மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வியாழன், 10 டிசம்பர், 2009

கல்லூரிக்காலம் - IV

இது கொஞ்சம்... இல்ல அதிக நீளமான பதிவு... அறுவையா இருந்தாலும் பொறுமையா படிங்க... வாழ்த்துறவங்க ஓட்டப் போடுங்க. திட்ட முடிவு பண்ணிட்டா பின்னூட்டத்துல வாங்க. என்னை திருத்திக் கொள்ள வசதியா இருக்கும்.

இரண்டாம் ஆண்டு கல்லூரி வாழ்க்கையில் எனது நண்பர்கள் வட்டம் இன்னும் இறுக்கமானது. நவநீயை தவிர மற்ற அனைவருக்கும் நான் பங்காளியானேன். நவநீ மட்டும் என்னை மாப்ள என்று அழைத்தான். என்னை மாப்ள என்றதால் மற்றவர்களுக்கு அவன் மாப்ளயானான்.

தினமும் கல்லூரிக்கு நாங்கள் செல்வதே ஒரு ஊர்வலம் போல் இருக்கும். ஆதி, திருநா, கண்ணன், நவநீ, முத்தரசு உள்ளிட்ட நண்பர்கள் பேருந்தில் வருவார்கள். நான் சைக்கிளில் வருவதால் அவர்களுக்காக பேருந்து நிலைய வாயிலில் காத்திருப்பேன். எனது நண்பர்கள் மற்றும் அவர்களுடன் வரும் மற்றதுறை நண்பர்கள் என ஒரு கூட்டமே கல்லூரி நோக்கி நடக்க ஆரம்பிக்கும். நான் எனது சைக்கிளில் இருபுறமும் திருநா மற்றும் நவநீ பிடித்துக் கொள்ள (ஓட்ட வேண்டியதே இல்லை... தள்ளியே கொண்டு போய் விடுவர்) காரசார விவாத்துடன் கல்லூரி சென்றடைவோம். (மாலையும் விவாதம் தொடரும்).

எங்களுக்கு போரடித்தால் முத்தரசுபாண்டியன் (நல்ல வழக்கறிஞர்) மற்றும் திருநா (கல்யாணத்துக்கு போனது. பிறகு நினைவில் உண்டு... தொடர்பில் இல்லை...) இருவரையும் எதாவது ஒன்றை ஆரம்பித்து கோர்த்து விட்டு விடுவோம். (அந்த வேலையைதான் நல்லா செய்வோமே...) அப்பா... காரசாரமான விவாதம் நடக்கும் (நமக்கும் நல்லா பொழுது போகும்). இருவரும் அரசியலை அலசி ஆராய்வார்கள் (நமக்கு அப்பல்லாம் அரசியல் தெரியாது. இப்பவும்தான்) அப்பவே நாங்க முடிவு பண்ணினோம் ரெண்டும் வழக்கறிஞராத்தான் வருங்கன்னு (அப்ப நாங்க என்னபாடு பட்டிருப்போம்) முத்தரசு வழக்கறிஞராகி எங்க எண்ணத்தை காப்பாத்திட்டான். ஆனா குடும்ப கஷ்டத்தினால திருநாவால மேல படிக்கலை (நிறைய பேருக்கு அமையும் வாழ்க்கைதான் அவனுக்கும்).

நாங்க யாரையும் லந்து அடிக்க மாட்டோம் ஆனா எங்களுக்குப் பேரு லந்துக் கோஷ்டி. அப்ப முதல்வரா பழனியப்பன் சார் இருந்தாருங்க. ரொம்ப............. பயந்தவருங்க (வடிவேலுக்காவது பிரேஸ் மட்டம் மட்டும்தான் வீக்.இவருக்கு மொத்தமும் வீக்...). அதனாலதானோ என்னவோ ஒரு பிரச்சினையில் சொல்லாமல் கொள்ளாமல் முதல்வர் பதவியை விட்டுட்டு ஓடிவிட்டார்.

ஏப்ரல் மாதம் ஒண்ணாம் தேதி (முட்டாள்கள் தினம்) உஜாலா சொட்டு நீலம் வாங்கி (மை அடிக்க) முதல்வர் பழனியப்பன் சாருக்கே அடித்திருக்கிறோம். அப்ப சந்தோஷமாக இருந்தது இப்ப நினைக்கும் போது வலிக்கிறது (சொல்லப்போனா அன்னைக்கு நாங்கதான் முட்டாள்களா இருந்திருக்கோம்).

தீபாவளிக்கு வெடி ரெடியானதும் முதலில் வெடிக்கும் இடம் எங்கள் கல்லூரியாகத்தான்  இருக்கும். விளையாட்டுத்திடல், கேண்டீன், மாணவிகள் ஓய்வறை, டாய்லெட், சைக்கிள் நிறுத்துமிடம் என எல்லா இடத்திலும் வெடிக்கும். வைத்ததும் வெடிக்கக்கூடாது என்பதற்காக ஊதுபத்தியில் கட்டி வைப்போம் (எல்லாம் முன்னோர் காட்டிய வழி) .அதற்காக வாங்கும் ஊதுபத்தி வாசனையில்லாததாக (குறைந்த விலைக்கு ) வாங்குவோம். முதல்வர் அறைக்குள் பின்புறம் ஒரு தடுப்பு இருக்கும் அதற்கு பின்பக்கமாக ஒரு சன்னல் உண்டு. அதற்குள்ளும் எங்கள் கூட்டணி வெடி வச்சதுன்னா பாருங்களேன்.

ஒருபுறம் நண்பர்கள், அரட்டை என்று நாட்கள் நகர்ந்தாலும் மறுபுறம் ஐயாவுடனான நட்பும் இறுகியது. ஒருநாள் முருகன் கதை ஒன்றை எழுதி ஐயாவிடம் கொடுத்தான். அதை வாங்கியபடி என்னய்யா நீங்க எதுவும் எழுதுவிங்களா? என்றார். "இல்லைய்யா... அதுக்கும் நமக்கும் வெகுதூரம்." என்றேன். "எழுதிப்பாருங்க வரும்" என்றார்.

அதன் பிறகு எனக்கும் தமிழ் மீது பற்று வந்தது. ஐயா எழுதிய புத்தகங்களையெல்லாம் வாசிக்கலானேன். ஒருநாள் கதை எழுதிப் பார்ப்போமே என்று 'மண்ணில் இந்த காதலின்றி...' பாட்டு வரிகளுடன் ஆரம்பித்து 'மனிதர் உணர்ந்து கொள்ள...' என்ற பாடலில் முடித்தேன் (என்ன செய்ய வயசு அப்படி...).

முருகனிடம் காட்டியபோது 'ஆஹா...ஓஹோ... என்று புகழ்ந்தான் (எனக்காக பொய் சொன்னான் என்று எனக்குத் தெரியும்). ஐயாகிட்ட காட்டு என்றான் நான் மறுத்துவிட்டேன். எனக்கு தெரியும் ஐயா நிச்சயம் நல்லாயிருக்குன்னு சொல்லமாட்டார். ஆனா முருகன் ஐயாவிடம் எனது கதையை போட்டுக் கொடுத்துவிட்டான். என்னய்யா நான் படிக்ககூடாதா? என்று வினவ, அப்படியில்லையா... நல்லாயில்லை... என்று இழுத்தேன். பரவாயில்லை கொடுங்க என்று வாங்கி படித்தவர். என்னிடம் "எழுத்து நடை நல்லாயிருக்கு...ஆனா காதல்.. கத்திரிக்காய்ன்னு வயசுக்கு தகுந்த மாதிரி எழுதாம வித்தியாசமாக எழுதுன்னிங்கன்னா நல்லாயிருக்கும் என்றபடி கதையை என்னிடம் கொடுத்தார்.

அவரது கையில் என் முதல் கதை பட்டதாலோ என்னவோ அதன் பிறகு நல்ல கதைகளை எழுத ஆரம்பித்தேன் (படிச்சவங்க சொல்லணுமுன்னு நீங்க சொல்லுறது கேக்குது என்ன செய்ய... எல்லாம் ஒரு சுய விளம்பரம்தான்).

நம்ம கதையை படிச்சுட்டு முகம் தெரிஞ்சவங்க நிறைய பேரு நல்லாயிருக்குன்னு சொல்லியிருக்காங்க. எனது 'சிறுகதைகள்' வலைத்தளத்தில் எழுத ஆரம்பித்த பிறகு நிறைய முகம் தெரியாத நண்பர்களிடம் இருந்து பாராட்டுக்கள்.

அதில் குறிப்பா நண்பர் 'நாடோடி இலக்கியன்' அவரது வலைத்தளமான 'நாடோடி இலக்கியன் பக்கத்தில்' பதிவர் அறிமுகத்தில் 'நொறுக்குத் தீனி' எனற தலைப்பில் எழுதியிருந்தார். அது......

"ஆரவாரமில்லாமல் அசத்தலான பதிவுகளை எழுதிக்கொண்டிருக்கும் மேலும் இரண்டு பதிவர்களை இந்த நொறுக்குத் தீனியில் குறிப்பிடுவதில் பெருமையடைகிறேன்.

ரகுநாதன்: இவரின் சுழற்பந்து என்ற சிறுகதையைத்தான் முதலில் வாசித்தேன். அருமையான நடையில் மிகச் சிறப்பாக எழுதியிருந்தார்.எல்லாவிதமான இடுகைகளும் எழுதுகிறார்.எழுத்து நடையால் எவ்வளவு பெரிய இடுகையானாலும் ஒரே மூச்சில் படிக்க வைத்துவிடுவார்.

சே.குமார்: கவிதை,சிறுகதை,நெடுங்கவிதைகள் எனப் பிரித்து மூன்று வலைப்பூக்களில் எழுதுகிறார். சிறுகதைகளுக்கு இவர் எடுத்துக் கொள்ளும் கதைக் களங்களும், உரையாடல்களும் மிக யதார்த்தமானதாகவும்,ரசிக்கும் படியும் இருக்கின்றன. இவரின் கவிதையொன்று,

விளைநிலம்:

விளைநிலங்களில்
அங்கொன்றும்...
இங்கொன்றுமாய்...
முளைத்தன...
வீடுகள்..! "'

அடுத்தவங்களை பாராட்ட நல்ல மனது வேண்டும். என்னை அறிமுகம் செய்த இந்த முகம் அறியா நட்புக்கு நன்றி (என்னப்பு நம்ம சுயவிளம்பரம் சரிதானுங்களா..).

சரி... சரி... இவ்வளவு தூரம் இந்த மொக்கையை மேஞ்சுட்டிங்க... அப்படியே 'செந்தமிழ் பைந்தமிழ் மன்ற சிறுகதை' போட்டியிலயும் காலை விட்டிருக்கோம். கொஞ்சம் அங்க போயி பார்வைகள் கதையை படிச்சுட்டு கருத்த சொல்லிட்டுப் போங்களேன்.

கல்லூரிக்காலம் - V ல் சங்கமிப்போம்

0 எண்ணங்கள்: