மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வெள்ளி, 11 செப்டம்பர், 2015

நாலு போலீசுல கான்ஸ்டபிள்தான் டாப்பு

டந்த புதனன்று வயிறு வலியின் காரணமாக அலுவலகத்துக்கு விடுப்புப் போட்டுவிட்டு படுத்திருந்தேன். ஊரில் ஒரு சிறிய பிரச்சினை, அது குறித்தான சர்ச்சைகள்... பேச்சு வார்த்தைகள் என மதியம் வரை போனிலேயே கரைந்தது. வயிறு வலி மட்டும் கரையாமல் இருந்தது.  மதியம் சாப்பாட்டுக்குப் பின்னர் படுத்தாலும் உறக்கம் வரவில்லை. சரி எதாவது படம் பார்க்கலாம் என ஆன்லைனில் தேடினேன். சரி நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும்ன்னு படம் பேரு இருக்கே.... கொஞ்சம் சிரிக்கலாம்... வயிறுவலியோட மனவலியும் போகும்ன்னு நினைச்சு பார்க்க ஆரம்பித்தேன்.

படத்தோட ஆரம்பத்துல காட்டின தொடர்ந்து ஜனாதிபதி அவார்டு வாங்கும் கிராமத்தைப் பார்த்ததும் ஆஹா ஓவராக் காட்டுறாங்களேன்னு நினைச்சிக்கிட்டே பார்க்க ஆரம்பித்தேன். பிரசிடெண்டே இறங்கி கால்வாய் சுத்தப்படுத்துவது, கடையில் பால்காரர் பால் ஊற்றிவிட்டு கல்லாவில் பணம் எடுத்துக் கொண்டு போவது, பத்துப் பவுனு நகையை ரோட்டுல போட்டு ரெண்டு நாளாக் கிடக்குது தொலச்சவங்க வந்து எடுத்துக்கிட்டுப் போவாங்கன்னு சொல்றதுன்னு வித்தியாசமாப் போனப்பவே சுதாரிச்சிருக்கணும்... வேற வலி தூக்கமும் வரலை... அறையில் பேச்சுத் துணைக்கும் ஆளில்லை... இருந்தாலும் ஆளாளுக்கு கணிப்பொறியே தெய்வம்ன்னுதான் இருப்போம். அது வேற விஷயம்... இருந்தாலும் ஓரிரு வார்த்தைகள் பேசலாமே... இன்னைக்கு தனியாத்தானே இருக்கோம் தொடர்ந்து பார்ப்போம்ன்னு தொடர ஆரம்பித்தேன்.


நம்ம கலைஞர் பேரன்தான் நாயகன்... ஆரு... தம்பி உதயநிதியான்னு கேக்குறீகளா? இல்லைங்க இது அருள்நிதி... இது வம்சத்துல வந்துச்சே அந்தத் தம்பி... அதுல கூட அப்புடி இப்புடி இருந்துச்சு... இதுல ஆளு நல்லாத் தெரிஞ்சிச்சு... சரி கொஞ்சம் நல்லாயிருக்கும் போலன்னு நெனச்சா... நாலு போலீசுல எஸ்.ஐ, ஏட்டு ரெண்டு பேரும் இருக்கும் போது தம்பிதான் எல்லா முடிவும் எடுக்குது.  நம்ம ஊருப்பக்கமெல்லாம் கான்ஸ்டபிள் கொஞ்சம் எந்திரிச்சிப் பேசினாலே 'யோவ் இருய்யா... நாங்க பேசிக்கிட்டு இருக்கோம்ல்ல' என்று அதட்டும் எஸ்.ஐயைத்தானே பார்த்திருக்கிறோம். இங்க எஸ்.ஐ. எதுவுமே சொல்றதில்லை. எப்படி இப்படியெல்லாம் படமெடுக்கிறாங்கன்னு தெரியலையேன்னு நினைக்காதீங்க... எல்லாம் நாம பாக்குறோங்கிற தைரியத்துலதான் எடுக்குறாங்க.

நாயகன் அருள்நிதிக்கு வீடு இருக்கு அம்மா அப்பா இல்லை.... எஸ்.ஐக்கும் இன்னொரு கான்ஸ்டபிளுக்கும் வீடே இல்லை... சிங்கம்புலிக்கு மட்டும் குடும்பம் குட்டி இருக்கு. நாயகி டீச்சராம்... இவரு தேடிப் போயி லவ் பண்றாராம்... பாவம்  நாயகி ரம்யா நம்பீசன் கனவு காண்கிறார்... பாட்டுப் பாடுகிறார். அதிகம் வேலை இல்லை. சிங்கம்புலிதான் நல்லா இருந்த ஊரைக் கெடுக்க திட்டம் தீட்டுகிறார். எதற்காக என்றால் இராமநாதபுரத்துக்கு நாலு பேரையும் மாற்றப் போறோம் என்று மேலதிகாரி சொல்லியதற்காக... 

படத்தில் ரசிக்க வைத்த இடம் என்றால் சிங்கப்பூர் மாப்பிள்ளை முதல் காட்சியில் ஊருக்குள் வரும்போது பார்த்து மலைப்பதும் பின்னர் இறுதிக் காட்சிகளில் மனைவியுடன் வந்து படாதபாடுபட்டுப் போவதும்தான். மற்றபடி சின்னச் சின்ன பாத்திரங்களில் எட்டிப் பார்த்த ஒரு ஆளை வில்லனாக்கி அவன் திருட ஆளெடுப்பதும் அவர்களை திருட அனுப்பும் போது ஏதோ இசை ராஜா போல் கையை ஆட்டி ஆட்டி சைகை செய்வதும்... தான் திருடன் என்று தெரிந்து தன்னை அன்போடு பார்த்த ஊருக்குள் திருடுவதும்... என ஸ்ஸ்ஸ்... அப்பா முடியலை சாமி.


சிங்கம்புலி செய்த காரியங்களால் ஊருக்குள் அடிதடி சண்டை, திருட்டு, வெட்டுக் குத்தெல்லாம் வருது. அப்பத்தான் ஜனாதிபதி விருதுக்காக அந்த ஊரைப் பார்வையிட்டு மக்களிடம் பேச கலெக்டர் வருகிறார்.  சரி... சரி... இருங்க நீங்க கேக்குறது தெரியுது...  என்னாச்சு...? படத்தில் அந்த ஊர் மீண்டும் நல்ல நிலைக்கு வந்து ஜனாதிபதி அவார்ட் வாங்குச்சான்னுதானே?... அடப்போங்கப்பா கலெக்டரையே கடத்திடுறானுங்க... ராணுவக் கட்டுப்பாட்டுக்குள் ஊர் வந்திருது... அதுக்கப்புறம் எப்படி முடிக்கிறதுன்னு தெரியாம நாயகன் வாயால ஒரு வசனத்தைச் சொல்ல வச்சி முடிச்சிட்டானுங்க...

பொற்பந்தல்ன்னு பொய்யான கிராமத்தைக் காட்டின இயக்குநர், இராமநாதபுரம் என்றாலே அடிதடி, வெட்டுக்குத்து, 144 தடை உத்தரவு எனச் சொல்வதும்... இராமநாதபுரம் பேருந்துக்குள் அடிதடி பற்றி பேசுவதும்... படிக்காத மனிதர்கள் அடித்துப் பிடித்து ஏறுவதும்... என காட்சிப்படுத்தியிருக்கிறார். அதை கடைசியில் இராமநாதபுரத்தில் இருந்து சிலரை பொற்பந்தலுக்கு மாற்றுவதாக கேள்விப்பட்ட எஸ்.ஐ என்னய்யா உங்களை பொற்பந்தலுக்கு மாத்திட்டாங்கன்னு வருத்தப்படுறாருங்கிற மாதிரி காட்சி வைத்து சரி பண்ணியிருக்காரு. இயக்குநர் இராமநாதபுரத்துக்காரராய் இருப்பார் போல.

சரி விடுங்க... இந்த மாதிரி படமெல்லாம் பார்க்க நேரம் கிடைக்குது பாருங்க... சண்டி வீரன் படத்துல தண்ணிப் பிரச்சினை பேசி, காதல், அழகிய பாடல்கள்ன்னு கொண்டு போன சற்குணம் லால் போன்ற நல்ல நடிகரை கடைசியில் காமெடியன் ஆக்கி தண்ணி ஓடுற வாய்க்காலோட அழகை ரசிச்சிக்கிட்டே போகும் போது டக்குன்னு வாகமடை போட்டு அடச்சி எல்லாரையும் என்னடா இந்தாளு இப்படி காமெடி பண்ணிட்டாருன்னு சொல்ல வைக்கலையா... அது மாதிரித்தான் இதுவும்... அதுல இயக்குநர் கடைசியில சிரிக்க வச்சாரு... இதுல இயக்குநர் கதையே இல்லாட்டியும் அங்க அங்க சிரிக்க வைக்கிறாரு...

-:000:-

-:பாரதிபாரதிபாரதிபாரதிபாரதிபாரதிபாரதிபாரதி:-

இன்று நம் நேசக் கவிஞன்... தேசக் கவிஞன் பாரதியின் நினைவுநாள்... 'சாதிகள் இல்லையடி பாப்பா' என்று சொன்ன நம் தமிழன் பாரதியை நினைவில் நிறுத்துவோம்.

"ஏழை யென்றும் அடிமையென்றும் 
எவனும் இல்லை ஜாதியில், 
இழிவு கொண்ட மனித ரென்பது 
இந்தி யாவில் இல்லையே 
வாழி கல்வி செல்வம் எய்தி 
மனம கிழ்ந்து கூடியே 
மனிதர் யாரும் ஒருநிகர் கர்ச 
மானமாக வாழ்வமே!"

என்று சொன்னவன் பாரதி.... இன்னைக்கு அப்படியிருக்கான்னு கேக்கக்கூடாது... இன்னைக்கு அவனையே சாதிக்குள்ள் கொண்டு வந்துட்டோமுல்ல....சரி விடுங்க... எட்டுத் திக்கும் தமிழ் என கொட்டும் முரசடித்த நம் மீசைக் கவிஞனை என்றும் நினைப்போம்... 



-'பரிவை' சே.குமார்.

18 எண்ணங்கள்:

KILLERGEE Devakottai சொன்னது…

விமர்சனத்தை ரசித்தேன் காணொளியை மிகவும் ரசித்தேன் காரணம் நான் அடிக்கடி கேட்கும் பாடல் அருமை
தமிழ் மணம் 1

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அடடா...! தலைவலியும் சேர்ந்து விட்டதா...?

காணொளி : சிறப்பான பாடல்...

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

இப்படியெல்லாம் படமெடுக்கிறாங்கன்னு தெரியலையேன்னு நினைக்காதீங்க... எல்லாம் நாம பாக்குறோங்கிற தைரியத்துலதான் எடுக்குறாங்க.//

அப்படிப் போகுங்க அருவாளை!! அஹஹஹ் மக்கள்தான் காரணம் நல்ல சினிமாவை ரசிக்க ஆரம்பித்தால் மலையாள உலகு போல் தமிழ் உலகிலும் நல்ல படங்கள் வரும்..,,

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க துளசி சார்...
உண்மைதான்... நாமதான் கெடுக்கிறோம்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

பாரதியின் நினைவினைப் போற்றுவோம்
நன்றி நண்பரே
தம +1

Yarlpavanan சொன்னது…

நன்றாக அலசி உள்ளீர்கள்
சிறந்த திறனாய்வுப் பார்வை
தொடருங்கள்

நிஷா சொன்னது…

பட விமர்சனம் நல்லா இருக்கு குமார். பட விமர்சனத்தினை விட கடைசியில் போட்ட பாடல் தான் என்மனசோடு பேசியது!

பாரதியார் நினைவுக்கான பாடல் மிக சோகமாய் இருக்கின்றது. ஆனால் அருமையான் வரிகள். இந்த பாட்டையே உங்கள் பதிவில் தான் அறிந்தேன் என சொல்லணும்.

நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே நீங்களெல்லாம்
சொப்பனந்தானோ? பல தோற்ற மயக்கங்களோ?

போனதெல்லாம் கனவினைப்போல்
புதைந்தழிந்தே போனதனால்
நானும் ஓர் கனவோ? இந்த ஞாலமும் பொய்தானோ?

காலமென்றே ஒரு நினைவும் காட்சியென்றே பல நினைவும்
கோலமும் பொய்களோ? அங்கு குணங்களும் பொய்களோ?

எத்தனை எத்தனை அருமையான வரிகள். ஹரீஷ் ராகவேந்திராவின் குரலில் இளையராஜா இசையில் பாடலை கேட்கும் போதும் காட்சிகளை காணும் போது

கவிதை எழுதுபவன் கவியன்று. கவிதையே வாழ்க்கையாக உடையோன்,
வாழ்க்கையே கவிதையாகச் செய்தோன், அவனே கவி – பாரதியார் சொன்னதாய் படித்தது தான் நினைசுக்கு வந்தது!





வெங்கட் நாகராஜ் சொன்னது…

நல்ல விமர்சனம்.

//இப்படியெல்லாம் படமெடுக்கிறாங்கன்னு தெரியலையேன்னு நினைக்காதீங்க... எல்லாம் நாம பாக்குறோங்கிற தைரியத்துலதான் எடுக்குறாங்க.// அதே தான்!

பாரதி பாடல் - நானும் மிகவும் ரசிக்கும் பாடல். மீண்டுமொரு முறை கேட்டு ரசித்தேன்.

துரை செல்வராஜூ சொன்னது…

நல்லவேளை.. நான் தப்பித்தேன்..
(இவிங்க படத்தையெல்லாம் தான் பார்க்கிறதே இல்லையே!..)

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஐயா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க கவிஞரே...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அக்கா...
தங்கள் கருத்துக் கண்டு மகிழ்ச்சி.
இது பாரதியின் பாடல்... பாரதி படத்தில் வரும் பாடல்...
அருமையான வரிகள்...

//கவிதை எழுதுபவன் கவியன்று. கவிதையே வாழ்க்கையாக உடையோன்,
வாழ்க்கையே கவிதையாகச் செய்தோன், அவனே கவி – பாரதியார் சொன்னதாய் படித்தது தான் நினைசுக்கு வந்தது!//

உண்மைதான் அக்கா... அவன் மகாகவி...

கருத்துக்கும் வருகைக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் ரசனைக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஐயா...
அப்ப நீங்க தப்பிச்சிட்டீங்க....
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

மகிழ்நிறை சொன்னது…

அப்போ அந்த படத்தின் திசைக்கே ஒரு கும்பிடு:)))) பாவம் தான் அண்ணா நீங்க!

ஸ்ரீராம். சொன்னது…

இப்படியொரு படம் வந்ததா என்ன? இவர்தானே டிமேண்டி காலனியிலும் நடித்தவர்?