மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

திங்கள், 13 ஜூலை, 2015

மனசு பேசுகிறது : மது என்னும் மாயவலை


ரு பச்சிளம் குழந்தைக்கு மாமன்காரன் மதுவை ஊத்திக் கொடுத்து குடிக்க வைத்தது.... மற்றொரு ஊரில் அப்பன்காரன் நிற்கும் போதே அப்பனை விட குடிகாரனா வருவான் போல எனச் சொல்லி மதுவை ஊத்திக் கொடுத்தது... பதினோறாம் வகுப்பு மாணவி மது அருந்திவிட்டு ரோட்டில் கிடந்து உருண்டபடி உளறியது.... என இன்னும் இன்னுமாய் மது... மாணவர்களை மதிமயங்கச் செய்வதை... செய்ததை... பத்திரிக்கைகள், தொலைக்காட்சிகள் மற்றும் முகநூல் பக்கங்கள் எல்லாம் வரிந்து கட்டிக் கொண்டு மக்களுக்கு கொண்டு சென்றன.

குடி... இதுவரை குடும்பங்களைக் தின்று கொண்டிருந்தது. இன்று கேடு கெட்ட மனிதர்களால் குழந்தைகளையும் திங்க ஆரம்பித்துவிட்டது. நம் தமிழகத்தைப் பொறுத்தவரை எவன் குடி கெட்டாலும் பரவாயில்லை ஆளும் கட்சிக்கும் ஆண்ட கட்சிக்கும் நிரந்தர வருவாயை கோடிகளில் கொடுத்தால் போதும் என்ற மனநிலையே நிலவுகிறது. அதனால்தான் பண்டிகை நாட்களில் கோடிகளில் இலக்கு வைக்கிறார்கள். நாம் தெருக்கோடியில் வீழ்ந்து கிடக்கும் போது கோடிகளில் விற்பனை என பத்திரிக்கைகள் கொட்டை எழுத்தில் போடுகின்றன.

சின்னக் குழந்தை அதற்கு ஊற்றிக் கொடுத்து ஊறுகாயும் கொடுத்து வாயை இப்படித் துடையடா என்று சொல்லிக் கொடுத்து போதை ஏறிருச்சா... எனக் கேட்டு... சை... கேடு கெட்ட இளைஞர்கள், தாங்கள் செய்த கூத்தை செல்போனில் படமாக வேறு எடுத்து முகநூலில் பதிந்திருக்கிறார்கள். இந்த முகநூல் வந்ததில் இருந்து எதை எதை பதிவது என்ற விவஸ்தையே இல்லாமல் போய்விட்டது. இதைப் பற்றிப் பேசினால் தனிப் பதிவாக எழுத வேண்டி வரும்.

பதினோறாம் வகுப்பு படிக்கும் மாணவி, மாணவர்களுடன் சேர்ந்து தண்ணியடித்துவிட்டு பேருந்து நிலையம் வரும் போது வண்டியில் இருந்து தரையில் விழுந்து தூக்க வந்தவர்களை எல்லாம் வாய்க்கு வந்தபடி பேசி உழன்று கொண்டு கிடக்கிறாள். போலீஸ் வருகிறது... கூட்டிச் செல்கிறது. பெற்றவர்களை வரவைத்து வீட்டுக்கு அனுப்புகிறார்கள். தன் மகன்/ மகள் சான்றோன் எனக் கேட்கத்தான் ஆசைப்படுவார்கள் பெற்றோர், ஆனால் இங்கே உங்கள் மகள்/ மகன் மது என்னும் சகதிக்குள் விழுந்துவிட்டான்(ள்) என்று எல்லா மீடியாக்களும் முகநூல் பக்கங்களும் படம் பிடித்து காட்டி எந்தளவுக்கு கேவலப்படுத்தணுமோ அந்தளவுக்கு கேவலப் படுத்திவிட்டார்கள். அந்தப் பெற்றோருக்கு எவ்வளவு அவமானம். இதைப் பார்த்து தவறு செய்த பிள்ளை திருந்தியிருக்கும்தான். ஆனால் நம்ம வீட்டுப் பிள்ளையாக இருந்தால் நாம் இதைப் பதிவோமா என யாரும் சிந்திக்கவில்லை.

இன்னும் பள்ளியில் பாத்ரூமில் வைத்து அடித்து விட்டு வகுப்பறையில் வாந்தி எடுத்த மாணவர்கள், குடித்து விட்டு ரோட்டில் கிடந்த மாணவன் என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு செய்தியைத் தாங்கி மாணவர் சமுதாயம் மது என்னும் மாய வலைக்குள் விழுந்து விட்டதை சொல்லிச் சிரிக்கின்றன. நம் சமுதாயம் எதை நோக்கிப் பயணிக்கிறது ஒரு பக்கம் படித்து நல்ல மதிப்பெண்கள் பெற்று செய்தித்தாள்களில் சிரிக்கும் மாணவர்கள்... இன்னொரு பக்கம் குடியால் சீரழிந்து சந்தி சிரிக்க தெருவில் கிடந்து செய்தியாகும் மாணவர்கள்... கெடு கெட்ட குடியின் சீரழிப்பு எப்போது நிற்கும்?

தமிழ்நாட்டில் மதுக்கடைகளை மூடலாமா என்ற கேள்விக்கு மூடணும் அப்பத்தான் சமுதாயம் சரியாகும்.. ஆனா நான் நிரந்தரக் குடிகாரன் எனக்கு தண்ணி வேணும். என்ன பஸ் ஏறினா பாண்டிச்சேரி இருபது ரூபா கொடுத்துப் போயி குடிச்சிட்டு வரவேண்டியதுதான் என்றும் என்னோட குடியாலே குடும்பமே போச்சு இப்ப நடுத்தெருவுல நிக்கிறேன்... யாரும் உதவலை... ஆனா எனக்கு சரக்கு வேணும் என்றும் சம்பாதிக்கிறது முன்னூறு ரூபாய்தான் ஆனா ஐநூறு ரூபாய்க்கு குடிக்கிறேன் என்றும் கண்டிப்பாக மதுக்கடைகளை அடைக்க வேண்டும் நாங்கதான் குடிச்சி அழிஞ்சிட்டோம் எங்களுக்கு பின்னாடி வர்ற தலைமுறையாச்சும் நல்லாயிருக்கணும் (இதைச் சொன்னது இருபது வயதுக்குள் உள்ள பையன்) என்றும் சொல்கிறார்கள்.

ஒரு அம்மாவிடம் குடிக்கு எதிராக போராட வேண்டும் என்று கேட்டிருப்பார்கள் போல அந்தம்மா மனசுல கெடக்கதை எல்லாம் கொட்டிருச்சு. குடும்பச் சீரழிவு, குடிச்சிட்டு போட்டு அடிக்கிறது... அப்படித்தான் குடிப்பேன்னு சொல்றது, குடிச்சிட்டு அம்மணமாக் கிடக்கவன் புருஷனோ, அண்ணன் தம்பியோ, மகனோ யாரா இருந்தாலும் நாங்க போயி துணியை கட்டிவிட்டு கூட்டியார வேண்டியிருக்கு என்று சொல்லி எங்க வேணுமின்னாலும் வாறேன் என்று சொன்னுச்சு... இந்த ஒரு தாயல்ல இவரைப் போல் எத்தனை தாய்மார்கள் இப்படி வெந்து சாகிறார்கள் என்பதை நாமட்டுமல்ல அரசியல்வாதிகளும் அறியாமல் இல்லை. இருந்தும் எருமை மாட்டு மேல் மழை விழுந்தது போலத்தானே இருக்கிறோம். இப்ப எருமை மாடு கூட மழை பெய்தால் ஓட ஆரம்பித்துவிட்டது... ஆனால் நாம் இன்னும் நின்று கொண்டேதான் இருக்கிறோம்.

குடியால் எத்தனை குடும்பங்கள் சீரழிந்துவிட்டன... எங்கள் ஊரில் நல்லா வாழ்ந்த குடும்பம்... கணவனை இழந்த பின் இரண்டு மகன்களுக்காகவே வாழ்ந்து மூத்தவனை மலேசியாவில் சாகக் கொடுத்துவிட்டு இளையவன் இருக்கிறான் என் துன்பம் போக்க என்று இருந்தவரை குடிகுடி என குடித்து கையில் தொழில் இருந்தாலும் ஓரிடத்தில் நிலையாக இருக்காது மனைவி குழந்தையை அடித்து விரட்டிவிட்டு வாழும் மகன், இந்த வருட திருவிழாவில் வெள்ளையும் சொள்ளையுமாய் எல்லோரும் நிக்கும் போது திருவிழாவிற்கு வந்த தப்பாட்டக்காரர்களின் தாளத்துக்கு தண்ணிப் பவரில் ஆடி என்னென்ன பேச வேண்டும் என்பதில்லாமல் பேசி, சண்டையிழுத்து... அந்தத் தாய் 'மாரி என்னோட குடும்பத்தை இப்படிப் பண்ணிட்டியே' என்று நடக்க முடியாத காலோடு கோவிலில் அழுது சாமி கும்பிடும்போது இதயமே வலித்தது. இன்னும் எத்தனை எத்தனை குடும்பங்களில் இப்படிப்பட்ட வாழ்க்கை.

சினிமாக்களில் மது அருந்துவது, சின்னப்பையனை பாட்டில் வாங்கி வரச் சொல்வது, பசங்க தண்ணி, சிகரெட், கஞ்சா அடிப்பது, சிறுவர்கள் காதலுக்கு ஐடியா கொடுப்பது, நாலாவது படிக்கும் இருவர் காதலில் விழுவது போன்ற காட்சிகளை வைத்து சிறுவர்கள் மனதில் நஞ்சை விதைக்கிறார்கள். இப்போ ஒரு படத்துக்கு V.S.O.P அப்படின்னு சரக்கோட பேரை வச்சி அதை குடிச்சிக்கிட்டே பேசுற மாதிரி டீசர் விடுறானுங்க. பணம் சம்பாதிக்க எதையும் செய்ய நினைக்கும் இயக்குநர்கள் கொஞ்சமேனும் சமூக சிந்தனையோடு படமெடுக்கலாமே. இந்த பட டீசருக்கு எதிர்ப்பு வலுத்துள்ளது. இருந்தும் என்ன இதே காட்சிகளோடு படத்தை வெளியிட்டு லாபம் பார்த்து விடுவார்கள் சமூகத்துக்கு செய்தி சொல்ல வந்த இயக்குநரும், தயாரிப்பாளரும். இந்த விஸ்கி(V) சாப்பிட்ட(S) ஒதவாகரை(O) பயலுக(P) படத்தை வெளிவராமல் தடுக்கணும்.

மதுவால் மயங்கிக் கிடக்கும் மனிதர்களை, மாணவர்களை மீட்டெடுக்கவும், போதையின் பாதையில் இனிமேலும் மாந்தர்கள் செல்லாத வண்ணமும் ஒரு தூரித நடவடிக்கை எடுத்து மதுக்கடைகளை மூட அரசு முன்வருமா? அல்லது கோடிகளில் குவியும் வருவாய்க்கான மானுடம் அழிந்தால் என்ன... மாணவன் செத்தால் என்ன என்று வாய்மூடி இருக்குமா? ஆளும்அரசு அமைதி காக்க போராட்டங்கள் என்று சொல்லி எதிர்கட்சிகள் வாழ்க்கை நடத்துமா?

எது எப்படி இருந்தாலும் குடித்தவன் குடித்து குட்டிச்சுவராய் ஆகட்டும்... ஆனால் மாணவர் சமுதாயமாவது மது என்ற மாயவலைக்குள் விழுகாமல் விலகி வாழக் கற்றுக் கொள்ளட்டும்.
-'பரிவை' சே.குமார்.

சனி, 11 ஜூலை, 2015

தொடர்கதை : வேரும் விழுதுகளும் (பகுதி - 26)

முந்தைய பகுதிகள் :


"சரித்தான்... இப்ப பிரிச்சது அப்படியே இருக்கட்டும்... அப்புறம் பாத்துக்கலாம்..." 

"சரி.. மாப்ள... மாமாக்கிட்ட பேசினியா... என்னதான் சந்தோஷமா சொத்தைப் பிரிச்சிக் கொடுத்தாலும் ரெண்டு பேரு மனசுக்குள்ளயும் எதோ சஞ்சலம்... அதை முகத்துல பார்த்தேன்... கொஞ்சம் பிரியாப் பேசுங்க... மணிக்கிட்டயும் சொல்லி பேசச் சொல்லு... ஏன்னா அவரு எதையாவது நினைச்சி ஒண்ணு கெடக்க ஒண்ணு ஆயிடாம..."

"சரித்தான்... நாளைக்கு கூப்பிட்டுப் பேசுறேன்... உடம்பைப் பாத்துக்கங்க..." என்றான் குமரேசன்.

இனி...

"என்னங்க சாப்பிட வாங்க... வேலைக்குப் பொயிட்டு வந்தா குளிச்சிட்டு சாமி கும்பிட்டு காலாகாலத்துல படுக்கலாமில்ல... பிள்ளைங்க மாதிரியே டிவிய கட்டிக்கிட்டு அழுகிறீங்க..?" சமயலறையில் இருந்து கத்தினாள் அபி.

"அட கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிக்கிறேனே... நீயுந்தான் வந்த உடனே சீரியல் எல்லாம் பாக்குறே...? நா என்ன நியூஸ் பாப்பேன், இல்லேன்னா இதுகளோட சேர்ந்து சிரிப்பொலி பாப்பேன்... அது பிடிக்கலையா...." பதிலுக்கு குமரேசனும் கத்தினான்.

"ஆமா... உங்க பிள்ளைங்கக்கிட்ட நா சீரியல் பாத்துட்டாலும்... எந்த நேரமும் சுட்டி டிவியை கட்டிக்கிட்டு அழுகுறான்... சாப்பிட்டுப் போயி எவ்வளவு நேரம் வேணுமின்னாலும் பாருங்க... எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு... சீக்கிரமே படுக்கணும்..."

"சரி... சரி.... வர்றோம்... டேய் வாங்கடா... அம்மாவுக்கு முடியலை போல... பாவம்... எல்லாருமா எடுத்து வச்சி சாப்பிட்டு வருவோம்.." என்றபடி டிவியை அணைத்துவிட்டு எழுந்தான்.

அபி வைத்த தோசையை சாப்பிட்டபடி "அபி இன்னைக்கி அத்தாங்கிட்ட பேசினேன்..."

"ம்..."

"என்ன ம்...?"

"அப்புறம் என்னங்க... நேத்துத்தான் அண்ணனைப் பாத்துட்டு வர்றோம்... இன்னைக்கி பேசினா... அப்படி என்ன முக்கியமா பேசியிருக்கப் போறீங்க?"

"இல்ல முக்கியமான மேட்டராத்தான் பேசினேன்..."

"தோசையை பிய்த்து வாய்க்கு கொண்டு போனவள் அதை வாயில் வைக்காமல் "அப்படி என்னங்க தலை போற விஷயம்?"

"இல்ல... அண்ணி பேசுச்சுல்ல.."

"அக்கா என்ன சொன்னுச்சு...?"

"ஒண்ணுமே தெரியாது உனக்கு... அசடு மாதிரி கேள்வி கேப்பே... நேத்து சொத்துப் பிரிக்கும் போது மாமரத்துக் கொல்லையைக் கேட்டு பிரச்சினை பண்ணலை..."

"ஓ அதுவா... நமக்கு வீட்டைக் கொடுத்துட்டாங்கன்னு கேட்டுச்சு... அதுக்கென்ன இப்போ..?"

"அதான் அந்த இடத்தை அண்ணன்கிட்டயே கொடுத்துடலாம்ன்னு அத்தான்கிட்ட பேசினேன்..."

"ஆமா... நாம என்ன அங்க போயி தோட்டந்தொரவா போட்டுக்கிட்டு இருக்கப் போறோம்... அவுங்களுக்காச்சும் பயன்படட்டுமே..."

"அம்மா சட்னி கொடுங்க..." என்று கேட்ட முகேஷூக்கு சட்னி வைத்தவள் "ஏய் வச்சதே ஒரு தோசை... அதையும் கொறிச்சிக்கிட்டே இருக்கே... பொம்பளப்புள்ள நல்லாச் சாப்பிடு... " என திவ்யாவை அதட்டி விட்டு "இவளைச் சாப்பிட வைக்கிறதுதாங்க எனக்கு பெரிய பிரச்சினை... ஸ்கூலுக்கு கொண்டு போற சாப்பாட்டை அப்படியே கொண்டுக்கிட்டு வந்துடுறா..." என்றாள் குமரேசனிடம்.

"திவ்வி... வயசுப்புள்ள நல்லாச் சாப்பிடணும்...உன்னோட வயசுல எல்லாம் சுந்தரி அத்தை... கண்மணி அத்தையெல்லாம் எத்தனை தோசை சாப்பிடுவாங்க தெரியுமா... அப்பத்தாவால எங்களுக்கு பலகாரம் பண்ணிப் போடமுடியாது... அதுனால பெரும்பாலும் கஞ்சியே வச்சிரும்..." என்றான் மகளிடம்.

"சாப்பிட்டுக்கிட்டுத்தானேப்பா இருக்கேன்..."

"சரி.. சரி.. சாப்பிடு..."

"நீங்க கதையை பாதியில விட்டுட்டீங்களே... சொல்லுங்க..."

"நீ என்ன சொன்னே?"

"நீங்கதானேங்க சொன்னீங்க?"

"இல்ல கடைசியா என்னமோ சொன்னியே... அது தெரிஞ்சாத்தானே ஒரு கண்டினியூட்டி வரும்..."

"ரொம்ப ஓவரு இதெல்லாம்... நாம என்ன பண்ணப்போறோம்... அவங்களுக்காச்சும் பயன்படட்டுமேன்னு சொன்னேன்."

"இதுதான்... இதைத்தான் அவருக்கிட்ட சொன்னேன்... ஆனா அவரு அதுக்கு விவரமா பேசி... அதெல்லாம் வேணான்னுட்டு சொல்லிட்டார்"

"அண்ணன் வேணான்னு சொன்னாரா...? ஏன்...? அப்ப அண்ணனுக்கு சின்ன மச்சினன் மேலதான் ரொம்ப பிரியம் போல... பேசாம திவ்வியை அந்த வீட்டு மருமகளாக்கிடுவோம்..."

"அம்ம்ம்ம்மா..."

"ஆமா என்னமோ நாளைக்கே கட்டிக் கொடுக்கப் போறமாதிரித்தான் கத்துறே... ஏய் வாயை மூடிக்கிட்டு சாப்பிடுடி..." என்றாள் அபி.

"வாயை மூடினா எப்படிம்மா சாப்பிடுறது... நீங்க செஞ்சு காமிங்க..." கேட்டு விட்டு சிரித்தான் முகேஷ்.

"அப்பன மாதிரியே தரித்திரம் இல்லாமப் பேசு..."

"ஆமா அவன் கேக்குறதுல என்ன தப்பு... வாயை மூடிக்கிட்டு எப்படி சாப்பிட முடியும்...?"

"சாமி... நீங்க ஆரம்பிக்காதீங்க.... "

"சரி... அவரு என்ன சொல்றாருன்னா... அபிக்கு மன வருத்தம் வந்துடாமன்னு சொல்லுறாரு..."

"எனக்கென்னங்க மன வருத்தம்... உங்க அண்ணன்... அவருக்கு கொடுக்கிறதுக்கு தடை போட நான் யாரு... எனக்கு எல்லா உறவுகளும் எங்கூட எப்பவும் சந்தோஷமா இருக்கணும் அதுதான் வேணும்... இந்த சொத்து பத்துகாக அத்துக்கிட்டு நிக்கக்கூடாது..."

"உன்னையப் பத்தி என்னைவிட அத்தானுக்கு நல்லாத் தெரியும்... உன்னையே நம்பி வந்தவடா அவ மனசு கோணம நடந்துக்கன்னுதான் சொல்லுவாரு... அவரு சொன்னதும் சரிதானே...?"

"எப்படி சரியாகும்? இடத்தைக் கொடுத்தா என்னவாம்?"

"இல்ல ரோட்டோரத்துல இருக்கது அது ஒண்ணுதான்.... அதையும் தூக்கிக் கொடுத்துட்டா...நாளப்பின்ன நாம வீடு கட்ட நினைச்சாலும் முடியாதுல்ல..."

"அதுதான் நமக்கு பழைய வீடு இருக்குல்ல..."

"இருக்குதான்... ஆனா செட்டியாரு கொல்லையில இஞ்சினியரிங் காலேசு வருதாமே... அப்ப நமக்கு அங்கன ஒரு வீட்டைக் கட்டினா வாடகைக்கு விடலாம்ன்னு தோணுமில்ல..."

"ஓ... அப்படியா..."

"இதெல்லாம் அண்ணிக்குத் தெரிஞ்சுதான் பிளான் பண்ணுதுன்னு அத்தான் சொல்றாரு..."

"அடேங்கப்பா... அக்கா பயங்கரமா கணக்குப் போடுதே.... சரி... இதுக்காக சண்டை வம்புன்னு வராம கொடுத்துருங்களேன்..."

"நானும் அதான் சொன்னேன்.. ஆனா அத்தான் அது கிடக்கட்டும்... மகா கல்யாணத்துக்கு நீ நல்லாச் செய்யின்னு சொல்றாரு... அதுவும் சரியின்னு படுது... இப்ப கொடுக்க வேண்டாம்... பின்னால சூழ்நிலை எப்படின்னு பாத்துக்கிட்டு கொடுக்கலாம்..."

"ம்... அண்ணன் சொன்னா சரியாத்தான் இருக்கும்... கிடக்கட்டும்... மகா கல்யாணத்தப்போ பாத்துக்கலாம்...." என சாப்பிட்ட தட்டுக்களை எடுத்துக் கொண்டு எழுந்தாள்.

"அப்பறம் அப்பா, அம்மா முகமே சரியில்லையாம்... பேசச் சொன்னாரு..."

"ஆமாங்க நேத்தே மாமா முகம் நல்லாயில்ல... பேசினீங்களா...? என்ன சொன்னாங்க...?"

"பேசலை..."

"ஏன்? பேசியிருக்கலாமே...?"

"இல்ல பிள்ளைங்ககிட்ட பேசினாங்கன்னா மனசு கொஞ்சம் ரிலாக்ஸாகும் இல்லையா... அதான் வீட்ல வந்து பண்ணலாம்ன்னு நினைச்சேன்..."

"ம்... இப்ப பண்ணினா என்னமோ ஏதோன்னு பதறிருவாங்க... காலையில பேசலாம்..."

"ம்..."

"ஏலா... இந்தப் பயலுவ ரெண்டு பேரும் ஒரு போனு கூட பண்ணலையே...?" கயிற்றுக் கட்டிலில் படுத்துக் கொண்டு பனை விசிறியால் வீசியபடி மோட்டு வலையை பார்த்துக் கொண்டே கேட்டார் கந்தசாமி.

"நல்லாத்தேன்... நேத்துத்தானே போனானுங்க... இன்னைக்கி எப்படி போனு பண்ணுவாய்ங்க... ரொட்டா ரொட்டான்னு போனு பண்ணிக்கிட்டே இருக்கனுமாக்கும்..."

"ஏலா உனக்கு இம்புட்டுக் கோவம் வருது...?"

"பின்ன என்ன... மொத நா வேலை... கொஞ்சம் கூடக் கொறய இருக்கும்... இதுல போனு எங்கிட்டு பண்றது போனு..."

"சரிலா... எதுக்கு ராவுல கத்துறே...?"

"கத்தலை.... சொன்னேன்..."

"சொன்னதே ஆந்த அலறுன மாதிரி இருக்கு..." மெதுவாக முணங்கினார்.

"என்ன...?"

"ஒண்ணுமில்ல... அதைவிடு... எனக்கு ஒண்ணு தோணுதுலா..."

"மோட்டு வலையைப் பாத்தா?"

"நக்கலா... இந்த கண்ணதாச பயலுக்கு நாம ஒண்ணுமே கொடுக்கலையே... ஏதாவது கொடுத்தா என்னன்னு தோணுதுலா..."

"அதான் சொத்த சரிபாதியா பயலுகளுக்கு பிரிச்சிக் கொடுத்தாச்சே... சும்மாவே ஏ நண்ணமக சொத்துக்கு ஏழரையைக் கூட்டப் பாத்தா... இதுல கண்ணதாசனுக்கு கொடுக்கணுமின்னு சொல்லியிருந்தா பத்ரகாளி ஆயிருக்கமாட்டா...."

காளியம்மாள் இப்படிக் கேட்டதும் கண்ணதாசனுக்கு எதாவது செய்யணுமின்னு சொன்னா மீண்டும் ஒரு பிரச்சினை வருமோ என்ற ஐயம் அவருக்குள்ளும் ஒட்டிக் கொள்ள, மேற்கொண்டு பேசாமல் அமைதியாக எங்கோ ஆந்தை அலறும் சத்தம் கேட்க, நாய்கள் குரைக்க ஆரம்பித்தன.

(வேரும் விழுதுகளும் வளரும்)
-'பரிவை' சே.குமார்.

வெள்ளி, 10 ஜூலை, 2015

பாபநாசம்... அட்டகாசம்


த்ரிஷ்யம் - மலையாளத்தில் மோகன்லால், மீனா நடிப்பில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம். படத்தின் கருவும் கதையோட்டமும் மிக நேர்த்தியாக இருந்ததால் படத்தை மற்ற மொழிகளில் முன்னணி நடிகர்கள் நடிக்க அந்தந்த மொழிக்கேற்ப எந்த மாற்றமும் செய்யாமல் நடிகர்களுக்காக சமரசம் செய்யாமல் அப்படியே எடுத்து அசத்தல் வெற்றி பெற்றார்கள்.

அதே கதையை தமிழில் பாபநாசம் என்ற பெயரில் எடுக்கிறார்கள் என்றதும் கமல் நல்ல கலைஞன்தான்... ஆனால் அவரது தலையீடு இல்லாமல் படம் எடுக்கப்படுமா? கமலுக்காக திரைக்கதையில் மாற்றம் செய்யப்படுமா? இதைவிட முக்கியமாக கமல் நடிக்கிறாரே படம் பிரச்சினையில்லாமல் வெளிவருமா? என்று ஆளாளுக்கு பேச ஆரம்பித்தார்கள். இதில் முக்கிய பிரச்சினையாக மலையாளத்தில் நடித்த மீனாவே இங்கும் நாயகி ஆகலாம் என்று பேச்சு அடிபட்டது. ஆனால் கமல் மீனா வேண்டாமென மறுத்து நதியாவை நடிக்க வைக்க முயற்சிப்பதாக செய்திகள் வந்தபோது இயக்குநரே விரும்பி கவுதமியை நடிக்க வைத்துவிட்டார் என்றார்கள்.

சரி விஷயத்துக்கு வருவோம்... பாபநாசம் தமிழில் எப்படி? கமல் என்ற மகாநடிகன் கதையின் நாயகனாக மட்டுமே நடித்து இருப்பதே படத்தின் மிகப்பெரிய வெற்றி. அது போக கதையை தமிழுக்கு ஏற்றார்போல் எடுத்திருந்தாலும் த்ரிஷ்யத்தில் இருந்து காட்சிகளை மாற்றாமல் அப்படியே எடுத்திருக்கிறார் இயக்குநர் ஜீத்து ஜோசப், த்ரிஷியத்தின் இயக்குநரும் இவரே. நெல்லைப் பேச்சு வழக்கோடு நகரும் கதை மக்கள் மனதில் மிகப்பெரிய இடம் பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.


த்ரிஷியத்தில் மோகன்லால் தன்னிடம் ஜீப் இருந்தாலும் ஒரு பழைய சைக்கிளை தலையை ஒரு பக்கமாக சாய்த்தபடி ஓட்டிக் கொண்டு வருவார். நான் கமல் ரசிகன் என்றாலும் தமிழில் எடுக்கிறார்கள் அதுவும் கமல் நடிக்கிறார் என்றதும் கண்டிப்பாக சைக்கிள் ஓட்டமாட்டார்... வண்டியை கொடுத்து இந்தக் காட்சியின் அழுத்தத்தைக் கெடுத்து விடுவார்கள் என்று எனது மலையாள நண்பரிடம் சொன்னேன். ஆனால் படம் பார்த்தபோது சைக்கிளுக்குப் பதிலாக டிவிஎஸ்ஸில் கமல் வரும்போது ரொம்பப் பிடித்துப் போனது.

பாபநாசத்தில் வாழும் ஒரு அன்பான குடும்பத்தில் கல்வி சுற்றுலா போன மகளால் சுற்றும் ஒரு பிரச்சினை கொலையில் முடிந்து அதை நாயகன் எப்படி மறைத்து குடும்பத்தைக் காப்பாற்றுகிறான் என்பதே கதை. கதையோடு ஒன்றி ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் அழகாக நகர்த்தியிருப்பார்கள். கமலின் சின்ன மகளாக நடிக்கும் எஸ்தருக்கு இதே கதையில் மூன்றாவது முறையாக நடிக்கும் வாய்ப்பு... முகத்தில் பயம் காட்டும் ஒவ்வொரு காட்சியிலும் குட்டி கலக்கியிருக்கு.

கமல்... சொல்லவே வேண்டாம்... நடிப்புக்காகவே பிறந்த கலைஞன்... விஸ்வரூபம், உத்தம வில்லனில் பார்த்த கமலுக்கும் பாபநாசத்தில் பார்க்கும் கமலுக்கும் நிறைய வித்தியாசம். வேஷ்டி சட்டையில் மகாநதியில் பார்த்த கமலைப் போல மீண்டும் பார்க்க முடிகிறது. பாசமான குடும்பத் தலைவனாக, கேபிள் டிவி நடத்துபவராக, கொலையை மறைக்க தான் பார்த்த படங்களை வைத்து திட்டம் தீட்டி போலீசில் அடிவாங்கி, உதைவாங்கி குடும்பத்தை காப்பாற்றுபவராக... நெல்லைத் தமிழ் பேசி சுயம்புலிங்கமாகவே வாழ்ந்திருக்கிறார். இறுதிக் காட்சியில் ஒரே டேக்கில் ஓராயிரம் முகபாவம் காட்டி கமலுக்கே உரிய நடிப்பில் மிளிர்கிறார்.


கமலின் மனைவியாக வரும் கவுதமி... பாபநாசம் வெளியானதும் மீனா கும்முனு இருந்தார்... இது வத்தக் காமாட்சி மாதிரி இருக்கு... நல்லாவே நடிக்கலை என்றெல்லாம் சொன்னார்கள். த்ரிஷ்யம் முன்னால் வந்து அதில் மீனா நடித்திருந்ததால் நமக்குள் மீனா பொருத்தமான தேர்வாகத் தெரிந்தார். இதே வேறு யாராவது நடித்திருந்தால்...? மேலும் வயதுக்கு வந்த பெண்ணுக்கு தாயாக வரும்போது வத்தக்காமாட்சி எந்த விதத்திலும் குறையவில்லை. பெண் குழந்தைகளைப் பெற்ற தாயின் பரிதவிப்பை முகத்தில் காட்டியிருக்கிறார். அவருக்கான குரல் மற்றும் உடல்மொழி கொஞ்சம் ஒத்துழைக்கவில்லை என்றாலும் தனக்கான இடத்தை சரியாக தக்க வைத்துக் கொண்டுள்ளார். 

ஆஷா சரத்... மிடுக்கான போலீஸ் அதிகாரி... மலையாளத்தில் சும்மா கலக்கி எடுத்திருப்பார். அவரே தமிழிலும் போலீஸ் அதிகாரியாக வருகிறார். ஒரு போலீஸ் அதிகாரி என்றால் எப்படி இருக்க வேண்டும்... அதுவும் காணாமல் போனது தனது மகனைப் பற்றி விசாரிக்கும் போது எந்தவிதமான விசாரணை முறைகளைச் செய்வார் என்பதை எல்லாம் அழகாக, போலீசுக்கே உரிய மிடுக்கோடு செய்து கமலுக்கு நிகராக நடிப்பில் கலக்கியிருக்கிறார். எஸ்தரை கலாபவன் மணி அடிக்கப் போகும்போது கமலின் கண்கள் போவதைப் பார்த்தே அவர்களை வெளியேற்றிவிட்டு விசாரிப்பதிலாகட்டும், என் மகன் என்ன ஆனான் என தவிப்பதிலாகட்டும் சபாஷ் போட வைக்கிறார்.

கமலின் மகள்களாக வரும் நிவேதா தாமஸ், எஸ்தர், டீக்கடை பாயாக வரும் எம்.எஸ். பாஸ்கர் (மனுசனின் நெற்றியில் தொழுவதால் ஏற்படும் அடையாளத்தை கூட தத்ரூபமாகக் கொண்டு வந்து நம் கண்முன்னே ஒரு பாயாகவே நிறுத்தியிருக்கிறார்கள்), போலீசாராக வரும் அருள்தாஸ், இளவரசு, கலாபவன் மணி, ஆஷாவின் கணவராக வரும் ஆனந்த் மகாதேவன், கமலின் மாமனாராக வரும் டில்லி கணேஷ், கமலிடம் வேலை பார்க்கும் பையன், கண்டக்டராக வரும் சார்லி என எல்லாருமே மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.


இசை ஜிப்ரான்... கமலின் படங்களுக்கு தொடர்ந்து இசையமைக்கும் இசையமைப்பாளாராக கமலின் மனம் கவர்ந்தவராக மாறிவிட்டார் ஜிப்ரான். பாடல்களுக்கு அதிக முக்கியத்துவம் இல்லை என்றாலும் பின்னணி இசையில் வெற்றி பெற்றுவிட்டார். படத்தின் ஆரம்பக் காட்சிகளில் அடக்கி வாசித்தாலும் வீட்டிற்கு போலீஸ் ஜீப் வரும்போது பின்னணி இசையில் இனி ஒரு திக்... திக்.. அனுபவத்தோடு படம் பார்ப்பீர்கள் என்று எல்லோரையும் உணர வைத்துவிட்டார்.

மோகன்லாலா...? கமலா...? யார் வெற்றி பெற்றார்கள் என ஒரு பட்டிமன்றமே நடக்கிறது. கமல் நடிப்பை சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பதில்லை... ஆஷா சரத் வீட்டில் அடிபடும் இடத்தில்... பிணத்தை தோண்டும் இடத்தில்... மனைவியை கொஞ்சுமிடத்தில்... மகள்களை அணைத்துக் கொள்ளும் இடத்தில்... இறுதிக் காட்சியில்... என ஒவ்வொரு இடத்திலும் மனுசன் பின்னிப் பெடலெடுத்துவிட்டார். மேலும் இந்தக் கதையை மூன்று மொழிகளில் மூன்று நடிகர்களின் நடிப்பில் பார்த்தும் விட்டார். அந்தச் சாயல் வராமல் நடிக்க வேண்டும் என்பதே அவருக்கான சவாலாக அமைந்தது. ஆனால் மோகன்லால்... ஒரிஜினலுக்கு முகம் கொடுத்தவர், தனக்கான பாத்திரப் படைப்பில் அவர் அச்சு அசலாக வாழ்ந்திருப்பார்... இதில் கமலா, லாலா என்றெல்லாம் பார்க்க வேண்டியதில்லை. மலையாளத்தில் அவர் எப்படிச் செய்தாரோ அதைவிட ஒருபடி மேலே கமல் தமிழில் செய்திருக்கிறார்... அவ்வளவே. நான்கு கதாநாயகர்களிலும் நம்மவருக்கே முன்னிலை...

வசனம் ஜெயமோகன்... இவரும் சுகாவும் எல்லோருக்கும் நெல்லைப் பேச்சு வழக்கை அட்சர சுத்தமாக சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். வசனம் பல இடங்களில் கூர்மையாக இருக்கிறது. 


கமலால் மீண்டும் ஒரு மகாநதியைக் கொடுக்க முடியுமா என்றால் நிச்சயம் கொடுக்க முடியாது என்று சொல்லலாம்... அதில் பொம்பளப்புள்ளையை பெத்த அப்பனாக வாழ்ந்து... படம் பார்த்த ஒவ்வொருவரையும் கலங்க வைத்திருப்பார். அதனால் நிச்சயமாக அப்படி ஒரு படத்தை அவரால் இனி திரும்பிக் கொடுக்கமுடியாது என்றால் பாபநாசம் போன்ற படங்களை மகாநதிக்கு அடுத்த இடத்தில் அவரால் கண்டிப்பாக கொடுக்க முடியும். விஸ்வரூபங்களையும், உத்தமன்களையும் தாங்கிப் பிடிக்கும் கமல் தனது நடிப்பிற்கு தீனி போடும் இது போன்ற படங்களை இடையிடையே கொடுக்க வேண்டும். இவைதான் உலக நாயகனை என்றும் நினைவில் நிறுத்தும். காலத்தால் அழியாத படங்களாக அமையும்.

கமலுக்காக இயக்குநர் சமரசம் செய்யாமலும் கதைக்காக கமல் சமரசம் செய்து கொண்டும் சிறப்பான ஒரு படத்தைக் கொடுத்திருக்கிறார்கள். ஆம்... பாபநாசம் ஒவ்வொரு பெற்றோரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்.

-'பரிவை' சே.குமார்.

வியாழன், 9 ஜூலை, 2015

வேரும் விழுதுகளும் - ஒரு பின்னோட்டம்

சிறுகதைகள் எனக் கிறுக்கும் எனக்கு தொடர்கதை எழுத வேண்டும் என்று தோன்றியதில்லை... அப்படி எழுதப் பிடிப்பதும் இல்லை... சிறுகதை என்றால் எடுத்த கருவை வைத்து நாலுபக்கம் கிறுக்கி ஒரு முடிவுக்கு கொண்டு வந்திடலாம். தொடர்கதை என்றால் நீளமாக எழுதிக் கொண்டே போகவேண்டும். கதாபாத்திரங்களும் நிறைய இருக்க வேண்டும். அவர்களை கதையுடன் இணைத்துக் கொண்டு போகவேண்டும். ஒரு கதாபாத்திரத்தையும் விட்டு விட்டு செல்ல முடியாது. அப்படி விட வேண்டும் என்றால் மெகா சீரியலில் வருவது போல் வெளிநாட்டுக்கு விரட்ட வேண்டும் இல்லை என்றால் ஆளைக் கொல்ல வேண்டும்.

சரி விஷயத்துக்கு வருவோம்... வலையில் எழுத ஆரம்பித்தும் சினிமா, கவிதை, கட்டுரை, சிறுகதை என கலந்து கட்டி ரெய்னா போல் சிக்ஸரடித்தாலும் தொடர்கதை என்ற ஒரு பந்தை மட்டும் ரஹானே மாதிரி தொடாமல் விட்டு விட்டு பேசாமல் இருந்தேன். அதற்கு காரணமும் இருக்கு... அது என்னன்னா... கல்லூரியில் படிக்கும் போது ஒரு குறுநாவல் போட்டியை ஒரு பத்திரிக்கை (சுபமங்களாவோ / காலச்சுவடோ ஞாபகத்தில் இல்லை) அறிவித்திருந்தது. சரி நாமளும் முயற்சிக்கலாம் என எழுத ஆரம்பித்து பக்கம் பக்கமாக எழுதி வைத்து பின்னர் அதை அடித்தல் திருத்தல் எல்லாம் செய்து ஒரு குறுநாவலாக்கினேன்.

கதை என்னன்னா... ஏறக்குறைய இளவரசன் - திவ்யா காதல் கதைதான்... அனுப்புவதற்கு முதல் நாள் படித்துப் பார்த்தேன். எனக்கு ஏதோ குறைவது போல் தெரிய, என்ன என்று யோசித்தும் என்னால் கண்டுபிடிக்கவே முடியவில்லை. ஐயாவிடம் கொண்டு சென்று கேட்கலாம் என்றால் இதென்னய்யா கதை என்று திட்டிவிட்டால்... யோசித்தேன்... யோசனையின் முடிவில் அனுப்ப வேண்டாம் என்று முடிவு செய்து பேசாமல் வைத்து விட்டேன்.

ஆரம்பத்தில் எனது சிறுகதைகள் கூட வசனங்கள் நிறைந்து சாதாரணக் கதைகளாகத்தான் இருக்கும். இங்கு வந்த பிறகுதான் கொஞ்சம் வாழ்க்கையைப் பேசலாமே என எழுத்தில் மாற்றம் கொண்டு வந்தேன். இதுவரை நூறு சிறுகதைகளுக்கு மேல் எழுதியிருக்கிறேன். சில கதைகள் சாதாரணமாக இருந்தாலும் பல கதைகள் எனக்குப் பிடித்த விதத்தில் வந்திருக்கின்றன என்பதே சந்தோஷம்தானே. சிறுகதைகளில் மாற்றம் கொண்டு வந்த பிறகுதான் முதலில் கிறுக்கிய நாவலை எவ்வளவோ மோசமாக எழுதியிருக்கிறோம் என்று தெரிந்தது, ஆம் அந்தக் கதை படிப்பவரை ஈர்க்கும் விதமாகவோ, ஒரு தொடர்ச்சியாய் நகரவோ இல்லை. அதன் காரணமாகவே தொடர்கதை ஏரியாவுக்குள் நுழைவதே இல்லை.

சரவணன் அண்ணன் இளமை எழுதும் கவிதை நீ என்னும் தொடரை எழுதும் போது எனக்கும் ஒரு நப்பாசை... சரி நாமளும் எழுதுவோம் என்று முயற்சித்த முதல் தொடர்கதைதான் 'கலையாத கனவுகள்'. இந்தக் கதை வாசிப்பவர்களைக் கவர்ந்ததோ இல்லையோ எனக்கு ரொம்பப் பிடித்திருந்தது. ஒரு கல்லூரியில் நடக்கும் கதை என்றாலும் மேல்சாதி கீழ்சாதி பிரச்சினை, கல்லூரிச் சண்டைகள், காதல் திருமணம் என பயணித்து எண்பது பகுதிகளாக வலையில் எழுதினேன். ஒரு சிலர் தொடர்ந்து வாசித்து என்னை உற்சாகப்படுத்தினார்கள்.

தொடர்ந்து வாசித்து என்னை உற்சாகப்படுத்தியவர்களில் சகோதரி மேனகா சத்யா அவர்களும் ஒருவர். அவர் ஒருமுறை கிரைம் தொடர் ஒன்று எழுதுங்கள் என்று கேட்டிருந்தார். பின்னர் பலமுறை ஞாபகமும் படுத்தினார். கிரைம் கதை எல்லாம் நம்மால எழுத முடியுமான்னு அதைப் பற்றி யோசிக்காமல்... பின்னர் முயற்சிக்கலாம் என ஒரு கிராமத்து வாழ்க்கையை மையமாக்கி ஆரம்பித்த இரண்டாவது தொடர்கதைதான் வேரும் விழுதுகளும்... இதுதான் கதை... இப்படி எழுதப் போறேன் என்று சொன்னதும் என்னோட நண்பன் தமிழ்க்காதலன் சொன்னதுதான் தொடருக்கான தலைப்பு... ஒரு குடும்பத்தில் நடக்கும் நிகழ்வுகளையும் உறவுகளுக்குள் இருக்கும் பாசத்தையும் வைத்து பிண்ணப்பட்டதுதான் கதை.

தொடர்ந்து 25 வாரங்கள் பதியப்பட்ட தொடர்கதை... பலரைக் கவர்ந்தது என்பது சந்தோஷமே... இங்கு குடும்பம் வந்தது... நான் ஊருக்குப் போனது போன்ற காரணங்களால் மனசு தூங்கியதில் முடிவை நெருங்கிக் கொண்டிருக்கும் கதையும் நின்றுவிட்டது. ஊரில் இருந்து வந்து மூன்று வாரங்களாகிவிட்டாலும் இன்னும் எழுத எண்ணம் வராததால் தொடர்கதையை தொடராமல் விட்டிருந்தேன். இனி தொடரலாம் என்று நினைத்திருக்கிறேன். முன்பே சொல்லியிருக்கிறேன்... என்னைப் பொறுத்தவரை தொடர்கதை என்பதும் சிறுகதை போல்தான் எழுதுவேன். பதியப் போகிறேன் என்றால் அன்றைக்குத்தான் அந்தப் பகுதியை எழுதுவேன். எனவே 26வது பகுதியை சனிக்கிழமை எழுதி அன்றே பதியலாம் என்று எண்ணம்... பதிவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது.

சென்ற தொடரைவிட இதை இன்னும் நல்லாக் கொண்டு செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் எங்கள் வட்டாரப் பேச்சு வழக்கில் எழுத நினைத்த கதையில் ஒரு பெரியவர் பேருந்தில் பயணிக்கும் போது அவரது நினைவுகளாய் மலரும் கதையாக மூன்று நான்கு பத்திகள் எழுதி... இதை இப்படி மாற்றலாமே என மாற்றி எழுத ஆரம்பித்ததுதான் வேரும் விழுதுகளும்... கதையின் ஆரம்பம் இப்படித்தான் இருக்கும்.

//... "இரண்டு நாட்களாகப் விடாது பெய்த பேய் பெய்த மழை கொஞ்சம் குறைந்திருந்தாலும் இன்னமும் கருமேகம் கூடுவதும் லேசாகத் தூறுவதுமாகத்தான் இருந்தது. வாயில் நிஜாம் லேடி புகையிலையை அதக்கியபடி கட்டிலில் அமர்ந்திருந்த கந்தசாமி, புகையிலை எச்சில் ஒழுகாதவாறு முகத்தை சற்றே தூக்கி வாயை அஷ்ட கோணலாக்கி "மழ கொஞ்ச விட்டாப்ல இருக்குல்ல' என்றார்.

"அந்த போயிலய துப்பிப்பிட்டு வந்து பேசுறது. வாயில இருந்து மேலுல வடியணுமாக்கும்... எப்பப்பாரு அந்தக் கருமத்தை வாயில ஒதக்கிக்கிட்டு... ஆமா அதுல அப்புடி என்னதா இருக்கோ... தெரியல.. ஒண்ணு துப்பிப்பிட்டு பேசுங்க... இல்ல பேசாம அந்தக் கருமத்த மொண்ணு குடிச்சிட்டு மோட்டு வலயப் பாத்துக்கிட்டு வூட்டுக்குள்ளய கெடங்க..." கத்தினாள் காளியம்மாள்....// 

என வயதான நாயகன் நாயகியின் அறிமுகத்தோடு ஆரம்பித்த கதை, அதன்பின் இரண்டு மகன்கள், இரண்டு மகள்கள், மாப்பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், அன்போடு பார்க்கும் அண்ணன் மகன், அவனது குடும்பம் என பாச நிகழ்வுகளோடு நகரும் கதை, கடைசியாக பதிந்த 25வது பகுதியில் கீழே இருக்கும் பத்திகளோடு முடிந்திருந்தது.

//.... "மாப்ள... உலகம் புரியணும்... எனக்கு நீ வேற... மணி வேற இல்லை.... எல்லாரும் நல்லாயிருக்கணும் அதுதான் எனக்கு வேணும்... சித்ரா கணக்கு வேற மாதிரி... நீ பேசாம உனக்கு உள்ள பத்துச் செண்டை வச்சிக்க... பின்னால பாக்கலாம்... இன்னைக்கி தூக்கிக் கொடுத்துட்டு பின்னால அவங்க அதன் மூலம் பலன் அனுபவிக்கும் போது நீயோ அபியோ மனசு வருந்தி எதாவது சொல்லப்போயி முட்டிக்கிட்டு நிக்கக் கூடாது.... நம்ம குடும்பம் கந்தசாமிங்கிற சிற்பி செதுக்குனது... அதுல ஒச்சம் விழக்கூடாது... செய்யணுமின்னு நினைச்சியன்னா... மகா கல்யாணத்துக்கு நீயே நின்னு செய்யி... அவனுக்கும் உதவியா இருக்கும்... என்னடா அத்தான் இப்படிப் பேசுறாரேன்னு நினைக்காதே... உலகம் புரிஞ்சி வாழக் கத்துக்க... ஏன்னா உன்னையப் புரிஞ்ச அபிக்கு நம்ம குடும்பந்தான்  உலகம்... அவ மனசுல இதுவரைக்கும் வராத வருத்தங்கள் வந்தா பின்ன கூட்டுக் குடும்பம் சின்னா பின்னமாயிரும்... சித்ரா... குலைக்கிற நாய்... அது கடிச்சிடாது... ஆனா... யோசிச்சிக்க..."

"சரித்தான்... இப்ப பிரிச்சது அப்படியே இருக்கட்டும்... அப்புறம் பாத்துக்கலாம்..." 

"சரி.. மாப்ள... மாமாக்கிட்ட பேசினியா... என்னதான் சந்தோஷமா சொத்தைப் பிரிச்சிக் கொடுத்தாலும் ரெண்டு பேரு மனசுக்குள்ளயும் எதோ சஞ்சலம்... அதை முகத்துல பார்த்தேன்... கொஞ்சம் பிரியாப் பேசுங்க... மணிக்கிட்டயும் சொல்லி பேசச் சொல்லு... ஏன்னா அவரு எதையாவது நினைச்சி ஒண்ணு கெடக்க ஒண்ணு ஆயிடாம..."

"சரித்தான்... நாளைக்கு கூப்பிட்டுப் பேசுறேன்... உடம்பைப் பாத்துக்கங்க..." என்றான் குமரேசன்....//"

சரி ரொம்ப போரடிச்சிட்டேன்னு நினைக்கிறேன்... வேரும் விழுதுகளின் 26வது பகுதியில் சந்திக்கிறேன். அதற்கு முன்னர் தொடர்கதையை படிக்காத நட்புக்கள், படிச்சிட்டு வாங்க... வந்து உங்களோட உண்மையான கருத்துக்களைச் சொல்லுங்கள்... தொடர்கதைகளைத் தொடரலாமா வேண்டாமா என முடிவெடுக்க ஏதுவாயிருக்கும் அல்லாவா?
-'பரிவை' சே.குமார்.

செவ்வாய், 7 ஜூலை, 2015

பிரேமம் (மலையாளம்) ஒரு பார்வை

மீபத்தில் பார்த்து ரசித்த மலையாளப்படம் பிரேமம். நிவின் பாலி, சாய் பல்லவி நடித்திருந்த படம். தமிழ்த் திரையுலகில் கேரள வரவுகளைத் தூக்கி வைத்துக் கொண்டாடிக் கொண்டிருக்கும் காலத்தில் கேரளச் சேட்டன்களின் தூக்கத்தைக் கெடுத்து மலர், மலர் என வண்டுகளாக அலைய விட்டிருக்கிறார் தமிழ்ப் பெண்ணான சாய் பல்லவி, சரி பல்லவி அப்புறம் பாடுவோம் முதலில் பிரேமிக்கலாம்.


பிரேமம் பள்ளிக்காதல்... கல்லூரிக்காதல்... திருமணம் என மூன்று பிரிவுகளாக படத்தின் கதையை நகர்த்தியிருக்கிறார் இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன். படத்தின் எடிட்டரும் இவரே. கேரள இயற்கையோடு பயணிக்கும் படம் இரண்டே முக்கால் மணி நேரம் என்றாலும் கொஞ்சம் கூட அலுப்பைக் கொடுக்கவில்லை. அவ்வளவு அழகாக திரைக்கதையை நகர்த்தியிருக்கிறார்.

நாயகன் நிவின் பள்ளியில் படிக்கும் பையனாக, மேரி என்ற பெண்ணை காதலிக்கிறேன் என நண்பர்களுடன் விரட்டிக் கொண்டு திரிவதாகட்டும்... கல்லூரியில் மடித்துக் கட்டிய வேஷ்டியுடன் மீசை முறுக்கிக் விட்டுக் கொண்டு ஆசிரியர் தனனைக் காதலிக்கிறாரா என்றெல்லாம் அறிய விரும்பாமல் தான் காதலிப்பதாகட்டும்... படிக்கும் வயதில் போட்ட ஆட்டங்களுக்குப் பிறகு பொறுப்போடு ஒரு கேக் கடை வைத்துக் கொண்டு அனுபவஸ்தனாக வருவதாகட்டும்... மனுசன் ஒவ்வொரு கட்டத்திலும் தனது நடிப்பில் மட்டுமல்லாமல் உடல்மொழியிலும் மாற்றத்தைக் காட்டியிருக்கிறார். தமிழ் சினிமாவைப் போல மலையாளத்திலும் இயக்குநர் மகன், நடிகர் மகன் என ஒரு பட்டாளம் கிளம்பி யிருக்கும் போது எந்த ஒரு சினிமா பின்புலமும் இல்லாமல் ஜெயித்துக் கொண்டிருக்கிறார் நிவின்.

என்னோட பேர் மலர் என்று அறிமுகமாகும் சாய் பல்லவி, கல்லூரியில் பையன்களின் தாளத்துக்கு தலையாட்டியபடியே படித்துக் கொண்டிருக்கும் போதே எல்லோரையும் கவர்ந்து விடுகிறார். பின்னர் அவர் தமிழ் பேசியபடி வரும் ஒவ்வொரு காட்சியிலும் மலராகவே மாறியிருக்கிறார். நிவின் மற்றும் அவரது நண்பர்களுக்கு கல்லூரி விழாவுக்காக நடனம் சொல்லிக் கொடுக்கும் இடத்தில் இசையைக் கேட்டபடி மெதுவாக நடந்து செல்லும் அவர் போடுவாரே ஒரு ஆட்டம்... ஆஹா ரகம். மாணவனைக் காதலிப்பதை வெளியில் சொல்லாமல் மனசுக்குள் வைத்துக் கொண்டு அவரைப் பிரிந்து செல்லும் போது அந்தப் பார்வையில் காதலை மறைத்துச் செல்கிறார்.


பள்ளியில் படிக்கும் கிறிஸ்தவப் பெண்ணாக, முடியை ஒரு பக்கமாக விரித்துப் போட்டு வரும் அனுபமா பரமேஸ்வரனாகட்டும், நாயகனுக்கு தெரிந்த பெண்ணாக, கடைசியில் அவனைக் கரம் பிடிக்கும் பெண்ணாக வரும் மாடோனா செபஸ்டினாகட்டும் தங்கள் பங்கை மிகச் சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

மலரை ஒரு தலையாக காதலிக்கும் ஆசிரியராக வினய் போர்ட் மற்றொரு ஆசிரியருடன் சேர்ந்து அடிக்கும் லூட்டியில் கொஞ்ச நேரம் அனைவரையும் சிரிக்க வைக்கிறார். நிவின் நண்பர்களாக வரும் கிருஷ்ண சங்கரும் மற்றவர்களும் பாத்திரத்தோடு ஒன்றி நடித்திருக்கிறார்கள்.

படத்துக்கு இசை மிகப்பெரிய பலம். கல்லூரிக்குள் நாயகன் நண்பர்களுடன் நுழையும் முதல் நாளில் வகுப்பறையில் இருந்து வரும் தாளம்... பார்ப்பவர்களையும் தாளம்போட வைக்கிறது. பின்னணியிலும் மனுசன் கலக்கியிருக்கிறார். ராஜேஷ் முருகேசன் படத்தின் வெற்றியில் முக்கியப் பங்கு வகிக்கிறார்.

இந்தப் படம் ஆட்டோகிராப் மாதிரி இருக்கு என்று சிலர் சொன்னார்கள். ஆட்டோகிராப் போல் மூன்று விதமான காதலில் கதை நகர்ந்தாலும் ஆட்டோகிராப்புக்கும் இதற்கும் துளியும் ஒத்துப் போகவில்லை. படத்தின் கிளைமேக்ஸ்தான் படத்தின் முக்கியத் திருப்பம். பிரேமம் மலையாளத் திரையுலகம் கொடுத்திருக்கும் ஒரு அருமையான படம்.

சாய் பல்லவி... இன்றைய தேதியில் முகநூலில் இவர் இடும் போட்டோக்களுக்கு எல்லாம் 'டா மலரே...' என மலையாளிகள் லைக் அள்ளிக் கொட்டிக் கொண்டிருக்கிறார்கள். சாய்... இனி ஒரு ரவுண்ட் வருவார்... அப்படியே தமிழிலும் இவரைக் கொண்டுவர நம்ம ஆளுங்க போட்டா போட்டி போடுவார்கள்.


தமிழில் இது போன்ற நல்ல கதையம்சம் உள்ள படங்கள் வருவது அரிது. இங்கே கதாநாயகனை அறிமுகம் செய்யும் போது ஒரு பாடல், குத்துப்பாடல், நாயகன் நாயகிக்கு பாடல் எனவும் கதாநாயகனுக்கு பில்டப் கொடுக்கும் வசனங்களும்தான் படங்களாகி வருகின்றன... இதையும் நாம் பாலாபிஷேகம், காவடி என எடுத்துக் கொண்டாடுகிறோம். ஆனால் நமக்கு அருகே மலையாளக் கரையில் பாடல்களுக்கு முக்கியத்துவம் இல்லை... கதாநாயகனுக்கு பில்டப்பெல்லாம் இல்லை.. ஆனால் நல்ல கதைகளோடு பயணிக்கிறார்கள்... ஜெயிக்கிறார்கள்.

நேற்று அமலாபால், நிவின் பாலி நடித்த மிலி பார்த்தேன். இது ஒரு வித்தியாசமான கதைக்களம். அருமையான படம்... இது குறித்து மற்றொரு பகிர்வில் பேசுவோம். 
-'பரிவை' சே.குமார்.

திங்கள், 6 ஜூலை, 2015

மனசின் பக்கம் : சேனைப் பிரதிலி பாக்ய குரு

சேனைத்தமிழ் உலா நடத்திய சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு பெற்றதையும் அந்தக் கதையையும் மனசில் பகிர்ந்திருந்தேன். அதற்கான பரிசுத் தொகையை நிர்வாகத்தினர் தில்லியில் இருக்கும் காயத்ரி அக்காவுக்கு அனுப்பி அவர் மூலமாக எனது மனைவியின் வங்கிக் கணக்குக்கு வந்து சேர்ந்துவிட்டது. சிறப்பாக போட்டியினை நடத்தி பரிசுத் தொகையையும் விரைவாய் அனுப்பி வைத்த சேனைத்தமிழுக்கு நன்றி.

கோதரர் ரூபன் அவர்கள் நடத்திய சிறுகதைப் போட்டியில் பெற்ற பரிசுக்கான பதக்கமும் சான்றிதழும் நான் ஊருக்குப் போவதற்கு முன்பே வந்து எங்கள் வீட்டில் ஆள் இல்லை என தபால்காரர் கொடுக்க மறுத்தபோதும் மனைவியின் அம்மா சண்டை போட்டு வாங்கி வைத்திருந்தார்கள். தற்போது அந்தப் பதக்கமும் சான்றிதழும் எங்கள் வீட்டு ஷோகேசை அலங்கரித்துக் கொண்டிருக்கின்றன. சிரத்தையுடன் அதுவும் அடிக்கடி போட்டிகள் நடத்தி சிறப்பாக செயல்படும் சகோதரர் ரூபன் மற்றும் நண்பர் யாழ்பாவாணன் அவர்களுக்கும் நன்றி.

ப்ரதிலிபி இணையத் தளத்தில் நானும் இணைந்திருக்கிறேன். என்னைப் பற்றியும் எனது பதிவுகளில் சிலவற்றையும் அங்கு பகிர்ந்திருக்கிறார்கள். அதற்கான இணைப்பையும் அவர்களது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்கள். என்னைப் பற்றிய பகிர்வுக்கு இங்கே சொடுக்குங்கள். 
ப்ரதிலிபி தளம் அறிய இங்கு சொடுக்குங்கள். 

பாக்யாவில் தொடர்ந்து எனது கருத்துக்கள் மக்கள் மனசு பகுதியில் வெளிவந்து கொண்டிருக்கிறது. முகநூலில் கேள்வியைப் பகிர்ந்து அதற்கு வரும் கருத்துக்களில் சிறந்தவற்றை அழகாக தொகுத்தளிக்கும் திரு. எஸ்.எஸ்.பூங்கதிர் சாருக்கு வாழ்த்துக்கள். 

திருச்செந்தூர் செல்லும் போது அங்கிருந்து ஒரு இருபது கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் வனதிருப்பதி சென்று பெருமாளை தரிசித்து வந்தோம். இந்தக் கோவில் நம்ம சரவணபவன் ராஜகோபால் அண்ணாச்சி அவர்களால் நிர்வகிக்கப்படுகிறது. இங்கு உண்டியல்கள் இல்லை. சிலைகள் அனைத்துமே மிக அழகாய் தத்ரூபமாய் இருக்கின்றன. மிகப்பெரிய இடத்தில் கோவில் அமைந்துள்ளது. உள்ளே ஹோட்டல்கள் கடைகள் எல்லாம் இருக்கின்றன. இருபது மாடுகளுக்கு மேல் வைத்துப் பராமரிக்கிறார்கள். மாட்டின் பால் அனைத்தும் அபிஷேகத்துக்கு மட்டும்தான் பயன்படுத்துகிறார்களாம். 

காக்கா முட்டை படம் பார்த்தேன். சேரிச் சிறுவர்கள் இருவரின் பீட்சா ஆசையும் அதன் பின்னான நிகழ்வுகளும் அதை அரசியலாக்கி லாபம் சம்பாதிக்க நினைக்கும் அல்லக்கைகளும், எம்.எல்.ஏவும் என நகரும் படத்தில் அந்த இரண்டு சிறுவர்களும் அருமையாக ஸ்கோர் பண்ணியிருக்கிறார்கள். அதிலும் சின்னவன்... நடிக்கவில்லை வாழ்ந்திருக்கிறான். கூடை மேல கூடை வச்சு கூடலூரு போன ரம்யா இதில் சேரிப்பெண்ணாக, வறுமைக்கோட்டுக்கு கீழே இருக்கும் குடும்பத் தலைவியாக அருமையாக நடித்திருக்கிறார். பேரன்களுக்கு பீட்சா செய்கிறேன் என தோசை மீது குடை மிளகாய் வைத்து செய்து கொடுக்கும் பாட்டி, பேரனின் கேள்வியோடு மரணத்தைத் தழுவி எல்லார் மனதிலும் நிற்கிறார். நல்லதொரு படம்.

போன வருடம் எனது சான்றிதழுக்கு அரபியில் சான்றிதழ் வாங்கும் முயற்சி எடுத்து ஒவ்வொரு படியாக மேலேறி கடையில் கல்வி அமைச்சகத்தில் எனது படிப்புக்கான அரபி சான்றிதழை வெற்றிகரமாக இன்று பெற்றுவிட்டேன். இதற்கான செலவு அதிகம்தான் என்றாலும் இனி அரசாங்க அலுவலத்தில் வேலைக்கு தீவிரமாக முயற்சிக்கலாம். சென்ற முறை இந்தச் சான்றிதழ் இல்லாமல்தான் கிடைக்க வேண்டிய வேலை கிடைக்காமல் போனது. பார்க்கலாம் இறையருள் இருந்தால் மீண்டும் அந்த அலுவலகத்திலே வேலை கிடைக்கும்.

ருக்குப் போகும்போது நிறுத்திச் சென்ற வேரும் விழுதுகளும் தொடர்கதையை மீண்டும் தொடரலாம் என்று நினைக்கிறேன். அடுத்த பதிவோ அல்லது அதற்கடுத்த பதிவோ இல்லை முன்பு போல் சனிக்கிழமையோ அடுத்த பகுதியைப் பதியலாம் என்று நினைக்கிறேன். இனிமேல்தான் எழுதணும்... எப்பவுமே அந்தந்த வாரம்தான் எழுதுவது வழக்கம் என்பதால் எழுதி பதிவிடுகிறேன். நான்கு அல்லது ஐந்து பகுதிகளோடு முடித்துவிடலாம் என்ற எண்ணம்... பார்க்கலாம் மனசுக்குள் வேர்விடுகிறதா என்பதை...

ந்த குருபெயர்ச்சியில் கடனை அடைக்க வேண்டும், நகைகளை திருப்ப வேண்டும், கிராமத்தில் வீடு கட்ட வேண்டும், நல்ல வேலையில் அமர வேண்டும், சிறுகதை தொகுப்பு கொண்டு வரவேண்டும், தொடர்கதையையோ அல்லது கிராமத்து நினைவுகளையோ புத்தகமாக்க வேண்டும் என ஏகப்பட்ட வேண்டும்... நிறைவேற வேண்டும்... குருவின் பார்வை கிடைக்கிறதா பார்ப்போம்.

மனசு தொடர்ந்து பேசும்.
-'பரிவை' சே.குமார்.