மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

புதன், 25 ஜூன், 2014

மனசின் பக்கம் : கரகாட்டமும் கனவுகளும்

வியரசு கண்ணதாசனுக்கும் மெல்லிசை மன்னர் விஸ்வநாதனுக்கும் நேற்று பிறந்தநாள். வலைப்பக்கத்திலும் முகநூலிலும் நல்ல பகிர்வுகளைக் காண முடிந்தது. காலங்கள் கடந்தும் வாழக்கூடிய அற்புதமான பாடல்களை வாழ்வியல் தத்துவங்களுடன் கொடுத்துச் சென்றிருக்கிறார் கவியரசு. அவரது ஒவ்வொரு பாடலுக்கும் பின்னே அவரது வாழ்க்கையின் பிரதிபலிப்பு இருக்கும். அவரும் மெல்லிசை மன்னரும் கொடுத்த பாடல்கள் எத்தனை எத்தனை... அத்தையும் தேன் சொட்டும் பாடல்கள்... நான் நிரந்தரமானவன் என்று சொல்லி தனது எழுத்தை என்றென்றும் எல்லோரையும் நேசிக்க வைத்துச் சென்ற கவியரசுக்கும் நல்ல பாடல்களை அழகிய இசையால் ரசிக்க வைத்த மெல்லிசை மன்னருக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்ல வயதில்லை.... இருவரையும் வணங்குகிறேன்.

யக்குநர் இராம நாராயணன் காரைக்குடியில் இருந்து வந்து நூற்றுக்கும் மேற்பட்ட படங்களை இயக்கிய சாதனையாளர். மயில், குரங்கு, யானை, பாம்பு என நடிக்க வைத்த கலைஞர் அவர்.  எத்தனையோ கலைஞர்களை உருவாக்கியவர். விஜயகாந்தை தமிழ் சினிமாவில் நிலைநிறுத்திய ஒரு சிலரில் இவர் முக்கியமானவர். இவரது இழப்பு திரையுலகத்திற்கு ஒரு பேரிழப்புத்தான். இவரது ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.

ங்கள் ஊரில் இந்த வருட மாரியம்மன் கோயில் செவ்வாய் புதிய வரவு செலவாளரின் மேற்பார்வையில் பல பிரச்சினைகளைத் தாங்கி பெரியளவில் வெடிக்காமல் சுமூகமாக முடிந்ததில் அனைவருக்கும் நிம்மதி. கோயில் கணக்கு வைத்திருப்பவர்தான் ஊர் தலைவர் என்பது போல் புதிய நிர்வாகி செயல்பட்டது அனைவரையும் முகம் சுளிக்க வைத்தது. எல்லா முடிவும் தன்னிச்சையாக எடுத்ததால் அனைத்திலும் குளறுபடியே மிஞ்சியது. இனி வரும் காலங்களில் அனைவரையும் கலந்து ஆலோசித்து முடிவுகள் எடுத்து நல்ல நிர்வாகி என பெயரெடுப்பார் என்று நம்புகிறோம். சுற்றமும் நட்பும் அவரை சுயமாய் சிந்திக்க விட்டால் அவரும் நல்ல மனிதர்தான்.

ழகர் வைகையாற்றில் எழுந்தருளும் வைபவத்தை இந்தளவுக்கு இதுவரை பார்த்தது இல்லை. அழகர் மலையான் மதுரைக்கு கிளம்பும் அன்று அழகர் மலை சென்று கோவிலுக்குள் சென்று கிளம்புவதை அருகே இருந்து பார்த்தோம். மறுநாள் எதிர்சேவைக்கு முன்னர் தல்லாகுளத்தில் அவரது பல்லக்கை அருகே நின்று தொட்டு வணங்கி ரசித்தோம். என் தோள் மீது அமர்ந்த விஷால் நம்ம சாமி... நம்ம சாமி என செல்போனில் வீடியோ எடுத்தான். ஆற்றில் இறங்கி அன்று மாலை மீண்டும் அண்ணாநகரில் மக்கள் வெள்ளத்தில் நீந்தி அழகு மலையானைத் தரிசித்தோம். இந்த முறை ஊருக்குச் சென்றதற்கு அழகு மலையானின் தரிசனம் கிடைத்தது பெரும் பாக்கியம்.

திருவிழாவிற்கு ஊரில் இளைஞர் மன்றம் சார்பாக கரகாட்டம் வைப்பதாக முடிவு செய்தோம். கரகாட்டம் வைக்க போலீஸ் அனுமதி உண்டா என்று கேட்டுத் தெரிந்து கொள்வதற்காக ஸ்டேசனுக்குச் சென்றோம். எங்கள் ஊர் எந்தப் பிரச்சினைக்கும் போகாத ஊர் என்பதால் அங்கு எங்க ஊருக்கு என்று ஒரு நல்ல பெயர். இப்போ கரகாட்டத்துக்கு அனுமதி உண்டு என்று சொன்ன எஸ்.ஐ, முறைப்படி அனுமதி வாங்க வேண்டும். காப்புக்கட்டியதும் வாங்க என்றார். பின்னர் குறத்தியாக இன்னாரைக் கூட்டிவாங்க... அவ வாரான்னு சொன்னா கீழைச்சீமைக்காரனுங்க எல்லாம் கட்டுச் சோறு கட்டிக்கிட்டு உங்க ஊருக்கு வந்துருவானுங்க என்று சொன்னார். நாங்களும் அவர் சொன்ன பேரை விசாரிச்சோம்... அவ வந்தா ஊரை நாறடிச்சிருவா என்று சொன்ன அமைப்பாளர் இன்னொரு பேரைச் சொல்லி நல்ல பேர் இருக்கு... சூப்பரா ஆடுவா... என்றதும் சரி என்று சொல்லிவிட்டோம். திருவிழா அன்று இரவு கரகாட்டத்துக்கு நல்ல கூட்டம்... அவ போட்ட ஆட்டத்தைப் பார்த்து காவலுக்கு என வந்திருந்த போலீஸ்காரர் ஒருவர் நல்ல குடும்பத்தில் பிறந்தவன் இதைப் பார்க்க மாட்டான் என்று சொல்லிச் சொல்ல விஷாலைக் கூட்டிக் கொண்டு வீட்டுக்குப் போய்விட்டேன். பின்னர் அப்படி ஆடக்கூடாது எனச் சொல்லி நான்கு மணி வரை நடத்தினார்களாம்.

தேவகோட்டையில் மஹாலஷ்மி ஐயங்கார் பேக்கரி என்று உறவுகள் சிலர் இணைந்து ஆரம்பித்து வியாபாரத்தில் சக்கைப்போடு போட இன்னைக்கு அதற்குப் பக்கத்தில் லஷ்மி ஐயங்கார், இன்னொரு ஐயங்கார் என வர, சற்றே தள்ளி ராஜலஷ்மி ஐயங்கார் திறக்கப்பட ராமநகருக்கு அருகில் லஷ்மி ஐயங்காரின் கிளை வர, தேவகோட்டையில் ஐயங்கார் மயமாகிவிட்டது. வியாபாரத்தில் போட்டியிருக்கலாம்... ஆனால் பொறாமையால் இப்படி வரிசையாக கடைகள் வருவதால் யாருக்கு லாபம்? நண்பர் ஒருவர் விளையாட்டாகச் சொன்னார் லஷ்மியை கூறு போட்டு பிரிச்சிட்டானுங்க பார்த்தியா என்று... உண்மைதான் போட்டி... பொறாமை... இதெல்லாம் எவ்வளவு நாளைக்கு... சொல்லுங்கள்.

லையாத கனவுகளை விரைந்து முடிக்க எண்ணம்... எழுதுவோமா என்று நினைக்கும் போது வீட்டு நினைவுகள் கலையாமல் மனசுக்குள் ஏறி உட்கார, எல்லாம் மறந்து சோர்வாய் கிடக்கிறது மனசு. கொஞ்ச நாளில் சரியாகும்... அப்போது கலையாத கனவுகள் மீண்டும் விரியும்...

-மனசின் பக்கம் தொடரும்.
-'பரிவை' சே.குமார்.

15 எண்ணங்கள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

நான்கு மணி வரை - இதென்ன பெரிய கதையா இருக்கே....?!!!

ராஜி சொன்னது…

இப்போலாம் கரகாச்சம் கிராமியக் கலைகளிலிர்ந்து மாறி ஆபாச கலையாக மாறிடுச்சு. இப்பதான் , திருவிழாக்களில் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் நடத்துறாங்களே! உங்க ஊர்ல வைக்கலியா!?

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று சொன்னது…

நல்ல தொகுப்பு . இரண்டுமேதைகளும் ஒரே நாளில் பிறந்தவர்களா? என்னே ஒற்றுமை. காலத்தை வென்றவர்கள்.

பால கணேஷ் சொன்னது…

ஒரு கடையோ, பிராண்ட் நேமோ பிரபலமாகி விட்டால் அதைப் பயன்படுத்தி கல்லா கட்டுகிற பேராசை மனித இனத்தின் தனிச்சொத்து(?) போல. தலப்பா கட்டி - தலப்பா கட்டு இப்படி ஊருக்கு ஊரு ஓட்டல்கள் போல. சென்னையில வெங்கடேஸ்வரா போளி ஸ்டால்ன்றது பல இடங்கள்ல இருக்கும் சின்னச் சின்ன மைனூட்டான பேர் மாற்றங்களோட. போலிகள் ஜாக்கிரதைன்னு நாமதான் அலறணும்.

பால கணேஷ் சொன்னது…

கரகாட்டம் நான் சினிமால பார்த்ததோட சரி... நேர்ல பாக்கற வாய்பு ஏனோ அமைஞ்சதே இல்ல... அடுத்த திருவிழாவுக்கு கரகாட்டம் பாக்க குமார் வீட்டுக்கு கெஸ்ட்டா வந்துர வேண்டியதுதான்.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க தனபாலன் சார்...

திருவிழாக்களில் கரகாட்டம், நாடகம் எல்லாம் விடிய விடிய நடத்தப்படும். இப்போ போலீஸ் கெடுபிடியால் 3 மணி வரை மட்டும் நடத்தப்படுகிறது...

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ராஜி அக்கா...

எங்க மாவட்டத்தில் கரகாட்டத்துக்கு அனுமதி உண்டு ஆடல் பாடலுக்கு இல்லை. அதுபோக கரகாட்டமாவது நாம் ஏற்பாடு செய்யும் குரூப்பைப் பொறுத்து ஆபாசம் கூடக் குறைய அமையும். ஊர் கட்டுப்பாடு என்று சொல்லிவிட்டால் கன்னியமாக நடித்துவிட்டுச் செல்வார்கள். ஆனால் ஆடல் பாடல் ஆபாசத்தின் உச்சம்...

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க முரளிதரன் அண்ணா...
கவியரசு ஒரு வருடம் முன்னவர்... இரண்டு மேதைகளும் கொடுத்தவை என்றும் நிலைத்திருக்கக் கூடியவை...

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க பாலகணேஷ் அண்ணா....
கண்டிப்பாக... அடுத்த முறை தங்களுக்கு அழைப்பு இருக்கு...

போட்டியைவிட பொறாமைதான் அதிகம்...

Unknown சொன்னது…

MSVயும்,கண்ணதாசனும் நம் வாழ்க்கையில் சுவையைக் கூட்டியவர்கள்...நானும் வணங்குகிறேன் !
த ம 5

கவிஞர்.த.ரூபன் சொன்னது…

வணக்கம்
குமார் (அண்ணா)

தமிழர்களின் வாழ்வியலுடன் பின்னிப்பினைந்த கிராமியக்கலையான கரகாட்டம் பற்றி மிக அருமையாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

மகிழ்நிறை சொன்னது…

மெல்லிசை மன்னரின் பாடல்கள் மறக்ககூடியதா?
இப்படி ஒரே பெயரில் கடை தொடங்கி நல்ல கடையை இல்லாமல் செய்வது என்ன பிழைப்போ ?
தொடர்ந்து எழுதுங்க அண்ணா! உங்க மனசுக்கு ஆறுதலாய் இருக்கும்ல :)

Unknown சொன்னது…

நன்று.///இராம நாராயணன்,பல்வேறு மொழிகளில்,125 திரைப்படங்களை இயக்கிய ஒரே இந்தியன் என்று தெரிகிறது.///மெல்லிசை மன்னரும்,கவியரசரும் ஒரே நாளில் பிறந்தவர்களா?புதிய தகவலுக்கு நன்றி!

செங்கோவி சொன்னது…

//நண்பர் ஒருவர் விளையாட்டாகச் சொன்னார் லஷ்மியை கூறு போட்டு பிரிச்சிட்டானுங்க பார்த்தியா//

செம கமெண்ட்.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நல்ல தொகுப்பு....

கரகாட்டம் இப்போதெல்லாம் ஆபாச மயமாகிவிட்டது..... தில்லியில் சில சமயம் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்வார்கள் - ஆனால் ஆபாசமில்லாத நல்ல ஆட்டம்.