மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

ஞாயிறு, 9 அக்டோபர், 2016கிராமத்து நினைவுகள் : ஆயுத பூஜையும் அட்லஸ் சைக்கிளும்

கிராமத்து நினைவுகள் எழுதி ரொம்ப நாளாச்சு... நிறைய நினைவுகள் தாங்கி மனசு காத்திருந்தாலும் ஏனோ எழுத எண்ணம் மட்டும் வரவில்லை. ஆயுத பூஜையின்னதும் நம்ம அட்லஸ் சைக்கிள் ஞாபகத்தில் வர, ரொம்ப நாளைக்குப் பிறகு எழுதியாச்சு.

Image result for அட்லஸ் சைக்கிள்

பள்ளியில் படிக்கும் காலத்தில் ஒவ்வொரு பண்டிகைகளும் மிகவும் எதிர்ப்பார்ப்போடு காத்திருந்த நிகழ்வுகள்தான்... தீபாவளி என்றால் புத்தாடையும் பட்டாசும் பலகாரங்களும்... பொங்கல் என்றால் புத்தாடையும் வாழ்த்து அட்டைகளும் ஜல்லிக்கட்டும் மஞ்சுவிரட்டும்... கார்த்திகை என்றால் தீபமும் சுளுந்தும்...  ஆயுதபூஜை என்றால் கடலையும் பொரியும்.. வருடப் பிறப்பு என்றால் நல்லேர் உழுவும் விதை விதைத்தலும் இரவு ஆர்க்கெஸ்ட்ரா, நாடகங்களும்... திருவிழா என்றால் இரவு கரகம் எடுத்தலும் கலை நிகழ்ச்சிகளும்... தேரோட்டம் என்றால் அசைந்து வரும் பெரிய தேரும்... மாம்பழமும் பொரி உருண்டையும்... இப்படி ஒவ்வொரு திருவிழாக்களையும் ரசனையோடு ரசித்த நாட்கள் அவை.

அன்றைய நாட்களில் விசேஷ தினங்கள் எல்லாம் சந்தோஷத்தை அதிகம் அள்ளிக் கொடுத்தன. அன்றைய நாளில்   திரையரங்குகளில் கால் கடுக்க காத்திருக்கவில்லை. தொலைக்காட்சிகளில் சிறப்பு நிகழ்ச்சிகளின் முன்னால் தவம் கிடைக்கவில்லை. வீட்டிற்கு முன்னே இருக்கும் எங்கள் ஊர் மாரியம்மன் கோவிலில் கூடி ஆனந்தக் கூத்தாடத்தான் செய்தோம்... எல்லாருமாய் போட்ட ஆட்டங்களையும் அன்றைய தினங்களின் சந்தோஷங்களையும் மறக்க முடியுமா சொல்லுங்கள்..?

மாட்டுப் பொங்கல் என்றால் மாடுகளை குளிப்பாட்டி புதுக்கயிறு போட்டு பொட்டு வைத்து தயார் செய்வது போல் ஆயுத பூஜை என்றால் வீட்டில் இருக்கும் மண்வெட்டி, அரிவாள், உலக்கை, கலப்பை, சைக்கிள் என எல்லாவற்றையும் கழுவித் துடைத்து சந்தனம் வைத்து பொட்டு வைத்து பூ வைத்து இரவு சாம்பிராணி போட்டு சூடம் காட்டி சாமி கும்பிடுவது என்பது அவ்வளவு சந்தோஷத்தைக் கொடுத்தது. 

எங்க வீட்டில் அப்பா வைத்திருந்த அட்லஸ் சைக்கிள்தான் என்னோட பள்ளிக் கல்லூரி வாகனம்.... கல்லூரி மூன்றாம் ஆண்டு படிக்கும் போதுதான் அண்ணன் வாங்கிக் கொடுத்த ஹெர்குலிஸ் சைக்கிள்... அப்பவும் எங்க அட்லஸ் வீட்டில்தான் இருந்தது. கவட்டைக் கால் ஓட்ட ஆரம்பித்து ஹாண்டில் பாரில் ஏறி ஓட்டி... பின்னர் சீட்டில் ஏறி இடுப்பை ஆட்டி ஆட்டி ஓட்டப் பழகி பின்னர் கை விட்டு ரொம்பத் தூரம் ஓட்டி... காலைத் தூக்கி வைத்தபடி சறுக்கலில் இறங்கி எல்லாம் செய்தது எங்க வீட்டு அட்லஸில்தான்... அண்ணன்கள், சின்ன அக்கா, தம்பி என எல்லாரும் பழகியது இந்த சைக்கிளில்தான்.

ஆயுத பூஜை அன்று காலையில்  சைக்கிளை கழுவும் வேலையை வெகு சிரத்தையாக செய்வோம்... கண்மாயில் தண்ணீர் நிறையக் கிடந்தால் அதில் கொண்டு போய் நிறுத்தி பெடலைச் சுற்றி தண்ணீரை இறைத்து சந்தோஷப்பட்டு... களிம்புகளும் மண்ணும் போகத் துடைத்துக் கழுவி... கரையில் வைத்து தண்ணீர் வடிவதற்காக தூக்கி.... சுத்தமாக துணி வைத்து துடைத்து எடுத்து வருவோம்... அதுவும் ஓட்டினால் மணல் ஒட்டும் என கண்மாயில் இருந்து உருட்டிக் கொண்டே வருவோம். வீட்டிற்கு வந்ததும் வெள்ளைத் துணியில் தேங்காய் எண்ணெய் தொட்டு மர்க்காடு. செயின் கவர், ஹாண்டில் பார்... ரிம் என எல்லாவற்றையும் துடைத்து பளபளப்பாக்கி... ஒவ்வொரு போக்ஸாக துடைத்து... ஜெயினுக்கு எண்ணெய் விட்டு... இப்படி பார்த்துப் பார்த்து துடைத்து எங்க வீட்டு அட்லஸை அழகி ஆக்குவேன். கண்மாயில் தண்ணீர் இல்லாவிட்டால் அடிபைப்பில் தண்ணீர் பிடித்து ஆளாளுக்கு கழுவிக் கொண்டிருப்போம்.

பத்தாவது படிக்கும் போது டியூசன் முடிந்து  இரவு கருங்கும் என்ற இருட்டுக்குள் அரக்கப் பரக்க ஓட்டிக் கொண்டு வரும் போது வியர்வைத் துளிகள் சட்டையை நனைக்கும். அப்புறம் அப்புறம் பழக ஆரம்பித்து இரவு பனிரெண்டு மணிக்கெல்லாம் சர்வசாதரணமய் சைக்கிளில் வர ஆரம்பித்தது தனிக்கதை... ஆரம்ப கால இரவுப் பயணத்தில் சைக்கிளின் செயின் கழண்டால்தான் கஷ்டம்...  சில நேரங்களில் சரி செய்து விடலாம்... சில நாட்கள் சரி செய்ய முடியாமல் தள்ளிக் கொண்டு வந்ததும் உண்டு. வெளிச்சமில்லாத பாதி ஒற்றையடிப் பாதையும் அதற்கு மேல் சரளைச் சாலையிலுமாக இருக்கும் வழியில் இருபுறமும் ஆவரஞ்செடி பூத்திருக்க சைக்கிளைத் தள்ளிக்கொண்டு விறுவிறுக்க வீடு வந்து சேர்வது மறக்கமுடியாதது. அதுவும் சுடுகாட்டுக்கு நேரே வரும்போது திக்..திக்தான்... பின்னர் எத்தனை மணி என்றாலும் பயமின்றி வர ஆரம்பித்தபோது எதுக்குடா இந்த இருட்டுல வர்றே... அக்கா வீட்ல இருந்திருக்கலாம்ல என்று அம்மா திட்டுவார்... நம்ம சைக்கிளுக்கு மேடு பள்ளம்... வளைவு சுளிவு எல்லாம் அத்துபடி... சும்மா சரச்சரன்னு வீட்டுல கொண்டு போயி விட்டிடும்.

பஞ்சர் ஆனால் வீட்டிலேயே பார்த்து விடுவேன்... டயர் மாற்ற... டியூப் மாற்ற... கோட்டம் பார்க்க... போக்ஸ் மாற்ற... சைக்கிள் ஓவர் ஆல் பண்ண... என எல்லாவற்றிற்கும் சக்தி அண்ணன் கடைக்குப் போய் விடுவேன். சக்தி அண்ணன்தான் அதற்கு டாக்டர்... அவர் வேலை பார்த்தால்தான் சைக்கிள் சைக்கிளாக இருக்கும்... நல்ல வேலைக்காரர்... ஆனாலும் குடியால் கெட்டார்... கடையை அங்கு மாற்றி... இங்கு மாற்றி... கொஞ்ச நாள் ஆள் காணாமல் போய் இப்போ தேவகோட்டை சந்தைக்கு அருகே ஒரு சுவரோரத்தில் அமர்ந்து பஞ்சர் பார்த்துக் கொண்டிருந்தார்... சென்ற முறை சந்தைக்குப் போன போது ஓடிவந்து குமாரு நல்லாயிருக்கியா என்றவர் பத்து ரூபாய் இருந்தாக் கொடு என்று தலையைச் சொறிந்தார்... நல்ல திறமை சாலி குடியால் கெட்டார்... வருத்தத்தோடு கொடுத்து வந்தேன்.

எங்க வீட்டு அட்லஸ் அப்பா மளிகை கடை வைத்திருந்ததில் இருந்து அவரைச் சுமந்து எனக்கு மூத்தவர்கள் எல்லாம் ஓட்டி... நானும் ஓட்டி... தம்பியும் ஓட்டி... அண்ணன் மூலமாக எம் 80 வந்த நாளில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக ஓரங்கட்டப்பட்டது. ஆயுத பூஜை தினத்தில் கதம்பம் அலங்கரிக்க அழகாய் நிற்கும்... கர்..கர்...என்ற சப்தம் அடிக்கடி எழ முழுதாய் மறைத்திருந்த செயின் கவர் பாதி ஆனது... அதான் வண்டி இருக்குல்ல... இப்ப சைக்கிள் எதுக்கு சும்மா மூலையில நிக்கிதுன்னு சொன்னப்போ அதை விற்க மறுத்து வீட்டிலேயே வைத்திருந்து பின்னர் நாளடைவில் கசாலைக்குப் போய்... மாடில்லாத கசாலையில் தனியே கிடந்தது... தன்னை இழந்தது விற்க மனமில்லாமல் விட்டிலேயே கிடந்த அட்லஸ்.
-'பரிவை' சே.குமார்.

8 கருத்துகள்:

 1. காட்சிகள் கண் முன்னே விரிந்தது நண்பரே நினைவே ஒரு சங்கீதம்

  பதிலளிநீக்கு
 2. இனிமையான நினைவுகள். ஆயுத பூஜை நினைவுகள் என்றாலும் என்னுடைய சைக்கிள் காலத்தை மீட்டிப் பார்த்தது உங்கள் பதிவு.

  பதிலளிநீக்கு
 3. மலரும் நினைவுகளாக பால்ய கால நினைவுகளை கண்முன் கொண்டுவந்து விட்டீர்கள். வாழ்த்துக்கள்!
  த ம 4

  பதிலளிநீக்கு
 4. கிராமத்து நினைவுகளை எங்களிடம் பகிர்ந்த விதம் மிக அருமை குமார்.

  பதிலளிநீக்கு
 5. மலரும் நினைவுகள்.. அநேகமாக கிராமத்தில் வாழ்ந்தவர்களுக்கெல்லாம் இப்படித்தான் இருக்குமோ!?..

  பதிலளிநீக்கு
 6. மலரும் நினைவுகள்... சைக்கிள் பலருடைய வாழ்க்கையில் ஒரு அங்கமாக இருந்திருக்கிறது என்பதை உணர முடிகிறது....

  பதிலளிநீக்கு
 7. எங்கள் மலரும் கிராமத்து நினைவுகளை தட்டி எழுப்பி விட்டீர்கள். அடிக்கடி வருவதுதான் என்றாலும் இப்படி வாசிக்கும் போது எழுதவேண்டும் என்று நினைப்பதுண்டு ஆனால் அது நடக்காமல் போய்விடுகிறது. அழகான நினைவுகள். ரசித்தோம்..

  கீதா: குமார் எங்கள் கிராமத்திற்குநடந்து செல்வது ஆற்றோரமாக, வயல் வரப்பில் என்பது எல்லாம் நினைவுவந்தது. சைக்கிள் கற்றுக் கொள்ளூம் போது விழுந்து அடிபட்டது எல்லாம்....கிராமம் மனக்கண் முன் விரிய....அருமை குமார்.

  பதிலளிநீக்கு
 8. அந்த காலத்துக்கே போய் வந்தோம்! அழகிய நினைவுகள், எங்கப்பா ஊரில் இருந்தவரை என்னை சைக்கிள் ஓட்ட பழகவே விடவில்லை என்பது தான் பெரிய சோகம்.

  பதிலளிநீக்கு

நட்பின் வருகைக்கு நன்றி..!

பகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...