மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

ஞாயிறு, 9 ஜனவரி, 2022

மனசின் பக்கம் : இரை தேடும் பறவைகள்

சென்ற வார இறுதியில் அறையில் அண்ணன் ஒருவருக்கு கொரோனா வந்ததால் அவருடன் இருந்த காரணத்தால் ஒரு வாரமாக சுய தனிமைப்படுத்துதலில்  இருந்து வருகிறோம்.

முதல் பிசிஆரில் எங்களுக்கு'நெகட்டிவ்' வந்ததால், அவருக்கும் இரண்டு பிசிஆரிலும் 'நெகட்டிவ்' வந்துவிட்டதால் கொஞ்சம் ஆசுவாசமானோம். இரண்டாவது பிசிஆர் நாளைக் காலை எடுக்க வேண்டும், அதுவும் 'நெகட்டிவ்' ஆக வந்துவிட்டால் - முடிவு வந்தபிறகு - அலுவலகம் செல்லலாம். 

இந்த ஒருவாரம் வீட்டில் இருந்து வேலை செய்கிறேன் என்றபோது வேண்டாம் ஓய்வெடுத்துக்க எனச் சொல்லி, தினமும் காலையில் முடிவு என்னாச்சு, எப்போ வருவே என லெபனானி மேனேஜர் போன் பண்ணிக்கிட்டே இருந்தான், இடையில் மலையாளிக்கு வேறு வேலை சம்பந்தமாக சிலவற்றைச் சரி பார்க்க வேண்டியிருந்தது - இதுக்கு வேலையைக் கொடுத்திருக்கலாம். வருட விடுமுறையில் கை வைத்திருக்கிறானா அல்லது சம்பளத்தில் கை வைத்திருக்கிறானா என்பது அலுவலகம் சென்றால்தான் தெரியும்.

இந்த விடுமுறையில் முன்பு எழுதி பாதியில் விட்ட கதையை முடித்து விடவேண்டுமெனச் சபதமெல்லாம் எடுத்து, சமையல், சாப்பாடு, வீட்டுக்குப் பேசுதல், படம் பார்த்தல், உறக்கம், இடையே கொஞ்சம் எழுத்தென எழுத வேண்டியதை விடுத்து நாட்களைக் கடத்தியாச்சு. எழுதி முடிக்க நினைத்த கதை முடியாமல்தான் நிற்கிறது.

அந்தக் கதையை இப்பல்லாம் எழுதி முடிக்க முடியாதுன்னு மனசுக்குள்ள முடிவாயிருச்சு. இன்று பாலாஜி அண்ணன் வந்த போதும் பார்க்க முடியாமல் போனது வருத்தம்தான் என்றாலும் வீட்டுக்குள்ளயே இருன்னு சொன்ன பின்னால நாம வெளியில் நடமாடுதல் தவறுதானே என்பதால் நேற்றிரவே விபரம் சொல்லியாச்சு.

இடையிடையே நண்பர் வேல்முருகன் நிறைய விஷயங்களைச் சொல்லிக் கொண்டேயிருந்தார். பல விதத்தில் உதவியாக இருந்தது. பிசிஆர் எடுப்பது குறித்துக் கூட விரிவான தகவல் தந்தார். நாளைக் காலை செல்ல வேண்டும்.

குறிப்பாக முதல்நாள் செய்து மறுநாள் மதியத்துக்கு அலுவலகத்துக்கு எடுத்துச் செல்லும் சாப்பாடு இல்லாது நினைத்ததைச் செய்து சாப்பிட்டு, சின்னதாய் ஒரு உறக்கம் போட்டு நாட்களை நகர்த்தியது மகிழ்ச்சியே என்றாலும் புத்தாண்டு சபதம் போல் எப்படியும் எழுதி முடிக்க  வேண்டுமென நினைத்து செய்யாமலேயே விட்டு விட்டது வருத்தம்தான். அதேபோல் மதியம் பெரும்பாலும் தூங்காதவன் அறையில் எல்லாரும் தூங்கியதால் தூங்கிப் பழகியாச்சு, இனி அலுவலகம் போனால் மதியம் உட்கார விடுமா தெரியலை... ஒரு வாரத்தை ஓட்டுவது கடினமாக இருக்கும் அதன்பின் பழகிவிடும், வெள்ளிக்கிழமை வேலையும் அப்படித்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.

புதிய அறையில் எனது கட்டிலுக்கு அருகில் பெரிய சன்னல், அதில் புறா, மைனா, சிட்டுக்குருவி என இரைக்காக வந்து அமர்கின்றன. நீண்ட நேரம் அதில் அமரச் சிலாவத்தாக இடமில்லை என்றாலும் நின்று இரை தின்னலாம். முன்பிருந்தவர்கள் எல்லாருமே போட்டுப் பழக்கியிருக்க வேண்டுமென நினைக்கிறேன். 

முதல் நாள் வந்தன, செல்போனை எடுத்துப் போட்டோ எடுக்கலாம் என நினைத்ததும் பறந்து ஓடிவிட்டன. அப்புறம் அரிசி, முறுக்கு, ரொட்டி என எல்லாம் போட்டதும் இப்போதெல்லாம் படம் எடுக்கிறாயா எடுத்துக்கோ என நிற்கின்றன. கை வைத்தாலும் கண்ணாடிக்கு வெளியில் இருந்து கையைக் கொத்தும் அளவுக்கு வந்துவிட்டன, பழகிட்டாங்க போல.

காலை ஆறுமணிக்கெல்லாம் - அலுவலகம் என்றால் ஐந்தரை மணிக்கே எழுந்து குளிப்பவன் நான் - நல்ல உறக்கத்தில் இருக்கும் போது சன்னலை வந்து கொத்த ஆரம்பிப்பதுடன், குரல் கொடுக்கவும் ஆரம்பித்து விட்டன. அப்போது எழுவதில்லை, அவற்றின் குரலும் தாலாட்டாய்த்தான் இருக்கின்றன, தூங்கி எழுந்து குளித்துச், சாமி கும்பிட்டு அதன் பின் அவற்றிற்கு இரை போட்டதும் முதலில் புறாக்கள் - மணிப்புறா குடும்பம், சாதாப்புறா குடும்பம் - சாப்பிட்டுப் போக, அடுத்து மைனாக்கள் - இதில் ஒருவருக்கு கால் ஊனம் - சாப்பிட, இறுதியில் சிட்டுக்குருவி தனி ஒருவனாய் வந்து சாப்பிட்டுச் செல்லும். சரி சாப்பிட்டுப் பொயிட்டாங்களேன்னு பார்த்தா அவங்களுக்குப் பசிக்கும் போதெல்லாம் வந்து கதவைத் தட்ட ஆரம்பிக்கிறார்கள்.

இன்று மதியம் எல்லாரும் சாப்பிட்டுக் கணிப்பொறியை நோண்டிக் கொண்டிருக்கும் போது எனது சன்னலில் வந்து கிடந்த இரையைக் கொத்திக் கொண்டு, அவ்வப்போது கண்ணாடியில் கொத்தி, கூட்டமாய் - ஆமா எல்லாரும் ஒரே நேரத்தில் - கத்திக்கிட்டு இருந்தாங்க, நான் புஷ்பா என்றொரு காவியத்தை - தூங்கக் கூடாது என்பதற்காகவும் மற்ற படங்களைப் பார்த்தாச்சு என்பதாலும் - வலுக்கட்டாயமாகப் பார்த்துக்கிட்டு இருந்தேன்.  அந்த இரைச்சல்ல இவங்க இரை தின்னு தாளம் போட்டதைக் கவனிக்கலை.

மற்றொரு சன்னல் பக்கமாகப் படுத்திருந்த அண்ணன் எழுந்து வந்து என்ன சத்தம், யார் தட்டுறான்னு கேட்டுக்கிட்டே என் பக்கம் வந்தார். சன்னலில் பார்த்துவிட்டு இரை போட்டு நிறையப் புறாவை வரவச்சிட்டீங்க போல, என்னோட பக்கம் சன்னல்ல உக்காந்து சாப்பிட முடியாது, கிண்ணம் ஒண்ணு தயார் பண்ணி சன்னல்ல மாட்டி வச்சிட்டா சாப்பிடுமுல்ல என்றார். என்னடா நம்ம சன்னல்ல வராம இங்கிட்டு வருதேன்னு அவர் கவலை அவருக்கு. 

நாங்கள் வருவதற்கு முன் இந்த அறையை பிளாட்டை எடுத்தவரின் குடும்பம் பயன்படுத்திக் கொண்டிருந்தது. அவர்கள் ஊருக்குப் போயிருக்கிறார்கள், அவர்கள் இப்போது வரும் எண்ணமில்லை என்பதாலேயே எங்களுக்கு வாடகைக்கு கொடுத்திருக்கிறார்கள். அவர்களின் குழந்தைகள் தாங்கள் சாப்பிட்ட எல்லாத்தையும் அதுங்களுக்கும் போட்டிருப்பாங்க போல, இல்லைன்னா ஏன் தேடி வரப்போகுதுக. அவர் கிண்ணம் வைத்து சாப்பாடு போட்டாலும் மகிழ்ச்சியே. இருக்கும் வரை இரை போடுவோம். வேறு அறை மாறும் போது கூட்டிக்கொண்டு போகப் போவதில்லையே, வேறு யாரோ ஒருவர் கண்ணாடியில் கொத்தி, சப்தம் எழுப்பும் போது கண்டிப்பாக இரை போடத்தான் செய்வார் இல்லையா..?

சரி... பறவைகள் புராணம் போதும்.

ஒரு வாரமாக அறைக்குள் முடங்கிக் கிடப்பது கூட, என்னதான் கணிப்பொறி இருந்தாலும் படம், பாட்டு, எழுத்துன்னு இருந்தாலும் ரொம்பவே மோசமாகத்தான் நாட்கள் நகர்கிறது. பிணையல் மாடு சுத்திவர்ற மாதிரி கிச்சன், அறை, பாத்ரூமென எத்தனை நாட்களைக் கடத்துவது. நாளை எடுக்கும் பிசிஆர் முடிவு இரவே தெரிந்துவிட்டால் திங்கள் முதல் அலுவலகம் செல்லலாம்.

பார்க்கலாம்.

எப்படியும் அடுத்த வாரம் மீண்டும் எப்பவும் போல் வாழ்க்கை துவங்கிவிடும் என்று நினைக்கிறேன்.

-'பரிவை' சே.குமார்.

4 எண்ணங்கள்:

துரை செல்வராஜூ சொன்னது…

உடல் நலனைக் கருத்தில் கொள்ளுங்கள்.. அது தான் முக்கியம்..

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

நல்லதே நடக்கட்டும்...

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

பறவைகளுக்கு இரைபோட்டதை ரசித்தேன் குமார்.

உடல் நலனை பார்த்துக்கோங்க. நல்லதே ந்டக்கும்

கீதா

வெங்கட் நாகராஜ் சொன்னது…

பறவைகளுக்கும் இரை ... மகிழ்ச்சி. உடல்நிலை கவனம் கொள்ளவும். நல்லதே நடக்கும்.