மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

சனி, 5 ஏப்ரல், 2014மனசின் பக்கம் : இப்படியும் ஏமாற்றலாம்

பதிவுக்குள் செல்லும் முன்...

நன்றி:

நான் எழுதிய கௌரவக் கொலைகள் கட்டுரையைப் படித்து என்னைப் பாராட்டிய திரு. முத்து நிலவன் ஐயா அவர்கள் அதே செய்தியை வைத்து தனது தளத்தில் அருமையானதொரு வேதனைக் கவிதையைப் பகிர்ந்திருக்கிறார். பெரியவர்களின் வாழ்த்து கிடைப்பது என்பது சாதாரணம் அல்ல. ஐயாவிடம் இரண்டாவது முறையாக வாழ்த்தைப் பெற்றிருக்கிறேன். முன்னர் கிராமியக் கலைஞர் மறைந்த திருமிகு. முத்துமாரி அவர்களைப் பற்றி எழுதியபோது முதல் முறை ஐயாவின் வாழ்த்தைப் பெற்றேன். மற்றவர்களின் எழுத்தை சுவாசித்து வாழ்த்துவதற்கு மனசு ரொம்ப முக்கியம்... அதுவும் எனது பதிவு குறித்த பகிர்வுடன்....இது எல்லாருக்கும் வருவதில்லை. கூக்கு படம் குறித்து மிகப்பெரிய எழுத்தாளர் என்று சொல்லிக் கொள்ளும் ஒருவர் எழுதிய அருவெறுப்பான வார்த்தைகளுடன் கூடிய விமர்சனத்தைப் பார்த்தவர்களுக்குத் தெரியும். முத்து நிலவன் ஐயாவிடம் பாராட்டுப் பெறுவது என்பது மிகச் சிறப்பானதொரு தருணம். இது போன்ற சந்தோஷத் தருணங்கள் கிடைக்கக் காரணமாக எழுத்துத் துறைக்குள் அழைத்து வந்த எனது கல்வித் தந்தைக்குத்தான் நன்றி சொல்லணும்.

ஐயாவின் பதிவைப் படிக்க... தாலாட்டு ஏன் ஒப்பாரியானது? 

வருத்தம்:

நண்பர் ஸ்கூல்பையன் அவர்கள் தனது முகநூலில் எழுத்தைத் திருடி தன் பெயரை இட்டு சந்தோஷப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு காப்பி பேஸ்ட் நண்பரைப் பற்றி சொல்லியிருந்தார். ரொம்பப் பேருடைய கற்பனைகளை தனக்குள் உதித்தது போல எழுதி பாராட்டுக்களை வாங்கியிருக்கிறார். அவரது முகநூலில் நமது நண்பர்கள் குழு கிடாவெட்டி கோலாகலமாகக் கொண்டாடி விட்டார்கள். அவர் மன்னிப்புக் கோரியிருக்கிறார். நம்ம கதைகளும் அங்கு இருக்காம். இப்படியும் மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். 

-------------------

பதிவுக்குள் செல்வோமா...

இரண்டு தினங்களுக்கு முன்னர் உறவினர் ஒருவர் விடுமுறையில் ஊருக்குப் போனதால் நகை வாங்கப் போனோம். அப்போது எங்களது அண்ணன் குடும்பத்துடன் வந்திருந்தார். கடையில் இருந்து வரும்போது கணவன் மனைவி என குடும்ப சகிதமாக வந்திருப்பவர்களுக்கு பரிசுக் கூப்பன் கொடுக்கிறோம். இதை பூர்த்தி செய்து தாருங்கள் என்று கொடுத்தனர். பூர்த்தி செய்து போட்டு விட்டு வந்தாச்சு. மறுநாள் காலையில் தாங்கள் வெற்றி பெற்றிருக்கிறீர்கள். உங்களுக்கு கண்ட்ரி கிளப் (COUNTRY CLUB) ஒரு வாரம் ஹோட்டலில் தங்க ஏற்பாடு செய்து தரும். அவர்கள் உங்களை தொடர்பு கொள்வார்கள் என்று சொல்ல, உறவினருக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை.

இதில் என்ன கூத்து என்றால் நகை வாங்கியவர் கொண்டு போன பையில் பூர்த்தி செய்த கூப்பனின் அடிப்பகுதி போய்விட்டது. அதை அவர்களிடம் சொன்ன போது அதெல்லாம் ஒண்ணும் பிரச்சினை இல்லை குடும்பத்துடன் எங்கள் கிளைக்கு வந்து செல்லுங்கள். உங்கள் பரிசின் விவரம் தெரிவிக்கிறோம் என்று சொல்லியிருக்கிறார்கள். உடனே அவர் எங்களுக்குப் போன் செய்து விவரம் சொல்லி அழைக்க அப்போதே நான் வரவில்லை என்று சொன்னேன்... 

இரவு எங்கள் அறைக்கே வந்து அட வாங்க... சாப்பாடெல்லாம் போடுவானுங்க... போய்ட்டு வரலாம் என்று என்னையும் மற்றொரு அண்ணனையும் அழைத்துச் சென்றார். அங்கு போய் கார் பார்க் பண்ண இடம் கிடைக்காமல் அழைந்து அவர்களுக்குப் போன் செய்தால் ஆள் அனுப்பி கார் பார்க்கிங் பண்ண ஏற்பாடு செய்து எங்களை லிப்டில் அவர்களது அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றார்கள். உள்ளே நுழைந்ததும் வரவேற்று விவரங்கள் கேட்டு 9 மணி முதல் 10 மணி வரை உங்களுக்கு எங்களது கவுன்சிலிங் இருக்கு அதை முதலில் முடியுங்கள் என்றார்கள். 

உள்ளறையில் இருந்து ஒரு பெண் வந்து அழைத்துச் சென்று ஒரிடத்தில் அமர வைத்து 'நீங்க தமிழா... மலையாளத்தில் சம்சாரிச்சா ஓகேயான்னு' அப்படின்னு நுனி நாக்கு ஆங்கிலத்தில் பேசினாள். நாங்கள் ஓகே என்று சொன்னதும் ஒரு மலையாளி பையனை எங்களுக்கு கவுன்சிலிங் கொடுக்கப் பணித்தாள். நான் அந்த அறைக்குள் அங்காங்கே கவுன்சிலிங்கை கவனமாய் கேட்டுக் கொண்டிருந்தவரகளைப் பார்த்தேன். ஆட்டை வெட்ட ரெடியா குளிப்பாட்டி வச்சிருக்கானுங்கன்னு புரிந்தது. எங்களக்கு அந்த மலையாளி விவரங்களைச் சொல்ல ஆரம்பித்தார்.

'எல்லாரும் ஒரு பேமியா?' 

'எந்தக் கம்பனியிலயான்னு சோலி?' 

'எந்தா சோலி இவட?'

'நாட்டுல எவட யானு?'

'நாட்டுக்குப் போகணுன்டா?' 

'பாரியாள் பணி எடுக்குதா இல்ல ஹவுஸ் வைப்பா?' என ஆரம்பித்து உங்களுக்கு 7 நாளைக்கு ஹோட்டல்ல தங்க நாங்க ஏற்பாடு பண்ணுவோம். நீங்க 4000 ரூபாய் மட்டும் கட்டினால் போதும் என்றார். இங்கதானே ஹோட்டல் ரூம் கொடுக்கும் என்று கேட்க, கேரளா, பெங்களூரு, சென்னை, கோவா, பாங்காங் இந்த ஊர்களில் எங்கு வேணுமானாலும் தங்கலாம் என்றார். எனக்கு இவர்கள் ஏமாற்றுப் பேர்வழி என்று புரிய கவனத்தை மற்ற பக்கம் திருப்பினேன்.

எல்லா மேஜைகளிலும் வந்தவர்களை எப்படியாவது மடக்கிவிட ரொம்ப சிரமப்பட்டுக் கொண்டிருந்தார்கள். எங்களைக் கூட்டிப்போனவள் ஒரு இளைஞனுடன் அமர்ந்தபடி எங்களையே நோட்டம் விட்டாள். அவ்வப்போது பேசுபவனைப் பார்த்து மர்மப்புன்னகை செய்தாள். அவனும் பலவித வாசனைத் திரவியங்கள் போட்டு குளிப்பாட்டிப் பார்த்தான். நீங்கள் இதை ஏற்றுக் கொள்வதென்றால் எங்களிடம் 7000 திர்ஹாம் கட்டி உறுப்பினராகனும். தினமும் உடற்பயிற்சி, டான்ஸ் என எல்லாம் செய்யலாம். இது லைப்டைம் உறுப்பினர் கட்டணம் இந்தச் சலுகை இன்று மட்டும்தான் நாளை என்றால் 25000 திர்ஹாம் . இதையேதான் எப்போது போனாலும் சொல்லுவானுங்கன்னு நமக்குத் தெரியாத என்ன... இதுபோல் எத்தனை பேரைப் பார்த்திருப்போம். நான் அவனது பேச்சில் கவனம் செலுத்தாமல் சிரித்துக் கொண்டிருந்தேன். 

ஒரு மணி நேரத்திற்கு முன்னர் கிளம்ப அனுமதியில்லை. அவனும் ஒரு மணி நேரம் மூளைச்சலவை செய்து பார்த்தான். அண்ணனுக்கும் அவரது மனைவிக்கும் கொஞ்சம் ஆசை எட்டிப் பார்க்க ஆரம்பித்தது. ஐயா வலையில விழுந்திடாதேன்னு காலை நோண்டி கண்ணைக் காண்பிக்க, அவர் மயக்கத்தில் இருந்து மீண்டார். பின்னர் எங்களிடம் அவர்களது சேவை எப்படி, ஏன் இப்போது சேரவிருப்பம் இல்லை என எல்லாம் எழுதி வாங்கிக் கொண்டு நாங்கள் அவர்களது கிளப்பில் இணைந்திருப்பதாகச் சொல்லி மற்றவர்களை ஏமாற்றி கைதட்டினார்கள். என்னால் சிரிப்பை அடக்கவே முடியவில்லை. எப்படியெல்லாம் பொழப்பு நடத்துறானுங்க.... 

மின்னஞ்சலில் உங்களுக்கு ஒரு கோடி கிடைத்திருக்கிறது... நான் என்னோட பணத்துல பாதியை உங்களுக்குத் தர நினைக்கிறேன்... என்று வருவது போல நேர கூப்பிட்டு அமுக்கப் பார்க்கிறானுங்க... போதும்டா சாமி ஆளைவிடு என்று வெளிய வர அம்புட்டு நேரம் அவனுக சொன்னதை எல்லாம் கேட்டுக்கிட்டு இருந்ததால நளாஸ் ஆப்பக்கடையில சாப்பிட 50 திர்ஹாம் கூப்பன் கொடுத்தானுங்க... எல்லாரும் வெளியில் வந்து சிரித்தபடியே காரில் ஏற, ரொம்ப அன்பாக் கூப்பிட்டானுங்க... வாங்க வாங்கன்னு சொல்லி வரச்சொல்லி எப்படியெல்லாம் தொழில் பண்ணுறானுங்க பாருங்க... என்றபடி வண்டியை எடுக்க இரவு 11 மணிக்கு அறைக்குத் திரும்பி மலையாளி கடை புரோட்டாவை மதியம் வச்ச மீன் குழம்பில் ஊறவைத்து சாப்பிட்டுவிட்டு படுத்தோம்.

மனசின் பக்கம் தொடரும்...
-'பரிவை' சே.குமார்.

9 கருத்துகள்:

 1. எப்படியெல்லாம் ஏமாத்தறாங்க! ஏமாறுபவர்கள் இருக்கும் வரை இது மாதிரி ஏமாற்றுபவர்களும் இருக்கத்தான் செய்வார்கள்! நல்ல பகிர்வு! நன்றி!

  பதிலளிநீக்கு
 2. நம்மை ஏமாற்ற ரூம் போட்டு யோசிப்பவர்கள் பெருகிவிட்டார்கள். நாம்தான் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் , உங்களைப் போல
  நன்றி நண்பரே

  பதிலளிநீக்கு
 3. இங்கே மதுரையிலும் இப்படிப் பட்ட மூளைச்சலவை செய்யும் கும்பல் இருக்கிறது ,நீங்களும் சொல்வதை பார்த்தால் இவர்கள் இண்டர்நேசனல் பிராடுகளாக இருப்பார்கள் போலிருக்கே !
  த ம 3

  பதிலளிநீக்கு
 4. ஏமாறுபவர்கள் இருக்கும் வரை இது மாதிரி ஏமாற்றுபவர்களும் இருக்கத்தான் செய்வார்கள். நன்றி!

  பதிலளிநீக்கு
 5. நல்ல வேளை,நீங்கள் கூடவே சென்றது.எப்படி எல்லாம்..........ஹூம்!

  பதிலளிநீக்கு
 6. வியாபர யுக்தி என்ற பெயரில் நடக்கும் இது போன்ற ஏமாற்று வேலைகள் இங்கேயும் உள்ளது.

  முதல் செய்தி.. பாராட்டுகள்!

  பதிலளிநீக்கு
 7. இன்றைக்கு என்றும் எந்நேரமும் கவனமாக இருக்க வேண்டும்... ம்...

  பதிலளிநீக்கு
 8. இங்கேயும் இந்த மாதிரி ஏமாற்று வித்தைகள் உண்டு. நாம் தான் பார்த்து கவனமாக இருக்க வேண்டும்.....

  பதிலளிநீக்கு

நட்பின் வருகைக்கு நன்றி..!

பகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...