மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

சனி, 15 அக்டோபர், 2016

காஞ்சனாதேவியா... மஞ்சளழகியா...?

Image result for கடல்புறா

சாண்டியல் அவர்களின் கடல்புறா வாசிக்க ஆரம்பித்தபோது மெல்லத்தான் நகர்ந்தது... பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக சூடுபிடித்து கடல்புறா மிக வேகமாக பறக்க ஆரம்பித்தது. பொன்னியின் செல்வன் வந்தியத்தேவனைப் போல கடல்புறா கருணாகரப் பல்லவன் கெட்டியாகப் பிடித்துக் கொண்டான். இளைய பல்லவனின் வீரதீரச் செயல்கள் சற்றே அதிகப்படியாகத் தெரிந்தாலும் வசீகரமான எழுத்தில் வாசிக்கும் போது அப்படித்தான் இருந்திருப்பானோ என்ற எண்ணமே மேலோங்கியது.

நாயகிகள் பற்றிய வர்ணனைகள் முகம் சுளிக்க வைக்கும் என்றார்கள். அப்படியான வர்ணனை எதுவும் இல்லை... அப்படிப் பார்த்தால் இன்றைய கதைகளிலும் சினிமாக்களிலும் வர்ணிக்காததா... எத்தனையோ பாடல்கள் இலைமறை காயாக இல்லாமல் நேரடியாகவே அதிகப்படியாக வர்ணிக்கின்றன என்பதை நாம் அறிவோம்... சாண்டில்யனின் நாயகிகள் வர்ணனை எல்லை மீறவில்லை... ஒரு எழுத்தில் வசீகரிக்கும்படி வர்ணிப்பது என்பது திறமை. அதை மிக அழகாகச் செய்து நம் கண் முன்னே இதுதான் காஞ்சானா தேவி... இவள்தான் மஞ்சளழகி என்ற தோற்றத்தை காட்டிவிட்டார்.

கருணாகரப் பல்லவனைச் சுற்றியே நிகழும் கதை என்றாலும் சோழ சாம்ராஜ்யத்தின் படைத்தலைவன்தான் அவன் என்ற முறையில் நாம் இரண்டாம் இராஜேந்திர சோழனையும் அவன் மகன் அநபாயனையும் சந்தித்து விடுகிறோம். சோழர்களின் ராஜ்ஜியம் உலகளவில் பரவிக்கிடந்தது என்பதையும் அறிந்து மகிழ்கிறோம்.

இரட்டை நாயகிகள்... பாலூரில் வணிகர் வீதியில் கூலவாணிகன் தங்க வைத்த வீட்டில் கடாரத்தின் இளவரசி காஞ்சனா தேவியை ஒரு பரபரப்பான சூழலில் சந்திக்கிறான் இளைய பல்லவன்... பெரும்பாலான காவியங்களில் தமிழ் சினிமாவைப் போல் கண்டதும் காதல்தான்... அதுவும் உடனே இடையில் கைவைத்தான் என்று எழுதிவிடுகிறார்கள்... இவைதான் தமிழ் சினிமாவுக்கு முன்னோடியாக இருக்குமோ என்றும் கொள்ளலாம். நேற்று பார்த்த றெக்க படத்தில் லூசுத்தனமான காதலைக் காட்டியிருப்பார்கள். அதை மற்றொரு பதிவில் பார்க்கலாம். 

இந்த இரட்டை நாயகிகள் குறித்து தமிழ்வாசி முகநூலில் கேள்வி கேட்டு வைக்க நிஷா அக்கா தினேஷ்  மற்றும் சில நண்பர்களுடன் ஒரு பெரிய விவாதமே நிகழ்ந்தது. இந்த இரட்டை நாயகிகள் என்பது கதை நகர்வுக்காக மட்டுமின்றி வரலாற்றை ஊறுகாயாக்கி கதை சமைக்கும் போது வாசிப்பவன் என்ன கதை வளவளன்னு போகுதுன்னு யோசிச்சு மூடி வைக்காமல் இருக்க கையாண்ட முறைதான் இரட்டை நாயகிகள் என்று தோன்றுகிறது. தமிழ் சினிமாவில் நாயகி இருந்தாலும் குத்துப் பாட்டுக்கு ஆட ஒரு பிரபல நடிககையை பிடிப்பதில்லையா அது மாதிரித்தான்... அப்படியான இரட்டைக் குதிரைகளில் முதல் குதிரையான காஞ்சனா மீது காதல் துளிர்க்க... அப்புறம் பாலூரில் இருந்து தப்பிச் செல்லும் போது இருவரும் பிரிகிறார்கள்... இருவரின் முதல் சந்திப்பு சித்ரா பௌர்ணமி அன்று....

பின்னர் கடற்கொள்ளையனான அகூதாவின் உதவியால் தப்பிப் பிழைத்து அவனுக்கு உபதலைவன் ஆகி கடல் கொள்ளையனாய் தன்னை நிலை நிறுத்தி, ஆங்காங்கே அடிமைப்பட்டுக் கிடக்கும் தமிழர்களைக் காக்கவும் தன் காதலிக்கு செய்து கொடுத்த சத்தியத்தின்படி அவள் நாட்டை மீட்டு சக்கரவர்த்தினியாக்கவும் முயற்சிக்கும் கருணாகரப்பல்லவன் அதன் காரணமாக கடலில் பயணித்து அடையும் இடம் அக்ஷ்யத்தீவு... அங்கு சந்திப்பவள்தான் மற்றொரு நாயகியான மஞ்சள் அழகி... காஞ்சனாவைச் சந்தித்து காதல் கொண்டவன் மஞ்சளழகியோடு காதல் கொள்வது அடுத்த ஆண்டில்.. அதுவும் ஒரு சித்ரா பௌர்ணமி தினம்... 

மஞ்சள் அழகி மீது மோகம் கொண்டு அவளை விரும்பி... கடற்கரையில் அவளைக் கட்டிப்பிடித்து... அவளின் வளர்ப்புத் தந்தையும் அக்ஷயத்தீவின் தலைவனுமான பலவர்மனை தன் திறமையால் ஏமாற்றி வீழ்த்தி மஞ்சளழகியிடம் ஆட்சிப் பீடத்தை அளித்து நகரும் போது 'இந்த அலைகளைப் போல் நீங்களும் என்னைத் தொட்டு உறவாடி மறைந்து விடுவீர்கள்தானே' என்று அவள் சொன்னதை நினைத்தபடி அவளை மறக்கமுடியாமல் கடல் பயணத்தை தொடர்கிறான்... அடுத்த சித்ரா பௌர்ணமிக்குள் காஞ்சனாதேவியை கடாரத்தின் சக்கரவர்த்தினி ஆக்கியே தீருவேன் என உறுதியுடன்...

அக்ஷ்யத்தீவில் இருக்கும் போது தனது கப்பலை அமீர் மற்றும் கண்டியத்தேவன் உதவியால் மிகச் சிறந்த போர்க்கப்பலாக நிர்மாணிக்கிறான்... அதற்கு தன் காதலி காஞ்சனாவின் நினைவாக கடல் புறா என்றும் பெயரிடுகிறான். கடலில் பயணிக்கும் போது தங்களுடன் போரிட வந்த கப்பல்கள் காஞ்சனா தேவியும் அவளின் தந்தை குணவர்மனையும் கைது செய்து கொண்டு போகின்றன என்பதை அறியாது போரிட்டு அவர்களை மீட்கிறான்... காதலும் ஊடலுமாய் நகரும் வாழ்வில் தனது கூரிய அறிவினால் சோழர்களின் வணிக கப்பலுக்கு பிரச்சினையாக இருக்கும் கடல்மோகினி என்று இராஜராஜ சோழனால் அழைக்கப்பட்ட மாநக்காவரத்தின் தலைவன் கங்கதேவனை சூழ்ச்சியால் கொன்று கைப்பற்றுகிறான்.  

ஸ்ரீவிஜய நகரைப் பிடிக்க முயற்சிக்கும் போது அங்கு வரும் அநபாயன், கருணாகரப் பல்லவனை கைது செய்ய அரசனின் ஆணை இருப்பதைச் சொல்லி அவனை மீண்டும் அக்ஷ்யத்தீவுக்கு போகச் சொல்ல, அங்கு போனால் மஞ்சளழகி இருப்பாளே என்ற பயத்தில் அங்கு செல்லாமல் அமீர் மற்றும் கண்டியத்தேவரை ஏமாற்றி மலையூருக்குச் செல்கிறான். மலையூரில் ஸ்ரீவிஜய நகர படைத்தளபதியுடன் போரிட்டு மலையூர் கடல் தளத்தை கைப்பற்றுகிறான். மலையூரின் தலைவியாக மஞ்சளழகி இருக்கிறாள்.

மஞ்சளழகி குறித்து காஞ்சனா அறிய, அவளுக்கு மஞ்சளழகி மேல் காழ்ப்புணர்ச்சி ஏற்படுகிறது. இவ்வளவுக்கு உறவால் இருவரும் அக்கா தங்கை என்றாலும் காதல் என்று வரும்போது விட்டுக் கொடுக்கும் மனமில்லை. இருவரும் சந்திக்கும் சூழல் வர மோதலும் வருகிறது. 

காஞ்சனா தேவி மீது இருக்கும் அதீத காதலால்தான் மஞ்சளழகியை விட்டு ஒதுங்கி வருகிறான். இருப்பினும் தான் மலையூரில் மாட்டிக் கொண்ட நிலையில் அதன் தலைவியாய் அவளைச் சந்திக்க வேண்டிய சூழல் வந்தபோது மிகவும் வருந்துகிறான். ஆரம்பத்தில் அவனை கண்டு கொள்ளாமல் ஒரு தலைவியாய் பேசும் அவள், அங்கிருந்து கருணாகரப்பல்லவன் தப்பிச் செல்ல வேண்டும் என்றால் தன் உயிரை எடுத்துவிட்டு தப்பிச் செல்வதே ஒரே வழி என்றும் அதை உடனே செய்து தப்பிச் செல்லுங்கள் என்றும் சொல்கிறாள். இந்த வார்த்தையால் அவனின் இதயத்தில் அவள் மீண்டும் உயரமான இடத்தை அடைகிறாள்.

பாலூரில் பார்த்த மாத்திரமே காதலித்தாலும் சிறைப்பட்டிருந்த தன்னை சோழ இளவலுடன் சேர்ந்து நீதிமன்றத்தில் வில் ஏந்தி காப்பாற்றியவள்... கடற்கரையில் தன் உயிரைப் பணயம் வைத்து சோழ இளவலையும் கடாரத்தின் இளவரசனையும் அவனின் மகளையும் காப்பாற்றிய போது தனக்காக கண்ணீர் சிந்தியபடி பயணித்தவள் காஞ்சனா தேவி என்பதை நினைப்பவன் மஞ்சளழகியை ஒதுக்க நினைக்கிறான்.

அக்ஷ்ரத்தீவின் தலைவனின் மகளாக பார்த்து... அழகிய நடனமங்கையாக ரசித்து... கடற்கரையில் கட்டிப்பிடித்து திருமணம் செய்து கொள்வதாய்ச் சொல்லி... அந்த இடத்தை மீட்டு அவள் கையில் கொடுத்து ஒதுங்கியவனை... அடுத்த சில மாதங்களில் சிறை பிடித்து நீ தப்ப வேண்டுமென்றால் என் உயிரை எடுத்து விட்டுச் சென்றால்தான் முடியும் என்று காதலால் கசிந்துருகி உயிரைக் கூட கொடுக்க முன் வரும் மஞ்சளழகியின் உயர்ந்த மனதை எண்ணி அவளை ஒதுக்க முடியாமல் தவிக்கிறான்.

எதிரியின் வாளை கையில் இருந்து தட்டிப் பறிக்கு வீரம் கொண்ட காஞ்சனாவா...? அம்மா இல்லாது... அப்பா இருந்தும் உண்மையான பாசத்தை அறியாது... வளர்ப்புத் தந்தையிடம் வளர்ந்த பாவப்பட்ட மஞ்சளழகியா...? ஒராண்டுக்கு முன்னர் சந்தித்து தன்னையே நினைத்து வாழும் காஞ்சனாவா...? உயிரையே கொடுத்து தன் காதலனைக் காக்க நினைத்த மஞ்சளழகியா...? வாள்போர் வீராங்கனையான காஞ்சனாவா...? ஆடல் கலையில் சிறந்த மஞ்சளழகியா..? இருவரில் யாருடன் வாழ கருணாகரப் பல்லவன் நினைப்பான் என்றெல்லாம் யோசிக்க வேண்டாம்... ஏனென்றால் நம் இராஜாக்களும் கடவுள்களும் நம்மை இப்போது ஆள்பவர்களும் பல மனைவியரின் அன்புப் பிடியில் வாழ்ந்தவர்கள்தான்... வாழ்பவர்கள்தான் என்பதால் பல்லவனுக்கும் 'சண்டேன்னா ரெண்டு' மாதிரி ரெண்டுமே வாழ்க்கைத் துணையானாத்தானே கதை முடியும். சக்களத்தி சண்டை... காதலிக்கும் போது கர்புர்ன்னு இருந்தாலும் ஆசிரியர் சுபமாய் முடிச்சி வச்சிட்டதால பிரச்சினை இல்லை.

கருணாகரப் பல்லவன் மீது தீவிரக் காதல் கொண்ட காஞ்சனாதேவியை விட, என்னை உன்னால் திருமணம் புரிய முடியாது... காஞ்சனாதேவி மீதுதான் உனக்கு காதல் அதிகம் என்று சொல்லி ஒதுங்க நினைத்தாலும் ஆபத்து நேரத்தில் என் உயிரை எடுத்துவிட்டு தப்பிச் செல் அது ஒன்றே நீ உன் லட்சியத்தை அடைய வழி என்று சற்று யோசிக்காமல் காதலுக்காக உயிரைக் கொடுக்க நினைக்கும் மஞ்சளழகிதான் என்னைக் கவர்ந்தாள்.

சாண்டில்யனின் கதைகளில் நாயகிகள் வர்ணனை ரொம்ப அதிகமாக இருந்தாலும் கதையோடு பயணிக்கும் போது அந்த எழுத்து வசீகரமாகத்தான் இருக்கும். இதில் மஞ்சளழகியின் உண்மையான பெயர் என்ன என்று சொல்லவே இல்லை... ரெமோங்கிற பேரை ஓடும் பேருந்தில் ரெஜினா மோத்வானியிலிருந்து கீர்த்தி சுரேஷ் ரெமோ எனச் சொல்வது போல் கருணாகரப் பல்லவன் அவளைப் பார்த்து நிறத்தைப் பார்த்து மஞ்சளழகி என்று சொல்வதை வைத்து கடைசி வரை அதே பெயரில் கொண்டு சென்றிருந்தாலும் அது வரை மகளை பேர் சொல்லி அழைத்த பலவர்மன், அந்த கடல்புறத்து மக்களுக்கு எல்லாம் மஞ்சளழகி ஆகிவிடுகிறார்.

சரிங்க சாண்டில்யனின் கடல்புறா நாயகிகளில் காதல் புறாக்களான காஞ்சனா தேவி... மஞ்சளழகி... இவர்களில் உங்களைக் கவர்ந்த நாயகி யார்...?
-'பரிவை' சே.குமார்.

வெள்ளி, 14 அக்டோபர், 2016

திரைக்கதை வடிவில் 'ஜீவநதி' - நிறைவுப் பகுதி

கதை                                                   :  சே.குமார்.


திரைக்கதை வசனம்                    :  ஆர்.வி.சரவணன்.

திரைக்கதை வடிவில் ஜீவநதி   :  1    2

சிறுகதை                                           :   ஜீவநதி

சரவணன் அண்ணன் தளம்       :   குடந்தையூர்

(ஜீவநதி சிறுகதைக்கு போட்ட படம்)
காட்சி-5 தொடர்ச்சி

காவேரி சமையலறையில் சென்று காபி எடுத்து வந்து கொடுக்கிறாள். குடித்து முடிக்கும் வரை இருவருக்கும் பேச்சில்லை. அவர்கள் இருவர் மனத்திலும் கவலைகள் இருப்பதை முகம் சொல்கிறது

பிள்ளைகள் தான் சந்தோசத்தில் பேசி கொண்டிருக்கின்றன

காவேரி : சின்ன வயசுல நாமும் இது போலெ தானேண்ணே பேசிட்டிருந்தோம் 

மகாலிங்கம்:  அது ஒரு காலம் சரி எனக்கு வேலை இருக்கு நான் கிளம்பறேன்

சுந்தரம்: மாமா  பட்டாசு இவ்வளவு தானா

மகாலிங்கம்: இது  தீபாவளி fund ல  வந்தது  டா செல்லம். நான் அம்மா கிட்டே பணம் கொடுத்திருக்கேன்  உங்களுக்கு புடிச்சதை வாங்கிக்கங்க

ராதா : ஹையா ஜாலி என்று டான்ஸ் ஆடுகிறாள்.

பிள்ளைகளின் சந்தோஷம் பார்த்து திருப்தியுடன் கிளம்புகிறான்.

காட்சி-6
வீட்டின் வாசல் 

வாசலுக்கு வருபவன் திரும்பி உங்க சந்தோசத்தை உங்க அம்மா முகத்துலையும் பூசி விடுங்க  பசங்களா என்கிறான்

தோழி : அண்ணே  அவ புருஷன் வந்தோன பாருங்க சந்தோசத்தை நம்ம முகத்துல எடுத்து பூசுவா அவ என்ற படி அங்கே வருகிறாள்  பக்கத்து வீட்டு பெண் 

மகாலிங்கம்:  அதான் எனக்கு வேணும் என்ற படி கிளம்புகிறான். கூடவே மச்சானை ஒண்ணும் திட்டாதே என்ன என்கிறான் தங்கையிடம் 

சிரித்த படி தலையாட்டுகிறாள் காவேரி.

தோழி : ஆமா உன் அண்ணன் வண்டி என்னாச்சு 

காவேரி : யாரோ பிரெண்டு எடுத்துட்டு போயிருக்கறாராம் 

எதிர் வீட்டு பெரியவர் : பிரெண்டு எல்லாம் எடுத்துட்டு போகலம்மா. உங்க அண்ணன்  டூ வீலரை அடகு வச்சிருக்கான்  திண்ணையில் அமர்ந்திருப்பவர்  சொல்கிறார் 

காவேரி : எதுக்கு னு கேட்டீங்களா அதிர்ச்சியாய் கேட்கிறாள்.

எதிர் வீட்டு பெரியவர் : கேட்காம இருப்பேனா . இந்த வருஷம் விவசாயமும் பண்ண முடியல. வளர்க்கிற ஆடுகளையே விக்க வேண்டியதா போச்சு. எப்படியோ பொண்டாட்டி புள்ளைங்களுக்கு டிரஸ் எடுத்துட்டேன். ஆனா பக்கத்துல இருக்கிற தங்கச்சிய  கஷ்டப்பட விட்டுட்டு நான்  தீபாவளி கொண்டாடறதுக்கு மனசு வர மாட்டேங்குது. அதான் டிவிஎஸ்  50 யை அடகு வச்சிட்டு பணம் கொண்டு போறேன்னு சொன்னான் 

காவேரி பெரியவர்  சொன்னதை கேட்டு விட்டு அதிர்ச்சியுடன் திரும்பி மகாலிங்கம் சென்ற திசையை பார்க்கிறாள்.  மகாலிங்கம்  தெருவில் வேட்டியை மடித்து கட்டிய படி நடந்து சென்று கொண்டிருக்கிறான். அவன் நடையில் ஒரு தளர்வு தெரிகிறது.
காவேரிக்கு கதறி அழ வேண்டும் போல் தோன்றுகிறது. சூழ்நிலை கருதி உள்ளுக்குள் மறைக்கிறாள்.

அவள் கையிலிருந்த அண்ணன் கொடுத்த பணத்தை பிரிக்கிறாள். அதற்குள் காவேரி கசக்கி எறிந்திருந்த தீபாவளி லிஸ்ட் பேப்பர் இருக்கிறது.

அண்ணன் சென்ற திசையையே பார்த்து கொண்டிருக்கிறாள்.

காட்சி 7

பிள்ளைகள் இரண்டும்  சண்டையிட்டு  கொள்கின்றன.

காவேரி: ஏன் இப்படி அடிச்சுக்கறீங்க 

கத்துகிறாள்.

ராதா : ஏய் இந்த பட்டாசு எனக்கு வேணும் கொடுடா

சுந்தரம்: ஏய்  தர முடியாது இது  எனக்கு வேணும்

ராதா ஓவென்று  அழ ஆரம்பிக்கிறாள்

அவள் அழுகையை பார்த்து பயந்து போன 

சுந்தரம் : சரி சரி அழாதே இந்தா வச்சிக்க என்ற படி கொடுக்கிறான்
ராதா கண்களை துடைத்து கொண்ட படி அண்ணன் கொடுத்த பட்டாசை ஆர்வத்துடன் ஆராய முற்படுகிறாள். 

சுந்தரம் அவளையே பார்க்கிறான்.

காவேரி : ஏண்டா நீ தானே ஆசையா கேட்டிட்டிருந்தே. உனக்கு வேணாமா 

சுந்தரம் :  வேணும் தான்.  தங்கச்சி தானே அவ எடுத்துக்கட்டும். அவ வெடிக்கிறப்ப பார்த்துக்கிறேன்.  என்கிறான் அவனுக்கு அவனே சமாதானம் செய்து கொள்வது போல்

காவேரி சுந்தரம் சொல்வதை கேட்டு நெகிழ்ச்சியுடன் அணைத்து கொள்கிறாள்.

(முற்றும்)

ஆக்கம் : ஆர்.வி.சரவணன்.

------------------

சங்க விளையாடுவதாய் வரும் முதல் காட்சியும் இறுதிக் காட்சியும் திரைக்கதைக்காக அண்ணன் சேர்த்த காட்சிகள்... அந்தக் காட்சிகள் திரைக்கதையில் ஜீவநதியை ஜீவனுள்ள நதியாக மாற்றியிருக்கின்றன. அதேபோல் சிறுகதையில் அண்ணன் எப்பவும் ஓட்டிவரும் டிவிஎஸ்-50யைக் காணோமே என்று தங்கை எண்ணுவதாய் முடியும்... இங்கே பெரியவர் அதற்கான காரணத்தை உடைக்கிறார். இதெல்லாம் திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவியிருக்கின்றன.

நான் எழுதிய ஒரு கிராமத்துக் காதல் கதையினை திரைக்கதை வடிவில் எழுதக் கேட்டேன்... அவருக்கு இந்தக் கதை பிடித்திருந்ததால் அதை விடுத்து இதை எடுத்துக் கொண்டார். அதை சிறப்பாகவும் செய்து கொடுத்திருக்கிறார். என் கதையை திரைக்கதை வடிவில் பார்க்கும் போது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. அந்த கிராமத்துக் காதல் கதையை திரைக்கதையாக எழுதிப் பார்க்கணும்... பார்க்கலாம்... 

நன்றி சரவணன் அண்ணா....  மிகுந்த சிரத்துடன் இதைச் செய்து கொடுத்தமைக்கு நன்றி.

முதல் இரண்டு பாகத்தையும் வாசித்து கருத்துச் சொன்ன நட்புக்களுக்கும் இந்த பகுதிக்கு கருத்துச் சொல்ல இருக்கும் நட்புக்களுக்கும் எங்கள் இருவரின் நெஞ்சார்ந்த நன்றிகள்.

-'பரிவை' சே.குமார். 

வியாழன், 13 அக்டோபர், 2016

திரைக்கதை வடிவில் 'ஜீவநதி' - 2

கதை                                              :  சே.குமார்.


திரைக்கதை வசனம்               :  ஆர்.வி.சரவணன்.

முதல் பகிர்வு                               :   ஜீவ நதி (திரைக்கதை)

சிறுகதை                                       :   ஜீவநதி

சரவணன் அண்ணன் தளம்   :   குடந்தையூர்

(ஜீவநதி சிறுகதைக்கு போட்ட படம்)
தோழி: சரி. நீ பேசு நான் வீட்டுக்கு போறேன். புருஷன் பொண்டாட்டி ஆயிரம் பேசுவீங்க நடுவுல நான் எதுக்கு?  கண் சிமிட்டினாள்

காவேரி : ம் கும் அது ஒண்ணு தான் குறைச்சல் என்று அவள் சொன்னாலும் முகத்தில்  ஒரு நொடி வெட்கம் மின்னி செல்கிறது.

சுந்தரம் : அப்பா எப்பப்பா வருவீங்க இங்க என் கிளாஸ் பசங்க எல்லாரும் டிரஸ் எடுத்துட்டாங்கப்பா 

மலையப்பன்  : நான் வரேன் கண்ணா. வந்து எடுத்து தரேன்  (குரல் மட்டும்) 

ராதா  : டேய் அண்ணா என் கிட்டே கொடுடா என்று செல் போனை பிடுங்கும் அவள் 
அப்பா எதிர் வீட்டு  கமலா இருக்கா இல்ல. அவ நான் டிரஸ் எடுத்துட்டேன் நீ இன்னும் எடுக்கலியே னு கிண்டல் பண்றப்பா.  உன்னை விட எங்கப்பா சூப்பரா எனக்கு  வாங்கி கொடுப்பாருன்னு  சொல்லிருக்கேன். வாங்கி தருவீல்லப்பா 

மலையப்பன்  : அவளை விட உன் டிரஸ்  தான் சூப்பரா இருக்க போகுது  பாரேன் 

ராதா : ஹையா  ஜாலி என் செல்ல அப்பா என்று போனுக்கு முத்தம் கொடுக்கிறாள் 

சுந்தரம் குரல் கொடுக்கிறான்  : அப்பா, அம்மா லிஸ்ட் எல்லாம் போட்டு வச்சிட்டாங்க  நீங்க வந்த உடனே கடைக்கு நாம போக வேண்டியது தான் 
பிள்ளைகளின்  பேச்சை ரசித்த படியே காவேரி : ஏய் வாண்டுகளா  என் கிட்டே கொடுங்க என்கிறாள்.

அவர்கள் கொடுக்கிறார்கள்  

காவேரி : கேட்டீங்க இல்ல. புள்ளைங்களை என்னாலே அடக்க முடியல. நாளைக்கு வந்துருவீங்க இல்ல. என்கிறாள்  ஆவலுடன்.

சுவற்றில் இருக்கும் புருஷனின் போட்டோவில் படிந்திருக்கும் தூசியை முந்தானையால் துடைத்து கொண்டே அவன் பேசுவதை கேட்கிறாள்.

மலையப்பன் : இல்லம்மா வர முடியாது. ஸ்வீட் கடை இல்லியா ஆர்டர் அள்ளுது . முதலாளி தீபாவளி அன்னிக்கு காலையிலே தான் அனுப்பறேன்னு சொல்லிருக்கார். அதுக்காக டபுள் ஓடி வேற தரேன்னு சொல்லிருக்கார் காசு நமக்கு முக்கியமில்லயா  

ராதா : ஹையா நாளைக்கு எங்கப்பா வரேன்னு சொல்லிட்டார் இதை போய் அந்த திமிர் பிடிச்ச கமலா கிட்டே சொல்லிட்டு வரேன்  ஓடுகிறாள். பின்னாடியே 

சுந்தரம் :  நீ மட்டும் தான் சொல்வியா நானும் தான் என் பிரெண்ட் கிட்டே சொல்வேன் என்று ஓடுகிறான்.

காவேரி : இன்னொருத்தர் கிட்டே பணத்தையும் லீவையும் எதிர்பார்த்துகிட்டு இருக்கிற இந்த நிலமை நமக்கு தேவை தானா. என்னை நீங்க கல்யாணம் பண்றப்ப 5 பேருக்கு உங்க கையாலே  போனஸ் கொடுத்துட்டு இருந்தீங்க ஞாபகம் இருக்கில்ல... கண்களில் கண்ணீர் வழிகிறது 

மலையப்பன் : அதை சொல்லி காட்டியே  என்னை வெறுப்பேற்றாதே. வேணும்னா உங்க அண்ணன் கிட்டே கேட்டு வாங்கிக்க. நான் வந்தவுடன் கொடுத்திடறேன்.

காவேரி :  அண்ணன் கிட்டேயே.என்னாலே முடியாது. நீங்க எப்ப வறீங்களோ வாங்க. அது வரைக்கும் தீபாவளி கொண்டாடுற ஊரை நானும் என் புள்ளைங்களும் வேடிக்கை பார்க்கிறோம். சொல்லிய படி லைனை கட்  செய்து வைக்கிறாள் கோபத்துடன்.மீண்டும் மீண்டும் அது அடிக்கிறது

அதையே பார்த்து கொண்டிருக்கிறாள்.

தீபாவளிக்கு எழுதி வைத்த சாமான்கள் லிஸ்ட் காற்றில் படபடத்து எப்ப வாங்க போறே என்று அவளை டிஸ்டர்ப் செய்து கொண்டிருக்கிறது.
தொடர்ந்து அடித்து கொண்டிருக்கும் போனை ஆப் செய்து வைக்கிறாள்.

அந்த தீபாவளி லிஸ்டையே வெறுப்புடன் பார்ப்பவள் அதை வேகமாய் எடுத்து கசக்கி வாசலை நோக்கி விட்டெறிகிறாள் 

காட்சி-5

சமையலறையில் காவேரி புளி கரைப்பதற்காக கிண்ணத்தை  கையில் எடுக்கிறாள். அதில் அவள் முகம் தெரிகிறது. அவள் கழுத்தில் காதில் போட்டிருக்கும் நகைகள் தெரிகிறது.  புள்ளைங்களுக்காவது கழுத்துல காதுல போட்டிருக்கிறதை அடகு வச்சிடலாமா என்று யோசிக்க ஆரம்பிக்கிறாள்.

எங்கேயாவது கல்யாணம் காட்சிக்கு போறதுன்னா என்ன பண்றது ஆமா புள்ளைங்க சந்தோசத்தை விட இது ஒண்ணும் குறைச்சல் இல்லே என்ற முடிவுக்கு வந்து அவள் சமையலறையை விட்டு வெளி வருகிறாள்.

அம்மா மாமா வராங்க என்ற படி பிள்ளைகள் ஓடி வருகின்றன.

அவளது அண்ணன் மகாலிங்கம் கீழே குனிந்து எதையோ எடுத்த படி.  உள்ளே நுழைகிறான்.

மகாலிங்கம் : பசங்களா கீழே விழுந்துட போறீங்க பார்த்து பதட்டமாய் சொல்கிறான்.

காவேரி : தூக்கி விட தான் நீங்க இருக்கீங்களே அண்ணே வாங்க . என்ற படி  சேரை எடுத்து போடுகிறாள்

பிள்ளைகள் சென்று மாமாவை கட்டி கொள்கின்றன

ராதா : மாமா எங்கப்பா வரார் உனக்கு என்ன டிரஸ் வேணும்னு சொல்லு நான் வாங்கி தரேன் என்கிறாள் அந்த பெண் 

பசங்களா அவரை விடுங்க என்று அவள் அதட்டவும் 

மகாலிங்கம்  :  புள்ளைங்களை அதட்டாதே னு சொல்லிருக்கேன் இல்லே என்கிறான்  அதட்டலாய்

காவேரி :  பின்னே வந்து உட்கார கூட இல்ல அதுக்குள்ள புடுங்குதுங்க பார் 

மகாலிங்கம்  :அதானே பாசம்கிறது. தாய் மாமன் னா சும்மாவா. இல்ல பசங்களா என்ற படி மீசையை முறுக்குகிறான் 

ஆமா என்று பிள்ளைகள் கோரஸ் பாடுகின்றன

மகாலிங்கம்  : என்னாச்சு  உன் போன்க்கு ட்ரை  பண்ணிட்டே இருக்கேன்  சுவிட்ச் ஆப்னு வருது

காவேரி : நான் தான் ஆப் பண்ணி வச்சேன்

மகாலிங்கம் : ஏன் 

காவேரி: உங்க மச்சான் பேசினார்

மகாலிங்கம்  : என்னவாம்

காவேரி: தீபாவளி அன்னிக்கு தான் வருவாராம்

மகாலிங்கம்  : அதனாலே கோபத்துல ஆப் பண்ணிட்டியா
தலையாட்டுகிறாள்

மகாலிங்கம்  : கழுதை ஆம்பளை கஷ்டம் உனக்கு புரியாதா 

காவேரி: பொம்பளை கஷ்டம் ஆம்பளைக்கு எங்க புரியுது 

மகாலிங்கம்  : பதிலுக்கு பதில் பேசுவியே  நீ

சுந்தரம் : மாமா  உங்க வண்டில என்னை ஒரு ரவுண்டு அழைச்சிட்டு போங்க 

மகாலிங்கம்  :  பிரெண்ட் ஒருத்தன் எடுத்துட்டு போயிருக்கான்டா.  தீபாவளி அன்னிக்கு வருவேன்ல அப்ப அழைச்சிட்டு போறேன் இந்தாங்க   பட்டாசு பார்சல் என்ற படி பையை கொடுக்கிறான் 

இரண்டு பிள்ளைகளும் ஐ என்ற படி  பையை பிரித்து சோதனையில் இறங்குகின்றன 

காவேரி : எதுக்குன்னே இதெல்லாம். உன் பசங்களுக்கு, அண்ணிக்கு வாங்கி கொடுத்தியா இல்லியா

மகாலிங்கம்  : கொடுத்தாச்சு என்ற படி பணத்தை நீட்டுகிறான்

காவேரி : அண்ணே வேணாம்னே. அவர் வருவார் பின்னோக்கி நகர்கிறாள்.

மகாலிங்கம்  :  அதுக்குள்ள தீபாவளி வந்துடுதுல்லே. இதுல மூவாயிரம் இருக்கு. பக்கத்து வீட்டு  பொண்ணை  அழைச்சிட்டு போய் உனக்கு மச்சானுக்கு புள்ளைங்களுக்கு டிரஸ் எடுத்துட்டு வந்துடு  

காவேரி :  எத்தனை காலத்துக்குண்ணே இதெல்லாம் செய்வே அழுகையாய் கேட்கிறாள்.

மகாலிங்கம்: நீ கஷ்டத்துல இருக்கிற வரைக்கும் செய்வேன். நீ நல்லா வந்துட்டேன்னா எனக்கு டிரஸ் எடுத்து கொடுன்னு குழந்தைங்க மாதிரி வீட்டு  வாசல்ல தகறாரு பண்ண ஆரம்பிச்சிடுவேன் 

நெகிழ்ச்சியாய் கையெடுத்து கும்பிடுகிறாள்

காவேரி : நீ தெய்வம்ணே 

மகாலிங்கம்  : அட நீ வேறம்மா. நம்மை விட்டுட்டு மனிதனை போய் தெய்வ்ம்கிறாளே னு தெய்வம் கோபிச்சுக்க போகுது.
என்ற படி சிரிக்கிறான்

காவேரி :அண்ணிக்கு இதெல்லாம் தெரியுமா

மகாலிங்கம்  : அவ தான் பணம் கொடுத்து அனுப்பி வச்சா 
வேறெங்கோ பார்த்த படி பேசுகிறான்.

காவேரி : எதுக்கு  உதவி பண்றேன்னு அண்ணி என்னிக்கு உன்னை கேட்க போகுதோனு பயமாவே இருக்கு 

மகாலிங்கம்  : அப்படி உங்க அண்ணி சொன்னா அவளுக்கு தெரியாம கொடுத்துட்டு போறேன். பின்னாடி வந்தவளுக்காக முன்னாடி வந்த தங்கச்சி உறவை அத்து விட்டுடற  அண்ணன் நான் இல்லம்மா. 
என்ற படி பிள்ளைகளை பார்க்கிறான்.

காவேரி சமையலறையில் சென்று காபி எடுத்து வந்து கொடுக்கிறாள். குடித்து முடிக்கும் வரை இருவருக்கும் பேச்சில்லை. அவர்கள் இருவர் மனத்திலும் கவலைகள் இருப்பதை முகம் சொல்கிறது 

நிறைவுப் பகுதி நாளைக் காலை பகிரப்படும்.

ஆக்கம் : எழுத்தாளர் ஆர்.வி.சரவணன்.
-'பரிவை' சே.குமார்.