மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வியாழன், 24 டிசம்பர், 2015

மனசு பேசுகிறது : மாற்றம்... முன்னேற்றம்... சகாயம்


மிழ்நாட்டில் இந்த சிம்புவின் பாட்டுப் பிரச்சினை விஸ்வரூபம் எடுக்கும் முன்னர் வெள்ளப் பிரச்சினை விஸ்வரூபமாய் வேர் விட்டு வளர்ந்து நின்றது. அதிலும் குறிப்பாக ஆளுங்கட்சியின் செயல்பாடுகளால் விரக்தியான மக்கள் ஆளும் அரசை வீட்டுக்கு அனுப்பியே தீருவோம் என்றும்... தமிழகத்தின் அடுத்த முதல்வராய் சகாயத்தை ஆக்குவோம் என்றும் தென்கோடியில் இருந்து வடகோடி வரை வரிந்துகட்டிக் கொண்டு முழக்கமிட்டார்கள். ஆனால் இப்போது அது என்னாச்சுன்னு நமக்குத் தெரியுந்தானே..? காற்றில் பறந்த பட்டமாய் காணாமல் போய்விட்டது. இதுதான் தமிழன்... நம்மளோட முழக்கம் எல்லாமே அந்த நேரத்துக்கானதுதான்... பற்ற வைத்த புஸ்வானமாய் சீறி... அடங்கிய புஸ்வானமாய் மாறி... வேறொரு செய்தியின் பின்னாலோ... அல்லது பிரபலத்தின் பின்னாலோ மாங்கு மாங்கென்று ஓட ஆரம்பித்து விடுவோம். அந்த ஓட்டத்தைக் கூட நிறைவாய் ஓடமாட்டோம் ஏனென்றால் நமக்கான அடுத்த செய்தியோ நிகழ்வோ எதிரே புதிதாய் எழுந்து நிற்க, அதன் பின்னே நம் ஓட்டத்தைத் திருப்பி பயணிக்க ஆரம்பித்துவிடுவோம்.

வெள்ளப் பிரச்சினையையும் மறந்தாச்சு... அம்மாவையும் மறந்தாச்சு... இதுதானே அம்மாவுக்குத் தேவை... இதற்காகத்தானே எதைப் பிரச்சினை ஆக்கலாம் என காய்களை நகர்த்துகிறார்கள். நாட்டில் வெள்ளத்திற்குப் பிறகு தீர்க்கப்பட வேண்டிய... அவசியம்  மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் ஆயிரம் கிடக்க, சிம்புவைப் பிடிக்க தனிப்படைகள் அமைப்பதும் அதன் பின்னே ரொம்பத் தீவிரமாய் இயங்குவதும் எதற்காக...? அரசு இந்த பாடல் விவகாரத்தை இவ்வளவு பெரிதாக ஆக்குவது எதற்காக..? யோசித்தால் கிடைக்கும் விடையென்ன... மக்கள் மனதில் ஆளும் அரசு மீதான அவநம்பிக்கை விதை நன்றாக துளிர்விட்டுவிட்டது. அது கிளைகள் விரித்து மரமாகும் முன்னர் முளையிலேயே கிள்ளி எறிந்தால்தான் சுயநலமில்லாத, நம்மையே உறவாய்க் கொண்ட யாருமில்லாத அம்மா இந்த முதல்வர் பதவியை தக்கவைத்து அதில் சுயநலமே இல்லாமல் அமர்ந்து பொதுநலத்தோடு ஆட்சி செய்யலாம் என்பதுதானே.

சிம்பு பாடிய பாடல் குறித்த விவாதங்களும் கட்டுரைகளும் ஏராளமாய் வந்து விட்டன. தவறான பாடல்... தான் வெளியிட வில்லை என்றாலும் அப்படி ஒரு பாடலைப் பாடி இணையத்தில் பதிந்து வைத்திருப்பதிலேயே சிம்புவின் மனம் என்ன என்பதை அறிய முடிகிறது. இன்று சிம்பு கெட்டவனேதான் என்று நாம் அடித்துப் பேசினாலும் இலங்கைத் தமிழர்களுக்காக கல்லூரி மாணவர்கள் போராடியபோது அவர்களோடு அமர்ந்து போராடியவன்தான் இந்த சிம்பு. பலப்பல கெட்ட விஷயங்களில் முன்னோடியாக இருந்தாலும் சில நல்ல விஷயங்களும் செய்தவன்தான்... இந்தப் பாடல் விவகாரத்தை எப்படி முடிக்க வேண்டுமோ அப்படி முடிக்காமல்  இதை இன்னும் பெரிதாக்குவதில் மேலே சொன்னது உள்பட இன்னும் நிறைய அரசியல் காரணங்கள் இருக்கு... அதில் ஒன்றுதான் சகாயம்... ஆம் அவரை முதல்வராக்குவோமென ஒலிக்கும் குரல்களால் எங்கே சகாயம் அவர்கள் நிர்பயா வழக்கில் விடுதலை செய்யப்பட்ட காமக் கொடூரனுக்கு பணம் கொடுத்து அதோடு தையல் மிஷினும் கொடுக்கும் முன்னர் இருந்த நல்ல கெஜ்ரிவாலாக ஆகிவிடுவாரோ...? காசுக்கு மயங்கி... சாரயத்தில் உழன்று... சுயமிழந்த தமிழன் எங்கே டெல்லிக்காரன் போல விழித்துக் கொண்டு விடுவானோ ..? என்றெல்லாம் சிந்தித்ததின் விளையே இந்த பாடல் விவகாரம் பட்டிதொட்டி எல்லாம் இவ்வளவு சீரியஸாக மாறக் காரணம் என்பதையும் நாம் எல்லாரும் அறிவோம்.

இதேபோல்தான் சில மாதங்கள் முன்பு மதுக்கடைகளை மூடச் சொல்லி பிரச்சினைகள் எழுந்து அதற்காக உயிரிழப்புகள் நிகழ்ந்த போது அரசின் மீதான மக்களின் கோபம் எழுச்சியடைந்திருந்த நேரம், அரசையும் அம்மாவையும் காப்பாற்ற கையில் எடுக்கப்பட்டதுதான் இளங்கோவன் பேசிய பேச்சு... அதைப் பெரிதாக்கி... அதைப் பற்றியே பேச வைத்து மதுக்கடைகளை மூடச் சொன்னவர்களின் வாயை மூட வைத்துவிட்டார்கள். இப்போது மதுக்கடைகளை அடைக்க வேண்டும் என்ற கோஷம் எல்லாம் போயே போச்சு... அது குறித்து பாடிய கோவனும் இந்த ஆண்டி வேண்டாம் என்று அந்த அய்யாவைக் கும்பிட்டு அரசியல் பண்ணுகிறார் என்பது வேறு விஷயம். இன்றைய நிலையில் வெள்ள நிவாரணத்தில் அரசின் செயல்பாடு, மக்களுக்கு நிதி கிடைக்குமா என்ற எண்ணங்களை எல்லாம் மழுங்கடிக்கச் செய்து இந்தப் பிரச்சினையை மக்கள் மனதில் இன்னும் ஆழமாய் பதிவேற்றம் செய்கிறார்கள். இப்போது நாமோ நமக்கான தீர்வுகள் என்ன என்பதை எல்லாம் மறந்து சிம்பு பின்னே பயணித்துக் கொண்டிருக்கிறோம். இதைவிடக் கொடுமை மழை வெள்ளத்தில் பால் நூறு ரூபாய் என்று கூப்பாடு போட்டதை மறந்து தனுஷின் தங்கமகனுக்கு பாலாபிஷேகம் பண்ணிக் கொண்டிருக்கிறோம்.  எதையும் நாம் சரிவரச் செய்யாமல் நாட்களை நகர்த்திக் கொண்டிருக்கிறோம். நாங்கள் இப்படித்தான் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்துக் கொண்டிருக்கிறோம்.

இது சிம்புக்கான பதிவு அல்ல... சிம்புக்கான தண்டனை கண்டிப்பாக கிடைக்க வேண்டும். ஆனால் இதற்காக வரிந்து கட்டி களம் இறங்கும் பெண்ணீயவாதிகளில் சிலர் நாகரீகம் என்றால் என்ன விலை என்ற விதத்தில்தான் கட்டுரைகளாய் பொங்குகிறார்கள். அவன் சொன்னதைவிட இவர்கள் கட்டுரையில் இன்னும் ஆழமாய்த்தான் சொல்லியிருக்கிறார்கள். கொற்றவையின் கட்டுரை யாராலும் படிக்கவே முடியாத அளவுக்கு மிகவும் அருவருக்கத்தக்க வகையில் எழுதப்பட்டிருக்கிறது. இவரைப் போன்ற பெண்ணீயவாதிகளை தனது கட்டுரையில் கிழிகிழி என்று கிழித்திருக்கிறார் மனதோடு மட்டும் கௌசல்யா அக்கா. இவரின் கட்டுரையைப் படித்தால் பெண்ணீயவாதிகளின் பிதற்றல்களையும் அதனால் அவர்கள் யாரைத் தரம் தாழ்த்துகிறார்கள் என்பதையும் அறிய முடியும்.

எந்த ஒரு பிரச்சினையிலும் நாம் மாற்றம் வேண்டும் முன்னேற்றம் வேண்டும் என்று பொங்குவோம்... ஆனால் அதில் நிலைத்து நிற்க மாட்டோம். இன்று இந்தப் பிரச்சினை... நாளை அந்தப் பிரச்சினை... நாளை மறுநாள் வேறு ஒரு பிரச்சினை என மாடு நுனிப்புல் மேய்வது போல மேய்ந்து கொண்டே பயணிப்போம். எதிலும் தீர்க்கமான முடிவு எடுக்கும் மனநிலை நம்மிடம் இல்லை என்பதைவிட ஆளும் அரசு நம்மை முடிவெடுக்க விடாதபடி காய்களை நகர்த்திக் கொண்டே இருக்கிறது என்பதே உண்மை. வெள்ளத்தில் விழித்தோம் என்று நினைத்தால் இன்னும் கண்களைத் திறக்காமல்தான் நாம் கத்திக் கொண்டிருக்கிறோம்.

சகாயம் அவர்கள் வரவேண்டும் என்று எல்லாப் பக்கமும் பேசுகிறோம். அவரை விட நல்லவர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள் அவர்களை எல்லாம் நமக்குத் தெரிவதில்லை. சகாயம் அவர்களுடன் பணிபுரிந்தவர்களிடம் கேட்டால் தெரியும் என்று ஜாக்கி சேகர் அண்ணன் எழுதியிருந்தார். உண்மைதான்... எல்லா அலுவலகங்களிலும் லஞ்சமே வாங்காத சகாயங்கள் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள். நமக்குத் தெரிந்த இந்த சகாயம் லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்தச் சொன்னவர்,.. கிரானைட் ஊழலை கிண்டிக் கிழங்கெடுப்பவர்... சுடுகாட்டில் படுத்து உண்மையை கண்டறிந்தவர்... இவரைப் போன்ற இறையன்பு, சைலேந்திர பாபு போன்ற பலரும் ஒன்றாய் இணைந்து தமிழகத்தை வழி நடத்த வேண்டும் என்பதே அனைவரின் ஆசை. அதற்காக நாம் சகாயம்... சகாயம்... என்று அவரை முன்னிறுத்த, ஆட்சி அதிகாரத்தை காத்துக் கொள்ள எல்லாம் செய்யும் அரசியல் அநியாயவாதிகள் அவரை ஏதாவது செய்துவிட்டால்..? யோசிக்க வேண்டிய விஷயம் இது.

இது அரசியல் தீவிரவாதிகள் நிறைந்த இடம்... கடலூருக்குப் போன வெள்ள நிவாரணப் பொருட்களை பறித்த கவுன்சிலர்களை எல்லாம் நாம் முகநூல் வீடியோக்களில் பார்க்கவில்லையா...? அதைப் பார்த்த பக்கத்து மாநிலத்துக்காரன் நம்மை கேலி செய்து சிரிக்கவில்லையா..? அப்படிப்பட்ட அல்லக்கைகளின் முன்னே சகாயம் அவர்கள் எப்படி நான் வழி நடத்த வருகிறேன் என்று சொல்ல முடியும்... அப்படியே அவர் முன்னே வந்தாலும் அவரை வாழவிட்டு விடுவார்களா இவர்கள். எனவே அவர் அவராகவே இருக்கட்டும். மாற்றம் முன்னேற்றம் எல்லாம் நம்மால் கொண்டு வர முடியும். இருபெரும் திராவிடக் கட்சிகளை விடுத்து சாதிக் கட்சிகளை தவிர்த்து நம்மால் நல்லதொரு அரசியல் தலைவர்களை அடையாளம் காட்ட முடியும். அதைச் செய்து காட்டுவோம். பாட்டின் பின்னே நின்று தங்களைக் காத்துக் கொள்ள பகீரத முயற்சிகள் எடுக்கும் அரசுக்குப் பாடை கட்டுவோம். நல்ல விஷயங்களில் நம் எண்ணங்களை திசை திருப்புவோம்... 'பீப்'போடு பயணிக்காமல் புத்துணர்வோடு பயணிப்போம். நாளைய தமிழகம் கண்டிப்பாக மாற்றமும் காணும் முன்னேற்றமும் காணும்.

ஆ... ஊன்னா ஊரை விட்டுப் போறோம் சகிப்புத் தன்மை இல்லை என்று புலம்பும் நடிகர்களை தலைவர்களாக்கிப் பார்க்க ஆசைப்படும் நம் எண்ணத்தை முதலில் மாற்றுவோம்... தலைவா நீ வந்தால்தான் தரங்கெட்ட தமிழத்தை தரமாய் மாற்றுவாய் என நடிக்க வந்த பிற மாநில நடிகர்களை பார்த்து கூவிக்கூவி அழைப்பதை நிறுத்துவோம். முதலில் நடிகனின் கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்யும் நம்மின் சிறந்த பண்பாட்டை(?) களைந்து எறிவோம். வாழ வந்தவர்கள் நம்மை ஆண்டது போதும்... வந்தாரை வாழ மட்டும் வைப்போம்.... நம் வாழ்வை அடமானம் வைக்க வேண்டாம்... நம்மை நாமே ஆள்வோம்... தமிழனாய் வாழ்வோம்.
-'பரிவை' சே.குமார்.

16 எண்ணங்கள்:

நிஷா சொன்னது…

அதென்னமோ நம்ம மக்களுக்கு எத்தனை பட்டாலும் புத்தி மட்டும் வரவே வராதுப்பா!

சட்சட்டென உணர்ச்சி வசப்பட்டு முடிவெடுப்பார்கள் அறிவார்ந்து இதெல்லாம் ஏன் எதுக்கு என சிந்திக்கவே மாட்டார்கள். இளங்கோவன் பேச்சிலிருந்து சிம்பு, சகாயம் என ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் பலிகடாக்கள் தான்.

அந்த நேரத்து உணர்வு வேகம் தணிந்தால் போதும் எனும் நிலை தான். உணராமல் நாமே பிள்ளையை கிள்ளி விடுகின்றோம் என படித்தவர்களே யோசிப்பதில்லையே!

அரசுப்பணி செய்பவர் அரசியலில் நிற்க முடியாது. அப்படி நிற்பதெனில் பணிவிலகி இருவருடங்கள் பொறுத்திருந்தே அரசியலில் ஈடுபடலாம் எனும் சட்ட மூலம் அறியாதவர்களா இவர்கள்?

சகாயம் எனும் தனி மனிதனை தூக்கி தலையில் வைத்தாடுமுன், நாட்டை ஆள்வது என்பது தனி மனிதனால் ஆகக்கூடியது அல்ல என்பதையும் கூட்டு முயற்சியால் தான் முடியும் என்பதையும் அறியாமலா இருக்கின்றோம்?

இவர்களின் உணர்ச்சிவேகத்துக்கு சகாயத்தின் உயிருக்கும் உடமைக்கும் ஆபத்துக்கள் ஏற்படாமல் இருக்க பிரார்த்திப்போம். நல்லவர்கள் நல்லவர்களாயிருக்க இந்த சமூகம் விடுவதில்லை போலும்.

நிஷா சொன்னது…

கொற்றவை போன்றோர் பெண்ணிய வாதிகளா என வெளி நாட்டு சுதந்திரத்தில் வளர்ந்த வளரும் என்னாலேயே ஒப்புக்கொள்ள முடியவில்லையே....? ஆண்களை எதிர்ப்பதா பெண்ணியம்? அப்படித்தான் இன்றைய பெண்ணிய வாதிகள் பலரும் நினைத்து கொண்டிருக்கின்றார்கள்.

நிற்க இப்போது இந்த கொற்றவை போன்றோர் யாரை எதிர்க்கின்றார்கள்? சிம்புவையா? சிம்புவை பெற்றதுக்காக அவன் தாயையா? அவனுடன் பிறந்ததனால் அவன் தங்கையையா?

அவன் வளர்ப்பு சூழல் அப்படி... அவன் எழுதி விட்டான். அவனை விட மேம்பட்டு.. அவனை விட வக்கிரமாய்... அவனை விட அதீத உணர்வோடு அனைத்து பெண்களையும் அவமானப்படுத்திய இந்த கொற்றவை போன்றோரை என்ன செய்ய வேண்டும்? அவன் பத்து தட்வை சொன்ன ஆபாசம்... பத்தாயிரம் தடவை இவர்களால் சொல்லப்பட்டு விட்டது. ஆமாம் நாமெல்லாம் இந்த மாதிரி வார்த்தைகளே காதில் விழாத பரிசுத்த உலகில் வசிக்கின்றோம் பாருங்கள்.இவர்கள் கறை கண்டு துடைக்கின்றோம் என அழுக்கு இரத்தத்தால் துடைக்கின்றார்கள். சிம்பு கூட பரவாயில்லை எனும் நிலையை தோற்று வித்து விட்டார்களே?

இவர்களெல்லாம் பெண்களா என கேட்க தோன்றுகின்றது. சிம்புவை எதிர்க்கின்றேன் என சொல்லி அனைத்து பெண்கள் மீதும் சேற்றை வாரி வீசிய கொற்றவை போன்றோரை முதலில் எதிர்க்க வேண்டும். ஒன்றுமே இல்லாது, கண்டும் காணாது போக வேண்டிய விடயத்தினை தூக்கி தலையில் வைத்துக்கொண்டாடிகொண்டிருக்கின்றார்கள்.

நம் சக பெண் ஒருத்தியை கதறக்கதற கற்பழித்து வேண்டாம் வேண்டாம் என கெஞ்சியும் கேளாது இரும்பால் அடித்து சாகும் வரை துன்புறுத்தியவனுக்கு விடுதலையாம், நஷ்ட ஈடாம், அதை தட்டிக்கேட்க யாருமே இல்லை இங்கே? அதற்கும் நள்ளிரவில் ஏன் வெளியே வந்தாய்,, தியேட்டருக்கு ஏன் போனாய்? பாதி உடை தெரிய ஆடை ஏன் அணிந்தாய் என பெண்ணையே குற்றம் சாட்டுவோரை எதிர்க்க துணிவில்லை? வேண்டாததை தூக்கி தலையில் வைத்தாடுகின்றார்கள்.

கண்டும் காணாது கண் மூடி போக வேண்டிய ஒரு விடயத்தை தூக்கி பிடித்து கொண்டு இவர்கள் தான் பெண்களின் பாதுகாவலர்கள் போல் கிளம்பி விட்டார்கள்.

நிஷா சொன்னது…

இதை விட ரெம்ப கேவலம் சிம்புவின் தாயாரின் போட்டி. தப்பு செய்த மகனை தண்டிக்காமல் மகனுக்கு சப்போர்ட் பண்ணிக்கொண்டு வரும் இவரும் பெண் தானா என கேட்க தோணுது. ஊரை விட்டு போறதுன்னால் சீக்கிரம் போங்கப்பா!

ஸ்ரீராம். சொன்னது…

நல்ல பதிவு.

தம +1

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

நம்மை நாமே ஆள்வோம்... தமிழனாய் வாழ்வோம்.
தம+1

'பரிவை' சே.குமார் சொன்னது…

அக்கா

தங்களின் கருத்தில் அனல் பறக்கிறது...

சிம்பு விஷயம் அன்றாடம் கிராமங்களில் நடக்கும் சண்டையிலோ அல்லது வயதானவர்கள் பேசும்போதோ சரளமாக வருவதுதான். இதை அரசியலுக்காக தூக்கிப் பிடிக்கப் போக, கொற்றவை போன்ற பெண் தீவிரவாதிகள் (கேவலத்தின் அடையாளங்கள்) என்ன எழுதுகிறோம் என்பதை அறிந்தும் இப்படி எழுதுவது சமூகத்தில் தங்கள் குரலால் எழுத்தால் எல்லோரும் எப்போதும் கட்டுண்டு கிடப்பார்கள்... நாம் எதை எழுதினாலும் ஆஹா... ஓஹோ என்று தூக்கி வைத்துக் கொண்டாடுவார்கள் என்ற மமதை நிறைந்தவர்கள்.... அவரின் எழுத்து ஆபாசத்தின் உச்சம்... அவருக்கு 5 அல்ல 10 தனிப்படை வைத்து தேடிப்பிடித்து சிறையில் அடைக்கலாம்....

கௌசல்யா அக்கா மிகச் சிறப்பாக எழுதியிருப்பார்... அவரின் கூற்று அப்படியே உண்மை.

சகாயம் விஷயத்தில் அவர் அரசு ஊழியர்... அவர் உடனே எல்லாம் அரசியலுக்கு வரமுடியாது. அவரை முன்னிறுத்தி அவருக்கு பிரச்சினைகள் வரவைப்பதைவிட இப்ப இருக்கும் மற்ற கட்சிகளில் வைகோ, விஜயகாந்த் உள்ளிட்ட சில தலைவர்கள் இணைந்து இந்த அராஜக கட்சிகளுக்கு பாடை கட்டலாம். அவர்கள் நல்லவர்களா என்ற கேள்வி எழலாம்... இவர்களைவிட அவர்கள் மேல்... மக்களுக்காக... மக்கள் பணிக்காக கொஞ்சமேனும் இறங்கி வேலை செய்பவர்கள். ஆனால் குறிப்பாக சாதிக்கட்சிகளை இணைத்துக் கொண்டு களமிறங்கினார்கள் என்றால் அதுவும் கூவம்தான்.

சிம்புவின் அம்மா, அப்பா பேட்டியெல்லாம் அரசியல்வாதிகளைப் போல் நடிப்புத்தான்... சகிப்புத்தன்மை இல்லாத நாட்டில் இருக்கப் பிடிக்கவில்லை என்றால் மூட்டையைக் கட்ட வேண்டியதுதானே... அதென்ன இந்த நடிகனுக எல்லாம் மீடியாவுல வந்து சொல்றது... இதே ஒரு குப்பனோ சுப்பனோ இந்த வார்த்தையைச் சொன்னால் அரசு சும்மா விடுமா..? இல்லை பக்கத்து வீட்டுக்காரன் கூட போடான்னு அடித்து விரட்டுவான்.

ஐஸ்வர்யா தனுஷ் திருமணத்தின் போது லதா ரஜினிகாந்திடம் சிம்பு பேசிய பேச்சு கேவலத்தின் உச்சம். அது இன்னும் யூடிப்பில் இருக்கு.... அவர் அதை பதிவேற்றம் பண்ணலைன்னு சொல்லுவார். இதில் சூப்பர்ஸ்டார் கூட பின்னணியில் இருக்கலாம். முன்னால் செய்த வினை. சிம்புவின் வளர்ப்பு அப்படி என்றாலும் எதைச் செய்யணும் எதைச் செய்யக்கூடாதுங்கிற அறிவு கூட இல்லாமலா போகும். அனிருத் சொல்லவே வேண்டாம்... காவாலிப்பய... அவனுக்கு இதுதான் பொழப்பு... ஆனால் அவனைப் பற்றி செய்தி இல்லை... காரணம் லதாவின் அண்ணன் மகன். நீயும் நானும் ஒண்ணுங்கிற அரசியல்.

எது எப்படியோ இந்த விவகாரத்தால் நாம் வெள்ளத்தையும் மறந்தாச்சு... வெள்ள நிவாரணத்தையும் மறந்தாச்சு.... இனி கொடுக்கும் காசுக்கு ஓட்டுப்போட்டுவிட்டு மீண்டும் குய்யோ முறையோன்னு அப்பப்ப கத்திக்கிட்டே வாழ்க்கையை ஓட்டிடுவோம்.

நீண்ட கருத்து இட்டு என்னையும் நீளமாய் கருத்திட வைத்ததற்கு நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அக்கா....
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
தங்கள் கருத்துக்கான பதில் மொத்தமாய் உங்களதும் மூன்றாவது கருத்தில்...

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அக்கா....
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
தங்கள் கருத்துக்கான பதில் மொத்தமாய் உங்களதும் மூன்றாவது கருத்தில்...

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அண்ணா....
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அண்ணா....
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று சொன்னது…

நடுநிலையுடன் எழுதப் பட்ட பதிவு. ஐந்து தனிப்படை அமைத்து தேடுவது தேவையற்றது அரசாங்கத்துக்கு வீண் செலவு . இவர்களை வெள்ளம் பாதிக்கப் பகுதிகளில் மறு சீரமைப்பு பணிகளுக்கு அனுப்பினால் நன்மை உண்டு. எங்கே போகப் போகிறார். வரும்போது கைது செய்து கொள்ளலாம். கொற்றவையின் பதிவைப் படித்தேன். சகிக்க முடியவில்லை. ஆரம்பத்தில் சிம்புவின் மீது இருந்த கோபமும் இது போன்ற நிகழ்வுகளால் குறைந்து போக வாய்ப்பு உண்டு. சிம்புவின் தாயின் பேச்சை அப்படியே விட்டு விடுவது நல்லது. இவேரல்லாம் தாய்தானா என்று கேட்பது சரியல்ல. எப்படிப்பட்ட கொடுமைக்காரனாக இருந்தாலும் மகனின் பக்கம் உள்ள நியாயம் மட்டுமே கண்ணுக்கு தெரியும் அதுதான் தாய் மனது . டெல்லியில் நினைத்தே பார்க்க முடியாத பாலியல் வன்முறை வழக்கில் விடுதலை செய்யப்பட சிறுவனை எதிர் நோக்கி அவரது தாய் காத்திருப்பதாக செய்தி படித்தேன்.அதுதானே தாய்மை.

பேய்குணம் கொண்டே பிள்ளை
பெருந்துயர் தந்திட் டாலும்
சேய்குணம் சிறிதும் இன்றி
சிறுமையை அளித்திட் டாலும்
நாய்குணம் மனதில் கொண்டே
நல்லன மறைந்திட்டாலும்
தாய்குணம் என்றும் மகனை
தாங்கிடத் தானே செய்யும்.?

சிம்பு திருந்தாவிட்டாலும் வருந்துவதற்காவது வாய்ப்பு கொடுப்போம்

KILLERGEE Devakottai சொன்னது…

வணக்கம் நண்பரே 2 தினங்கள் இணையப்பக்கம் வரமுடியாத சூழல் இப்பொழுதுதான் கவனித்தேன்

சொம்புவை பிடிக்க தனிப்படை உண்மையிலேயே பெருமைபடுவார்கள் சொம்பு ரசிகர்கள்
இவனை பிடிக்க தனிப்படை என்று சொல்வது வெட்கமாக இல்லை எல்லாம் அரசியல் விளையாட்டுதான் வேறென்ன...

நேற்று 2 பேரிடம் பெருத்த வாக்கு வாதம் என்னை விட 4 மடங்கு படித்த அறிவாளிகள் என்னை விட 3 மடங்கு சம்பளம் பெறும் திறமைசாலிகளும்கூட இருந்தென்ன சொம்புவுக்கு சொம்பு தூக்குகின்றார்கள் அவர்களுடன் சேர்ந்து கொண்டு 2 அல்லக்கைகளும் நான் மட்டுமே பேசுகிறேன் வடிவேல் பாணியில் சொன்னால் முடியலை எனது பார்வையில் அவர்கள் கிறுக்கன்ஸ் என்றால் அவர்கள் பார்வையில் நானும் கிறுக்கனாகத்தான் இருக்க வேண்டும் கடைசிவரை எனது கேள்விகளுக்கு எவனுமே பதில் சொல்லவில்லை மனம் வெறுத்து எனது கோபம் உச்சிக்கு போய் விட்டது அந்த நேரம் ஊரிலிருந்து மிஸ்ட்கால் வர அதில் மூழ்கி பிறகு மீண்டேன் என்ன செய்வது.

சகாயம் அவர் நல்ல மனிதர் என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயமே... அதேநேரம் நானும் அவரின் உயிரைப்பற்றி கவலைப்படுகிறேன் அவரை சிக்கலில் மாட்டி விடாதவாறு மக்கள் விளிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் இல்லையே முழுமூச்சுடன் அவரை அரசியலில் புகுத்தி வெற்றி பெற வைக்க வேண்டும் ஆனால் நமது மக்குகளை நம்ப முடியாதே இதுதான் எனது கருத்து.
வரும் தேர்தலில் மக்கள் சிந்தித்து வாக்களிக்கவில்லை என்றால் இனி நமது தமிழகம் முன்னேறுவது கடினமான செயலே..
தமிழன் என்று வாய் கிழிய பேசுவதை விட நாம் அனைவரும் செயலில் நிரூபிக்க வேண்டும்
தமிழ் மணம் 6

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

எதற்காக சிம்பு அது இது என்று...நமக்கு அதான் தமிழ அரசிற்கும் மக்களுக்கும் எத்தனையோ முக்கியமானத் திட்டப்பணிகள் தொலை நோக்குத் திட்டங்கள் என்றிருக்க அதில் எல்லாம் மக்களும் அரசும் முனைந்தார்கள் என்றால் வெட்டிப் பேச்சுகள் இல்லாமல் நல்ல திட்டங்கள் தீட்டி தமிழகத்தை மலரச் செய்யலாம்...யார் கையிலோ...

நல்ல பதிவு...

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஐயா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க துளசி சார்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.