மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வெள்ளி, 16 அக்டோபர், 2026

தேவா சுப்பையாவை மறக்க முடியுமா..?

 தேவா அண்ணா...

மனிதர்களை மதிக்கத் தெரிந்த, கொண்டாடத் தெரிந்த, நேசிக்கத் தெரிந்த, எழுத்தை ரசிக்கத் தெரிந்த, கொண்டாடத் தெரிந்த, ரசனையுடன் எழுதத் தெரிந்த, எழுதுபவர்களைத் தேடித்தேடி கொண்டாடக் கூடிய மனிதராய் இருந்தவர்; எல்லாருக்கும் பிடித்தவராய் வாழ்ந்தவர்; எனக்குத் தெரிந்து யாரையும் எதிரியாகப் பார்க்காதவர்.


எனக்கும் அவருக்குமான நட்பு எழுத்து வழிதான் ஆரம்பமானது. 2009-ல் வலைப்பூ ஆரம்பித்து எழுத ஆரம்பித்த போது தமிழ்மணமும், இன்னும் சில திரட்டிகளும் நிறைய நட்பை ஏற்படுத்திக் கொடுத்தன எனச் சொல்லலாம். சிலரின் எழுத்தின் ஈர்ப்பு மிக நெருக்கமாக்கியது. தேவா அண்ணனின் எழுத்தை வாசித்தபோது 'என்னடா இந்த மனுசன் இவ்வளவு அற்புதமாக எழுதுறார்ன்னு' நினைத்தேன். அவரின் பதிவுகளைத் தொடர்ந்து வாசித்தபோது, எழுத்தின் வழி நெருக்கமானோம்.

இருவரும் சிவகங்கை மாவட்டம் என்பதால் மண்ணின் நெருக்கம் இருவரையும் இணைத்தது. ‘தம்பி’ என நெருக்கமானார். நம்ம மண்ணோட எழுத்து உங்கிட்ட இருக்குடா என அந்த இலக்கியத் தரமான, எல்லோரும் விரும்பும் எழுத்தின் சொந்தக்காரரான தேவா அண்ணன் என்னிடம் சொன்னார்.

அவர் வேலை தொடர்பாக வாரம் இருமுறை அபுதாபி வருவார் என்பதால் ஒருமுறை அப்படி வரும்போது தங்கியிருக்கிற இடத்தை விசாரித்து, கீழே வந்து நின்று கொண்டு கூப்பிட்டார். அன்றுதான் முதல் முறை சந்தித்தோம். நீண்ட நேரம் எழுத்து பற்றித்தான் பேசினார். காபி டீ வெளியில் குடிப்பதில்லை என மறுத்தார்.

அதன் பின் அபுதாபி வரும்போதெல்லாம் போன் பண்ணுவார். வேலைகளை முடித்து நேரம் இருந்தால் சந்திப்போம் தம்பி என்பார். சில நாள் சந்திப்போம். பல நாட்கள் வேலை முடிய நேரமாயிருச்சு, கிளம்பிட்டேன். அடுத்த முறை பார்ப்போம் எனப் போன் பண்ணுவார்.

அப்படிச் சந்திக்கும் போதெல்லாம் அலுவலகத்துக்குக் கீழே வந்து நிற்பார். போனதும் எப்பவும் போல் ஆரத் தழுவிக் கொள்வார். குடும்பத்தைப் பற்றி, வேலையைப் பற்றி விசாரிப்பார். அதன்பின் எழுத்துப் பக்கம் சென்றார் என்றார் அது குறித்து நிறையப் பேசுவார். பலரது வலைப்பக்கங்களை அறிமுகம் செய்து நீ போய் வாசித்துப் பார். அருமையா எழுதியிருப்பார் என்று சொல்வார். அவர் எழுதும் கதைகள். கட்டுரைகள் குறித்துப் பேசுவார். எழுத நினைக்கும் நாவல் குறித்தெல்லாம் சொல்வார். என்னை எழுத்தை விட்டுறாம எழுது எனச் சொன்னவர்களில் அவரும் ஒருவர். அதேபோல் இந்த ஊரில் எழுத்தின் மூலமாக என்னைச் சந்தித்த முதல் உறவும் அவரே.

மதிய நேரத்தில் வந்தால் வா கார்ல ஏறு… எந்த ஹோட்டல் நல்லாயிருக்கும்… குறிப்பா சாப்பிட்டுக்கிட்டே பேசுற மாதிரி எனக் கேட்டு அங்கே அழைத்துச் செல்வார். அவர் தயிர் சாதம்தான் அதிகம் சாப்பிடுவார். அப்போது கூட வரும்போதே உங்க அண்ணி சாப்பாடு கட்டிக் கொடுத்துட்டா… இப்ப அதைச் சாப்பிடாமப் போனா சண்டைக்கு வருவா. அப்ப உன்னையத்தான் சொல்வேன் பார்த்துக்க எனச் சிரிப்பார். பெரும்பாலான சமயங்களில் ‘நான் போகும் போது தயிர்சாதத்தைத் சாப்பிட்டுக்கிறேன். லைட்டா எதாச்சும் சாப்பிடலாம்’ என்று சொல்வார் அல்லது சாப்பாடு வேண்டாம்… கொஞ்ச நேரம் பேசிக்கிட்டு இருக்கலாம் என காரில் ஏற்றி, பேசியபடி சுற்றி வருவார்.

எப்போது போன் பண்ணினாலும் பாப்பா என்னடா பண்றா… நல்லாப் படிக்கிறாளா… ஊருக்குப் போகும் போது உன்னோட வீட்டுக்குப் போய் பிள்ளைகளைப் பார்த்துட்டு வரணும் என்பார், ஆனால் சென்றதில்லை. நான் கூட அவர் சில முறை கூப்பிட்டும் இங்கு அவர் வீட்டுக்குப் போனதில்லை. கதைகளை வாசித்தாலோ அல்லது அவர் வாசித்ததில் பிடித்த கதையாக இருந்தாலோ போன் செய்து அது குறித்துப் பேசுவார்.

அவர் குடும்பத்தின் நிகழ்வுகள் முதல் மாரநாட்டுக் கருப்பர் கதை வரை எல்லாமே சொல்லியிருக்கிறார். அவருக்கு அவரின் பரம்பரையின் வரலாற்றை நாவலாக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. அது ஆசையாகவே மறைந்தும் விட்டது.

நாம் எப்போதும் எல்லாருடனும் நெருக்கமாக இருக்கக் காலம் அனுமதிப்பதில்லை. ஒன்று நாம் அவர்களிடமிருந்து விலக வேண்டிய சூழல் வரும், அல்லது அவர்கள் நம்மை விலக்கி வைக்க வேண்டிய சூழல் வரும். எவ்வளவோ நட்புக்களில் சில நட்புக்கள் மட்டுமே நம்மோடு, நம்ம குணம் அறிந்து தொடர்ந்து பயணிக்கும். அப்படியான நட்புக்கள் அரிது. நாம் நிறைய நட்புக்களைத் தொலைத்திருக்கிறேன் என்றுதான் சொல்லவேண்டும். என் பேசாமல் இருந்தோம்… எதற்காக என்னை ஒதுக்கினார்கள்… ஏன் நட்பைத் தொடர் நினைக்கவில்லை… என்றெல்லாம் சிந்திக்காமலேயே காலம் என்னை நகர்த்திக் கொண்டு வந்திருக்கிறது.

தேவா அண்ணன் கூடவும் அப்படித்தான் நிகழ்ந்தது. நெருக்கம் குறைந்தது. அபுதாபி வரும்போது கூட, அங்க வர்றேன் எனச் செய்தி அனுப்பினால் கூட போன் செய்ய மாட்டார். நானும் போன் பண்ணி எங்கே இருக்கீங்கன்னு கேட்கத் தவறிவிடுவேன். சில வேளைகளில் கேட்டால் வேலை முடிஞ்சிருச்சு கிளம்பிட்டேன்…. அடுத்த தடவை பார்ப்போம் என்பார். பார்க்கவே இல்லை என்பதைவிட ஏனோ அது தவிர்க்கப்பட்டது என்றுதான் சொல்வேன்.

போன் பேசினாலும் இப்ப என்ன எழுதுறே… வீட்டுல எப்படியிருக்காங்க… நிறையப் பேசணும்…. இப்ப வேலையா இருக்கேன். அப்பறம் கூப்பிடுறேன் என்பார். அதன் பின் இருவருமே அழைப்பதை மறந்து விடுவோம் எனபதை விட ஏனோ அழைக்க நினைப்பதில்லை என்பதுதான் உண்மை.

இடையிடையே குறுஞ்செய்தி வரும். நல விசாரிப்புகள் இருக்கும். ஒருமுறை போன் செய்து என்னோட ‘கருப்பன்’ புத்தகத்தை உனக்குக் கொடுக்கணும்டா. வரும்போது தர்றேன் என்றார். பல முறை வந்து சென்றாலும் அவர் வந்தது எனக்குத் தெரியாமலேயே போய்விட்டது. கருப்பன் கைக்கு வரவேயில்லை.

சார்ஜா புத்தகக் கண்காட்சியில் எனது புத்தக வெளியீட்டன்று அவர் வந்திருந்தார். எப்பவும் போல் அணைத்துக் கொண்டார். கொஞ்ச நேரம் பேசினார். உன்னோட எழுத்து புத்தகமாவதில் எனக்கு ரொம்ப மகிழ்ச்சிடா என்று சொன்னார். அதன் பிறகு அவரைச் சந்திக்கவே இல்லை என்பதுதான் உண்மை.

எப்பவும் போல் எப்போதாவது இரண்டு பக்கமும் குறுஞ்செய்திகள் பரிமாறிக் கொள்ளப்படும். இறப்பதற்கு இருநாட்கள் முன்னர் அவரின் பிறந்தநாளுக்கு செய்தி அனுப்பியபோது  தம்பி தாங்க்ஸ்டா எனப் பதில் அனுப்பியிருந்தார்.

சென்ற சனிக்கிழமை காலை மருத்துவமனையில் செக்கப்புக்காக போனபோது க்ருஷ்ண லட்சுமி என்பவரின் பதிவு பார்த்து எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அது உண்மையாக இருக்கக் கூடாது என நினைத்துக் கொண்டாலும், பிரபுவின் பதிவு அதை உறுதி செய்தது. அன்றைய நாள் அவரின் நினைவுகளை மட்டுமே என்னைச் சுமக்க வைத்தது. இன்று வரை அவரின் நினைவுகள் மனசுக்குள் எழாத நாளில்லை.

எதற்காக இத்தனை அவசரம் அண்ணா…. அதுவும் இங்கிருந்து ஊரில் போய் மரணித்து இருக்கிறீர்களே… உங்கள் நினைவுகள் மனதை அரித்துக் கொண்டே இருக்கிறது. முகநூலில் தினமும் யாராவது ஒருவர் உங்களைப் பற்றி எழுதி விடுகிறீர்கள். அதைப் படித்ததும் நாம் சந்தித்த, பேசிய அந்தப் பசுமையான நாட்களும், நீங்கள் உங்கள் குடும்பத்தின் வைத்திருந்த நேசமும்தான் நினைவில் எழுகின்றன.

உங்கள் மரணமும் என்னுடைய நண்பரின் மரணமும் எனக்குச் சொன்னது ஒன்றுதான். உயிருடன் இருக்கும் போது பேசலாம்… அப்புறம் பேசிக்கலாம்… என நினைத்து நாட்களைக் கடத்துவதை விட, பேச யோசித்துக் கொண்டு இருப்பதைவிட பேசிவிடுதல் நலம். இல்லையென்றால் இன்றைய நிலை இல்லாத வாழ்வில் இழந்துவிட்டு அய்யோ பேசியிருக்கலாமே என மனசுக்குள் அழுது, அந்த வலியைச் சுமந்து கொண்டிருக்கும் கொடுமையை வாழ்நாளெல்லாம் சுமந்து கொண்டு இருக்க வேண்டியிருக்கும்.

அண்ணா… உங்களை மறக்க முடியாது; உங்கள் எழுத்துக்களை அவ்வளவு எளிதில் கடந்து விடமுடியாது. உங்கள் ஆன்மா சாந்தியடையப் பிரார்த்தனை செய்ய மனம் இடம் கொடுக்காது அண்ணா.

உங்கள் கனவுகளை, அன்பை இங்கே விட்டுச் சென்றிருக்கிறீர்கள். நீங்கள் இன்னும் வாழ்ந்திருக்கலாம். நீங்கள் விதைத்த அன்பு கூட உங்களை இருத்தி வைக்கவில்லயே என்ற வலியும் வேதனையும் மனசுக்குள்.

தேவா அண்ணா…. நீங்க விதைத்த எழுத்து உங்களை இங்கே நிலைக்கச் செய்யும் என்றாலும், ‘தம்பி’ என அன்பாக அணைக்கும் கரங்கள் எங்களோடு இல்லையே என்ற வருத்ததுடனும் உங்கள் இழப்பு கொடுத்த வலியுடனும் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டேன்.

நிச்சயம் நீங்கள் என்னோடு இருப்பீர்கள் அண்ணா.

உறங்குங்கள்... எல்லோரையும் உயிர்ப்போடு வைத்திருங்கள்.

-பரிவை சே.குமார்

கருத்துகள் இல்லை: