மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வெள்ளி, 28 அக்டோபர், 2016

தீபாவளி சிறப்புச் சிறுகதை : உதிராத நேசம்

'அவளைப் போய் பார்க்கலாமா..?' என்ற எண்ணம் நேற்று மகேஷ் சொல்லிச் சென்றதிலிருந்து மனசுக்குள் சாரலாய் ஆரம்பித்து பெரும் தூறலாய் ஆக்கிரமித்திருந்தது.  'அவளைப் போய் பார்த்தால் என்ன சொல்வாள்..? ', 'பேசுவாளா... இல்லை பேசாமல் நகர்ந்து விடுவாளா...?', 'இன்னும் ஞாபகத்தில் வைத்திருப்பாளா..?' என்ற கேள்விகள் வரிசையாக நெஞ்சுக்குள் எழுந்து எழுந்து ஆழிப் பேரலையாய் நெஞ்சுக்குள் உயர்ந்து உயர்ந்து தணிந்தது. இந்த வயசில் அவளைத் தேடிப் போவது சரிதானா...? என்ற எண்ணம் வேறு மழைக்கால காளானாய் இடையிடையே பூத்துச் சிரித்தது.

இதுவரை அவளைப் பற்றிய நினைவில்லாமல் இருந்தேன் என்று சொன்னால் அது சுத்தப் பொய்... அடிக்கடி அவள் நினைவு மனசுக்குள்ள மல்லிப்பூ மாதிரி மலர்ந்து வாசம் வீசத்தான் செய்யும். அதுவும் 'மயங்கினேன் சொல்லத் தயங்கினேன் உனை விரும்பினேன் உயிரே' பாடலைக் கேட்டால் அவள் நினைவு எழுந்து கண் வழியாக நீராக வெளியேறும்... அதைக் கேட்கக் கூடாது என்று நினைத்தாலும் எப்படியும் தினமும் கேட்டு  விடும் பாடலாய் அது அப்போது.... என் தலையணை நனையாத நாளில்லை. வருடங்கள் கடக்க கடக்க... பாடலின் தாக்கம் கண்ணீர் வரவைக்கவில்லை... இருந்தால்தானே அழ.... ஆனாலும் அவள் நினைவுகள் தாலாட்டும் மயங்கினேன் சொல்லத் தயங்கினேனில்... இப்ப என்னோட செல்போன் ரிங்க்டோனே அந்தப் பாட்டுத்தான்... அவளுக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு அது... அவளின் நினைவுகள் என்னை மட்டுமே சிதைத்துக் கொண்டிருந்தது... என் குடும்பத்தை அது ஒரு போதும் சிதைக்கவில்லை... என் மனைவிக்கு நல்ல கணவனாய்... ஸ்வாதிகாவுக்கு நல்ல தகப்பனாய்த்தான் இதுவரை இருக்கிறேன்... இனிமேலும் இருப்பேன்.

அவளை கடைசியாப் பார்த்த 1996 - நவம்பர் ரெண்டாந்தேதி இன்னும் நினைவில்... அதை அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியுமா... சிவன் கோவில் வாசலில் விழுந்த அந்த இரட்டைத் துளி கண்ணீர்... இப்பவும் சிவனைப் பார்க்கப் போனால் துளிர்க்கிறது என்னுள்ளும்... அதன் பிறகு வாழ்க்கைப் பாதையின் வெவ்வேறு விதமான நகர்தலில் கடைசியில் நான் போய் நின்ற இடம் சிங்கப்பூரின் லிட்டில் இந்தியா... அதாங்க நம்மாளுங்க ஞாயிற்றுக் கிழமைகளில் கூடிக் களிக்கிற தேக்கா... வெள்ளியூர் வீரசாமி அண்ணனோட ஹோட்டல்ல கேசியரா இருந்தேன். ஞாயிற்றுக் கிழமை கடையில கூட்டம் அள்ளும்... அந்த வார மொத்த வியாபாரமும் ஒரே நாளில் கிடைக்கும்... குடும்பப் பிரச்சினைகளையும் தனிமையான வாழ்வு கொடுக்கும் வலியையும் தூக்கிச் சுமந்தாலும் அன்னைக்கு ஒருநாள் மட்டும்  அம்புட்டுப் பேரும் சந்தோஷமாத்தான் வருவானுங்க... சிக்கனும் பீர் பாட்டிலுமாய் அமர்க்களப்படுத்துவானுங்க.

ஆரம்ப காலங்கள்ல எனக்கு குடும்பப் பிரிவை விட அவளோட பிரிவு கொடுத்த வலி எதிலும் ஒட்டவிடலை... தேக்காவில் தேங்கி நின்ற ஞாயிற்றுக் கிழமை சந்தோஷம் எனக்குள் பரவவில்லை... சோகத்தின் சுவடுகள் என்னுள்ளே பதிந்து கிடந்தது. கடையில் உட்கார இடமில்லாமல் கூடும் கூட்டத்தைப் பார்த்து நான் தோசை மாஸ்டருக்கு உதவியாய் தோசை வார்க்க.... டீப் போட்டுக் கொடுக்க... சர்வராய் சுழன்று வேலை பார்க்க... காசையும் விட்டுவிடாமல் வாங்கிக் கொள்ள என பம்பரமாய் வேலை பார்த்ததால் முதலாளிக்கு என்னை ரொம்ப பிடிச்சிப் போச்சு. தன்னோட பிள்ளை மாதிரி வச்சிக்கிட்டார்.

வருடங்கள் கடக்க, ஞாயிற்றுக்கிழமை சந்தோஷம் எனக்குள்ளும் வந்து ஒட்டிக் கொண்டது. வீராசாமி அண்ணன் கடையைக் கொடுத்துட்டு ஊருப்பக்கம் போயி செட்டிலாயிடுச்சு... இப்ப அந்த ஹோட்டல்ன்னு நானும் நண்பனும்தான் வாங்கி நடத்துறோம்.  தேக்காவுல  2013 டிசம்பர் எட்டுல நடந்த பிரச்சினைக்குப் பின்னால பொது இடங்கள்ல தண்ணி அடிக்கவும் கூட்டம் கூடவும் தடை விதிச்சதால வியாபாரம் டல்லடிச்சது... அப்புறம் கொஞ்சம் கொஞ்சமாக சகஜ நிலைக்கு மாறி இப்ப ஓரளவுக்கு ஓடிக்கிட்டுத்தான் இருக்கு.

Image result for ஓவியர் ஷ்யாம்

வருசத்துக்கு ரெண்டு தடவை ஊருக்கு வந்திருவேன்... நண்பன் பார்த்துப்பான்... அவன் வரும்போது நான் பார்த்துப்பேன்.... எனக்கு நண்பனா வாச்சவன் பரக்கத், அறந்தாங்கிக்காரன்... சிங்கப்பூர் போனப்போ பழகினவன்தான்.... ஊயிரைக் கேட்டாக் கூட கொடுத்திருவான்... அப்படிப்பட்ட நட்பு... இந்த பதினைந்து வருசத்துல ரெண்டு குடும்பமும் ஒண்ணா மண்ணாத்தான் இருக்கோம். நான் ஊருக்கு வந்தா குடும்பத்தோட அவனோட வீட்டுல போயி ரெண்டு மூணு நாள் தங்குறதும்... அவன் வந்தா எங்க வீட்ல வந்து தங்குறதும் வாடிக்கை.... அப்படிப்பட்ட பந்தம் எங்களோடது...

அவன் மனைவி பாத்திமா... எனக்கு தங்கை இல்லாத குறையை நீக்கியவள். அண்ணா... அண்ணா... என அப்படி ஒரு அன்பு. ஸ்வாதிகா எங்க வீட்டு மருமகளாக்கும்... இம்தியாஸூக்குத்தான் கட்டணும்... மதம் கிடக்குது மதம் அது யாருக்குண்ணா வேணும்... அது நம்மளை ஒதுக்கும் முன்னால நாம அதை ஒதுக்கிட்டு சம்பந்தியாவோம் என்று சொல்வாள். நான் சிரித்துக் கொள்வேன்... சாதிக்காகவும் மதத்துக்காகவும்தானே நாம இதயங்களைப் பிரிக்கிறது மட்டுமில்லாம இப்பக் கழுத்தறுக்கவும் செய்யிறோம். நான் அவளை விட்டு விலகிய அந்த நவம்பர் 2 கூட சாதியைச் சுமந்த மனிதர்களால்தானே..?

கல்லூரியில்தான் அவள் பழக்கம்... என்னோட வகுப்புத் தோழி அல்ல அவள்... நாங்கள் நடத்திய கையெழுத்துப் பிரதியில் அவளும் ஒரு ஆசிரியை... அப்படித்தான் எங்களுக்குள் பழக்கம்.  எழுத்தின் வாசம் எங்களின் நேச விதையை துளிர்க்கச் செய்தது. என்னோட வகுப்புத்தோழி மல்லிகா எனக்கு லெட்டர் கொடுத்த போது எனக்குள் அவள் விருட்சமாய் வளர்ந்து நிற்க, மல்லிகா தோழியாகிப் போனாள். இப்போது சந்தித்தாலும் 'என்னைய நீ கட்டியிருக்கலாம்' என்று சொல்லிச் சிரிப்பாள். அவள் வாழ்க்கை குடிகாரனுக்கு வாக்கப்பட்டு சிரிப்பை மறந்து தினங்களை தின்று கொண்டிருப்பதாய் அவள் ஊர்க்கார நண்பன் மனசுக்குள் இறக்கிச் சென்றான் ஒரு மாலை நேரத்து  சங்கர் டீக்கடை டீயோடு...

இந்த இருபது வருசத்துல அதாவது 1996க்குப் பிறகு அவளை நான் பார்க்கவே இல்லை... 'என்னைய எங்கிட்டாச்சும் கூட்டிக்கிட்டுப் போ... இங்க இருந்தா எங்கப்பா எங்க மாமாவுக்கு கட்டி வச்சிருவாரு... நீ இல்லாம என்னால வாழ முடியாது... கேட்டா வேலையில சேர்ந்துட்டு கட்டிக்கிறேன்னு சொல்வே.... புரிஞ்சிக்க... காலேஜ் முடிச்சிட்டு எவ்வளவு நாளக்கி கல்யாணம் பண்ணிக்காம தள்ளிப் போட முடியும்...'ன்னு அழுதா. ஒரு வேலையும் இல்லாம அவளைக் கூட்டிக்கிட்டுப் போயி... யோசித்தேன்...

ஒரு முடிவுக்கும் வரமுடியாத ஒரு தினத்தில் இளமை வேகத்தில்  நேரே அவ அப்பாக்கிட்ட போனேன்... விஷயத்தைச் சொன்னேன்... 'அட துத்தேறி நாயே... உஞ்சாதி எங்கே... என் சாதியெங்கேன்னு கத்தினார்.... இப்பவா இருந்தா 'ஆமா சாதி எங்கே..?'ன்னு அவரோட சேர்ந்து தேடியிருப்பேன். ஆனா அன்னைக்கு முடியல... இழுத்துக்கிட்டுப் போனா படிக்கவச்சதுக்கு நல்ல பலன் கிடைச்சிருச்சுன்னு விவசாயியான அப்பாவும்... எங்களோட வாழ்க்கை இனி என்னாகும்ன்னு ரெண்டு தங்கைகளும்... பெத்த வயித்தை தரிசாக்கிட்டியேடான்னு அம்மாவும் சொல்வாங்களேன்னு காதலை தாடியில் தூக்கிட்டேன். 

நாலு நாளைக்கு அப்புறம் அதாங்க நவம்பர் 2ந்தேதி அவளை சிவன் கோவிலுக்கு அருகில் எதார்த்தமாய்ப் பார்த்தேன்... பாதுகாப்போட வந்திருந்தா... வலியோட சிரிச்சா.... 'காதல்ங்கிறது இவ்வளவுதான் இல்லே... எங்கப்பா சாதியைக் கேட்டா... நீ காதலைக் கொடுத்துட்டே இல்லே... அப்புறம் எதுக்கு காதலிச்சே... அவரை எதுத்து என்னைய கூட்டிக்கிட்டு போக உன்னால முடியலையில்ல... மூணு வருசம் உனக்காக வாழ்ந்தேனே... அதெல்லாம் பொய்யாப் போச்சுல்ல... எங்கயாச்சும் போயிருவோம்ன்னு சொன்னேனே... பயந்தவனுக்கு எதுக்கு காதல்... கத்திரிக்காய் எல்லாம்... எங்கப்பா சாதிச்சிட்டாரு... நீ சாகடிச்சிட்டே... சிறகொடிஞ்சது நாந்தானே... என்னோட தவிப்பு உங்களுக்குத் தெரியாது... தெரிஞ்சி நீங்க ரெண்டு பேரும் என்ன பண்ணப் போறீங்க... அடுத்த மாசம் கல்யாணம்.... எங்க மாமாதான் மாப்பிள்ளை... மனசை ஒடச்சிட்டு வாழச் சொல்றாங்க... நீயும் நல்ல பொண்ணாப் பாத்து கட்டிக்க... நல்லாயிரு...'ன்னு சொல்லிட்டு ரெண்டு சொட்டு கண்ணீரை தரையில விட்டுட்டு படக்குன்னு பொயிட்டா... பாவி மனசு பத்திக்கிட்டு எரிஞ்சிச்சு.... ராத்திரியெல்லாம் தூங்காம அழுதேன்... மறுநாளே மகேஷ் என்னைய சென்னைக்கு கூட்டிக்கிட்டு வந்திட்டான்... அப்புறம் அங்க இங்க சுத்தி சிங்கப்பூர்ல செட்டிலானேன். குடும்பம் குழந்தையின்னு வாழ ஆரம்பித்து வாழ்க்கையை கடந்து நாப்பதுகளைத்தாண்டி நிக்கிறேன்.

இந்த இருபது வருசத்துல எத்தனையோ முறை வந்திருக்கிறேன்... அவளைப் பார்த்ததில்லை... எங்கோ கணவனுடன் தூர தேசத்தில் இருக்கிறாள் என்று மட்டும் அறிந்து கொண்டேன். இந்த முறைதான் அவளும் தீபாவளிக்கு அம்மா வீட்டுக்கு வந்திருக்கிறாளாம்... நாப்பதுகளில் நிற்கும் அவள் தோற்றத்தில் நிறைய மாற்றம் இருந்தாலும் அந்த முகம் மட்டும் இன்னும் அப்படியே இருக்காம்... என்னை விட்டு வாழப் பிடிக்கலைன்னு சொன்னவளுக்கு ரெண்டு குழந்தைகளாம்... அவளை மறக்க முடியலைன்னு சொல்லும் எனக்கும் ஒரு பொண்ணு இருக்காளே.... வாழ்க்கை சிலதை மறந்து கிடைப்பதோடு வாழக் கற்றுக் கொடுத்து விடுகிறது.

எங்க கடையில் வேலை பார்க்கும் சூரி அண்ணனுக்கு இப்ப 55 வயசாச்சு.... பத்து வருசத்துக்கு முன்னால நம்ம பக்கத்து புரோட்டாக்காரர்ன்னு மாமனார் சொல்லி கடைக்கு கூட்டிப் போனேன்... எங்க கூடவே இருந்திட்டார்.... ஐந்து பிள்ளைகள்... அவருக்கும் அவர் மனைவிக்கும் ஒத்தே வராதாம்... எப்பவும் சண்டைதானாம்... கல்யாணமாகி ரெண்டு மூணு வருசத்துல ரெண்டு பேருக்கும் இடையில பேச்சு வார்த்தையே இல்லையாம்... கிட்டத்தட்ட பதினைந்து வருசமா பேசிக்கிறது இல்லையாம்... அந்த பதினைந்து வருசத்துல பொறந்தது நாலாம்... அவர் சொல்லும் போது சிரித்தாலும் வாழ்க்கை... எப்படியிருந்தாலும் ஒரு சில விசயங்களை வசமாக்கிக் கொடுக்கத்தான் செய்கிறது.

அவளை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் இன்னும் மனசுக்குள் ரெக்கை கட்டி பறந்து கொண்டிருந்தது... 'என்னங்க ஒரு மாதிரி இருக்கீங்க...? தலை வலிக்கிதா...? காப்பி கொண்டாரவா...?' ஆதரவாய் கேட்டபடி அருகே வந்தமர்ந்தாள் மனைவி... என் உயிர்... என்னை மீட்டெடுத்தவள்... எனக்காக... என்னை கேவலமாகப் பேசினார் என்பதற்காக... இவள்  அண்ணன் கூட பேசி ஆச்சு வருஷம் பத்து.... இந்த வருட தீபாவளிக்குத்தான் கூட்டிப் போய் ரெண்டு பேரையும் சேர்த்து வைக்கணும்ன்னு நினைத்திருக்கிறேன்... இந்த உறவு முறைகள் எல்லாம் மீண்டும் வரவா போகிறது. பொறந்துட்டோம்... நல்லதோ கெட்டதோ அனுசரிச்சிப் போவோமேன்னு வாழக் கத்துக்கிட்டேன்...

அவ என் அத்தை பெண்ணுதான்... மச்சான் என்னைத் திட்டியிருந்தாலும் எல்லாம் மறந்து நானும் ஸ்வாதிகாவும் அவங்க வீடு போவோம்... இவள் மட்டும் ஏனோ வர மறுத்துவிடுவாள். எனக்கானவள்... என்னை மட்டும் சுமக்கும் என் தாய்... அன்று அவள் சுமந்த இந்த உயிரை இப்போது இவள் சுமக்கிறாள் அவளைவிட இன்னும் தீவிரமாய்... மடியில் கிடக்கும் பதின்ம வயது மகள் என் மீசையில் விளையாடுகிறாள்... அவளின் ஞாபகத்துக்கு எண்ணெய் வார்ப்பது போல... அவளும் இப்படித்தான் பல சமயங்களில் அரும்பு மீசையில் குறும்பு செய்திருக்கிறாள். வளர்ந்தாலும் பெண் பிள்ளைகளுக்கு அப்பாவின் மீது அதீத அன்புதான்... வருடமெல்லாம் பார்க்கும் அம்மாவைவிட வருடத்தில் சில மாதம் வரும் அப்பா மீதே அன்பின் சாரல் பூவாய்த் தூவுகிறது என்பது மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டுமே தெரியும்...

நான் மகளையும் மனைவியையும் மாறி மாறிப் பார்த்தேன்... புரிந்து கொண்டவள் மகளை அப்பாவுக்கு தண்ணி எடுத்துக்கிட்டு வாம்மா என்று அனுப்ப, 'அவள் வந்திருக்காளாம்... மகேஷ் சொன்னான்' என்றதும்... 'ம் பார்க்கணுமா...?' என்றாள் என் உள்ளம் புரிந்தவளாக. இவளுக்கு எல்லாம் தெரியும்... என்னை நம்பி வந்தவளிடம் மறைப்பதால் என்ன லாபம்...? எல்லாம் சொன்னேன்... பெண் கேட்டது வரை... அத்தை மகள்தானே எல்லாம் அறிந்துதான் என்னைக் கைபிடித்தாள் என்றாலும் என் வாயால் சொன்னதால் இவளின் உலகம் சுருங்கி எனக்கு மட்டுமானது... இவளோட உலகத்தில் நான் மட்டுமே தஞ்சைக் கோபுரமாய் உயர்ந்து நின்றேன்... இதுவரை எந்தக் குத்தலும் குடைச்சலும் இவளிடம் இருந்து வந்ததில்லை.

'இருபது வருசமாச்சு... பாத்தா பேசுவாளா...? அவளைப் பாக்கப் போயி அவ பாக்கலைன்னா... பேசலைன்னா...  வேண்டாம் விடு... நினைவுகளோட வாழ்ந்துட்டுப் போறேன்... அதான் என்னைச் சுமக்க நீங்க இருக்கீங்களே ... என்னைத் தாலாட்ட வசந்தமாய் நீங்க வந்தாச்சுல்ல...' என்றதும் 'அதெல்லாம் பேசுவா... அவளுக்கும் ஒரு அழகான வாழ்க்கை இருக்கு... நீங்க எங்கிட்ட எல்லாம் சொன்னீங்க... சொல்லலைன்னாலும் எனக்கு தெரிஞ்சதுதான் உங்க வாழ்க்கை... ஆனா அவ சொல்லியிருக்க முடியுமா...? மாமாதான் கட்டிக்கிட்டாருன்னாலும் தெரிஞ்சிருக்குமா... தெரியாதான்னு தெரியலையில்ல... மனசுக்குள்ளயே போட்டு பூட்டி வச்சிருந்தான்னா.... பாவம்... வாழ்க்கை பூராம் வெந்து செத்துக்கிட்டுல்ல இருப்பா... போங்க போய் பார்த்துட்டு வாங்க... இறுதிவரை ரெண்டு பேரும் நினைப்போட வெந்து நோகாமல் நல்ல நட்பாய் தொடரலாமில்லையா...? அவளுக்கு மட்டுமில்லாம உங்க மனசுக்கும் ரிலாக்ஸா இருக்கும்... தீபாவளியையும் வருத்தமில்லா மனசோட சந்தோஷமாகக் கொண்டாடலாம்' என்றாள்.

இந்தாக் கிளம்பிட்டேன்... அவளுக்குப் பிடித்த இளம் பச்சை நிற சட்டையை மனைவி கொடுக்க, அதைத் தவிர்த்து என் மனைவிக்குப் பிடித்த வெளிர் ஊதாப் பனியனை போட்டுக் கொண்டேன்... என்னவள் சிரித்தாள்... 'உண்மையிலேயே  பேசாம விரட்டப்போறா' என்று நக்கலடித்தாள். வாழ்க்கையின் போக்கில் எனக்கு இதுதான் சரியெனப்பட்டது.  இன்னும் அவள் நினைவில் இருக்கோம்ன்னு அவளும் இவளும் நினைத்துவிட்டால்...? 

வண்டி போய்க் கொண்டிருந்தது அவள் வீட்டை நோக்கி... யாரோ அழைக்க 'மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்' என்றது பாக்கெட்டில் கிடந்த செல்போன்.

Image result for தீபாவளி வாழ்த்துக்கள்

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

-'பரிவை' சே.குமார்.

9 எண்ணங்கள்:

KILLERGEE Devakottai சொன்னது…

உண்மையான நேசம் என்றும் உதிர்வதில்லை சிவன் கோவில் நினைவலைகள் எனக்கும் வந்து போனது
இனிய தீபாவளி நல் வாழ்த்துகள்
த.ம.1

Yarlpavanan சொன்னது…

இனிய தீபாவளி வாழ்த்துகள்

தேன்மதுரத்தமிழ் கிரேஸ் சொன்னது…

உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள் 💐🎁

துரை செல்வராஜூ சொன்னது…

அன்பின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!..

நிலாமதி சொன்னது…

உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும்

இனிய தீபாவளி வாழ்த்துகள்

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

தீப ஒளித் திருநாள் வாழ்த்துக்கள்

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

ஆஹா! குமார் என்ன இது கதையை இப்படித் தொங்க விட்டுவிட்டீர்களே!!! முடிவு ஓகேதான் இந்த ஆர்ட் ஃபில்ம் முடிவது போல்...எங்களிடமே அதாவது வாசகர்களிடமே சில அனுமானங்களை விட்டுவிட்டீர்கள். அவர்கள் இருவரும் சந்தித்திருந்தான் இன்னும் ஸ்வாரஸ்யமாக இருந்திருக்குமோ.

என்றாலும் கதையை மிகவும் ரசித்து வாசித்தோம்..

வெங்கட் நாகராஜ் சொன்னது…

முதல் வெர்ஷனை இரண்டாவதாகப் படித்தேன்..... ஏனோ முதல் வெர்ஷனை விட இரண்டாம் வெர்ஷனே எனக்குப் பிடித்தது..... இதில் பல விஷயங்களை வாசகரின் அனுமானத்திற்கு விட்டுவிட்டது அவ்வளவாக ரசிக்க முடியவில்லை.

பாராட்டுகள் குமார்.

r.v.saravanan சொன்னது…

எனக்கு அந்த கதையை விட இந்த கதை பிடித்திருக்கிறது குமார். வார்த்தை கோர்ப்புகள் நல்லாருக்கு