மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வியாழன், 10 ஏப்ரல், 2014

கிராமத்து நினைவுகள் : சந்தோஷக் குளியல்


(கண்டதேவி ஊரணியும் சொர்ண மூர்த்தீஸ்வரர் கோவிலும் அதற்குப் பின்னே முனியய்யா கோவில் படித்துறையும் - இப்போது ஊரணியைச் சுற்றி மரங்கள் நிறைய இருக்கின்றன.)

கிராமத்து நினைவுகளை மீண்டும் மீண்டும் மீட்டிப் பார்ப்பதில் இருக்கும் சுகம் அலாதியானது. இந்தப் பகிர்வில் உங்களுடன் தம்மத்தில் (ஊரணி) குளிக்கச் செல்லும் அனுபவங்களை கொஞ்சம் மீட்டிப் பார்க்கலாம்.

பள்ளியில் படிக்கும் போது கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோவிலின் பின்னே ஊருக்கு அழகாய் இருக்கும் ஊரணியில் (நாங்க கண்டதேவி தம்மம் என்றே அழைப்போம்... இனி ஊரணி இங்கே தம்மம் என்றே எழுதப்படுகிறது) நிறைந்து கிடக்கும் தண்ணீரில் குளிக்கும் இன்பமே தனிதான். 

கண்மாயில் தண்ணீர் இல்லாத நாட்களில் பள்ளிக்குச் செல்லும் போது அடிபைப்பில் தண்ணீர் அடித்துக் குளித்துச் செல்வோம். விடுமுறை நாட்களில் ஆசை தீர நீந்தி அலுப்புத் தீரக் குளிப்பதற்காக கண்டதேவி தம்மத்துக்குச் செல்வோம். நாலைந்து பேர் சேர்ந்து கையில் துவைக்க வேண்டிய துணிகளை ஒரு பையில் அள்ளிக் கொண்டு கிளம்பிவிடுவோம். 

எங்கள் ஊரில் இருந்து குறுக்காக தம்மம் நிறைந்து வரும் தண்ணீர் வரும் எங்க கண்மாய்க்கு வருவதற்காக ஒரு குளக்கால் இருக்கும் அது வழியாக எங்க கருப்பர் கோவிலைத் தாண்டி கண்டதேவி சுடுகாடை கடந்து எங்கள் ஊருக்கும் கண்டதேவிக்கும் இடையில் எங்க கண்மாய்க்குள் இருக்கும் எங்க ஊர் ஐயனார் கோவிலைக் கடந்து ஊருக்குள் நுழைந்து தம்மத்தை அடைவோம்.

நாங்கள் குளிப்பதற்கு தேர்ந்தெடுக்கும் படித்துறைகள் இரண்டுதான், ஒன்று அம்பலார் வீட்டிற்கு எதிரே இருக்கும் படித்துறை, பெரும்பாலும் இங்கு கூட்டம் இருக்காது. தண்ணீர் நிறைந்திருக்கும் காலங்களில் படிகள் எல்லாம் தண்ணீருக்குள் இருக்கும் ஆறு படி இறங்கினால் தண்ணீருக்குள் நாம் முழுவதும் மறைந்து விடுவோம். 

மற்றொரு படித்துறை கோவிலுக்குப் பின்னே முனியய்யா கோவிலை ஒட்டி இருக்கும் முனியய்யா கோவில் படித்துறை, இங்கு ஆழம் அதிகமாக இருக்கும். முனியய்யாவுக்கு பயந்து நிறையக் கூட்டமும் இருக்காது. முனியய்யா நவாமர நிழலில்தான் இருப்பார். ஓடி வந்து சைடில் இருந்து தண்ணீருக்குள் குளிக்கலாம். பாதித் தூரம் வரை இரண்டு மூன்று முறை நீந்திச் செல்வோம். அதற்கு மேல் போவதற்குப் பயம். ஆனால் சிலரோ இந்தப் படித்துறையில் இருந்து எதிர்த்த படித்துறைக்கு நீந்தியே செல்வார்கள்.

முதலில் துணிகளைத் துவைத்து வைத்து விட்டு தண்ணீருக்குள் இறங்கினால் நீச்சல் அடித்து ஆட்டம் போட்டு குளிக்க ஆரம்பிப்போம். தண்ணீர் இரண்டு மூன்று படிகளில் மட்டும் கிடக்கும் காலத்தில் தண்ணீருக்குள் எறி பந்தெல்லாம் விளையாடுவோம். ஒரு மணி நேரம் ரெண்டு மணி நேரம் எருமை மாடுகளைப் போல தண்ணீருக்குள் கிடப்போம்.

கண்கள் எல்லாம் சிவந்திருக்க, தலையெல்லாம் பஞ்சு பஞ்சாய் பறந்து போயிருக்க ஈரத்துணிகளை தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு திரும்புவோம். சைக்கிள் பழகியதும் சைக்கிளில் குளிக்கக் கிளம்புவோம்... அப்புறம் வண்டியில் செல்ல ஆரம்பித்தோம். எல்லாருக்குமே கண்டதேவி தம்மத்தில் குளிப்பது என்பது ஆனந்தமே. சும்மா வீட்டில் அமர்ந்திருந்தால் யாராவது ஒருவர் வா தம்மத்துல போயி குளிச்சிட்டு வருவோம் என்று கிளப்பி விடுவார்கள்.

இப்போதெல்லாம் தம்மத்தில் தண்ணீர் வற்றுவதே இல்லை... தண்ணீர் குறைந்தால் நிரப்பி வைத்து விடுகிறார்கள். பக்கத்து ஊர் மக்கள் எல்லாம் குளிப்பது இங்குதான். சென்ற முறை ஊருக்குப் போனபோது தம்மத்தின் வழியாக சொந்தக்காரர்கள் ஊருக்குச் செல்லும் போதெல்லாம் நிரம்பி வழியும் தண்ணீரைப் பார்க்கும் போது குளிக்க ஆவலாய் இருந்தும் ஏனோ அதற்கான வாய்ப்பு அமையவில்லை.

இப்போது சென்றாலும் ஊரணியைச் சுற்றி காரும் வண்டிகளும் சைக்கிளும் நிற்க, நிறைந்து கிடக்கும் ஊரணியில் மனிதர்கள் மீன்களைப் போல் நீந்திபடி இறைந்து கிடப்பார்கள்.

-கிராமத்து நினைவுகள் தொடரும்.
-'பரிவை' சே.குமார்.

10 எண்ணங்கள்:

Unknown சொன்னது…

அடிக்கிற கோடை வெயிலுக்கு எனக்கும் தம்மத்தில் முங்கிடனும் போல இருக்கு !
த ம 1

அருணா செல்வம் சொன்னது…

ஜாலியாகத் தான் இருந்திருக்கும்.
நானும் ஒரு முறை பாலாற்றில் குளித்திருக்கிறேன்.

http://bharathidasanfrance.blogspot.com/ சொன்னது…


வணக்கம்!

நீந்திக் களித்த இளமை நினைவுகளை
ஏந்திக் களித்தீா் இனித்து!

கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

பள்ளிக் காலங்களில் க்ரந்தை வடவாற்றில் நீச்சலடித்த மகிழ்ந்த நினைவுகள் மீண்டும் நெஞ்சில் தோன்றி மகிழ்ச்சி கூத்தாடுகின்றன நண்பரே
நன்றி

ஸ்ரீராம். சொன்னது…

நல்ல நினைவோடை!

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

இனிய நினைவுகள்... பல நேரம் ஆனந்தக் குவியலை அடுத்து காலை சிற்றுண்டி எப்படி...? எத்தனை இட்லி என்பதே கணக்கு தெரியாதே...!

ராமலக்ஷ்மி சொன்னது…

கோடை கிளப்பிய குளிர்ச்சியான நினைவுகள். அருமை.

Unknown சொன்னது…

அருமையான பால்ய காலத்து நினைவுப் பகிர்வு.உங்கள் பகிர்வு என்னையும் அந்தக் காலத்துக்கு அழைத்துச் சென்றது.அப்போது நம்மூரில் இருக்கும்,சிறிய,சிறிய பல குளங்களில் நீந்தி(?!)விளையாடிய ஞாபகங்கள் வருகிறது.

இராஜராஜேஸ்வரி சொன்னது…

கிராமத்து நினைவுகளை மீண்டும் மீண்டும் மீட்டிப் பார்ப்பதில் இருக்கும் சுகம் அலாதியானது
சந்தோஷ நினைவலைகள்..

வெங்கட் நாகராஜ் சொன்னது…

இனிமையான நினைவலைகள். தம்மத்தில் குளிக்க எனக்கும் ஆசை வந்து விட்டது குமார்!