மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

சனி, 4 ஜூலை, 2015

செந்தூர் அழகா...2


மொட்டை போட சீட்டு வாங்கலாம் என்று செல்ல, விஷால் மொட்டை அடிக்க மாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்க ஆரம்பித்தான். இந்த  இடத்துல ஒண்ணு சொல்லணும்... கோயிலுக்குப் போயி மொட்டை போடணுமின்னு சொன்னப்பவே நீங்களும் மொட்டை போடுறீங்களான்னு கேட்டு பாக்கலாம் என்று சொல்லியிருந்தேன். எனவே அதுக்குத்தான் பயபுள்ள பின்னால இழுக்குதோன்னு டவுட்டோட உனக்கு என்னடா வேணுமின்னு கேட்கவும் நீங்களும் மொட்டை போட்டா நானும் போடுறேன்னு அடிச்சான் பாருங்க அவனது மழலைத்தனமான குரலில். என்னடா பிளாக்மெயிலா என்றதும் நீங்க போட்ட நா போடுறேம்ப்பா... இல்லேன்னா இந்தா ஐயால்லாம் கடலுக்கு பொயிட்டாக நானும் போறேன்னு சொல்லிச் சிரிச்சான்.

என்னடா இது குமாருக்கு வந்த சோதனை... பழனிக்கு நடந்து போகும் போது ஆறு வருட தரிசனத்தில் முதல் வருடம் மட்டுமே சண்முகநதிக்கு நடந்து போய் மொட்டை போட்டு வந்தேன். அதன் பிறகு மொட்டை போடுவதை அதிகம் விரும்புவதில்லை. பாப்பாவுக்கு அழகர் கோவிலில் முதல் மொட்டை எடுக்கும் போது நானும் போட்டுக் கொண்டேன். அம்புட்டுத்தான். எதுவும் நேர்த்திக்கடன் பாக்கியா... அல்லது முருகன் ஏதோ நன்மைக்காக எனக்கு காணிக்கை கொடுத்துச் செல் என பாலகன் ரூபத்தில் கேட்கிறானோ என்று யோசித்து சரி வா... கோயில் வாசலில் கேட்கிறாய் எல்லாம் நன்மைக்கே என்று சொல்லி இரண்டு சீட் வாங்கச் சென்றேன்.

அப்போது மாமியார் தனது சின்னமகளின் மகனுக்கும் இறக்கிடலாம் என்று சொல்ல மூன்று பேருக்கும் சீட் எடுக்க, மனைவி நானும் பூமுடி இறக்குகிறேன் என்று வந்தார். நான்கு சீட்டோடு முடி எடுக்குமிடம் சென்று முடியிறக்கினால் ஒரு மொட்டைக்கு ஐம்பது ரூபாயாம்... கணக்குப் பண்ணி கொடுத்துவிட்டு நீராட கடலுக்குச் சென்றோம். ஏற்கனவே கடலுக்குள் ஆட்டம் போட்ட எங்கள் குடும்பத்துடன் சேர்ந்து கொள்ள, கடலில் குளிப்பதென்றால் நாளெல்லாம் கிடக்கச் சொல்லும்... என்ன ஒரு ஆனந்தம். ஆனா பெரிசுகளோட போனாவா ரொம்ப நேரம் குளிக்க முடியும். மணியாச்சு... வாங்க என அப்பா கரையில் இருந்து கத்திக் கொண்டே இருந்தார். பின்னர் நாழிக்கிணறுக்குள் செல்ல அண்ணன் தண்ணீர் ஊற்றுபவரிடம் பணம் கொடுக்க போதும் போதும் என்று சொல்லும் வரை தண்ணீரை இறைத்து ஊற்றினார்.


பின்னர் ஆடைகளை மாற்ரிக் கொண்டு கோவிலை நோக்கி நடந்தோம். பணம் கொடுத்து எல்லாம் போகாதீங்க... கூட்டம் கம்மியாத்தான் இருக்கு தர்ம தரிசனத்துலயே போங்க என்று சொன்னார் எங்க வேன் டிரைவர். அவர் சொன்னது போல் தர்ம தரிசனத்துக்கான வரிசையில் செல்ல, ஓரளவு கூட்டம் இருந்தது. வரிசை மெதுவாக நடந்து சென்றது. அருகில் பார்க்க 250 கொடுத்தவர்களுக்கும், அடுத்துப் பார்க்க 100 கொடுத்தவர்களும், ஐயரிடம் 500 கொடுத்து அர்ச்சனைத் தட்டை கொடுத்தவர்களும் வேகமாக தரிசனம் செய்து திரும்ப எங்கள் வரிசை மெதுவாக நகர்ந்தது. நம்மளும் 10,20 ரூபாய் டிக்கெட்ல வந்திருக்கலாம் என்று யோசித்தாலும் எங்களுக்குப் பின்னே நின்ற கூட்டத்தில் இனி வெளியாக முடியாது என்று தோன்ற முருகன் இப்படித்தான் வரணுமின்னு நினைச்சிருக்கான் என்று எண்ணியபடியே மெதுவாக நகர்ந்தோம்.

உள்ளே செல்லும் போது நேராக நின்ற சண்முகனை தரிசித்தபடி செல்ல, செந்தில்நாதன் கடலைப் பார்க்க நிற்பார் என்று அண்ணி சொன்னார்கள். எங்கள் வரிசை நகர்ந்து இடப்புறமாக திரும்ப அங்கே அழகன் முருகன் தனது புன்சிரிப்போடு காட்சியளித்தார். பணம் கொடுத்து வந்திருந்தாலும் முருகனை கொஞ்ச நேரம் நின்னு தரிசிச்சிருக்கலாம்... இதுல போறதால பாத்தோமோ பாக்கலையோ விரட்டிருவாங்க என்று மனைவி சொல்ல, முருகனைப் பார்த்துக் கொண்டே, குழந்தைகளுக்கும் காட்டியபடி முன்னோக்கி நகர்ந்தோம். சரியாக முருகனுக்கு நேரே சென்றபோது தீப ஆராதனை நடக்க நக்ருங்க என காவலாளி சொன்னார். 

அப்போது முன்னே போன கூட்டம் தேங்கி நிற்க, என் மனைவியும் முன்னேற, காவலாளி வரிசை நகரலைம்மா... நீங்க நில்லுங்க... அப்படியே நின்னு முருகனைப் பாருங்க... நின்னு அவனைத் தரிசிக்க கொடுத்து வச்சிருக்கணும்... இருங்க என்று சொல்ல நாங்கள் முருகனுக்கு நேராக பத்து நிமிடங்களுக்கு மேல் நின்று அழகனை ரசித்து மனது உருக வேண்டிக் கொண்டோம். எங்களுக்கு அப்படி ஒரு வாய்ப்பை வழங்கியவன் அவன்தான் இல்லை என்றால் விரைவாக நகர்ந்த கூட்டம் நாங்கள் அவனிடத்தில் வரும்போது நகராமல் நிற்குமா என்ன... மனைவிக்கு சந்தோஷம்... நல்ல தரிசனம்... என்றார். ஆம் அருமையான தரிசனம்...


பின்னர் வெளியாகி கோவில் பிரசாதங்கள் வாங்கி மண்டபத்தில் வைத்து சாப்பிட்டுவிட்டு அப்படியே கோவில் மண்டபத்தில் உள்ள கடைகளுக்குள் புகுந்தால் பயலுக ஆட்டம் ஆரம்பிச்சிருச்சு. காரு... துப்பாக்கி என வாங்கிக் குவித்தார்கள். நாங்களும் முருகன் போட்டோ, பனங்கற்கண்டு, ஏலம் சுக்கு இட்ட கருப்பட்டி என எல்லாம் வாங்கிக் கொண்டு திருச்செந்தூரில் இருந்து கிளம்பி வன திருப்பதி சென்று மதிய சாப்பாட்டை அங்கு முடித்து பெருமாளை தரிசித்து விட்டு தேவகோட்டை நோக்கி பயணமானோம்.

இரவு 10 மணிக்கு வீட்டிற்கு வந்து குளித்து சாப்பிட்டு 'ஸ்ஸ்ஸ்... அப்பனே முருகா...' என்று படுத்தால் நிம்மதியான உறக்கம்.
-'பரிவை' சே.குமார்.

வெள்ளி, 3 ஜூலை, 2015

செந்தூர் அழகா...1


ம்ம குடந்தை சரவணன் அண்ணன் அவர்கள் தனது குடந்தையூர் தளத்தில் திருச்செந்தூர் சென்று அழகன் முருகனைத் தரிசித்து வந்த அனுபவத்தை அழகான பதிவாக்கி இருந்தார். அதைப் பார்(டி)த்ததும் நம்மளும் செந்தூர் முருகனை தரிசித்து வந்த அனுபவத்தை எழுதலாமே என்று நினைத்ததில் தொன்றியதே இந்தப் பகிர்வு...

சென்ற வருடம் விடுமுறைக்குச் சென்ற போதே மனைவி பழனிக்கு கூட்டிப் போகச் சொன்னார். சில காரணங்களால் தள்ளிப் போக, நீங்க ஆறு வருசம் நடந்தே போயி முருகனைப் பார்த்துவிட்டதால் எங்களைக் கூட்டிப் போக மாட்டேங்கிறீங்க என்றார் வருத்தமாய். சரி இந்த வருடம் போகலாம் என்று தள்ளி வைத்து சமாதப்படுத்திவிட்டு அபுதாபிக்கு வந்தாச்சு.

இந்த வருடம் ஊருக்குப் போனதும் தம்பிக்கு முருகன் கோவில்ல மொட்டை போடணும் பழனிக்கு போகலாங்க என்று சொல்லிக் கொண்டிருந்தார். நானும் பழனி பொயிட்டு அப்படியே திண்டுக்கல் வந்து நம்ம தனபாலன் அண்ணன் அவர்களைப் பார்த்துட்டு வந்துடலாம்ன்னு கணக்குப் போட்டேன். திருவிழாக்கள், திருமணங்கள், குழந்தைகளின் பள்ளி மாற்றம் என தினம் ஒன்றாய் தொடர, பழனி போகும் திட்டம் இந்த முறையும் அமையாது போல என்று நினைத்த போது மனைவி எதாவது ஒரு முருகனுக்குத்தான் மொட்டை போடணும் இங்க இருக்க மலைக்கோயில் முருகனுக்கே போட்டு விடுறேன் என்று கோபமாகச் சொல்லிவிட்டார்.

இந்த வருடம் வந்து எங்கும் போகவில்லை, குலதெய்வம் கோயிலுக்கு கூட போகவில்லை... வீட்டுக்குள்ளே பிள்ளைகளோட இருந்தா சரியாப் போச்சா என்று அம்மணி ஆரம்பிக்க... ஊருக்கு வருவதற்கு ஒரு வாரம் முன்னர் சரி இனியும் செல்லவில்லை என்றால் எப்படி... எங்கு போகலாம்... என்று யோசித்து இதுவரை பார்க்காத திருச்செந்தூர் முருகனையே போய் தரிச்சிக்கலாம். அடுத்த முறை பழனி செல்லலாம் என்று தீர்மானித்தோம். திருச்செந்தூர் என்றதும் அம்மா என்னிடம் ஒருமுறை திருச்செந்தூர் கூட்டிக்கிட்டுப் போடா என்று சொன்னது நினைவில் ஆடியது. என்னிடம் கேட்டு நான் கூட்டிச் செல்லவில்லை (நானே போகவில்லை) என்றாலும் இரண்டு மூன்று முறை அம்மா போய் வந்துவிட்டார். இருப்பினும் அவரையும் அழைத்துச் செல்லலாம் என்றபோது அப்படியே நம்ம குடும்பத்தில் எல்லாரையும் கூட்டிப் போகலாம் என மனைவி சொன்னார்.


உடனே முடிவெடுத்து அப்பா, அம்மாவைக் கேட்டு சிங்கையில் இருந்து வந்திருந்த சின்ன அண்ணனிடம் பேசி, பெரிய அண்ணி, சின்ன அண்ணன் குடும்பம், பெரியக்கா, சின்னக்கா, நடு அக்கா மகள், தம்பி மனைவி, மாமியார், மனைவியின் தங்கை, எல்லாருடைய குழந்தைகள் என 20 பேருக்கு மேல் சந்தோஷமாக முருகனை தரிசிக்கச் செல்வது என முடிவெடுத்து அதற்கான வேலைகளையும் பார்த்து உறவினர் ஒருவரின் வேனையும் ஏற்பாடு செய்தோம்.

அதன்படி திங்கள்கிழமை அதிகாலை 3 மணிக்கெல்லாம் தேவகோட்டையில் இருந்து வேன் எங்கள் ஊருக்குச் சென்று அப்பா, அம்மா, பெரியண்ணி, குழந்தைகள், ஊருக்கு வந்திருந்த சின்ன அக்கா என எல்லாரையும் ஏற்றி, வரும் வழியில் தம்பி மனைவி, சின்ன அண்ணன் குடும்பம், எங்கள் குடும்பம், அக்கா மகள், பெரியக்காவும் அக்கா பேரனும் என ஒவ்வொரு இடமாக ஆள் ஏற்றி விடியலுக்கு முன்னே தேவகோட்டையில் இருந்து இராமநாதபுரம் நோக்கிப் பயணித்தது.

காலை, மதிய சாப்பாட்டுக்கு இட்லி, சட்னி, புளியோதரை, தயிர்சாதம், மண்டி என சமைத்து எடுத்துச் சென்றுவிட்டோம். தண்ணீரும் இரண்டு பெரிய கேனை வாங்கி வைத்துவிட்டோம். காபியும் இரண்டு பிளாஸ்க்கில் போட்டு எடுத்துச் சென்றுவிட்டோம். வேனுக்குள் தெய்வீக ராகங்கள் ஒலிக்க, எங்கள் பயணம் விடியும் முன்னர் இராமநாதபுரத்தை நெருங்கியது. அங்கிருந்து ராமேஸ்வரம் தூத்துக்குடி நெடுஞ்சாலையில் திருச்செந்தூர் நோக்கிப் பயணிக்கவும் விடியும் காலையின் அழகை ரசித்தபடி பயணப்பட, ரோட்டில் வந்த கார்களையும் லாரிகளையும் பார்த்த பயலுக எல்லாம் வேனின் சந்தோஷத்தில் முன்பக்கம் வந்து நின்று ரசிக்க ஆரம்பித்தார்கள்.


ஏர்வாடிக்கு அருகில் வேன் சென்றபோது ரோட்டோரத்தில் நிறுத்தி காபி சாப்பிட்டுவிட்டு மீண்டும் கிளம்பினோம். வேனில் தொலைக்காட்சிப் பெட்டி இருக்கவும் படம் போடுங்கள் என்று சில குரல்கள்... சிகரம் தொடு படத்தை ஓடவிட,  இடையில் எங்கும் நிறுத்தாமல் பயணப்பட்ட வேன் ஒன்பது மணிக்கு மேல் திருச்செந்தூர் கடலோரத்தை அடைந்தது.

பசி வயிற்றைக் கிள்ள வேனில் வைத்து இட்லியைச் சாப்பிட்டுவிட்டு முருகனின் கோபுரத்தை ரசித்தபடி விஷாலுக்கு மொட்டை போட்டுவிட்டு கடலுக்குச் சென்று குளித்து நாழிக் கிணற்றில் நிராடி அழகன்  முருகனை தரிசிக்கலாம் என்று முடிவு செய்து முடிகாணிக்கைக்கான சீட்டு வாங்க சென்றால் விஷால் முரண்டு பிடிக்க ஆரம்பித்தான்... மொட்டை அடிக்க அவன் கேட்டது என்ன? அறியக் காத்திருங்கள் இதன் தொடர்ச்சியாய் வரும் மற்றொரு பகிர்வுக்காக...
-'பரிவை' சே.குமார்.

புதன், 1 ஜூலை, 2015

செல்வாக்கை இழக்கும் கலை நிகழ்ச்சிகள்...

த்தாண்டுகளுக்கு முன்னர் கோவில் திருவிழாக்களில் வைக்கப்படும் கலை நிகழ்ச்சிகளைக் காண பக்கத்து ஊர்களில் இருந்து ஆட்கள் எல்லாம் வருவார்கள். நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் கூட்டம் அலைமோதும். காபி, டீக்கடைகள், இனிப்புக் கடைகள், சுக்கு மல்லி காபி என சுற்றிலும் கடை விரித்திருப்பார்கள். ஆனால் இன்றைக்கு நிலமையே வேறு. உள்ளூர்க்காரர்கள் கூட உட்கார்ந்து பார்ப்பதில்லை. 


திருவிழா என்றாலே என்ன நிகழ்ச்சி வச்சிருக்கீங்க என்றுதான் கேட்பார்கள். நாடகம் என்றால் என்ன நாடகம், பபூன் யார்... ராஜபார்ட் யார் என்றெல்லாம் கேட்டு வள்ளி திருமணம் என்றால் அவரைப் போட்டிருக்கலாமே... போன வாரம் அங்க வந்தாரு... சும்மா கலக்கிட்டாருல்ல... கூட்டம் எந்திரிச்சே போகலை என்பார்கள்... அரிச்சந்திர மயானகாண்டம் என்றால் காமராஜ்தாம்பா என்பார்கள். கரகாட்டம் என்றால் துர்க்காவா? மல்லிகாவா? அப்படின்னு கேட்டு வாய் பிளப்போர் ஏராளம். நாடகம் நடக்கும் மேடைக்கு எதிரே பாய் விரித்து அமர்ந்து ரசிப்பார்கள். ஒரு சில ஊர்களில் மேடையை மையமாக வைத்து கயிறு கட்டி பாதை போட்டு ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக அமர வைப்பார்கள். கரகாட்டம் என்றால் நான்கு பக்கமும் கம்பு ஊன்றி, அதில் விளக்குகள் கட்டி வைத்திருப்பார்கள். ஒரு சில இடங்களில் நான்கு கம்பையும் சுற்றி கயிறு கட்டி வைத்திருப்பார்கள். பல இடங்களில் கயிறெல்லாம் கட்டமாட்டார்கள், குதிக்கும் குறத்தி கூட்டத்துக்குள் ஓடி வர வேண்டும் அல்லவா?.

இப்போதெல்லாம் நாடகம், கரகாட்டம், ஆடல்பாடல் என எல்லாமே இரட்டை அர்த்த வசனங்களுக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கின்றன. நாடகம் என்றால் பபூனும் டான்ஸூம் பேசும் இரட்டை அர்த்த வசனம் முடிந்ததும் கூட்டம் கலைந்து விடும். கரகாட்டத்துக்கு கூட்டம் குறைவதில்லை... காரணம் குறவன் குறத்தியின் இரட்டை அர்த்த வசனங்களும் கேவலமான ஆட்டமுந்தான். பெரும்பாலான இடங்களில் கரகாட்டம், ஆடல்பாடல் எல்லாம் பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளன... காரணம் அருவெறுக்கத்தக்க ஆபாசம்.

மேலும் முன்பு போல் பெரும்பாலானோர் விரும்பிப் பார்க்க நினைப்பதில்லை. பக்கத்து ஊரில் நாடகம் என்றால் கூட ஆமா இதைப் போயி பாரு என்று படுத்து விடுகிறார்கள். உள்ளூர்க்காரன் கூட கொஞ்ச நேரம் நின்றுவிட்டு நமக்கு சரி வராது... தூக்கம் வருதுன்னு கிளம்பிடுறான். இரட்டை அர்த்த வசனம் வந்த பிறகு நாடகம், கரகாட்டம் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக மக்களிடம் இருந்த வரவேற்ப்பை இழந்து விட்டது. ஒயிலாட்டம் என்று ஒரு நிகழ்ச்சி, இராமாயணக் கதையை அழகாய்ச் சுருக்கி நடிப்பார்கள். அதெல்லாம் இப்போது போன இடம் தெரியவில்லை. நாடகத்தையாவது பெண்கள் பார்க்கிறார்கள். கரகாட்டத்தை பெண்கள் பார்ப்பதே இல்லை... இப்ப பார்க்கும்படியாகவும் இல்லை... 


எங்கள் பகுதியில் கரகாட்டம், ஆடல் பாடல் போன்றவற்றிற்கு அனுமதியில்லை. எங்கள் ஊர் திருவிழாவில் கரகாட்டம், ஆடல் பாடல், நாட்டுப்புறப்பாடல் கச்சேரி என எல்லாம் யோசித்து நாடகம் வைத்தால் பாக்க நாலு பேர் கூட இருக்கமாட்டான்னு இந்த வருடம் புதுமையாக தேவகோட்டை ராமநாதன் தலைமையில் பட்டிமன்றம் வைத்தோம். எங்கள் பகுதி கிராமப்புறங்களில் முதல் முதலில் எங்க ஏரியாவில் பட்டிமன்றத்தைக் கொண்டு வந்த பெருமை எங்கள் ஊரையே சேரும். ஆனால் பட்டி மன்றம் பட்டி மன்றமாக இருந்தா என்றால் முழுமையாக இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

பசங்க அடித்திருந்த பேனர்களில் எல்லாம் சாதியும் அதற்கு அடையாளமான படங்களும் இருக்க, அதை வைத்து இடையிடையே சாதிப் பெருமை பேசி கைதட்டல் வாங்கப் பார்த்தார் நடுவர். மேலும் கிராமத்தில்தானே பட்டிமன்றம் என்பதால் பத்திரிக்கை நகைச்சுவைகளை அள்ளித் தெளித்தாலும் இவர்களுக்கா தெரியப் போகுது என்ற மதர்ப்பிலும்... யார் பேசினால் என்ன எப்படியோ ஆறு பேர் பேசி நடுவர் தீர்ப்பென்று ஒன்றைச் சொன்னால் போது என ஆட்களை முன்னுக்குப் பின் மாற்றி பேச வைத்ததில் இருந்த எவன் கண்டுக்கப் போறான் என்ற அலட்சியத்திலும்... யாரை மேடையேற்றி கொடி நாட்ட நினைத்தார்களோ அவரைப் பேச வைத்து அழகு பார்த்து நாந்தான் முதலில் மேடையில் ஏற்றினேன் என்று சொல்லாமல் சொன்ன கொக்கரிப்பிலும்... சிக்கி பட்டிமன்றம் ஏதோ ஒரு பேச்சு மன்றமாக இருந்தாலும் நறுக்கென்று பேசிய அந்த நால்வரால் கீழே விழாமல்... குறைந்த கூட்டமே இருந்தாலும் வீட்டிற்குப் போகாமல்... ரசிக்கத்தான் வைத்தது. ராமநாதனின் பேச்சு குறித்து முன்பொரு பதிவில் சொல்லிவிட்டேன். எத்தனை நாளைக்குத்தான் அரைத்த மாவையே அரைப்பது?

சரி விஷயத்துக்கு வருவோம்... இனி வரும் காலங்களில் திருவிழாக்களில் பட்டிமன்றங்களைப் போல மூன்று நான்கு மணி நேரத்துக்குள் முடியக்கூடிய நிகழ்ச்சிகள்தான் இடம் பிடிக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. சொல்ல மறந்துட்டேன்... சில இடங்களில் இப்ப கேரள செண்டை மேளம் கொண்டு வந்து விடுகிறார்கள். அரைமணி நேரம் அடித்து ஆடுகிறார்கள். அப்புறம் கொஞ்ச நேரம் ஓய்வெடுக்கிறார்கள்.... பிறகு மீண்டும் இசை. மாலை முதல் இரவு பனிரெண்டு மணி வரை இசைக்கிறார்கள்... மிகவும் அற்புதமாக இருக்கிறது. ஆண் பெண் என பனிரெண்டு பேர் கொண்ட குழு மனைவியின் ஊரில் அம்மன் கோவில் கும்பாவிஷேகத்திற்கு வந்திருந்தார்கள்... அதில் ஒரு சின்னப் பெண் ஆட்டத்தில் கலக்கி எல்லார் மனதிலும் இடம் பிடித்துவிட்டது. அப்படி ஒரு அற்புதமான ஆட்டம். இனி பெரும்பாலான ஊர்களில் இந்தக் குழுவைப் பார்க்கலாம்.

வீரபாண்டிய கட்டப்பொம்மன், பவளக்கொடி, தூக்குத்தூக்கி, அரிச்சந்திர மயானகாண்டம், அர்சுணன் தபசு, சத்தியவான் சாவித்திரி போன்ற நாடகங்கள் இப்பொழுதெல்லாம் அரிதாகிவிட்டன. பெரும்பாலும் வள்ளி திருமணம் மட்டுமே எல்லா இடங்களிலும் நடத்தப்படுகிறது. அதற்கும் காரணம் இருக்கு... பபூனில் ஆரம்பித்து முருகன், வள்ளி, நாரதர் என எல்லோரும் சினிமாப் பாடல்களையும் இரட்டை அர்த்த வசனங்களையும் பேசுவதால் மட்டுமே கரகாட்டம் போல் இதுவும் இன்னும் வாழ்கிறது. இப்பொழுதெல்லாம் கரகாட்டத்தில் குறத்தி யார் என்பதைப் பொறுத்தே கூட்டம் கூடுகிறதாம். எங்க அக்கா ஊரில் புதுமையாய் ஒரு நாடகம் வைத்தார்கள்... மிக அருமையாக இருந்ததாம்... ஆனால் மீண்டும் இது போன்ற நாடகங்கள் அந்தப் பகுதியில் வைக்கப்படுமா தெரியவில்லை.

பெரும்பாலான ஊர்களில் ஆபாசமாக ஆடிப்பாடும் கலை நிகழ்ச்சிகள் தேவையா என்று யோசிக்க ஆரம்பித்து விட்டார்கள்.

எங்க ஊர்ல பட்டிமன்ற மேடைக்கு முன்னால் அதிகம் ஆட்கள் உட்காரவில்லை. நிலச்சூட்டுல ஏன் உக்காரணும் என ஆங்காங்கே நாற்காலி போட்டு அமர்ந்து பார்த்தோம். ஓரளவுக்கு கூட்டமும் இருந்தது. சின்னக் கிராமம்... பெரும்பாலான சொந்தங்கள் இரவு உணவுக்கு வந்து சாப்பிட்டதும் கிளம்பிவிட உள்ளூர்வாசிகள் மட்டுந்தானே பாக்கணும். எனவே ஏக கூட்டம் இல்லை என்றாலும் ஏதோ கூட்டம் இருந்தது. பட்டிமன்றம் ஆரம்பிக்கும் முன்னரே மேடைக்கு முன்னே விழுந்து படுத்த நம்ம மச்சான் வீட்டுக்கு வந்த நண்பர்... ஆழ்ந்து உறங்கி பட்டிமன்றம் முடிவுக்கு வரும்போது எழுந்து அமர்ந்தார். அவரின் தூக்கத்தையும் மேடையில் பேசியவர்களையும் இரவில் செல்போனில் எடுத்த போட்டோ சில பார்வைக்காக...









என்னப்பா இப்படித் தூங்குறீங்களேப்பா... இப்படித் தூங்குனா நாங்க எப்படித்தாம்பா பேசுறதுன்னு எல்லோரும் புலம்பினாலும் ஆழ்ந்து தூங்கிய மனிதர் எழுந்தார்... அமர்ந்தார்... பின்னர் எழுந்தார்... நடந்தார்... போய்விட்டார்...

-'பரிவை' சே.குமார்.

வெள்ளி, 26 ஜூன், 2015

விமான நிலையத்தில் தவிக்க வைத்த பெட்டி...கிடைத்ததா?

ண்ணாம் நம்பர் பெல்ட்டின் அருகில் நின்ற நான் வேகவேகமாக ஆறாம் நம்பர் பெல்ட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தேன் ஒருவித பதட்டம் கலந்த பயத்துடன்...

அங்கே ஒரு சிறிய அலுவலகம்... நடுநாயகமாக சூடான் பெண் ஒருவர் அமர்ந்திருக்க அவருக்கு அருகே பிலிப்பைனைச் சேர்ந்த ஒரு ஆணும் பெண்ணும் பக்கத்தில் ஒரு அரபிப்பெண் அமர்ந்திருந்தார்கள். நான் நேராக சென்று சூடானியிடம் என்னோட பெட்டி காணாமப் போச்சு... யாரோ மாத்தி எடுத்துக்கிட்டுப் பொயிட்டாங்க... அதே மாதிரி பெட்டி ஒண்ணு அங்க இருக்குன்னு சொன்னேன். உடனே இப்பத்தானே வந்தே... பதட்டப்படாதே... புகார் கொடுத்துட்டுப் போ... வந்துரும் என்றார். புகார் கொடுத்துட்டுப் போறது பிரச்சினை இல்லை... அதுல என்னோட சான்றிதழ் இருக்கு... நான் அபுதாபி போகணும்... திரும்ப எப்ப வந்து... எப்ப வாங்குறது என்றேன். உடனே இங்க யாராவது சொந்தக்காரங்க இருந்தா புகார் பேப்பரைக் கொடுத்துட்டுப் போ... அவங்க வாங்கிக் கொடுத்துருவாங்கதானே என்றார். சரி என ஆமோதித்தேன்.

மீண்டும் அவர் ரெண்டும் ஒரே மாதிரி பேக்கா? என்று கேட்டு ஒண்ணு செய்யி வெளியில போயிப் பாரு... யாராவது வச்சிருப்பாங்க... இல்லேன்னா திரும்பி வா என்றார். உடனே வெளியே ஓடினேன். அந்தக் கடைசியில் இருந்து இந்தக் கடைசி வரைக்கும் ஓடினேன்... எல்லோரும் நிக்கிறானுங்க.. என்னோட பெட்டியை எடுத்த புண்ணியவானை மட்டும் காணோம். சரி இனி இங்க நின்னு வேலையில்லையென மறுபடியும் சூடானியை தேடிப் போனா செக்யூரிட்டி உள்ள போகமுடியாதுன்னு சொல்லிட்டான். அப்புறம் அவனுக்கிட்ட விவரம் சொல்ல, அங்கிருந்து கொஞ்ச தூரத்தில் இருந்த போனைக்காட்டி அதை போயி எடுத்தியன்னா அவங்களுக்கு ரிங்க் போகும். உன்னைய வந்து கூட்டிக்கிட்டுப் போவாங்க என்றார். 

அங்கிருந்து அவன் காட்டிய இடத்துக்கு ஓடி போனெடுக்க அவர்கள் பேச, அவர்களிடம் மீண்டும் கதை சொல்ல கொஞ்ச நேரத்தில் அதற்கு அருகில் இருந்த வாயிலின் வழியாக ஒருவர் வந்து கூப்பிட மீண்டும் பாதுகாப்புச் சோதனைகளைக் கடந்து உள்ளே சென்றேன். அப்போது அந்த தமிழர் வந்து என்ன இல்லையா என்றார். இல்லைங்க மறுபடியும் ஒரு பார்வை பார்க்கட்டுமா என்றேன் ஒரு நப்பாசையில்... இல்லைங்க நான் உள்ளயே போயிப் பார்த்துட்டு வந்துட்டேன். உங்க பேக் இல்லை. நீங்க புகார் கொடுத்துட்டுப் போங்க என்றார்.

சரி ஆனது ஆச்சு... இனி என்ன செய்ய புகார் பண்ணிட்டுப் போவோம் என அவர்களிடம் சென்றேன். என்னைப் பார்த்ததும் என்ன கிடைக்கலையா என்றவர், சரி ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஆபீசுக்கு போன் பண்ணி தொடர்பு எண் இருக்கான்னு கேட்போம் என்றார். அருகிலிருந்த பெண்ணிடம் சொல்ல அவரோ டேக் (Tag) நம்பர் வேண்டும் என்று சொல்லி என்னை அந்தப் பெட்டியில் இருக்கும் நம்பரைக் குறித்து வா என்றார். உடனே ஒண்ணில் இருந்து ஆறுக்கு ஓடினேன். பேரையும் நம்பரையும் எழுதிக் கொண்டு ஓடிவந்து அந்தப் பெண்ணிடம் கொடுத்தேன். அவர் ஏர் இந்தியாவுக்கு அழைத்து விசாரிக்க அவர்களோ இன்னொரு நம்பர் அதாவது Sequential Number வேணுமின்னு சொல்லிட்டாங்க. உடனே ஓடிப்போயி பேக்கையே தூக்கிக்கிட்டு வந்தேன். போன் செய்த பெண்ணைக் காணோம். அங்கே ஒரு லெபனானி அதிகாரி அமர்ந்திருந்தார்.

நான் சொல்லும் முன்னே பிலிப்பைனிப் பெண் விவரம் சொல்ல, அவர் ஏர் இந்தியாவுக்கு அழைத்தார். அவர்கள் துபாய் தொடர்பு எண் இல்லை என்றும் இந்தியா எண்தான் இருக்கு என்றும் சொல்லி நம்பரைக் கொடுத்தார்கள். என்னிடம் உனது போனில் இருந்து தொடர்பு கொள் என்றார். ஐயா சாமி ஊருக்குப் போயி நாப்பது நாளைக்கு மேலாச்சு. போன்ல இங்க கூப்பிடத்தான் காசிருக்கு.. ஊருக்கெல்லாம் கூப்பிடணுமின்னா கார்டு போட்டாத்தான் முடியும்ன்னு சொல்ல, அப்ப புகார் கொடுத்துட்டுப் போ என்றார். பின்னர் என்ன நினைத்தாரோ அவரே போன் பண்ணிட்டு சுவிட்ச் ஆப்ல இருக்கு... புகார் கொடுத்துட்டு போ என்று சொல்லி அதில் என்னென்ன இருந்தது என விவரமாகக் கேட்டு  எனது போன் நம்பர் விவரம் எல்லாம் போட்டு புகார் பதிவு பண்ணி ஒரு பேப்பரைக் கொடுத்து உங்க பெட்டி வந்ததும் போன் பண்றோம். வந்து வாங்கிக்கிட்டுப் போங்க என்றார்.

சரி என தலையாட்டிவிட்டு கிளம்ப, அந்த சூடானி வெளியில மறுபடியும் போய்ப்பாரு... ஒருவேளை அவங்க வந்திருந்தா கூட்டிக்கிட்டு வா... என்று சொல்லி அனுப்பினார். என்னடா இப்படி ஆச்சே... சான்றிதழ் எல்லாம் இருக்கேன்னு கவலையோட வந்தேன். வெளியே வந்து எவனாவது நிக்கிறானான்னு தேடினா ரெண்டு பேரு நம்ம பேக்கை வச்சிக்கிட்டு திருவிழாவுல காணாமப் போன பிள்ளைங்க மாதிரி நின்னானுங்க... போயி புடிச்சி ஏன்யா நீ பாட்டுக்கு எடுத்துக்கிட்டுப் பொயிட்டே... ரெண்டு மணி நேரமா நாயா அலையிறேன்னு சொன்னதும் இல்லைங்க எந்தம்பி அவசரத்துல மாத்தி எடுத்துக்கிட்டு வந்துட்டான்... சாரிங்க என்றான் அண்ணன்காரன். ஏங்க உங்க தம்பிதான் கொட்டையெழுத்துல பேரெழுதி வச்சிருக்காரே பின்ன எப்படிங்க... நல்ல ஆளுங்க... சரி விடுங்க... நல்ல நேரத்துல வந்தீங்க... இல்லேன்னா கவலையோட அபுதாபி போயிருப்பேன்னு சொல்ல எப்படி உள்ள போறதுன்னு கேட்டானுங்க... வாங்கன்னு மீண்டும் போன்... அந்தத் தமிழர் வந்து சொன்னேன்ல கெடச்சிருச்சு பாருங்க என்று கூட்டிச் சென்றார்.

அந்த சூடானி பாத்துட்டு கிடைச்சிருச்சா... சேம் சேம் பேக்கா... என்று சொல்லிச் சிரித்தவர். உம்பேரை எழுதிட்டு இப்படி எடுத்துக்கிட்டுப் பொயிட்டியே என்று அவனைப் பார்த்து சத்தம் போட்டார். சாரிங்க அவசரத்துல மாறிடுச்சு என்றான். இனிமே வரும் போது அவசரப்படாம உன்னோட பேக்கை எடுத்துக்கிட்டுப் போகணும் அடுத்தவங்க பேக்கை எடுக்கக்கூடாது என்றார் சிரித்துக் கொண்டே. பின்னர் புகாரை திரும்பப் பெற்று கையொப்பம் இட்டுக் கொடுக்க, அவனிடம் பேக்கை திறந்தியா என்று அந்த சூடானி கேட்க இல்லை என்றான். உடனே நீ திறந்து உன்னோட பொருட்கள் இருக்கான்னு பாரு... குறிப்பா சான்றிதழ் பைல் இருக்கான்னு பாரு என்றார். 

நானும் திறந்து பார்த்து இருக்கு என்று சொல்லவும் அவனைப் பார்த்து நீ போ என்றார். உடனே அவன் நன்றி சொல்லிக் கிளம்ப, எங்களுக்கு நன்றி சொல்றது இருக்கட்டும் அவருக்கிட்ட மன்னிப்புக் கேட்டுட்டுப் போ... ரெண்டு மணி நேரத்துக்கு மேலாச்சு இந்நேரம் அபுதாபியே போயிருப்பாரு...  என்று சொல்லி என்னிடம் எங்கிருந்து வாறீங்க என்று கேட்டார். இந்தியா, தமிழ்நாடு என்றதும் மத்த ஆளுங்க மாதிரி கிருகிருன்னு (பேசிக்கிட்டே இருப்பது) கத்தாமல் ரொம்பப் பொறுமையா இருந்தாரு... இவரு ரொம்ம்ம்ம்ப்ப்ப நல்லவருன்னு சொல்ல அவனும் மன்னிப்புக் கேட்டுவிட்டுச் சென்றான். 

இதுக்கு இடையில ஊருக்கும் வேற சொல்லியாச்சா... மனைவியிடம் இருந்து போன் மேல போன் பெட்டி கிடச்சிருச்சும்மான்னு சொன்னதும்தான் அவருக்கு நிம்மதி. பின்னர் நான் பஸ் மாறி.. மாறி... அபுதாபி வந்து சேர பதினோரு மணி ஆயிருச்சு... வந்ததும் குளித்துவிட்டு அலுவலகத்துக்கு ஓடினேன்.

நம்ம நிலைதான் இப்படின்னா... ஊருக்கு வந்திருந்த அண்ணன் சிங்கப்பூருக்கு திங்கள்கிழமை போச்சு... அதோட பெட்டியும் இதே கதையில மாறி, புகார் பண்ணி... இவனுக வந்து வாங்கச் சொன்னானுங்க... அவனுங்க அழகா அன்று மாலையே அலுவலகத்துக்குக் கொடுத்து விட்டுட்டானுங்க... நான் என்னண்ணே போயாச்சான்னு கேட்டா உன்னைய மாதிரியே நானும் பெட்டியை தொலச்சிட்டேம்ப்பான்னு சொல்லிச் சிரிக்கிறார். இது எப்படியிருக்கு...

-'பரிவை' சே.குமார்.

விமான நிலையத்தில் தவிக்க வைத்த பெட்டி


ந்த முறை ஊரில் இருந்து வரும்போது கொண்டு வந்த பெட்டி மாறிய கதையை பகிர்ந்துக்கலாம் என்றுதான் இந்தப் பகிர்வு.

எப்போது ஊருக்குச் சென்றாலும் திரும்பி வரும்போது சந்தோஷ மனநிலை இருப்பதில்லை என்பதை குடும்பத்தைப் பிரிந்து வெளிநாட்டில் வாழும் எல்லோரும் மறுப்பதில்லை. எனக்கும் எப்போதும் அதே நிலைதான் என்றாலும் இந்த முறை இங்கு... அங்கு... என கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் குடும்பத்துடன் செலவிட்டு விட்டு தனியாக திரும்புவதென்பது மிகப்பெரிய கஷ்டமாக இருந்தது. எப்பவும் கைப்பை போக, லக்கேஜில் எனக்கு உறவினர்களுக்கு என பொருட்கள் கொண்டு வருவேன். இந்த முறை சோகமே உருவாக வரும் நிலை என்பதால் எதுவும் வாங்கவில்லை. மனைவி வற்புறுத்தியும் எதுவும் வாங்க விரும்பவில்லை.

எனவே கைப்பையில் எனக்கும் உறவுகளுக்குமான பொருட்களை எடுத்துக் கொண்டு திருச்சி விமான நிலையத்துக்கு ஐத்தானுடன் வந்து சேர்ந்தேன். உள்ளே நுழைந்ததும் மிஷினில் பையை சோதனை செய்த அதிகாரி உள்ள என்னமோ இருக்கு... திறங்க பாக்கணுமென்றார். மாம்பழம், டிரஸ், இனிப்புக்கள் என்னோட சான்றிதழ்கள் இருக்குன்னு சொன்னாலும் திறக்கச் சொல்லி நின்றார். எனவே திறந்து காண்பிக்க, மின்சாதனம் எதுவும் வச்சிருக்கீங்களா? காட்டுதே... அப்படின்னு மறுபடியும் கேட்டார்... இல்லைங்க இதுதான் இருக்கு என்று சொல்லவும் சரி போங்க என்றார். 

எடை போட்டு நமக்கான பயணச்சீட்டு கொடுக்குமிடத்தில் எடை போட்ட பையன் கையில கொண்டு போறதை விட கொஞ்சம் எடை கூடுதலா இருக்கு நீங்க லக்கேஜ்ல போட்டுடுங்க என்றதும் எப்பவும் போல் சரி என்று சொல்லிவிட்டேன். அது பூட்டியிருப்பதால் சான்றிதழ்களுக்கு பிரச்சினை இல்லை என்ற தைரியத்தில் கொடுத்துவிட்டு ஐத்தானுக்கு கைகாட்டி போகச் சொல்லிவிட்டு இமிக்கிரேஷன் பக்கம் சென்றேன். திருச்செந்தூருக்கு மொட்டை போட்டிருந்ததால் அடையாளம் தெரியலைன்னு திருப்பி விடமாட்டானான்னு ஒரு நப்பாசையுடன் இரவு ஒரு மணிக்கு கிளம்பும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்க்காக 11.30 முதல் காத்திருந்தேன்.

ஒரு வழியாக ஒரு மணிக்கு விமானம் கிளம்பியது. பின்னர் தூக்கம்தான்... திடீரென விமானப் பணிப்பெண் எல்லோரையும் உசுப்பி விட்டு சாப்பிட கொஞ்சம் இடியப்பம், ஒரு லட்டு, சின்ன பப்ஸ், குருமா மாதிரி கடலை போட்டது கொஞ்சம்... அப்புறம் இமயமலை அடிவாரத்தில் எடுத்த தண்ணீர் என்ற கதையுடன் பெயர் பொறிக்கப்பட்ட, குடிக்கவே முடியாத அலண்ட தண்ணீர் கொடுத்தார். அந்த நேரத்தில் எவன் சாப்பிடுவான்... அதுவும் இடியப்பம்... பெரும்பாலானோர் வாங்கி வச்சிட்டு மீண்டும் தூங்க ஆரம்பிக்க நானும் அப்படியே.

இறங்கியாச்சு... பஸ்ஸில் ஏறி இமிக்கிரேஷன் போனா சந்தையில நிக்கிற மாதிரி கூட்டம்... அதுல நீந்தி எல்லாம் முடிந்து லக்கேஜ் எடுக்கப் போனா... கன்வேயர் பெல்ட்டில் வந்தவற்றை பேர் பார்த்து நிறையப் பேர் எடுத்துக்கிட்டுப் போக... பலர் காத்திருந்தோம்... ஒவ்வொரு ஆளாகப் போக ஆரம்பிக்க... எனக்கு என்னடா இது இன்னும் நம்ம பேக் வரலையே என்ற குழப்பத்துடன் காத்திருந்தேன். கூட்டம் காலி... அப்போதுதான் ஒரு பேக் வந்தது... என்னோட பேக் போல... இருந்தாலும் இது நம்ம பேக் இல்லையே என ஒரு முறை சுத்த விட்டேன்.. பின்னர் எதுவும் வராததால் ஒரே மாதிரி இருக்கவும் மாத்தி எடுத்துக்கிட்டுப் போயிட்டானுங்களோன்னு அந்த பேக்கில் ஒட்டியிருந்த ஏர்போர்ட் பேப்பரில் பேரைச் பார்க்க குருசாமி திவாகர்ன்னு இருந்துச்சு... ஆஹா.... மாத்திக் கொண்டு பொயிட்டான்டான்னு பார்த்தா... பேக்குல திவாகர்ன்னு கொட்டை எழுத்துல எழுதி வச்சிருக்கான் அந்த அறிவாளி.

சான்றிதழ்கள் எல்லாம் இருக்கேன்னு ஒடிப்போயி ஒரு அரபிக்கிட்ட என்னோட பேக் மிஸ்ஸாயிடுச்சுடான்னு சொன்னே... ஒகே... நோ பிராப்ளம்ன்னு சொல்லிட்டு ஒருத்தனைக் காட்டி அவன் இந்தியன் அவனுக்கிட்ட கேளு உதவுவான்னு சொன்னான். உடனே அந்த மலையாளிக்கிட்ட போயிச் சொன்னேன். அவன் அருகிருந்த நம்ம தமிழனிடம் சொல்ல, ஒண்ணும் பயமில்லைங்க... தினம் தினம் இது நடக்கிறதுதான்... தெரியாம மாத்தி எடுத்திருப்பாங்க... வந்துரும்... அந்தா அந்த ஆறாவது பெல்ட் இருக்குல்ல அதுக்குப் பக்கத்துல ஆபீஸ் இருக்கு... அங்க புகார் பண்ணுங்க... என்றார். சான்றிதழ் எல்லாம் இருக்குங்க அதான் பயமா இருக்கு என்றதும் ஒண்ணும் பிரச்சினை இல்லை... அந்தாளோட பேக் இங்கதானே இருக்கு... கண்டிப்பா வருவாங்க... போங்க போயி புகார் பண்ணிட்டுப் போங்க என்றதும் ஒண்ணாம் நம்பர் பெல்ட்டின் அருகில் நின்ற நான் வேகவேகமாக ஆறாம் நம்பர் பெல்ட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.

(மீதிப் பகிர்வு மாலை...)
-'பரிவை' சே.குமார்.

ஞாயிறு, 21 ஜூன், 2015

விடுமுறையும் திருவிழாக்களும்...

 ணக்கம்.
இறையருளால் உறவுகள் நலமாய் இருப்பீர்கள் என்று நம்புகிறேன். விடுமுறை சந்தோஷங்களில் திளைத்து மீண்டும் பாலை மண்ணில் பாதம் பதித்து ஒரு வாரம் ஆனாலும் கண்ணில் ஆடும் மனைவி மக்களின் நினைவில் இருந்து இன்னும் மீள முடியாத துயரம். என்ன செய்வது...? வாழ்க்கை இப்படி ஒரு பாதையில் பயணிக்கிறதே... 


மே மாதம் ஊருக்குச் செல்வதில் இரட்டிப்புச் சந்தோஷம்... ஒண்ணு குழந்தைகளோட நேரம் செலவிடலாம்... இரண்டாவது திருவிழாக்கள்... குழந்தைகளோட நேரம் செலவிட்டதால் எங்கு சென்றாலும் நானும் வருவேன் என்று நின்றதால் உள்ளூரிலே கூட நிறையப் பேரைப் பார்க்க முடியவில்லை... அப்புறம் எப்படி நிலவன் ஐயா, தனபால் அண்ணா, கரந்தை ஐயா, சரவணன் அண்ணாவை எல்லாம் பார்ப்பது... எல்லாரும் மன்னிக்கனும்... எப்படியும் பார்க்கலாம் என்று எழுதியிருந்தால் கண்டிப்பாக ஒருநாள் சந்திப்போம்.

எங்க ஊர் மாரியம்மன் கோவில் திருவிழா வைகாசி மாதம் நடந்தது. திருவிழா அன்று இரவு சன் டிவி புகழ் தேவகோட்டை ராமநாதன் தலைமையில் பட்டிமன்றம் நடைபெற்றது. அவர் சொன்ன எல்லா நகைச்சுவைகளுமே பத்திரிக்கையில் வந்தவைதான் என்றாலும் கிராமத்து மக்கள்தானே என்று சொன்னார் போல... அதேபோல் பேசியவர்கள் எல்லாம் பெரிய ஆட்கள்தான்... அருமையாகப் பேசினார்கள். ஆனால் தேவகோட்டையைச் சேர்ந்த ஒரு குழந்தையை மேடை ஏற்றினார்கள். அதற்காகவே பேச்சாளர்களின் வரிசை மாற்றி பேச வைத்தார். அதனால் நல்லா பேசுபவர்களுக்கு நேரமில்லை என்பதே உண்மை... இதையும் ராமநாதன் அவர்கள் கிராமத்து மக்களுக்கு நாலு நகைச்சுவை சொன்னால் போதும் என்று நினைத்துத்தான் செய்தார்.


அந்தக் குழந்தை அம்மா சொல்லச் சொல்ல அப்படியே பேசினாலும் அதற்கு வளமான எதிர்காலம் உண்டு. ஒண்ணாம் வகுப்பு படிக்கும் போதே மேடையில் பயமின்றி அழகாய் அம்மாவின் வாயசைப்பைப் பார்த்துப் பேசும் அந்தக் குழந்தை பிற்காலத்தில் மிகச் சிறந்த பேச்சாளராக வரும் என்பதில் சந்தேகமே இல்லை. சிறிய கிராமம்... அவ்வளவாக கூட்டம் இல்லை என்றாலும் ஆரம்பத்தில் இருந்த கூட்டம் கடைசி வரை அப்படியே இருந்தது.

பால்குடம், கரகம் என திருவிழா மிகச் சிறப்பாக நடந்தது. ஸ்ருதியும் விஷாலும் மிக அழகாக முளக்கொட்டினார்கள் என்பது கூடுதல் சந்தோஷம். இதேபோல் இன்னும் சில திருவிழாக்கள், திருமணங்கள், விருந்துகள் என மே மாதம் அழகாய் கரைந்தது.


மீண்டும் அபுதாபி திரும்பிய போது ஏர்போர்ட்டில் பெட்டியை மாற்றி எடுத்துக் கொண்டு போன கதை அடுத்த பதிவாய்...

அப்புறம் இன்னொன்னு இன்று காலை ஸ்ருதியும் விஷாலும் போன் செய்து தந்தையர் தின வாழ்த்துச் சொன்னார்கள்... ரொம்ப மகிழ்ச்சியாய் இருந்தது..

மன ஆறுதலுக்காக மீண்டும் எழுத ஆரம்பிக்கலாம் என்று நினைத்துத்தான் இந்தப் பகிர்வு... அடிக்கடி இல்லாவிட்டாலும் அவ்வப்போது எழுதுவேன் என்று நினைக்கிறேன். பார்க்கலாம்.
-'பரிவை' சே.குமார்.