மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

புதன், 24 ஆகஸ்ட், 2011

திருமகள் முதல் அஞ்சலி வரை...

தெய்வத் திருமகள் படம் பார்த்தோம். ஆரம்பத்தில் மிகவும் மெதுவாக படம் நகர ஆரம்பித்தது. 'என்னடா இது ரொம்ப பொறுமை வேண்டுமோ?' என்ற எண்ணம் மனதிற்குள் ஓடிய போது எனது நண்பர் அப்பா சாமி நமக்கு இது சரியா வராது... கதை இருக்கோ இல்லையோ வேங்கை மாதிரி சும்மா விறுவிறுன்னு போகணும்... செத்தவன் கையில வெத்தலை பாக்க கொடுத்த மாதிரி... சவச்சவன்னு போகுது... நான் தூங்குறேன்னு படுத்துவிட்டார்.

கதையின் நேர்த்தி கொஞ்சம் கொஞ்சமாக படத்தோடு ஐக்கியமாக்கியது. படத்தின் இறுதியில் நீதிமன்றத்தில் நிலாவும் விக்ரமும் தங்களது பாவனை மூலமாக பேசிக்கொள்வது மொத்த படத்தையும் ஒரே இடத்தில் நிறுத்திவிட்டது. அதுவும் நிலாவின் பாவனைகளும் அந்த அப்பாவித்தனமான முகமும் கண் கலங்க வைத்துவிட்டது.

'ஐ ஆம் சாம்' என்ற படத்தின் அப்பட்டக் காப்பிதான் தெய்வத் திருமகள் என்பது எல்லாரும் அறிந்ததே. விக்ரம் கஷ்டப்பட்டிருக்கிறார்... நல்ல உழைப்பாளி... தான் ஏற்று நடிக்கும் கதாபாத்திரமாகவே மாறிவிடுவார் என்பது எல்லாரும் அறிந்ததே. ஆனால் இந்தக் கதையின் அசல் பதிப்பில் சாம் வாழ்ந்திருப்பதை பார்த்துப் பார்த்து தன்னை தயார் படுத்தியிருந்தாலும் அவரது செய்கைகள் நமக்கு சில நேரங்களில் எரிச்சலைத்தான் தருகின்றது.

நிலாவாக வரும் சாரா தனது கதாபாத்திரத்தை அருமையாக செய்திருக்கிறார், அழகான நடிப்பு... கடைசிக் காட்சியில் தனது முகத்தில் அவர் காட்டும் பாவங்கள் சூப்பர். அவர் அளித்த தொலைக்காட்சிப் பேட்டி ஒன்றில் நீதிமன்றக் காட்சியை அப்படியே நடித்துக் காண்பித்தார். படத்தில் எல்லாரையும் பின்னுக்கு தள்ளி தானே முதலாவதாய் நிற்கிறார்.

அனுஷ்காவுக்கு சற்றே வித்தியாசமான கதாபாத்திரம்... 'விழிகளில்...' பாடலில் மழைத்துளிகளுக்கு இடையில் அனுஷ்காவை அழகாகக் காட்டியிருக்கிறார்கள். சந்தானம், அமலாபால் என எல்லாரும் அளவாய் நடித்திருக்கிறார்கள்.

இயக்குநர் விஜய் நல்லதொரு படைப்பை கொடுத்திருக்கிறார் என்று சொல்ல முடியாது... ஏனென்றால் ஒரு படத்தின் ஒரு சில காட்சிகளை உருவினால் பரவாயில்லை. படத்தையே உருவி இருக்கிறார். ஒரு சில காட்சிகளை உருவினாலே அங்கயிருந்து திருடியிருக்கான்... இங்கயிருந்து திருடியிருக்கிறான்னு எல்லாரும் பேசுவோம். ஆனா மொத்தமா திருடுனவனுக்கு தேசிய விருது கிடைக்குமுன்னு சொல்லிக்கிட்டு திரியுறோம். என்ன கொடுமை சார் இது.

***

ராகவா லாரன்ஸின் காஞ்சனா, பேய்க்கதை என்றால் பயமுறுத்தல்கள் மட்டுமே இருக்க வேண்டும்... நகைச்சுவை கலந்தால் படத்தின் சுவராஸ்யம் கெட்டுவிடும் என வரும் விட்டாலாச்சாரியா வகை படங்களுக்கு மத்தியில் நகைச்சுவையை எப்படிப் பயன்படுத்தினால் பேய்க்கதையையும் சுவராஸ்யமாக கொண்டு செல்லலாம் என்பதை புரிய வைத்திருக்கும் படம்.

படம் முழுவதும் நகைச்சுவை... நகைச்சுவை... நகைச்சுவை... பல நாட்களாக காணாமால் போன தமிழ்த் திரையுலகின் நகைச்சுவை அரசி கோவை சரளா இந்தப் படத்தில் புகுந்து விளையாடியிருக்கிறார். மருமகள் தேவதர்ஷினியுடன் அடிக்கும் லூட்டியாகட்டும், இரவில் தூக்கத்தில் எழுந்து சிரித்துவிட்டு படுப்பதாகட்டும், லாரன்ஸின் பேய்ச் சேட்டைகளின் போது ஒரு ஓரமாக உக்காந்து ரசிப்பது போல் பயத்தோடு சிரிப்பதாகட்டும்... கலந்துகட்டி அசத்தியிருக்கிறார். ஆச்சிக்குப் பிறகு நகைச்சுவை அரசியென்றால் அது கோவை சரளாதான்.

நம்ம சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் திருநங்கையாக வந்து வில்லன்களால் கொல்லப்பட்டு பேயாக மாறுகிறார். அளவாக கொடுத்த வேடத்தில் அருமையாக நடித்திருக்கிறார். படத்தின் கடைசிப் பாடலில் ராகவா லாரன்ஸின் நடனமும் பாடலின் வேகமும் இதயத்துடிப்பை எகிற வைக்கின்றன.

***

மானாட மயிலாட புகழ் மச்சான் நடிகை நமீதா, அன்னா ஹசாரே உண்ணாவிரதம் குறித்து பெரிய பேட்டி கொடுத்திருக்காக... அதுவும் எப்படி அவுக காந்தி பொறந்த ஊர்ல இருந்து வந்திருக்காங்களாம். அதான் அவரு கோவணம் கட்டின மாதிரி அம்மணி உடை உடுத்துது போல... அவரு கவர்ச்சியா நடிடி பேத்தின்னு சொல்லி அனுப்பி வச்சாரோ...

சரி...விஷயத்துக்கு வருவோம், போராட்டம் பண்ற எல்லாரும் காந்தியாக முடியாதாம். ஊழலை ஒழிக்க முடியாதாம்... மொத்தத்தில் இது தேவையில்லாத வேலையின்னு சொல்லியிருக்கு அம்மணி... இளைஞர் சமுதாயமே அன்னா ஹாசாரே பின்னாடி நிக்கிறத பாத்து நம்ம மார்க்கெட் (இருந்தாத்தானே) இளைஞர்களை நம்பித்தானே இருக்கு அவங்களும் அவரு பக்கம் பொயிட்டா என்ன ஆகுறதுன்னு பயப்படுதோ என்னவோ தெரியலை.

***

மங்காத்தாவும் வேலாயுதமும் ஒரே நாளில் வருமான்னு ரசிகர்கள் எதிர்பார்ப்பு. ஆனால் எப்ப வருமுன்னே இன்னும் தெரியாத நிலையிலதான் இருக்கு. தல அஜீத்துக்கு அம்பதாவது படம், அதிகம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படம் மங்காத்தா, பாடல்கள் நல்லா வந்திருக்கு... தளபதி விஜய்க்கு தொடர் தோல்விகளை மறக்கச் செய்யும் படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படும் படம் வேலாயுதம். ஜெயிக்கப் போவது தலயா... தளபதியா... என்பதை விரைவில் பார்க்கலாம்.

முக்கியமான விஷயம் என்னான்னா, மங்காத்தா பாடல்கள் வெளியீட்டு விழாவுக்கு தயாரிப்பாளர் தயாநிதி அழகிரியும், அஜீத்தும் வரவில்லை. இயக்குநர் வெங்கட் பிரபு ஒரு பண்பலை வானொலியில் வைத்து பாடல்களை வெளியிட்டார். ஆனால் வேலாயுதம் பாடல்கள் மதுரையில் நடக்கும் பிரமாண்ட விழாவில் வெளியிடப்படுகின்றனவாம். விமான நிலையத்தில் இருந்து விழா மேடைக்கு வரும் விஜயின் காருக்குப் பின்னால் நூற்றுக் கணக்கான கார்கள் வர ஏற்பாடாம். அம்மாவுக்கு ஆதரவா பேசினதுக்காக ரொம்பத்தான் அலப்பறை பண்ணுறாங்க... ம்ம்ம்.... ஆடட்டும்... ஆடட்டும்...

***

கலைத்தாயின் மைந்தர்கள்... (போட்டோ மட்டும்)


***
ச்ச்ச்ச்ச்சும்மா....


***
இப்ப புரிஞ்சிருக்குமே தலைப்பு எப்படி வந்துச்சின்னு.... என்ன பண்றது எதாவது மொக்கை போட்டாத்தானே மனசுங்கிற பேர்ல ஒருத்தன் கிறுக்கிக்கிட்டு இருக்கான்னு எல்லாருக்கும் ஞாபகம் வருது.

-'பரிவை' சே.குமார்.

படங்கள் உதவிய கூகிளுக்கு நன்றி

புதன், 17 ஆகஸ்ட், 2011

இந்திய கிரிக்கெட்: வீழ்ச்சியின் ஆரம்பமா?



கடந்த ஓராண்டுக்கும் மேலாக டெஸ்ட் அரங்கில் முதலிடத்தை தக்க வைத்திருந்த இந்திய அணி இங்கிலாந்துடனான நான் கு போட்டிகள் கொண்ட தொடரில் 3-0 என்ற கணக்கில் தோல்வியை சந்தித்துள்ள நிலையில் முதல் இடத்தையும் இழந்துள்ளது கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகுந்த வருத்தத்தைத் தந்துள்ளது.

கிரிக்கெட்டில் வெற்றி தோல்வி என்பது சகஜம்தான். ஆனால் நம்பர்-1 அணி மோசமான தோல்வியைச் சந்தித்ததுதான் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இவ்வளவு மோசமான தோல்விக்கு காரணம் என்ன?

இந்திய அணியைப் பொறுத்தவரை திராவிட்,சச்சின்,லெட்சுமணன், தோனி, காம்பீர், ரெய்னா, ஜாகீர்கான்,ஹர்பஜன் சிங் என பெரிய நட்சத்திரப் பட்டாளம் இருந்தும் அணியின் வெற்றிக்கு உதவும் நட்சத்திரமாக ஒருவர் கூட ஜொலிக்க முடியாதது துரதிஷ்டமே. (இவர்களை ஜொலிக்கவிடாமல் செய்த பெருமை காயத்தையே சாரும்.)

இரண்டு போட்டியில் தோற்றவுடன் அணியில் அறிவிக்கப்பட்டிருந்தும் காயம் காரணமாக விளையாடாமல் இந்தியா திரும்பியிருந்த சேவாக் வேகவேகமாக அனுப்பப்பட்டார். அவரும் சாதிப்பார் 2-2 என்று தொடரை சமன் செய்து இந்தியா முதல் இடத்தை தக்க வைத்துக் கொள்ளும் என்று முட்டாள் ரசிகன் மூடத்தனமாக நம்பினான். ஆனால் நடந்தது என்ன? இங்கிருந்து போனவர் பயிற்சிப் போட்டியில் 8 ரன் எடுத்து போதும் என்று போய் அமர்ந்து வேடிக்கை பார்த்தார்.

இரண்டு போட்டிகளிலும் எதோ கொஞ்சம் ரன் அடித்திருந்தாலும் சேவாக் வருகையால் தனது மூன்றாவது டெஸ்டில் இடம் கிடைக்காது என்பதை நன்கு அறிந்த முகுந்த், பயிற்சிப் போட்டியில் சதமடித்தார். இருந்தாலும் வாய்ப்பு சேவாக்கிற்கே கிடைத்தது. இங்கிருந்து இந்திய அணியை தூக்கி நிறுத்தப் போனவர் இரண்டு இன்னிங்ஸிலும் ரன் எதுவும் எடுக்காமல் நடையைக் கட்டி அவரை அவசரம் அவசரமாக அனுப்பிய இந்திய கிரிக்கெட் சங்கத்தின் முகத்தில் கரியைப் பூசியதுடன் இந்தியாவின் மானத்தையும் காற்றில் பறக்க விட்டார்.

இந்திய கிரிக்கெட்டின் பெருஞ்சுவர் என்று வர்ணிக்கப்படும் திராவிட், அவர் பங்குக்கு இரண்டு சதம் அடித்து களத்தில் போராடினாலும் அவருக்கு உதவியாக களத்தில் யாரும் நிற்கவில்லை... நிற்கவில்லை என்பதைவிட நிற்க நினைக்கவில்லை என்பதே உண்மை.

லெட்சுமணன் இந்த முறை ஜோபிக்கவில்லை. யுவராஜ் காயத்தால் அணியில் நிரந்தர இடம் பிடித்த ரெய்னா டுவெண்டி 20 விளையாடுவது போல் விளையாடி தனக்கான இடத்தை தானே இழக்க தயாராகிவிட்டார். இதே போல் காம்பீர் அனுவவ வீரர் போலில்லாமல் அவசரத்துக்கு பொறந்தவன் மாதிரி விளையாண்டு விரைவாக வெளியேறியது கேவலமானது. முதல் விக்கெட்டுக்கான கூட்டணி விரைவாக வெளியேறியதால் அடுத்தடுத்த விக்கெட்டுக்கள் விரைவாக சரிந்தன.

பந்துவீச்சைப் பொறுத்தவரை ஜாகீர்கானின் காயம் அணிக்கு பின்னடைவை கொடுத்தது என்பதே உண்மை. பிரவீன் குமார், இஷாந்த், ஸ்ரீசாந்த் போன்ற வேகங்களின் கேவலமான பந்து வீச்சு மூன்றாவது போட்டியின் இரண்டாம் மற்றும் மூன்றாம் நாட்களின் இந்த அணியா உலக அரங்கில் நம்பர் -1 அணியாக இருக்கிறது என்ற கேள்வியை பார்வையாளர்கள் மத்தியில் விதைத்துச் சென்றது.

ஆக்ரோஷமாக விக்கெட் எடுக்க வேண்டும்... ஸ்டம்பை தகர்க்க வேண்டும் என்று விளையாடும் இங்கிலாந்து பந்து வீச்சாளர்களுக்கு மத்தியில் இந்தா நாலு எடு, ஆறு எடு என்று பந்து வீசினார்கள் இந்திய பவுலர்கள். பள்ளிக்கூட மைதானத்தில் விளையாடும் சிறுவர்கள் கூட இதைவிட அருமையாக பந்து வீசுகிறார்கள்.

சச்சினைப் பொறுத்தவரை, வினோத் காம்ளி சொன்னதுபோல் இதுதான் அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் மோசமான தொடராக இருக்கும். இந்தியர்கள் மட்டுமல்ல உலகமே தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் சச்சின் அரை சதம் எடுப்பதே பெரிய விஷயமாக இருக்கிறது. இந்நிலையில் நாளை தொடங்கும் கடைசி டெஸ்டிலாவது சதத்தில் சதமடிப்பார் என்று ஒவ்வொரு இந்தியனும் நினைத்துக் கொண்டிருக்கிறான்.

மோசமான தோல்வியால் துவளாமல் அடுத்த போட்டியில் வெற்றி வேண்டும் என்பதைவிட சதம் வேண்டும் என்று விளையாண்டால் சதமும் வெற்றியும் கிட்டும் என்பதில் சந்தேகமில்லை. மேலும் கேவலமாக பேசும் இங்கிலாந்து அணியினருக்கு எதிராக சதத்துடன் வெற்றியைபும் எட்டி அவர்களது கொட்டத்தை அடக்கலாம். அவரது சாதனை மைல்கல்லில் மீண்டும் ஒரு கிரீடம் சூட்டிக் கொள்ளலாம்.

இறுதியாக, கேப்டன் தோனி, இரண்டு போட்டிகளில் இவர் சோபிக்கவே இல்லை என்றால் மூன்றாவது போட்டியில் இவர் மட்டுமே விளையாண்டார். அவர் மீண்டும் விளையாட ஆரம்பித்திருப்பது ஆறுதலான விஷயம்தான் என்றாலும் எப்பவும் பீல்டிங்கில் அதிக சிரத்தை காட்டும் இவர் இந்த முறை பீல்டிங் வியூகம் வகுப்பதில் கோட்டைவிட்டார் என்றே சொல்ல வேண்டும்.

இந்த தோல்வியில் இருந்து மீள வேண்டும் என்றால் நேற்றைய தோல்விகளை நினைத்து வருந்தாமல் நாளைய வெற்றியை நோக்கி பயணிக்க வேண்டும். அப்படிப் பயணித்தால் மீண்டும் தமது வெற்றி நடையை இந்திய அணி தொடரலாம்.

இந்த தோல்வி குறித்து பிசிசிஐ ஆராய்ந்து என்ன செய்யப் போகிறது என்று தெரியவில்லை. எவனுமே சரியாக விளையாடாத ஒரு போட்டியில் இவன் சரியில்லை ... அவன் சரியில்லை என்று எப்படி ஒதுக்க முடியும். அப்படி ஒதுக்க நினைத்தால் புதிய இந்திய அணியைத்தான் தேர்ந்தெடுக்க வேண்டும்.

ஐபிஎல் போட்டிகள் விரர்களின் உடல் நலத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதே உண்மை. ஐபிஎல்தான் நிறைய வீரர்களை காயத்தால் அவதிப் பட வைத்தது. இது போன்ற போட்டிகளைக் குறைத்து நாட்டுக்கான போட்டிகளில் வீரர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்றால் ஐபிஎல் குறித்து பிசிசிஐ முக்கியமான முடிவுகளை எடுக்க வேண்டும்.

வெற்றி பெற்றால் ஆஹா... ஓஹோ என்று புகழ்வதும் ஒரு முறை தோற்றால் போச்சு... அம்புட்டுத்தான்... இந்திய அணி அதாள பாதாளத்தை நோக்கி போகிறது, மூத்த வீரர்களுக்கு கண் சரிவர தெரியாது, தோனியின் தலைமை சரியில்லை... அது இது என்று பேசுவதை விடுத்து அணியின் வெற்றிக்கான வழிகளைத் தேட வேண்டும்.

இதே தோனி தலைமையிலான அணிதான் உலக கோப்பையை வென்றது. இதே தோனி தலைமையிலான அணிதான் டெஸ்ட் தொடரை இதுவரை தோற்காமல் இருந்தது... அப்பல்லாம் நாம் எங்க தல தோனி போல வருமான்னு புகழ்ந்தோம். இனியும் புகழும் காலம் வரும் அதுவரை தூற்றாமல் இருப்போம்.

இது இந்திய அணியின் வீழ்ச்சிக்கான காலத்தின் ஆரம்பம் என்று பல ஜாம்பவான்கள் ஆருடம் சொல்கிறார்கள்... அப்படி ஏன் சிந்திக்க வேண்டும்... இதுதான் அடுத்த எழுச்சிக்கான ஆரம்பம் என்று எடுத்துக் கொள்ளலாமே...

இந்த தோல்வி மறந்து வரும் போட்டியில் வெற்றிக்கனியை நமது அணி பறிக்கட்டும். அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றி பெற்று இழந்த பெருமையை மீண்டும் மீட்கட்டும்.

இந்தியா நமது நாடு... நாம் இந்தியர்கள்... வென்றால் புகழ்வதும் தோற்றால் இகழ்வதும் இனி வேண்டாம்.... எப்போதும் இந்தியா ஒளிரட்டும். இது கிரிக்கெட்டுக்கு மட்டுமல்ல... எல்லா விளையாட்டுக்கும், எல்லா விசயங்களுக்குமான வரிகள்தான்...

-'பரிவை' சே.குமார்.

படங்கள் உதவிய கூகிளுக்கு நன்றி

ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2011

எது சுதந்திரம்..?



ரயில் நிலையம்...
பேருந்து நிலையம்...
விமான நிலையம்...
என எல்லா இடத்திலும்
தொடரும் பாதுகாப்பு
சோதனைகள்...

இந்தியத்
தொலைக்காட்சிகளில்
முதல் முறையாக
போட்டி போடும்
சினிமாக்கள்...

சுதந்திர போராட்டத்
தியாகிகளாம்
கதாநாயகன்
கதாநாயகியின்
பேட்டிகள்...

சமச்சீர் கல்வியால்
வகுப்பறையில்
தூங்கிய மாணவருக்கு
விடுமுறையுடன்
சாக்லெட்டு கொடுக்கும்
கொடியேற்றம்...

இவற்றிற்கெல்லாம்
முத்தாய்ப்பாய்...
குண்டு துளைக்காத
கூண்டுக்குள் இருந்து
சுதந்திரக் கொடியேற்றும்
பிரதமர்...

இப்படிப்பட்ட
சூழலில் தியாகிகளை
நினைக்க நமக்கு
நேரமிருக்கிறாதா..?

இதில் எங்கே
இருக்கிறது சுதந்திரம்...?

-'பரிவை' சே.குமார்.





படம் உதவிய கூகிளுக்கு நன்றி

புதன், 10 ஆகஸ்ட், 2011

சிறு துளி


டீக்கடை, இட்லிக்கடை மட்டுமே இருந்த அந்தப் பகுதியில் புதிதாக முளைத்தது 'முருகன் சவுண்ட் சர்வீஸ்'. அது ஒரு சிறிய கடைதான் கடைக்கு உள்ளே சில குழாய்கள், மைக்குகள், வயர்கள் எல்லாம் நிறைந்து கிடக்க, வெளியே சிறிய ஜெனரேட்டர் ஒண்ணு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

கடை முதலாளி முருகன் உள்ளூர்க்காரந்தான்... இதுவரை திருமயத்தில் இருக்கும் மைக் செட் கடையில் வேலை பார்த்தான். அவன் கடையில் வேலையில்லாத நேரத்தில் அவனும் அவன் முதலாளியும் பெரிய அளவில் தொழில் நடத்தும் முத்துச் செட்டியார் அழைப்பின் பேரில் அவரிடம் வேலைகளுக்கு செல்வதுண்டு. சம்பளமும் சாப்பாடும் கிடைக்கும்.

அப்படி சில நாட்களுக்கு முன்னர் நேமத்தான்பட்டி சுப்பையா செட்டியாரின் சாந்திக்கு மைக் செட், விளக்குகள் கட்ட போகணும் வாரீங்களான்னு முத்து செட்டியார் கேட்க அவருடன் கிளம்பினர்.

வேலையில் மும்மரமாக ஈடுபட்டிருந்த முருகனை கூப்பிட்ட முத்து செட்டியார், முருகா... வெளியில பாக்ஸ்தான் வைக்கப்போறோம். சீரியல் நல்லா இருக்கணும் ... நல்லா மேல ஏறிப் போடுன்னுனார்.

"சரிண்ணே... அதெல்லாம் நான் பாத்துக்கிறேன்.... டியூப் லைட்டை வேகமாக கட்டிட்டு வரச் சொல்லுங்க..." என்றான்.

முத்து செட்டியாருக்கு எப்பவும் முருகன் மேல தனி மரியாதை உண்டு. வேலையில இறங்கிட்டா சோறு தண்ணி எதிர்பார்க்க மாட்டான். எடுத்த வேலைய சிரத்தையோடு முடிக்கணும்... அதுக்குப் பிறகுதான் எல்லாம் என்பது அவன் எண்ணம். அது போல செய்யும் வேலையில் ஒரு நேர்த்தியிருக்கும். அதனால் அவர் அவனை நம்பி விட்டுவிட்டு எங்கு வேண்டுமானாலும் செல்வார்.

எல்லா பணிகளும் முடித்து அமர்ந்து சாப்பிட்டனர். அப்போது முருகனோட முதலாளி, "ஏண்டா... முருகா... ரெண்டு மூணு நாளைக்கு பெரிசு எப்படியும் ஒரு தொகை பாத்திருக்கும் இல்லையா?" என்றான்.

"பின்னே... சும்மாவா... எவ்வளவு லைட்டு.... சீரியல்லயே பாத்தியளா... அள்ளித் தெளிச்சிருக்கு....சும்மா நிப்பாட்டியிருக்க பாக்ஸப் பாருங்கா.... ஊரே அதிருமில்ல... முத்து அண்ணனுக்கு பேரு இருக்குன்னா சும்மாவா? நல்ல காசு பேசியிருப்பாரு."

"நீதான் அவர்கிட்ட நல்லா பேசுவியல்ல... லைட்டா அமௌண்ட் எவ்வளவுன்னு கேட்டுப் பாருவே..."

"ஏண்ணே... நாம வந்த வேலைய பாத்துட்டு துட்ட வாங்கிக்கிட்டு போறதை விட்டுட்டு வேண்டாத வேலை எதுக்கு..."

"சும்மா தெரிஞ்சுக்கத்தான்..."

"தெரிஞ்சு என்ன பண்ணப் போறீங்க... அடுத்த கான்ட்ராக்டை நீங்க புடிக்க போறீங்களா... சேந்தாப்புல நூறு லைட் கட்டின ஜெனரேட்டருக்கு அவருகிட்டதான் போகணும்... இதுல அவரு கான்ட்ராக்டைப்பத்தி கேட்டு என்னாகப் போகுது...."

"நாமளும் ஒரு நாள் அவரு மாதிரி வராமலா போயிடுவோம்..."

"வாரப்ப அவருகிட்ட கேக்கலாம்.... இப்ப பேசாம சாப்பிடுங்க..." என்றதும் மற்றவர்கள் சிரித்தனர்.

'முத்தண்ணன் மாதிரி நம்ம முதலாளி வாறாரோ இல்லையோ நாம ஒரு நாள் பெரியா ஆளா இருக்கணும்' மனதிற்குள் நினைத்துக் கொண்டான் முருகன்.

***

"என்ன முருகா... என்ன சிந்தனை..." என்றபடி அவனருகில் வந்து அமர்ந்தார் முத்து.

"ஒண்ணுமில்லேண்ணே... சும்மா உக்காந்திருந்தேன்..."

"சரி நான் கேக்குறேன்னு தப்பா நினைக்காதே... உன் மேல உள்ள அன்பாலதான் கேக்குறேன்... இதுல வர்ற வருமானம் உனக்குப் போதுமா... இதுவரைக்கும் சின்னப் பையனா இருந்தே... இனி அப்படியில்லையில்ல வயசு ஏறிக்கிட்டே போகுதுல்ல.... கல்யாணம் காச்சி பண்ண வேண்டாமா... ஒண்ணு வேற ஒரு நல்ல வேலையா பாரு... இல்ல இதுதான் தலையில எழுதுனதுன்னா நீயே ஒரு கடை ஆரம்பி...."

"என்னண்ணே சொல்றீங்க... நான் கடை ஆரம்பிக்கிறதா.... அட ஏண்ணே... அம்புட்டு பணத்துக்கு நான் எங்க போறது...? "

"இங்கபாரு எதையுமே மலைப்பா நினைச்சா மலப்பாத்தான் இருக்கும்... நான் வருஷா வருஷம் பழைய சாமாங்களை எதாவது ஒரு மைக்செட் காரனுக்கு பாதி விலைக்கு கொடுப்பேன்... அது மாதிரி உனக்கு வேணுங்கிறதை தாரேன்... இப்ப இருக்கதை கொடு... பின்னால பாக்கியத்தா..."

"அது சரிண்ணே... கடையெல்லாம் பாத்து வாடகை கொடுத்து...நடக்கிற காரியமா?"

"என்னப்பா உங்க ஊரு வெளக்குலதான் நாகமணி கடை கட்டிவிட்டிருக்கான்ல.... எம்புட்டு வாடகை கேக்கப்போறான்... உள்ளூர்காரன் நீயி... அதுவுமில்லா அவனுக்கு நெருங்கிய சொந்தம் அட்வான்ஸ் இல்லாம பேசிப்பாரு.... இந்த வேலையை உடனே ஆரம்பி..."

"எங்க விளக்குலயா... ஏண்ணே நீங்க..." சிரித்தான்.

"ஏன் சிரிக்கிறே... உங்க விளக்குல இருந்து திருமயம் பத்து கிலோமீட்டர்... அந்தப் பக்கமும் பெரிய சிட்டியெல்லாம் இல்ல.... சுத்துப்பட்டு கிராமங்கள்ல உன்னைய தெரிஞ்சவங்க நிறையப் பேரு... அப்புறம் என்ன நம்பிக்கையோட ஆரம்பி..."

"எங்க முதலாளி சுந்தரண்ணன் சிட்டிக்குள்ள ஆரம்பிச்சு... தட்டுத்தடுமாறி கொஞ்சம் கொஞ்சமா வளர்றாரு... நான் கிராமத்துல போயி ஈதான் ஓட்டணும்...."

"அட... போடா பைத்தியக்காரா... நான் முதன் முதல்ல ரெண்டே ரெண்டு குழாயோட ஆரம்பிக்கும் போது இந்த திருமயம் எந்த வசதியும் இல்லாத கிராமாமாத்தான் இருந்துச்சு... இப்ப அதுவும் வளர்ந்தாச்சு... நானும் வளர்ந்தாச்சு... பேரை சம்பாதிச்சா அப்புறம் பணம் தேடி வருமுடா...."

"சரிண்ணே... கேட்டுச் சொல்றேன்..." என்றவனை கடந்த ஒரு வாரகாலமாக முத்து செட்டியாரின் பேச்சு ஆட்டிப் படைத்தது... இறுதியில் தைரியத்துடன் கடை ஆரம்பித்துவிட்டான்.

***

ஒரு வாரத்திற்கும் மேலாகி யாரும் அவனை நாடவில்லை... அவர்கள் ஊருக்கு அருகில் இருக்கும் சமத்துவபுரத்தில் நேற்று நடந்த திருவிழாவிற்கு கூட முத்து செட்டியார்தான் மைக் செட் கட்டினார். இந்த முறை அவரும் அழைக்கவில்லை அவனும் செல்லவில்லை.

தினமும் கடையை திறப்பதும் சாமி பாட்டில் ஆரம்பித்து விதி கதை வசனம் வரை அந்தப் பகுதி மக்களுக்கு இலவசமாக வழங்கிவிட்டு இடையில் நாலைந்து டீயை குடித்துவிட்டு இரவு வீட்டிற்கு செல்வது வாடிக்கையானது.

தேவையில்லாம கடைய ஆரம்பிச்சிட்டோமோன்னு தோணுது... மாசாமாசம் எதோ செலவுக்கு கொடுத்தே... இப்ப அதுவும் போயி வாடகை, கரண்ட்பில்லு எல்லாம் கையில இருந்து கொடுக்கணுமேப்பான்னு அப்பா வருத்தப்பட்ட போது இல்லப்பா எல்லாம் சரியாகும்ப்பா என்றான் நம்பிக்கையோடு.

***

அன்று காலை வழக்கம் போல் கடையை திறந்து கூட்டி சாமி கும்பிட்டுவிட்டு சாமி பாடலை ஓடவிட்டுவிட்டு பக்கத்து டீக்கடையில் டீயை வாங்கிக் கொண்டு தினத்தந்தியை பிரித்தபோது ஒருவர் அவன் கடை முன் வந்து வண்டியை நிறுத்தி உள்ளே பார்க்கவும் டீயை வைத்து விட்டு ஓடினான்.

"வாங்கண்ணே... உள்ள வாங்க..." அவரை அழைத்தபடி உள்ளே நுழைந்து ரேடியோவை ஆப் செய்து அமர்ந்தான்.

"தம்பி நம்ம வீட்ல விசேசம்..."

"சந்தோஷமுன்னே... என்ன விசேசம்?"

"பொண்ணுக்கு சடங்கு..."

"ம்..."

"ரேடியோ கட்டணும்... அப்புறம் ரெண்டு மூணு லைட் போடணும்"

"போட்டுறலாமுண்ணே..."

"அப்புறம் எங்க ஊர்ல கரண்ட் கம்மியாத்தான் வரும்..."

"லோ வோல்டேஜா... எல்லா இடத்துலயும் அப்படித்தாண்ணே... இங்கயும் ஆறு மணிக்கு மேல டீப்லைட் எடுக்காது...ஜெனரேட்டர் வச்சிக்கலாம்..."

"எவ்வளவு தம்பி..."

"குழாய் போதுமா... பாக்ஸ் வேணுமா...?"

"குழாய் வேண்டாந்தம்பி... பாக்ஸே போதும்... பாத்துச் சொல்லுங்க... டவுனுக்குப் போக வந்தேன்... அப்பத்தான் சொன்னாங்க நீங்க இங்க வச்சிருக்கிறதா... நீங்க நம்ம ராமசாமி அண்ண புள்ளதானாமே... நா வெளி நாட்டுல இருக்கிறதால சின்ன வயசுப் புள்ளைங்களை தெரியலை அதான்..."

"ம்... உங்ககிட்ட அப்படி என்னத்தண்ணே கூட கேட்கப் போறேன்... எல்லா இடத்திலயும் ஜெனரேட்டர் கொண்டு வந்தாலே நூறு ரூபாய் சார்ஜ் பண்றாங்க... நைட் ஓடினா தனிக்காசு... இப்ப டீசல் ரேட் உங்களுக்கே தெரியும்..."

"அது சரி தம்பி நமக்கு நைட் ரொம்ப நேரம் ஓட்ட வேண்டியதில்லை... மாமக்காரளுக்கு சாப்பாடு போட்டோடணே அப்புறம் தேவையில்லை விடியக்காலைல சமைக்கத்தான் லைட் வேணும்.... அப்பக்கூட டீப் எடுக்கும்... ஜெனரேட்டர் தேவையில்லை..."

"சரிண்ணே எல்லாத்துக்கும் சேர்த்து ஆயிரத்தைனூறு கொடுங்க..."

"என்ன தம்பி ஒண்ணுக்குள்ள ஒண்ணு பாத்துக் கேளுங்க..."

"இல்லண்ண வேன் வாடகை இருக்கு... மத்த செலவும் இருக்கு... இதுல லாபம் பாக்க ஒண்ணும் இல்லேண்ணே... நல்லா பண்ணிக் கொடுக்கிறேன்..."

"சரி ஆயிரத்தெரனூறு வாங்கிக்கங்க..."

"கரெக்ட்டாத்தான் சொன்னேன்... முன்னூறு கொறச்சா எப்படிண்ணே..."

"சரி முன்னூறா வாங்கிக்கங்க..."

"என்னண்ணே..." தலையை சொறிந்தான்.

"புடிங்க.... நல்லா வருவீங்க... டீ சாப்பிடலாமா.?"

"சரிண்ணே... பக்கத்துல எதாவது விசேசமுன்னா நம்ம கடையை சொல்லுங்க... இந்தா நான் டீ சொல்றேன்..."

"கண்டிப்பா தம்பி நீங்க நம்ம புள்ளையாயிட்டிங்க... இருங்க நான் வடை கிடை வாங்கிக்கிட்டு டீ சொல்லிட்டு வாரேன்" என்றபடி அவர் டீக்கடைக்கு செல்ல....

அட்வான்ஸ் பணத்தை சாமி போட்டோ முன் வைத்து கும்பிட்டான். இந்த கிராக்கிக்கு நல்லா பண்ணி பேரை வாங்கிட்டா போதும்... அப்புறம் எல்லா பக்கமும் நமக்கு அழைப்பு வரும் என்று மனதிற்குள் நினைத்து சந்தோஷப்பட்டுக் கொண்டான்.

-'பரிவை' சே.குமார்.
போட்டோ வழங்கிய www.jackiesekar.com தளத்துக்கு நன்றி


ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2011

இதயத் துடிப்பே...


காலத்தின் பயணத்தில்
வசந்தங்களும்
கோடைகளும்
வந்து வந்து போகும்...

வாழும் வாழ்வில்
சொந்தங்கள் எல்லாம்
பல நேரம் சுடராகவும்
சில நேரம் சுடவும் செய்யும்...

எதிர்பார்ப்புகளைத் துறந்து
இதயத்தில் அமர்ந்து
இன்பத்தில் இணைந்தும்
துன்பத்தை தனதாக்கியும்
வாழும் உறவு...

மறைத்து வாழத் தெரியாமல்
மறுத்து வாழ நினைக்காமல்
உயிரோடு உயிராய்
வாழும் உறவு...

எத்தனை கோபம்
என்றாலும்
அத்துனையும் மறந்து
அரவணைக்கும் உறவு...

நீ...நான்...
உன்னது... என்னது...
உனக்கு.. எனக்கு...
என்ற பதங்கள் துறந்து

நாம்... நமது...
நமக்கு...
என வாழும் உறவு...

சுக துக்கத்தில்
நம்மோடு வாழும்
முகம் தெரிய
கணிப்பொறி உறவு...

ரத்த உறவுக்கு மத்தியில்
அழுத்த உறவாய் வாழும்
அமுத உறவே நட்பு...


(ஆகஸ்ட் முதல் ஞாயிறு (07/08-2011) நண்பர்கள் தினம். என் இனிய நட்புக்களுக்கு நம் நாள் வாழ்த்துக்கள்.)

-'பரிவை' சே.குமார்.
Thanks - Photos From Google

வெள்ளி, 5 ஆகஸ்ட், 2011

சொல்ல மறந்த கவிதைகள் - III




கண்மாயில் குளிக்கும்போது
நீரெடுக்க வரும் நீ...
இப்பொதெல்லாம் வருவதில்லை...
கண்மாயும் காய்ந்து கிடக்கிறது
என் மனம் போல..!


கடலில் குதூகலமாய் குழந்தை...
ஓடிவரும் அலையாய்
எத்தனை சந்தோஷங்கள்...
மனசுக்குள் சாரலாய்
உன் நினைவுகள் ..!



இப்போதெல்லாம் நீ
வருவதைத் தவிர்த்தாய்..
நான் வாழ்வதையே
தவிர்க்க நினைக்கிறேன்..!

-'பரிவை' சே.குமார்.

Thanks - Photos from Google