராஜ்யத்தில் எந்த குறையும் இல்லை என்பதாலும் மதுராந்தகர் நல்லவராகவே இருந்திருக்க வேண்டும் என்பதால் அவரை நல்ல மனிதராகவே காட்டியிருப்பதாக தனது முன்னுரையில் சொல்லியிருக்கிறார் விக்கிரமன்.

மதுராந்தகர் அரியணையில் அமர, செம்பியன் மாதேவியிடம் பேசி அவரைச் சம்மதிக்க வைக்கும் குந்தவை தனது தம்பி அருண்மொழிவர்மனை கடல்க டந்த நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளச் சொல்கிறாள். அப்போது அவருக்கும் வானதிக்கும் திருமணமாகி இருக்கிறது. வானதியை தன் கண்ணின் இமைபோல் பார்த்துக் கொள்கிறாள்  இளம் மனைவியைப் பிரிந்து... ஏறத்தாழ பத்தாண்டுகளுக்கு மேல் கடல் பயணமாக எங்கெங்கோ வணிகர் போல் சென்று அருண்மொழிவர்மர் திரும்பும் நேரம் சோழப் பேரரசு கடல் கொள்ளையர்கள், பாண்டிய ஆபத்துதவிகள், பார்த்திபேந்திரன் என நிறைய பிரச்சினைகளைச் சந்திக்கிறது.

இந்தப் பத்தாண்டு காலத்தில் வந்தியத்தேவன் எங்கிருந்தார். என்றால் பாதாளச் சிறையில்... ஆம்... ஆதித்த கரிகாலனைக் கொலை செய்தது தொடர்பாக பார்த்திபேந்திரப் பல்லவனின் சதிக்கு சின்னப்பழுவேட்டயரையும் உடந்தையாகி சிறையில் தள்ளிவிடுகிறார்கள். குந்தவை வெளியில் வாட, வந்தியத்தேவனை பாதிக்கதை வரை சிறையில் வாட வைத்து விடுகிறார். சிறையிலிருந்து வெளியில் வந்து குந்தவையோடு முறைத்துக் கொண்டு திரிகிறார். இருவரையும் இணைக்கவே அருண்மொழி நந்திபுரத்துக்கு தனித்தனியாக அனுப்புகிறான். அங்குதான் கோபதாபங்கள் தீர்ந்து மீண்டும் காதலில் விழுகிறார்கள்.

சுந்தரச் சோழரின் இறப்பு, வந்தியத்தேவன் சிறையிலடைப்பு என எதுவும் தெரியாமல் கடல்கடந்து முல்லைத் தீவுக்குப் போகும் அருண்மொழிவர்மனுக்கு அங்கிருக்கும் இன்பவல்லி மீது காதல் ஏற்படுகிறது. இன்பவல்லியோ நாட்டியத் தாரகை... பாடல் அரசி... அங்கிருக்கும் சில நாட்கள் இன்பவல்லியோடு இன்பமாய் கழிய, திரும்பி வந்து உன்னை அழைத்துச் செல்வேன் எனச் சொல்லிச் சென்றவர் வருடங்கள் கடந்து முல்லைத்தீவு வந்தபோது அது கொள்ளையர்களின் வெறிக்கு வீழ்ந்து கிடக்கிறது... இன்பவல்லி மட்டுமல்ல... அங்கிருந்த மக்கள் யாருமே இல்லை.

சின்னப்பழுவேட்டயரின் மகளை மதுராந்தகர் மனமுடித்திருந்தாலும் அவளுக்கு பட்டத்து ராணியாகும் வாய்ப்பு இல்லை.... சரி அவளது குழந்தை நாளை அரசாளுவான் என்றால் அதற்கும் வழியில்லை... குழந்தையே இல்லை.... இதனால் பழுவேட்டயர்கள் வம்சம் சோழ ராஜ்ஜியத்தில் கோலோச்ச வேண்டும் என்று நினைக்கும் சின்னப்பழுவேட்டையர் தன் அரவணைப்பில் வளரும் பெரியபழுவேட்டையரின் மகளான பட்டவன்மாதேவியை அடுத்து அரசணையில் ஏறப்போறவருக்கு மணமுடிக்க நினைக்கிறார். அடுத்தது யார் மதுராந்தகனின் மகன் மதுரனா...? அருண்மொழிவர்மனா...? எனத் திண்டாடி... மதுரன்தான் அடுத்து அரசாளவேண்டும் என்று தூபமிட, பட்டவன்மாதேவியோ மதுரனை விரும்பி பின்னர் சிற்றப்பனின் ஆசைக்கு இணங்க, ராஜராஜனை விரும்புவதா..?வானதிக்கு துரோகம் செய்யலாமா...?  என்றெல்லாம் யோசிக்கிறாள்.

தனிநாடு வேண்டும் என்ற ஆசையில் மீண்டும் பல்லவ வம்சத்தை நிலைநாட்ட, பல்லவக் கொடி பறக்கவிட ஆசைப்பட்டு பார்த்திபேந்திரன் படைகளைத் திரட்ட, வல்லவரையன் தவறிழைக்காதவன்... நாம்தான் பார்த்திபேந்திரன் சொல்லைக் கேட்டு தவறிழைத்து விட்டோம் என்பதை அறிந்து சிறையிலிருந்து வந்தியத்தேவனை வெளியில் கொண்டு வரும் சின்னப்பழுவேட்டையர் தானே முன்னின்று பார்த்திபேந்திரனுடன் மோதுகிறார். பார்த்திபேந்திரன் இறக்க, பழுவேட்டையர் காயமடைந்து மரணத் தருவாயில் தன் மகளைக் கட்டிக் கொண்டு பட்டத்து அரசியாக்க வேண்டும் எனச் சத்தியம் வாங்கி இறக்க, பட்டவன் மாதேவியை கரம் பிடிக்க வேண்டிய சூழல்... வானதியின் நிலை என்ன...? இன்பவல்லி என்ன ஆனாள்...? பட்டவன் மாதேவி பட்டத்து அரசியானாளா...? எனப் பயணப்படும் கதையில் நந்திபுரத்துக்கும் தஞ்சைக்கும் குந்தவை மாறிமாறி பயணித்துக் கொண்டிருக்கிறாள்.

இதற்கிடையே ஆதித்த கரிகாலனைக் கொன்ற பாண்டிய ஆபத்துதவிகள் ரவிதாசன் தலைமையில் சோழப் பேரரசின் முக்கியத் தலைகளை வீழ்த்த கங்கணம் கட்டித் திரிகின்றனர். வீரபாண்டியனின் மனைவியா... மகளா என்பதை சரியாக விளங்கிக்கொள்ள முடியாமல் பொன்னியின் செல்வனில் வரும் நந்தினி (இங்கு இவரை வெளியில் காட்டாமல் திரைக்குள் வைத்துவிடுகிறார் அதனால் பெயர் எதுவுமில்லை... தலைவி என்பதாய்ச் சொல்கிறார்... இறுதியில் அருண்மொழிவர்மனை சகோதரா என அழைத்து ஓலை அனுப்புகிறாள்... அப்படி எனில் சுந்தரச்சோழர் காதல் கொண்ட ஊமைராணியின் மகளாகவும் இருக்கலாம் என்றும் தோன்றுகிறது) வளர்க்கும் பாண்டியனின் மகன் அமரபுஜங்கன் தலைமையின் கீழ் காட்டுக்குள் அதற்கான நேரத்தை எதிர்பார்த்து தங்களைச் தாயார் செய்கிறார்கள். இதற்காக சேரனின் உதவி நாடிப் போகும் அமரபுஜங்கனுக்கு சேரனின் மகள் மீது காதல்... ஆனால் அதை அப்படியே விட்டுவிட்டார்.

பாண்டிய ஆபத்துதவிகளுக்கு உதவுவதாய் ஒரு காளமுகர் வருகிறார். அவரை ராஜராஜன் பார்த்துப் பேசும் போதே நமக்கு யாரென்று தெரிந்து விடுவதால் அந்த சஸ்பென்ஸ் உடையும் போது இதுதான் தெரியுமே என்றுதான் தோன்றுகிறது. அதேபோல் இன்பவல்லிக்கு சோழப் பேரசுக்கும் தொடர்பு இருப்பதாய் சொல்லி, அவளது அப்பா குறித்துப் பேசி... அவர்தான் இன்பவல்லியை குழந்தாய் என அரவணைத்து சோழ தேசத்தில் பாதுகாக்கிறார்... ஆனால் இறுதிவரை அவர்தான் அவளின் அப்பா எனச் சொல்லாமல் விட்டது ஏனோ தெரியவில்லை... நந்திபுரத்து நாயகி யார்...? குந்தவைதானே... எனவே கதை அவரைச் சுற்றியே நகர்கிறது என்றாலும் பொன்னியின் செல்வன் போல் முடிச்சுக்களும் அதை அவிழ்த்துப் பயணிக்கும் அழகும் இதில் இல்லை.

உடையாரின் பாலகுமாரன் கிளைக்கதைகளால் படிப்பவர்களுக்கு அயற்சியைக் கொடுத்தார் என்றால் இதில் விக்கிரமன் இரண்டு கதாபாத்திரங்கள் சந்திக்கும் போது அவர்களுக்கு அதற்கு முன்னர் என்ன நடந்தது என்பதைச் சொல்லிச் செல்வது விறுவிறுப்புக்குத் தடை ஏற்படுத்துகிறது. இது இதில் மட்டுமில்லை... அவரின் கதைகளில் எல்லாம் இப்படித்தான் கதை சொல்வார் என்பதை மற்றொரு கதையான தெற்குவாசல் மோகினி வாசிக்கும் போது அறிய முடிந்தது. 

உடையாரில் வரும் பஞ்சவன் மாதேவி, சிதம்பரத்தில் நடனமாடும் தேவரடியாள் வகுப்பைச் சார்ந்த பெண் என்றும் அவரை இராஜராஜன் பார்த்து, சிநேகித்து திருமணம் செய்து கொள்ள, பட்டத்து இளவரசி பட்டவன் மாதேவி, உள்ளம் கவர்ந்த வானதி (வானவன் மாதேவி) இருந்தாலும் அரசியலில் இராஜராஜனுக்கு பக்க பலமாக இருந்தவர் பஞ்சவன்மாதேவிதான்... தஞ்சைக் கோவிலில் இருக்கும் 107 சிவ நடன சிற்பங்களுக்கு மாதிரியாக நின்றவர் பஞ்சவன்மாதேவிதான்... அவருக்கு இராஜேந்திர சோழன் ஒரு கோவில் கட்டினான் அதற்கு கல்வெட்டுச் சாட்சியமும் கோவிலும் இருக்கு என்று சொல்லியிருப்பார். அவரைத்தான் விக்கிரமன் இன்பவல்லி எனச் சொல்கிறார் என்பதை கதையின் போக்கில் அறியலாம்.

ஆரம்பம் முதல் வந்தியத்தேவனை சிறையில் வைத்து... பின்னரும் குந்தவையுடன் சேராமல் நம்மைத் தவிக்க வைத்து... இருவரும் நந்திபுரத்தில் தங்கியிருக்க, சரி இனி திருமணம்தான் என்று நினைக்கும் போது ரவிதாசனிடம் மாட்ட வைத்து... எப்படியோ இறுதியில் இருவரையும் உல்லாசப் படகில் ஏற்றி அனுப்பி வைத்துவிட நந்திபுரத்து நாயகி வானதியை இழந்து சுபமாய் முடிகிறது.

அருண்மொழிவர்மனை குந்தவை உள்ளிட்ட அனைவரும் அவர்... இவர்... என மரியாதையுடன் அழைப்பதாய் எழுதிய ஆசிரியர் கூட மரியாதையாய்த்தான் எழுதியிருக்கிறார். வந்தியத்தேவனை மட்டும் அவன் இவன் என்றே எழுதியிருக்கிறார். மன்னர்களுக்கு இருக்கும் மரியாதை சிற்றரசர்களாக இருந்து... அதை இழந்த பரம்பரைக்கு இல்லை போலும்.

அது என்னவோ தெரியலை எல்லா வரலாற்றுப் புதினங்களிலும் கண்டவுடன் காதல் வந்துவிடுகிறது. உதவி கேட்டு சேரநாடு போகும் பாண்டியனுக்கு சேரன் மகள் மீது பார்த்த மாத்திரத்தில் காதல்... படை வீரன் சங்கரத்தேவனுக்கு தன் அன்னையின் தோழி மகளும் குந்தவையின் வேலைக்காரப் பெண்ணுமான சுமதி மீது பார்த்ததும் காதல்... மதுரனைப் பார்த்ததும் மயங்கும் பட்டவன்மாதேவி...  அருண்மொழிவர்மனைப் பார்த்த மாத்திரத்தில் இன்பவல்லிக்கு காதல்.... இவை எல்லாமே கதையின் சுவை கூட்ட மட்டுமே என்பதுதான் உண்மை... வரலாற்றில் மட்டுமல்ல.... இன்றைய வாழ்விலும் கூட தமிழ்பெண்கள் பார்த்த மாத்திரத்தில் வீழ்ந்து விடுவதில்லை... தமிழ் சினிமா இதில் விதிவிலக்கு.

சோழர்களின் வரலாற்றை மையமாகக் கொண்ட புதினங்களை வாசித்ததில் கல்கிதான் முதலிடத்தில் நிற்கிறார். அதற்கான காரணம் கல்கி கதையை அதன் போக்கில் அழகிய முடிச்சிட்டு அந்த முடிச்சை நாசூக்காக அவிழ்த்து... முன்னே பின்னே என்று அலையாமல் நேர்த்தியாய் நகர்த்தியமையால்தான் பொன்னியின் செல்வன் காலம் கடந்தும் கவர்ந்து இழுக்கிறது. பாலகுமாரனோ உடையாரில் தஞ்சைக் கோவில் கட்டுமானப் பணிகளை மிகச் சிறப்பாகச் சொல்லியிருந்தாலும்... ஒற்றன் என்றால் ஒரு கதை... வேளாளன் என்றால் ஒரு கதை என ஒவ்வொன்றிற்கும் ஒரு கிளைக்கதை வைத்து பக்கங்களை நிரப்பி வாசிப்பில் அயற்சியை ஏற்படுத்திவிட்டார். அதானாலேயே உடையார் என்றால் பலர் காத தூரம் ஓடுவதைப் பார்க்க முடிகிறது.  விக்கிரமனோ எழுத்தில் கவர்ச்சி காட்டினார் என்றால் ஒருவரை ஒருவர் சந்திக்கும் போதோ... இல்லை ஒருவரைப் பற்றிய கதை பயணிக்கும் போதே அங்கு வருவதற்கு முன்னர் நிகழ்ந்ததைச் சொல்ல ஆரம்பித்து மீண்டும் நிகழ்காலப் புள்ளிக்கு வருகிறார். இது அழகாய் நகரும் தேருக்கு கட்டை கொடுத்து நிறுத்துவது போல ஆகிவிடுவதால் முன்னோக்கி பின்னோக்கி நகர்வதில் கதை ஓட்டத்தில் தொய்வு ஏற்பட்டுவிடுகிறது. நரசிம்மாவோ மிகச் சிறப்பாய் கற்பனை செய்து தமிழ் சினிமாவை மிஞ்சும் விதமாக கதை அமைத்து... பொன்னியின் செல்வனுக்கு எதிர்மறையாய் களம் அமைத்து வாசித்தவரை இனி வாசிப்பே எனக் கேட்கவைத்து விட்டார்.

நந்திபுரத்து நாயகியில் வந்தியத்தேவன், குந்தவை, வானதி, மதுராந்தகர், பழுவேட்டையர், சம்புவரையர், மலையமான், இராஜராஜன், செம்பியன்மாதேவி, ரவிதாசன், பிரம்மராயர் என எல்லாரும் இருந்தும்... இராஜராஜன் கடல் கடந்து செல்வது முதல் இராஜேந்திரன் பிறப்பு வரை சென்றாலும் ஏனோ வாசிக்கும் ஆவலை அதிகம் தூண்டாமல் மெல்லத்தான் பயணிக்கிறது.
-'பரிவை' சே.குமார்.

புதன், 2 நவம்பர், 2016

சினிமா : கொடி

கொடி....

தனுஷ் முதல் முறையாக இரட்டை வேடத்தில்....

த்ரிஷா முதல் முறையாக வில்லியாய்...

Image result for கொடி விமர்சனம்

தன்னால் அடிமட்டத் தொண்டனாக மட்டுமே இருக்க முடிந்தது என்பதால் இரட்டையாப் பிறந்த  மகன்களில் ஒருவனை அரசியலில் உச்ச நிலைக்குக் கொண்டு செல்ல, பிறந்தது முதல்  அரசியல் பாலூற்றி வளர்க்கும் கருணாஸ், பாதரசக் கழிவு பிரச்சினையில் மகன் முன்னரே கட்சிக்காக தீக்குளித்துச் சாகிறார்.  மகன் அரசியலில் சாதித்தானா...? அவனுடன் பிறந்தவன் என்ன செய்தான்..? இவர்களுக்கு ஒரு காதல்... இல்லை இரண்டு இருக்கணுமே... அது என்னாச்சு...? என்பதை அரசியல் கலந்து அழகாக நகர்த்த அதிரடி அரசியல் இல்லாவிட்டாலும்.... சீமானின் பேச்சு போல் உணர்ச்சிகரமாக இல்லாவிட்டாலும்... வெற்றி மாறன் தயாரிப்பில் துரை செந்தில்குமார் பறக்கவிட்ட கொடி... ரெக்கை கட்டி பறக்கலைன்னாலும் நல்லாவே பறந்திருக்கு.

படத்தின் ஆணி வேர் த்ரிஷா கதாபாத்திரம்தான்... ஆனால் அந்த கதாபாத்திரத்தின் கனத்தை தாங்க முடியாமல் தாங்கி அதில் ஓரளவு வெற்றியும் பெற்றிருக்கிறார். அரசியல் போதை எவ்வளவு மோசமானது எனபது அவரின் ஒவ்வொரு நடவடிக்கையிலும் காட்டப்பட்டுள்ளது... பதவி ஆசைக்காக காதலைக் காவு கொடுக்கிறார்... அதற்கான விலையை தமிழ் சினிமாவுக்கே உரிய பார்முலாவில் இறுதியில் வாங்கிக் கொள்கிறார். நல்லாத்தான் நடிச்சிருக்கிறார் என்றாலும் கம்பியை எடுத்து காளியை அடிக்கும் இடத்தில் எல்லாம் பதட்டம் வராமல் சிரிப்புத்தான் வருது... ஆக்ரோஷத்தைக் காட்டி நடிக்க முயன்றிருக்கிறார்... சோடை போகவில்லை என்பதுடன் அவரின் சினிமா வாழ்க்கையில் இது ஒரு முக்கியமான படம்.

தனுஷ் ரெட்டையாய்... கொடியும் அன்புமாக பின்னி பெடலெடுத்து இருக்கிறார். வித்தியாசமான கெட்டெப் எல்லாம் போட்டு இரட்டையரை வித்தியாசப்படுத்த முயற்சிக்கவில்லை.... நம்ம விஜய் மாதிரி ரொம்ப சிம்பிளா தாடி வச்சி பொட்டு வச்சா கொடி, தாடியில்லாமல் சின்னப்பய மாதிரி வந்தா அன்பு... அம்புட்டுத்தான்... அன்பு பயந்தாங்கொள்ளி... அம்மாக்கிட்ட வீராப்பாய் பேசிட்டு போயி பொம்பளப்புள்ளக்கிட்ட அடி வாங்கிட்டு வர்ற சராசரியான இளைஞன்... கொடி நெஞ்சை நிமிர்த்தி... உடல்மொழி... வசனத்தில் மிரட்டல் விடும் நம்ம ஊர் அரசியல் தொண்டன் ... இரண்டு கதாபாத்திரத்திலும் வித்தியாசம் காட்டி கலக்கியிருக்கிறார்.

Image result for கொடி விமர்சனம்தனுஷைப் பொறுத்தவரை பிளாப் படம் என்றாலும் சிறப்பாய் நடிக்கும் நடிகன்... அப்படிப்பட்டவர் எப்படிப்பட்ட கதாபாத்திரம் என்றாலும் கலக்கலான நடிப்பைக் கொடுப்பார் என்பது எல்லாரும் அறிந்ததே... இதிலும் சிறப்பாக செய்திருக்கிறார். அதுவும் த்ரிஷா உடனாக காதல் காட்சிகள் செம. விண்ணைத் தாண்டி வருவாயாவில் சிம்புவுக்கு ஜோடியாய் எப்படி ஒட்டிக் கொண்டாரோ அதேபோல் இதில் தனுஷூடன் த்ரிஷா.... கோபம்... சண்டை... அதன் பின் காதல் என கலக்கியிருக்கிறார்.

அன்பாக வரும் தனுஷ் டீயில் முட்டையை நனைத்து விற்கும் அனுபமா பரமேஸ்வரன் பின்னால் சுற்றுகிறார். 'ஏய் குழலி' பாட்டில் அனுபமா தனுஷை மட்டுமல்ல நம்மையும் சாய்த்துவிடுகிறார். அனுபமாவுக்கு அளவான நடிப்பு. அன்பு கொடியாக மாற வேண்டிய சூழலில் இவர்களின் காதலும் காணமல் போய்விடுகிறது.

எதிர் எதிர் கட்சியில் இருந்தாலும் திருச்சி சிவா - சசிகலா புஷ்பா போல அந்நியோன்யம் காட்டி யாருக்கும் தெரியாமல் காதலிப்பது சுவராஸ்யம்... இருவரும் திட்டிக் கொள்வதும்... கட்டிக் கொள்வதுமாய் நகரும் கதையில் அரசியலுக்காக என்ன வேண்டுமென்றாலும் செய்வார்கள் என்பதை அறிந்த நமக்கு அரசியல் ஆசை... பதவி வெறி காதலையும் கொல்லும் என்பது வித்தியாசமாய்த் தெரிகிறது. காதலைக் கொல்லும் இடம் நமக்கு இப்படித்தான் நடக்கும் என்பதை முன்னரே தெரிந்து கொள்ள வைப்பதால் சுவராஸ்யம் அற்றுப் போகிறது.

காதல் களியாட்டம் தெரிந்து கட்சிக்குள் செல்வாக்கு இழந்து பலரின் கேள்விக்கு பதில் சொல்ல வேண்டிய சூழல் வந்ததும் சசிகலா புஷ்பா போலில்லாமல் அடுத்தடுத்த காட்சிகளில் கட்சிக்குள்ளேயே காய் நகர்த்தி ராஜ்யசபா எம்.பி. ஆகிவிடுகிறார் த்ரிஷா.

இரட்டையரில் ஒருவர் இறந்தால் மற்றொருவருக்கு இருவரின் குணநலன்களும் வரும் என்பதை டாக்டரை வைத்து படம் பார்ப்பவர்களுக்கு சொல்லி விடுகிறார்கள் என்றாலும் அன்பு தாடி மீசைக்கு மாறி நெஞ்சைத் தூக்கி நடப்பது சினிமாத்தனம்.

Image result for கொடி அனுபமா

சிங்கமுத்து சிரிக்க வைக்கிறார். சரண்யா எப்பவும் போல் நல்ல அம்மாவாக வருகிறார். கொடியின் நண்பனாக வரும் காளி சிறப்பாக நடித்திருக்கிறார்.

எப்படி காதலைக் கொல்லும் இடம் நமக்கு முன்னரே இப்படித்தான் ஆகும் எனத் தோன்றுகிறதோ அப்படித்தான் இறுதிக் காட்சியும்... அதிலும் சுவராஸ்யம் கம்மியே. சந்தோஷ் நாராயணனின் இசையில் பாடல்கள் ஓகே என்றாலும் சித்ராவின் குரலில் வரும் 'ஆராரோ' பாடலும்  'ஏய் குழலி'யும் ரொம்ப ரசிக்க வைக்கிறது. பின்னணி இசையும் அருமை... எஸ். வெங்கடேஷ் ஓளிப்பதிவில் இரட்டையர் காட்சிகள் கலக்கல்.

அரசியல் போதை பொல்லாததுதான்... இல்லைன்னா இன்னைக்கு அம்புட்டுப் பயலும் அப்போலோ வாசல்ல உருள மாட்டானுல்ல... நம்ம பஞ்சாயத்து பிரசிடெண்ட் அடுத்த தேர்தலில் ஜெயிக்க சொத்துப் பத்தை வித்து களமிறங்க மாட்டானுல்ல... அதைத்தான் இதில் காட்டியிருக்காங்க... சின்ன வயசுல இருந்து அரசியல் போதையுள்ள பெண் அதற்காக எதையும் செய்வாள்ன்னு சொல்லியிருக்காங்க..

கொடி பரபரப்பான அரசியல் வசனங்களைச் சுமந்து பறக்கவில்லை... பரபரப்புக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட பாதரசக் கழிவு குறித்துக் கூட பட்டும் படாமலுமே சொல்லப்படுகிறது. பாதரசக் கழிவால் பாதிக்கப்பட்ட குழந்தை இறக்கும் போது பரிதாபப்படத் தோன்றுகிறது. அதன் பின்னர் அரசியல் சதிராட்டத்துக்காக மட்டுமே பயன்படுத்தி அடக்கியே வாசித்திருக்கிறார்கள். இன்னும் தீவிரமாக அதைக் கையாண்டிருக்கலாம்தான் என்றாலும் இன்றைய அரசியல்வாதிகளிடம் சினிமாக் கலைஞர்களுக்கும் பயம் உண்டல்லவா... போட்ட காசை எடுக்கணுமே... அதுக்கு படம் வெளிவரணுமே... அதனால தொட்டுக்கோ தொடச்சிக்கோன்னு அதை எடுத்துக்கிட்டு காதல், காவு, மிரட்டல் என பயணிச்சிட்டாங்க...

இணையத்தில் பலர் சொல்வது போல் கொடி கொல மாஸூம் இல்லை... அட்டர் பிளாப்பும் இல்லை... வித்தியாசமான கதைக்களம்... விறுவிறுப்பான நகர்த்தலில் நல்லாவே  பறக்கிறது.  படம் பார்க்கலாம் ரகம்தான்.

-'பரிவை' சே.குமார்.

சனி, 29 அக்டோபர், 2016

சிறுகதை : மனத்தேடல்

நேற்று எழுதிய 'உதிராத நேசம்' சிறுகதை குறித்து எனக்கும் நண்பன் தமிழ்க்காதலனுக்கும் நடந்த உரையாடலின் போது 'எருமை... (எப்பவும் ரொம்ப அன்பாய்த்தான் திட்டுவான்) ஆரம்பிக்கும் போது ஆஹா ரெண்டு பேரும் சந்தித்தால்... எப்பவும் போல் கலக்கலாய் எழுதியிருப்பான்னு நினைச்சிப் படிச்சா... அழுத்தமில்லாம முடிச்சிட்டியே... எப்பவும் போல் ஏன் நீ எழுதலை... இப்படி ஏன் எழுதுறே... சந்தித்துப் பேசினால் எப்படியிருக்கும்ன்னு ஏன் நீ யோசிக்கலை என்று சரமாரித் திட்டினான். சரி அவன் சொன்னது போல் அந்தப் பக்கமாப் பயணிக்கலாமேன்னு இன்று மதியம் எழுத ஆரம்பித்து முடித்து ஜட்ஸ்மெண்ட்டுக்கு அனுப்பினால் இதைத்தாண்டா எதிர்பார்த்தேன் என்று தீபாவளி மத்தாப்பாய் பாராட்டு மழைதான் போங்க... தலைப்பும் நண்பன் கொடுத்ததே... கதை பதிவதில்லை என்ற முடிவிருந்தாலும் அந்தக் கதையின் மாற்றுப் பாதை என்பதால் இதையும் இங்கு பகிர்கிறேன்.  நீங்களும் வாசிங்க... பிடிச்சாலும் பிடிக்காட்டியும் கருத்தைச் சொல்லுங்க... 

நேற்றைய கதையை வாசிக்காதவங்க வாசிங்க மேலே இருக்கும் இணைப்பில் போய் வாசிங்க....

**************


'அவளைப் போய் பார்க்கலாமா..?' என்ற எண்ணம் நேற்று மகேஷ் சொல்லிச் சென்றதிலிருந்து மனசுக்குள் சாரலாய் ஆரம்பித்து பெரும் தூறலாய் ஆக்கிரமித்திருந்தது.  'அவளைப் போய் பார்த்தால் என்ன சொல்வாள்..? ', 'பேசுவாளா... இல்லை பேசாமல் நகர்ந்து விடுவாளா...?', 'இன்னும் ஞாபகத்தில் வைத்திருப்பாளா..?' என்ற கேள்விகள் வரிசையாக நெஞ்சுக்குள் எழுந்து ஆழிப் பேரலையாய் உயர்ந்து உயர்ந்து தணிந்தது. 'இந்த வயசில் அவளைத் தேடிப் போவது சரிதானா...?' என்ற எண்ணம் வேறு மழைக்கால காளானாய் இடையிடையே பூத்துச் சிரித்தது.

'அவளைப் போய் பார்த்தால் பேசுவாளா..? இல்லை முகத்தில் அடித்தாற்போல் செய்து விடுவாளா..?' எத்தனை நேசத்துடன் அவளைக் காதலித்து கோழையாய் தூரதேசம் போனவன்தானே நான். படித்த டிகிரிக்கான வேலை கிடைக்காது என்று தெரிந்தும் டிகிரி படிக்க வேண்டும் என்பதற்காகவே படித்தவன்தானே நான்... மேலே படிக்க வேண்டும் என்றால் வானம் பார்த்த பூமியில் விவசாயத்தை நம்பி வாழும் குடும்பத்தில் குதிரைக் கொம்பாய் இருந்த காலம்... வயதுக்கு வந்த இரண்டு தங்கைகளை கரையேற்ற வேண்டும் என்றால் கடல் கடக்க வேண்டும் என்ற அப்போதைய கோட்பாட்டின்படி செல்வண்ணனோட ஏற்பாட்டில் சிங்கப்பூர் சென்று கஷ்டப்பட்டு இந்த இருபது வருடத்தில் நல்ல நிலையை அடைத்திருக்கிறேன்...  லிட்டில் இந்தியா பகுதியில்  நானும் நண்பன் பரக்கத்தும் சேர்ந்து ஹோட்டல் நடத்துக்கிறோம். எங்க ஹோட்டல் செட்டிநாட்டுப் பலகாரங்கள் ரொம்ப பிரசித்தம். அதுவும் ஞாயிற்றுக்கிழமை நம்மாட்கள் வந்து கூடும் போது பாக்கெட் பாக்கெட்டாக முறுக்கு, அதிரசம், வெள்ளைப் பணியாரம், கந்தரப்பம், மனோலம், ஓமப்பொடி எல்லாம் விற்றுத் தீர்க்கும். கடந்து சென்ற வருடங்களில் எத்தனையோ நல்லதையும் கெட்டதையும் பார்த்துவிட்டேன். தங்கைகளுக்கு நல்ல இடத்தில் திருமணம்... தம்பியை படிக்க வைத்து இன்று அவன் துபாயில் ஏதோ ஒரு கம்பெனியில் நெட்வொர்க் இஞ்சினியர்... குடும்பத்துடன் துபாயில் இருக்கிறான். அப்பா அம்மா இருவரையும் அடுத்தடுத்து இழந்தது எனது வாழ்வில் மறக்க முடியாத பெரிய இழப்பு. ம்ம்ம்.... ஏதோ ஒன்றை இழந்தால்தான் ஒன்றைப் பெற முடியும் என்பார்களே... அப்படித்தான் அவளை இழந்து என் மனைவியைப் பெற்றேன். எனக்கு காதலியாய்... தோழியாய்... தாயாய்... குருவாய்... மனைவியுமாய்...

என்னைக் காதலிப்பதாக நேரடியாக வந்து சொன்ன எங்கள் வகுப்புத் தோழி மல்லிகாவை ஏற்க முடியாமல் என் மனதுக்குள் இருந்தவள்தான் அவள்... வேறு வேறு துறையைச் சேர்ந்தவர்கள் என்றாலும் நானும் நண்பனும் இணைந்து நடத்தலாம் என்று ஆரம்பித்த கையெழுத்துப் பிரதியின் ஆசிரியர் குழுவில் இணைந்தாள். எழுத்தும்... இலக்கியம் சம்பந்தமான பேச்சுமே எங்களுக்குள் காதல் என்னும் தீபத்தை மெல்ல ஏற்றியது. இருவருக்குள்ளும் எரிந்த தீபத்தின் ஒளியை வெளியில் தெரியாமல்... சொல்லத் தைரியமில்லாமல் மறைத்தே நாட்களை நகர்த்தினோம்... ஒருநாள் பார்க்கவில்லை என்றாலும் அடுத்தநாள் நேற்று ஏன் வரலை என்ற கோபம் எங்களுக்குள் வெடித்த போது எங்கள் காதல் தீபத்தின் ஒளி மெல்ல வெளியே வெளிச்சத்தைப் பரவ ஆரம்பித்தது நண்பர்களின் செல்லத் சீண்டல்களுடன்.... மூன்றாண்டுகள் முடித்து எங்காவது வேலைக்குச் செல்ல வேண்டும் என்ற நிலையில் திருப்பூருக்குப் பயணித்தவனிடம் 'எங்க வீட்ல ரொம்ப நாள் வச்சிக்கமாட்டாங்க... மாமா ரெண்டு மாசத்துல சௌதியில இருந்து வர்றானாம்... அவருக்கு கட்ட பேச்சு நடக்குது... ப்ளீஸ்... அதுக்குள்ள எதாவது பண்ணு.... என்னையும் உங்கூட கூட்டிக்கிட்டுப் போகப்பாருன்னு சொன்னா.... பஸ் கிளம்பும் போது கண்ணீரோட நின்னா அன்னைக்குத்தான் அவளை கடைசியாப் பார்த்தேன்.... அப்புறம் அவ பிரண்ட் வீட்டுக்குப் போன் பண்ணி அவளை வரச்சொல்லி பேசினப்போ கல்யாணம் நிச்சயம் பண்ணப் போறாங்க... வா... வந்து கூட்டிக்கிட்டுப் போன்னு சொன்னா.... ஏதை வச்சிக் கூட்டிப் போவேன்... ஏதோ சம்பளத்தில் ஒரு வேலை.... விவசாயம் பொய்த்துப் போய் ரேசன் அரிசி சாப்பாட்டில் காலத்தை ஓட்டும் குடும்பம்... திருமண வயதில் தங்கைகள்... படிச்சி பெரியாளகணுங்கிற கனவோட தம்பி... இவற்றின் முன்னே என் காதல் முள் மீது போட்ட சேலையானது... மெல்ல எடுத்தாலும் இதயம் கிழிஞ்சிதான் போச்சு.

'ம்ம்ம்' என்ற பெருமூச்சோடு எழுந்தேன்... இருபது வருடங்களாக என் மனசுக்குள் வாழும் ஜீவன் இதோ ஒரு ஆறு கிலோ மீட்டர் தூரத்தில் அம்மா வீட்டுக்கு வந்திருக்கிறாள். சௌதியில் செட்டிலாகிவிட்ட அவள் மாமியார் (ஆயா) செத்தபோது வந்திருந்தாளாம் என் மனைவி சொன்னாள். என்னவளுக்கு எங்கள் காதல் கதை அட்சர சுத்தமாகத் தெரியும். நான் அவளிடம் எல்லாம் சொல்லிவிட்டேன்.... வாழ்க்கையில் ஒளிவு மறைவு எதுக்குங்க... அவளும் அது பற்றி எதுவும் சொல்லவில்லை... ஒரு சிரிப்பில் அதைக் கடந்து சென்றாள். இன்று வரை அது குறித்தான குத்தலோ... குடைச்சலோ இல்லை... என் உள்ளம் புரிந்தவள் என்னவள். இவள் கிடைக்க வேண்டும் என்பதால்தான் இறைவன் எங்கள் காதலைப் பிரித்தான் போல... சிரித்துக் கொண்டேன்.

போகலாம்... பார்க்கலாம்... பேசினால் பேசலாம்... இல்லேன்னா திரும்பி வரலாம்... வேறு என்ன செய்ய... திரும்பக் கிடைக்காமல் தொலச்சாச்சுல்ல... வாழ்க்கையில் தொலைத்த எல்லாத்தையும் தேடிப் போவதில்லையே.... அவளைத் தேடிப் போகணும்ன்னு மனசு சொல்லுது...  அம்மா வீட்டுக்கு வந்திருக்கிறாளாம்.... தீபாவளி முடிஞ்சிதான் போவாளாம்... எல்லாம் சொல்லிச் சென்றான் மகேஷ்.... மழையை ரசித்தபடி சன்னலோரம் அமர்ந்து காபி குடித்தபடியே கல்லூரியை முன்னிறுத்தி அவளைப் பற்றிப் பேசினோம்...  எத்தனை முறை மழை எங்களை நனைத்திருக்கும்... எல்லா முறையும் துப்பட்டாதானே குடையானது.... நினைத்தபோது மனசு சிலிர்த்தது... மனசுக்குள் அவளும் சிலிர்த்து எழுந்தாள்.  அவளைப் பார்த்து விட்டு வரலாம்... இந்த இருபது வருடத்தில் எத்தனையோ மாற்றங்கள் அவள் வாழ்விலும் உடம்பிலும் நிகழ்ந்திருக்கலாம்... என்னை இளமையில் இருந்து முதுமையின் வாசலுக்குக் கொண்டு சென்றிருக்கும் காலம் இன்னும் அவளை மட்டும் அப்படியேவா வைத்திருக்கப் போகுது என்று நினைத்தபடி கண்ணாடி முன் நின்று மீசையைத் தடவினேன்.. வெள்ளையும் கருப்பும் கலந்து சிரித்தது.

வண்டியை எடுக்கும் போது 'எங்கே இவ்வளவு அவசரமா...?' என்பது போல் பார்த்தாள் என்னவள்... 'காளாப்பூர் வரைக்கும் பொயிட்டு வாறேன்' என்றேன் மெல்ல... 'ம்... மகேஷ் அண்ணன் நேத்து அவ வந்திருக்கான்னு சொன்னதில இருந்து உங்க மனசு ஒரு நிலையில இல்லையின்னு எனக்குத் தெரியும்... எதுவும் தப்பாயிடாம... பொறுமையா எதைப் பேசணுமோ அதை மட்டும் பேசுங்க... அவ பேசுவா... கண்டிப்பா பேசுவா... காதலிச்ச மனசு கல்நெஞ்சாவா இருக்கப் போகுது... சீக்கிரம் வந்திடுங்க... என்னமோ ஏதோன்னு எனக்குப் பயமா இருக்கும்...' என்றாள் கண் கலங்க... 'ம்...' என்றபடி வண்டியை எடுக்க, 'அப்பா நானும் வாறேன்' என ஓடி வந்து ஏறினாள் என் பதின்ம வயது மகள் ஸ்வாதிகா. 'நீ எதுக்குடி அங்கல்லாம்...' என்ற மனைவியிடம் 'அவ வரட்டுமே... என்ன இப்ப... எனக்கும் பேச்சுத்துணையா இருப்பாளே...' என்றபடி வண்டியை எடுக்க, 'போம்மா... நான் அப்பாவோட போன உனக்கென்ன...? அவரோட வண்டியில சுத்தமுடியலையேன்னு ஆதங்கம்' என்றவள் என் கன்னத்தில் முத்தம் பதித்து இடுப்பைச் சுற்றி இறுக்கிப் பிடித்துக் கொண்டாள். காற்றில் எங்கிருந்தோ கரைந்து வந்தது ஆனந்தயாழை மீட்டுகிறாள் பாடல். ஏனோ மகள்களைப் பெற்ற அப்பாக்களை எல்லாம் யாழ் மீட்ட வைத்த முத்துக்குமார் முறிந்த யாழோடு வந்து போனான்.

'எப்படிப் பேசலாம்..?' 'எதில் ஆரம்பிக்கலாம்..?' 'அந்த நாள் நினைவுகளை மெல்ல மீட்டிப் பார்க்கலாமா...?' என்ற கேள்விகளுடன் பயணித்த எனக்கு ஸ்வாதிகாவின் கேள்விகள் கேட்கவில்லை... பச்சைக் கலர் வீட்டு வாசலில் வண்டியை நிறுத்தியபோது வாசலில் நின்ற அவளின் அம்மா மெல்ல ஏறிட்டுப் பார்த்துவிட்டு "யாரு...? தெரியலையே...?' என்றார். 'நாந்தான் இளங்கோ... உங்க மகளோட பிரண்ட்... வந்திருக்காங்களாமே...?' என்றேன் மெல்ல. பெயரைக் கேட்டதும் அவங்க முகம் மெல்ல மாறியதில் அறிந்தேன்... எங்கள் காதலை அவர் எப்போதோ அறிந்திருக்கிறார் என்பதை... ஒன்றும் சொல்லாமல் வழிவிட்டவர்... வீட்டிற்குள் போனதும் 'உக்காருங்க... குளிச்சிக்கிட்டு இருக்கா... வரச்சொல்றேன்... என்றபடி மறைய, நான் மெல்ல வீட்டை கண்களால் படம்பிடித்தேன்... கணவன் குழந்தைகளுடன் அவள் சிரிக்கும் போட்டோவில் ஏனோ கண் நிலைகுத்தி நின்றது.

சிறிது நேரத்தில் குளித்த ஈரத்தை நன்றாக துடைக்காமல் தலையில் தண்ணீர் வடிய வடிய நைட்டியில் வந்தவள் 'வாங்க' என்ற ஒற்றை வார்த்தை சொல்லி நகர, அவ அம்மா காபியோடு வந்தார். அவர் முகத்தில் இவன் எதற்காக இப்போது வந்தான் என்ற எண்ணம் பரவிக்கிடப்பதை அறிந்ததும் 'இல்லம்மா... சும்மாதான்... இருபது வருசத்துக்கு மேலாச்சு... நானும் சிங்கப்பூர்ல இருக்கதால இங்க வர்றப்போ மற்றவங்களை பார்க்கிறது சிரமம்தான்.... அதான் வந்திருக்காங்கன்னு கேள்விப்பட்டதும் பாக்கணும்ன்னு தோணுச்சு... நாங்களெல்லாம் காலேசுல ஒண்ணா பத்திரிக்கை நடத்தினோம்...' என்றேன். அவர் ஒன்றும் சொல்லாமல் தலையாட்டியபடி நகர, 'யாருப்பா... இவங்க...?' என்றாள் ஸ்வாதிகா... எப்படிச் சொல்வேன்.. 'ப்ரண்ட்' என்றேன் ஒற்றை வார்த்தையில்.

நெற்றியில் அழகாய் குங்குமம் வைத்து அதன் மேலே சின்ன திருநீற்றுக் கீற்று வைத்து எதிரே வந்து அமர்ந்தாள். கல்லூரிக்கு அவள் சின்னச் சைக்கிளில் வரும் அந்த நாள் நினைவு மெல்ல எட்டிப் பார்த்தது. சிறு கீற்றாய் திருநீறும்..  ஸ்டிக்கர் பொட்டுமாய் அவள் மனதிற்குள் மலர்ந்து மறைந்தாள். என்னைப் பார்த்தாள்... பின் நிலம் பார்த்தாள்... நான் அவளைப் பார்த்தேன்... அவள் பார்க்கும் போது சுவரைப் பார்த்தேன்... 'இங்க வா... உம்பேரு என்ன...?' என ஸ்வாதிகாவை இழுத்து அருகே வைத்து அணைத்துக் கொண்டாள். பெயரைச் சொன்னதும் 'என்ன படிக்கிறே...?' என்றாள் கன்னத்தில் இதழ் பதித்தபடி. என் மனசுக்குள் என்னவோ செய்தது. என்னைப் பார்த்து நல்லாயிருக்கியான்னு கூட கேக்கலையே... அவ எப்படிக் கேப்பா... நாம கேக்கணுமின்னு அவ நினைக்கலாம்ல்ல... என்று நினைத்தபடி 'எப்படியிருக்....கே...கீங்க...' என்றேன் ஒருமையை பன்மையாக மாற்றி. 'ம்... நல்லாயிருக்கேன்.... நீ.... நீங்க...?' என்றாள் அவளும் பன்மைக்குள் நுழைந்து. 'ம்...' என்றேன் ஒற்றை எழுத்தில். பின்னர் மீண்டும் மௌனயுத்தம். விநாடிகள் மெல்லக் கரைந்து நொடிகளைத் தின்றது.

'இவ மட்டும்தானா...?' என்று அவள்தான் மௌனயுத்தத்தை நிறுத்தினாள். 'ம்... இவதான்... இவமட்டுந்தான் இப்ப என் உயிர்...' என்று சொல்லிவிட்டு என்னை நானே மனசுக்குள் கடிந்து கொண்டேன். 'ம்... ஒரு உயிர் போனா... அடுத்த உயிர்தானே வாழ வைக்குது' என்றவள் 'நீ அப்பா செல்லமோ..?' என்றாள். 'ம்... ஆனா அப்பா என்னோட செல்லம்' என ஸ்வாதிகா சொன்னதும் மீண்டும் ஒரு முத்தம்... 'ம்... என்னோட பொண்ணு அப்பா செல்லந்தான்... பையனுக்கு நாந்தான் எல்லாம்... என்ன செல்லமா இருந்தாலும் பொண்ணுங்களுக்கு பிரிவுங்கிறது தவிர்க்க முடியாததுதான்... நினைவுகளோட பிரிவுகளைச் சுமக்க வேண்டிய பிறவி பெண்தானே...' என்று அவளாக சொல்லிக் கொண்டாள். அப்போதுதான் உள்ளே நுழைந்த அவளின் அப்பா 'யாரும்மா..? என்று கேட்க, 'ப்ரண்ட்ப்பா... காலேஜ்ல ஒண்ணாப் படிச்சோம்... நான் வந்திருக்கேன்னு நம்ம மகேஷ் சொல்லியிருக்கும் போல அதான் வந்திருக்கார்...' என்னை ஏற இறங்கப் பார்த்தார்... என்ன நினைத்தாரோ சிரித்தபடி நகர்ந்தார். அவள் 'யாழினி' என்றழைக்க பக்கத்து அறைக் கதவு நீக்கி ஸ்வாதிகா வயதொத்த அழகான பெண் எட்டிப் பார்த்து 'எஸ் மம்மி' என்றாள். 'இவ ஸ்வாதிகா... பின்னால தோப்புப் பக்கம் கூட்டிக்கிட்டுப் பொயிட்டு வா...' என்றதும் 'ஓகே மம்மி' என அவள் ஸ்வாதிகா கரம் பிடிக்க, என்னைப் பார்த்தவளிடம் போ என்று கண் ஜாடைகாட்ட அவளோடு நடந்தாள். ஸ்வாதிகா உருவத்திலும் உயரத்திலும் அவளைவிட சற்று கம்மி... கலரிலும்தான்.

'ம்... என்னைப் பாக்கணும்ன்னு இத்தனை வருசத்துக்கு அப்புறம் தோணியிருக்கே... நன்றி...' என்று அவள் சொன்னபோது அவள் முகத்தில் எழுந்த உணர்ச்சிகள் அவள் உடையாமல் கட்டுப்படுத்த முனைவதை காட்டியது. 'அப்படியில்ல... நான் இங்க வரும்போதெல்லாம் கேட்பேன்... நீ... நீங்க சௌதியில இருக்கதாச் சொல்வாங்க.... ஆமா அவரு வரலை..?' என்றேன் மெல்ல. என் குரல் உடைந்ததை அவளும் புரிந்துகொண்டாள். 'எப்பவோ உடைஞ்சிருந்தாலும் இன்னும் இருக்கே...?' என்று முணங்கியவள் 'இல்ல அவருக்கு லீவ் இல்லை.... நெக்ஸ்ட் மன்த் ஒன் வீக் வருவார்...' என்றாள். 'ம்...' என்றேன். 'ஏன் நீ... நீங்க இளைச்சிப் போயிருக்கீங்க..?' என்றாள் மெல்ல. 'ஹோட்டல் பிஸினஸ்... வேலை அதிகம்... இப்படி இருக்கிறதுதான் நல்லது.... இப்பத்தான் நாப்பதைத் தாண்டுறதுக்குள்ள அட்டாக் வருதே... நீ... நீங்க கூட ரொம்ப மாறிட்டீங்க....' என்றதும் அவள் சிரித்தாள். 'அப்படியேவா இருக்க முடியும்... மாற்றமில்லா வாழ்க்கை ருசிக்காதுல்ல... எத்தனை மாற்றங்களைக் கடந்து வந்தேன்... நான் நினைச்சி வச்சிருந்த வாழ்க்கை எனக்குக் கிடைக்கலை... கிடைச்ச வாழ்க்கை என்னை சந்தோஷமாத்தான் வச்சிருக்கு... ஆனாலும் நான் சுமந்த கனவுகள்... ஆசைகள்... எல்லாமே போச்சில்லையா...?' என்றவள் கண்ணைத் துடைத்துக் கொண்டாள். ஆதரவாய் அவள் கையைப் பிடிக்கணும் போல இருந்தது. வாழும் வாழ்க்கையும் வயதுக்கு வந்த மகளின் முகமும் தடுக்க, மனசுக்குள் தவித்தேன். 

'எதுக்கு நமக்குள்ள போலி மரியாதை... எங்கே நீன்னு சொன்னா வருத்தப்படு வோமோன்னு நானும் நீங்களும்....' சிரித்தாள் 'நீயும் பேசுறது நல்லாவாயிருக்கு...' என்றாள். 'இல்லை.. சுபா... அன்னைக்கு....' மெல்ல ஆரம்பித்தேன். 'முடிஞ்சதைப் பேசி இனி என்ன ஆகப்போகுது... ஆமா உன் மனைவிக்கிட்ட என்னைய பாக்கப் போறேன்னா சொல்லிட்டு வந்தே...?' விரக்தியாய் சிரித்தாள். 'ம்... அவளுக்கு எல்லாம் தெரியும்... உன்னோட போட்டோ அவகிட்ட பத்திரமா இருக்கு... அவ உன்னை மாதிரித்தான்...' என்றதும் சிரித்தவள் 'சந்தோஷமா இருக்கு.... ரொம்ப நல்லவங்க போல... என் கணவருக்கு எதுவும் தெரியாது... தெரிஞ்சிருந்தா உன் மனைவி மாதிரி இருந்திருக்கமாட்டார்... வாழ்க்கை நரகமாயிருக்கும்... எனக்குள்ள வச்சி எரிச்சிக்கிட்டு சிரிச்சிக்கிட்டு இருக்கேன்... சில நேரங்கள்ல அமைதியா இருக்கும்... சில நேரங்களில் ஆர்ப்பரிக்கும்... இன்னைக்கு நீ வந்து எண்ணெய் ஊத்தி அணையாம எரிய விட்டிருக்கே....? இனி அணையாது... நான் எரியும்வரை... 'என்றவள் மீண்டும் கண்களைத் துடைத்தாள். எனக்கு ஒன்றும் சொல்லத் தோணலை.

அப்புறம்  கொஞ்சம் அமைதி... கொஞ்சம் பேச்சு என நகர, ஸ்வாதிகா யாழினியோடு வர மெல்ல எழுந்தேன் 'இன்னும் ரெண்டு மாசம் இருப்பேன்' என்றபடி. 'நெக்ஸ்ட் மன்த் டுவெண்டி பிப்த் போறோம்... அதுக்குள்ள உன் மனைவியோட வந்திட்டுப் போயேன்... இந்தக் குட்டி என்னை ரொம்ப கவர்ந்துட்டா... உன்னைய மாதிரியே இவளுக்கும் நாசி... அழகாய்...' என்றபோது கண்ணை நோக்காமல் திரும்பிக் கொண்டாள்... சிலதுளி கண்ணீர் வந்திருக்கலாம். 'ஏம்ப்பா... இந்த ஆண்டி வீட்டுக்கு இதுவரை வந்ததில்லையே... இவங்க யார்...?' என்றபடி என் கைபிடித்த ஸ்வாதிகாவிடம் என்ன சொல்வது என யோசிக்க, 'உங்க அப்பாவோட டியர்....ரஸ்ட் பிரண்ட் நான்.. ஒண்ணாப் படிச்சோம்... நிறைய எழுதினோம்... பேசினோம்... ஆமா உங்கப்பாவோட ஆட்டோகிராப் புக்கெல்லாம் வீட்டில் இல்லையா... இருந்தா அதில் நானிருப்பேன்.... நான் இன்னும் என்னோட ஆட்டோகிராப் புத்தகத்தை பத்திரமா இங்க வச்சிருக்கேன்...' என்றாள்  அவளுக்கு எழுதிய  'வாழ்வின் கடைசிவரை இணைந்தே பயணிப்போம்' என்ற வார்த்தைகள் நெஞ்சில் குத்த, அவளை இறக்க முடியாமல் சுமந்து மெல்லப் படியிறங்கினேன்...  

ஸ்வாதிகாவுக்கு முத்தமிட்டு விடை கொடுத்தவள் 'பை... என்னோட நம்பர் இது...?' என்று நம்பரைச் சொல்லி 'சேவ் பண்ணிக்க.... போன் பண்ணிட்டு எல்லாரும் ஒரு நாள் வாங்க...' என்றபடி கை நீட்டினாள்... பற்றலாமா வேண்டாமா என்ற யோசனையோடு நிற்க, 'ஏய் நீ இன்னும் மாறலை...' என்று சொல்லிச் சிரித்தவளின் கண் மட்டும் அழுதது.

(படம் இணையத்தில் இருந்து எடுத்தேன்... நம்ம முத்துச்சிதறல் மனோ அம்மா வரைந்தது. நன்றி அம்மா... உங்களது ஒப்புதல் இல்லாமல் போட்டதற்கு திட்டாதீங்க...)
-'பரிவை' சே.குமார்.