மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

சனி, 30 மார்ச், 2019

சினிமா : டூலெட் (TOLET)

Image result for டூலெட் படங்கள்
வீடு தேடி அலையும் படலமே செழியனின் எதார்த்த சினிமாவாய் வந்திருக்கிறது. அதிர வைக்கும் இசையில்லை... பாட்டில்லை... சண்டையில்லை... இப்படி எதுவுமே இல்லாமல் வாடகை வீட்டுக்காரனின் அதுவும் நிலையான சம்பளமில்லாதவனின் வாழ்க்கையைப் பேசியிருக்கிறது 'டூலெட்'.

சென்னையில் வாடகை வீடு தேடுதலும் தேடிக் கிடைத்த வீட்டின் உரிமையாளரிடம் படும்பாடுகளும் சொல்லிமாளாது. அதைச் சொல்லியிருக்கிறது ஒரு நடுத்த வர்க்கத்தானின் வாழ்க்கை கதை. இப்படித்தான் நடக்கிறது என்பதைத் தைரியமாக படமெடுக்கும் துணிச்சல் எல்லாருக்கும் வருவதில்லை. இப்போதைய தமிழ்ச்சினிமா சாதியின் கையில் சிக்கிச் சீரழிந்து கொண்டிருக்கும் நிலையில் வாழ்க்கையைப் பேசும் படங்கள் வருவது என்பது எப்போதேனும் நிகழக்கூடியதுதான். அப்படியொரு நிகழ்வை இப்போது நிகழ்த்தியிருக்கிறார் செழியன்.

சினிமாவில் இணை இயக்குநராய் இருக்கும் நாயகன் இயக்குநராகும் கனவோடு சினிமா சம்பந்தப்பட்ட வேலைகளைச் செய்து அன்றாடம் கிடைப்பதைச் சம்பாரித்து, காதலித்து திருமணம் செய்து கொண்ட மனைவியிடம் கூடலும் ஊடலுமாய் நடுத்தர வர்க்கத்தின் வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். அவர்களுக்கு அறிவுள்ள ஒரு மகனும் இருக்கிறான். வீடு பார்க்கும் படலத்தை அப்பனைப் போல அழகாய் விவரிக்கும் போது அவன் நம்மையும் ஈர்க்கிறான்.

'அடுத்த மாசம் வீட்டை காலி பண்ணிக்கங்க...' என்ற வீட்டு உரிமையாளினியின் உத்தரவின் பேரில் தங்களுக்கான... தங்களின் வருமானத்துக்குள்ளான வீட்டைத் தேடி அலைவதும்... அப்போது அவர்கள் சந்திக்கும் மனிதர்கள்... பிரச்சினைகள்... கார்ப்பரேட்டுக்களின் வளர்ச்சியால் என்ன மாற்றம் நிகழ்ந்திருக்கிறது என்பது எல்லாமுமே படமாய் மலர்ந்திருக்கிறது.

சென்னையில் வீடு வாடகைக்கு கிடைப்பது என்பது குதிரைக் கொம்பென்றால் அப்படியே சொல்லும் எல்லாவற்றுக்கும் பூம்பூம் மாடாய் தலையாட்டிவிட்டு குடி போனவுடன் வீட்டு உரிமையாளர் (பெரும்பாலும் பெண்கள்) போடும் உத்தரவுகளும் செய்யும் அடாவடிகளும் சொல்லி மாளாது. இப்படியான அனுபவம் எனக்கும் இருக்கிறது.

பத்திரிக்கையில் வேலை பார்த்த போது மனைவியையும் மகளையும் அங்கே கொண்டு வந்து விடலாம் என முடிவெடுத்து அலுவலகத்துக்குப் பக்கமாய் முகப்பேர் ஏரியாவில் நானும் என் நண்பர்கள் இருவரும் பணி முடிந்தபின் வீடு தேட ஆரம்பித்தோம். எத்தனை பேர்..?, குழந்தைகள் பெரியவர்களா... சிறியவர்களா..?, அடிக்கடி ஆட்கள் வருவார்களா...?, வயசுக்கு வந்த பொண்ணுங்க இருக்காங்க... பிரண்ட்ஸ் அடிக்கடி வரக்கூடாது...? குறிப்பாக சிவகங்கை மாவட்டம் என்றதும் (செழியனும் சிவகங்கை என்பதால் இதில் நாயகன் ஊர் அதாய்த்தான் சொல்லப்படும்) 'என்ன ஆட்கள் நீங்க...?' என ஏகப்பட்ட கேள்விகளுடன் அவர்கள் கேட்ட வாடகை வாங்கும் சம்பளத்தில் பாதிக்கும் மேல் என்ற நிலையில் பல வீடுகளைப் பார்க்கப் போய் பதில் சொல்லாமல் நகரவே வைத்துக் கொண்டிருந்தது.

தினம் தினம் அலைச்சல்... அவர்களின் கேள்வியில் எரிச்சல்... என எல்லாமாய் வீடு பார்க்க வேண்டுமா என்ற எண்ணத்தைத் திணித்த நிலையில்தான் அந்த வீட்டில் டூலெட் போர்டைப் பார்த்தோம். கீழ் வீட்டில் குடியிருந்தார்கள். முதல் தளத்தில் வீட்டு உரிமையாளர்கள்... இரண்டாவது தளத்தில் வீடு காலியாக இருந்தது. அதற்கும் மேலே மொட்டைமாடியில் ஒரு சிறிய அறை... அதுவும் வாடகைக்கு விடப்பட்டிருந்தது. நாங்கள் சென்றபோது உரிமையாளரின் மகள் மட்டுமே இருந்தார். விபரம் கேட்டு அவரின் அம்மாவிடம் போனில் பேசினோம்.

'பாப்பாக்கிட்ட கேட்டோம்மா...' என்று ஆரம்பித்ததும் ' நான் ஒரு மணி நேரத்துல வருவேன் சார்... நீங்க வாங்க பேசிக்கலாம்... ' என்றார். சந்து போல் பயணித்து இருட்டில் படியேறி இருட்டாகவே இருக்கும் வீடு என்றாலும் இதுவரை பார்த்ததில் இது பரவாயில்லை என்பதால் சரியெனச் சொல்லி அதற்கு இரண்டு தெரு தள்ளியிருந்த நண்பரின் வீட்டிற்குப் போய்விட்டு சொன்ன நேரத்தில் மீண்டும் வந்தோம்.

'பாப்பா சொன்னா சார்... அவளுக்கும் உங்களை ரொம்ப பிடிச்சிப் போச்சு..., நீங்க பாப்பான்னு பேசுறது எனக்கும் பிடிச்சிருக்கு...' என்றவர் குலம், கோத்திரம் எல்லாம் விசாரித்து இவ்வளவு வாடகை... இவ்வளவு கரண்டுக்கு என்றபோது வாடகையைவிட கரண்ட் பில் கூட வருமோ என தலை சுற்றியது. அப்போதைய கட்டணத்தில் ஆறு மடங்கு...ஒரு வழியாகப் பேசி வாடகையில் சற்றே குறைத்து அட்வான்ஸும் கொடுத்துவிட்டு வந்துவிட்டோம். அட்வான்ஸ் வாங்கிய பின்னர் ஊரிலிருந்து சொந்த பந்தம் என யாரும் இங்கு வந்து அதிகம் தங்கக்கூடாதுங்க... தண்ணி பார்த்துத்தான் செலவு பண்ணனுங்க... சுவத்துல கிறுக்கக் கூடாதுங்க... காலேஜ்ல படிக்கிற பொண்ணுங்க இருக்காங்க... அதிகம் பிரண்ட்ஸ் இங்க வரக்கூடாதுங்க... உங்க வண்டியை வெயில் மழையின்னாலும் வீதியிலதான் நிப்பாட்டனுங்கன்னு ஏகப்பட்ட 'ங்க' போட்டார். எல்லாத்துக்கும் பூம்பூம் மாடாய் நான்.

மனைவியை அழைத்து வந்த போது இந்த இருட்டுக் குகைக்கா இம்புட்டு ரூபாய்... உங்களுக்கு வேறு வீடே கிடைக்கலையாக்கும் என அலுத்துக் கொள்ள,  'அட ஏந்தா நீ வேற... நாங்க அலஞ்சி இந்த வீட்டைப் பிடிக்கப்பட்ட பாடு இருக்கே... அந்தப் பொம்பளைக்கு எங்களை எல்லாம் பிடிக்கலை... பாப்பான்னு சொன்னான் பாரு அதுதான் பிடிச்சிருச்சி... கொஞ்ச நாள் இருங்க பின்னால மாறிக்கலாம்' என நண்பன் வெங்கடேசன் சொன்னதும் சரி என அரைமனதாய் ஒத்துக் கொண்டார். 

அடுத்த மாச கரண்ட்பில்லுக்கான பணமும் தண்ணிக்கான பணமும் கேட்டபோது மூர்ச்சையாகி மீள நெடு நேரம் ஆகிவிட்டது. பத்திரிக்கையில் வேலை என்பதால் கொஞ்சம் அனுசரித்துப் பழக ஆரம்பித்தார் வீட்டின் உரிமையாளினி. சம்பளம் வர ரொம்ப லேட் ஆகும்.... பரவாயில்லைங்க வந்ததும் கொடுங்க என்றார். கீழ் வீடு காலியாகும் போது எனக்கு கீழ மாற்றிக் கொடுங்க என்றதும் கொஞ்சம் சேர்த்துக் கொடுங்க என உடனே மாற்றிக் கொடுத்தார். மனைவியிடம் ரொம்ப நெருக்கமானார். தொடர் மழை பெய்த போது வண்டியை உள்ளே வச்சிக்கங்க... உங்களுக்கு மட்டும்தான்... மத்தவங்கன்னா உள்ள வைக்கச் சொல்லமாட்டேன் என்றார். அதன்பின் வீடு காலி பண்ணும் வரை வண்டி உள்ளேதான். எல்லாத்துக்கும் காரணம் பத்திரிக்கையாளன் என்பதாகவும் இருக்கலாம் என்றாலும் டூலெட் சினிமா உரிமையாளர் போல அவ்வளவு ரப் அண்ட் டப்பாக இருக்கவில்லை அவர் என்பதே உண்மை.

வெளிநாடு போறேன் என்றதும் என் வீட்டு ராசிதான் என பெருமையாகச் சொன்னார். இப்ப இங்க படுற கஷ்டத்தைப் பார்க்கும் போது அந்த வீட்டு ராசிதான்னு அந்தம்மாக்கிட்ட போயி சொல்லணும்ன்னு தோணுது. சென்னை வந்தா வாங்க என்றார். ஒருமுறை சென்றபோது பார்த்தும் வந்தோம்.

வீட்டைப் பிடிச்சிருந்தா சொல்லுங்க ஒரு வாரத்துல காலி பண்ணித் தரச் சொல்றேன்னு மளிகைக்கடை அண்ணாச்சி சொன்னதும் வீட்டைப் பார்க்கப் போய் அதில் இரண்டு பெரியவர்கள் தள்ளாத வயதில் இருப்பதைப் பார்த்து பதில் பேசாது திரும்பும் இடத்தில் மனித நேயம் கவிதையாய்... ஒரு வீட்டை வாடகைக்கு விட சேட் செய்யும் அடாவடிகள் நிஜத்தை உரித்து வைத்தபடி... இப்படியே நிறையப் பேசுகிறது அதுவும் நிஜத்தைப் பேசுகிறது.

Image result for tolet tamil cinema image sheela

செமியனிடம் உதவியாளராய் இருந்த சந்தோஷை நாயகன் ஆக்கியிருக்கிறார். சரியான தேர்வு... கண்ணே கதையை பேசி, காட்சியை நம்முள் இறக்கிவிடுகிறது. மகிழ்ச்சி, வேதனை, கஷ்டம் என எல்லாவற்றையும் மிகச் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். 

ஷீலா... எனக்கு தலைமுடி அதிகமுள்ள பெண்களை எப்போதும் பிடிக்கும். அப்படித்தான் ஷீலாவையும் பிடித்துப் போனது... என்ன ஒரு தேர்ந்த நடிப்பு... கோபம். ஆத்திரம், துக்கம் என அடித்து ஆடும் அவர் சில நேரங்களில் காதலோடு கணவனைப் பார்க்கும்... அணைக்கும் இடத்தில் சபாஷ் போட வைக்கிறார். தமிழ்ச் சினிமாவிற்குக் கிடைத்திருக்கும் நடிக்கத் தெரிந்த நடிகை... சதையை மட்டுமே நம்பும் நாம் இவருக்கு வாய்ப்புக் கொடுப்போமா என்பது கேள்விக்குறிதான்.... கிடைத்தால் ஒரு நல்ல நடிகையாக வலம் வருவார்.

குட்டிப் பையன் தருண் படம் வரைகிறான் வீடெங்கும்... அப்பாவுக்கு செல்லப்பிள்ளை... கதை சொல்லும் இடத்தில் நம்மை அவனிடம் வீழ்த்தி விடுகிறான்.

சிட்டுக்குருவியும் நடித்திருக்கிறது... சுவரில் வரைந்த ஓவியங்களும் நடித்திருக்கின்றன... சன்னல் செடிகளும்... அந்த ஓட்டைப் பைக்கும் கூட நடித்திருக்கிறது.

செழியனின் ஒளிப்பதிவில் அந்த சிறிய வீடு ஒரு நடுத்தர வர்க்கம் தனது மகிழ்ச்சியை, சோகத்தை, கஷ்டத்தை, ஊடலை, கூடலை என எல்லாவற்றையும் அழகாய் தாங்கிச் சிரிக்கிறது. நம்மையும் அவர்களுடன் அந்த வீட்டுக்குள் உட்கார்த்தி வைக்கிறது.

படத்தில் குறையில்லையா என்றால் இருக்கிறது என ஒன்றைச் சொல்லலாம் வீட்டு உரிமையாளினியிடம் காட்டும் பவ்யம் சரி என்றாலும் வீடு பார்க்க வருபவர்களிடம் ஏன் கூனிக்குறுகி நிற்கிறார்கள் என்பது மட்டுமே குறையாய். மற்றபடி டூலெட் வீடு தேடி அலைபவனின் கஷ்டத்தை அப்படியே கண் முன்னே காட்சியாய் விரிக்கிறது.

அருமையான படம்... கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்.

பல விருதுகளை வாங்கியிருக்கிறது.... விருது பெற்ற படமென்றாலே விலக்கித்தான் வைத்திருப்போம்... கொண்டாடப்பட வேண்டிய படமென்றாலும் கொண்டாடவில்லை என்பது வருத்தமே... இருப்பினும் செழியனுக்குள் இருக்கும் கதாசிரியன் ஒரு வாழ்க்கைப் படத்தின் மூலம் ஜெயித்திருக்கிறான். சாதியைச் சுமக்காமல்... இரட்டை அர்த்தத்தை தோளில் தூக்கி வைத்துக் கொள்ளாமல் அடுத்த படத்தில் இதைவிடக் கூடுதலாய் சாதிக்க வாழ்த்துவோம்.
-'பரிவை' சே.குமார்.

6 எண்ணங்கள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

இதை விட மூன்று வருடம் அனுபவப் பட்டுள்ளோம் - சென்னையில்...

Kamala Hariharan சொன்னது…

வணக்கம் சகோதரரே

தங்கள் விமர்சனம் நன்றாக உள்ளது படத்தை பார்கும் ஆவலை தூண்டுகிறது.
வாடகை வீடென்றாலே சிரமங்களை நிறைய சந்துக்க வேண்டியிருக்கும். சில சமயம் அனைத்தும் நல்லதாக அமையும். நம்முடைய நேரங்களும் அதற்கு ஒத்துழைக்க வேண்டும். நாங்களும் சென்னையில், 15 வருடங்கள் இவ்வித சிரமப்பட்டு காலம் கடத்தி வந்துள்ளோம். பகிர்வுக்கு மிக்க நன்றி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

நாங்களும் குமார் சென்னையில் வாடகை வீட்டில் இருந்த வரை, அதற்கு முன் திருவனந்தபுரத்தில் வாடகை வீட்டில் இருந்தப்ப என்று பல அனுபவங்கள். குறிப்பா தண்ணிக் கஷ்டம். காம்பவுண்டுக்குள்ள இருக்கறவங்களோட தண்ணி ஷேரிங்க் என்று வரும் போது பல கஷ்டங்கள்.

படம் மிக அருமையாக இருக்கும் போல. பார்க்க நானும் குறித்து வைத்திருக்கும் படம்.

நல்ல விமர்சனம் குமார்

கீதா

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நல்ல விமர்சனம். பாராட்டுகள்.

வாடகை வீடு - ஒவ்வொரு மனிதரிடமும் இப்படி ஒரு கதை. அதை ஸ்வாரஸ்யமாகச் சொல்வதில் தான் வெற்றி இருக்கிறது.

எத்தனை எத்தனை கஷ்டங்கள் கொடுப்பவர்கள் இருக்கிறார்கள் - வீட்டு உரிமையாளர்களும் சரி, வீட்டிற்கு வாடகைக்கு வருபவர்களும் சரி!

துரை செல்வராஜூ சொன்னது…

தங்களது விமர்சனம் மனதைத் தொடுகின்றது...

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

நல்ல விமர்சனம். பார்க்க முடியுமா என்று தெரியவில்லை.

துளசிதரன்