மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

சனி, 8 ஜனவரி, 2022

சினிமா விமர்சனம் : குருப் (மலையாளம்)

 குருப்-

'என்னை விட எனக்கு இங்கு யாருமே முக்கியமல்ல'- இது படத்தில் வரும் வசனம், இந்த வசனமே கதையைச் சொல்லிவிடும்.


1980களில் கேரளாவை அதிரவைத்து, இன்னமும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்குள் சுற்றித் திரிவதாய் நம்பப்படும் சுகுமார் குருப் என்னும் மலையாளியின் உண்மைக் கதைதான் இந்த படம்.

வாழணும்... அதுக்கு எந்தவிதமான பித்தலாட்டத்தையும் செய்யலாம் என்ற எண்ணத்துடன் திரியும் கோபாலகிருஷ்ணன் (துல்கர் சல்மான்) திருந்துவதற்கான வாய்ப்பில்லை என்ற நிலையில் இந்திய ராணுவ விமானப்படையில் சேர்ந்தாலாவது திருந்துவான் என அங்கு அனுப்புகிறார்கள்.

அங்கும் தனது உள்ளடி வேலைகளைத் தொடர்ந்து ஒரு கட்டத்தில் உடல்நலமில்லை எனச் சொல்லி, ஊருக்கு வருபவன் இறந்து விட்டான் என்ற செய்தியே விமானப்படைக்குக் கிடைக்கிறது. இறந்துவிட்டான் என நினைத்த கோபலாகிருஷ்ணன் சுதாகர் குருப்பாக மாறி மனைவியுடன் வெளிநாட்டில் வாழ்கிறான்.

தனது ஏமாற்று வேலையை அங்கும் செய்து கொண்டிருக்கிறான். அவனது குற்றங்களுக்கு அங்கும் உதவிக்கு ஆளிருக்கிறது. ஒரு பெரிய சீட்டிங் வேலையை ஆரம்பித்து அங்கிருந்து ஊருக்கு வந்து இன்சூரன்ஸ் தொகை எட்டுலெட்சம் கிடைக்கும் அதற்கு ஒரு திட்டம் போடவேண்டுமெனப் பொய் சொல்லி, நண்பர்களை நம்பவைத்து தான் இறந்தது போல் காட்ட, ஒரு பிணத்தைத் தேடிக் கொண்டிருக்கிறான்.

இவனது திட்டங்களை அறிந்த காவல்துறை ஒரு பக்கம் தீவிர விசாரணையை மேற்கொள்கிறது. 

அப்படி ஒரு பிணத்தைப் பெற அவர்கள் என்ன செய்தார்கள்..?

எட்டு லெட்சம் இன்சூரன்ஸ் பணத்தைப் பெற்றார்களா..?

மீண்டும் அவன் ஏன் அலெக்ஸாண்டராக மாறினான்..?

காவல்துறை என்ன செய்தது..?

என்பதையெல்லாம் படத்தை பார்த்துத் தெரிந்து கொள்வது நல்லது.

துல்கர் சல்மான் -

கேரளா சினிமா இளைஞர்களின் கைகளுக்கு மாறிச் சிலகாலம் ஆகிவிட்டது. ஆளாளுக்கு அடித்து ஆடிக் கொண்டிருக்கிறார்கள். துல்கருக்கு மம்முக்காவின் பையன் என்ற மிகப்பெரிய அடையாளமிருந்தாலும் அது ஒன்று மட்டுமே தன்னைச் சிறந்த நடிகனாக உயர்த்தாது என்பதை உணர்ந்து, தரமான படங்களைத் தேர்வு செய்து நடித்து தனக்கான இடத்தைத் தக்கவைத்துக் கொண்டிருக்கிறார்.

இதிலும் தனது நடை, உடை, சிகை, பாவனை என எல்லாவற்றையும் மூன்று கதாபாத்திரத்திலும் - கோபாலகிருஷ்ணன், சுகுமார் குருப், அலெக்ஸாண்டர் - மாற்றி கதையோடு நம்மை ஒன்றிப் பயணிக்க வைத்திருக்கிறார்.

1980 காலகட்டத்தை நம் கண்முன்னே நிறுத்த நிறையவே உழைத்திருக்கிறார்கள். எல்லாவற்றிலும் தேறியிருந்தாலும் உடை விஷயத்தில் அவ்வப்போது சறுக்கியிருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

எப்படியெல்லாம் யோசித்து ஒரு மனிதன் உலகையே ஏமாற்றியிருக்கிறான், அவனைப் பற்றி வழக்கு காவல்துறையில் இருந்தும் இதுவரை அவனைப் பிடித்து நடவடிக்கை எடுக்கமுடியாத நிலமையில் கேரளக் காவல்துறை இருக்கிறது என்றால் அவன் எப்படிப்பட்டவனா இருந்திருப்பான்..? 

உண்மைக் கதையை அப்படியே எடுத்தால் சட்டச் சிக்கலுக்கு ஆளாக நேரிடும் என்பதால்தான் சினிமாவிற்கு ஏற்றார்போல் சில மாற்றங்கள் செய்தோமெனஒரு பேட்டியில் சொன்ன இயக்குநர் ஸ்ரீநாத் ராஜேந்திரன் மிகச் சிறப்பாகவே படத்தை இயக்கியிருக்கிறார். 

சுஷின் ஷாமின் இசையும் நிமிஷ் ரவியின் ஒளிப்பதிவும் விவேக்கின் எடிட்டிங்கும் படத்துக்கு கூடுதல் பலம்.

நாயகியாக வரும் ஷோபிதா துலிபாலா தன் பங்குக்கு நிறைவாகவே செய்திருக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஷைன் டாம் சாக்கோ, போலீஸாக வரும் இந்திரஜித் சுகுமாரன், கொஞ்ச நேரமே வந்தாலும் சன்னி வெய்ன், டொவினோ தாமஸ் என எல்லாருமே சிறப்பாகச் செய்திருக்கிறார்கள்.

முதல்பாதி மெதுவாகத்தான் நகர்கிறது என்றாலும் இரண்டாம் பாதியில் ஒவ்வொரு முடிச்சாக அவிழும்போது படம் சூடுபிடிக்கிறது. விறுவிறுப்பான கதையோட்டம் திருப்தியான படத்தைப் பார்த்த சந்தோஷத்தைக் கொடுக்கும்.

தேவையில்லாத, வேண்டுமென்றே இழுக்கப்பட்ட காட்சிகளில் கத்திரி வைத்திருந்தால் முன்பகுதி அலுப்பு குறைந்து விறுவிறுப்புக் கூடியிருக்கும். எப்படியிருந்தாலும் இது துல்கரின் ரசிகர்களுக்கு செமையான படம்தான்.

ஊரை ஏமாற்றியவன்தான் இங்கே கதாநாயகன் - அவன் தண்டனைகளில் தப்புகிறான் - சூப்பர் ஹீரோவாக இருக்கிறான். குற்றவாளி தண்டிக்கப்படவில்லை என்பதைச் சொல்லும் கதைகள் சமூகத்துக்கு எதைச் சொல்கிறது..? இந்தத் தலைமுறைக்கு எதைப் புகுத்துகிறது..? என்பதை நாம் உணர வேண்டும். 

இது போன்ற படங்களுக்கு நாம் கொடுக்கும் வெற்றிதான் அடுத்தடுத்து பல படங்கள் வருவதற்கு காரணியாக அமையும் என்றாலும் இன்றைய சினிமா நிலை இதுதான் என்பது நமக்கு நன்றாகவே தெரியும். படத்தைப் படமாகப் பார்த்து பாடமாக எடுத்துக் கொள்ளாதவரை குருப் போன்ற படங்களைக் கொண்டாடலாம்.

-'பரிவை' சே.குமார்.

2 எண்ணங்கள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

பார்த்து விடுவோம்... நன்றி குமார்...

வெங்கட் நாகராஜ் சொன்னது…

சினிமா அறிமுகம் நன்று. பார்க்க முயல்கிறேன் குமார்.