மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

சனி, 26 டிசம்பர், 2009

துபாய் 'குளோபல் வில்லேஜில்' ஒருநாள்...




நேற்று விடுமுறை தினம் என்பதாலும் அறை நண்பர் ஒருவர் கிறிஸ்துமஸ் விருந்து கொடுத்ததாலும் எங்கள் அறையில் கொண்டாட்டமாக இருந்தது. மாலையில் எங்காவது செல்லலாம் என்று முடிவு செய்தோம். எங்கு செல்வது என்ற யோசனையில் எல்லோரும் இருந்தபோது நண்பர் ஒருவர் துபாய் குளோபல் வில்லேஜ் போகலாம் என்றார். உடனே எல்லோரும் ஓகே அங்கே போகலாம் என்றனர்.

மாலை நான்கு மணிக்கு கிளம்புவது என்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி நான்கு மணிக்கு அண்ணா வண்டியில் அவரது குடும்பமும் இலங்கை நண்பர் குடும்பமும் வர நாங்கள் ஐந்து பேர் நண்பர் வண்டியிலும் குளோபல் வில்லேஜ் நோக்கி பயணமானோம்.


நீண்ட பயணத்தின் முடிவில் குளோபல் வில்லேஜை அடைந்தோம். அங்கு இறங்கிய போது நேரம் 5.50 ஆகியிருந்தது. காரை பார்க் செய்துவிட்டு நான்காவது நுழைவாயில் வழியாக உள்ளே செல்ல டிக்கெட் எடுக்க நின்றபோது லேசாக மழை தூற ஆரம்பித்தது. உடன் வந்த நண்பர் ஒருவர் 'என்னப்பா நம்ம வந்த நேரம் மழை வருது. உள்ள ஒதுங்க இடம் இருக்காது. பார்த்துக்கிட்டு வாங்கலாம்' என்றார். 'மழை வராது வாங்குங்க' என்று நண்பர் ஒருவர் சொல்ல டிக்கெட் எடுத்து உள்ளே சென்றோம்.

உள்ளே... ஜாதி, மதம், இனம், மொழி கடந்து மனிதர்களின் சங்கமம்... எங்கு பார்த்தாலும் ஒரே கூட்டம். உலக நாடுகளின் சங்கமம் ஒரே இடத்தில்... கொள்ளை அழகு. ஒவ்வொரு நாட்டுக்கும் தனித்தனி அரங்கங்கள். அங்கே அந்த நாட்டுப் பொருட்களின் விற்பனை. உலகில் உள்ள எல்லா பொருட்களும் ஒரே இடத்தில்...

நாங்கள் முதலில் சென்றது இந்தியா அரங்கம். (முதல் மரியாதை நம்ம நாட்டுக்குத்தானே...) கோட்டை போல் அமைக்கப்பட்டிருந்த நுழைவாயிலின் மேல் நமது தேசியக்கொடியை பார்த்ததும் 'ஜெய்ஹிந்த்' என்ற வார்த்தை என் மனதிற்குள் வந்து செல்ல.. என்னை அறியாமல் சந்தோஷம் குடி கொண்டது.


இந்திய அரங்கில் காஷ்மீர் சால்வைகள், ஆடைகள் எல்லாம் இருந்தது. அதை பார்த்துக் கொண்டு வந்தபோது சிறு பிள்ளைகளை வைத்து சுற்றிவிடும் ராட்டினம் ஒன்று இருந்தது. அதை கையால் இயக்கிக் கொண்டிருந்தவர் ஒரு பாகிஸ்தானி என்பது முக்கியமானது. மற்ற கடைகளில் எல்லாம் பெரும்பாலும் மலையாள வாடை அடித்தது.

அங்கிருந்து வெளியில் வந்து அடுத்த அரங்கத்திற்குள் நுழையும் முன்னர் இயற்கை உபாதையை குறைக்க கழிப்பிடம் தேடி சென்றோம். சத்தியமா சொல்லுறேங்க... அந்த ஜன நெருக்கடியிலும் அவ்வளவு சுத்தமா, நாற்றமில்லாமல் எப்படி வச்சிருந்தாங்க தெரியுமா?. நம்ம ஊர்ல பேருந்து நிலையத்துல காசு வாங்கிக்கிட்டு உள்ள விடுவாங்க. ஆனா அதுக்குள்ள போக முடியாது. சினிமா தியேட்டர்லயும் அதே நிலை...

பின்னர் சௌதி, சீனா, பாகிஸ்தான், மலேசியா, சிங்கப்பூர்,நேபாள், ஆப்பிரிக்கா, லெபனான், தாய்லாந்து என்று எல்லா நாட்டு அரங்கத்திற்குள்ளும் சென்று பார்த்து ஒரு சில பொருட்கள் வாங்கியும் வந்தோம். சீனாவும் பாகிஸ்தானும் அருகருகில்... (இந்தியா கவனிக்க வேண்டிய விசயம்...)


போகும்போது கூட்டத்தில் யாராவது காணாமல் போய்விட்டால் செல்பேசியில் அழைத்து எங்கிருக்கிறாய் என்று விசாரித்தால் நான் சிங்கப்பூரில் இருக்கிறேன்.. நீ எந்த நாட்டில் இருக்கிறாய்? என்று பதில் வரும். பத்து திர்ஹம் கொடுத்து டிக்கெட் எடுத்துவிட்டு சிங்கப்பூரில் இருக்கிறேன்... பிலிப்பைனில் இருக்கிறேன்... என்றால் எப்படிங்க.

இதற்கு இடையில் நடந்து செல்லும் போது கேரளாவில் இருந்து வந்திருந்த வாத்தியக்குழுவினரின் அதிரடி கச்சேரி.

அதனைத் தொடர்ந்து ஆப்பிரிக்க இளைஞர்களின் அதிரடி நடனம். அப்பா... நம்ம பிரபுதேவா எல்லாம் கிட்ட நெருங்கமுடியாது என்ன நடனம்,,, ஒருவர் மீது ஒருவர் ஓடி வந்து ஏறுவது... சின்ன வளையத்துக்குள் மாறி மாறி தாண்டுவது... இருவர் கயிறு சுழற்ற மற்றவர்கள் கயிற்றில் படாமல் குதித்து ஆடியது... நெருப்பு விளையாட்டு என எல்லாமே சிலிர்க்க வைத்த நடன காட்சிகள்.

அங்கிருந்து அப்படியே விளையாட்டு அரங்கம் வந்து சும்மா ஒரு பார்வை பார்த்துவிட்டு வெளியேறி ஐரோப்பா அரங்கு சென்றபோது இலங்கை நண்பரின் குழந்தைகள் பசி எடுப்பதாக கூற, சாப்பாட்டு அரங்கிற்குள் சென்று இந்திய உணவகம் ஒன்றில் பசியாற நினைத்து ஆர்டர் செய்தோம். உணவு வருவதற்கு முன் பில்லை கட்டச்சொன்னார்கள். கட்டிவிட்டு கட்டத்தோசைக்காக காத்திருந்தோம்.


வந்ததுங்க தோசை.... எவ்வளவு பெருசு தெரியுமா..? ஊர்ல இட்லி மாவு தண்ணியா போச்சுன்னா எப்படி துணியில ஒட்டி ஓடா இருக்குமோ அந்த சைசு (பார்த்துட்டு வேண்டாமுன்னு சொல்லிறக் கூடாதுங் கிறதுக்காகத்தான் முன்னாலயே பில்லை வாங்கிட்டான்.) குழந்தைங்க பசியே ஆறலையின்னா பாருங்களேன். (இந்தியனா இதை என்ன சொல்றது.?. எங்க கதை கட்டத்துரைக்கிட்ட மாட்டின கைப்புள்ளமாதிரி ஆச்சுங்க...)

ஒருவழியா சுத்திட்டு மணி பார்த்தா நள்ளிரவு 12.30. ஒரு சில நண்பர்கள் வேலைக்கு செல்ல வேண்டும் என்பதால் அங்கிருந்து அபுதாபி நோக்கி கிளம்பினோம். துபாய் எல்லை தாண்டி ஒரு பெட் ரோல் பங்கில் வண்டியை நிறுத்தி சாண்ட்விச் சாப்பிட்டுவிட்டு மீண்டும் பயணத்தைத் தொடர்ந்தோம்.


  அபுதாபியில் சில மாதங்களுக்கு முன் பார்முலா ஒன் கார் பந்தயம் நடந்த யாஸ், சாதியத் வழியாக வரும் புதிய ஷேக் கலீபா பின் சையது நெடுஞ்சாலையில் 130கீமி வேகத்தில் வந்தபோது, வெளியே சற்று அழுத்தமாக பெய்திருந்த மழையின் காரணமாக ரோட்டில் கிடந்த தண்ணீர் காரின் சீற்றத்தால் மயில் தோகை விரித்தது போல் இருமருங்கிலும் எழும்பி அடங்கியபடி இருந்தது.
 
காரின் உள்ளே இரவு நேர பண்பலையில் ராஜாவின் இனிய பாடல்கள் இதமாய் ஒலித்துக்கொண்டிருந்தது.


(குறிப்பு: போட்டோ செல்பேசியில் எடுத்தது... சரியாக இல்லையென்றால் மனதிற்குள் திட்டுங்கள்.)

 
-சே.குமார்

6 எண்ணங்கள்:

shabi சொன்னது…

னல்ல பகிர்வு...///abudhabi ல எங்க நானும் abudhabi ல தான் இருக்கேன் ... shafiullah76@gmail.com

செ.சரவணக்குமார் சொன்னது…

நல்ல பகிர்வு நண்பா.

Prathap Kumar S. சொன்னது…

//(குறிப்பு: போட்டோ செல்பேசியில் எடுத்தது... சரியாக இல்லையென்றால் மனதிற்குள் திட்டுங்கள்.)//

...............
................
...............


ஹஹஹ மனசுல திட்டறேன்னு பயந்துராதீங்க அப்படி ஒண்ணும் இல்ல.. படங்கள் நல்லாத்தான் இருக்கு... இன்னும் நிறைய எழுதியிருக்கலாம.

'பரிவை' சே.குமார் சொன்னது…

ஷபி:
//னல்ல பகிர்வு...///abudhabi ல எங்க நானும் abudhabi ல தான் இருக்கேன் ...//

வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி நண்பரே..!

அபுதாபியில டூரிஸ்ட் கிளப் ஏரியாங்க.

மெயில் செய்கிறேன் நண்பரே..!

'பரிவை' சே.குமார் சொன்னது…

செ.சரவணக்குமார்:
//நல்ல பகிர்வு நண்பா.//

வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

//ஹஹஹ மனசுல திட்டறேன்னு பயந்துராதீங்க அப்படி ஒண்ணும் இல்ல.. படங்கள் நல்லாத்தான் இருக்கு... இன்னும் நிறைய எழுதியிருக்கலாம.//

ஆம் நண்பரே..! தூக்கத்துடன் எழுதினேன். இரண்டு நாட்களாக சரியான தூக்கம் இல்லை. இன்னொருமுறை எழுதுகிறேன்.

வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி.