மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வெள்ளி, 9 பிப்ரவரி, 2018

தலைவாழை

ரண்டு மாதங்களுக்கு முன்னர் பிரதிலிபி நடத்திய 'ஓடி விளையாடு பாப்பா' சிறுகதைப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றியைத் தவற விட்டிருந்தாலும் , வெற்றிக்காக எழுதுவதில்லை... தற்போதைய சூழலில்  இந்தப் போட்டிகளின் மூலமாக ஒரு கதை எழுத முடிகிறதே என்பதால் எழுதுவது என்பதே உண்மை. அப்படியும் வாசகர் பார்வையில் 5300-க்கும் மேல் வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்தது. இந்தப் போட்டியில் குறிப்பிடத்தக்க கதையாக கீதா மதிவாணன் அக்காவின் கதையைச் சொல்லியிருந்தார்கள். வாசியுங்கள்... தங்கள் மேலான கருத்துக்களைச் சொல்லுங்கள்.

என்னடா இவன் நம்ம பக்கமே வருவதில்லைன்னு நிறைய பேர் நினைக்க ஆரம்பிச்சிட்டீங்கங்கிறது வாசித்தவர்களில் தெரிகிறது. என் கணினியில் ஏதோ பிரச்சினை வாசிக்க மட்டுமே முடியும் கருத்து இட முடியாது. அலுவலகத்தில் அசுரப் பணி எனவே அங்கிருந்தும் கருத்திடுவது பாதிக்கப்பட்டுவிட்டது. அப்படியும் சில பதிவுகளுக்கு கருத்து இடுவதும் உண்டு. எதுவுமே எழுதத் தோணாத சூழலில் மனசுக்கு மூடுவிழா நடந்தாலும் ஆச்சர்யமில்லை....:(. எழுதியவைகளை பாதுகாக்க வேண்டும் என்பதற்காகவே அவ்வப்போது ஏதோ ஒன்றைப் பகிர்ந்து வருகிறேன்.

நன்றி.
******
Image result for அம்மா மகள்
'து ஏஜ் அட்டன் பண்ணிட்டா' போனில் அக்காவிடம் சந்தோஷமாக  சொல்லிக் கொண்டிருந்தாள் சத்யா. அவள் மாற்றி மாற்றிப் போன் பண்ணினாலும் 'ஏஜ் அட்டன் பண்ணிட்டா' என்ற வார்த்தையை மட்டும் மாறாத புன்னகையுடன் சொல்லிக் கொண்டிருந்தாள். 

அதைப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்தாள் அவள் கணவனின் அப்பத்தா சௌந்தரம், வயசு தொன்னூறு இருக்கும் ஆனாலும் எங்க வேணுமின்னாலும் நடந்து பொயிட்டு வந்துரும்... கண் காது என தொந்தரவு இல்லை... மூட்டுவலி எனப் படுத்ததில்லை...  சர்க்கரை கிக்கரையின்னு ஒரு நோயும் எட்டிப் பார்க்கலை... இதுக்கெல்லாம் முக்கியமா அந்தக் காலத்துச் சாப்பாடுதான் காரணம்... இன்னைக்கு முப்பது வயசுலயே எல்லா நோயும் வந்திருது... முப்பத்தஞ்சு வயசுல அட்டாக்குல போக ஆரம்பிச்சிட்டானுங்க... எல்லாம் காலத்தின் கோலம்.

அவள் சிரிப்பதைப் பார்த்துக் கொண்டே ஒரு வழியாக எல்லாருக்கும் சொல்லி முடித்தவள், 'என்னாயா... நாஞ்சொல்றதுக்கு சிரிக்கிறே...?' கேட்டபடி அவளருகில் போய் அமர்ந்தாள். 

எல்லாரிடமும் சிரித்துக் கொண்டே சொன்னாலும் நேற்று வரை சின்னப்பிள்ளையாக பார்த்த மது... இனி பெரிய மனுசி என்ற எண்ணத்தின் காரணமாக அவள் மனசுக்குள் ஏதோ ஒரு படபடப்பு இருந்தது.

சௌந்தரத்தின் சுருக்கம் நிறைந்த கைகளைப் பிடித்த போது மனசுக்கு ஏதோ ஒரு ஆறுதல் கிடைப்பதை உணர்ந்தவள் அவளின் தோள் சாய்ந்து அருகே அமர்ந்தாள். சௌந்தரம் அவள் முகத்தை உருவி முத்தமிட்டு கைகளை தலையில் நெறித்து நெட்டி எடுத்து 'எம்புட்டுத் திட்டி பாரு எம்பேத்திக்கு' என்றதும் "எனக்கென்ன திட்டி இருக்காயா... உம் பேத்தியாளுக்குத்தான் இனி திட்டி எல்லாம் வரும்... அது சரி நீ எதுக்கு சிரிச்சே அதைச் சொல்லு...." என்றாள்.

"அதுவா... எங்க காலத்துல பொட்டப்புள்ளய வயசுக்கு வந்துட்டா குத்தவச்சிட்டான்னு சொல்லுவாக... அப்புறம் சடங்காயிட்டா.... பெரிய மனுசியாயிட்டா.... வயசுக்கு வந்துட்டான்னு சொல்ல ஆரம்பிச்சாங்க... அன்னக்கி புள்ள வயசுக்கு வந்ததக் கேக்க வாறவங்கள்லாம் என்ன பேரம்பொறந்திருக்கானாமேன்னுதான் கேப்பாக... இப்ப நம்மூருப் பொட்டச்சிக கூட எதாயிருந்தாலும் புரியாத இங்கிலிபீசுல சொல்ல ஆரம்பிச்சிட்டாளுக... படிச்சாளும் படிக்காட்டியும் எல்லாரும் இங்கிலீசக் கலந்துதான் பேசுதுக இப்ப... அதான் நீ இங்கிலீசுல சொன்னப்ப சிரிப்பு வந்திருச்சு..." என்றாள்.

"ம்... அதுக்குத்தான் சிரிச்சியாக்கும்... ஒண்ணுமே படிக்காததெல்லாம் எதுக்கெடுத்தாலும் இங்கிலீசு பேசும் போது பத்தாப்பு வரைக்கும் படிச்ச நா பேசக்கூடாதாக்கும்... இப்ப யாரு வயசுக்கு வந்திருச்சுன்னும் பெரிய மனுசியாயிருச்சின்னும் சொல்றாங்காயா... எல்லாரும் ஏஜ் அட்டன் பண்ணிருச்சுன்னுதானே சொல்றாக..." என்றாள்.

"அதத்தான் நானுஞ் சொல்லுறே... இதுல தப்பு ஒண்ணுமில்ல... செரி... மாமாங்காரன் வந்துட்டான்னா புள்ளக்கி மஞ்சத் தண்ணி ஊத்தி குச்சுல ஒக்கார வைக்கலாம்... ஒந்தம்பி எப்ப வருவானாம்..."

"கெளம்பிட்டானாம்... திருச்சியில இருந்து வரணுமுல்ல ஆயா.. வந்திருவான்..."

"ஆமாமா... அம்புட்டுத் தொலையில இருந்து வரணுமில்ல.... ம்... அந்தக் காலத்துல பதினஞ்சி வயசுக்கு மேலதான் பெரிய மனுசியாச்சுக... இன்னக்கி பத்துப் பயினோரு வயசுலயே வந்திருதுக... எல்லாத்துக்கும் இப்பத் திங்கிற தீனிதான் காரணம்... எங்காத்தா பதினாறு வயசு வரைக்கும் பெரிய மனுசியாகலயாம்... கட்டி வச்சா ஆயிரும்ன்னு சொல்லி அவுக அயித்த மயனான எங்கப்பனுக்கு கட்டி வச்சாகளாம்... எங்காத்தாவுக்கு கலியாணம் முடிஞ்சி ஒரு வருசத்துக்கு அப்பொறந்தான் வயசுக்கே வந்துச்சாம்... அதுக்கு அப்புறந்தான் நாங்க பொறந்தமாம்... எட்டுப்புள்ளய பொறந்தோம்... நானெல்லாம் பதினஞ்சிலதான்..."

"ம்... நாங்கூட பதினாலு வயசுலதான் ஏஜ் அட்டன் பண்ணுனேன்... இன்னக்கி ஒம்பது வயசுல எல்லாம் வந்துருதுகாயா... எல்லாத்துக்கும் காரணம் நீ சொல்ற மாதிரி சாப்பாடுதான்... எதத் திங்கக்கூடாதுன்னு சொல்றாங்களோ அதத்தானே திங்கிறேங்கிதுக... சரி எனக்கு வேல கெடக்காயா... பேசிக்கிட்டு இருந்தா ஒம்மருமவளுக்கு சாமி வந்திரும்..." என்று சிரித்தபடி எழுந்தாள்.

மதுவுக்கு இப்பத்தான் பத்து வயசு முடிஞ்சிருக்கு... ஆறாவதுதான் படிக்கிறா... நேத்து வரைக்கும் சின்னப்புள்ள... இன்னயில இருந்து பெரிய மனுசி... இப்ப சாப்பிடுற பிராய்லர் கோழியும் பாஸ்ட்புட் சாப்பாடுகளும்தான் சிறுவயதிலேயே பெண் பிள்ளைகள் பெரிய மனுசியாகக்  காரணம் என்று சொல்கிறார்கள். 

சின்ன வயதில் வயசுக்கு வர்றது பிரச்சினையில்லை... அதன் பின் இந்தப் பிள்ளைகளுக்கு விவரம் சொல்லிக் கொடுத்து... சில பெற்றோர்களுக்கு எப்படிச் சொல்வதெனத் தயக்கம்... அதனால் போகப்போக அவளே தெரிஞ்சிப்பான்னு சொல்லிக் கொடுப்பதில்லை... பள்ளிக்கு வரும் பிள்ளைக்கு ஒழுங்காக நாப்கின் உபயோகிக்கத் தெரியாமல் டிரஸ் எல்லாம் ரத்தக்கறை ஆக்கிக் கொள்வதும் உண்டு. பல குடும்பங்களில் அப்பாவிடம் நாப்கின் வாங்கி வரச் சொல்லுமளவுக்கு புரிதல் இருக்கத்தான் செய்கிறது. 

என்ன இருந்தாலும் இந்தப் பிள்ளைகளுக்கு விவரம் சொல்லிக் கொடுப்பதுடன் இன்றய இணைய உலகில் சுலபமாகக் கிடைக்கும் கெட்டவைகளில் எல்லாம் இருந்து அவர்களைப் பாதுகாத்து... படிக்க வைத்து... திருமணம் செய்து கொடுப்பதற்குள் பெற்றவள் படும்பாடு சொல்லி மாளாது. 

இன்றைய விஞ்ஞான வளர்ச்சி சுலபமாக தவறான பாதைக்கு அழைத்துச் சென்று விடுகிறது. இன்றைய செய்தித்தாள்களை அலங்கரிப்பவை இப்படியான செய்திகள்தான் என்பதை நாம் அறிவோம்.

சத்யாவோட புருஷன் தர்மராஜ் சிங்கப்பூரில் இருக்கிறான்... திருமணத்துக்கு முன்னரே சிங்கப்பூர் போனவன்... கிட்டத்தட்ட இருபது வருசத்துக்கு மேல இருக்கும்.... இரண்டு வருசத்துக்கு ஒருமுறை நாப்பத்தஞ்சி நாள் வந்துட்டுப் போவான்... மற்றபடி நல்லது கெட்டது எதுவும் அவனுக்கு இல்லை... மக வயசுக்கு வந்துட்டான்னு சொன்னதும் 'ம் அப்படியா... மகிழ்ச்சி... ஆமா எல்லாருக்கும் சொல்லிட்டியா... எனக்கு வேலயிருக்கு... ரூமுக்கு வந்து பேசுறேன்' அப்படின்னு வச்சிட்டான். 

அவனைச் சொல்லியும் குற்றமில்லை... வெளிநாட்டு வேலையில் சொந்த பந்தமெல்லாம் அப்புறம்தான்... வேலை நேரத்தில் பேசிக் கொண்டிருந்தால் அவனோட சூப்பர்வைசர் நாய் மாதிரி கத்துவான் என்று சொல்லியிருக்கிறான். இனி ராத்திரி வந்து அம்புட்டு ஆசையையும் அவிழ்த்து விடுவான். அதுவும் மக மதுன்னா அவனுக்கு அம்புட்டுப் பிரியம்... மகளை யாரும் எதுவும் சொல்லிடக் கூடாது. மக ஸ்கைப்புல பேசும் போது கண்ணைக் கசக்கிட்டாப் போதும் அம்புட்டுத்தான் கத்து கத்துன்னு கத்திருவான்.

"என்ன  சத்தியா... பேரம்பொறந்திருக்கானாம்..." என்றபடி உள்ளே நுழைந்தாள் கமலம்.

"ஆமாத்தே.... உங்களுக்குத்தான் மொதப் பேரன்..." எனச் சிரித்தபடி மரவையில் வைத்திருந்த பொட்டையும் கல்கண்டையும் நீட்டி "மிட்டாய் பூவெல்லாம் வாங்க இப்பத்தான் மாமா கடைக்கிப் போயிருக்காக..." என்றாள்.

"வரட்டும்.... அதுக்கென்ன இப்ப அவசரம்... எங்க போகப் போவுது..." என்றவள் "என்ன அயித்த உங்க கொள்ளுப் பேத்தி பெரிய மனுசியான சந்தோஷம் மொகத்துல தெரியுது..." என சௌந்தரத்திடம் கேட்டுவிட்டு "எங்க முத்துப்புள்ள..?" என்றாள் சத்யாவிடம்.

'அத்த மது கூட இருக்காக... தம்பி வர லேட்டாகும்... அதான் சித்ரா அத்தாச்சி வந்து அவள சும்மா குளிக்க வச்சி அடுப்படிப்பக்கம் உக்கார வச்சிருக்கு... அத்த அவளுக்குத் தொணக்கி இருக்காக..."

"செரி... வா... பெரிய மனுசியான எம்பேத்திய பாப்போம்..." என அடுப்படிப் பக்கம் போனாள். மது முகத்தில் ஒரு பூரிப்பு இருந்துச்சு... "இந்த வயசுலயே பெரிய மனுசியாயிட்டா பாரு... எம் பேத்தியாளுக்கு அம்புட்டு அவசரம்" எனச் சிரித்தபடி கன்னத்தை வழித்து முத்தம் கொடுத்தாள்.

கிளம்பும் போது சத்யாவிடம் "இங்கேரு இது வரைக்கு அவ சின்னப்பிள்ள... எப்புடி வேணுமின்னாலும் இருந்திருக்கலாம்... இனி அவ எப்புடி இருக்கணும்... அவ ஐயாவோ இல்ல வேற ஆம்பளகளோ வந்தா எப்புடி உக்காரணும்... முகந்தெரியாத ஆம்பளங்ககிட்ட எப்புடி நடந்துக்கணும்... அந்த நாள்ல எப்புடிச் சுத்தமா இருக்கணும்... எங்க எங்க எப்புடி நடந்துக்கணுமின்னு அவகிட்ட மெல்லச் சொல்லிக்கொடு..." என்று காதைக் கடித்தாள்.

'இப்பவேயா...?"

"இப்ப இல்ல மெல்ல மெல்ல சொல்லிக் கொடு... பள்ளிக்கூடத்துக்குப் போறபுள்ள... ஆமா லீவு கொடுப்பாகளா... அவ படிக்கிறது கிறித்தவப் பள்ளியில்ல... இன்னக்கி டிவியில காட்டுனானுங்க... தீவாளிக்கி வெடிப்போட்ட புள்ளய என்னவோ மாசு பண்ணுச்சுகன்னு அடிச்சி துன்புறுத்தியிருக்காக... என்ன கொடும பாரேன்... லீவு வாங்கிரலாமா..?"

"நாளக்கித்தான் லீவு கேக்கணுத்த... பெரியவுக மகளுக்கு நாலுநாள்தான் லீவு கொடுத்தாக... அவளும் இங்கதான படிச்சா... இவளுக்கு ஒரு வாரம் கேட்டுப் பாக்கணும்... நம்ம பக்கம் அந்தளவுக்கு புத்திகெட்ட மனுசங்க இல்ல... இங்க மதம் புடிச்சி ஆடுறதில்ல... அப்புறம் அங்க இருக்க சிஸ்டரும் பொம்பளதானே.. அவுகளுக்குத் தெரியாதா என்ன... மாமாவக் கூட்டிக்கிட்டு நான் நேர்ல போயிக் கேட்டா கொடுப்பாக..."

"ஆமா... சடங்கு வக்கிறியளா...?"

"இப்ப இல்ல… முழுப் பரிட்சை லீவுலதான் வக்கணுமத்த... அவுக அப்பாவுக்கு இப்ப லீவு கெடக்கிறது செரமம்... அவுக வரும் போதுதான் வக்கணும்... இப்ப சும்மா தண்ணி ஊத்திட்டு பள்ளிக்கூடத்துக்கு அனுப்பலாம்... தம்பி வரட்டும் அவந்தோதப் பாத்துக்கிட்டு தண்ணி ஊத்த நாள் குறிச்சிக்கலாம்ன்னு மாமா சொன்னாக..."

"ம்... அதுவும் செரிதான்... புள்ளக்கி மெல்ல மெல்ல வெவரமெல்லாம் சொல்லிக்கொடு... இனி எல்லாருக்கிட்டயும் சிரிச்சிப் பேசக்கூடாது... அந்த நாள்ல நம்ம முனியா கோயிலுப்பக்கம் போக்கூடாது... உச்சி உருமத்துல எங்கிட்டும் போக்கூடாதுன்னுல்லாம் சொல்லிக் கொடு..."

"ம்... நாமன்னா முனியா கோயிலுப்பக்கம் போவாம இருப்பம்... அதுக பள்ளிக்கூடம் போற புள்ளய... அதுக சைக்கிள்ல அது வழியாத்தானே போவணும்... வேற வழி எங்கயிருக்கு..?"

"சைக்கிள்லதானே போவுதுக... இரும்புக்கு பயமில்ல... இரும்புல சின்னத தட ஒண்ணு வாங்கி பள்ளிக்கொடத்துக்கு போகுமுன்னால காலு வெரல்ல போட்டுவிடு... மத்தத சொல்லிக் கொடு... ஒந்தம்பி வந்தோடனதான மஞ்சத்தண்ணி ஊத்தி மனயில கூட்டி வைக்கணும்... போயி வக்க அள்ளியாந்து வச்சிட்டு குளிச்சிட்டு அவே வந்தோடனே வாறேன்..."

"சரித்த... சீக்கிரம் வந்துருங்க..."

து வயசுக்கு வந்து பத்துப் பதினைந்து நாளைக்குப் பிறகு படுக்கையில் அவளருகில் அமர்ந்து அவளின் தலைகோதியபடி "மது... இனி நீ சின்னப் புள்ளயில்ல... சரியா... பயலுககிட்ட தேவயில்லாம பேசக்கூடாது... ரோட்டுல புள்ளயளோட ஆட்டம் போடுற வயசெல்லாம் முடிஞ்சிருச்சி... பொண்ணாப் பொறந்தா வயசுக்கு வர்ற வரைக்குந்தான் சுதந்திரமெல்லாம்... இனி எல்லாத்துலயும் கவனமா இருக்கணும்... இனி மாசாமாசம் உனக்குத் தீட்டு வரும்... அப்பல்லாம் உடம்ப சுத்தமா வச்சிக்கணும்... நம்ம ஆயா காலத்துல எல்லாம்  தீட்டுன்னா எதையும் தொடக்கூடாதுன்னு சொல்லி... அந்த மூணு நாளும் வீட்டுக்கு வெளிய திண்ணயில படுக்க வச்சிருவாங்க.. காபி குடிக்கிற டம்ளரு... சாப்பிடுற தட்டு... எல்லாம் அதுக்குன்னு தனியா இருக்கும்... அதை வேற எதோடும் பொழங்கக் கூடாது... உங்க அப்பத்தாவக் கேட்டுப்பாரு... இல்லேன்னா பாட்டிக்கிட்ட கேளு... அதப்பத்தி கதகதயாச் சொல்லுவாக. எங்க காலம் பரவாயில்ல... எதையும் தொடக்கூடாதுன்னாலும் அடுப்படிப் பக்கம் இருக்கலாம்... அறையில படுக்கலாம். இப்ப அதெல்லாம் இல்ல... ஒண்ணாத்தான் பொழங்குதுக... தீட்டுன்னு தள்ளிப் போறதில்ல..."

"ம்...." கதை கேட்பது போல் 'உம்' கொட்டினாள் மது.

"உங்க அப்பத்தா, ஆயா காலமெல்லாம் துணிதான்... காட்டன் துணிதான் நல்லதுன்னு வீட்டுல இருக்க பழைய நூல் சேலைகள கிழிச்சி வச்சிப்பாங்க... அப்படித் துணிய வச்சிக்கிட்டு டாய்லெட் வசதியில்லாத கிராமத்துல எம்புட்டு கஷ்டப்பட்டிருப்பாங்க... இல்லையா... அதெல்லாம் அனுபவச்சாத்தான் தெரியும்... இன்னைக்கு விஸ்பர், ஸ்டேப்ரி அது இதுன்னு நிறைய நாப்கின் இருக்கு... என்ன அத யூஸ் பண்ணினாலும் உன்ன நீதான் சுத்தமா வச்சிக்கணும்..."

"ம்..."

"நம்ம ஐயா, அப்பா, மாமாவை ஓடிப்போயி கட்டிப் பிடிக்கிறது... அவங்க தொடையில உரசிக்கிட்டு உக்கார்றது... வம்பிழுக்குறதுன்னு எதுவும் இனிமே செய்யக்கூடாது... அதே மாதிரி தெரியாத அம்பளங்க தொட்டுப் பேச விடக்கூடாது... குட் டச்... பேட் டச் எல்லாம் உனக்குத் தெரியுந்தானே... கிளாஸ்ல மிஸ் சொல்லிக் கொடுத்திருப்பாங்க இல்லையா... யாரு எப்படிப் பேசுறாங்க... என்ன நினைச்சித் தொடுறாங்கன்னு புரிஞ்சிக்கத் தெரியணும்..."

"என்னம்மா நீ... அப்பாக்கிட்ட எல்லாம் உக்காரக்கூடாதுன்னு... அப்ப அப்பா என்னைய கொஞ்ச மாட்டாரா... பக்கத்துல வரமாட்டாரா.... அப்படின்னா நான் ஏதுக்கு ஏஜ் அட்டன் பண்ணினேன்... இன்னும் கொஞ்ச நாளக்கி சின்னப்புள்ளயாவே இருந்திருக்கலாமே..." அப்பாக்கிட்ட ஒதுங்கியிருக்கணுமின்னு சொன்னதை அவளால தாங்க முடியாமல் கண் கலங்கக் கேட்டாள்.

"ஏய் அசடு... பொதுவாச் சொன்னேன்... உங்கப்பா உன்னய தள்ளி வைப்பாரா... இன்னக்கி வந்தாக்கூட ஒன்னய கட்டித் தூக்குவாரு... இன்னக்கில்ல உனக்கு கல்யாணமாகி நீ ஒரு புள்ளக்கித் தாயானாலும் அவருக்கு மதுக்குட்டிதான்... எப்பவா இருந்தாலும் உன்னய ஓடியாந்து செல்லக்குட்டின்னு தூக்குவாரு.. பொத்தாம் பொதுவாச் சொன்னேன்...” மகளின் தலை கோதினாள்.

“இனி நீ அம்மா சொல்ற மாதிரி நடந்துக்கணும் சரியா... அப்பல்லாம் வயசுக்கு வர்றப்போ பதினாலு பதினஞ்சி வயசாகும்... அந்த வயசுதான் காதல் கத்திரிக்காய்ன்னு  வாழ்க்கையைத் தொலைக்கிற வயசு... பொத்திப் பொத்தி வளர்ப்பாங்க... ஆனா இப்ப பத்து வயசுல வயசுக்கு வந்துடுதுங்க... பதின்ம வயதுன்னு படிச்சிருப்பேயில்ல..."

"ம்..." 

"அந்த பதின்ம வயசு வர்றதுக்குள்ள புள்ளயள பொத்திப் பொத்தி வளக்கிறதுதான் பெத்தவுகளுக்கு இன்னக்கி இருக்கிற மிகப்பெரிய சவால்... இப்ப புள்ளயளக் கெடுக்கிறதுக்கு நெட்டு... போனு... சினிமான்னு நிறைய இருக்கு...  நல்லதோ கெட்டதோ எதாயிருந்தாலும் அம்மாக்கிட்ட மறைக்காமச் சொல்லணும் சரியா... நமக்கு படிப்புத்தான் முக்கியம்... அதுக்குத்தான் அப்பா அங்க கஷ்ட்டப்படுறாரு... அவரோட கனவு நீ டாக்டராகனுங்கிறதுதான்... இந்த வயசுல தோன்ற மத்த எண்ணங்களை தூக்கி தூரவச்சிட்டு அப்பாவோட கனவ நனவாக்குறதுக்கு படிப்புல மட்டும் கவனம் செலுத்து... சரியா..."

"சரிம்மா... என்னென்னவோ சொல்றீங்க...இதுக்குப் பின்னால இம்புட்டு இருக்கா...  எனக்கு தூக்கம் வருது..."

"இது கதையில்லடி... இதுதான் வாழ்க்கை..."

ஐய்யோ அம்மா... ஹிஸ்ட்ரின்னாலே எனக்குப் போரும்மா... எங்க வரலெட்சுமி மிஸ் மாதிரி கிளாஸ் எடுத்து கொல்லாதீங்க... ப்ளீஸ்... மீதியிருந்தா இன்னொரு நாள் சொல்லுங்கம்மா..."

"விவரம் தெரிஞ்சிக்கணும்மா... அதுக்குத்தான் சொல்றேன்... நீ நல்லபுள்ளதான்... எம்மகள எனக்குத் தெரியாதா என்ன... நீ தெரிஞ்சிக்கணுமின்னுதான் அம்மா இம்புட்டு விரிவாச் சொல்றேன்டா..." என்றபடி மகளின் கன்னத்தில் முத்தமிட்டாள்.

"ம்... சரிம்மா... தெரிஞ்சிக்கிட்டேன்... " என்ற மது அம்மாவை கட்டிப்பிடித்து பதிலுக்குத் அவள் கன்னத்தில் முத்தமிட்டாள்.

"ஏம்மா... அந்த மூணு நாள்ல வயிறு ரொம்ப வலிக்குமாமே... திவ்யா வயிறு வலியின்னு சில நேரம் அழுவா... அவளுக்கு பைவ்.. செவன் டேய்ல்லாம் இருக்குமாம்... அவ சொல்வா... ரொம்பக் கஷ்டமாயிருக்குமாம்மா..." மெல்லக் கேட்டாள்.

"ஏய்... ஆரம்பத்துல சிலருக்கு வலியிருக்கும்... அப்புறம் சரியாயிரும்... அம்மா சொன்ன மாதிரி  பொண்ணாப் பொறந்தா இதெல்லாம் அனுபவிச்சித்தாண்டா ஆகணும்... மாட்டேன்னு சொல்ல இதென்ன மருந்து மாத்திரையா... உடம்போட வலி... அம்மாவுக்கெல்லாம்  ஆரம்பத்துல பத்து நாளக்கி இருக்கும்... மொத மூணு நாளு உயிர் போற வலியிருக்கும்... மாத்திரை போட்டு வலியைக் குறைப்பேன்... ஆனா அடிக்கடி மாத்திரை போடக்கூடாதுன்னு உங்காயா திட்டும்.... ஒரு வருசத்துக்கு அப்புறம் மெல்ல மெல்ல டேட்ஸ் குறைஞ்சிக்கிட்டே வந்து இப்பல்லாம் ரெண்டே நாள்தான்... மூணாவது நாள் பிரியாயிருவேன்... என்ன ஒண்ணு அந்த நாள்ல நம்மளோட வேதனையும் வலியும் அதிக டென்சனை ஏற்படுத்தும்... எல்லாத்துக்கும் கோபம் வரும்... சம்பந்தமில்லாத எரிஞ்சி விழச் சொல்லும்... அதெல்லாம் தாண்டி... இதுதான் வாழ்க்கை... இனி வாழ்க்கையில மென்சஸ் நிக்கிற வரைக்கும் இப்படித்தான்... மாசாமாசம் இந்த வேதனையையும் வலியையும் சுமந்துதான் ஆகணும்ன்னு மனசைத் தயார் படுத்திக்கிட்டேன்னு வச்சிக்க அப்புறம் இதெல்லாம் ரொட்டீனா நடக்கிற ஒண்ணா மாறிப்போயிரும்...”

“ம்…”

“பள்ளிக்கூட நாள்ன்னா ஸ்கூல் பேக்ல நாப்கின் எடுத்துக்கிட்டுப் போயி கொஞ்சம் அசூசையா இருக்க மாதிரி தெரிஞ்சா மிஸ்க்கிட்ட விவரம் சொல்லிட்டுப் பாத்ரூம் போயி மாத்திக்கணும்... ஆரம்பத்துல அடிக்கடி நாப்கின் மாத்திக்க... கொஞ்சம் ப்ரீயா பீல் பண்ணுவே... இங்கரு அம்மு இதொன்னும் கம்ப சூத்திரமில்ல.. ஈஸியாப் பழகிடும்டா செல்லம்... உனக்கு அம்மா நானிருக்கேன்... என்னைய உன்னோட தோழியா நினைச்சிக்க... எதாயிருந்தாலும் சொல்லு... என்ன கேக்கணுமோ அதை அம்மாக்கிட்ட கேக்கலாமான்னு நினைக்காம... கேளு... பயமில்லாமக் கேளு... அம்மா உனக்கு விவரமாச் சொல்லித்தாரேன்... கொஞ்ச நாளாச்சின்னா நீ எனக்கு விவரம் சொல்லித் தருவே பாரேன்..." என மகளை அணைத்து உச்சிமோர்ந்து தானும் அவளருகில் படுத்துக் அணைத்துக் கொண்டாள்.

-'பரிவை' சே.குமார்.

7 எண்ணங்கள்:

துரை செல்வராஜூ சொன்னது…

தாயும் மகளும்...

ஆகா.. அழகான சொல்லாடல்களுடன்.. இன்றைய தேவை..

குமார் என்றால் குமார் தான்!..

ஸ்ரீராம். சொன்னது…

பேட்மேன் பற்றிய செய்திகள் வந்து கொண்டிருக்கும்போது அதற்குத் தகிந்தித்தாற்போல ஒரு கதை, உரையாடல். நன்று.

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

மனசுக்கு மூடுவிழா எல்லாம் தேவையில்லை
தொடர்ந்து எழுதுங்கள் நண்பரே

அ.மு. நெருடா சொன்னது…

அருமை! வாழ்த்துகள்.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

என் இரு வார வெளியூர்ப் பயணத்திறகுப் பின் இன்று உங்கள் பதிவினைக் கண்டேன். இப்போதைய தேவையை மிகவும் நாசுக்காகப் பகிர்ந்த விதம் அருமை.

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

இக்கதையை பிரதிலிபியில் வாசித்த நினைவு குமார். அங்குக் கருத்தும் இட்டோம் என்றும் நினைக்கிறென். அது பதிந்ததா என்று தெரியவில்லை ஏனென்றால் மீண்டும் அதற்குள் நுழைய முடியலை....

அருமையான கதை...குமார் வாழ்த்துகள்!

குமார் உங்களுக்கு ஏற்பட்டுள்ள ஒரு சுணக்கம் போல எனக்கும் இருக்கிறது..நானும் துளசியிடம் சொல்லிக் கொண்டிருக்கேன்...நான் இனி எழுதலை..ஆனா உனக்கு நம் வலைத்தளத்தை மேனேஜ் செய்வதில் உதவுகிறேன்...வலையில் உன் கமென்டுகளைப் போடறேன்...

...மனசை மூடிவிடாதீர்கள் குமார்!! திறந்தே வைத்திருங்கள்...பல சங்கதிகள் வந்து விழும்...வேண்டுவன வற்றைப் பொறுக்கி எடுத்துப் பதிவுகளாக்குங்கள்!!! உங்களைப் போன்ற எழுத்தாளர்களுக்கு இது ஊக்க சக்தி...

கீதா

iramuthusamy@gmail.com சொன்னது…

இன்றைய காலத்திற்கு ஏற்ற கதை. அவசியம் படிக்கவும். நன்றி.