மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

சனி, 12 ஏப்ரல், 2014

விஜயகாந்தை கேலி பண்ணலாமா?



இந்தக் கட்டுரை விஜயகாந்த் என்னும் மனிதரைப் பற்றிய கட்டுரை. இதைப் படிக்கும் முன்னரே நான் தேமுதிக-காரன் என்ற எண்ணம் எல்லாம் வேண்டாம். நமக்கும் அரசியலுக்கும் ரொம்பத் தூரம். எதோ எழுதணும்ன்னு தோணிச்சு... அவ்வளவுதான். இது விஜயகாந்துக்கு ஆதரவு நிலையிலோ எதிர்ப்பு நிலையிலோ எழுதப்பட்டது அல்ல... ஒரு தனி மனிதன் காமெடியன் ஆக்கப்படும் நிலை கண்டு எழுதியதுதான் அவ்வளவுதான்...

இன்றைய அரசியல்வாதிகளில் அதிகம் விமர்சிக்கப்படும் தலைவர்களில் ஒருவராக தேமுதிக தலைவர் விஜயகாந்த் மாறியிருக்கிறார். அதிலும் குறிப்பாக முகப்புத்தகத்தில் அவரை வைத்து காமெடிகள் அதிகம் அரங்கேறுகின்றன. இதற்கு காரணம் என்ன? உண்மையிலேயே விஜயகாந்த் காமெடி பண்ணுகிறாரா? அவர் மக்களே என்று அழைப்பதைக் கூட நாம் மக்கழே என தண்ணி அடித்து விட்டு உளறுவது போல் ஸ்டேட்டஸ் போடுகிறோம். இது எதனால்... நமக்கு விஜயகாந்த் மீது அப்படி என்ன கோபம்?

தன்னை விமர்சித்த வடிவேலுவை தனிப்பட்ட முறையில் எதாவது சொன்னாரா என்பது தெரியாது. ஆனால் பொதுவெளியில் அவர் குறித்து ஒரு வார்த்தை கூட பேசியது கிடையாது. இன்று வடிவேலுவின் தெனாலிராமனுக்கு பிரச்சினையை சில புல்லுருவிகள் கிளப்பும் போது அதில் கூட விஜயகாந்தை சில பத்திரிக்கைகள் சம்பந்தப்படுத்துகின்றன. இது நியாயமா? இன்று வடிவேலுவை முதல்வர் ஜெயலலிதா அரவணைப்பது போன்ற நடவடிக்கைகள் ஆரம்பமாகவும் ஆளாளுக்கு அவருக்கு ஆதரவுக் குரல் கொடுத்து பொங்குகிறார். இரண்டு வருடங்களுக்கு மேலாக ஒரு அருமையான காமெடி நடிகரை முடக்கி வைத்திருந்தார்களே. அப்போது இந்த பொங்கிகள் எல்லாம் எங்கே போனார்கள். எதாவது பேசினால் ஜெயலலிதாவால் தங்களுக்கு எதாவது பிரச்சினை வந்துவிடுமோ என்று பயந்துதானே அடங்கிக் கிடந்தார்கள். வீட்டில் வடிவேலுவின் நகைச்சுவைக் காட்சிகளை பார்த்து ரசித்துவிட்டு வெளியில் அம்மாவின் பார்வைக்கு அடங்கிய பாம்பாய் இருந்தார்கள்.

சரி விசயத்து வருவோம்... விஜயகாந்த் மனதில் உள்ளதைப் பேசுகிறார்... அதை வெளிப்படும் விதம் தவறாக இருக்கலாம்... ஆனால் இன்றைக்கு மற்ற அரசியல்வாதிகளுக்கு இல்லாத தைரியம் அவரிடம் இருக்கு என்று எழுத்தாளர் திரு. பாலகுமாரன் அவர்கள் முகப்புத்தகத்தில் எழுதியிருந்தார். அது தினமணியிலும் பிரசுரமானது. அதற்கு எத்தனை பேர் நீங்க அவருக்கு ஆதரவா என்று பொங்கினார்கள் தெரியுமா?. கண்டபடி தங்களது கருத்தைப் திரு. பாலகுமாரனின் இந்த ஸ்டேட்டஸில் பதிந்தார்கள். அவர் மனதில்பட்டதைச் சொன்னது தவறா? இங்கு தனி மனிதனுக்கு கருத்துரிமை இருக்கு என்பதை நாம் மறந்துவிட்டுத்தானே பொங்கினோம்.

இன்றைக்கு பி.ஜே.பி. கூட்டணியில் அனைத்துக் கட்சிகளுக்காகவும் ஊர் ஊராகச் சென்று பேசும் ஒரே தலைவர் விஜயகாந்த்தான் என்பதை மறுக்க முடியுமா? காட்டுக்கும் மேட்டுக்கும் இழுத்தாலும் அனைவரையும் அரவணைத்துச் செல்ல நினைக்கிறார். ஒருவன் உண்மையாக இருப்பது என்பது மிகவும் சவாலான விஷயந்தான். அவரது வெளிப்படையான பேச்சும், செயல்களும் வேண்டுமானால் கேலிக்குரியதாக இருக்கலாம். ஆனால் ஒரு தனி மனிதனை கேலிக்குரியவனாக ஆக்கி சந்தோஷம் அடையும் நம்மைவிட அவர் கேலிக்குரியவரா? நம் மனதின் அழுக்குகள் கரைந்து போகாமல் கட்டியாய் இருப்பது ஏன்?

ஜெயா தொலைக்காட்சியில் அடிக்கொரு முறை விஜயகாந்தின் பொதுவெளி செயல்பாடுகளைப் போட்டுக்காட்டி இவருக்கா உங்கள் ஓட்டு என்று போடுகிறார்கள். இந்த இரண்டரை வருடத்தில் நம் அரசின் சாதனை என்ன என்று பட்டியலிட்டு ஓட்டுக் கேட்கலாம் தானே... முள்ளி வாய்க்கால் முற்றத்தை இடித்ததையும், கிராமங்களில் 18 மணி நேர மின்தடை செய்து வருவதையும் களவாணிப் பயலுகளை எல்லாம் கட்சியில் சேர்ப்பதையும் சொல்லி ஓட்டுக் கேட்கலாமே... அதை விட்டு விஜயகாந்தைக் காட்டி ஓட்டுக் கேட்பது எதற்காக..? ஆளும் கட்சிக்கும் அவர் மீது பயம் இருக்கிறது என்பதைத்தானே இது காட்டுகிறது.

இன்று விஜயகாந்தை விமர்சிக்க நடிகர் நடிகைகளை எல்லாரையும் களம் இறக்கி விட்டிருக்கிறார்கள். அன்று விஜயகாந்தை வைத்து வெற்றிப்படம் கொடுத்த இயக்குநர் ஒருவர் பம்பரம் விட அடம்பிடித்தார் என்று அடித்துச் சொல்கிறார். இத்தனை வருடமாக அவருக்கு ஞாபகத்தில் இல்லையோ... அப்போதெல்லாம் சொல்லத் தெரியவில்லையோ... சிங்கமுத்து, விந்தியா, ராமராஜன் என ஒரு கூட்டமே விஜயகாந்தை திட்டுவதையே தங்கள் பேச்சில் அதிகம் செய்கிறார்கள். இவர்கள் இப்படிப் பேசக் காரணம் தலைமையிடம் நல்ல பெயர் வாங்க வேண்டுமே என்பதற்காகத்தானே தவிர உண்மையில் விஜயகாந்தை தாக்க வேண்டும் என்பதற்காக அல்ல.... ஒரு நடிகராக அவர் நிறையப் பேருக்கு உதவியாக இருந்தார் என்பதை இவர்கள் மறுத்துச் சொல்ல முடியுமா?

அரசியல்வாதிகள் எல்லோருக்கும் கலைஞர் கருணாநிதி மாதிரி மேடைப் பேச்சு வருவதில்லை. ஏன் நம்ம முதல்வரே எழுதிக் கொடுத்ததை வைத்துத்தான் பேசுகிறார். சமய சந்தர்ப்பம் பார்த்து சூசகமாகப் பேசுவது எல்லாம் கலைஞர் அவர்களுக்கு மட்டுமே கை வந்த கலை. விஜயகாந்த் மனதில்பட்டதைப் பேசுகிறார்... அவர் எழுதி வைத்துப் பேசுவதில்லை... மக்களே... மக்களே... என்று விளித்துப் பேசுவதை அவரது ஸ்டைலாக ஆக்கியிருக்கிறார் இதில் என்ன தவறு இருக்கிறது.

சரக்கடித்துவிட்டு பேசுகிறார் என்று சொல்லிச் சொல்லிச் சிரிக்கிறோம். இன்று சரக்கடிப்பது என்பது பேஷனாகிவிட்டது. சில காலங்களுக்கு முன்னர் வரை வீட்டிற்கு சரக்கடித்து விட்டுப் போனால் பத்திரகாளியாக மாறும் இல்லத்தரசிகள் இன்று குறைந்து விட்டார்கள். எனக்கு தெரிந்த சில வீடுகளில் இப்போது இல்லத்தரசிகள் ஆம்லெட் போட்டுக் கொடுக்கிறார்கள். சில வீடுகளில் வாரத்தில் இரண்டு நாள் வீட்டிலேயே குடிக்க அனுமதி உண்டு.  யார் குடிக்கவில்லை... இவர் மட்டும்தான் குடிக்கிறார் என்பது போல ஸ்டேட்டஸ் போடும் நம்மில் பலர் குடிக்கத்தானே செய்கிறார்கள். எதோ நாமெல்லாம் உத்தமர்கள் போல ஒரு மனிதனைக் கேலிக்குரியவராக ஆக்குவதில் என்ன நியாயம்?

திராவிட கட்சிகள் நமக்கு என்ன செய்தன... இல்லை மற்ற கட்சிகள் மக்களுக்காக உழைத்தனவா... இதோ இதே விஜயகாந்த் வந்தால் மட்டும் என்ன செய்து விடப்போகிறார்? என்பதை நாம் நன்கு அறிவோம். அரசியல்வாதியாய் வாரிசு அரசியலை எதிர்க்கும் அவர் மச்சினனுக்காக காரியங்கள் செய்து காய் நகர்த்தத்தான் செய்கிறார். இது அரசியல்வாதியாய் அவருக்குள் வந்திருக்கும் குடும்ப வியாதி. இப்போது அரசியல் சாக்கடைக்குள் விழுந்தவன் எல்லாருமே உத்தமன் இல்லை என்பதை அறிவோம். இதைப் பற்றி இங்கு பேசுவதால் எந்தப் பயனும் இல்லை. 

பொதுவெளிகளில் அவரது செய்கைகள் தவறாக இருக்கலாம்... காரணம் அவருக்கு வரும் அதீதமான கோபம்தான். கோபம் இருக்கும் இடத்தில் குணம் இருக்கும் என்பது பழமொழி, அவரது குணம் நல்ல குணமாகத்தான் இருக்கும் என்று நம்புவோம். விஜயகாந்தைப் பொறுத்தவரை பொது இடங்களில் அவரது கோபத்தைக் கட்டுப்படுத்தத் தெரியவில்லை. அதுவே அவருக்கு மிகப்பெரிய மைனஸாக மாறிவிட்டது என்பது மறுக்க முடியாத உண்மை. அதற்காக ஒரு தனி மனிதனை வாய்க்கு வந்தபடியெல்லாம் கிண்டல் கேலி பண்ணுவது என்பது தவறு. அவர் தனது கோபத்தை கட்டுப்படுத்தக் கற்றுக் கொள்ள வேண்டும். தன் கோபத்தைக் கட்டுப்படுத்தும் பட்சத்தில் எல்லோர் மனதிலும் இடம் பிடிக்கலாம்.

எங்க தொகுதி மக்களெல்லாம் சிவகங்கையில் இருந்து தில்லியைப் பார்ப்பேன் என்று சென்ற முறை சொல்லி தனது சுற்றம் பார்த்த இந்திய நிதி அமைச்சர் சிதம்பரம் அவர்களின் வாரிசான சிநேகத்தின் சிநேகமாய்... கனியுடன் காதல் மொழி பேசிய அடாவடி கார்த்தி சிதம்பரத்துக்கு வாக்களிக்காமல் நம்ம தொகுதி வளர்ச்சிக்காக யார் பாடுபடுவார்கள் என்று நினைக்கிறீர்களோ அவருக்கு வாக்களியுங்கள்.

மொத்தத்தில் கலைஞரா ஜெயலலிதாவா ராமதாஸா வைகோவா விஜயகாந்தா என்றெல்லாம் பார்க்காமல் நமக்கு இவன் இதற்கு சரிப்பட்டு வருவான்னு அவனுக்கு வாக்களியுங்கள்.

இந்தப் பதிவு சிலருக்குப் பிடிக்கலாம் பலருக்குப் பிடிக்காமல் போகலாம்...  என்னோட மனதில்பட்டதை பகிர்ந்திருக்கிறேன்... அனைவருக்கும் பிடிக்க வேண்டும்  என்பதற்காக அல்ல... 
-'பரிவை' சே.குமார்.

10 எண்ணங்கள்:

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று சொன்னது…

விஜயகாந்திடம் பேச்சுத் திறமை இல்லை என்பது உண்மைதான். அதற்காக அவரை காமெடி பீசாக நினைப்பது தவறு என்பதே என்கருத்தும்.

பெயரில்லா சொன்னது…

[ இரண்டு வருடங்களுக்கு மேலாக ஒரு அருமையான காமெடி நடிகரை முடக்கி வைத்திருந்தார்களே. அப்போது இந்த பொங்கிகள் எல்லாம் எங்கே போனார்கள். ]

நியாயமான கேள்வி தான்.. உணர்ச்சி பொங்க பேசுவோர் அநேகமானோர், காசுக்கு மாரடிப்போர் தான், ஆனால் தாம் மட்டும் உத்தமர் போல மற்றவரை விமர்சிக்கின்றனர்.. மக்கள் தத்தம் தொகுதியில் உள்ள நல்ல வேட்பாளர்களை இனம் கண்டு, வாக்களிக்க வேண்டும்.

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

பல நடிக நடிகைகளுக்கு வடிவேலு அடக்கம் முன்னேற உதவி செய்தவர்தான் இருந்தாலும், நாகர்கோவிலில் போயி வணக்கம் நாகப்பட்டின மக்களே"ன்னு சொன்னால் எவன் கிண்டல் பண்ணாம இருப்பான் ?

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

பலவற்றில் அனுபவம் வந்து விட்டால் அனைத்தும் மாறும்...

செங்கோவி சொன்னது…

உண்மை தான்..நம் மக்கள் ரொம்ப ஓவராகத்தான் கிண்டல் செய்கிறார்கள்.

Unknown சொன்னது…

சே.சேகர் சாா் நிங்க செல்ராது 100/100 உண்மை ஆனா என்ன மதிாி முஸ்லிம்களின் வாக்கு அவருக்கு கிடைக்காது அவா் உணமையிலோ மக்களின் பக்கம் என்றால் திமுக மதிாி அதிமுக மதிாி தனித்து நின்று ஜெயிக்க வேண்டும்மோ தவிர ஜாதி வேறி பிடித்த பாஜக உடன் ஏன் உடன்பாடு செய்து கொள்ள வேண்டும் தெளிவாக கூற முடியும் மா திரு.சே.சேகா் சாா்

Unknown சொன்னது…

Good comment

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நல்ல அலசல்.

இப்போது அரசியலில் தனி நபர் தாக்குதல் ரொம்பவே அதிகமாகிவிட்டது.....

சாதாரணமானவள் சொன்னது…

நியாயமான பதிவு....

Unknown சொன்னது…

அ ரு மை யா க சொ ன் னீ ர் நண்பா!!! இ ந்த பதிவை எ ன் மு கநூல் பக்கத்தில் இ ட்டுகொ ள் கிறே ன் ந ண்பா www.facebook. com /social galatta