மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

புதன், 27 செப்டம்பர், 2017

ராசாத்தி உன்ன எண்ணி...

ன்னோட வலை திறப்பதில் பிரச்சினை இருக்கிறது என்பதை திரு.இராமானுஜம் ஐயா உள்ளிட்ட பலர் சொன்னார்கள். நானும் என்னால் முடிந்தளவுக்கு முயற்சி செய்தும் சரியானது  பொல் தெரியவில்லை. என்னால் யாருக்கும் கருத்திடவோ, வந்திருக்கும் கருத்துக்கு மறுமொழி இடவோ இயலவில்லை. தமிழ்மணம் ஓட்டுப்பட்டையைக் காணவில்லை. தனபாலன் அண்ணன் தன் தொழிலில் பிஸியாக இருப்பதால் அவராலும் சரி செய்ய இயலவில்லை. நண்பர் தமிழ்வாசி சரி செய்வதாகச் சொல்லியிருக்கிறார். சரியாகும் என்று நினைக்கிறேன். பார்க்கலாம்.

'மன்னவன் பேரைச் சொல்லி' என ஆரம்பித்த சென்ற பதிவை வலைப் பிரச்சினையால் அதிகம் பேர் வாசிக்கவில்லை என்றாலும் பலர் முகநூல் அரட்டையில் பதிவு அருமை என்று சொன்னார்கள்... பாடல்கள் குறித்து எழுதியிருந்தாலும் நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு கிராமத்துப் பதிவு எழுதிய மகிழ்ச்சி. சினிமாப் பாடல்கள்... குறிப்பாக 90-க்கு முந்தைய பாடல்கள் குறித்து எழுதினால் எவ்வளவு சந்தோஷம் மனசுக்குள் பூக்குமோ அப்படித்தான் நாட்டுப்புறப் பாடல்களைப் பற்றி எழுதினாலும் பேசினாலும் மனசுக்குள் மகிழ்ச்சிப்பூ பூக்கும். கிராமியப் பாடல்கள் அதாங்க நாட்டுப்புறப் பாடல்கள் பாடுபவர்கள் எத்தனையோ பேர் இருந்தாலும் சின்ன வயதில் இருந்து கேட்கும் விஜயலெட்சுமி நவநீதகிருஷ்ணன், புஷ்பவனம் குப்புச்சாமி, கோட்டைச்சாமி ஆறுமுகம், தேக்கம்பட்டி சுந்தரராஜன், கே.ஏ.குணசேகரன், சிங்கம்புணரி தங்கராசு, பரவை முனியம்மா, கொல்லங்குடி கருப்பாயி வரிசையில் தஞ்சை சின்னப்பொண்ணு, பாடகர் வேல்முருகன் உள்ளிட்ட பலர் இப்போ நாட்டுப்புறப் பாடல்கள் பாடுறாங்க... நிறைய இளைஞர்கள் சொல்லிக் கொள்ளும்படியாக நாட்டுப்புறப் பாடல்களைப் பாடுறாங்க... கிராமங்களில் திருவிழாக்களில் நாட்டுப்புற இசை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. 

கிராமங்களில் நடத்தப்படும் நாட்டுப்புறப் பாடல்கள் நிகழ்ச்சிகள் மற்ற நிகழ்ச்சிகளோடு போட்டியிடும் நோக்கோடு மட்டுமின்றி மக்களை அந்த நான்கு மணி நேரத்துக்கு அமர வைக்கவும் ஒவ்வொரு பாடலுக்கும் சிலரை நடனம் ஆட வைப்பது... அதாவது ஆடல்பாடல் நிகழ்ச்சி போல... என்ன அதில் படப்பாடலை ஒலிக்க வைத்து ஆடுவார்கள்... அது கேவலத்தின் உச்ச நிகழ்ச்சியாகி பெரும்பாலான இடங்களில் தடை விதிக்கப்பட்டுவிட்டது. எங்கள் பகுதியில் எல்லாம் அதற்கு அனுமதியில்லை. நாட்டுப்புறப் பாடலைப் மேடையில் பாடும் போது குத்தாட்டம் போட விடுகிறார்கள்... இதில் ஆபாசம் இல்லாதிருக்கிறது என்றாலும் இதிலும் குறவன் குறத்தி என்ற நகைச்சுவை பகுதியை இணைத்து ஆபாசமாக பேச ஆரம்பித்து விட்டார்கள் என்பது வருத்தத்திற்குரிய விஷயம்தான். கண்காணிக்க வரும் காவல்துறையும் பார்த்து ரசித்துவிட்டுத்தான் போகிறது. எங்க பகுதியில் திருப்பத்தூரைச் சேர்ந்த சேவியர் அவர்களின் திருப்பத்தூரான் இசை நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்பு உண்டு. தற்போது கிராமியப் பாடல்களில் இளையராஜா என்பவர் இனிமையாகப் பாட ஆரம்பித்திருக்கிறார்.

விஜயலெட்சுமி நவநீதகிருஷ்ணனின் 'செந்தில் வடிவேலவரே சிந்து கவி பாட...', 'தோட்டுக்கடை ஓரத்திலே...' 'ஓண்ணாம் படி எடுத்து...' போன்ற பல பாடல்களைத் திரும்பத் திரும்ப கேட்டிருந்தாலும் புஷ்வனத்தின் பாடல்கள் மீது ஏதோ ஒரு காதல்... எப்பவும் இப்பவும் உண்டு. குறிப்பாக 'ராசாத்தி உன்னை எண்ணி' பாடல் கேட்கும் போது மனசுக்குள் ஒரு மகிழ்ச்சி வந்து உக்கார்ந்து கொள்ளும்... அதுவும் அவர் 'மஞ்ச செவ்வந்திப்பூவாம்... மன்னார்குடி பூத்தபூவாம்... மன்னார்குடிக்கு போயிவந்தேன்... மரிக்கொழுந்து வாங்கி வந்தேன்...' என்ற வரிகளைத் தொடர்ந்து பாடும் ஒவ்வொரு வரிகளும் அருமையாக இருக்கும். இந்தப் பாடல் என்னோட ஆல்டைம் பேவரைட். எத்தனை முறை கேட்டாலும் சலிப்பதில்லை. புஷ்பவனம் குப்புச்சாமியும் அனிதா குப்புச்சாமியும் பாடிய பாடல்களை எப்போது கேட்டாலும் சோர்ந்து கிடக்கும் மனசுக்குள் ஒரு துள்ளல் ஏற்படும்.

அதே மாதிரி தேக்கம்பட்டி சுந்தர்ராஜன் பாடி பட்டிதொட்டியெல்லாம் பிரபலமடைந்து எந்தக் கோவில் திருவிழா என்றாலும் பூக்குழி இறங்குதல், பால்குடம் எடுத்தல் நிகழ்வுகளில் தவறாது ஒலிபரப்பப்படும் பாடல் 'அங்கே இடி முழங்குது கருப்பசாமி தங்க கரகம் மின்னுது' என்ற பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும். இந்தப் பாடல் சாமி வராதவர்களையும் வரவைக்கும் பாடல். கிராமிய இசையில் இருக்கும் சாமிப்பாடல்களில் இந்தப் பாடல் மீது எப்பவும் ஒரு காதல். அதென்ன கருப்பர் மீது காதல்... கிருஷ்ணன் மீது காதல் வந்தால் கூட பரவாயில்லை என்று தோன்றலாம். எங்க குலதெய்வம் அழகர்கோவிலில் காவல் தெய்வம் பதினெட்டம்படிக் கருப்பன் என்பதால் இந்தப் பாடல் மீது காதல் வந்திருக்கலாம்... இந்தக் காதல் வழி வழியாகத் தொடருமா என்ன... எங்க விஷால் மொபைலில் சேமித்து வைத்து அடிக்கடி கேட்கும் பாடல் இதுதான் என்றால் விசித்திரமாக இருக்கும்... ஆனால் அதுதான் உண்மை. அதுவும்  சப்தமாகக் கேட்டுக் கொண்டிருப்பது அவனுக்குப் பிடித்தமானது.

இப்படியே பல பாடல்களைச் சொல்லிக் கொண்டே போகலாம்... சின்னப்பொண்ணு அவர்கள் நாக்கமுக்க பாடல் மூலம் பிரபலமாகினார் என்றாலும் அவர் படித்த 'மரிக்கொழுந்தே.. என் மல்லிகைப் பூவே' கிராமங்களில் மட்டுமின்றி சந்துபொந்தெல்லாம் அடித்து ஆடவில்லையா... நம்மைக் கடந்து செல்லும் எத்தனையோ பேரின் செல்போன்களில் ரிங்க்டோனே அதாகத்தானே இருந்தது. அவரின் மரிக்கொழுந்தைவிட 'அன்புள்ளம் கொண்ட அம்மாவுக்கு மகள் எழுதும் கடிதம்' எப்போது கேட்டாலும் கண்ணீரை வரவைக்கும் அல்லவா? நம்ம பரவை முனியம்மா பாடிய 'மஞ்சு மலை நரிக்குறவர் நாங்கயில்லை சாமி' பாடல் கேட்டிருக்கிறீர்களா? அதேபோல் கே.ஏ.குணசேகரன் அவர்களின் 'நாடு சும்மா கிடந்தாலும் கிடக்கும்' பாடலைப் பலர் பாடியிருக்கிறார்கள். அதில் பரவை முனியம்மாவின் குரலில் கேட்டு ரசியுங்கள். அப்படியே கோட்டைச்சாமி ஆறுமுகம் அவர்களின் 'பச்சரிச்சி கொத்தமல்லி கீரையோடவே' பாடலையும் கேட்டுப்பாருங்கள் கொல்லங்குடி கருப்பாயி தன் கிராமியப் பாடல்களை ஆண்பாவம் படத்தில் பாடி நடித்துக் கலக்கியிருப்பதை எத்தனை முறை வேண்டுமானாலும் ரசிக்கலாம் அல்லவா.

'அன்புள்ளம் கொண்ட அம்மாவுக்கு' பாடல் எப்படி வறுமையைச் சொன்னதோ அதேபோல் ஆக்காட்டி  'ஆக்காட்டி எத்தனை முட்டை இட்டே...' பாடல் ஒரு சோக வரலாற்றைச் சொல்லிச் செல்லும். 'மொச்சைக் கொட்டப் பல்லழகி...' பாடலை கேட்டு ஆடாதோர் யாருண்டு... இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம் பல பாடல்களை... எவ்வளவோ பாடல்கள்... பல கிராமியப் பாடல்கள் வாழ்க்கைக் கதை பேசும்... வயிற்றெரிச்சலைச் சொல்லும்... வயக்காட்டு வாழ்க்கையையும் வலிகளையும் சொல்லும்... ஆடு, மாடு, கோழி... ஏன் குருவிகளின் கதைகளையும் பாடும்... தாலாட்டில் ஆயிரம் கதை சொல்லும்... களையெடுப்பில்... நாற்று நடவில்... கருதறுப்பில்... திருவிழாவில் என எத்தனை பாடல்கள்.  இந்தப் பாடல்கள் எல்லாமே வாய் வழியாக சொல்லிச் செல்லும் பாடல்களாய் இருந்ததால் பல பாடல்கள் அழிந்து போய்விட்டன என்பதே உண்மை என்றாலும் இன்று பாடல்கள் டிஜிட்டல் மீடியாவால் பட்டிதொட்டி மற்றும் இன்றி பார் முழுவதும் கொண்டு செல்லப்படுவதால் இனி எழுதப்படும் கிராமியப்பாடல்கள் பாதுகாப்பாக இருக்கும் என்று நம்பலாம்.

அட ஆமால்ல... இளையராசாவின் பாடல்களைப் பற்றிச் சொல்லலையில்ல... சரி விடுங்க அடுத்த பதிவு தேத்திக்கலாம். அதுவரைக்கும் எங்க கொல்லங்குடியில் பிறந்த கருப்பாயி அவர்களின் குரலில் கிராமியப் பாடலைக் கேட்டு மகிழுங்கள். கொல்லங்குடி கேள்விப்பட்டிருக்கிறீர்களா... கொல்லங்குடி வெட்டுடையாள் காளி கோவில்... காசு வெட்டிப் போட்டால் நினைத்ததை நடத்திக் கொடுக்கும் தெய்வம்... இந்த வெட்டுடையாள்தான் வெள்ளையனிடம் நம்ம வேலுநாச்சியாரைக் காட்டிக் கொடுக்க முடியாது என்று சொன்னதற்காக வெட்டுப்பட்ட உடையாள்.... அங்க பிறந்த கிராமத்து அழகி கருப்பாயியின் பாட்டைக் கேட்டு ரசிங்க....


இன்னும் பேசுவோம்....
-'பரிவை' சே.குமார்.

10 எண்ணங்கள்:

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

கிராமத்துப் பாடல்கள் மனதை ஈர்க்கும் சக்தி வாய்ந்தவை. பொக்கிஷங்கள் என்றும் சொல்லலாம்..பாடலும் அருமை

நல்ல பதிவு குமார்...

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

வெட்டுடையாள் காளி கேள்விப்பட்டுள்ளேன். கருப்பாயியின் பாடல்களையும் ரசித்துள்ளேன்.

ராஜி சொன்னது…

நல்ல பதிவு.

ஸ்ரீராம். சொன்னது…

மதுரையில் இருந்த நாட்களில் விஜயலக்ஷ்மி நவநீதகிருஷ்ணன் அவர்கள் கேசெட் வாங்கி கேட்டிருக்கிறேன்.

தமிழ்மணப் பட்டையைக் காணோமே என்று பார்த்தால், இப்போது ஒன்றுக்கு இரண்டு பட்டைகள்! டிடி தமிழ்வாசி இரண்டு பெரும் ஆளுக்கொரு பட்டை கொண்டு வந்திருக்கிறார்கள் போல!!! இரண்டிலும் ஒருமுறை ஓட்டளித்து பார்த்தேன். ஒன்றுதான் விழுந்தது. இன்னொன்று "அதுதான் முதலிலேயே போட்டு விட்டாயே" என்கிறது!

M0HAM3D சொன்னது…

த+ம=3

துரை செல்வராஜூ சொன்னது…

கிராமியப் பாடல்கள் வாழ்வியலின் வரலாறு..

மனோ சாமிநாதன் சொன்னது…

கொல்லங்குடியைப்பற்றிய கதை சுவாரஸ்யம்! விஜயலக்ஷ்மி நவனீத கிருஷ்ணனின் பாடல்களை ஏற்கனவே கேட்டிருக்கிறேன். இதில் புஷ்பவனம் குப்புசாமியும் அனிதா குப்புசாமியும் வல்லவர்கள். அஜ்மானில் சில வருடங்களுக்கு முன் அவர்களின் பெரிய கச்சேரியே நடந்தது!!

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

அருமை நண்பரே

G.M Balasubramaniam சொன்னது…

pபுஷ்பவனம் குப்புசாமி அனிதா குப்புசாமி பாடல்களை ரசித்திருக்கிறேன்

Jothi சொன்னது…

நாட்டுப்புற பாடல்கள் அழியாது இருக்க வேண்டும்