மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வெள்ளி, 24 நவம்பர், 2023

மனசின் பக்கம் : கேலக்ஸி சிறுகதைப் போட்டி - மகிழ்வும் நிறைவும்

கேலக்ஸியின் முதலாமாண்டு உலகளாவிய சிறுகதைப் போட்டியை மகிழ்வுடன், எங்களால் முடிந்தளவுக்குச் சிறப்பாக நடத்தி முடித்திருக்கிறோம் என்பதை முகநூல் எங்கும் நண்பர்கள் தங்கள் வாழ்த்துக்களால் நிறைத்து வைத்திருப்பதைப் பார்க்கும் போது புரிகிறது. மிகவும் சந்தோசமாக இருக்கிறது. அதேசமயம் அடுத்தடுத்த போட்டிகளை இதைவிட இன்னும் சிறப்பாகச் செய்ய வேண்டுமே என்ற பயமும் தொற்றிக் கொள்கிறது.

சிறுகதைப் போட்டி வைக்கலாம் என முடிவு செய்தவுடன் 'எல்லாத்தையும் நீயே பாத்துக்க' என முழுப் பொறுப்பையும் பாலாஜி அண்ணன் என்னிடம் ஒப்படைத்தபோது கொஞ்சமல்ல ரொம்பவே பயமாகத்தான் இருந்தது. நல்லபடியாக நம்மால் இதைச் செய்து முடிக்க முடியுமா என்ற எண்ணமே இருந்தது என்றாலும் முயற்சிப்போம் என்பதே மனதில் தோன்றியது.
போட்டி அறிவிப்பை வெளியிட்ட பின் அடுத்த கட்டமாய் நடுவர்களை முடிவு செய்ய வேண்டுமே. நடுவர்களாக எங்களுகும் எனக்கும் தெரிந்த நட்பு வட்டங்களில் கேட்டபோது ஒரு சிலர் தங்களின் வேலை காரணமாக யோசித்துச் சொல்கிறேன் என்று சொன்னாலும் நிறையப் பேர் உடனடியாக ஒத்துக் கொண்டார்கள்.
மின்னஞ்சலில் வரும் கதைகளை எல்லாம் வரிசை எண் கொடுத்துச் சேமித்து வைப்பதை, அந்தக் கதைகள் குறித்த விபரங்களை எல்லாம் Excel File-ல் சேமிப்பதை நாள் தவறாமல் செய்து, கதைகளை அனுப்பியவர்களுக்கு கிடைத்த விபரத்தை மின்னஞ்சல் செய்வதுடன், Text, PDF File-கள், Font பிரச்சினையால் திறக்க இயலாதவை, மின்னஞ்சலில் தட்டச்சு செய்து அனுப்பப்பட்ட கதைகள் போன்றவற்றிற்கு விபரம் சொல்லி, இந்த மாதிரி அனுப்புங்கள் என மின்னஞ்சல் அனுப்புவதையும் மறவாமல் தினமும் செய்தேன். சிலர் திருப்பி, திருத்தி அனுப்பினார்கள். பலர் முயன்றும் முடியாமல் விட்டுவிட்டார்கள். ஒரு சிலரோ பல முறை முயன்றும் எனக்கு எப்படி Word Document file-ஆ மாத்துறதுன்னு தெரியலை, எனக்கு ஆர்வம் இருக்கும் அளவுக்கு கணிப்பொறி பற்றிய விபரம் தெரியாது, இன்டர்நெட் மையத்தில் கொடுத்து அனுப்பினேன் என்றெல்லாம் மின்னஞ்சல் செய்தபோது. அவர்களின் ஆர்வத்தைக் கணக்கில் கொண்டு நானே Word Document File-ஆக மாற்றி, போட்டியில் இணைத்துக் கொண்டேன்.
எதிர்பார்ப்பை விட அதிகமான கதைகள் வரும் என்று தோன்றியதும் கதைகளைக் கொஞ்சம் கொஞ்சமாக முதல் சுற்று நடுவர்களுக்கு அனுப்பினோம். முதல் சுற்றுக்கு நடுவர்களாக அமீரக எழுத்தாளர்கள் சசிக்குமார் அண்ணன், சகோதரர் தெரிசை சிவா, நண்பர் சதீஷ்குமார், 'திமுக போர்வாள்' சகோதரர் பிலால் அலியார், சகோதரர் இராஜாராம், சகோதரி ஹேமா, சகோதரி பிரபாவதி, தங்கை சுடர்விழி ஆகியோர் மிகச் சிறப்பாக கதைகளை வாசித்து மதிப்பெண் அளித்தார்கள்.
முதன்முதலில் கதைகளுக்கு மதிப்பெண் அளித்து அனுப்பிய நண்பர் சதீஷ்குமார், தனது கருத்துக்களையும் ஒவ்வொரு கதைக்கும் மிகத் தெளிவாகச் சொல்லியிருந்தார். அது பிடித்துப் போகவே எல்லாரிடமும் அப்படியே வாங்கும் விதமாக Excel Sheet-ல் மாற்றம் செய்து, கதைகளை அனுப்பும் போது அந்த Excel File- ஐயும் அனுப்பிக் கொடுக்க, அனைவரும் சிறப்பாகச் செயல்பட்டு நாங்கள் சொன்ன நாட்களுக்கு முன்னதாகவே தங்களது மதிப்பீட்டை அனுப்பி வைத்தார்கள்.
சசி அண்ணன் பன்முகத் திறமையாளர் என்பதால் அவருக்குப் பல வேலைகள் இருந்தாலும் நான் அனுப்பிய கதைகளுக்கு தனது மதிப்பெண்ணைக் கொடுத்துவிட்டு என்னுடன் அது குறித்து அரை மணி நேரம் போனிலும் பேசினார். ஹேமாவுக்கு தனது புத்தக வேலை, அதை ஷார்ஜா புத்தகக் கண்காட்சிக்கு கொண்டு வரவேண்டும் என்பதால் அதற்கான தொடர் பணிகள் இருந்த போதிலும் ஒரு நாள் மட்டும் அவகாசம் கொடுங்களேன் என்று சொல்லி முடித்துக் கொடுத்தார். ராஜாராம் விடுமுறையில் ஊருக்குப் போகவேண்டும் என்ற நிலையில் கொடுத்த கதைகளுக்கு மதிப்பீட்டை அனுப்பிவிட்டே ஊருக்குப் போனார். பிலால் அலியாருக்கோ கட்சிப் பணிகள் 'யோவ் இந்த வார விடுமுறையில கதைகளைக் கொடுத்தா முடிச்சிருவேன். இல்லேன்னா சிரமம் பாத்துக்கங்க' என அரசியல்வாதியாய் மிரட்டினாலும் தன் பணியைச் சிறப்பாகச் செய்திருந்தார். சதீஷ், சிவா, பிரபாவதி, சுடர்விழி என எல்லாருக்கும் பணிகள் இருந்தாலும் அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல் விரைவாக முடித்துக் கொடுத்தார்கள். எதையும் எதிர்ப்பார்க்காமல் இத்தனை கதைகளா என்னால் முடியாது என்றெல்லாம் சொல்லாமால் மிக அதிகமான கதைகளை இவர்கள்தான் வாசித்தார்கள், இவர்கள் விரைவாகக் கொடுத்ததால்தான் போட்டியின் முடிவையும் விரைந்து அறிவிக்க முடிந்தது. முதல் சுற்றில் சுறுசுறுப்பாய் செயல்பட்ட நடுவர்களுக்கு என் சிரம் தாழ்ந்த நன்றி.
அடுத்து மதிப்பெண் அடிப்படையில் என்பதைவிட, ஒவ்வொரு நடுவருக்கும் கொடுத்த கதைகளின் அடிப்படையில், மதிப்பெண் + கருத்தையும் பார்த்து 92 கதைகளைத் தேர்ந்தெடுத்தோம். எத்தனை கதைகள் வந்தாலும் இரண்டாவது சுற்றுக்கு 50 முதல் 60 கதைகள்தான் தேர்வு செய்ய வேண்டும் என்று நினைத்திருந்தோம் ஆனால் அப்படி எடுக்க இயலவில்லை என்பதால்தான் 92 கதைகளானது. இரண்டாம் சுற்றில் நடுவர்களாக எல்லாருக்கும் தெரிந்த எழுத்தாளர்கள்தான், சகோதரர்கள் வா.மு கோ.மு, கணேசகுமாரன், ஆர்.வி.சரவணன், அரசன் சஹானா இணைய இதழ் ஆசிரியரும் சகோதரியுமான புவனா கோவிந்த் மற்றும் நம்மாளு 'கலக்கல் ட்ரீம்ஸ்' தசரதன்.
இவர்கள் எல்லாருமே ரொம்ப கண்டிப்பான ஆசிரியர்கள்... மிக நுணக்கமாய் கதைகளை வாசித்து மதிப்பெண் கொடுத்திருந்தார்கள். மறுநாள் ஆபரேசன் தொடர்பான பரிசோதனைக்குப் போக வேண்டிய நிலையில் இருந்த கணேசகுமாரன் அண்ணன் , பல வேலைகள் இருந்த போதும் இதை முடிச்சிடுறேன் குமார் என்று சொன்ன வா.மு கோ.மு அண்ணன், பல நாட்களாக இரவெல்லாம் தூக்கமின்றி புத்தகப் பணி பார்த்துக் கொண்டிருந்தாலும் என் நச்சரிப்புக்காக முடிச்சி இப்ப அனுப்புறேன்ணே என்ற தசரதன், பயணத்தில் இருந்தாலும், வீட்டுக்கு உறவினர்கள் வந்தாலும் சொன்னதை முடித்துக் கொடுக்கணும் என நினைத்த புவனா, மனைவிக்கு பரிசோதனைக்கு ஆஸ்பத்திரி போகணும், வீட்டில் இருந்து அலுவலக வேலை பார்க்கணும் என்றாலும் நான் இன்னும் இரண்டு கதைகள் இருக்கே எனச் சொன்ன போதெல்லாம் அனுப்புண்ணே முடிச்சிடுறேன் என்ற அரசன், ஆபீஸ்ல வேலை குமார், இரவு பார்த்திடவா என்று சொன்ன சரவணன் அண்ணன். இப்படி தங்கள் பக்கத்தைச் சொல்லியபோது விரட்டுறோமோ என்ற வருத்தமிருந்தாலும் உண்மையிலேயே என் மீதான் அன்பினால்தான் இவர்கள் செய்தார்கள் என்பதை நானறிவேன். இரண்டாம் சுற்றில் கண்டிப்புடன் செயல்பட்ட நடுவர்களுக்கு என் சிரம் தாழ்ந்த நன்றி.
இரண்டாம் சுற்றிலிருந்து மொத்தம் 25 கதைகளைத் தேர்ந்தெடுத்து மூன்றாம் சுற்று நடுவர்களான எழுத்தாளரும் சகோதரியுமான ஜெஸிலா பானு, அக்கா ஜி.ஏ.பிரபா, அபுல் கலாம் ஆசாத் ஐயா ஆகியோருக்கு அனுப்பிக் கொடுத்தோம். பிரபா அக்கா வீடு மாறும் சூழல், அதற்கான வேலைகள் அதற்கு இடையே முதல்ல இதை முடிச்சிடுறேன் குமார் எனச் சொல்லி, அதேபோல் விரைவாக மதிப்பெண் அளித்து அனுப்பினார்கள். அபுல் கலாம் ஆசாத் ஐயா 'இவர்களுக்கெல்லாம் கொஞ்சம் பயிற்சி கொடுத்தா நல்ல எழுத்தாளர்களாக மாற்றலாம்' என்ற வாசகத்தோடு அனுப்பித் தந்தார். அமீரகத்தில் தொழில் முனைவோராக இருக்கும் ஜெஸிலா பானு அவர்களும் அதீத வேலைக்கு இடையே முடித்துக் கொடுத்தார். மூன்றாம் சுற்றில் சிறப்பாகச் செயல்பட்ட நடுவர்களுக்கு என் சிரம் தாழ்ந்த நன்றி.
பதினெட்டுக் கதைகளை எடுத்து - அதுவே புத்தகத்துக்கான கதைகள் - முதன்மை நடுவருக்கு அனுப்பலாம் என முடிவு செய்திருந்தோம். இரண்டாம் சுற்று நிலைதான் இப்போதும், ஒன்றிரண்டு மதிப்பெண்களுக்காக நாம் ஏன் கதைகளை ஒதுக்க வேண்டும், நம்மை விட அனுபவசாலியான, புத்தகப் பிரியரான, அடிக்கடி போட்டி வைத்து எனக்கெல்லாம் பலமுறை புத்தகம் அனுப்பியவரான முதன்மை நடுவரே வாசித்து முடிவு செய்யட்டும் என எல்லாக் கதைகளையும் மிகவும் நெருக்கமான 'குமாரு' எனக் கூப்பிடும் கணேஷ் பாலா அண்ணனுக்கு அனுப்பிக் கொடுத்தோம். எத்தனை கதையா இருந்தாலும் கொடு குமாரு... நான் வாசிக்க ஆவலாக இருக்கிறேன் என்று சொன்னவர், மதிப்பெண்ணுடன் எப்படிக் கதை எழுதக் கூடாது, எப்படி எழுத வேண்டும் என விரிவான ஒரு கருத்தையும் எழுதிக் கொடுத்தார். துல்லாக்கோல் கொண்டு கதைகளைத் தேர்ந்தெடுத்த முதன்மை நடுவரான அண்ணனுக்கு என் சிரம் தாழ்ந்த நன்றி.
இதற்கிடையே ஒவ்வொரு சுற்று குறித்தும் கதை எழுதிய எழுத்தாளர்களுக்குத் தெரிய வேண்டும் என்பதால் மின்னஞ்சல் அனுப்புவது என முடிவு செய்து அதையும் சரியாகவே செய்தோம். அதற்கு வந்த பதில் மின்னஞ்சல்களும் பல குழுக்களில் அது குறித்த பேச்சும், குறிப்பாக 'நலமா ஏழுத்தாளரே' என்ற வரி கொடுத்த மகிழ்வு போன்றவை நாங்கள் சரியாகவே பயணப்பட்டுக் கொண்டிருக்கிறோம் என்பதைக் காட்டியது. இதைவிட வேறென்ன வேண்டும்..?
போட்டியைச் சிறப்பாக நடத்தி முடித்திருக்கிறோம்.
இன்று காலை தனி அரட்டையில் வந்த சகோதரி 'நீங்கள் போட்டியை முன்மாதிரியாய் நடத்தியிருக்கிறீர்கள்... இனிமேல் போட்டி வைப்பவர்கள் இதைப் பின்பற்றுவார்கள்' என்று சொன்னார். இதுதான் வேணும்.
பாலாஜி அண்ணன் நம்பிக்கையோடு என்னிடம் கொடுத்த பணியை நான் சிறப்பாகவே செய்திருக்கிறேன் என்று நம்புகிறேன்.
இத்தனை சிறப்பாக போட்டி நடைபெற நடுவர்கள்தான் காரணம். அவர்களுக்கு எத்தனையோ வேலைகள் இருந்திருக்கும். அதற்கு இடையே சொன்ன தேதிக்கு முன்னராகவே அனுப்பித் தந்தார்கள். மகிழ்ச்சி.
அதேபோல் தினமும் போன் செய்து என்ன தம்பி ஆச்சு... அதைப் பண்ணியாச்சா... இதை அனுப்பிட்டீங்களா..? நகர்வு போடணுமே... என்றெல்லாம் கேட்டுக் கொண்டே இருந்த பாலாஜி அண்ணன் போட்டி விசயத்தில் எனக்கு முழுச் சுதந்திரம் கொடுத்திருந்தார். நான் என்ன செய்தாலும் நீ செய்யிப்பா... அது சரியாகத்தான் இருக்கும் என்று சொல்லி முன்னே போக வைத்தார். இதை ஏன் இப்படிச் செய்தே என்றெல்லாம் இன்று வரை கேட்கவில்லை. அவர் கொடுத்த சுதந்திரமே போட்டியை சிறப்பாக நடத்தி முடிக்க வைத்தது.
எனது நட்புக்களும், கேலக்ஸி குழும உறுப்பினர்களும் அவ்வப்போது தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து என்னை வழிநடத்தினார்கள்.
மொத்தத்தில் பாலாஜி அண்ணனின், கேலக்ஸியின் நம்பிக்கையைக் ஒரளவுக்காகவாது காப்பாற்றியிருக்கிறேன் என்பதில் மகிழ்ச்சி.
கடந்த இருபது நாட்களுக்கு மேலாக வேறு எந்த வேலையும் பார்க்கவில்லை. நடைப்பயிற்சிக்குத் தொடர்ந்து செல்லவில்லை. சென்னைப் புத்தகக் கண்காட்சிக்குத் தயாராயிருண்ணே என்ற தம்பியின் குரல் அடிக்கடி ஒலித்தாலும் இந்த ஒரு மாதத்தில் முடிக்க வேண்டிய நாவல் பாதியோடுதான் நிற்கிறது. அலுவலகம் முடிந்து வந்ததும் இந்தப் பணிக்குள் இறங்கிவிடுவேன். இன்று கொஞ்சம் வெறுமையாகத்தான் இருந்தது. மனநிறைவுடன் நடைப்பயிற்சிக்கும் போய் வந்தேன். இனிமேல்தான் நாவலின் பக்கம் திரும்பவேண்டும்.
போட்டி முடிவுகளை அறிவித்த 22/11/2023 உண்மையில் மிகவும் மனநிறைவான நாள். மகிழ்ச்சி.
-பரிவை சே.குமார்.

4 எண்ணங்கள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

நினைத்தது நிறைவேறும்...

வாழ்த்துகள்...

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

ஓ போட்டிகள் எல்லாம் நடத்தறீங்களா குமார், உங்கள் குழு அங்கு?! அருமை.

வாழ்த்துகள்! நடுவர்கள் எல்லாரும் நம்ம நட்புகள் அரசன், குடந்தையார்...எல்லாரும்.

கீதா

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் தனபாலன் அண்ணா.

உங்களோட ஆசி எப்போதும் உண்டு. மகிழ்ச்சி, நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் கீதாக்கா...

எப்படியிருக்கீங்க..?

கேலக்ஸி பதிப்பகம் மதுரை நண்பரோடது. அவர் துபையில் வேலை செய்கிறார்.

அவர் பதிப்பகம் ஆரம்பித்து ஒரு வருட நிறைவில் ஒரு சிறுகதைப் போட்டி வைக்க நினைத்ததும் அதை நீதான் நடத்திக் கொடுக்கணும் என்றார்.

நான் நட்பின் அடிப்படையில் பொறுப்பெடுத்துக் கொண்டேன்.

கேலக்ஸி இதுவரை 20 புத்தகங்கள் வெளியிட்டிருக்கிறது.

எனது 'வாத்தியார்' கேலக்ஸி வெளியீடே.

நன்றிக்கா.